Wednesday, July 31, 2013

பிரியுமா தமிழகம்?

நீண்ட நெடிய போராட்டத்தின் விளைவாக தெலுங்கானா பிறக்கப் போகிறது. இதை முன்னுதாரணமாக கொண்டு இன்னும் பல மாநில பிரிப்பு கோரிக்கைகள் வலுவடையலாம். தமிழகத்தை பிரிக்க கோரும் கோரிக்கைகள் மீண்டும் ஒலிக்க தொடங்கலாம். அப்படி தமிழகத்தை பிரிப்பது சாத்தியமா? அப்படி தமிழகத்தை பிரித்தால் ஏற்படும் பின் விளைவுகள் என்னென்ன என்று என் சிற்றறிவுக்கு எட்டியவை பற்றி கூற முயல்கிறேன்.

பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன் 'செந்தமிழ் நாடு' என்னும் சிறிய நூல் ஒன்றை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எழுதியவர் பெயர் நினைவில் இல்லை. தமிழகத்தை வடக்கு, தெற்கு என்ற அடிப்படையில் பிரித்து 'செந்தமிழ் நாடு' என்னும் பெயரில் ஒரு புது மாநிலம் உருவாக்குவது பற்றி மிக அழகாக விளக்கியிருப்பார்   ஆசிரியர்.மொழிவாரி மாநிலங்கள் பிரித்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அப்போது இருந்ததை விட மக்கள் தொகை மிகவும் பெருகிவிட்ட நிலையில் நிர்வாக வசதிக்காக மதுரையை தலை நகராக கொண்டு ஒரு புதிய மாநிலத்தை பிரிப்பது  தென் தமிழக மக்களுக்கு மிகவும் நலம் தரும் என்பது அந்த நூலாசிரியரின் வாதமாக இருக்கும்.


அந்த புத்தகத்தை படித்த பின் தமிழகத்தை பிரிப்பது சென்னைக்கும் நல்லது; தென் தமிழ்நாட்டுக்கும் நல்லது என்று எண்ணி கொண்டிருந்தேன்.  பாமகவின் மாநில பிரிப்பு கோரிக்கை பற்றி அறிந்த பின்னரே தமிழகத்தை பிரிப்பதில் இருந்த மிகப்  பெரிய . சிக்கல் எனக்கு உரைத்தது. ஒரு வேளை அந்த நூலில் கூறியபடி தமிழ்நாடு இரண்டாகவோ, அல்லது மூன்றாகவோ பிரிக்கப்பட்டால் ஜாதி அரசியல் முக்கியத்துவம் பெறும். வட பகுதி மாநிலத்தில் வன்னியர்களும், தென் பகுதி மாநிலத்தில் தேவர், நாடார்  சமூகத்தவரும் ஆட்சியை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிப்பார்கள். இன்னும் சொல்ல போனால் ஜாதி கட்சிகள் ஆட்சியை பிடிக்கவும் வாய்ப்பு உள்ளது. இது எந்த வகையிலும் நாட்டுக்கு நல்லதல்ல.

ஜாதி அரசியலை தாண்டி கருத்தில் கொள்ள வேண்டிய இன்னொரு விஷயம் தமிழன் சந்திக்கும் பிரச்சினைகள். இன்றைய சூழலில் பல பிரச்சனைகளுக்காக தமிழகம் மத்திய அரசுடனோ, அண்டை மாநிலங்களுடனோ அடிக்கடி போராட வேண்டியது உள்ளது. ஒரு வேளை தமிழகம் பிரிக்கப்பட்டால் அது தமிழனின் குரலை மேலும் பலவீனமாக்கும்.  தமிழ் பேசும் மாநிலங்களே அரசியல் காரணங்களால் தூண்டப்பட்டு தங்களுக்குள்ளேயே  மோதிக்  கொள்ளவும் வாய்ப்புள்ளது. அத்தகைய நிலை ஏற்பட்டால் அது ஒட்டு மொத்த தமிழர்களையும் பாதிக்கும்.

எது எப்படியோ இன்றைய தேதிக்கு தமிழகத்தை பிரிக்க சொல்பவர்களின் எண்ணிக்கை மிக குறைவு. சில ஜாதி கட்சிகள் மட்டுமே இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளன. குடும்ப பிரச்சனைகளுக்கு தீர்வு காண திமுகவும் இந்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கக்  கூடும். இருப்பினும் சாதாரண மக்களின்  ஆதரவு இந்த கோரிக்கைக்கு கிடைப்பது மிக கடினம்.தெலுங்கானா போல ஒரு சாதாரண குடிமகன் இந்த கோரிக்கைக்காக தெருவில் இறங்கி போராட வாய்ப்பே இல்லை. எனவே மத்திய அரசே பிரித்தாலொழிய தமிழகம் பிரிய சாத்தியம் மிக குறைவு. எனவே இதை பற்றி அதிகம் அலட்டி கொள்ள தேவை இல்லை. ஆனாலும் தென் தமிழகத்தை சேர்ந்தவன் என்ற அடிப்படையில் 'வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது' என்ற எண்ணம் என் மனதில் இருந்து கொண்டே இருப்பது உண்மையே.

Wednesday, July 24, 2013

தனுஷ் - ஒரு சிறிய அலசல் (அல்லது) நான் தனுஷ் ரசிகனான கதை

னுஷை நான் கவனிக்க ஆரம்பித்தது 'காதல் கொண்டேன்' படத்திலிருந்து. ஒல்லி உடல்வாகு, கறுத்த நிறம், ஒட்டிய கன்னம் ஆனால் இவை  அனைத்தையும் மீறி அவர் வெளிப்படுத்திய அபார நடிப்பு என்னை கவர்ந்தது. ஆனாலும் அந்த மெலிந்த உருவத்தோடு, பள்ளிக்கூடபையனாக எத்தனை படங்களில் இவரால் நடிக்க முடியும் என நினைத்து கொண்டேன். மற்ற ஹீரோக்கள் நடிக்கும் கதைகள் இவருக்கு  பொருந்தாது என்பது அப்போது என்னுடைய எண்ணம். என்னுடைய அந்த கணிப்பை தனது அடுத்த படமான 'திருடா திருடி'யிலேயே தகர்த்தார் தனுஷ். 

