Sunday, March 31, 2013

ஐபிஎல்,சினிமா ,சிந்தனை

"வலிமையானவையே பிழைத்து கொள்ளும்" என்கிற தத்துவத்தை டார்வின் கொசுக்களை பார்த்துதான் உருவாகியிருப்பார் போலும். மனிதன் இதுவரை சிட்டுகுருவியிலிருந்து சுறா மீன் வரை மனிதன் எவ்வளவோ உயிரினங்களை அழித்து இருந்தும் அவனால் ஏன் கொசுக்களை மட்டும் அழிக்கமுடியவில்லை? கொசுக்களுக்கெல்லாம் குளிராதா? போன்ற சந்தேகங்கள் என்னை போலவே டார்வினுக்கும் வந்து இருக்க வேண்டும். இப்படி சாதாரண மனிதனையும் டார்வினுக்கு இணையாக சிந்திக்க வைத்த மின்தடை வாழ்க.

பிஎல்  வரப்போகுது. எல்லாரும் IPL பார்க்க ஆர்வமா இருப்பீங்க. ஆரம்பத்துல T-20 கிரிக்கெட்டை எதிர்த்த ஒரே  கிரிக்கெட் போர்டான இந்தியன் கிரிக்கெட் போர்ட் இன்னைக்கு பணம் கிடைக்கும்குற ஒரே காரணத்துக்காக IPL  நடத்திகிட்டு இருக்கு. ஒரு வேளை ஆஸ்திரேலியா கூட டெஸ்ட்ல இந்தியா  தோத்து இருந்தா இந்த தடவை  IPL கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கும்.பார்க்கலாம் இந்த தடவை ஸ்கிரிப்ட் படி யாரு IPL  ஜெயிக்க போறாங்கன்னு.

"இரண்டாம் உலகம் " எப்ப வரும்னு காத்துக்கிட்டு இருக்கேன். 7G பாத்ததில் இருந்து செல்வராகவன் படம்னாலே ஒரு ஆர்வம். அந்த படத்துக்கு அப்புறம்  நான் செல்வராகவனை ஒரு ஜீனியஸா நினைக்க ஆரம்பிச்சேன்  . 7G க்கு அப்புறம்வந்த படங்கள்ல கூட எல்லா படத்துலயும் ரசிக்கிற மாதிரியோ இல்ல  அதிர வைக்கிற மாதிரியோ சீன்ஸ் நெறைய இருக்கும். இருந்தும் ஒட்டு மொத்த படமா பாக்கும்போது  எந்த படமும் பெருசா கிளிக் ஆகல. அந்த குறைய இந்த படம் தீர்க்கும்னு நம்புவோம். காதல் தோல்வின்னா, பெண்கள் மேல ஆண்கள் வன்முறைய பிரயோகிக்க என்ன காரணம். நிச்சயம் ஆணாதிக்க மனோபாவம்தான். எப்பவும் பெண் தனக்கு அடங்கியே  இருக்கணும்னு நெனைக்கிறான். ஒரு ஆண்  என்னதான் பெண்களை தனக்கு சரிசமமா நெனைக்கிற மாதிரி காமிச்சுக்கிட்டாலும் அவன் உள்மனசுல பெண்களை தனக்கு கீழதான் வச்சி இருக்கான். ஒரு பெண்ணால புறக்கணிக்கப்படுறதையோ,அவமானப்படுத்தப்படுறதையோ அவனால தாங்கிக்கவே முடியாது. உண்மைய சொல்லணும்னா இன்னும் ஒரு பெண்ணுக்கு கீழ வேலை செய்றதையே இன்னும் ஆண் விரும்பலை. ஒரு பெண் தன்னை பிடிக்கலைன்னு சொல்லிட்டா அவன் ஈகோ பெரிய அளவில்  பாதிக்கப்படுது. இது மாறணும்னா சின்ன வயசுல இருந்தே ஆணும் பெண்ணும் சமம்னு பசங்களுக்கு சொல்லி தர்றதுதான் ஒரே வழி.

பாரதியார் கவிதைகளை படிச்சா ஆச்சரியமா இருக்கு. அவர் சிந்தனைகளை பாக்கும்போது எப்படி ஒரு மனிதரால இப்படி எல்லாம் சிந்திக்க முடியும்னு பிரமிப்பா இருக்கு. அரசியல்ல ஆரம்பிச்சு ஆன்மிகம் வரை அவர் எழுதாத ஏரியாவே இல்ல. பாட்டுலயே மக்களுக்கு தைரியம் சொல்லி,  ஞானம் கொடுத்து, அவங்களை நெனைச்சு கவலைப்பட்டு, புரட்சிகரமா சிந்திச்சு, இயற்கையை ரசிச்சு இப்படி சொல்லிகிட்டே போகலாம். வறுமை நிலையிலையும் அவருக்கு இருந்த ஆட்டிடுயூட் நம்ப முடியாதது .அவர் இன்னும் கொஞ்ச காலம் உயிரோட இருந்தா நமக்கு இன்னும் எவ்வளவோ கிடைச்சு இருக்கும். நேரம் கிடைச்சா அவர் கவிதைகளை படிச்சு பாருங்க. நீங்களே சொல்லுவீங்க அவர் ஒரு ஆச்சரியம்னு.

கருத்து சொல்லிட்டு போங்க 
Wednesday, March 27, 2013

வாத்தியார்களும், நாமும் (சின்னதா பிளாஷ் பேக் போயிட்டு வாங்க )

உங்களோட ஒன்னாம் வகுப்பு ஆசிரியரை நினைவிருக்கிறதா? எத்தனை வருஷம் ஆனாலும் நீங்க அவங்களை மறந்து இருக்க மாட்டீங்க. எழுத்து அறிவித்தவன் இறைவன்னு சொன்னா  நமக்கு எழுத படிக்க சொல்லி தந்த அவங்களும் இறைவன் மாதிரிதான். அதனாலதானோ என்னவோ அவங்க நம்ம நெனவுல எப்பவுமே இருக்காங்க. உண்மையிலேயே ஆசிரியர் தொழில் புனிதமானது. ஒரு ஆசிரியர்  எல்லா மாணவர்களையும் தன் பிள்ளையா ஏத்துகிட்டு பாடம் எடுக்கிறவறா இருக்கணும். வேலைல இருந்து  ரிடையர் ஆனப்புறமும், வழில சந்திக்கிற முன்னாள்  மாணவர்கள் மரியாதை கொடுத்து பேசும்போது ஏற்படுற சந்தோசம் இருக்கே, அதுதான் இந்த தொழில் தர்ற சந்தோசம். அதே நேரத்துல ஆசிரியர்கள் படுற கஷ்டமும் கொஞ்ச நஞ்சமில்லை.

ஆசிரியர்களுக்கும் நமக்குமான உறவு அழகானது. ஆரம்ப பள்ளியில இருந்து  கல்லூரி காலம் வரை நாம விதவிதமான ஆசிரியர்களை சந்திக்கிறோம். வயசு ஆக ஆக ஆசிரியர்கள் பத்தின நம்ம பார்வையும் மாறிகிட்டே வந்து  இருக்கும். ஆனாலும் இன்னைக்கும் நம்மோளோட ஆசிரியர்கள் பத்தி நினைக்கும்போது நமக்கு பலவிதமான  நினைவுகள் வரும்.

பெரும்பாலும் நம்ம ஆரம்ப பள்ளி நாட்கள்ல பெண் ஆசிரியர்களையே  பாத்து இருப்போம். காரணம் சின்ன பசங்களுக்கு பொறுமையா சொல்லி தர பெண் ஆசிரியர்களாலேயே முடியும். ஆரம்ப பள்ளி காலத்துல ஆசிரியர்களை நாம சாதாரண மனுசங்களா நினைச்சு இருக்க மாட்டோம் . அவங்க மேல ஒரு பயமும் , மரியாதையும் இருந்திருக்கும். சிலருக்கு அவங்க ஆசிரியர் ஒரு தேவதை மாதிரி கூட தெரிஞ்சு இருப்பாங்க. சிலருக்கு ஆசிரியர் மேல ஒரு பக்தி கூட இருந்து இருக்கும்.

தொடக்கப் பள்ளி முடிச்ச பின்னாடி நமக்கும், ஆசிரியர்களுக்குமான உறவு  கொஞ்ச கொஞ்சமா வேற பரிமாணத்தை அடைஞ்சு இருக்கும். அவங்க மேல உள்ள மரியாதை சுத்தமா குறைஞ்சு, அவங்களுக்கு பட்ட பேரு வச்சு பேசுற அளவு போயிருக்கும். நமக்கு  15,16 வயசு ஆகும்போது  அவங்க நமக்கு வில்லனா தெரிய ஆரம்பிச்சு  இருப்பாங்க.


