Thursday, May 30, 2013

ரஜினி-கமல் இணைந்தால் படத்தின் கதை எப்படி இருக்கும்?

"ரஜினி! நாம சேந்து படம் பண்ணனும்னு எல்லாரும் ஆசைப்படுறாங்க. அதுக்காக நான் ஒரு ஸ்கிரிப்ட் ரெடி செஞ்சுட்டேன். நாம சேந்து படம் செய்யலாம்"

"டெபனட்லி கமல்! நீங்க கதைய சொல்லுங்க. நாம பண்ணலாம்."

"ரஜினி! இந்த படத்துல நான் ஒரு புதுமைய கொண்டு வரேன். இந்த படத்தை நாம வெப்கேம்ல எடுக்குறோம். படம் எடுக்க எடுக்க லைவா இண்டர்நெட்ல போட்டு காமிக்கிறோம். இதுக்காக நான் இந்தியால எல்லா இன்டர்நெட்  சர்வீஸ்  ப்ரொவைடர்ஸ் கிட்டவும் பேசிட்டேன். "

ரஜினியின் மைண்ட் வாய்ஸ், "அரே பாபாஜி! என்னை என் நண்பர்களிடம் இருந்து காப்பாற்று."

"சூப்பர் கமல்! சூப்பர்! உங்களால மட்டும்தான் இது மாதிரி யோசிக்க முடியும். யூ ஆர் அ ஜீனியஸ். பாலச்சந்தர் சார் 1978ல உங்களை பத்தி சொன்னது சரிதான். பட் கமல் படத்தோட கதை என்ன?"

"நம்ம கதைப்படி  ஒரு பணக்கார  துபாய் ஷேக்."

"வெல்! நமக்கு ஷேக் வேஷமெல்லாம் நல்லா சூட் ஆகும்"

 
"அப்கோர்ஸ் ரஜினி. உங்க முகத்துக்கு அந்த ரோல் பொருந்தும். இப்போ கதைக்கு வரலாம். அந்த ஷேக் பெரிய பணக்காரர். நெறைய எண்ணெய் கிணறு அவர் பேருல இருக்கு. அந்த ஷேக்குக்கு ஒரு நாள் போன் வருது."

"வெயிட்! வெயிட்!  இன்ட்ரோ சாங் இருக்குல"

"நிச்சயம் இருக்கு. அந்த ஷேக்குக்கு  போன் பண்ணது அமெரிக்க அதிபர். தன் பொண்ணை அல்-கொய்தா தீவிரவாதிங்க  கடத்தி ஷேக்கோட  ஊருல வச்சு இருக்குறதா சொல்றார். இதை ஏன்  ஷேக்கிட்ட சொல்றாருன்னு கேக்குறீங்களா? ஷேக் முன்னாள் FBI ஏஜெண்ட். அவரு காதலிய தீவிரவாதிங்க கொன்னதால துபாய் வந்து ஷேக்கா மாறிட்டார்."

"சோ நீங்க தசாவதாரம் படத்துல புஷ் வேஷம் போட்ட மாதிரி இப்போ ஒபாமா வேஷம் போடுறீங்க. குட்"

"ஆமா ரஜினி! என்னை தவிர யாருக்கு அந்த ரோல் சூட் ஆகும். அப்புறம் அந்த அதிபர்  பொண்ணு ரோல்ல ஏஞ்சலினா ஜோலி நடிக்கிறாங்க "

"வெரி குட்!ரொம்ப நல்லா இருக்கு  . பட் கமல், கதைல ஒரு சின்ன மாற்றம்  செய்ய முடியுமான்னு பாருங்க."

" சொல்லுங்க ரஜினி. பகுத்தறிவாளர்கள் யாரு என்ன சொன்னாலும் ஆராய்ந்து முடிவு எடுப்பாங்க. சொல்லுங்க "

"அந்த ஷேக்கை அல்-கொய்தா தீவிரவாதிங்க ஏமாத்தி அவர் சொத்தை எல்லாம் பிடுங்கிட்டு நடு தெருல விட்டுடுறாங்க. அப்புறம் அந்த ஷேக் அவங்ககிட்ட சவால் விட்டுட்டு உழைச்சு புதுசா நாலு எண்ணெய் கிணறு வாங்குறாரு. அதுனால ஏற்கனவே அவருக்கும் தீவிரவாதிங்களுக்கும் பகை."

கமலின் மைண்ட் வாய்ஸ், "நம்மளை ஹாலிவுட் தரத்துல படம் எடுக்க விட மாட்டார் போலயே "

"இதை  K.S. ரவிகுமார் கிட்ட சொல்லி கதைல கொண்டு வர முடியுமான்னு பாக்குறேன். இப்போ கதை. இந்த விஷயத்த கேள்விபட்ட ஷேக் அதிபர் மகளை தேடி கிளம்புறாரு. இது தெரிஞ்ச தீவிரவாதிகள் பாகிஸ்தான்ல இருந்து நியுக்லியர் பாம் வாங்கிட்டு வந்து அந்த ஊரு முழுசும் வச்சுடுறாங்க. இப்போ அந்த ஷேக் அந்த பாமை எல்லாம் எடுத்துட்டு அந்த ஊரையும் அந்த பொண்ணையும் காப்பாத்துறதுதான் கதை. கிளைமாக்ஸ்ல ஷேக்குக்கு அமெரிக்க அதிபர் பாராட்டு விழா நடத்துறாரு. அவரு கையாலேயே ஆஸ்கார் அவார்ட் குடுக்குறாரு . ஷேக்குக்கு  ஜோலி லிப் டு லிப் கிஸ் குடுக்குறாங்க. இந்த கிஸ்ஸிங் ஸீன் மட்டும் 5 நிமிசம் வருது. இதை உலக தரத்துல எடுக்குறோம்"

"கமல்! இந்த கிஸ்ஸிங் சீன் எல்லாம் என்னால செய்ய முடியாது"

"நீங்க ஏன் செய்யணும் ரஜினி. நான்தானே படத்தோட ஹீரோ. நான்தான் செய்யணும்."

"அப்போ ஷேக் ரோல்ல நீங்க நடிக்கிறீங்களா? என்கிட்ட உங்க முகம்தான் ஷேக் ரோலுக்கு நல்லா வருமுன்னு சொன்னீங்க?"

"ஆமா. அதனாலதான் நான் உங்களை  மாதிரி வேஷம் போட்டு இந்த படத்துல நடிக்க போறேன். இதுக்காக நான் ஹாலிவுட் மேக்-அப் மேன் மைக்கேல் வெஸ்ட்மோர் கிட்ட பேசியாச்சு. அப்படியே என்னை உங்களை மாதிரியே மாத்திடுவார். இது கூடவே ஒபாமா வேஷமும் "

"அப்போ எனக்கு இந்த படத்துல வில்லன் ரோலா?"

"நோ நோ. உங்களை அப்பிடி விடுவேனா?"

"அப்போ எனக்கு என்னதான் ரோல்?"

"கிளைமாக்ஸ்ல பாராட்டு விழால என்னை பாராட்டி 5 நிமிஷம் பேசுறீங்க. அதுக்கு வசனம் எல்லாம் நீங்களே எழுதிக்கலாம்.  உங்களுக்கு அது நல்லா வருமே. ரஜினி! நில்லுங்க  எங்க போறீங்க."
 
"இமயமலைக்கு."


Monday, May 27, 2013

ஒரு பயங்கர பேய் கதை

"அண்ணே! இந்த பேய், பிசாசு இதெல்லாம் இருக்கா?"

"அதெல்லாம் இருக்குப்பா"

"ஏதோ நேர்ல பாத்த மாதிரி சொல்றீங்க"

"ஆமா. நான் நேர்ல பாத்து இருக்கேன்"

"என்னண்ணே சொல்றீங்க! நீங்க எப்போ பேய பாத்தீங்க? எங்க பாத்தீங்க?"

"இதே ஊருல. அப்போ எனக்கு ஒரு 18 வயசு இருக்கும். நம்ம ஊருல சேர்மன் ராமசாமி செட்டியார் பார்க் இருக்குல. அங்கதான் அந்த ஆவிய பாத்தேன் "

"என்னண்ணேஆவிய பாத்தேன்னு ஏதோ அனுஷ்காவை பாத்த மாதிரி சொல்றீங்க"

"இரு உனக்கு அந்த கதைய சொல்றேன். கதை சொல்லும்போது குறுக்க பேசாதே."

