Sunday, April 28, 2013

இப்படியும் நடக்கலாம்: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இந்தியா விலகல்

 
மும்பை ஜனவரி 20,2018: இனி சர்வதேச போட்டிகளில் இந்திய  கிரிக்கெட் அணி பங்கேற்காது என பிசிசிஐ அறிவித்துள்ளது. சர்வதேச போட்டிகளால் IPL போட்டிகளிலிருந்து  வீரர்களின் கவனம் சிதறுகிறது. எனவே பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது என பிசிசிஐ தலைவர் லிலித் களவாணி நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.

சந்திப்பின்போது உடனிருந்த  IPL ஜாம்பவான் ரவீந்திர ஜடேஜா கூறுகையில்  சர்வதேச கிரிக்கெட் போட்டிகளால் யாருக்கும் எந்த எந்த ஒரு பயனும் இல்லை. பிசிசிஐ சரியான முடிவை எடுத்துள்ளது என்றார். இந்த அறிவிப்பால் வீரர்களும், ரசிகர்களும்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர். IPL போட்டிகளில் அவர்கள் முழு கவனம்  என்றும் அவர் மேலும் கூறினார். இந்த முறை ஜடேஜா மும்பை அணியால் 20 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

பிசிசிஐயின் இந்த அறிவிப்பை தொடர்ந்து சச்சின் டெண்டுல்கர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தோனி கடந்த ஆண்டு ஒய்வு அறிவித்த போதே தானும் ஒய்வு பெற இருந்ததாகவும் பதினாறு வயதில் தனக்குள் இருந்த கிரிக்கெட் ஆர்வம் சிறிதும் குறையாததால் ஒய்வு முடிவை கைவிட்டதாகவும் அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு IPL போட்டிகளின்போது எல்லை கோட்டை 50 மீட்டர்களுக்கு சுருக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது . மேலும் 20 மீட்டர் வட்டத்துக்கு வெளியே எந்த நேரத்திலும் ஃபீல்டர் யாரும் நிற்க கூடாது என கட்டுப்பாடு விதித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
 

Tuesday, April 23, 2013

தமிழ் படங்களில் ஹீரோயிச பாடல்கள்

ஹீரோ துதி பாடல்கள். தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களுக்கு மாஸை உருவாக்குவதிலும், தக்க வைப்பதிலும் இந்த பாடல்களின் பங்கு மிக முக்கியமானது. நீங்கள் யாருடைய ரசிகராக இருந்தாலும் உங்கள் அபிமான ஹீரோவின் பெருமைகளை பாடலில் சொல்லும்போது உங்களின் நரம்புகள் முறுக்கேருவதை உணர்ந்திருப்பீர்கள். 

நாயகனை நல்லவனாகவும், வல்லவனாகவும், வீரனாகவும் , ஏழை தோழனாகவும் காட்டும் இத்தகைய பாடல்கள் MGR காலத்திலிருந்தே வழக்கத்தில் உள்ளன. அதில் நான் சிறந்ததென  கருதும் சில பாடல்கள் பற்றி இங்கே கூறுகிறேன்.

6. மதுர வீரந்தானே (தூள்)

விக்ரமை 'C' சென்டர் வரை கொண்டு சென்ற பாடல்களில் முக்கியமானது 'தூள்'.  தரணி இயக்கிய இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் இந்த பாடலை யாரும் மறந்து இருக்க முடியாது. அந்த படத்தின் பிரமாண்ட வெற்றிக்கான காரணங்களில் இந்த பாடலுக்கும் முக்கிய பங்கு உண்டு. 'பரவை' முனியம்மா குரலும், பாடலின் வேகத்துக்கு ஏற்ற சண்டை காட்சி அமைப்பும் ரசிகர்களை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தின. ஹீரோவின் வீரத்தை புகழும் இந்த பாடல் நிச்சயம் தமிழில் வந்த ஒரு சிறந்த ஹீரோ துதி பாடல்.


5. அர்ஜுனரு வில்லு (கில்லி)

விஜயின் கேரியரில் மிக பெரிய திருப்பு முனையை ஏற்படுத்திய படம் "கில்லி'. தரணிதான்  இந்த படத்தின்  இயக்குனர் என்பதாலோ என்னவோ 'தூள்' படத்தில் வரும் ஹீரோவின்  வீரத்தை  புகழும் பாடல் போல் இந்த படத்திலும் அமைத்து இருந்தார். இந்த படத்திற்கு பின் எவ்வளவோ ஹீரோ துதி பாடல்களில் விஜய் நடித்து இருந்தாலும் இந்த பாடல் போல் இயல்பாக எந்த பாடலும் அமையவில்லை.

4. தலை போல வருமா (அட்டகாசம்)

அஜித் ரசிகர்களுக்கு இந்த பாடல் தேசிய கீதம் போன்று இருந்த காலம் உண்டு. இந்த படம் மிக பெரிய ஹிட் இல்லை என்றாலும் இந்த பாடல் மட்டுமே அஜித் ரசிகர்களை திருப்தி படுத்த போதுமானதாக இருந்தது. இந்த அட்டகாச பாடலை சிறந்த துதி பாடல்கள் வரிசையில் கண்டிப்பாக சேர்க்கலாம்.