'திருடா திருடி' படத்தை திரையரங்கில் பார்த்தேன். அந்த படத்தில் அவர் முகத்தை முதல் முறை திரையில் காட்டியபோது ரசிகர்கள் எழுப்பிய ஆரவாரம் என்னை திகைக்க வைத்தது. 2 படங்கள் மட்டுமே நடித்து ஒரு சிறிய நகரத்தில் இதனை ரசிகர்களை சம்பாதித்து விட்டாரே என ஆச்சரியப்பட்டேன். அந்த படத்தில் அவர் ஏற்று நடித்து இருந்த குறும்புக்கார இளைஞர் வேடம் அவரை நோக்கி மேலும் நகர்த்தியது.

அந்த கால கட்டத்தில் 'திருடா திருடி' வெற்றியோடு சேர்த்து வரிசையாக 3 வெற்றி படங்கள் கொடுத்து இருந்தார் தனுஷ். அப்போது சரியான வழிகாட்டுதல் இல்லாமலோ அல்லது வேறு எந்த காரணத்தாலோ வரிசையாக படங்களை ஒப்பு கொண்டார். ஆனால் அத்தனை படங்களுக்கும் நேரம் ஒதுக்க முடியாமல் கால்ஷீட் பிரச்சனையில் சிக்கி  கோர்ட் படி  ஏறினார் இப்படி ஒரு நல்ல காரணம், ஒரு மோசமான காரணம் இரண்டும் சேர்ந்து அவரை மீடியா டார்லிங்காக மாற்றி இருந்தது. அந்த நேரத்தில் அவர் டிவியில் அவர் அளித்த பேட்டிகள் அனைத்தையும் ஒன்று விடாமல் பார்த்தேன். அவர் பேச்சில் இருந்த முதிர்ச்சி என்னை அசர அடித்தது. 


இத்தகைய சூழலில் வெளி வந்த படம்தான் தனுஷ் முதல் முதலாக நடித்த ஆக்சன்(!!) படம் 'சுள்ளான்'. பறந்து பறந்து அடித்தும் பஞ்ச் வசனம் பேசியும் தன்னால் ஆக்சன் படமும் நடிக்க முடியும் என நிரூபித்தார் தனுஷ். படம் அத்தனை மோசமில்லை என்றாலும் தனுஷ் அடித்தால் அவர் கீழே விழாமல் அடி வாங்கியவர் கீழே விழுகிறார் என்பதை தமிழ் ரசிகர்களின் இயற்பியல் அறிவு ஏற்று கொள்ளாமல் போனதால் அந்த படம் தோல்வி அடைந்தது. அதற்கு பின் தனுஷ் அது போன்ற கதையில் இன்று வரை நடிக்கவில்லை. அந்த படம் என்னை பெரிதாக கவர தவறினாலும், அந்த படம் வெளி வந்த சமயம் தனுஷின் வாழ்வில் நடந்த ஒரு முக்கியமான விஷயம் தனுஷ் ரசிகனாக மாறுவதில் இருந்த ஒரு சிறிய மன தடையையும் நீக்கியது. அது தனுசின் திருமணம். தலைவரின் பெண்ணையே திருமணம் செய்து கொண்டு தலைவரின் உறவாக மாறிவிட்டவரை குழப்பமே இல்லாமல் ஏற்று கொள்ளலாம்தானே?

அதற்கு பின் 'திருவிளையாடல் ஆரம்பம்', 'யாரடி நீ மோகினி' போன்ற படங்களில் நடித்து தனக்கு காமெடி நடிப்பும் வரும் என்று நிரூபித்தார். 'அது ஒரு கனா காலம்', 'பொல்லாதவன்' போன்ற படங்களில் நடித்து தன்னை ஒரு க்ளாஸ் நடிகனாகவும் நிரூபித்தார். 'ஆடுகளம்' அவருக்கு தேசிய விருது பெற்று தந்தது. 'ஓய் திஸ் கொல வெறி' மிக பெரிய புகழ்  பெற்று தந்தது. இப்போது 'ராஞ்ச்னா' அவரை இந்தியா முழுவதும் கவனிக்கும் ஒரு நடிகனாக மாற்றியுள்ளது. இந்த வளர்ச்சி நான் எதிர் பாராதது. உண்மையில் தனுஷே எதிர் பார்த்திருக்க மாட்டார்.

வேறு எந்த தமிழ் ஹீரோவும் இத்தனை படம் நடிக்கவில்லையா? புகழ் பெறவில்லையா? தனுஷ் மட்டும் என்ன அதிசயம் என்கிறீர்களா? நிச்சயம் அதிசயம்தான். தனுஷ்  ரசிக்கத்தக்க மாஸ் ஆக்சன் படமோ, வசூலை அள்ளி குவிக்கும் பெரிய வெற்றி படமோ குடுத்து புகழ் அடையவில்லை. இந்தியாவே கொண்டாடும் கமலுக்கு கூட அவ்வப்போது ஆக்சன் படங்கள் தேவைப்பட்டது. ஆனால் தனுஷ்  முழுக்க முழுக்க நடிப்பு திறனை மட்டுமே வைத்து இதனை சாதித்து உள்ளார். ஏதோ ஒரு வகையில் பெரும்பாலான ரசிகர்கள் தன்னையே தனுஷ் திரையில் பிரதிபலிப்பதாக எண்ணி கொண்டனர். இதுவே தனுஷின் வெற்றிக்கு இன்னொரு காரணம். 

கடந்த வாரம் நான் 'மரியான்' பார்க்க சென்றிருந்த போதும் தனுஷை திரையில் காட்டியதும் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். ஆனால் இந்த முறை நான்  ஆச்சரியப்படவில்லை. ஏனென்றால் ஒரு ரசிகனின் உணர்வுகளை மற்றொரு ரசிகன் புரிந்து கொள்ள முடியும்தானே?

பின்குறிப்பு:

'மயக்கம் என்ன', '3', 'மரியான்' இந்த மூன்று படங்களையும் பார்த்த பின் திரை அரங்கை விட்டு மன உளைச்சலுடனே வெளியே வந்தேன். அதற்கு காரணம் தான் திரையில் காட்டிய உணர்வுகளை ரசிகர்களுக்கு கடத்தும் தனுஷின் நடிப்பாற்றலா? அல்லது இயக்குனர்களின் திறமையா என சொல்ல தெரியவில்லை. எப்படியானாலும் தனுஷ் தொடர்ச்சியாக இது போன்ற படங்களில் நடிக்காமல் சற்று இடைவெளி விடுவது நல்லது என தோன்றுகிறது.Thursday, July 18, 2013

மேட்ச் பிக்சிங் செய்வது சுலபமா?