"சரி சொல்லுங்க"

"எனக்கு அப்போ 18 வயசு. ராமசாமி செட்டியார் பார்க்ல தூக்குல தொங்குன ஒரு பொண்ணு அங்கேயே மோகினியா சுத்துறானு ஒரு பேச்சு அப்போ ஊருக்குள்ள இருந்தது. அதுவும் அந்த பேய் சின்ன வயசு ஆம்பளைங்களை பாத்தா அப்படியே ஒரு அறை கொடுக்கும். அந்த அறைய வாங்குனவன் இரத்தம் கக்கி சாக வேண்டியதுதான்னு எல்லாரும் நம்புனாங்க"

"ஆமாண்ணே! இப்போ கூட அந்த ஏரியால நைட்  8 மணிக்கு மேல ஆள் நடமாட்டமே குறைஞ்சிடும்"

"ஷு! கதைய மட்டும் கேட்கணும்."

"சரி சரி சொல்லுங்க"

"அந்த வயசுல எனக்கும் உன்னை மாதிரியே பேய், பிசாசுல நம்பிக்கை இல்ல. ஒரு நாள் ராத்திரி சினிமா பாத்துட்டு வரும்போது வேணும்னே அந்த வழியா போக முடிவெடுத்து அந்த வழியா போனேன் . ராத்திரி 1 மணிக்கு அந்த பார்க் கிட்ட யாருமே இல்ல. நான் கொஞ்சம் கூட பயம் இல்லாம பார்க் ரோடுல நடக்க ஆரம்பிச்சேன். கொஞ்ச கொஞ்சமா நடந்து பார்க் கிட்ட போனதும் என்னையும் அறியாம பார்க்ல யாரு இருக்கானு திரும்பி பார்த்தேன். அங்க அது இருந்துச்சு"

"என்னது அது. சீக்கிரம் சொல்லுங்க. எனக்கு ரொம்ப ஆர்வமா இருக்கு"

 
'அதாண்டா மோகினி. அதுக்கு வயிறு வரைக்கும் நாக்கு வெளியே தொங்கிட்டு இருந்துச்சு. அதோட ரெண்டு சிங்க பல்லும் வாய விட்டு வெளிய நீட்டிகிட்டு டிராகுலா பல்லு மாதிரி இருந்துச்சு . கருப்பு சேலை கட்டிக்கிட்டு அங்க பசங்க விளையாடுற ஊஞ்சல்ல உக்காந்து  ஆடிட்டு இருந்துச்சு. அது என்னை பாத்துடுச்சு"

"அய்யயோ! அப்புறம்"

"அதை பாத்ததும் நான் ஓட ஆரம்பிச்சேன். அது என்னை துரத்த ஆரம்பிச்சிடுச்சு. அன்னைக்கு பாத்து நான் புது செருப்பு வேற போட்டு இருந்தேன். அந்த செருப்பு காலை கடிச்சதுல என்னால வேகமா ஓட முடியல. பேய் என்னை நெருங்கிடிச்சு. இன்னும் ஒரு அடில என்னை பிடிச்சிடும். பிடிச்சுட்டா ஒரே அறைதான். புது செருப்பை கழட்டி போட்டு ஓடவும் எனக்கு மனசு வரல "

"அப்புறம்  என்னதான் ஆச்சு"

"இப்போ பேய் என் கிட்ட வந்து என் கூடவே ஓட ஆரம்பிச்சிடுச்சு. அறைய சரியான நேரம் பாத்து கைய ஒங்குது"

"என்னதான் செஞ்சீங்க"

"அண்ணன் யாரு. அன்னைக்கு நான் பாத்துட்டு வந்த படம் 'எண்ட்டர் தி டிராகன்'. ப்ருஸ் லீய மனசுல நெனைச்சுகிட்டு பேய் அறைய அறைய நான் என்னோட கைய வச்சு பிளாக் பண்ணேன்.அப்பிடியே ஒரு பத்து பன்ச்சை பிளாக் பண்ணி இருப்பேன். மோகினியால என்னை அறைய முடியல. அப்போ ஒரு சுவர் தெரிஞ்சிச்சு. அப்பிடியே ஒரே ஜம்ப்ல அதை தாண்டிட்டேன். அந்த பேய் புடவை கட்டி இருந்ததால சுவர் ஏறி குதிக்க முடியல. நான் தப்பிச்சுட்டேன். இதுதான் நான் பேய் பார்த்த கதை."

"யோவ்! நீயெல்லாம் ஒரு பெரிய மனுசன்னு நெனச்சு உன் கிட்ட சந்தேகம் கேட்டேன் பாரு. உன்னை பேயே அறைஞ்சு இருக்கலாம்."

Sunday, May 26, 2013

விஜய் டிவி - இதெல்லாம் எனக்கு நல்லதா படல

புதுசாவும், கலர் புல்லாவும் .நிகழ்ச்சி தரதுல விஜய் டிவியை அடிச்சுக்க தமிழ்ல வேற சேனலே இல்ல. இந்த மேட்டர் அவங்க ஜோடி நிகழ்ச்சி பத்தினது. இதை எழுதலாமா வேணாமான்னு ஒரு குழப்பம். இருந்தாலும் எழுத வேற மேட்டர் இல்லை. அதனால இதையே எழுதலாமுன்னு முடிவு பண்ணிட்டேன். 

நேத்து டிவில அந்த ஜோடி நிகழ்ச்சில ரொமான்ஸ் ரவுண்டாம். ஆடுன ஜோடிங்கல்லாம் கட்டி உருளாத குறைதான். அட அவங்களாவது பெரியவங்க, பக்குவப்பட்டவங்க பரவாயில்லன்னு விட்டுடலாம் . அதுல  ர பிக்-காப்ரியல்ங்குற ஜோடில ரெண்டு பேருக்குமே முழுசா 16 வயசு கூட இருக்காது. அவங்க ரெண்டு பெரும் ஒருத்தரையொருத்தர்  தொட்டு தொட்டு ஆடிட்டு இருக்காங்க. அந்த பொண்ணு முகத்துல அப்பிடி காதல் உணர்ச்சிகளை காட்டுது. நல்ல வேளை, பெரியவங்க ஆடுனத விட மூவ்மெண்ட்ஸ் கொஞ்சம் டீசன்ட்தான்.


இப்பிடி சின்ன பசங்களை வச்சு ப்ரோக்ராம் நடத்துறதை எல்லாம் குழந்தை தொழிலாளிகள் லிஸ்ட்ல சேக்க முடியாதா?. இதை டிவில காமிச்சா இதெல்லாம் தப்பு இல்லன்னு மக்கள் மனசுல பதியாதா? குறைஞ்ச பட்சம் கீழ 'இந்த நிகழ்ச்சியால் உங்கள் மன நலம் பாதிக்கப்படலாமு'ன்னு கீழ எச்சரிக்கை வாசகமாச்சும் காமிக்க சொல்லணும்.

எனக்கு என்ன பயம்னா நாளைக்கு 'ஜோடி ஜூனியர்'னு புது நிகழ்ச்சி ஆரம்பிச்சு சின்ன பசங்களையா ஆட விட்டுடுவாங்களோன்னு. அப்புறம் கொஞ்ச நாள்ல கோபிநாத் 'சீரழியும் இளைய சமுதாயம். காரணம் யார்?' அப்பிடின்னு 'என் தேசம் என் மக்கள்' நிகழ்ச்சி நடத்துறதை நாம பாக்க வேண்டி வரும். அப்புறம் இதே மாதிரி ஒரு ஹேர் ஆயில் விளம்பரம். ஒரு ஸ்கூல் பொண்ணை ரெண்டு ஸ்கூல் பசங்க கமெண்ட் அடிச்சுகிட்டே பாலோ-அப் செஞ்சுகிட்டே போறாங்க. எனக்கு என்னமோ இதெல்லாம் நல்லதா படல.

Friday, May 24, 2013

சில சந்தேகங்கள் - தெரிந்தால் பதில் சொல்லுங்களேன் ப்ளீஸ்

சில சந்தேகங்கள் எப்போதும் நம் மனதை அரித்து வரும். ஆனால் அதை யாரிடம் கேட்பது என்று தெரியாது. அப்படி என் மனதில் உள்ள சந்தேகங்கள் இவை. உங்களுக்கு தெரிந்தால் பதில் சொல்லுங்களேன்.