குறிப்பா 13 வயசை  தாண்டுன பசங்களுக்கு பாடம் எடுக்கிற கட்டத்துல பெண் ஆசிரியர்கள் படுற பாடு கொஞ்ச நஞ்சமில்லை. தன்னை பத்தின பசங்களோட மோசமான கமெண்டை கேட்டும் கேட்காத மாதிரி இருந்துகிட்டும், பசங்க தன மேல படர விடுற பார்வைல இருந்து தன்னை காத்துகிட்டும் பாடம் எடுக்க வேண்டிய கஷ்டம் அவங்களுக்கு. இது மட்டும் இல்லாம, பசங்க பாத்ரூம்ல 'ஐ லவ் யூ டீச்சர்' னும், படம் வரைஞ்சு பாகங்களை குறிச்சு ஏற்படுத்துற அவமானங்களையும் பொறுத்துக்கணும்.காலேஜ் லெக்சரர்ஸ் நிலைமை சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

ஆனா என்ன  இருந்தாலும் சில ஆசிரியர்கள்,  நமக்கு   ரொம்ப பிடிச்சவங்களா இருப்பாங்க. அவங்க உங்களுக்கு சோறு ஊட்டி விட்டு இருக்கலாம்,  உங்களை எல்லார் முன்னாடியும்  பாராட்டுனவங்களா இருக்கலாம், நீங்க காதலிச்சவங்களா இருக்கலாம், உங்களுக்கு பீஸ் கட்டி உதவி செஞ்சவங்களா  இருக்கலாம், நீங்க செஞ்ச தப்பை கண்டிச்சுட்டு மட்டும் விட்டவங்களா இருக்கலாம், உங்க தலைல குட்டி பாடத்தை புரிய வச்சு பாஸ் செய்ய வச்சவங்களா இருக்கலாம் . 

 நம்மளை ஸ்பெஸலா பீல் பண்ண வைக்கிற ஆசிரியர்களை நமக்கு சுலபமா  பிடிச்சு போகுது. இதே மாதிரி ஒரு ஆசிரியர் எல்லா மாணவர்களையும் பீல் பண்ண வைக்கும்போது அவங்க மாணவர்களோட பேவரிட் ஆயிடறாங்க. இந்த மாதிரி ஆசிரியர்களை மாணவங்க விட்டு கொடுக்குறதே இல்ல. அவங்களுக்காக எதையும் செய்ய தயார் ஆயிடுறாங்க. இப்படிப்பட்ட ஆசிரியர்களுக்கு  மாணவங்ககிட்ட கிடைக்குற மரியாதையே தனி.

ஆனா இன்னைக்கு சூழ்நிலை "வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை" அப்படின்னு நெனைக்கிற மாதிரி மாறிட்டு வருது. வேற வேலை கிடைக்காம போனவங்கதான் பெரும்பாலும் ஆசிரியர் தொழிலுக்கு வராங்கா. டிவிலயும், இன்டர்நெட்லயும் எல்லாத்தையும் கத்துகிற மாணவர்களுக்கு மத்தியில இவங்க பாடு இன்னும் திண்டாட்டமா இருக்க போகுது. ஆனாலும் இவங்கள்லயும் மாணவர்களுக்கு பிடிச்ச ஆசிரியர்கள் உருவாகத்தான் போறாங்க. மாணவர்கள் மதிக்கிற ஆசிரியர்கள் உருவாகத்தான் போறாங்க . ஏன்னா நேத்துக்கும், இன்னைக்கும் மட்டும் இல்ல. என்னைக்குமே குரு தெய்வம்தான் . என்னைக்குமே மரியாதையான வேலை வாத்தியார் வேலைதான்.

விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன 

Sunday, March 24, 2013

சுட்டி குட்டீஸ் -மிஸ் செஞ்சுடாதீங்க, இல்ல வருத்தபடுவீங்க

ட்டு  வருசம்  முன்னாடி வரைக்கும்  சன் டிவியோட பொற்காலம் அப்படின்னு சொல்லலாம். சன் டிவில  என்ன நிகழ்ச்சி போட்டாலும் மக்கள் வேற வழி இல்லாம  பாத்து தீத்தாங்க. அது ராதிகா ஆன்ட்டி ஆம்பளைங்களை எல்லாம் அறைஞ்சு தன்னம்பிக்கை பெண்ணா வலம் வந்த சீரியலா இருந்தாலும் சரி. இல்ல கால் மேல கால் போட்டுகிட்டு சினிமாக்கு எல்லாம் நம்பர் சொன்ன டாப் 10 மூவிஸா இருந்தாலும் சரி. அவங்க கொடுத்ததெல்லாம் ஹிட்டுதான். 

அவங்களும் சந்தோசமா ஒரு நாளைக்கு 12 மணி நேரம் மெகா சீரியல் காமிச்சு போட்டியே இல்லாம நம்பர் ஓன்னா இருந்தாங்க. லைவ் ப்ரோக்ராம்ல  பாட்டு போடற  காலம் வந்த அப்புறமும் விடாம உமாவை வச்சு உங்கள் சாய்ஸ் நடத்திகிட்டு இருந்தாங்கனா பாத்துகங்களேன். அம்சமா டிவிக்கு  வந்த உமா, ஆன்ட்டி ஆன அப்புறமும் அந்த  நிகழ்ச்சியை  நடத்தி சாதனை படைச்சாங்க  . நல்லா இல்லாட்டியும் மக்கள் வேற வழி இல்லாம அவங்க அரைச்ச மாவுலேயே இட்லி சுட்டு சாப்பிட்டு இருந்தாங்க 

இப்பிடி போயிட்டு இருந்தப்போ விஜய் டிவி, ஸ்டார் விஜயா மாறிச்சு. மாறினவங்க புதுசு புதுசா யோசிச்சு நிகழ்ச்சி செய்ய ஆரம்பிச்சாங்க. ரியாலிட்டி ஷோனு ஆரம்பிச்சு நிகழ்ச்சில வர்ற எல்லாரையும் அழ விட்டும்,  சண்டை போட விட்டும் மக்களை கவர் பண்ண ஆரம்பிச்சாங்க  மக்களும் கொஞ்சம் கொஞ்சமா விஜய் டிவி பக்கம் பார்வையை திருப்புனாங்க. ஆரம்பத்துல சன் டிவி அதை பெருசா எடுத்துகிட்ட மாதிரி தெரியல. "கலக்க போவது யாரு" மாதிரி சில  நிகழ்ச்சிகளை  மட்டும் விஜய் டிவி கிட்ட இருந்து காப்பி அடிச்சுகிட்டாங்க . ஆனா புதுசா முளைச்ச கலைஞர் டிவி அப்படியே விஜய் டிவியை காப்பி அடிச்சது. அது மட்டும் இல்லாம  சன் டிவி ல இருந்த ஆளுங்களை வேற தன் பக்கம் இழுத்திகிச்சு. சன் டிவிக்கு தலை வலி ஆரம்பிச்சு.


இபோ சன் டிவி எதாவது புதுசா செய்ய வேண்டிய கட்டாயம். அவங்களும் ட்ரை பண்ணாங்க. ஆனாலும் பெருசா ஏதும் கிளிக் ஆகல. காப்பி அடிச்சு செஞ்ச நிகழ்ச்சிகளும் செட் ஆகல. இருந்தாலும் அவங்க ட்ரை பண்றதை விடல. ஆனா இப்போ கொஞ்ச நாளா அவங்களுக்கு ஒரு நிகழ்ச்சி திருப்தியான நிகழ்ச்சி கிடைச்சு இருக்கு. அதான் சுட்டி குட்டீஸ். முன்னாடி சன் டிவில "மலரும் மொட்டும்" அப்படின்னு ஒரு நிகழ்ச்சி வரும். பிள்ளைங்க வந்து அமைதியா பாட்டு பாடிட்டு போகும். கேக்குற கேள்விக்கு பதில் சொல்லும். பொதுவா இந்த மாதிரி சொல்லி குடுத்ததை அப்படியே  செய்யுறது போர் அடிக்கும் . அதுக்கு பதிலா அந்த குழந்தைங்களயே சுதந்திரமா பேச விட்டா என்ன ஆகும் ? அதுதான் இந்த நிகழ்ச்சி.

குழந்தைங்களை வச்சு ஒரு டாக் ஷோ நடத்துறது எல்லாராலும் செய்ய முடியாத ஒரு விஷயம். அதை இமான் அண்ணாச்சி அற்புதமா செய்றார்.குழந்தைங்க ஒரு விசயத்தை எப்படி புரிஞ்சு வச்சு இருக்குனு அவங்க கிட்ட கேள்வி கேட்டு தெரிஞ்சுகிறதுதான் நிகழ்ச்சியோட ஐடியா. கூடவே அவங்க அப்பா, அம்மா சண்டை குடும்ப விஷயம் எல்லாத்தையும் அவங்க பார்வைல தெரிஞ்சுகிறது காமெடியா இருக்கு. அப்படியே சமயத்துல  அவங்க பேசுற பேச்சு பயமாவும், இந்த காலத்துல ஒரே பிள்ளை பெத்துகிட்டு அதுக்கும் ஓவரா செல்லம் கொடுத்து கெடுக்குறாங்களோன்னு கவலையாவும் இருக்கு. இதெல்லாம் யோசிக்காம பாத்தா நிச்சயம் 15 நிமிஷம் விழுந்து விழுந்து சிரிக்கலாம்.
 