ன்னுடைய பெயர் ஸ்ரீகோந்து. வேக பந்து வீச்சாளர் .நம் நாட்டுக்காக பல கிரிக்கெட் போட்டிகள் ஆடியுள்ளேன். நீங்கள் என்னை நிச்சயம் உங்கள் வீட்டு டிவியில் பார்த்து இருப்பீர்கள். நீங்கள் பார்த்த பொழுது நான் பெரும்பாலும் எதிரணி வீரர்களுடன் சண்டையிட்டு கொண்டு இருந்திருப்பேன். அல்லது யாரிடமாவது அடி வாங்கி அழுது கொண்டிருந்திருப்பேன். இல்லை அபூர்வமாக  பந்து வீசிக்கொண்டும் இருந்திருக்கலாம். இப்போது நான் யாரென்று சற்று  தெரிந்து  விட்டதா?

இப்போது நான் சொல்ல போகும் கதை உங்களுக்கு அதிர்ச்சியை அளிக்கலாம். மனதை திடப் படுத்தி கொள்ளுங்கள் . நான் உங்களுக்கு சொல்ல போவது நான் ஸ்பாட் பிக்சிங் செய்த கதை. "அடப்பாவி! பிக்சிங் செய்து விட்டாயா? உன்னை நாங்கள் எத்தனை நம்பினோம்? என்று கேட்காதீர்கள். அதை நான் ஆண்டவன் சன்னதியிலோ அல்லது சிக்கி கொண்டால் கோர்ட்டிலோ சொல்லி கொள்கிறேன். இப்போது நான் சொல்லும் கதையை மட்டும் கேளுங்கள்.

 நான் சொல்ல போகும் போட்டியை நீங்கள் பார்த்திருக்கலாம். நான் ஆடிய அணிக்கு அந்த போட்டி மிகவும் முக்கியமான போட்டி. எங்களை எதிர்த்து ஆடிய அணிக்கோ அது இன்னும் முக்கியமான போட்டி. எனக்கோ அந்த போட்டி மிக மிக முக்கியமான மறக்கமுடியாத போட்டி. ஏனென்றால் நான் முதல் முதலில் பிக்சிங் செய்த போட்டி அதுதான். அந்த போட்டியில் என்னுடைய புக்கி எனக்கு அளித்த பணி மிக சுலபம். பத்தாவது ஓவருக்கு பின் நான் வீசும் முதல் ஓவரில் 15 ரன்கள் தர வேண்டும். சாதாரணமாகவே என்னுடைய ஓவரில் 12 ரன்கள் அடிக்கலாம். எனவே மூன்று ரன்களை அதிகமாக விட்டு தருவது எனக்கு பெரிய வேலையே இல்லை.

 
அந்த போட்டி தொடங்கியது. எங்கள் அணி முதலில் பந்து வீசியது. நான் என்னுடைய வாய்ப்பிற்காக காத்து இருக்க தொடங்கினேன். நான் எதிர்பார்த்த அந்த தருணம் வந்தது. ஆட்டத்தின் 14வது ஓவரை கேப்டன் டேவிட் எனக்கு கொடுத்தார். அப்போது எதிரணியின் ஸ்கோர் 103 ரன்களுக்கு 3 விக்கெட். அந்த ஓவரில் நான் 15 ரன்கள் கொடுத்தால் போதும்  பெருந்தொகையை சில நிமிடங்களில் அடைந்து விடலாம். கூடவே இலவச இணைப்பாக அழகழகான பெண்கள். தெய்வத்தை வேண்டி கொண்டு முதல் பந்தை வீசுவதற்கு தயாரானேன். எச்சிலை என்னுடைய இரண்டு பக்கமும் காறி துப்பி புக்கிக்கு சிக்னல் கொடுத்தேன்.

முதல் பந்து - எனக்கு என்ன ஆனது என்று  எனக்கே தெரியவில்லை. என்னுடைய வாழ்நாளில் நான் அந்த மாதிரி ஒரு நல்ல பந்தை வீசியதே இல்லை. என்னையும் அறியாமல் புயலாக வெளியேறிய அந்த பந்து ஸ்டம்புகளை தகர்த்தது. அதிர்ந்து போய் நின்றேன். கேப்டன் டேவிட் துள்ளி குதித்து கொண்டு என்னை நெருங்கினார். சமாளித்து கொண்டு முகத்தை சந்தோசமாக வைத்து கொண்டேன். என்னுடைய அற்புத நடிப்பில் ஏமாந்தார் டேவிட். "ஸ்ரீகோந்து! நீ நடிகன்டா!" என மனதுக்குள் நினைத்து கொண்டேன்.

இரண்டாம் பந்து: இந்த பந்தில் 4 அல்லது ஆறு போனால்தான் என் மேல் உள்ள அழுத்தம் சற்று குறையும். ஆடுவதோ புதிதாக உள்ளே வந்த பேட்ஸ்மேன். படபடப்போடு பந்தை பேட்ஸ்மேனின் உடலுக்கு வீசினேன். தட்டி விட்டு அவன் ஒரு ரன் எடுத்தான்.

மூன்றாம் பந்து: இப்போது எனக்கு சற்று நிம்மதியானது. ஏனென்றால் இப்போது என் பந்தை எதிர்கொள்ள போவது டிராவோ. நிச்சயம் இவன் நான்கு பந்துகளில் 14 ரன்கள் அடித்து விடுவான். நான் எப்போதும் போல பந்து வீசினாலே போதும்என நினைத்து கொண்டு நான் வீசியது புல் டாஸ். எளிதாக அதை நான்கு ஆக்கினான் டிராவோ

நான்காம் பந்து: திட்டமிட்டபடி துல்லியமாக புல் டாஸ் வீசினேன். அதை சிச்சருக்கு விரட்டினான் டிராவோ.

ஐந்தாம் பந்து: பந்தை ஆப் ஸ்டம்புக்கு வெளியே செல்லுமாறு வீசினேன். நிச்சயம் அந்த பந்து நான்கு ரன்களுக்கு விரட்டகூடிய பந்து. ஆனால் பாவி பயல் டிராவோ அந்த பந்தை மட்டை வைத்து விட்டான்.