 மனிதனால்  எத்தனையோ உயிரினங்கள் உலகிலிருந்து அழிக்கப்பட்டுவிட்டன. ஆனால் மனிதனால் கொசுக்களை மட்டும் அழிக்க முடியவில்லையே ஏன்?

மைலாப்பூரில் பிறந்த வள்ளுவர், மதுரையில் திருக்குறள் அரங்கேற்றம் செய்தார் என்கிறார்களே. அந்த காலத்தில் வள்ளுவர் எந்த ரூட்டில் சென்னையிலிருந்து மதுரைக்கு வந்திருப்பார்?

கமலஹாசன்    எந்த மேடையில், எந்த விழாவில் பேசினாலும் ஏன்  சம்பந்தமே இல்லாமல் பகுத்தறிவு பேசுகிறார்?

சிறு வயதில் விரைவாக  பெரியவராக ஆசைப்படுகிறோம் . பெரியவர் ஆன பின் சிறுவராகவே இருந்திருக்கலாமா என நினைக்கிறோம். இது ஏன்?

தமிழில் இப்போது அதிக நகைச்சுவை படங்கள் வருவதற்கும், வடிவேலு இப்போது சினிமாவில் நடிக்காமல் இருப்பதற்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா?

ஸ்பாட் பிக்சிங்கில் பெரும்பாலும் பௌலர்களே சிக்குகிறார்களே. பேட்ஸ்மேன்களை வைத்து ஸ்பாட் பிக்சிங் செய்ய முடியாதா?

கல்லூரிகள் தங்கள் விளம்பரங்களில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி விடுதிகள் என்று விளம்பரம் செய்கிறார்களே. ஆண்களையும், பெண்களையும் ஒரே விடுதியில் தங்க வைக்கும் கல்லூரி இந்தியாவில் எங்கேயும் இருக்கிறதா?

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்.  கை வலிக்க எழுதி நான் போஸ்ட் செய்யும் பதிவுகளை யாராவது முழுவதும் படிக்கிறீர்களா?


தோனி - ஒரு அதிசயம் - 3

2007ம் ஆண்டு உலக கோப்பை ஆட சென்ற இந்திய அணியின் மேல் யாருக்கும் பெரிய நம்பிக்கை எல்லாம் இருந்திருக்க வாய்ப்பில்லை.இருந்தாலும் அப்படி ஒரு தோல்வியை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.வீரர்கள், ரசிகர்கள் என அனைவரையும் கண்ணீர் விட வைத்த தொடர் அது. அந்த தொடரின் முதல் சுற்றிலேயே படு தோல்வி அடைந்து வெளியேறியது இந்திய அணி.

இந்திய அணிக்கு தொடரின் முதல் போட்டி பங்களாதேஷ் அணியுடன். அந்த போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணிக்கு பெரிய நெருக்கடி. மீதமிருந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால்தான் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற சூழ்நிலை. தனது இரண்டாவது போட்டியில் பெர்முடாவை நசுக்கிய இந்தியா, மூன்றாவது போட்டியில் கட்டாய வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் இலங்கையை சந்தித்தது. 

அந்த போட்டியில் முதலில் ஆடிய இலங்கை 254 ரன்களை சேர்த்தது. அடுத்து ஆடிய இந்திய அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிய தொடங்கின. 120 ரன்களை சேர்க்கும் முன் 5 விக்கெட்டுகளை இழந்த  இந்திய அணிக்கும், இருந்த கடைசி நம்பிக்கை தோனி மட்டுமே.  நானும் தோனி இருக்கும்வரை கவலை பட தேவை இல்லை. சற்று நேரம் ஆடினால் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடுவார் என்ற நினைப்பில் இருந்தேன். 

ஆட வந்த தோனி தனது முதல் பந்தை  எதிர் கொண்டது முரளிதரனிடமிருந்து. அதீதமாக திசை திரும்பிய அந்த பந்து தோனியின் கால் காப்பில் பட்டது. நடுவர் விரலை தூக்கி விட ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார் தோனி. தோனியை கண்டு நான் அதிசயித்த நேரங்களில் இதுவும் ஒன்று. ஏன் என்று கேட்கிறீர்களா? அந்த  அவுட் ஆனதும் மற்ற வீரர்களின் முகத்தில் தென்பட்ட சோகமோ, விரக்தியோ தோனியின் முகத்தில் சிறிதும் இல்லை. ஏதோ ஒரு கண்காட்சி போட்டியில் ஆட்டம் இழந்த வீரர் போல வழக்கமான  உணர்ச்சியற்ற முகத்துடன் வெளியேறினார்.

 
எதற்கும் பயமும் இல்லை, கவலையும் இல்லை என்ன மாதிரியான மனிதன் இவன் என அந்த சோகமான நேரத்திலும் ஆச்சரியமடைந்தேன். கீதை குறிப்பிடும் கர்ம யோகியா இவர்? எல்லாவற்றையும் இறைவனிடம் ஒப்படைத்து விட்டாரா? இவர் போல நம்மால் ஏன் இருக்க முடியவில்லை என யோசிக்க தொடங்கினேன்.

இந்திய அணி அந்த போட்டியில்  தோல்வி அடைந்து தொடரிலிருந்து வெளியேறியது. அந்த தோல்விக்கு பின் இந்திய அணி வீரர்களின் வீட்டில் கல் வீச்சு சம்பவங்கள் நடந்தன. தோனியின் வீடும் தப்பவில்லை. அதன் பின் அணிக்குள்ளே புகைந்து கொண்டிருந்த சாப்பல் பிரச்சினை வெளியே வந்தது. இந்திய அணிக்கு கடும் சோதனையான காலகட்டம் அது. அந்த பிரச்சினைகளில் இருந்து சிறிது, சிறிதாக வெளியே வந்த இந்திய அணி இங்கிலாந்தில்  டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது. அப்போதுதான் வந்தது T-20 உலக கோப்பை.

T-20 உலக கோப்பை அணியிலிருந்து இளைஞர்களுக்கு வழி விட்டு விலகுவதாக அப்போதைய கேப்டன் டிராவிட், சச்சின், கங்குலி போன்ற   சீனியர் வீரர்கள் அறிவித்தனர். இப்போது கிரிக்கெட் வாரியத்துக்கு வந்த பிரச்சினை இவர்களுக்கு மாற்று வீரர்களை தேடுவது. அதை விட பெரிய பிரச்சினை ஒரு புதிய கேப்டனை நியமிப்பது.  சச்சினின் யோசனைப்படி தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

தோனி கேப்டனாக சரியான ஆள் என்று நினைத்து இருந்தேன். ஆனால் ஒரு விக்கெட் கீப்பரை கேப்டனாக அறிவிப்பார்களா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் எப்படியோ தோனி கேப்டனாகி விட்டார். அந்த தொடரையும் வென்று கொடுத்தார். அந்த தொடரை பார்த்த அனைவரும் அவர் சிக்கலான சூழலையும்  மிக கூலாக கையாண்டதாக பாராட்டினார். ஆனால் எனக்கு ஒன்றும் அதில் வியப்பில்லை. அவர் அது போன்ற சூழ்நிலைகளில் பதட்டப்பட்டு செயல்பட்டிருந்தால்தான் எனக்கு அது ஆச்சரியம் அளித்திருக்கும்.

-  ஆச்சரியங்கள் தொடரும் 

Wednesday, May 22, 2013

மேட்ச் ஃபிக்ஸிங் - சில நினைவுகள்

நான் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்து இருந்த கால கட்டம். அன்றைய நாட்கள் இந்திய கிரிக்கெட் அணிக்கு சிறப்பானதாக இல்லை. தொடர் தோல்விகளுக்கு பின் அசாருதீனிடம் இருந்து சச்சின் கேப்டன் பொறுப்பை ஏற்று இருந்தார். அணி வெற்றி பெற சச்சினின் பேட்டிங்கை மட்டுமே நம்பி இருந்தது. 