நிகழ்ச்சில 2 குழந்தைங்க என்ன பேசிச்சின்னு கீழ கொடுத்து இருக்கேன் பாருங்க.

 இமான் அண்ணாச்சி : உங்க அம்மா, அப்பாவை கொஞ்ச தூரம் தள்ளி இருக்கும்போது எப்படிமா கூப்பிடுவாங்க?
குழந்தை:ஏங்க! குறுக்கு வலிக்குது. வந்து தைலம் தேச்சு விடுங்களேன்.

இமான் அண்ணாச்சி  : அம்மா, அப்பாவை அடிப்பாங்களா?
குழந்தை:  கிட்சன்ல இருக்கும்போது டிஸ்டர்ப் பண்ணா அடிச்சிடுவாங்க 

 நல்ல வேளை. எடிட் செஞ்சு போட்டதால குடும்ப மானம் தப்பிச்சது. இல்ல அந்த குழந்தை சொன்னது எல்லாம் போட்டு இருந்தா மானம் காத்துல பறந்து இருக்கும். இனிமேலாச்சும் குழந்தைங்க முன்னாடி ஒழுங்கா இருங்கப்பா.

நிகழ்ச்சி ஆரம்பிச்ச புதுசுல கொஞ்சமா விளம்பரம் இருந்துச்சு. ஆனா இப்போ 15 நிமிஷம் விளம்பரம்தான் ஓடுது. எப்படியோ சன் டிவிக்கு இந்த நிகழ்ச்சி ஹிட்டுதான். நிச்சயம் இந்த நிகழ்ச்சியை மிஸ் செஞ்சுடாதீங்க, இல்ல வருத்தபடுவீங்க 

 கருத்து சொல்லிட்டு போங்க 


Saturday, March 23, 2013

திருட்டு டிவிடிய ஆதரிங்க

"அந்த காலத்துல நாங்க அரை அணா கொடுத்து படம் பாப்போம். வீட்டுக்கு வரப்போ எங்க பாட்டி வீட்டுக்குள்ள விடாம வாசல்ல நிறுத்திடுவாங்க. இப்போ  நீங்க கொஞ்சம் கூட யோசிக்காம  பதினஞ்சு ரூபாய் கொடுத்து படம் பாக்குறீங்க". இப்பிடி என் தாத்தா சொன்னது பதினெட்டு வருஷம் முன்னாடி. நல்ல வேளை இப்போ நடக்கிறது எல்லாம் பாக்காம போய் சேந்துட்டார். இப்போ 100 ரூபாய், 150 ருபாய் கொடுத்தெல்லாம் படம் பாக்குறது தெரிஞ்சா என்ன சொல்லுவாருன்னு நெனச்சே பாக்க முடியல.

வருசா வருசம் விலைவாசி கூடுது அப்பிடின்னு நம்ம எல்லாருக்கும் தெரியும். ஆனா சினிமா  தியேட்டர் டிக்கெட் மாதிரி வேற எந்த பொருளும் விலை கூடுன மாதிரி தெரியல. 2003 ல "தூள்" படம் 25 ரூபாய் கொடுத்து பாத்தேன். ஆனா இன்னைக்கு அந்த தியேட்டர்ல படம் பாக்கணும்னா 100 ரூபாய் வேணும்.  அதாவது 10 வருசத்துக்குள்ள 75 ரூபாய் கூடி இருக்கு. இதுல சின்ன ஒரு பெரிய ஊருன்னு எந்த வித்தியாசமும் இல்ல. லேட்டஸ்ட்டா ஒரு படம் வந்திச்சே வத்திக்குச்சினு. அந்த படம் பாக்கலாம்னு போனேன். மெட்ராஸ் அடுத்து இருக்குற ஒரு சின்ன ஊருதான். சின்ன தியேட்டர்தான். முகம் தெரியாத ஒரு ஹீரோ, புதுசா வந்த டைரக்டர். ஆனா அவன் சொன்ன டிக்கெட் விலை 100 ரூபா.  தியேட்டர்ல மொத்தமா 10 பேரு கூட இல்ல. பைரசி பிரச்னை. அதான் சீக்கிரமா காசு எடுக்க பாக்கறோம்னு அவங்க சொல்றாங்க. ஆனா 50 ரூபாய் டிக்கெட் வச்சா கூட்டம் நிச்சயாம ஜாஸ்தி ஆகும். மௌத்-டாக்ல படத்துக்கு விளம்பரமும் ஆகுமே. இது அவங்களுக்கும் தெரியும். ஆனா  தியேட்டர்க்கு வரவன் கிட்ட எவ்வளவு முடியுமோ அவ்ளோ காசு பிடுங்கணும்னு ஆசைல மத்ததெல்லாம் மறஞ்சுடுது. டிவி வந்ததால சில தியேட்டர் மூடுனது உண்மை. ஆனா மிச்ச முள்ள தியேட்டர்ங்க மூடபட்டா அதுக்கு தியேட்டர்காரங்கதான் காரணமா இருப்பாங்க 

ஒரு மல்டிப்ளெக்ஸ் தியேட்டர்ல டிக்கெட் ஜாஸ்தி சொன்னா சரிதான் . சின்ன சின்ன  தியேட்டர்ல கூட இப்பிடி காசு பிடுங்குறதுதான் பொறுக்க முடியல. இருந்தாலும் சினிமா பாக்காம எப்படி ஒரு  தமிழனால இருக்க முடியும்.அதுனால கேட்ட காசை குடுத்து உள்ளேயும் போயிடுறோம். அப்படி உள்ள போனதுக்கப்புறம் நடக்கிறது கொடுமை. படம் ஆரம்பிச்ச உடனே பின்னாடி இருன்னு ஒருத்தன் "சார்! படம் மறைக்கிது. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி உக்காருங்க" னு  சொல்லுவான். வேற வழி. அப்பிடியே கீழ சரிஞ்சு உக்கார வேண்டியதுதான். நிச்சயம் வீட்டுக்கு முதுகு வலியோட போகலாம்.

இப்போ ஏதோ புது டெக்னாலஜில படம் போடுவான் போல. கரண்ட் 2 மணி நேரம் மட்டும் இருக்குற ஊருல எதுக்கு டெக்னாலஜினு தெரியல. கரண்ட் கட் ஆனா சவுண்ட் கட் ஆயிடுது. ஆனா படம் மட்டும் ஓடிகிட்டே இருக்கு. ஆப்ரேடர் நாம போடற சத்ததுல  முழிச்சுகிட்டா ஓகே. இல்ல ஜெனரேடர் ஆன் பண்ற வரைக்கும் ஊமை படம்தான்.

அப்புறம் இன்டர்வல்ல சாப்பிடுற பண்டங்களுக்கு  அவன் வைக்கிறதுதான் விலை. பசில என்ன பண்றதுன்னு சொன்ன காசை குடுத்து அதயும் வாங்கிப்போம். இப்பிடி எல்லா கஷ்டத்தையும் மீறி படம் பாக்குறோம். அந்த படம் நல்லா இருந்தா இந்த கஷ்டம் எல்லாம் மறைஞ்சிடும். ஆனா வர படத்துல பாதி நம்ம கஷ்டத்தை ஜாஸ்தியாத்தான் ஆக்குது.

ஆகவே மக்களே நான் என்ன சொல்ல வரேன்னா இனிமே நாம திருட்டு DVD லயே படம் பாப்போம். திருட்டு DVD பாக்குறதுக்கு குற்ற உணர்ச்சி எல்லாம் வேண்டாம். அவங்க பணம் சம்பாதிக்க பாக்கும்போது நாம நம்ம பணத்தை மிச்சம் பிடிக்கிறதுல  என்ன தப்பு. தியேட்டர் போகாட்டி சினிமா அழிஞ்சிடுமேனு கேக்குறீங்களா? அதுக்காக கவலை பட வேணாம். சினிமாலாம் DTH ல வரும். அப்புறம் சன் டிவிலயே ரிலீஸ் ஆகும். என்ன சினிமான்னு பேரு மட்டும் சீரியல்னு மாறிடும். அதுனால நமக்கு ஒன்னும் நஷ்டம் இல்ல. 