ஆறாம் பந்து: இன்னும் நான் குடுக்க வேண்டியது நான்கு ரன்கள். இருப்பதோ ஒரே பந்து. சிக்னல் குடுத்த பின் சொதப்பினால் புக்கி கொன்று விடுவான். இப்போது நோ பால் வீசுவதை தவிர வேறு வழி இல்லை. அதி வேகத்தில் ஓடி வந்து ஒரு நோ பாலையும் வீசி விட்டேன். டிராவோ அதை தூக்கி அடிக்க அது பௌண்டரி லைனில் கேட்ச் ஆனது. அதற்குள் இரண்டு ரன்கள் ஓடி விட்டான் டிராவோ.

மீண்டும்  ஆறாம் பந்து: எடுக்க வேண்டியது ஒரே ரன். இந்த பந்தில் விக்கெட் வீழ்த்த முடியாது. என்னுடைய திட்டம் நிறைவேற போகிற மகிழ்ச்சியோடு பந்தை வீசினேன். அந்த பந்தை நேராக பீல்டரிடம் அடித்த டிராவோ ரன் எடுக்க தலை தெறிக்க ஓட ஆரம்பித்தான். எனக்கு ஒரு ரன் எடுக்க போகிறான் என்ற சந்தோசம் ஒரு பக்கம் . ரன் அவுட் ஆகிவிடுவானோ என்ற பயம் ஒரு பக்கம்.  பதட்டமான அந்த நொடியில் நான் பயந்தபடி ரன் அவுட் ஆகிவிட்டான் டிராவோ.

ந்த ஆட்டம் முடிந்த பின் புக்கி என்னை கழுவி கழுவி ஊற்றினான். தனக்கு பாம்பே தாதாக்களுடன் தொடர்பு உண்டு என்று கூறி மிரட்டல் வேறு. நான் எதிர்பாராமல் அந்த சம்பவம் நடந்து விட்டது என்று அவனுக்கு புரிய வைக்க மிகவும் கஷ்டப்பட்டேன். கடைசியில் அவனுடைய நஷ்டத்தை சரிகட்ட அடுத்த இரண்டு போட்டிகளில் இலவசமாக பிக்சிங் செய்து தருகிறேன் என்றதும் சமாதானம் அடைந்தான்.

இது நடந்து 5 நாட்களுக்கு பின் பேப்பரில் வந்த செய்தி. " பிரபல வீரர் டிராவோ ஸ்பாட் பிக்சிங் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். கடந்த வாரம் நடந்த போட்டியில் இவர்  15வது ஓவருக்குள் ஆட்டமிழக்க புக்கிகளுடன் இவர் ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும் அதனாலேயே ஸ்ரீகோந்து வீசிய ஓவரின் கடைசி பந்தில் வேண்டுமென்றே ஓடி ரன் அவுட் ஆனதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. "

பாருங்கள். பிக்சிங் செய்வது கூட சுலபமாக இல்லை இந்த காலத்தில். 

Monday, July 15, 2013

ஏலியன் கிரகம்

சுத்தமாக தூக்கம் வரவில்லை. .மொட்டை மாடிக்கு போகலாம் என்று எழுந்து நடந்தேன். மன நிம்மதி இழக்கும்போதெல்லாம் நான் செல்லும் இடம்  மொட்டை மாடி.என் கஷ்டங்களின் பொழுது எனக்கு துணை இருப்பது மொட்டை மாடியும் அங்கே சென்று நான் கேட்கும் இளையராஜா பாடல்களும்தான்.

மொட்டை மாடிக்கு சென்றவுடன் மனம் முழுக்க வேதனையுடன் வானத்தை பார்க்க தொடங்கினேன். மின்னி கொண்டிருந்த நட்சத்திரங்கள் எனக்கு ஆறுதல் சொல்லுவது போல் இருந்தது. என் கண்ணில் இருந்து நீர் வடிய தொடங்கியது. காதலும் போய் விட்டது, மூன்று ஆண்டுகள் தேடி கண்டு பிடித்த வேலையையும் நாளையோடு இழக்க போகிறேன். நண்பர்கள் போல உடன் இருந்தவர்களே மோசம் செய்து விட்டனர். இனி எனக்கு இந்த உலகத்தில் என்ன இருக்கிறது என எண்ணி கொண்டேன். உலகத்தை விட்டே போய் விடு என்று மனம் கூற தொடங்கியது.

அப்போதுதான் நம்ப முடியாத அந்த அதிசயம் நடந்தது. வானத்தில் இருந்து ஒரு ஒளி கீழே இறங்குவது போல் தோன்றியது. எரி நட்சத்திரமா? கண்களை தேய்த்து விட்டு கொண்டேன். இல்லை, அது எரி நட்சத்திரம் போல் தெரியவில்லை. அதற்கு மேல் நான் யோசிக்க முடியாதபடி அது என் முன்னால் வந்து நின்றது. என்னால் நம்பவே முடியவில்லை. நான் கனவு காண்கிறேனா? இல்லை கனவு போல் இல்லை. மிக பெரிய குண்டான் போன்ற வடிவத்தில் ஒளி சிந்தி நின்று கொண்டிருந்த அந்த பொருள் பறக்கும் தட்டுதான். என் மயிர்கால்கள் நட்டு கொண்டன. பயமும் ஆச்சரியமும் ஒரு சேர திகைத்து நின்றிருந்தேன். உள்ளே இருந்து ஒரு உருவம் இறங்கியது.


நான் நன்கு கவனித்து பார்க்க தொடங்கினேன். உள்ளே இருந்து இறங்கிய அந்த உருவம் கிட்ட தட்ட மனிதன் போலவே இருந்தது. ஆனால் கைகளில் இரண்டு விரல்கள் மட்டுமே இருந்தன. தலை சதுரமாக இருந்தது. ஒருவேளை என்னை தாக்க போகின்றானோ? என் மூளை உஷாரானது. பாய்ந்து சென்று அருகில் இருந்த இரும்பு தடியை எடுத்தேன்.

"பயம் வேண்டாம் நண்பா!" இறங்கியவன் என்னிடம் பேச தொடங்கினான். சற்று தைரியத்தை வரவழைத்து கொண்டேன்.