3. யாரென்று தெரிகிறதா (விஸ்வரூபம்)

கமல் எத்தனையோ ஹீரோ துதி பாடல்களில் நடித்து இருந்தாலும் இந்த பாடலே எனக்கு சிறப்பானதாக தெரிகிறது. "உலக நாயகனே" என்று தசாவதார பாடல் இவரை 
               
                          உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு"                        

என்றெல்லாம் சொல்லி மேலே தூக்கி வைத்தாலும் கதைக்கு தேவை இல்லாத  அந்த பாடலில் இருக்கும் செயற்கை தன்மை அதை சிறந்த பாடலாக ஏற்று கொள்ள தடையாகிறது. அந்த வகையில் ரசிகர்களை அதிக அளவு  உணர்ச்சி கொள்ள செய்த இந்த பாடல் சிறந்த ஹீரோயிச பாடல்.

2. பொதுவாக என் மனசு (முரட்டு காளை)


தமிழின் சிறந்த ஹீரோயிச பாடல்களை பட்டியலிட்டால் யாராலும் இந்த பாடலை தவிக்க முடியாது. பாடல் வரிகளும், ரஜினியின் ஸ்டைலான நடிப்பும் ரசிகர்களை எவ்வளவு உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தியிருக்கும் என்று சொல்ல தேவையில்லை. "முரட்டு காளை" படம் பார்த்த பின் ரஜினி ரசிகனாக மாறியவர்கள் அதிக அளவு இருப்பார்கள். அதற்கு முக்கிய காரணமாக இந்த பாடலும் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

1. நான் ஆணையிட்டால் (எங்க வீட்டு பிள்ளை)


                      "ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் 
                       அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்"

இந்த வரிகளை  கேட்டால் சில  திமுகவினருக்கு கூட அதிமுகவுக்கு வாக்களிக்க தோன்றும். கிட்டத்தட்ட மக்கள் திலகத்தை ரசிகர்கள்  தெய்வம் போல் உணர செய்த பாடல். இன்றும் கூட 'எங்க வீட்டு பிள்ளை' படத்தை திரையிட்டால் போஸ்டரில் MGR கையில் சாட்டையுடன் இருக்கும் இந்த பாடல் காட்சி கட்டாயம் இருக்கும். அதே போல் அதிமுக தேர்தல் பிரசாரத்தின் போதும் அதிகம் பயன்படுத்தப் படுவது இந்த பாடல்தான்  . இந்த பாடலின் பெருமை பற்றி கூற  இதை விட சாட்சி வேண்டுமா?  சந்தேகமின்றி சொல்லலாம் தமிழில் வந்த மிக சிறந்த ஹீரோயிச பாடல் இது.

இந்த பாடல்கள் அனைத்தும் என்னுடைய தேர்வே. மாற்று கருத்து இருந்தால் சொல்லிட்டு போங்க.
 

Friday, April 19, 2013

பெருகும் விவாகரத்துகள் - காரணம் என்ன?

IT கம்பெனிகளில் பணி புரிபவர்களிடம் மணமுறிவு  அதிகரித்து உள்ளதாக செய்திகள் வந்து கொண்டுள்ளன. அடிப்படையில் விவாகரத்துகளுக்கு  அதிகரித்துள்ள  கல்வி அறிவும், மாறிவரும் சமூக சூழலுமே  காரணங்கள் . திருமணங்கள் மட்டும் இல்லை; காதல்களும்  அதிக அளவில் முறிகின்றன. முறிகின்றன என்பதை விட முறித்து கொள்கின்றனர் எனலாம்.

முந்தைய தலைமுறை ஜோடிகளிடம் கருத்து வேறுபாடுகள் இல்லையா? இருந்தது. ஆனால் அவர்கள்  சமூகத்துக்கு பயந்தும் , பிள்ளைகளின் எதிர்காலம் கருதியும் கோர்ட் படி ஏற தயங்கினர். ஒரே வீட்டில் இருந்தாலும் தங்களுக்குள்  பேசிக் கொள்ளாமல் வாழ்கையை வாழ்ந்து முடித்தவர்களும் உண்டு. ஆனால் இப்போதைய தலைமுறை இவற்றை பற்றியெல்லாம் நினைக்க தயாராக இல்லை. பிடிக்காவிட்டால் பிரிந்து விடுவோம் என்பதுதான் இப்போதைய ட்ரெண்ட்.பிள்ளை பெற்றாலும் ஒன்றிற்கு மேல் பெற்று கொள்வது இல்லை என்பதால் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றியும் இவர்கள் அதிகம் யோசிப்பது இல்லை.
 
திருமணமோ ,  காதலோ   ஆரம்பம் அமர்க்களமாகவே உள்ளது. ஆனால் பின்னர் ஏற்படும் சில பிரச்சனைகள் ஜோடிகளை பிரிவுவரை கூட கொண்டு செல்கிறது. குறிப்பாக இன்றைய தேதியில் மணமுறிவுகள் மிக சாதாரணம். எனக்கு தெரிந்த வரையில் ஆண் -பெண் இடையே ஏற்படும் பிரச்சினைகளின் அடிப்படை மிக சிலவே. அவற்றில் சில கீழே.