கருத்து சொல்லிட்டு போங்க 

Friday, March 22, 2013

ஆஸ்கார் நாயகன் விஜய், இளையராஜா, இலக்கியம்

நாட்ல நடக்குற போராட்டங்கள பாக்கும்போது சந்தோசம்தான். ஈழ தமிழர்களுக்கு நல்லது நடக்கும்னு தோணுது. ஆனா தனி தமிழ்நாடு அப்பிடின்னு சிலர் உளர்றதை பாக்குறப்போ எரிச்சலா  வருது. இவங்க என்ன பேசுறோம்னு தெரிஞ்சுதான் பேசுறாங்களானு புரியல . அரசாங்கம் இவங்களை ஆரம்பத்திலேயே இரும்பு கரம் கொண்டு அடக்கணும். இல்லாட்டி  எல்லாமே தப்பா போக சான்ஸ் இருக்கு.
விஜய்க்கு சரியா எக்ஸ்பிரசன் காட்ட வராதுன்னு நெனச்சிட்டு இருந்தேன். ஆனா பிச்சு உதறிட்டார். அப்பிடியே கொஞ்சம் அந்த மூஞ்சிய பாருங்க. கெக்கே பிக்கேன்னு உங்களுக்கு சிரிப்பு வரல. சரியான டைரக்டர் மட்டும் கெடச்சா நம்ம அண்ணன் ஆஸ்கார் வாங்குற நாள் ரொம்ப தூரத்துல இல்ல.


 சிலரை நெனச்சா மட்டும்தான் கடவுள் எப்படி இவங்களுக்கு இவ்வளவு அறிவை கொடுத்தார்னு ஆச்சரியமா இருக்கும். அப்படி ஒருத்தர் இளையராஜா. அவரோட ஒவ்வொரு பாட்டையும் கேக்கும்போது பிரமிப்பா இருக்கு. எங்க எந்த மாதிரி சத்தம் கொடுத்தா செட் ஆகும்;எப்படி மெட்டு போட்டா கேக்க இனிமையா இருக்கும் இது மாதிரி எல்லாமே அவருக்கு பிறவியிலேயே வந்து இருக்கு. கிட்டத்தட்ட அவரு கடவுள் நமக்கு கொடுத்த கிப்ட். இது ரொம்ப ஓவர்னு சொல்றவங்க "கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே" பாட்டு டவுன்லோட் செஞ்சு அமைதியான இடத்தில உக்காந்து கவனமா கேளுங்க. நான் சொல்றது சரின்னு புரியும்.
மிழ்நாட்ல  பிறந்தததுக்கு நாம பெருமை பட வேண்டியதுக்கு முக்கியமான காரணம் நம்ம இலக்கியங்கள். ஆனா அது இன்னும் நம்மளுக்கு சரியா புரியல. அந்த காலத்துல நம்ம கனியன் பூங்குன்றனார் எப்படியெல்லாம் சிந்திச்சு பாட்டு எழுதி இருக்கார் பாருங்க. "யாதும் ஊரே! யாவரும் கேளிர்!"  அப்படின்னு எல்லா ஊரையும் சொந்த ஊரு ஆக்கி எல்லாரையும் நம்ம சொந்தம் ஆக்கிட்டார். இப்படி யோசிக்க எவ்வளவு பரந்த சிந்தனை வேணும்? சாலமன் பாப்பையா சொன்ன மாதிரி சங்க இலக்கியம் படிங்கயா. இளமையா இருக்கலாம்.

முடிஞ்சா கமெண்ட் போட்டுட்டு போங்க.


Wednesday, March 20, 2013

ஈழ போராட்டம் - புதிய விதி செய்த மாணவர்கள்

17 வயதில் - ஒரு பாடம் விடாமல் டுயூசன் போய் +2 பரீட்சை எழுதுவதும்

18 வயதில் - நெடுஞ்சாலை ஓரம்  எதாவது பொறியியல் கல்லூரியை தேடி  கண்டு பிடித்து  படிப்பதும் .

21 வயதில் - அதிலும் அரியர் மேல் அரியர் வைத்து கடைசி செமஸ்டரில் எல்லாவற்றையும் க்ளியர் செய்வதும்  

23 வயதிற்குள் - கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கியோ அல்லது மாமா, மச்சான் என்று  ரெபரன்ஸ் பிடித்தோ ஒரு சாப்ட்வேர் நிறுவனத்திலோ அல்லது அரசு நிறுவனத்திலோ வேலை வாங்குவதும் 

25 வயதில் - விசாவிற்கு காத்திருந்து டாலரில் சம்பாதிக்க அமெரிக்கா செல்வதும் 

27 வயதில் - அமெரிக்கா மாப்பிள்ளை அல்லது அரசாங்க மாப்பிள்ளை  அந்தஸ்துடன் ஒரு பெண்ணை பிடித்து மணம் செய்வதும் 

30 வயதில் - பிள்ளை பெற்று கொள்வதும் 

32 வயதில் - ஒரு வீடு வாங்கி வாழ்கையில் செட்டில் ஆகி விட்டதாக நிம்மதி அடைவதும்  

58 வயதில் - "நாங்கல்லாம் அந்த காலத்தில" என அலட்டி கொள்வதும் 

மேற்கண்டவை மட்டுமே தமிழனின் உயர்ந்த பட்ச இலட்சியங்கள் என நினைத்து கொண்டிருந்தேன். நான் எண்ணிய அனைத்தையும் தவறு என புரிய வைத்து விட்டனர் இந்த மாணவர்கள்.  தமிழ்நாடு முழுவதும் கொழுந்து விட்டு எரியும்  தீயை ஒரு வத்திகுச்சியாக இருந்து கொளுத்திய அவர்களுக்கு ஒரு சல்யூட்.Sunday, March 17, 2013

ஈழம் உருவானால்?

கடந்த சில நாட்களாக தமிழ்நாடு கொந்தளித்து கொண்டு இருக்கின்றது. லயோலா கல்லூரி  மாணவர்கள் பற்ற வைத்த தீ தமிழ்நாடு முழுவதும் பரவி கொண்டு இருக்கிறது. ராஜபக்ஷேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், இலங்கையில் நடந்ததை இன படுகொலையாக அறிவிக்க வேண்டும், தனி ஈழம் வேண்டும் என பல கோரிக்கைகளுடன் போராடிக்கொண்டு இருக்கின்றனர். கோரிக்கைகள் நிறைவேருகின்றதோ இல்லையோ, குறைந்த பட்சம் ஈழ மக்கள் தனியாக இல்லை என்பதையாவது இந்த போராட்டங்கள் இலங்கை அரசுக்கு உணர்த்தும்.

ஈழம் ஏன் தேவை?சிங்களர்களிடம் எப்போதும் ஒரு தமிழன வெறுப்பு இருந்து கொண்டே வருகிறது. புலிகள், தமிழர்களின்  எந்த உரிமையை காப்பதற்காக போராடினார்களோ  அதை இனி சிங்களர்களிடமிருந்து  தமிழர்கள் பெறுவது கடினம் என்றே தோன்றுகிறது. மேலும் இலங்கையில் தமிழர்களின் அடையாளங்கள்  அளிக்கப்பட்டு வருகிறது என்பதை அறியும்போது தனி ஈழம்தான் ஒரே தீர்வு என்று சொல்வது சரி என்றே படுகிறது. இல்லாவிடில் இலங்கை தமிழர்கள் தங்கள் அடையாளம் இழந்து இரண்டாம் தர குடி மக்களாகவே வாழ வேண்டி இருக்கும்.  மக்களிடம் வாக்களிப்பு நடத்தி அவர்கள் விரும்பினால் தனி ஈழம் அமைத்து கொடுப்பதே உலகம் அவர்களுக்கு செய்ய வேண்டியது.

நடைமுறை சிக்கல்கள் 

ஆனால்  உலக நாடுகளுக்கு தங்கள் சுயநலம்தான் முக்கியமே தவிர எப்போதும் தனி நாடு கோரிக்கையை ஆதரிக்க போவது இல்லை. அதிலும் இந்தியா ஒருபோதும் ஈழத்திற்கு ஆதரவு தராது.

ஈழம் உருவானால்?

ஒரு வேளை  ஈழம் உருவானாலும் அதன் எதிர்காலம் கவலைப்பட வேண்டிய ஒன்றாகவே இருக்கும். ஒரு சிறிய தீவில் இலங்கையை  பகைத்து கொண்டு ஈழம் உருவாகுமானால் அதன் பின் என்ன நடக்கும் என்று சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்தியா-பாகிஸ்தான், இஸ்ரேல்-பாலஸ்தீனம் போன்ற நாடுகளை விட இந்த நாடுகளின் உறவு மிக மோசமாக இருக்கும். அடிக்கடி நடக்கபோகும் போர்களால் பாதிப்பு அடைய போவது மீண்டு ஈழ மக்களே. என்னதான் வலிமையான ராணுவத்தை ஈழ மக்கள் உருவாக்கினாலும் அவர்களின் அமைதியான வாழ்க்கை கேள்விக்குறிதான். காலம் முழுவதும் பாதுகாப்புக்கு  மற்ற நாடுகளை நம்பியே ஈழ மக்களால்  வாழ முடியாது


ஈழம் தீர்வா ?