 
அப்போதுதான் ஆரம்பித்தது டைட்டன் கோப்பை முத்தரப்பு தொடர். இந்தியா, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா பங்கேற்றிருந்த அணிகள். அந்த மூன்று அணிகளில் தென் ஆப்ரிக்க அணி  மிக மிக வலிமையான அணி.அபாயகரமான பேட்ஸ்மேன்கள் , அசுர வேக பந்து வீச்சாளர்கள், ஆல் ரவுண்டர்கள், பாய்ந்து பாய்ந்து பிடிக்கும் ஃபீல்டர்கள், திறமையான கேப்டன் என சிறந்த ஆட்டக்காரர்களை  கொண்டு இருந்தது. ஆஸ்திரேலியாவும் ஓரளவு வலிமையான அணி. இந்திய அணி மட்டுமே பரிதாபமாக தோன்றியது. இருந்தாலும் சச்சின் மேல் இருந்த நம்பிக்கையால் தொடரை பார்க்க தொடங்கினேன்.

 அந்த தொடர் எதிர் பார்த்தது போலவே அமைந்தது. தென் ஆப்ரிக்கா மிக எளிதாக ஃபைனலில் நுழைந்தது. இந்தியாவோ  தட்டு தடுமாறி சில போட்டிகளில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஃபைனலுக்குள் நுழைந்தது. ஃபைனலில் தென் ஆப்ரிக்கா இந்தியாவை ஊதி தள்ளி விடும் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். நானோ வழக்கம் போல ஏதோ ஒரு நம்பிக்கையில்  போட்டியை பார்த்தேன்.

முதலில் ஆடிய இந்திய அணி 220 ரன்கள் எடுத்தது. அப்போதேல்லாம் இப்போது போல் 350,400 ரன்கள் எடுக்கும் கதை எல்லாம் இல்லை. 250 ரன்களே நல்ல ஸ்கோர். ஆகவே  220 ரன்களும் ஓரளவு சுமாரான ஸ்கோர்தான். இருந்தாலும் எதிர்த்து ஆடுவது தென் ஆப்ரிக்காவை. அவர்களுக்கு இதெல்லாம் ஒரு இலக்கே இல்லை. கிட்டத்தட்ட தோல்வி உறுதியான சூழலில்தான் அந்த அதிசயம் நடந்தது. அடுத்து ஆடிய தென் ஆப்ரிக்காவின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. தென் ஆப்ரிக்கா 100 ரன்களை எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது. நான் உற்சாகம் அடைந்தேன். ஆனால் அது அதிக நேரம் நிலைக்கவில்லை. 8வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சிம்காக்ஸும், ரிச்சர்ட்சனும் நின்று ஆட தொடங்கினர். கடைசி நேரத்தில் வெற்றி கை நழுவிவிடுமோ என பயப்பட தொடங்கினேன். ஆனால் ஸ்கோர் 190ஐ நெருங்கும்போது ரிச்சர்ட்சன், ராபின் சிங்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்த இரண்டு விக்கெட்டுகளும் அடுத்தடுத்து சரிய இந்திய அணி வெற்றி பெற்றது. நான் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்தபின் இந்திய அணி வெல்லும் முதல் கோப்பை என்பதால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்

இதற்கு பின் டெண்டுல்கரின் தலைமையில் இந்திய அணி ஒரு நாள் போட்டிகளில் இன்னும் ஒரே ஒரு கோப்பை மட்டுமே வென்றது. அது பாகிஸ்தானுக்கு எதிராக கனடாவில் நடந்த சஹாரா கோப்பை தொடர். இருந்தபோதும் தென் ஆப்ரிக்காவை வீழ்த்திய போட்டியே எனக்கு சிறந்த போட்டியாகபட்டது. அந்த ஒரு போட்டியையே நான் பார்த்ததில் சிறந்த போட்டியாக நினைத்து கொண்டு இருந்தேன்.

சில ஆண்டுகளுக்கு பின் ஒரு காலை பொழுதில் அந்த போட்டியை தென் ஆப்ரிக்கா கேப்டன் ஹன்சி குரோனி பிக்ஸ் செய்து விட்டதாகவும், அந்த போட்டியின் முடிவு புக்கிகளால் தீர்மானிக்கட்டதாகவும் செய்திகளில் பார்த்தேன். லேசாக தலை சுற்றியது. எப்படியோ ஜெயிச்சது ஜெயிச்சதுதான் என்று மனதை தேற்றி கொண்டு இந்திய அணிக்கு அடுத்த போட்டி எப்போது  என்று நண்பர்களுடன் விவாதிக்க தொடங்கினேன்.

Tuesday, May 21, 2013

ரஜினி சமூகத்துக்கு நல்லது செய்யுறாரா? இல்ல ராமதாஸ் சமூகத்துக்கு நல்லது செய்யுறாரா?

"ஏம்பா! நீ ரஜினி ரசிகன்னு சொல்றியே. அது என்ன ராமதாஸ் மேல போட்ட ரஜினி ரசிகர்களை தாக்கின வழக்கு?"

"அது நடந்து ஒரு பத்து வருசம் இருக்கும்ணே. எனக்கும் ரொம்ப விசயம் நினைவுல இல்ல. எனக்கு தெரிஞ்ச அளவு சொல்றேன். அப்போ தினமலர்ல இது பெரிய நியூஸா வந்துச்சு."

"சரி சொல்லு"

"பாபா படம் வந்தப்ப ராமதாஸ் ரஜினிய எதித்து அறிக்கை விட்டதும், அப்புறமா பாபா பட பெட்டியை பாமககாரங்க கடத்துனதும் எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்"

"ஆமா"

"இது நடந்து கொஞ்ச நாள்ல ராமதாஸ் பிரசாரத்துக்கு மதுரைக்கு வந்தார். உங்களுக்குத்தான் மதுரை ரசிகர்களை பத்தி தெரியுமே. ரஜினி பாஷைல சொன்னா அவங்க வெறியங்க. ராமதாஸ் மதுரை வரது தெரிஞ்சதும் ராமதாஸ்க்கு கறுப்பு கொடி காட்ட முடிவு செஞ்சாங்க."


"ஆமா. நானும் மதுரை ரசிகர்களை பத்தி கேள்வி பட்டு இருக்கேன். ரஜினின்னா உசுரை விடுவாங்களாமே"

"ஆமாண்ணே. அவங்க திட்டப்படி ராமதாஸ் வந்தபோது கறுப்பு கொடி காட்ட திரண்டு வந்துட்டாங்க. பாமககாரங்க இதை ஏற்கனவே எதிர் பாத்து இருப்பார் போல.ராமதாஸ்  கூட வந்த ஆட்கள் அரிவாள், ப்ருஸ் லீ வச்சு இருப்பாரே நுஞ்சக் இது மாதிரி ஆயுதங்கள கையோட கொண்டு வந்து இருக்காங்க"

"பின்ன என்ன? கறுப்பு கொடி காட்டுனா பொறுத்துக்க ராமதாஸ் என்ன காந்தியா? "

"அது சரிதான். வந்தவங்க ரஜினி ரசிகர்களை கைல வச்சு இருந்த ஆயுதத்தால விரட்டி விரட்டி தாக்கி இருக்காங்க. இதுல 'ரஜினி' வைரம் அப்படிங்குற ரசிகர் மிக மோசமா தாக்கப்பட்டு இருக்கார். இதெல்லாம் தினமலர்ல பெரிய அளவு படங்களோட வந்துச்சு."

"இதெல்லாம் ரஜினி கண்டுக்கவே இல்லையா?"

"சே சே! தலைவர் ரொம்ப கோபமா பேட்டி குடுத்தார். . அந்த பேட்டில அவர் சொல்லி இருந்த குறிப்பிடத்தக்க  விஷயம் என்ன தெரியுமா?"

"எனக்கு தெரிஞ்சா நான் ஏன் உன்கிட்ட கதை கேட்க வரேன்"

"இந்த கேஸை தான் விடுற மாதிரி இல்லை அப்படின்னு சொல்லி இருந்தார்."

"ஓஹோ"

"அது மட்டும் இல்ல. தாக்கபட்ட ரசிகர்களை சந்திக்க மதுரை வர இருந்ததாகவும் ஆனா அதுனால ரசிகர்கள் பாமககாரங்க மேல ரொம்ப ஆவேசப்படுவாங்க. நிலைமை ரொம்ப மோசமடையும்னு நினைச்சு அந்த யோசனைய கைவிட்டதாகவும் கூட கேள்விபட்டேன்"

"அப்படியா?"