ஈகோ: மிக அதிகமான பிரச்சினைகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான ஈகோவினாலேயே தோன்றுகின்றன. குறிப்பாக ஆணுக்கு இணையாக பெண் சம்பாதித்து, கல்வி அறிவும் பெற்றிருக்கும் இந்த காலத்தில் ஈகோ பிரச்சினைகள் மிக எளிதில் வர வாய்ப்பு உள்ளது. ஈகோ அதிகரிக்கும் இடத்தில் அன்பும்,  விட்டு கொடுக்கும் தன்மையும் முற்றிலும் இல்லாமல் போய் விடுகிறது.

பெண்களுக்கு  இப்போது கிடைத்து இருக்கும் பொருளாதார சுதந்திரம், அவர்களுக்கு ஆண்களை சார்ந்து இருக்க வேண்டிய நிலையை போக்கி விட்டது . எனவே பெண்கள் தங்களை  ஆண்களுக்கு இணையாக பாவித்து கொள்கின்றனர். ஆனால் இத்தகைய எண்ணத்தை ஆண்கள் ஏற்று கொள்வதில்லை. பெண் ஆணை விட அதிகம் சம்பாதித்தால் ஆணுக்கும் ஏற்படும் தாழ்வு மனப்பான்மையும் இந்த வகைதான். எதிர்பாலினத்தவருடன் அதிகம் பழகுவதால் தங்கள் துணையை அவர்களுடன் ஒப்பிட்டு தாழ்வாக நினைப்பவர்களும் உண்டு.

"நீ என்ன சொல்வது? நான் என்ன கேட்பது?", உனக்கு என்ன தெரியும்" போன்ற  எண்ணங்கள் ஆண்-பெண் இருவரில் ஒருவர்   மனதில்  தோன்றி விட்டாலும்  உறவு விரிசல் அடைய தொடங்குகிறது . யாராவது ஒருவர் இறங்கி வராவிட்டால் முடிந்தது.


நம்பிக்கையின்மை:  இன்றைய சூழ்நிலையில் பணி செய்யும் இடத்தில்   ஒரு ஆண் காதலி, மனைவி தவிர பல பெண்களுடன் பழக வேண்டிய சூழல். இதே நிலைதான் பெண்ணுக்கும். ஆனால் நம்  ஒரு நாட்டில் இதை எளிதாக எடுத்து கொள்ளும் பக்குவம் அனைவருக்கும் இல்லை.

குறிப்பாக கிராமப்புறத்தில் வளர்ந்தவர்களுக்கு தங்கள் துணை  எதிர் பாலினத்தவர்களுடன் நெருங்கி பழகுவதை எளிதாக எடுத்து கொள்ள முடியவில்லை. இது அவர்கள் மனதில் ஒரு நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி உறவு உடைய வழி வகை செய்கிறது.

திருமணத்துக்கு பின் கணவன் தன் வீட்டாருடன் உள்ள தொடர்பை முறித்து கொள்ள வேண்டும் என மனைவி  நினைப்பதும் இதில் ஒரு வகை. கணவன் எங்கே தனக்கு முக்கியத்துவம் தராமல் போய்விடுவானோ என்ற அச்சமே இதற்கு  காரணம்.

அதீத காதல்: ஆணோ, பெண்ணோ .தங்கள் துணை மேல் கொள்ளும் அதீத காதலும் உறவு உடைய காரணம். பெரும்பாலும் காதலர்களே இந்த காரணத்தால் பிரிகின்றனர். தங்கள் காதலனோ, காதலியோ மற்ற நண்பர்களுடன் இயல்பாக பழகுவதை கூட எளிதாக எடுத்து கொள்ள முடியாமல் அவர்கள் தங்களுக்கு முக்கியத்துவம் தரவில்லை என எண்ணுவது, தங்கள் துணை தாங்கள் விரும்பும்படி மட்டுமே நடக்க வேண்டும் என எதிர்பார்ப்பது போன்ற எண்ணங்கள்  அதீத அன்பால் உருவாகின்றன . இந்த அன்பே கடைசியில் ஒரு வகை ஏமாற்றமும் எரிச்சலும் ஏற்படுத்தி உறவுக்கு முற்றுபுள்ளி வைக்கும் நிலை வரை கொண்டு விடுகிறது.

காதலின்மை: மனதில் துளியும் காதல் இன்றி சூழ்நிலையால் இணைந்தவர்கள் சந்திக்கும் பிரச்சினை இது. உடல்கள் அருகில் இருந்தும் மனங்கள் ஒட்ட முடியாததால் ஏற்படும் பிரிவு இது. 

மேலே கூறி இருப்பவை அனைத்தும் பிரச்சனைகளின் அடிப்படைகளே. இது போன்ற காரணங்களால் ஒருவரை ஒருவர் பிடிக்காமல் போகும்போது மனித  மனம் மேலும் ஆயிரம் காரணங்களை கூறி பிரிந்தே தீர வேண்டும் என்ற எண்ணத்தை உறுதி செய்கிறது.

பெரியவர்கள் இது போன்ற பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தீர்த்து விட்டால் மணமுறிவுகளை குறைக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது. உங்களுக்கு?

Wednesday, April 17, 2013

IPLலா? மசாலா படமா?

IPL வந்தாலே நாட்டில் அனைவருக்கும் கிரிக்கெட் ஆர்வம் எங்கிருந்தோ பீறிட்டு கொண்டு வந்து விடுகிறது. இந்திய அணி விளையாடும் போட்டியை கூட பார்க்காதவர்கள்  தங்கள் மாநிலத்தில் உள்ள ஒரு ஊரின் பேரில் விளையாடும் அணியை தங்கள் அணியாக எண்ணி கொண்டு டிவியின் முன் ஒன்றி விடுகிறார்கள்.