தனி ஈழம்தான் சிறந்த தீர்வு என்று தோன்றினாலும் அந்த மக்களின் நிம்மதியான வாழ்க்கைக்கான வழி என்ன என்று சிந்தித்து செயல்படுவதே நம் கடமை. மீண்டும் அந்த மக்களை மீண்டும்  போர்க்களத்தில் நிறுத்துவது தீர்வாகாது. இனியாவது அவர்களுக்கு நல்லதே நடக்கும் என நம்புவோம்.

விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்கு கவனிக்கவும் ஈழம் வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. அந்த மக்களின் நிம்மதியான வாழ்க்கைக்கு வழி செய்ய வேண்டும் என்றே கூறியுள்ளேன்.

வத்திக்குச்சி - சினிமா பார்வை


பரிந்துரை : ஒரு முறை பார்க்கலாம்.காமெடி-த்ரில்லர் என எதாவது சினிமா வகை உண்டா ? அதை இந்த படத்தில் முயற்சி செய்து இருக்கிறார்கள் என தோன்றுகிறது . குறிப்பாக கடைசி காட்சியில் தியேட்டரே சிரிக்கிறது. 

ஷேர்-ஆட்டோ ஓட்டும் நம் கதாநாயகன் அஞ்சலியை காதலிக்கிறார். அது போக மீத நேரத்தில்  முகம் தெரியாதவர்களுக்கு எல்லாம் உதவி செய்கிறார். அதனால் அவரை கொல்ல சிலர் முயல்கின்றனர். அதலிருந்து எப்படி தப்பி வருகிறார் என்பதை த்ரில்லர் போல சொல்ல முயன்று இருக்கின்றனர். ஆனால் வலிமையான காரணமோ, காட்சிகளோ இன்றி காமெடி படமோ என்று சந்தேகம் வருகிறது.

ஒருவனை கொல்ல ஏன் எல்லாரும் முயற்சி செய்கின்றனர் என்பதாக  ஆரம்பித்து படம் நன்றாகவே போகின்றது. அழகான காட்சிகள், சின்ன சின்ன காமெடிகள், சிறப்பான வசனங்கள் , அஞ்சலியின் நடிப்பு என எல்லாமே படத்திற்கு உதவி இருக்கிறது. ஆனால் நாயகனை கொலை செய்ய வருபவர்கள் சொல்லும் காரணம் ஒன்று கூட நம்பும்படி இல்லை.  படத்தில்  அஞ்சலியே இந்த காரணங்கள் எதையும் நம்பவில்லை என்றால் பார்த்து கொள்ளுங்கள். நடுத்தெருவில் கழுத்தில் கத்தி வைத்து பணம் பிடுங்குவது, கொலை செய்யும் திட்டத்தை டீ கடை முன் வைத்து விவாதிப்பது போன்ற காட்சிகள்  எல்லாம் ஓவர். குறிப்பாக கடைசி காட்சியில் இயக்குனரின் புத்திசாலித்தனத்தை பாராட்ட வார்த்தையே இல்லை. கதாநாயகனை புத்திசாலியாக காட்ட முயன்று கோமாளியாக காட்டி இருக்கிறார்.

ஆனால்  படம் குப்பை என்றல்லாம் சொல்ல முடியாது. நிச்சயம் பிழைத்து விடும். இயக்குனர் இப்போதைக்கு ஜஸ்ட் பாஸ்தான் ஆகி இருக்கிறார். கதைக்கு இன்னும்   கொஞ்சம் மெனக்கெட்டு இருந்தால் ஒரு அதிரடி திரில்லர் உருவாக்கி இருக்கலாம். அடுத்த படத்தில்  இன்னும் நன்றாக செய்வார் என நம்புவோம்.


விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன

Saturday, March 16, 2013

மதமாற்றம் தேசிய அபாயமா ?

 தன் மதத்தின் மேல் உண்மையான நம்பிக்கை கொண்ட எவனும் தன் மதத்தை விட்டு கொடுக்க மாட்டான். தனது  மதம் அழிந்து போகுமோ என்ற பயத்தில் அதை மற்றவர் மீது திணிக்கவும் மாட்டான்உலகின் மிக பெரிய மல்டி-லெவல் மார்கெடிங் நிறுவனம் எது? ஆம்வே என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. ஆம்வேவை விட பெரிய பழமையான ஒரு   அமைப்பு உள்ளது. அதுதான் கிருஸ்தவ மதம். நான் உன்னை மதம் மாற்றுவேன், நீ இரண்டு பேரை மதம் மாற்று. இறுதியில் உலகம் முழுதும் நாம் மட்டுமே இருப்போம் என்ற அடிப்படையில் உலகம் முழுவதும் பரவி செழித்து இருக்கிறது.  

ஆனால் இந்தியாவை  பொறுத்தவரை பல ஆண்டுகளாய் முயன்றும் கிருஸ்தத்தால் பெரிய வெற்றி ஏதும் பெற இயலவில்லை. கடலோர மக்களை மதம் மாற்றிய அளவு மற்ற மக்களை மதம் மாற்ற அவர்களால் இயலவில்லை. வெளியே இருந்து வரும் ஆன்மிக கருத்துகளை விட பல மடங்கு ஆழ்ந்த கருத்துகளை இந்தியா தன்னிடத்தே கொண்டிருப்பதும் இதற்கு காரணம். இருந்த போதும் மத மாற்ற முயற்சிகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. அந்த முயற்சிகளில் கையாளப்படும் முறைகளில் சில கீழே.

முறை 1:
 
ஆரம்ப காலத்தில் ஆன்மிக கருத்துகளை பரப்பி வந்தவர்கள். பின் ஆன்மிக கருத்துகளை கொண்டு மக்களை கவர முடியாது என உணர்ந்தனர். அப்போது அவர்கள் எடுத்த ஆயுதம் ஜாதி. இந்து மதத்தில் ஜாதியம் இருப்பதாக கூறியும் அதில் இருந்து விடுபட  வேண்டுமானால் கிருஸ்துவமே வழி என்று கூறியும் மக்களை ஈர்த்தனர். ஆனால் நடந்ததோ வேறு. மதம் மாறியவர்கள் ஜாதியை விட தயாராக இல்லை. கிருஸ்தவ நாடார், கிருஸ்தவ முதலியார், கிருஸ்தவ செட்டியார் என்று ஜாதியை கிருஸ்தத்தோடு சேர்த்தனர். மதத்தை விட்டாலும் மக்கள் ஜாதியை விட மாட்டார்கள் என்று அனைவருக்கும் புரிய ஆரம்பித்தது.

 முறை 2:

மதம் மாற்றுபவர்களின் மற்றொரு ஆயுதம்  "நிம்மதி ". மனிதனுக்கு ஏன் கடவுள் தேவை? பெரும்பாலான மனிதர்கள் கடவுளை நாடுவது மோட்சம் பெறவோ ஞானம் அடையவோ அல்ல. அவனுக்கு தேவை நிம்மதி, ஆறுதல் மற்றும் வாழ்க்கையில் வெற்றி. வாழ்கையில் நிம்மதி இல்லாத ஒருவனிடம் சென்று நீ தேவனிடம் நிம்மதி காண்பாய் என்று கூறினால் அவன் அதை முயற்சி செய்ய எண்ணுவான். அவனை மதம் மாற்றுவது எளிது. இப்படிபட்டவனுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி  உளவியல் ரீதியாக அவனை வசியம் செய்தனர். தங்கள் முயற்சியில் பெரும்  வெற்றியும் கண்டனர். ஆனால் இந்த முறையில் பிரச்சினை என்னவெனில் பெரும்பாலும் வயதானவர்களும் , ஆதரவற்ற பெண்களுமே இந்த முறையில் மதம் மாறினார். எனவே அவர்கள் காலத்திற்கு பின் மதத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல முடியவில்லை. மேலும் மதம் மாறிய பின்னரும் அவர்களை அதிகம் சிந்திக்க விடாமல் தொடர்ந்து  மூளை சலவை செய்ய வேண்டியது  அவசியம்.

 முறை 3:

இவர்களின் மற்றொரு முறை பொருளாதார ரீதியில்  உதவி செய்து மதம் மாற்றுவது. ஆனால் இப்படி மதம் மாறுபவர்களின் தேவ விசுவாசம் கேள்விகுறி. எனவே இந்த முறையும் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. மதம் மாறுபவர்கள் மீண்டும் மதத்தை கை விட வாய்ப்பு அதிகம்.