"யார் நீ?" என கேட்டேன்.

"நானும் உன்னை போல் இந்த பேரண்டத்தின் ஒரு குழந்தைதான். என்னுடைய கிரகம் மட்டுமே வேறு"

"இங்கே ஏன் வந்தாய்?"

"ஏன்? நான் இங்கே வர கூடாதா? இந்த அண்டம் எல்லாருக்கும் பொதுவானது அல்லவா"

"அது சரி! எப்படி தமிழ் பேசுகிறாய்?"

"அதை நான் பின்னால் கூறுகிறேன். நான் மேலே செல்லும்போது உன் கண்களில் இருந்து நீர் வடிவதை என் பறக்கும் தட்டில் இருந்த கேமரா காட்டி கொடுத்தது. அதனாலேயே இங்கே வந்தேன்"

மிக சக்தி வாய்ந்த கேமராவை அது பயன்படுத்துவது எனக்கு புரிந்தது. "நான் அழுதால் உனக்கென்ன?" எரிச்சலுடன் கேட்டேன்.

"என்ன அப்படி கேட்டு விட்டாய். மற்றவர் துன்பப்படுவது பார்த்து சும்மா இருக்கலாமா? சொல் என்ன பிரச்சினை "

"இந்த உலகமே எனக்கு பிரச்சினைதான். எங்கே பார்த்தாலும், பொய்யும் நம் பிக்கை துரோகமும். எனக்கு எதுவுமே பிடிக்கவில்லை" , மனதில் உள்ளதை கொட்ட ஆள் கிடைத்த சந்தோசத்தில் பேச தொடங்கினேன்.

"பொய், நம்பிக்கை துரோகம் என்றால்?"

"பொய்  என்றால் என்ன என்று கூடவா உனக்கு தெரியாது. உனக்கு புரியும்படி சொல்கிறேன் கேள். இங்கே நான் உன்னை பார்த்து விட்டேன். வெளியே சென்று உன்னை நான் பார்க்கவில்லை என்று சொன்னால் அது பொய். ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்லி உன்னை நம்ப வைத்து கடைசியில் உன்னை ஏமாற்றினால் அது நம்பிக்கை துரோகம். புரிகிறதா?"

அது சற்று யோசிப்பது போல் தெரிந்தது. "கொஞ்சம் புரிகிறது. நம்பிக்கை துரோகம் யார் செய்வார்கள்?"

"இங்கே எல்லாரும். அரசியல் தலைவர்களில்  ஆரம்பித்து சாதாரண மக்கள் வரை எல்லாரும்"

"உன்னை அப்படி யாரும் நம்பிக்கை துரோகம் செய்து விட்டார்களா? அதற்குதான் அழுதாயா?"

"இது மட்டும் இல்லை. இன்னும் நிறைய உண்டு. பணம் என்றால் உனக்கு தெரியும்தானே."

"இல்லை தெரியாது."

"சொல்கிறேன் கேள். இங்கே எல்லாமே பணம்தான். பொய்கள், துரோகங்கள் எல்லாமே இந்த பணத்தாசையால் மட்டுமே நடக்கின்றன. பணம் இல்லாமல் உன்னால் இங்கே வாழ முடியாது. பணம் இல்லாமல் போனால் உன்னை ஒரு தெரு நாய் கூட மதிக்காது, அந்த பணம் என்னிடம் இல்லை. நாளை இருக்கும் வேலையும் போய் விட்டால் என் நிலைமை திண்டாட்டம்தான்."

"பணம் இல்லை என்றுதான் அழுதாயா?"

'இல்லை. என் கண்ணீருக்கு காரணம் என் காதலி ப்ரியா. உயிருக்குயிராக நேசித்தோம். கடைசியில் ஜாதியை காரணம் காட்டி எங்களை பிரித்து விட்டனர். அவளுக்கு கடந்த வாரம் திருமணம் முடிந்து விட்டது."

"ஜாதியா?"

"ஜாதி என்றால் வேறு பிரிவு வைத்து கொள்ளேன்"

"அவள் வேறு மொழி பேசுகிறவளா?"

"இல்லை அவளும் தமிழ்தான்"

"ஒரே மொழி, ஒரே இனம் பின்னே எப்படி நீங்கள் வேறு வேறு ஜாதி ஆவீர்கள்?"

"அதுதான் இந்த உலக நடைமுறை. அதற்கு மேல் எனக்கு தெரியாது"

"நீ அவளை அழைத்து கொண்டு வேறு எங்காவது சென்று வாழ வேண்டியதுதானே"

"அப்படி செய்தால் தேடி வந்து இருவரையும் கொல்வார்கள். அவளாவது வாழட்டுமே." மீண்டும் கண்களில் நீர் வழிந்தது.

"இதுதான் உன் பிரச்சனையா?"

"இல்லை, இன்னும் நிறைய. ஜாதி, மதம் என்று சொல்லி தனது இனத்தை தாமே கொலை செய்வார்கள். திருடுவார்கள். ஏமாற்றுவார்கள். எல்லாரும் சுயநலக்காரர்கள் . மொத்தத்தில் இந்த உலகமே அசிங்கம்." நிதானம் இழந்து என்னுடைய நரம்புகள் புடைக்க கத்தினேன்.

அது  சற்று நேரம் அமைதியாக இருந்தது. பின் பேசியது. "நண்பா! நீ என்னுடன் வந்து விடு. நீ சொல்லும் எதுவுமே எங்கள் கிரகத்தில் இல்லை. நீ சொல்லும் பொய், பணம், ஜாதி, மதம், கொலை போன்ற எதுவுமே எங்கள் கிரகத்தில் கிடையாது.  நீ அங்கே வந்தால் அரசாங்கமே உனக்கு குடி உரிமை அளித்து விடும்.உனக்கு வேலையும் அளிக்கும். அங்கேயே உனக்கு பிடித்த பெண்ணை தேடி நீ திருமணம் செய்து கொள்ளலாம்."

"உங்கள் கிரகம் என்ன கம்யூனிஸ்ட் கிரகமா?"

"கம்யூனிஸ்ட் என்றால்?"

"உனக்கு புரியாது விடு."