மக்கள் தங்கள் மாநிலத்தின் மேல் கொண்ட பற்றுதான் IPLலின்  வெற்றிக்கு காரணமா? நிச்சயம் இல்லை. ஏனெனில் ரஞ்சி கோப்பையில் 11 வீரர்களும் ஒரே மாநிலத்தில் இருந்து விளையாடுகிறார்கள். ஆனால் IPLலில்  நான்கு வெளிநாட்டு வீரர்கள், 4 வேற்று மாநில வீரர்கள் விளையாடுகிறார்கள். இருந்தும் IPL மேல் காட்டும் ஆர்வத்தில் ஒரு சதவீதம் கூட யாரும் ரஞ்சி கோப்பையில் காட்டுவதில்லை. 

IPL மேல் மக்களுக்கு இருக்கும் ஆர்வத்துக்கு காரணம்தான் என்ன? அது ஒன்றும்  பெரிய ரகசியம் இல்லை. IPL போட்டிகள் கிட்டத்தட்ட ஒரு சினிமா போல தயாரிக்கப்படுகிறது. ஆக்சன், செண்டிமெண்ட், கவர்ச்சி என அனைத்தும் கலந்து தயாரிக்கப்படும் ஒரு படத்தை மக்கள் விரும்புவது மிகவும் இயல்பே. அந்த படத்தின் ஒரு சில காட்சிகள் கீழே கொடுத்துள்ளேன்.

கிளாமர்  

IPLலின்  வெற்றியில் அதிக பங்கு வகிப்பது கவர்ச்சி. நடிகைகளில் இருந்து அரைகுறை உடையில் ஆடும் வெளிநாட்டு மங்கைகள் வரை கவர்ச்சிக்கு பஞ்சமே இல்லை IPLலில்.



 ஆக்சன்   

ஆக்சன்  காட்சிகள் இல்லாத  மசாலா படமா? எல்லா வகையான ஆக்சனும் உண்டு இந்த படத்தில்.


செண்டிமெண்ட் 

ஸ்ரீசாந்த்தின் அழுகையை பார்த்து பரிதாபப்பட்டவர்களும் உண்டு. ப்ரீதி ஜிந்தா, ஷில்பா ஷெட்டியின் கண்ணோரம் வழியும் ஒரு துளி கண்ணீரை பார்த்து உள்ளம் உடைந்தவர்களும் உண்டு. நம்ம ஆளுங்களுக்கு செண்டிமெண்டும் வேணும்ல.

 ப்ரீதி ஜிந்தா வெற்றி பெற்றதும் தம் அணி வீரர்களை கட்டி பிடிப்பதும் உணர்ச்சிபூர்வமான காட்சிதான். இங்கே அவருக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து தோற்ற அணியினரையும் கட்டி பிடித்து தோற்ற உள்ளங்களுக்கு ஒரு சிறிய  மன நிம்மதி தாருங்கள் ப்ளீஸ்.


ரொமான்ஸ்  

காதல் ஜோடிகளின் முத்த காட்சிகள்  பார்ப்பவர்களை பரவசம் அடைய வைக்கும். வீரர்களின் காதலிகளும், மனைவிகளும் மைதானத்துக்குள் இருக்கும் தம் காதலர்களுக்கு கண்களாலேயே தம் காதலை தெரிவிப்பார்கள்.


காமெடி 

IPL சினிமாவில் காமெடி கொஞ்சம் கம்மிதான். ஆனால் சில நேரங்களில் நடக்கும் காமெடிகள் ரசிகர்களை எளிதாக கவர்ந்து விடும். ஒரு முறை முரளி விஜய் கேட்ச் பிடித்து விட்டு ஆனந்தத்தில் மைதானம் முழுவதும் சுற்றி ஓடினார். அவர் தன்னிலைக்கு வந்து அம்பயரை பார்த்ததும்  அவர் முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே. இந்த முறை கோஹ்லிக்கு நடந்ததும் இதேதான்.


ட்விஸ்ட்  

அனைத்துக்கும் மேல் பரபரப்பான ட்விஸ்ட்களும் , எதிர்பாராத முடிவுகளும் IPLலின் மிக பெரிய பலம். எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று யாராலேயும் கணித்துவிட முடியாது. அதிர்ச்சி தரும் முடிவுகளும் இதில் அடக்கம்.


இப்படி எல்லாவற்றையும் சேர்த்து பார்த்தால் உங்களுக்கும் IPL ஒரு மசாலா படமாக தெரிகிறதுதானே? IPLலின் வெற்றிக்கு இவையே காரணம்.

Tuesday, April 16, 2013

சொன்னாலும் சொல்வார் சோலார் ஸ்டார்!!

A.R. ரஹ்மானுக்கு தன் படத்தில் இசை அமைக்கும் தகுதி இல்லை என சோலார் ஸ்டார் ராஜகுமாரன் சொன்னதாக படித்தேன். பவர் ஸ்டார், தன்னை தானே பெருமை பேசி பெற்ற விளம்பரத்தை இவர் அடுத்தவர்களை குறை கூறி பெற்று விட முயல்வதாக தெரிகிறது. இப்படியே போனால் இவர் என்னவெல்லாம் பேசுவார் என ஒரு கற்பனை பேட்டி .