புதிய முறை:

 இப்படி எந்த முறையும்  இந்தியாவில் உதவவில்லை என்றதும் அவர்கள் ஒரு புதிய முறையை கையில் எடுத்துள்ளனர்.   இந்த முறையில்  அவர்கள் கிருஸ்துவத்திற்கு இந்திய முலாம் பூச முயற்சி செய்கின்றனர். காவி உடை அணிந்து மத மாற்றம் செய்வது, காவடி எடுத்து சர்ச்சுக்கு போவது, திருவள்ளுவர் ஒரு கிறிஸ்தவர் என பிரசாரம் செய்வது என்பது அனைத்தும் இந்த முறையே. இதன் மூலம் கிறிஸ்தவத்தை மக்களிடம் எளிதில் கொண்டு சேர்க்கலாம் என்று கருதுகின்றனர். ஆனால் இந்த முறையில் ஆபத்து என்னவெனில் இந்து மதம் எதையும் தம்முள் கரைத்து கொள்ள கூடியது. காலப் போக்கில் இந்து புராணங்களில் ஏசுநாதர் சேர்க்கப் பட்டு கோவில்களில் அவருக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட கூடிய அபாயம் உண்டு. மெழுகுவர்த்திக்கு பதில் தீபம் ஏற்றி அவரை வழிபடபோகும் காலம் வரலாம்.

மதமாற்றம்  தேசிய அபாயமா ?

 பல மொழி, இன, கலாசார நம்பிக்கைகள் கொண்ட இந்த நாட்டில் மக்களை ஒருங்கிணைப்பது மதம் மட்டுமே. இந்துக்களின் எண்ணிக்கை குறைவது நிச்சயம் தேசத்திற்கு ஆபத்தே. மக்களிடையே விழிப்புணர்வு இல்லாததே பெரும்பாலான மத மாற்ற முயற்சிகள் வெற்றி பெற காரணம். இந்த மத மாற்ற முயற்சிகள் எந்த காலத்திலும் முழு  வெற்றி அடைய கூடாது என  எல்லாம் வல்ல கர்த்தரை  வேண்டி கொள்கிறேன்.

விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன. எனக்கு எந்த மதத்தின் மீதும் வெறுப்பு இல்லை. மத மாற்றம் செய்யும் நோக்கில் சிலர் என்னை அணுகியுள்ளனர் . அவர்கள் கூறிய கருத்துகளே இந்த பதிவுக்கு காரணம். 


Friday, March 15, 2013

புரட்சி தலைவிக்கு ஒரு கடுதாசி. இல்ல கடிதம்னு வச்சுக்கலாம்.

மரியாதைக்குரிய முதல்வர் அவர்களுக்கு,

கடந்த திமுக  ஆட்சியில் வெறுப்புற்று கிட்டத்தட்ட உங்களுக்கு ஆதரவாக நண்பர்களிடம் பிரசாரம் செய்த  ஒரு குடிமகன் எழுதி கொள்வது. உங்களின் பல பணிகளுக்கிடையே வத்திகுச்சியில் என்ன வருகிறது என்று தேடி படிக்க உங்களுக்கு நேரமிருக்காது என்று எனக்கும் தெரியும். இருந்தாலும் நடந்ததை யாரிடமாவது  புலம்ப வேண்டிய கட்டாயம் எனக்கு. ஆகவே தங்களுக்கு எழுதுவதாக கற்பனை செய்து கொண்டு இந்த மடலை வரைகிறேன் .

சொந்த ஊரை விட்டு பல காரணங்களுக்காக மக்கள்  சென்னை வர வேண்டிய சூழ்நிலை இன்று உள்ளது. அதிலும் "வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது" என்பது போல தென் மாவட்டங்களிலிருந்து சென்னை வர வேண்டிய சூழல். இது தவிர்க்க முடியாததுதான். ஆனால் அப்படி வருபவர்களுக்கு குறைந்த பட்ச போக்குவரத்து வசதிகளாவது அரசு செய்து தர வேண்டாமா? ரயிலில் முன்பதிவு இல்லாமல் பயணம் செய்வது கிட்டத்தட்ட நரகம் போன்றது. அது குடும்பத்தோடு பயணம் செய்பவர்களுக்கு சாத்தியமும் இல்லை. ஆயிரக்கணக்கில் செலவு செய்து தனியார் பேருந்தில் செல்லவும் நடுத்தர குடும்பஸ்தனுக்கு இயலாது. இந்நிலையில் அவன் நம்புவது அரசு பேருந்துகளையே. ஆனால் அரசு பேருந்து அவனுக்கு பாதுகாப்பான பயணம் செய்ய வழி செய்கிறதா? நிச்சயம் இல்லை. கடந்த வாரம் திங்கள் கிழமை மதுரையிலிருந்து சென்னை செல்ல அரசு பேருந்தில் முன் பதிவு செய்திருந்தேன். 9 மணிக்கு வர வேண்டிய பேருந்து 10 மணி வரை வரவில்லை.கிட்டத்தட்ட அனைத்து பேருந்துகளும் கால தாமதம்  . அதை நான் குறை சொல்லவில்லை. இந்தியாவில் இதை குறை சொல்லவும் முடியாது. அனால் அதன் பின் நடந்தவைதான் அதிர்ச்சி அளிப்பவை. 10 மணிக்கு  வந்த பேருந்தில் இருந்து இறங்கிய ஓட்டுனர் தான் அப்போதுதான் சென்னையிலிருந்து வந்து இருப்பதாகவும் அரை மணி கூட ஒய்வு கொடுக்காமல் மீண்டும் சென்னை செல்வது எப்படி என்றும் குறை பட்டு கொண்டார். ஞாயிறு அன்று 7 மணிக்கு எழுந்தவர் பின் ஒரு நிமிடம் கூட தூங்கவில்லையாம். ஆனாலும் ஓட்டுனர் பற்றாக்குறை இருப்பதாக கூறி அவரை மீண்டும் சென்னை செல்ல வற்புறுத்தி இருக்கிறார்கள். அவரும் வேறு வழியின்றி பேருந்தில் ஏறினார். நானும் வேறு வழியின்றி பயத்தை மறைத்து கொண்டு பேருந்தில் ஏறினேன். ஒரு வழியாக பயணம் தொடங்கியது.

பேருந்து கிளம்பிய ஒரு மணி நேரத்தில் ஒரு சத்தம். பேருந்து சற்று தடுமாறி ஒரு ஓரமாக நின்றது.காரணம்  பேருந்தின் முன் சக்கரம் பங்சர். அதையும் நான் பெரிதாக சொல்லவில்லை.  ஏனெனில் அரசு  பேருந்தில் சக்கரம் தேய்ந்து முடிக்கும் வரை மாற்ற மாட்டார்கள் என்ற எதார்த்தம் தெரிந்தே இருந்தேன். ஆனால் நடத்துனர் அடுத்து சொன்னதைத்தான் ஏற்க முடியவில்லை. பேருந்தில் மாற்று சக்கரம் மட்டுமே உண்டு என்றும் அதை மாட்டுவதற்கு கருவிகள் இல்லை என்றும் கூறினார். வேறு பேருந்துகளிலிருந்து கருவி வாங்கினால் மட்டுமே வேலை தொடங்க முடியும் என்றார். ஆனால் அடுத்து வந்த நான்கு பேருந்துகளிலும் அந்த கருவிகள் இல்லை. பின்னர் ஒரு நல்ல மனம் கொண்ட லாரி ஓட்டுனர் ஒருவர் லாரியை நிறுத்தி கிட்ட தட்ட அரை மணி நேரம் உதவி செய்து வண்டியை கிளப்ப வைத்தார்.பேருந்தில் இருந்த அனைத்து பயணிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். நடுகாட்டில் எப்படியோ உதவி கிடைத்ததே என்று நிம்மதி கொண்டனர். ஆனால் நிம்மதி நெடு நேரம் நீடிக்கவில்லை. பயணம் தொடங்கிய 3 மணி நேரத்தில் பின் புறமிருந்து தட தட சத்தம். ஒட்டு மொத்த பேருந்தும் அலறியது. இந்த முறை நடத்துனர் பேருந்தின்  பின்புறத்தில் எதையோ வெட்டி விட்டால் சரி ஆகிவிடும் என்றார். 20 நிமிடங்களில் அதுவும் சரி ஆனது. பின் பிரச்னை எதும் இன்றி சென்னை வந்து சேர்ந்தோம்.

இந்த பயணத்தின்போது என் மனதில் எழுந்த கேள்விகள்.

"பேருந்து விபத்தில் சிக்கினால் அரசு எவ்வளவு  நிவாரணம் அளிக்கும்?"

"பெண்களும் குழந்தைகளும் பயணம் செய்யும் பேருந்தில் இத்தனை அஜாக்கிரதையா?" 

"வசதிகள் செய்து தர வேண்டாம். குறைந்தபட்ச பாதுகாப்பாவது உறுதி செய்யப்பட  வேண்டாமா?"

"முன்பதிவு செய்யும் இணைய தளம் மிக மோசமாக வகையில் வடிவமைக்கபட்டு  செயல்படுத்தபடுவது பயணிகள் அரசு பேருந்தை பயன்படுத்தாமல் இருக்க அரசு செய்யும் எச்சரிக்கையா?"