"ஆமா. ஆனா ரஜினி சொன்ன விசயம் எனக்குள்ள ரொம்ப நாளா இருந்துட்டே இருந்துச்சு. அந்த கேஸ் என்ன ஆச்சுன்னு எவ்வளவோ நாள் யோசிச்சு இருக்கேன். தலைவர் அந்த கேஸை கை விட்டுட்டார் அப்பிடின்னு நெனச்சேன் . ஆனா  இப்போ என்னோட கேள்விக்கெல்லாம் பதில் கிடைச்சுடுச்சு. அன்னைக்கு சூழ்நிலைல ஆட்சில இருந்த அதிமுகவுக்கு ராமதாசை விட ரஜினிதான் பெரிய எதிரி. அதனால போலீஸ் அந்த கேஸ் மேல இன்ட்ரெஸ்ட் எடுத்துக்காம இருந்து இருக்கு .   போலீஸ் ஒத்துழைக்காம ரஜினியால  என்ன செய்ய முடியும். கடைசில அந்த வஷயமே அடி வாங்குனவங்க தவிர எல்லாருக்கும் மறந்து போச்சு."

" அப்போ போலீஸ்  இன்னைக்கு தேவைன்னதும்  எல்லாரும் மறந்து போன ஒரு விஷயத்தை திரும்ப தூசி தட்டி எடுத்து இருக்காங்க"

"ஆமா! இதை பார்த்ததும் தப்பு செஞ்சவன் தண்டனை அனுபவிச்சே ஆகணும்னு நம்ம முன்னோர்கள் சொன்னது ஒரு வேளை சரியா இருக்கும்னு சந்தேகம் வருது."

"சரியா கூட இருக்கலாம்"

"ராமதாஸ் ரஜினி மேல சொன்ன குடுத்த ப்ராது என்னன்னா இவரு தண்ணி அடிக்கிற மாதிரி நடிக்கிறார். சிகரட் குடிக்கிற மாதிரி நடிக்கிறார். இதை பாத்து இவரோட ரசிகர்கள் கெட்டு போறாங்கன்னு. ஆனா யோசிங்க. சிலர் ரஜினிய பாத்து சிகரட் குடிச்சது உண்மைதான். ஆனா சிகரட் குடிக்கிறவங்க அவங்களுக்கு அவங்களே கெடுதல் செய்றாங்களே தவிர சமூகத்துக்கு கெடுதல் பண்ணல. அதே நேரத்துல ரஜினி சினிமால எத்தனையோ நல்லது சொல்லி இருக்கார். எல்லா ஜாதி, மதத்தினரையும் அவரோட ரசிகரா மாத்தி ஏதோ ஒரு வகைல அவங்களை சேத்து வச்சு இருக்கார். எப்பவும் ஒரு குறிப்பிட்ட ஜாதி ஆளா தன்னை காமிச்சுகிட்டு நடிச்சது இல்ல. இப்பிடி எல்லாரையும் சேத்து வைக்கிற ரஜினி சமூகத்துக்கு கெடுதல் செய்யுறாரா?  இல்ல ஒரு ஜாதி பேரு சொல்லி குறுகிய வட்டத்துல அரசியல் பண்ற ராமதாஸ்  சமூகத்துக்கு கெடுதல் செய்யுறாரா? சொல்லுங்க அண்ணே?"

"ஆமாம்பா! அதுலயும் பஸ் மேல எல்லாம் கல்லு விட்டு எறிஞ்சு ஒருத்தரை கொலை கூட செஞ்சாங்க. அதை மன்னிக்கவே கூடாது"

"ஆமா. அதை மன்னிக்கவே கூடாது. நான் கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க. ரஜினி சமூகத்துக்கு கெடுதல் செய்யுறாரா?  இல்ல ராமதாஸ்  சமூகத்துக்கு கெடுதல் செய்யுறாரா?"

"போப்பா. நான் பதில் சொன்னா என்னை ரஜினி ரசிகன்னு சொல்லிடுவீங்க. புத்திசாலித்தனமா ரெண்டு பேருமேன்னு பதில் சொல்ல என் மனசாட்சி ஒத்துக்காது "

"சரி நீங்க சொல்ல வேண்டாம். இதை படிக்கிற அண்ணே. நீங்களாச்சும் சொல்லுங்க. ரஜினி சமூகத்துக்கு நல்லது செய்யுறாரா?  இல்ல ராமதாஸ்  சமூகத்துக்கு நல்லது செய்யுறாரா?"


Monday, May 20, 2013

தோனி - ஒரு அதிசயம் - 2

தோனியின் அந்த ஆட்டத்தை பார்த்த பின் எனக்கு அவர் மேல் உள்ள நம்பிக்கை அதிகரித்தது. இந்திய அணிக்கு ஒரு அதிரடி ஆட்டக்காரர் கிடைத்துவிட்டார் என முடிவு செய்து விட்டேன். இந்த நிலையில் இந்திய அணி ஜிம்பாப்வே சுற்று பயணம் மேற்கொண்டது. அந்த பயணத்தில்தான் தோனியின் இன்னொரு முகத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த தொடரின் ஒரு போட்டியில் முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 250 ரன்களை சேர்த்தது. 250 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு  100 ரன்களை சேர்க்கும் முன் ஐந்து விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டது. ஆறாவது விக்கெட்டுக்கு களம் இறங்கினார் தோனி. அவரால் அதிரடி ஆட்டம் மட்டுமே ஆட முடியும் என்று நம்பி கொண்டு இருந்தேன். ஆட்டத்தின் போக்கை உணராமல் அவசரப்பட்டு ரன் எடுக்க முயன்று அவுட்டாகிவிடுவார் என்று கணித்தேன். இந்திய அணியின் தோல்வி உறுதி என்று முடிவு செய்தே விட்டேன். இந்த முறை தோனி மீண்டும் நான் கணித்தது தவறு என்று முடிவு செய்தார். யுவராஜுடன் இணைந்து மிக கவனமாக ஆடி அணியை வெற்றி பெற செய்தார். அதிரடி ஆட்டம் மட்டுமல்ல, சூழ்நிலைக்கு ஏற்ப அணிக்கு தனது பங்களிப்பை வழங்க முடியும் என்று நிரூபித்தார்.

இந்த தொடரில் அவரின் அசுர வேக ஸ்டம்பிங்களையும் கவனித்தேன். அவரின்  கைகள், காரணமே இல்லாமல் ஸ்டம்ப்களை தட்டி விடுவது போல் இருக்கும். ஆனால் ரீப்ளே செய்து பார்க்கும்போது பேட்ஸ்மேன் கால்களை மிக சிறிய அளவு கிரீசை விட்டு வெளியே எடுத்து இருப்பது தெரியும். தோனி தனது  மின்னல் வேகத்தால் அந்த இடைவெளியை சரியாக பயன்படுத்தி இருப்பார்.

அதன் பின் நடந்த பாகிஸ்தான் தொடர் தோனியின் புகழை உச்சத்திற்கு கொண்டு சென்றது. முஷாரப் தோனியின் ஹேர் ஸ்டைலை பாராட்ட, இந்திய ரசிகர்கள் அவரை போன்றே தங்கள் ஹேர் ஸ்டைலை அமைத்து கொண்டனர். தோனி ஒரு தேசிய ஹீரோவாக இந்த தொடரின் முடிவில் மாறி போனார். இதற்கு இடையில் டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் பொறுப்பும் தினேஷ் கார்த்திக்கிடமிருந்து தோனியை வந்து சேர்ந்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி டெஸ்ட் போட்டிகளிலும் சாதித்து காட்டினார் தோனி.