திருமதி.தமிழ் எப்படி வந்துள்ளது ?

என்னுடைய முந்தைய படங்கள் போலவே அற்புதமாக வந்துள்ளது ஆனால் படத்தை இந்த உலகத்தில் உள்ள ரசிகர்கள் புரிந்து கொள்வது கடினம் . இந்த படம் வேற்றுகிரகவாசிகளுக்கானது.

ஷங்கரின்  படத்தில் வாய்ப்பு கிடைத்தால்  நடிப்பீர்களா? 

எனக்கு தகுந்தவாறு படம் செய்ய ஷங்கரால் முடியாது. என் ரசிகர்களின் எதிர் பார்ப்பை  ஷங்கரால் ஒரு போதும் நிறைவேற்ற முடியாது. எனவே ஷங்கருக்கு வாய்ப்பளிக்க மாட்டேன்.

அஞ்சலி , அனுஷ்கா யார் சிறந்த நடிகை ?

தேவயானி 

நடிப்பில் உங்களின் ரோல் மாடல்?

இதிலென்ன சந்தேகம். ராமராஜன்தான்.

பவர் ஸ்டார்  உங்களுக்கு போட்டியா?

தமிழகத்தில் இப்போது  பவர் இருப்பதே இல்லை. மேலும் சோலார் பேனலில் இருந்து பவர் எடுக்கலாம் ஆனால் ஒரு போதும் பவரில் இருந்து சோலார் பேனல் எடுக்க முடியாது. எனவே பவர் ஸ்டார் எனக்கு போட்டியில்லை.

கமலஹாசன் போல ஹாலிவுட் படம் இயக்க வாய்ப்பு கிடைத்தால்?

நிச்சயம் போக மாட்டேன். ஹாலிவுட்காரர்கள் விரும்பினால் என் படங்களை டப்பிங் செய்து கொள்ளலாம்.

A.R. ரஹ்மான் கிட்ட இல்லாதது அப்பிடி என்ன S.A. ராஜ்குமார் கிட்ட இருக்கு?

லலல... லாலாலலா....லல்லல்லா...


Saturday, April 6, 2013

நாளைய நாயகர்கள் (அல்லது) எதிர்கால தமிழ் சினிமா

கடந்த பதிவான "தமிழ் சினிமாவில் தளபதிகள்" பதிவுக்கு செம ரெஸ்பான்ஸ். பதிவை படித்த சில விஜய் ரசிகர்கள் "நீயெல்லாம் ஏன் எழுத வர்ற" என்று தங்கள் கருத்தை வேறு  விட்டுவிட்டு சென்று இருந்தனர். அவர்களை மகிழ்ச்சி அடைய செய்ய இதோ இன்னொரு பதிவு.

மிழ் ரசிகர்கள்தான் இந்தியாவிலேயே சிறந்த ரசிகர்கள் என்று கூறுவார்கள். அது உண்மைதான். தனக்கு பிடித்த நடிகரை கடவுள் போல வைத்து கொண்டாடுவார்கள். ஆந்திராகாரர்களும் இது போலதான் எனினும், தமிழ் ரசிகர்கள்  மட்டுமே யாரையும், எதையும் கொண்டாடுவார்கள். இவர்களால் ரஜினியையும் ரசிக்க முடியும்;ராமராஜனையும் ரசிக்க முடியும்;ராஜ்கிரணையும் ரசிக்க முடியும்; எல்லாவற்றுக்கும் மேலாக விஜயையும் ரசிக்க முடியும்.

இப்படிப்பட்ட ரசிகர்களை எதிர்காலத்தில் மகிழ்விக்க இருக்கும் நாயகர்கள் யார்?யார்?  இதோ ஒரு அலசல்.

பவர் ஸ்டார்: 

இன்றைய தேதிக்கு தமிழ்நாட்டில்  இவரை தெரியாதவர் இருக்க முடியாது. லத்திகா, லட்டு என இரண்டு மெகா ஹிட்கள். காமெடி, ரொமான்ஸ் ,ஆக்சன், டான்ஸ், செண்டிமெண்ட் என எல்லாவகையான நடிப்பையும் ரசிகர்களுக்கு பரிமாறி அவர்களுக்கு  புல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தியை தருபவர். எல்லா வகையான நடிப்பையும்  வெளி காட்டும் திறமையே இவரின் பலம். 


இவரின் "ஆனந்த தொல்லை"யை தமிழகமே எதிர்பார்த்து உள்ளது. இந்த படம் 10,000 நாட்கள் ஓடி சாதனை படைக்கவும் வாய்ப்பு உள்ளது.  குழந்தை முதல் முதியவர் வரை அனைவரையும் ஏற்கனவே கவர்ந்துவிட்ட பவர் ஸ்டார் எதிர்கால தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சக்தி.

ராஜகுமாரன்  

 தமிழ் சினிமாவில் ஆக்சன் ஹீரோக்களை போலவே, ரொமாண்டிக் ஹீரோக்களுக்கும் ஒரு இடம் உண்டு. ஆனால் சில காலமாக இந்த இடம் யாராலும் நிரப்பபடாமல் காலியாகவே உள்ளது. எதிர் காலத்தில் அந்த இடத்தை நிரப்பி இளம் கல்லூரி பெண்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமரப்போவரே இந்த ராஜகுமாரன்.