 "தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அரசு பேருந்துகளில் தொலைக்காட்சி எடுக்கபட்டது; சீட்கள் அதிகரிக்கப்பட்டன; கட்டணம் அதிகரிக்கபட்டது. இருப்பினும் பயணிகளுக்கு  பாதுகாப்பு இல்லையே"

 இருப்பினும் எனக்கு இன்னும் அரசின் மீது நம்பிக்கை இருக்கிறது. . என்றாவது ஒரு நாள் இவை அனைத்தும் சரி செய்யப்படும். நீங்கள் நிச்சயம் இதை ஒரு நாள் இதை மாற்றுவீர்கள். ஏனென்றால் இந்தியாவே நாளை என்ற நம்பிக்கையில்தானே இருக்கிறது.

நன்றி: இத்தனை நெருக்கடியிலும் பொறுமையாக இருந்து பேருந்தை பத்திரமாக ஊர் கொண்டு வந்து சேர்த்த ஓட்டுனர், நடத்துனர், சமயத்தில் உதவிய லாரி டிரைவர், சுயநலமே ஆனாலும் பேருந்தில் இருந்து இறங்கி உதவி செய்த பயணிகள். Thursday, March 14, 2013

விஜய்-அஜித், கருணாநிதி மற்றும் புஜாரா

தீப்பெட்டி - 1

லங்கைக்கு எதிரான மாணவர் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இறுதி போரின்போது கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த கருணாநிதியின் ராஜதந்திரம் இப்போது புரிகின்றது. தன் ஆட்சி காலத்தில் நடக்க கூடாது என்று நினைத்ததற்கு இப்போது ஆதரவு தெரிவித்து வருகிறார் தமிழின தலைவர். மக்கள் தன் நாடகங்களை ரசித்த காலம் மலை ஏறிவிட்டதை எப்போது உணர்வார் என்று தெரியவில்லை.

                                         *******************************************************

பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு  தற்போது மீடியா அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதற்கு பெண்கள் அணியும் ஆடைகளே காரணம் என்றும் ஆண்களின் தவறான பார்வையே காரணம் என்றும் விவாதம் நடத்தி வருகின்றனர். என்னை பொறுத்தவரையில் நம் நாட்டின் கலாச்சாரத்தில் ஏற்பட்ட கலப்படமே இதற்கு காரணம். நாம் முற்றிலும் மேற்கத்திய நாகரீகத்தில் வாழ வேண்டும் முடியாவிட்டால் இந்திய நாகரீகத்தை பின்பற்ற வேண்டும். பாதி தேசம் ஒரு நாகரீகத்தை பின் பற்றுவதும் மீதி தேசம் மற்றொரு கலாச்சாரத்தில் வாழ்வதும் மேலும் பல சிக்கல்களையே உருவாக்கும்.
                                     *******************************************************
புஜாரா - அணிக்குள் வரும் முன்பே  அடுத்த டிராவிட் என்று வர்ணிக்கப் ட்டவர். அந்த பாராட்டுக்கு முற்றிலும் தான் தகுதியானவன் என்பதை தன ஆட்டத்தின் மூலம் காட்டி வருகிறார். அற்புதமான தற்காப்பு ஆட்டம், நேர்த்தியான ஷாட்கள், சிறப்பான யுக்தி என கலக்கி வருகிறார். அதே நேரத்தில் டிராவிடை விட வேகமாவும் ரன் குவிக்கிறார். காயங்கள் பாதிக்காத பட்சத்தில்  இவர்  டிராவிட் இடத்தை கட்சிதமாக பூர்த்தி செய்வார்.

 இவரின் புல் ஷாட்டும் ஹூக் ஷாட்டும் மிக அருமை
                                  *******************************************************

எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி-கமல் என்று இருந்தது எப்படி விஜய்-அஜித் என்று மாறியது என தெரியவில்லை. முன்னவர்களிடமிருந்த திறமையும் வசீகரமும் பின்னவர்களிடம் இல்லை.விஜய்யும் அஜித்தும் நடிக்க வந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகியும் நடிப்பில் பெரிய வித்தியாசத்தை காண்பிக்கவும் இல்லை. எம்.ஜி.ஆர்-ரஜினி போன்ற வசீகரமும் இல்லை. ஒரு வேளை தமிழ் ரசிகர்களின் ரசனை குறைந்து விட்டதா?


விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன. கவர்ச்சியான தலைப்பை கண்டு வந்து இருப்பீர்கள். தங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தி ஆகி இருந்தால் ஓட்டளித்து செல்லவும்.
Monday, March 4, 2013

மதுவிலக்கு சாத்தியமா?


 "அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு" என்று சொன்ன ஒரு நாட்டில்  இன்று அரசே  நஞ்சை அளவுக்கு அதிகமாக விற்று கொண்டு இருக்கிறது. அதுவும் தமிழகத்தின் ஒரு அடையாளமாகவே குடி பழக்கம் மாறி போகும் அளவிற்கு.  இந்தியாவிலேயே வேறு எந்த தொழிலும் தனியாரிடமிருந்து அரசுக்கு வந்த பின் வேறு எந்த தொழிலாவது  இந்த அளவு வெற்றிகரமாக நடந்திருக்கிறதா என்று தெரியவில்லை. அந்த வகையில் தமிழன் சாதனை படைத்து கொண்டிருக்கிறான். இந்த நிலையை மாற்ற  சுயநலம் ஏதுமின்றி  தன் உயிரையும் பொருட்படுத்தாமல் மது விலக்கிற்காக உண்ணாவிரதம் இருந்ததிரு. சசி பெருமாள் அவர்களுக்கு முதலில் வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன். ஒரு மாதம்  உண்ணாவிரதம் இருந்தும்  இவருக்கு ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் குடுத்து செய்திகள் வெளியிடாதது துரதிர்ஷ்டம்.  மதுவிலக்கு ஏன் தேவை?

குடிப்பதனால் தனக்கு கேடுதான் என்று திரைபடத்தில் கீழே எச்சரிக்கை காண்பிக்காவிட்டாலும் குடிப்பவர்களுக்கு தெரியும். தன் மக்களுக்கு ஊற்றி கொடுப்பதனால் நாட்டுக்கு ஒரு பயனும் இல்லை என்று அரசுக்கும் தெரியும். இருப்பினும் இரண்டு தரப்புமே தற்காலிக சந்தோசமே பெரிதாக தெரிகிறது.குடிக்கலாமா? வேண்டாமா? என்று  நடக்கும் மன போராட்டத்தில்  பெரும்பாலும் கடைசியாக ஒரு முறை குடித்து கொள்வோம் என்ற முடிவையே குடிப்பவன் தினமும் எடுக்கிறான். ஒரு கட்டத்திற்கு பின் அந்த மன போராட்டம் மறைந்து குடிக்காமல் இருக்க முடியாது என்ற நிலையை அடைகிறான். தன்னை தானே முற்றிலும் அழித்து கொள்கிறான்.


 அரசோ எதற்கும் கவலைப்படாமல்  வருமானத்துக்காக தற்கொலைக்கு ஈடான செயலை செய்து வருகிறது . குடி பழக்கம் தவறு என்ற எண்ணம் சிறிது சிறிதாக மறைந்து வருவதால் எதிர்காலத்தில் ஒரு தலைமுறையே குடிக்கு முழுமையான அடிமைகளாக மாறினாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை. 

மதுவிலக்கு சாத்தியமா?

உலகமயமாகிவிட்ட இன்றைய நிலையில் முழு மதுவிலக்கு சாத்தியம் இல்லை என்பதயும் ஒத்துகொள்ள வேண்டும். முழு மதுவிலக்கு காவல்துறைக்கு அதிகப்படி வருமானத்துக்குத்தான் வாய்ப்பு தரும். மேலும் முழுவதும் குடி அடிமை ஆனவர்களுக்கு ஒரே நாளில் முற்றிலும் இந்த பழக்கத்திலிருந்து விடுபடுவதும் சாத்தியம் இல்லை. திடீரென்று இந்த பழக்கத்தை நிறுத்துவது எதிர் விளைவுகளையே தரும்.

மதுக்கடைகளை குறைத்து கொள்வது மட்டுமே இப்போதைக்கான தற்காலிக தீர்வு .மேலும்  டார்கெட் வைத்து சாராயம் விற்பது போன்றவற்றை தவிர்த்து,   மதுவுக்கு மார்க்கெடிங் செய்வதை அரசு  குறைத்து கொள்ள வேண்டும்.மக்களுக்கும் மதுவுக்குமான  இடைவெளியை அதிகரிக்க வழி செய்ய வேண்டும். இப்போதைக்கு மது பாட்டிலை உடைக்க முடியாதுதான். ஆனால் சற்று தள்ளியாவது வைக்க வேண்டும். செய்யுமா அரசு?

இதை பற்றி உங்கள் கருத்துகளை விட்டு செல்லுங்கள்  


Saturday, March 2, 2013

எம்.ஜி.ஆர் ஆனவள் !