இப்படி தோனி தன்னை அணியின் தவிர்க்க முடியாத வீரராக மாற்றி கொண்டு இருந்தார். ஒரு நாள் போட்டிகளில் தன் பேட்டிங் சராசரியை 50க்கு மேலும், ஸ்ட்ரைக் ரேட்டை 100க்கு மேலும் வைத்து இருந்தார். அவரை அணியின் கேப்டனாக கூட நியமிக்கலாம் என என்ன தொடங்கினேன். அப்போது ஒரு ஆட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் என் எண்ணத்தை வலுவாக்கியது. ஒரு போட்டியின்போது தோனி பந்தை பௌலரிடமே திருப்பி அடித்தார். பந்தை பிடித்த பௌலர் அதை தோனியை நோக்கி எறிவது போல பாவ்லா காண்பித்தார். பேட்ஸ்மேன்களை எரிச்சலூட்டி அவர்களின் கவனம் சிதற செய்ய பௌலர்கள் கையாளும் யுக்தி இது. பொதுவாக இது போன்ற நிலையில் பேட்ஸ்மேன்கள் பயத்தில் ஸ்டம்பை விட்டு விலகி ஓடுவர். அல்லது பௌலரை முறைப்பார்கள். ஆனால் தோனி என்ன செய்தார் தெரியுமா? நின்ற இடத்திலே சிறிதும் அசைவற்று நின்று கொண்டார். பின் பௌலரை பார்த்து ஒரு தனது  வழக்கமான புன்னகையை உதிர்த்தார். "அட பாவி! நீ எதுக்குமே பயப்பட மாட்டியா" என நினைத்து கொண்டேன். அந்த சம்பவத்திற்கு பின் இவர் கேப்டனாக தகுதியானவர் என்ற என் எண்ணம் வலுப்பட்டது. 

இப்படி தோனிக்கு எல்லாம் உச்சத்தில் சென்று கொண்டு இருக்கும்போதுதான் 2007ம் ஆண்டு உலக கோப்பை தொடர் வந்தது. எந்த இந்திய கிரிக்கெட் ரசிகனாலும் எளிதில் மறக்க முடியாத தொடர் அது.

- தொடரும் 

Thursday, May 9, 2013

தோனி - ஒரு அதிசயம்

ங்குலி தலைமையில் பல வெற்றிகளை இந்திய அணி குவித்து வந்த காலம். அந்த அணிக்கு இருந்த மிக பெரிய பிரச்சனை சரியான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இல்லாதது. பார்த்திவ், தினேஷ் கார்த்திக் என சில வீரர்களை முயன்றபோதும் யாரும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. எனவே ராகுல் டிராவிட் வேண்டா வெறுப்பாக விக்கெட் கீப்பிங் செய்து கொண்டு இருந்தார். கங்குலியோ, "இந்தியாவில் ஒரு கில்க்ரிஸ்டோ, மார்க் பவுச்சரோ இல்லை; எனவே டிராவிடே விக்கெட் கீப்பிங் செய்வார்"  என பேட்டி கொடுத்து கொண்டு இருந்தார். ஆனால் டிராவிட்டின்  விக்கெட் கீப்பிங் சொல்லி கொள்ளும்படி இல்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்திய அணி வங்கதேசம் சென்றது. வழக்கமாக சிறிய அணிகளுடன் மோதும்போது புதிய வீரர்கள் அதிக அளவில் வாய்ப்பு பெறுவார்கள். அப்பொழுதும் அதே போல் அணியில் சில  புதுமுக வீரர்கள் வாய்ப்பு பெற்றார்கள். அப்பொழுது இந்திய A அணியில் அசத்தி கொண்டு இருந்த தோனியும் வாய்ப்பு பெற்றார். 

2004 ஆம் ஆண்டு தோனியின் முதல் போட்டி.  நீளமான முடி; இந்திய வீரர்கள் யாருக்கும் இல்லாத கட்டுமஸ்தான உருவம். பார்க்க மிகவும் வித்தியாசமாக இருந்தார்.  முதல் போட்டியில் ஒரு ரன்னும் எடுக்காமல் அவுட்.  அடுத்த போட்டியில் அவரின் பேட்டிங்கை பார்க்கும் வாய்ப்பு  கிடைத்தது. அந்த போட்டியில் சர்வ சாதாரணமாக ஒரு சிக்ஸர் அடித்தார். பின் சிங்க பல் தெரிய ஒரு சிரிப்பு. அவரின் உடல்  வலிமை கவனிக்க வைத்தது. ஆனால்  அவரின் பேட்டிங் ஸ்டைல் மிக மோசம் . சர்வதேச கிரிக்கெட் வீரர் போலவே இல்லை. இந்த பேட்டிங்  ஸ்டைலில் ஆடி சாதிப்பது சாத்தியமே இல்லை. அதிரடியாக ஆடினால் சில போட்டிகளில்  அதிக பட்சம் 30 அல்லது 40 ரன்கள் எடுக்கலாம்.  ஆனால் பெரிய ஸ்கோர், நம்பகமான ஆட்டம் எல்லாம் சாத்தியமே இல்லை என்று நினைத்தேன். நினைத்தது போலவே அந்த தொடரில் சுமாராகவே ஆடினார். டிராவிட்டின் தலைவலி எப்போதும் தீராது போலும் என்று எண்ணி கொண்டேன். 


அடுத்த தொடர் பாகிஸ்தானுடன். இந்த தொடருக்கு  அவர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இல்லை என  கொண்டேன். ஆனால் அவருக்கு வாய்ப்பு அளிக்க பட்டது. இளைஞர்கள் மேல் அதிக நம்பிக்கை வைத்த சாப்பல் ஒரு போட்டியில்  தோனிக்கு மூன்றாவது வீரராக களம் இறங்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. தற்போதைய இந்திய கிரிக்கெட்டின் வரலாறு எழுதப்பட்டது அந்த போட்டியில்தான். அந்த போட்டியில் நான்கும், ஆறுமாக அடித்து  அவர் அடித்த ரன்கள் 148. அந்த ஆட்டத்தை பார்த்த டிவி வர்ணனையாளர்களோ  தாங்கள் பார்ப்பது தோனியையா, இல்லை விவியன் ரிச்சர்ட்சின் புயல் வேக ஆட்டத்தையா என வியந்தனர். நானோ இது எத்தனை நாட்களுக்கு என பார்க்கலாம் என எண்ணி கொண்டேன். இந்த ஒரு போட்டியில் ஆடியதால் இன்னும் ஒரு ஆண்டுக்கு அணியில் இருப்பார் என்று எண்ணினேன். . ஆனால் அந்த ஆட்டத்தை முழுவதுமாகவும் என்னால் ஒதுக்கி விட முடியவில்லை. காரணம், அந்த போட்டியில் தோனி காட்டிய அட்டிடியுட். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் என்று எல்லா வீர்களுக்கும் இருக்கும் பயமோ, பதட்டமோ அவரிடம் சுத்தமாக இல்லை. சதம் எடுத்த பின்னும்  முதல் சதம் எடுத்த வீரரின் முகத்தில் இருக்கும் பூரிப்பு அவரின் முகத்தில் இல்லை. தான் எதுவுமே செய்யாதது போல சலனமற்ற முகத்தோடு அவ்வளவு இயல்பாக பந்துகளை நொறுக்கினார்.  

அதற்கு பின் இலங்கை தொடரில் அவர் அடித்த சதமோ அவரின் புகழை இன்னும் உயர்த்தியது. மின்னல் வேகத்தில் 183 ரன்களை குவித்து அந்த போட்டியில் பல  சாதனைகள் படைத்தார். எனக்கு  அந்த ஆட்டத்தை முழுவதும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.  அவரின் ஓடி ரன் சேர்க்கும் வேகம், அசாத்திய பலம் இது எதையுமே என்னால் நம்ப முடியவில்லை. தோனியை நான்  முதல்முதலில் வியந்து பார்த்தது அன்றுதான்.

                                                                                                                                            தொடரும் 

 உங்களின் வரவேற்பை பொறுத்தே அடுத்த பகுதி எழுதுவது பற்றி முடிவு செய்வேன்


Monday, May 6, 2013

ஃபேஸ்புக் சமூகம் - இந்த சமூகத்துல நீங்களும் இருக்கீங்களா?