இவர் நடித்த படம் எதுவும் இதுவரை வெளிவரவில்லை எனினும், வெளிவந்த சில போட்டோக்களிலேயே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டார். யோசித்து பாருங்கள். தேவயானியுடன் இவ்வளவு ரொமான்ஸ் செய்பவர் அமலா பால் கிடைத்தால் எவ்வளவு ரொமான்ஸ் செய்வார் என்று. ஆனால் இவருடன்  நடிக்க போகும் நடிகைகளுக்கு இவரை பார்த்து காதல் வருகிறதோ இல்லையோ, நிச்சயம் பேதி  வரும் . ராமராஜன், பாக்கியராஜ் கலந்த கலவையாக காணப்படும் இவர் நாளைய நம்பிக்கை  நட்சத்திரம்.

ஷண்முக பாண்டியன் 

"புலிக்கு பிறந்தது பூனையாகுமா?" ஆகாது என்பது இந்த படத்தை பார்த்தாலே தெரிகிறது பாருங்கள்(படத்தை ரொம்ப நேரம் பார்க்காதீர்கள். மீறி பார்த்து காய்ச்சல் வந்தால் நான் பொறுப்பல்ல)


கண்களில் எரியும் அந்த  நெருப்பு இவனெல்லாம் நல்ல வருவாண்டா என்று சொல்கிறது. நீண்ட காலமாக தமிழ் சினிமாவில் நுழைய நல்ல நேரம் பார்த்து வருகிறார் இவர். ஆனால் ரசிகர்களின் நேரம் நல்ல நேரமாக இருப்பதால் தப்பித்து வருகின்றனர். எனினும்  இன்னொரு தளபதியாக இவர் மாறி ரசிகர்களை மிரட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை. இவருக்கும் பவர் ஸ்டாருக்கும் எதிர்காலத்தில் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன். பிற்காலத்தில் சண்முக பாண்டியனின் தம்பி பிரபாகரனும் நடிக்க வரும்போது போட்டி மிக கடுமை ஆகும் . பார்க்கலாம் யார் ஜெயிக்க போகிறார்கள் என்று.

Friday, April 5, 2013

வெல்டன் "பரதேசி" பாலா

தூர்தர்ஷன் காலத்தில் ஒரு விளம்பரம் வரும். பி.டி. உஷா ஒரு மலைப்பிரதேசத்தில் ஓடி வருவார். அருகே ஒரு பெண் தேயிலை பறித்து கொண்டு இருப்பார். பி.டி. உஷா ஓடி முடித்ததும் கையில் ஒரு டீ கோப்பையை வைத்து கொண்டு "என்னை புத்துணர்ச்சியாகவைத்து இருப்பது கண்ணன்  தேவன் டீ" என்பார். தேயிலை தோட்டமும், தேயிலை பறிப்பதும் அவ்வளவு அழகாக காட்டப் பட்டு இருக்கும் அந்த விளம்பரத்தில். அந்த விளம்பரம் மனதில் ஏற்படுத்திய பிம்பத்தை அப்படியே கலைத்து விட்டது பாலாவின் "பரதேசி".

சுதந்திரத்தின் மதிப்பு அது நம் கையில் இருக்கும்போது தெரியாது. சிலர் வெள்ளையனே நம்மை ஆண்டு வந்து இருந்தால் நன்றாக இருக்கும் என கூறி கேட்டு இருக்கிறேன். அப்படி சொன்னவர்கள் தம் முடிவை இந்த படத்தை பார்த்தால் மாற்றி கொள்வார்கள். அந்த அளவு அடிமைத்தனத்தின் வலியை நமக்கு உணர வைக்கிறது படம். படத்தில் நடித்தவர்கள் யாரையும் நடிகர்களாக நினைக்க முடியவில்லை. உண்மையிலேயே அந்த கிராமத்திற்கு சென்று காமெராவை ஒழித்து வைத்து அந்த மக்களை இயல்பாக படம் எடுத்தது போல தோன்றுகிறது.  இந்த மாதிரி ஒரு கதையை கையாள பாலாவினாலேயே முடியும். குறிப்பாக மூளை சலவை செய்து  மத மாற்றம் செய்ததையும், செய்து கொண்டு இருப்பதையும் காட்டிய துணிச்சல் பாராட்ட பட வேண்டியது.

அதே போல படத்தின் பின்னணி இசையும், பாடல்களும் அற்புதம். பாடல் வரிகளிலேயே கதை சொல்லி இருக்கின்றனர். சில நேரங்களில் இசை G.V.பிரகாஷா இல்லை இளையராஜாவா என சந்தேகம் வருகின்றது. 

"அங்காடி தெரு"விலேயே அடிமைத்தனத்தை காட்டி விட்டார்களே என சிலர் கேட்கின்றனர். "அங்காடி தெரு" அடிமைகளுக்கு தப்பி செல்ல வாய்ப்பு இருந்தது. அவர்களுக்காக வாதாடவும் மனித உரிமை அமைப்புகள் இருக்கின்றன . ஆனால் இந்த "பரதேசி "களை நினைத்து கவலைப்பட சம காலத்தில்  யாருமே இல்லை. அதனாலேயே முழு கொத்தடிமைகளாக வாழ்ந்த  "பரதேசிகள்" அதிக அளவு பாதிப்பு ஏற்படுத்துகின்றனர் .