"சரி. நீ என்னோடு வருகிறாய்தானே? உன்னை இப்படியே விட்டு செல்ல என் மனம் கேட்கவில்லை. இந்த உலகத்தில் இருக்கவே பிடிக்கவில்லை என நீ சொன்னது மிகவும் நியாயம். என்னுடன் வா"

நான் யோசிக்க ஆரம்பித்தேன். இது மிகவும் அப்பாவியாக இருக்கிறது. இதன் கிரகம் மிகவும் நாகரீகம் அடைந்த கிரகமாக இருக்க வேண்டும். அங்கே நிச்சயம் சந்தோசமாக வாழலாம். அங்கே சென்று விடலாமா? இல்லை வேண்டாம். இது பேசுவதை பார்த்தால் அந்த கிரக மக்கள் உணர்ச்சி இல்லாமல் பொம்மைகள் போல் இருக்க வேண்டும். அங்கே சென்றால் எப்படி இருக்குமோ? என்ன வேலை தருவார்களோ? அங்கே செல்ல வேண்டாம்.  என் எண்ணங்கள் பலவாறு ஓட தொடங்கின.

"கிளம்பு நேரம் குறைவாக உள்ளது" என்றது.

"கொஞ்சம் பொறு. இப்போது என்னுடைய மிக பெரிய பிரச்சனை பணம். அது மட்டும் இருந்தால் நான் இங்கேயே வாழ்ந்து விடுவேன். உங்கள் சதுர தலையர்களின் கிரகம் எனக்கு தேவையே இல்லை . இப்போது அந்த பணமும், புகழும் சம்பாதிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்து விட்டது. இனி எனக்கு இங்கே எந்த பிரச்சனையும் இருக்க போவதில்லை "

"எப்படி?"

"எங்கள் பூமியில் வேற்று கிரக உயிரினத்தை பார்த்ததாக சொன்னாலே மிக பெரிய ஆள் ஆகி விடலாம். வேற்று கிரக உயிரினத்தோடு பறக்கும் தட்டையும் அவர்கள் முன் காட்டினால் ஒரே நாளில் நான் ஹீரோதான். பணமும், புகழும் தேடி வரும். நல்ல பெண்ணாக பார்த்து திருமணம் முடித்து கொள்ளலாம்."

"நீ என்ன சொல்கிறாய்?"

 "புரியவில்லையா? சற்று முன்பு சொன்னேனே இங்கே  மனிதர்கள் நம்பிக்கை துரோகிகள், சுயநலக்காரர்கள், வஞ்சகர்கள் என்று. அதை இப்போது புரிய வைக்கிறேன் பார்" என்று கூறியவாறே அதன் தலையில் கையில் இருந்த தடியால் விளாச தொடங்கினேன்.

விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன

Friday, July 12, 2013

ஐடி நிறுவனங்களில் தொழிற்சங்கங்கள்

டி துறை. நமது தேசத்தின், ஏன் உலகத்திலேயே மிக இளமையான துறை இதுவாகத்தான்  இருக்கும். நமது தேசத்தில் நடந்த தொழில் நுட்ப புரட்சி காரணமாக பல்கி பெருகிய ஐடி நிறுவனங்கள் இன்று நமது தேசத்தில் பலருக்கு வேலை அளிப்பதோடு நம் நாட்டின் மீதான உலகத்தின் பார்வையையும் மாற்றி வருகின்றன. 

அதிக ஊதியம் கிடைக்கும் தொழிலாக இருந்தாலும் இந்த துறையில் உள்ளவர்கள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாவதாகவும் பல விதமான உடலியல் பிரச்சினைகளை எதிர் கொள்வதாகவும் எதிர்மறை கருத்துகளும் இருந்து கொண்டுதான் உள்ளன, இருப்பினும் மற்ற துறை  நிறுவனங்களில் உள்ளது போல இங்கே ஏன் தொழிற்சங்கங்கள் தோன்றவில்லை.தங்கள் உரிமையை அடைய ஐடி நிறுவன ஊழியர்கள் இணையாததன் காரணம் என்ன?  இதோ எனக்கு தெரிந்த சில காரணங்கள்

அதிக ஊதியம்:

ஐடி தொழிலில் தொழிற்சங்கங்கள் இல்லாததன் முக்கிய காரணம் இங்கே கிடைக்கும் அதீத ஊதியம். இந்த துறையில் வேலை பார்க்கும் பலரும் சாதாரண  குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். ஐடி நிறுவனங்களில் கிடைக்கும் வசதிகளும், ஊதியமும்  அவர்களை முதலாளிகளுக்கு எதிராக  சிந்திக்க விடாமல் செய்து விடுகிறது. என்ன நடந்தால் என்ன? தமக்கு ஊதியம் வரும் வரை பிரச்சினை இல்லை என்ற மன நிலையை அடைய வைத்து விடுகிறது அவர்களின் ஊதியம். 

பொதுவாகவே அதிக வேலை செய்யாமல் தவிர்க்க வேண்டும் என நினைப்பதே மனித இயல்பு. ஆனால் ஒரு நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்த ஐடி துறை ஊழியனிடம் நீங்கள் பேசினால் அவனின் மன நிலை எப்படி அதிக வேலை செய்து நல்ல பெயர் வாங்குவது என்றே சிந்திப்பதை நீங்கள் உணரலாம். காரணம் அங்கே கிடைக்கும் கவர்ச்சியான ஊதியம் அவர்களை ஆசிரியரிடம் நல்ல பெயர் வாங்க துடிக்கும் ஒரு மாணவன் போல் மாற்றிவிடுகிறது. அப்புறம் எங்க இருந்து தொழிற்சங்கம்.

 பிரித்து வைக்கும் நிர்வாகம்:

மற்ற நிறுவனங்களில் எப்படியோ, ஐடி நிறுவனத்தில் உண்மையான நண்பர்கள் கிடைப்பது மிக கடினம். வெளியே சிரித்து, சிரித்து பேசினாலும் உள்ளுக்குள் ஒவ்வொருவர் மனதிலும் இருப்பது  பொறாமை  மனப்பான்மையே. மற்ற நிறுவனங்களில் ஒரே அளவு அனுபவம் கொண்ட இருவரின் ஊதியம் கிட்டத்தட்ட சமமாகவே இருக்கும். ஆனால் ஐடி துறையிலோ நிலைமை தலைகீழ். 