ஃபேஸ்புக் யூஸ் பண்றது போதை பழக்கத்தை விட மோசமானதுன்னு ஒரு நியூஸ் படிச்சேங்க. அது என்னவோ எனக்கு உண்மைதான்னு தோணுதுங்க. இப்போல்லாம் நம்ம ஆளுங்க இருக்காங்களே காலைல பல்லு விளக்க மறந்தாலும் ஃபேஸ்புக் ஓபன் பண்ண மறக்குறது இல்ல. விடிஞ்சதும் 'குட் மார்னிங்' அப்பிடின்னு ஸ்டேடஸ் போடுறது. அப்புறம் ப்ரண்ட் கிட்ட ஓசி வாங்குன ஒரு ஓட்டை கூலர்சை மாட்டிகிட்டு எடுத்த போட்டோவை அப்லோட் பண்றது. இப்பிடி விடிஞ்சதுல இருந்து தூங்குறவரை ஃபேஸ்புக்ல இவங்க செய்யுற அலம்பல் இருக்கே. தாங்க முடியாது.
 
அதுல சில பேரு இருக்காங்க. கூட படிக்கிற பொண்ணு, வேலை செய்யுற பொண்ணு பேரெல்லாம் போட்டு தேடி ப்ரண்ட் ரிகஸ்ட் குடுக்குறது இவங்க முழு நேர வேலை . அந்த பொண்ணு அச்செப்ட் பண்ணிட்டா  . அப்புறம் அந்த பொண்ணு மூஞ்சி கூட கழுவாம போட்டோ எடுத்து போட்டாலும் "யூ ஆர் ஸோ கியூட்", "நைஸ் ஸ்மைல்" அப்பிடின்னு கமெண்ட் தருவாங்க. இந்த மாதிரி ஆளுங்களை நம்பித்தான் பொண்ணுங்க ஃபேஸ்புக்ல போட்டோ போடுறதே. அப்புறம் பொண்ணுங்க யாரும் சாட்டிங் கிடைச்சுட்டா இவங்களுக்கு ஒரே குஷிதான். மொக்கை போட்டே அந்த பொண்ணை சாகடிச்சுடுவாங்க



இந்த பொண்ணுங்களையும் சும்மா சொல்ல கூடாது. ரொம்ப போர் அடிச்சா 'இன்னைக்கு என் தலைல இருந்து ரெண்டு பேன் எடுத்தேன் ' அப்பிடின்னு ஒரு ஸ்டேடஸ் போட்றுவாங்க. அன்னைக்கு நாள் முழுசும் பசங்க போடுற கமெண்டை படிச்சே பொழுதை ஓட்டிடுவாங்க .  ஃபேஸ்புக்ல போட்டோ போட்டுட்டு, யாரு போட்டோவுக்கு லைக்ஸ் ஜாஸ்தி விழுதோ அவங்கதான் பெரிய அழகின்னு சில பொண்ணுங்க அழகி போட்டி வேற நடத்துறதா கேள்வி.

அப்புறம் ஃபேஸ்புக் போராளிகள். அன்னைக்கு பேப்பர்ல முதல் பக்கம் வர்ற நியூஸ் மட்டும் பாத்துப்பாங்க. அதை மட்டும் வச்சுக்கிட்டு ஃபேஸ்புக் ஸ்டேடஸ்ல அறிக்கை விடுவாங்க பாருங்க. மன்மோகன்சிங்ல இருந்து பக்கத்துக்கு வீட்டுக்காரன் வரைக்கும்ஒருத்தரையும் விட்டு வைக்க மாட்டாங்க.பெரும்பாலும் இவங்க கருத்துகள்ல ஆவேசம் பொங்கும். எல்லாரையும் கண்டபடி திட்டியும் குறை சொல்லியும் எழுதுவாங்க . யாராவது  இவங்க கருத்தை தப்புன்னு சொல்லி கமெண்ட் போட்டா  இவங்களுக்கு வருமே கோவம். கமெண்ட் போட்டவனை இனிமே ஃபேஸ்புக் பக்கமே திரும்பி பாக்க வைக்க முடியாத அளவு காய்ச்சி எடுத்துடுவாங்க.

அடுத்த வகை மக்கள் விஜய், அஜித், சூர்யா ரசிகர்கள். ஒவ்வொரு நடிகரோட ரசிகனும் அடுத்த நடிகரை படிச்சாலே கண்ணு கூசுற அளவுக்கு நல்ல வார்த்தைகளாலே அர்ச்சனை செய்வாங்க. எப்படியோ  இது நாள் வரைக்கும் சுவத்துல ஒட்டுன போஸ்டர்ல சாணி அடிச்ச சமூகம் இன்னைக்கு கம்ப்யூட்டர் மானிட்டர்ல சாணி அடிக்கிற அளவு முன்னேறி இருக்கிறது நல்ல வளர்ச்சிதான்.

அப்புறம் இன்னும் ஒருத்தரை பத்தி சொல்ல மறந்துட்டேனே. அவர்தான் நம்ம அரசியல் சாணக்கியர். நம்ம ஃபேஸ்புக் சமூகம்  பத்தி சரியா தெரியாம ஒரு பேஜ் ஓபன் பண்ணிட்டார். பாராட்டு வந்து குவிய போகுதுன்னு நெனைச்சவருக்கு முதல் நாள்லயே அதிர்ச்சி . இப்போ  அவரை கழுவி கழுவி ஊத்துற கமெண்ட்ஸ்லாம் டெலிட் பண்றதுக்கே தனியா ரெண்டு பேரை வேலைக்கு வச்சு இருக்கிறதா கேள்வி. இப்பிடி சாணக்கியரையே தடுமாற வச்சுட்டாங்க நம்ம ஆளுங்க.

இப்படி சொன்னா எவ்வளவோ சொல்லிட்டே போகலாமுங்க. இருந்தாலும் ஃபேஸ்புக்ல சில அப்டேட்ஸ் எல்லாம் போட வேண்டிய வேலை இருக்கு. ஸோ முடிச்சுகிறேங்க.

Friday, May 3, 2013

கார்பரேட் கம்பெனிகளில் முன்னேறுவது எப்படி? வழி காட்டுகிறார்கள் அரசியல்வாதிகள்

ரசியல் அரசியல்ல மட்டும் இல்ல. எல்லாத்துலயும் இருக்கு (எதாச்சும் புரியுதா?) அதாவதுங்க நான் என்ன சொல்ல வரேன்னா எல்லா இடத்துலயும் அரசியல் செய்றவங்க இருக்காங்க. வீட்ல மாமியாருக்கு எதிரா மருமகளும், மருமகளுக்கு எதிரா மாமியாரும், ஆஃபீஸ்ல வேலையாட்கள் செய்யுற அரசியலும், திமுக, அதிமுக, பாமக  அப்பிடின்னு கட்சிகள் செய்யுற அரசியலும்  எல்லாமே ஒண்ணுதான். அதிலும் கார்பரேட் கம்பெனில வேலை செஞ்சுகிட்டு அரசியல் செய்ய மாட்டேன்னா உங்களை கேனை பயல்னு சொல்லிடுவாங்கன்னே. அதனால நான் சொல்ற  மாதிரி அரசியல் செஞ்சு வாழ்க்கைல முன்னேற பாருங்க.

முதல் பாய்ன்ட் என்னன்னா . உங்களுக்குள வெக்கம், மானம், ரோசம் இப்பிடி எதாச்சும் ஃபீலிங்க்லாம் இருந்தா இன்னைக்கே தொடைச்சு தூக்கி எரிஞ்சுடுங்க. நாம முன்னேற முதல் தடையே அதுதான். அதே மாதிரி . நான் அரிச்சந்திரன். எப்பவும் ஒரே மாதிரிதான் பேசுவேன் அப்பிடின்னு நிக்காதீங்க. உதாரணத்துக்கு நம்ம ராமதாசை எடுத்துக்குங்க. அவர் எப்பிடி மாறி மாறி கூட்டணி வச்சுக்கிட்டு மாறி மாறி எல்லாரையும் திட்டுனாரு. அதே மாதிரி நேரத்துக்கு தகுந்த மாதிரி பேசி பழகுங்க.