படத்தின் நாயகன் போல, இந்த காலத்திலும் தன் "கங்காணி" மேனேஜரை நியாயமாராக நம்பி பின் அப்ரைசல் வந்த பின் "எல்லாம் பாலிடிக்ஸ்ங்க" என்று  புலம்பும் கார்ப்ரேட்காரர்களும்  இந்த படம் பார்க்கலாம். தாம் ஏமாற்றப்  படுவதெல்லாம்  ஒன்றுமே இல்லை என புரிந்து கொள்வீர்கள் . 

ஒரு சில குறைகள் இருந்தாலும் அடிமை வாழ்க்கையை நம்மை உணர வைத்ததில் பாலா முழு வெற்றி அடைந்து இருக்கிறார். இவ்வளவு நாட்களாக தன் கதை நாயகனை மட்டும் விசித்திர பிறவியாக படைத்து படம் எடுத்ததை   மாற்றி , ஒரு  சமூகம்  அடைந்த பாதிப்பை சொல்லி இருக்கும் பாலா இதே போக்கை தொடருவார் என நம்புவோம். தமிழில் இப்படி ஒரு படத்தை கொடுத்ததற்காக  பாலாவிற்கு ஒரு வெல்டன்.

தமிழ் சினிமாவில் தளபதிகள்

மிழ் சினிமாவில் சில வருடங்கள் தளபதிகளின் ஆண்டாக இருந்தது. இந்த தளபதிகளின் கதை அனைவரும் அறிந்ததே. இருப்பினும் அடுத்து வரும் தலைமுறைகள் எப்படி இந்த தளபதி பட்டம் எங்கிருந்து வந்தது   வந்தது என்று குழம்பக்கூடாது என்பதற்காக நம் தளபதிகளின் வரலாற்றை இங்கே பதிந்து வைக்கிறேன்.

இளைய தளபதி:

சினிமாவுக்கு வந்து சங்கவிக்கும் யுவராணிக்கும் சோப்பு போட்டு கொண்டு இருந்த விஜய்க்கு சினிமாவில் நிலைத்து நிற்க  ஒரு அடையாளம் தேவைப்பட்டது. தன்னை ரஜினி ரசிகனாக காட்டி கொள்வதன் மூலம், ரஜினி ரசிகர்களின் ஆதரவு பெறலாம் என்ற எண்ணத்தில் இருந்த அவருக்கும் அவர் தந்தைக்கும் கையில் கிடைத்தது ரஜினியின்  "தளபதி" படம்.  "இளைய தளபதி'' பட்டத்தை தன் பெயரின் முன் சேர்த்து கொண்டார். இந்த பட்டத்தின் மூலம் ஆரம்ப   காலத்தில் சில ரஜினி ரசிகர்களை கவர்ந்தார்  என்பதே உண்மை. பின் இவர் வரிசையாக மொக்கை படங்களை கொடுத்து "இளைய தலைவலி" யாக அறியப்பட்டதும் வரலாறு. அதே நேரத்தில் இவர் நடித்து சில படங்கள் வெற்றியும் பெற்றன.  பெறியதாக .நடிக்க வராவிட்டாலும்  தமிழ் சினிமாவில் நீண்ட காலம் நிலைத்து இருப்பதும், அதிக அளவு ரசிகர்களை கொண்டு இருப்பதும் இவரின் சாதனை. இதற்கு அஜீத்தை தன் போட்டியாளராக  செயற்கையாக காட்டி கொண்டதும் ஒரு காரணம் 

புரட்சி தளபதி 

 தமிழ் சினிமாவால் அதிகமாக கேவலப்படுத்தபட்ட வார்த்தை புரட்சி. தமிழ் சினிமாவில் "புரட்சி" பட்டம் கொண்ட நாயகர்களுக்கு பஞ்சமே இல்லை. ஆனால் இந்த நாயகர்கள் என்ன புரட்சி செய்தார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
"இளைய தளபதி "யின்  வெற்றி பெற்ற படங்கள் அடுத்து வந்த சில ஹீரோக்களின் மனதில் ஒரு பொய்யான நம்பிக்கையை தந்தன. அதிகமாக சிரமப்படாமல் சில சண்டை காட்சிகள், கொஞ்சம்  நகைச்சுவை காட்சிகள், ஓரிரண்டு குத்து பாட்டுகள் இருந்தால் பெரிய ஸ்டாராகி விடலாம் என்று நம்பினார். அதில் ஒருவர்தான் விஷால். இவர் ஆக்சன் ஹீரோவாக விஜய் போலெல்லாம் அதிக நேரம் எடுத்து கொள்ளவில்லை. தன் இரண்டாவது படத்திலேயே தன்னை ஒரு ஆக்சன் ஹீரோவாக நிலை நிறுத்தி கொண்டார். அதன் பின் தன்னை "புரட்சி தளபதி"யாக ஆக்கி கொண்டார். இந்த பட்டத்தை விஜய் சற்று வயதாகி கொண்ட பின் பயன்படுத்தி இருக்கலாம். ஆனால் அதற்குள் முந்தி கொண்டார் விஷால் 

அப்போது வந்த விஜய் படங்களும், விஷால் படங்களும் ஒரே மாதிரி இருக்கும். விஜய் ரஜினியிடமிருந்து காப்பி அடித்த  பார்முலாவை, விஜயிடமிருந்து காப்பி அடிக்க ஆரம்பித்தார் விஷால். விளைவு, ஒரு கட்டத்தில் ரசிகர்கள் சலிப்பு அடைந்தனர்; இருவரின் படங்களுமே படு தோல்வி அடைய தொடங்கின. விஜயின் பார்முலாவை மிக விரைவில்  சேதாரம் செய்ததே இவர் செய்த சாதனையும், இவர் தமிழ் சினிமாவிற்கு செய்த நன்மையும்.