இது ஒரு கற்பனை கதை   எனக்கு முதல் கேஸ்  கொஞ்சம் நல்லபடியாக அமைந்து இருக்கலாம். ஆனால் கொஞ்சம் சிக்கலாய் போய் விட்டது. இருங்கள் நான் யார் என்று என்று சொல்லி விடுகிறேன். என் பெயர் விஸ்வநாத். சுருக்கமாக விசு. மனோதத்துவம்  படித்து விட்டு இந்த ஊரில் ப்ராக்டீஸ் செய்ய ஆரம்பித்து இருக்கிறேன். இந்த சின்ன  ஊரில் யார் என்னை தேடி வர  போகிறார்கள் என்று  எல்லாரும் கேட்டனர். ஆனால் எனக்கு நம்பிக்கை இருந்தது . சின்ன ஊரோ பெரிய ஊரோ எல்லாருக்கும் தன் மனநிலை மீது ஒரு சந்தேகம் இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் பரீட்சை எழுத போகிறவர்களும் கல்யாணம் செய்ய போகிறவர்களும் கவுன்சிலிங் வந்தாலே கிளினிக் நன்றாக போகும் என்று நினைத்தேன். ஆனால் கிளினிக் திறந்து 2 நாள் ஆகியும் யாரும் வரவில்லை. 

3 வது நாள் ஒருவர் வந்தார். பார்பதற்கு படித்தவர் போல இருந்தார். எனக்கு ஒரே மகிழ்ச்சி. முதல் கேஸ் ஆயிற்றே.

"குட் மார்னிங் சார்!" என்றார்.

"குட் மார்னிங்! உக்காருங்க. உங்க மனசுக்கு என்ன பண்ணுது"

"எனக்கு ஒன்னும் இல்ல சார். என் வொய்புக்கு தான். "

"அவங்க எங்க? கூட்டிகிட்டு வல்லியா?"

"வெளிய இருக்கா. முதல்ல உங்க கிட்ட பேசிடலாம்னு"

"சரி சொல்லுங்க. என்ன அவங்களுக்கு?"

"அவளை பாத்தா எனக்கு பயமா இருக்கு சார்"

"அது எல்லாருக்கும் இருக்குறதுதான்."

"இது அந்த பயம் இல்ல சார். அவ வித்தியாசமா நடந்துகிறா. ஸ்பிலிட் பெர்சானாலிடி மாதிரி "  நிஜமாகவே அவரிடம் மிரட்சி தெரிந்தது.

"என்ன பண்றாங்கன்னு சொல்லுங்க"

"அவ அவளை எம்.ஜி.ஆர்  மாதிரி நெனச்சிகிறா."

"கொஞ்சம் வெவரமா சொல்லுங்க"

"நேத்து அவ திடீர்னு எங்க என் தொப்பியும் கண்ணாடியும்னு கேட்டா. எனக்கு ஒன்னும் புரியல. என்னமா ஆச்சு. எந்த தொப்பியும் கண்ணாடியும்னு கேட்டேன்.  நான்தான் எப்பவும் போடுவேனே அதுதான்ன. எனக்கு ஒன்னும் புரியல. நான் ஷுட்டிங் கெளம்பணும் சீக்கிரம் தேடி எடுத்து குடுங்க. திரிலோக சந்தர் எனக்காக காத்திக்கிட்டு இருப்பார்னா. அப்புறம் மயங்கி விழுந்துட்டா"

" அதுக்கு அப்புறம்"

"மயக்கம்  தெளிஞ்சதும் என்   அம்மா அவங்களை மந்திரிக்க கூட்டிகிட்டு போனாங்க. அங்க போய் பூசாரிய பாத்து நாகேஷ், காமெடி எல்லாம் எல்லாம் நல்லா வந்து இருக்கு. பிரமாதபடுத்திடீங்க அப்படின்னு உளறி இருக்கா. பத்தாதுக்கு உதட்ட எம்.ஜி.ஆர் மாதிரி சுழிச்சு வேற இருக்கா. சுத்தி இருந்தவங்க எல்லாம் எம்.ஜி.ஆர் ஆவி இவளை பிடிச்சு இருக்குனு அவளை சுத்தி வளைச்சிகிட்டாங்க. போதும் அவளை திரும்ப வீட்டுக்கு கூட்டிட்டு வரதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடிச்சு எங்க அம்மாக்கு"

எனக்கு ஆர்வம் கூடியது. முதல் கேஸே என் திறமைக்கு  சவால் அளிக்க கூடியது . எப்படியாவது அந்த பெண்ணை குணபடுத்தி விட்டால் போதும். பேப்பரில் விளம்பரம் குடுத்து ஊரையே கலக்கி விடலாம். என் அடுத்த கேள்வியை கேட்டேன். 

"நீங்க எதுவும் கேட்டிங்களா அவங்க கிட்ட?"

"அவ வீட்டுக்கு  வந்ததும் என்னடி ஆச்சு உனக்கு. உன் பேரு பிரியா. நீ என் பொண்டாட்டின்னு சத்தம் போட்டேன். ஐயோ நீங்க என்னை நம்பவே மாட்டிங்களா  அப்படின்னு கையை மடக்கி முகத்துல வச்சு கிட்டு எம்.ஜி.ஆர் மாதிரியே அழ ஆரம்பிச்சுட்டா. நான் பயந்து போய்ட்டேன்." அவர் குரல் பதட்டமானது.

"சார்! பதட்டபடாதீங்க . சரி பணிடலாம்."

"இல்ல டாக்டர். அவ வயலண்ட்டா  வேற நடந்துகிறா. நேத்து நைட்  திடீர்னு என் பெல்டை வேற எடுத்துகிட்டு எங்க வீட்டு பிள்ளைல வர மாதிரி  பாட்டு பாடிகிட்டே என்னை அடிக்க வந்தா."

படித்த பாடத்த எல்லாம் நினைவுக்கு கொண்டு  வந்தேன். ஸ்ப்லிட் பெர்சனாலிட்டி, ஹிஸ்டிரியா, மல்டிபில் பெர்சனாலிட்டி எதுவாக இருக்கும். 

"ரொம்ப சீரியஸ் கேஸ்! சீக்கிரம் நீங்க என் கிட்ட வந்தது நல்லதா போச்சு."

"இதெல்லாம் கூட பொறுத்துகலாம் டாக்டர். ஆனால் இன்னைக்கு காலைல அவ செஞ்சதுதான் என்னால பொறுக்க முடியல. பக்கத்துக்கு வீட்டு பாட்டி ரொம்ப கஷ்டபடுதுன்னு சொல்லிட்டு எங்க வீட்ல இருந்து 10,000 ருபாய் எடுத்துட்டு போய் அவங்க கிட்ட கொடுத்துட்டா. நல்ல வேலையா அவங்க என் கிட்ட வந்து திரும்ப கொடுத்திட்டாங்க."

"அடடா " இப்போது எனக்கு பயமாக இருந்தது. இந்த கேஸ் ரொம்ப கஷ்டபடுத்தும் என்று தெரிந்தது. எப்படி கழண்டு  கொள்வது என்று யோசிக்க ஆரம்பித்தேன். அவர் திரும்ப சொல்வதற்கு  ஆரம்பித்தார்.

"காலைல உங்களை பாக்க வரும்போது கூட மூட்டை தூக்கிட்டு இருந்த  ஒரு கிழவனை பாத்து முத்தம் குடுக்க போய்"

நான் சுதாரித்தேன். "எனக்கு புரியுது சார்! நீங்க அவங்களை உள்ள வர சொல்லுங்க. வெளிய தனியாவா இருக்காங்க?"

"இல்ல. என் அம்மா கூட"

"சரி நீங்க வெளியே இருங்க. அவங்களை  வர சொல்லுங்க"

சில நிமிடங்களில் அந்த பெண் உள்ளே வந்தார்.

"வாங்க பிரியா."

"சாரி டாக்டர் . என் ஹஸ்பண்ட் தனியாதான் உள்ள வருவேன்னு அடம் பிடிச்சார். எப்படியோ நீங்க அவர் கிட்ட பேசுனா போதும்னுதான்  தனியா அனுப்பிச்சேன். அவரை சீக்கிரமா  குணபடுத்திடலாம்ல. "

அதிர்ந்தேன். "என்னமா சொல்றீங்க. அவருக்கு என்ன?"

"அப்போ அவரு உங்க கிட்ட தெளிவாதான் பேசுனாரா?"

"ஆமா. என்ன அவருக்கு?"

"அவர் நேத்து காலைல இருந்து அவரை ஜானகி  எம்.ஜி.ஆர் மாதிரி கற்பனை பண்ணிக்கிறார். அது மட்டும் இல்ல. என்னையும் எம்.ஜி.ஆர் மாதிரி நெனச்சுகிட்டு ... ..............."
LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...