உங்களுக்கு வேலை செய்யவே தெரியாம இருக்கலாம். ஆனா அதை எப்பவுமே வெளிய காமிக்க வேணாம். பாக்குறவங்க ஒரு வேளை இவர் உண்மையிலேயே பெரிய ஆளோன்னு குழம்பணும். இந்த அப்பரைசல் மீட்டிங் எல்லாம் போனா வாய்க்கு வந்தபடி பொய் சொல்லணும். கலைஞர் கிட்ட மின்சாரம் ஏன் சரியா வல்லன்னு கேட்டா  "நான் 1960ல்  தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தேன், அண்ணாவின் தம்பி   ஆனேன் " அப்பிடின்னு சம்பந்தம் இல்லாம ஒரு பதில் சொல்லுவாரே. அதே மாதிரி நீங்களும் சம்பந்தம் இல்லாம ஒரு பழைய கதை சொல்லணும். அதை கேட்டா நீங்க உண்மையாவே ஏதோ செஞ்சீங்களோன்னு   உங்க மேனேஜருக்கு சந்தேகம் வரணும். இதை மட்டும் செஞ்சுட்டா உங்க வாழ்க்கை ஓஹோதான்.

உங்க மேனேஜரை பாக்கும்போதேல்லாம் 32 பல்லும் தெரியுற மாதிரி சிரிச்சு வைங்க. அவரு உங்களை எத்தனையோ தடவ கழுவி கழுவி ஊத்தி இருக்கலாம். அதையெல்லாம் நெனச்கிட்டு சிரிக்காம விட்டீங்க நீங்க காலி. மேனேஜர் கிட்ட மட்டையா மடங்கிடுங்க. இதுல எதாச்சும் சநதேகம் இருந்தா கீழ உள்ள படத்தை பாத்துகோங்க.


 அப்புறம் கம்பெனில கூட்டணி இல்லாம இருக்கிறது எல்லாம் சாத்தியமே இல்ல. அதனால கூட வேலை செய்யுறவனை(இல்ல செய்யுறவளை) பிடிக்காட்டியும் அதை வெளில காட்ட வேண்டாம். நாளைக்கு ஒரு வேளை அவனே/அவளே  கூட நம்ம மேனேஜர் ஆகிடலாம்  என்னது, ஏற்கனவே அப்பிடி சண்டை போட்டீங்களா? கவலையே வேண்டாங்க. நாளைக்கு அவங்க கிட்ட போய் நம்ம விஜயகாந்த் மாதிரி ஒரு வணக்கம் வச்சுடுங்க. யாராச்சும் கிண்டல் பண்ணா இது அவ மரியாதை நிமித்தமான சந்திப்பு அப்பிடின்னு சொல்லி சமாளிச்சுடுங்க.
இப்படி அரசியல் நுணுக்கங்களை கத்துகிட்டா ஒரு நாள் நீங்க உங்க கம்பெனியோட MD கூட ஆகலாம். வளமான எதிர்காலம் அமைய வத்திகுச்சி சார்பா வாழ்த்துகள்.

Thursday, May 2, 2013

பீட்சா போச்சே - தமிழனை பாடாய்படுத்தும் ஆங்கிலம்

"பூவே செம்பூவே உன் வாசம் வரும் " அப்பிடின்னு டிவில ராதாரவி பாடிட்டு இருந்தாரு. ஒரு வேளை இந்த பாட்டை ராதாரவி உண்மையாவே தன்னோட வாய்ஸ்ல பாடிட்டு இருந்தா எப்பிடி இருக்கும்னு யோசிச்சுகிட்டே சேனலை மாத்தினேன். விஜய் டிவில இன்ஜினியரிங் மாணவர்களுக்கு வேலை கிடைக்கிறது குதிரை கொம்பா இருக்குன்னு கோபிநாத் சொல்லிட்டு இருந்தார். அதுல பேசுனவங்க மாணவங்களுக்கு வேலை கிடைக்காம போறதுக்கு பல காரணங்கள் சொல்லிட்டு இருந்தாங்க. குறிப்பா ப்ராக்டிகல் அறிவு காலேஜ்ல கிடைக்கலன்னு பல பேரு சொன்னாங்க. ஆனா ஏனோ நம்ம மக்களோட அதீத ஆங்கில அறிவு பத்தி யாருமே சொல்லலை. சொந்த அனுபவத்துல சொல்றேன். தமிழ் நாட்ல உள்ள பெரும்பாலான மக்களுக்கு தமிழ்ல பிடிக்காத ஒரே வார்த்தை ஆங்கிலம்தான். ஏனோ தெரியல  இந்த இங்கிலீஷ் கருமம் நம்ம ஆட்கள் ரொம்ப பேரு வாயில நுழையவே மாட்டேங்குது.

நான் எட்டாம் வகுப்பு படிக்கிறப்போ நடந்தது இது. இங்கிலீஷ் பரிட்சையில இங்கிலீஷ் பழமொழியை தமிழ்ல மொழி பெயர்க்க சொல்லி ஒரு கேள்வி. "UNION IS STRENGTH" இதுதான் கேட்டு இருந்த பழமொழி. "வெங்காயமே பலம்" அப்பிடின்னு நம்ம ஆளுங்க எழுதுனாங்க பாருங்க ஆன்சரு. வாத்தியாருங்க எல்லாம் அசந்து போய்ட்டாங்க.  "ஏன்டா! உங்களுக்கு ஆனியனுக்கும் யூனியனுக்குமா வித்தியாசம் தெரியாதுன்னு ஒரே பாராட்டுதான். இந்த மட்டுலதான் பள்ளிகூடத்துல இங்கிலீஷுக்கும் நமக்கும் உறவு  இருக்கு.


இன்ஜினியரிங் காலேஜ் போனப்புறம் பசங்களுக்கு வேற வழி  இல்ல. அடிக்கடி அதையும் இதையும் சொல்லி இங்கிலிஷ்ல பேச வைக்க பாப்பாங்க. அப்போ நம்ம பசங்க படுற கஷ்டம் இருக்கே. தமிழ்ல ஓலை பாயில நாய் மொண்ட மாதிரி பேசுனவங்களுக்கு அந்த நேரத்துல வாயில இருந்து காத்துதான் வரும். இன்னும் சில பேருக்கு ஏதோ ஃபர்ஸ்ட்  ரூமுக்குள்ள போன மாதிரி வேர்த்துபோய் உடம்பெல்லாம் நடுங்கும்.

இதுல இன்னும் சில பசங்க இருப்பாங்க. இவனுகளுக்கு இங்கிலீஷ் கொஞ்சம்  தெரிஞ்சு இருக்கும். இங்கிலிஷ்ல பேச சொன்னதும் மட மடன்னு பேசுவாங்க. ஆனா பேசுறதை வச்சு அவனுங்க நடந்ததை சொல்லுறாங்களா இல்ல நடக்கபோறதை சொல்லுறாங்களானு கண்டு பிடிக்கவே முடியாது.  பேசும்போது ஒவ்வொரு வார்த்தையா யோசிச்சு யோசிச்சு இழுத்து இழுத்து பேசுறவங்க இன்னொரு ரகம். இவனுங்க பேசி முடிக்கும்போது எதுல இருந்து பேச ஆரம்பிச்சாங்கன்னு அவனுகளுக்கே  மறந்து இருக்கும்.

இப்பிடி சின்ன சின்ன ஊருல இருந்து வந்தவங்களை இங்கிலீஷ் படுத்தற பாடு கொஞ்ச நஞ்சம் இல்லை. சத்தியமா சொல்றேங்க இன்னும் எனக்கு இங்கிலிஷ்ல இருக்குற 12 டென்சையும் எப்பிடி யூஸ் பண்றதுன்னு தெரியாது. எனக்கு மட்டும் இல்லை. எனக்கு கத்து குடுத்த வாத்தியார்களுக்கும் தெரியாது. இப்பிடி இருக்கும்போது எப்பிடி இன்டர்வியு போய் எங்க இருந்து வேலை வாங்குறது.

இப்பிடி இந்த  இங்கிலீஷாலயே நல்ல புத்திசாலிங்க கூட சரியான வேலை இல்லாம இருக்காங்க.  ஆனா இங்கிலீஷை மட்டுமே வச்சுக்கிட்டு நிறைய பேர் தங்களை புத்திசாலியா காமிச்சுக்கிட்டு நல்ல வேலைல இருக்காங்க. இந்த இங்கிலீஷ் ஏன் நம்ம பசங்களுக்கு வரவே மாட்டேங்குதுனு மட்டும் தெரியல. கடைசியா ஒன்னு மட்டும் அனுபவத்துல சொல்றேங்க. இங்கிலீஷ் மட்டும் கொஞ்சம் கத்துகிட்டா நம்ம ஆளுங்களை அடிச்சுக்க எவனாலயும் முடியாது. 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...