சின்ன தளபதி:

விஜய்க்கு அதுத்தடுத்து இரண்டு ஹிட் கொடுத்தவர் பேரரசு. என்ன காரணத்தாலேயோ விஜய் இவரை தொடர்ந்து பயன்படுத்தவில்லை. பேரரசுவின் கதைகளுக்கோ கட்டாயம் ஒரு தளபதி தேவை. எனவே பேரரசு உருவாக்கிய தளபதி "சின்ன தளபதி". ஆனால்" சின்ன தளபதி"யின் முக அமைப்பு "தளபதி" பட்டத்திற்கு பொருந்தவே இல்லை.


பேரரசும் "சின்ன தளபதி". பரத்தும் இணைந்து பார்ப்பவர்கள் இரத்தம் கக்கி சாகும் அளவு படங்களை கொடுத்தனர். இனிமேல் சினிமாவில் யாரும் "தளபதி" பட்டத்தை பயன்படுத்த யோசிக்குமாறு செய்ததே இவரின் சாதனை.

இப்பொழுது தமிழ் சினிமாவில் தளபதிகளின் தேவை கொஞ்சம் குறைந்துள்ளது. நான் எதிர்பார்த்தபடி குட்டி தளபதி, மினி தளபதி என்றெல்லாம் யாரும்  வரவில்லை. இந்த நிலை தொடரும் என நம்புவோம்.

Tuesday, April 2, 2013

பயண கட்டுரை - கோயம்பேடு பஸ் நிலையம்

கோயம்பேடு பஸ் நிலையம் - சென்னையின் பெருமைகளில் ஒன்று. தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து போகும் இடம். கிட்டத்தட்ட தமிழகம், ஆந்திரா, கர்நாடகா என எல்லா ஊருக்கும் இங்கே இருந்து பஸ் ஏறலாம். இந்த பேருந்து நிலையத்தின் முன் பகுதி உள்ளூர் பேருந்துகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளது. எப்போதும் பயணிகள் கூட்டம் அம்மும் இடம் இது.



இந்த பஸ்  நிலையம் தெற்காசியாவிலேயே  மிக பெரியது. பேருந்து நிலையத்தில்  நுழைவாயிலில்   ஜெயலலிதா பெயர் இருப்பது இந்த பேருந்து நிலையத்தின் மற்றொரு சிறப்பு. இந்த பஸ் நிலையம்   . பல பிளாட்பார்ம்களை கொண்டது  இங்கே பல பஸ்கள் நிற்பதை நீங்கள் எப்போதும் பார்க்கலாம். எப்போதும் பயணிகள் கூட்டம்  அதே போல் ஒவ்வொரு இங்கே பல நடத்துனர்களையும் ஓட்டுநர்களையும் ஒருங்கே காண முடியும். இந்த பஸ் நிலையத்தில் சில திருடர்களும் இருப்பதால் வாசகர்கள் இங்கே செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள். 

நீங்கள் இந்த பேருந்து நிலையத்தினுள் செல்லும்போது மெடல் டிடெக்டர் கருவி உங்களை வரவேற்கும். ஆனால் நீங்கள் உள்ளே புகும்போதுஅந்த கருவி சத்தம் குடுத்தாலும் நீங்கள்அதை பொருட்படுத்த தேவை இல்லை.  . இந்த பஸ் நிலையத்தில் நீங்கள் சில உணவகங்களை காணலாம். ஆனால் இந்த உணவகங்களில் சற்று விலை அதிகம். அதே போல இங்கே இலவச கழிப்பிடங்களையும் காணலாம்.  மேலும் உங்கள் பாதுகாப்பிற்கு இரகசிய காமெராக்கள் பொருத்தபட்டுள்ளன. மேலும் சில காவலர்களையும் நீங்கள் இங்கே காணலாம். இந்த பஸ் நிலையத்தில் உள்ள மேப்களும், டிஜிட்டல் போர்ட்களும் உங்களை வியப்பில் ஆழ்த்தும். சுற்றி பார்க்கும்போது ஓய்வு எடுப்பதற்கு ஆங்காங்கே பெஞ்ச்கள் உள்ளன.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த பஸ் நிலையத்தை எப்படி அடைவது என்று கேட்கிறீர்களா? சென்னை பேருந்தில் ஏறினால் அவர்களே இறக்கி விட்டு விடுவார்கள். ஒரு வேளை நீங்கள் ஏற்கனவே  சென்னையில் இருந்தால் எந்த பஸ் கோயம்பேடு செல்லும் என்று உங்கள் ஏரியாவில் விசாரித்து அந்த பஸ்சில் ஏறவும். இனிமையான சுற்றுலா அனுபவத்திற்கு வாழ்த்துகள்.

பயணக்கட்டுரை எழுத ஆசை . என் பட்ஜெட்டிற்கு கோயம்பேடு மட்டுமே செல்ல முடியும் என்பதால் அதையே எழுதி விட்டேன். விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...