 ஆறு மாதத்திற்கு ஒரு முறை அப்ரைசல் என்று ஒன்று நடக்கும். இந்த அப்ரைசலுக்கு பின்  ஊழியர்களை ஒன்று, இரண்டு. மூன்று என்று எண்கள் கொடுத்து பிரித்து வைப்பார்கள். இதற்கு ரேட்டிங்  என்று பெயர் . திறமை அடிப்படையிலேயே இத்தகைய ரேட்டிங் வழங்கப்படுவதாக கூறுவார்கள். இந்த ரேட்டிங் அடிப்படையிலேயே உங்களுக்கு வழங்கப்படும் பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வும், வெளிநாட்டு வாய்ப்பும் இருக்கும்.இதில் என்ன பிரச்சினை என்று கேட்கிறீர்களா? இருக்கிறது. 

நீங்களும் உங்கள் நண்பர்களும் ஒரே மாதிரியான கல்வித்தகுதியும், அனுபவமும் கொண்டவர்கள் என்று வைத்து கொள்வோம். கிட்டத்தட்ட உங்கள் இருவரின்  பணித்திறனில் பெரிய வேறுபாடு ஏதும் இருக்காது. எனவே நீங்கள் உங்கள் நண்பரை விட நல்ல ரேட்டிங் பெற வேண்டுமானால் நீங்கள் உங்களை பற்றி மட்டும் சிந்தித்தால் போதாது. உங்கள் நண்பரை பற்றியும் யோசிக்க வேண்டும். அவர் செய்யும் சிறிய தவறுகளையும் நிர்வாகத்துக்கு தெரியப்படுத்தி அவரை விட நீங்கள் சிறந்தவர் என்று நிறுவ வேண்டும். இதே வேலையை உங்கள் நண்பரும் செய்து கொண்டிருப்பார். ஆக உங்களுக்குள் போட்டி மனப்பான்மையை வளர்ப்பதாக கூறி பொறாமையை வளர்த்து விட்டிருப்பார்கள். உங்களுக்கும், உங்கள் நண்பருக்கும் இருக்கும் பரஸ்பர நம்பிக்கை குறையும்.
 
ஒட்டு மொத்த நிறுவனமும் இப்படி அடுத்தவர் மேல் நம்பிக்கை இல்லாமல் இயங்கினால் எப்படி தொழிற்சங்கம் உதயமாகும்? அடுத்தவன் வேலை இழந்தால் 'தொலஞ்சாண்டா' என்ற மன நிலைதானே இருக்கும்.

ஐடி வியாபாரத்தின் அடிப்படையும் தொழிற்சங்கத்தின் தேவையும் :

தொடங்கி 20 ஆண்டுகளே ஆன ஒரு மென் பொருள் நிறுவனம், நிறுவப்பட்டு 50 ஆண்டுகள் ஆன ஒரு ஸ்டீல்  நிறுவனத்தை விட அதிக லாபம் அடைகிறது என்றால் அதற்கு காரணம் என்ன? இதற்கான விடை மிக சுலபம். ஐடி நிறுவனங்களின் மிக முக்கிய மூலதனம் அதன் ஊழியர்களின் புத்தி கூர்மை. அந்த புத்திசாலித்தனத்தை வைத்து பணம் சம்பாதிக்கும் நிறுவனங்கள் அதற்காக தங்கள் ஊழியர்களுக்கு தரும் ஊதியம் மிக குறைவு. இப்படி குறைந்த செலவில் அதிக லாபம் பெற்று  தரும் ஊழியர்களே ஐடி நிறுவனங்களின் கொழுத்த லாபத்திற்கு காரணம். 

இத்தனை லாபம் பெற்று தரும் ஊழியர்களுக்கு நிறுவனங்கள் தரும் மரியாதை என்ன? எந்த தொழிலாளர் சட்டத்திற்குள்ளும் இவர்கள் வர மாட்டார்கள். ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் தரப்படும் வேலைகள் இவர்களுக்கு  மன அழுத்தம் ஏற்படுத்தும். எல்லாவற்றையும் விட முக்கியம் பொருளாதார மந்த நிலையின்போது உடனே தூக்கி எரியப்பட்டு விடுவார்கள். இதை யாரும் கேள்வி கேட்க முடியாது. தங்கள் லாபத்தை இந்த நிறுவனங்கள் சற்று குறைத்து கொண்டால் யாரையும் வெளியேற சொல்லாமலேயே எத்தகைய பொருளாதார மந்த நிலையையும் சமாளிக்கலாம். ஆனால் அதற்கு தயாராக இல்லை ஐடி நிறுவனங்கள். 

யாரும் வியாபாரத்தை நஷ்டம் அடைய வேண்டும் என்று செய்ய மாட்டார்கள். தொழிலாளர்களின் அத்தனை கோரிக்கைகளையும் நிறைவேற்றுவது சாத்தியம் இல்லாதது. அதே நேரத்தில் தேவைப்படும்பொது பயன்படுத்தி கொண்டு தேவை இல்லை என்று நினைத்தால் தூக்கி எறிவதும், கசக்கி பிழிந்து வேலை வாங்குவதும் மனிதனை இயந்திரத்துக்கு சமமாக நினைப்பது போன்றது. ஐடி துறை ஊழியர்கள் தங்கள் உரிமையை காத்து கொள்ள அவசியம் தொழிற்சங்கங்கள் வேண்டும்.

சமீபத்தில் கர்நாடக தேர்தலின்போது கட்சிகள் ஐடி ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு சட்டங்கள் இயற்ற போவதாக வாக்குறுதி அளித்தனர்.  ஆனால் ஐடி ஊழியர்களின் மனநிலை மாறாமல் எந்த சட்டமும் அவர்களுக்கு உதவ போவது இல்லை.  தங்களால் நிறுவனம் அடையும் லாபத்திற்கு முன் அவர்கள் தமக்கு அளிக்கும் ஊதியம் அதிகமில்லை என்று உணர வேண்டும். பின்னர் சக ஊழியர்களை போட்டியாக மட்டுமே  நினைக்கும் மன நிலை மாற வேண்டும். ஆனால் இவை இரண்டுமே இப்போதைக்கு  சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது. 

Sunday, July 7, 2013

அடுத்த சூப்பர் ஸ்டார் யார்?

அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக விடை தெரியாத கேள்வி இது. 'சாமி' பட விழாவில் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் பட்டம் என்பது தனக்கு மட்டுமே நிரந்தரமானது இல்லை என்றதும் அனைத்து இளம் நடிகர்களுக்கு சூப்பர் ஸ்டார் கனவு காண தொடங்கினர். அந்த நடிகர்களின் ரசிகர்களும் தங்கள் தலைவர்களை சூப்பர் ஸ்டார் நாற்காலியில் அமர வைத்து அழகு பார்க்கும் நோக்கத்தில் தீவிரமாக களம் இறங்கினர்.10 ஆண்டுகளுக்கு பின் அவர்களின் கனவு எந்த அளவு நிறைவேறியுள்ளது என பார்க்கலாம்.

முதலில் யாரை சூப்பர் ஸ்டார் எனலாம்?  அதை இப்படி வரையறுத்து கொள்வோம்.  இப்படி எடுத்து அனைத்து தரப்பு மக்களையும் வயது வித்தியாசமின்றி கவர வேண்டும். இவர் படங்கள் வரும்போது தமிழ்நாட்டில்   75% மக்கள் ஒரு முறையாவது படத்தை பார்க்க என்ன வேண்டும். தயாரிப்பாளர் முதல் தியேட்டரில் முறுக்கு விற்பவர் வரை இவர் படம் அனைவருக்கும் லாபத்தையும் மகிழ்ச்சியையும் கொடுப்பதாக இருக்க வேண்டும்.இதுவே நாம் எடுத்து கொள்ள போகும் சூப்பர் ஸ்டாருக்கான எளிய வரைமுறை.

 'சூப்பர் ஸ்டார் நாற்காலி எனக்கு வேண்டும்' என்று முதல்முதலில் முழங்கியவர் அஜித். தான் நடிக்க போகும் 'ஆஞ்சநேயா' படம் சூப்பர் ஸ்டார் பட்டத்தை நோக்கி தான் வைக்கும் முதல் அடி என்று பேட்டி கொடுத்தார். ஆனால் அந்த படமோ படு தோல்வி. தொடர்ந்து நடித்த படங்களும் சரியாக போகவில்லை. மிக பெரிய ஓபனிங்,உயிரை கொடுக்கும் ரசிகர்கள் இருந்தும் கதை தேர்வில் தவற விட்டதாலும், பெண்களையும் குழந்தைகளையும் அதிகம் கவர முடியாமல் போனதாலும் 'சூப்பர் ஸ்டார்' என்ற இடத்தை இன்னும் நெருங்க முடியவில்லை. கால போக்கில் 'அல்டிமேட் ஸ்டார்' என்ற பட்டமே தனக்கு வேண்டாம் என்று கூறி விட்டார் அஜித். 

விஜய்- முதலில் சூப்பர் ஸ்டாராக ஆசைபட்டவர் இப்போது புரட்சி தலைவராக முயற்சி எடுக்கிறார். ஆனால் இன்னும் தான் ஆசைப்பட்டதை அடைய முடியவில்லை. ஆரம்பத்தில் இவர் சூப்பர் ஸ்டார் கனவுடன் நடித்த சில படங்கள் ஹிட். ஆனால் பின்னர் வந்த படங்கள் படு தோல்வி.இவரின் அதிரடி ஆக்சன் படங்களை காமெடி படங்களாக மாற்றி   SMS, Facebook என வாய்ப்பு கிடைத்த இடங்களில் எல்லாம்  ஊரே கேலி செய்து கை கொட்டி சிரிக்க தொடங்கியதும் தற்போது பாதையை சிறிது மாற்றி விட்டார். குழந்தைகள் விரும்பும் நடிகராக இருப்பதும், 'C' சென்டர் ரசிகர்களை அதிகம் கொண்டிருப்பதும் இவரின் பலம். ஆனால் இவரின் முந்தைய படங்களால் படித்தவர்களிடமும், மேல் தட்டு மக்களிடமும் இவரை பற்றி நல்ல விதமான அபிப்பிராயம் ஏதும் இல்லை. அந்த எண்ணத்தை மாற்றுவதே இப்போது  இவருக்குள்ள சவால். ஆழம் தெரியாமல் அரசியலில் வேறு காலை விட்டு விட்டார். அதனால் ஏற்படும் பிரச்சனைகளையும் சமாளிக்க வேண்டும். ஆக இவர் சூப்பர் ஸ்டார் பட்டத்தை அடைய இன்னும் சில ஆண்டுகளாவது வேண்டும்.

 விக்ரமை பற்றி இங்கு கூறாமல் இருக்க முடியாது. ரஜினி 'சாமி' விழாவில் பேசியபோது 'தூள்', 'சாமி' என அடுத்தடுத்த ஹிட்டுகள் கொடுத்து உச்சத்தில் இருந்தார். ஆனால் பின் இவர் நடித்த படங்கள் பெரிய பலன் ஏதும் தராமல் இவரின் உழைப்பையும், காலத்தையும் அதிகம் சாப்பிட்டு விட்டன. இப்போது வயது அதிகம் ஆகி விட்டதால் இவர் 'சூப்பர் ஸ்டார்' ஆவது இனி கிட்டத்தட்ட சாத்தியம்  இல்லை. அந்த இடத்தின் மேலும் இவர் ஆர்வம் காட்டுவது போல் தெரியவில்லை.

ஆரம்பத்தில் விஜய், விக்ரம், அஜித்திடம் மட்டுமே போட்டி இருந்தது. பின்னர் அதிரடியாக களத்தில் குதித்தவர் சூர்யா.  வெற்றி படங்கள் , பெண்கள், குழந்தைகளிடம் நல்ல பெயர் என்று மெதுவாக முன்னேறி கொண்டுள்ளார். இருப்பினும் மற்ற நடிகர்களிடம் ஒப்பிடும்போது தீவிர ரசிகர்கள் இவருக்கு குறைவே. அத்தகைய தீவிர ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் சில ஆண்டுகளில் இவர் சூப்பர் ஸ்டார் பட்டத்தை அடையலாம்.

மேலே கூறிய நடிகர்கள் அனைவரும் நடிக்க வந்து ஏறத்தாழ  20 ஆண்டுகள் ஆகி விட்டது. இன்னும் 'சூப்பர் ஸ்டார்' பட்டத்தை நெருங்க முடியவில்லை. ஆனால் ரஜினியோ அவர் நடிக்க வந்த 20 ஆண்டுகளுக்கு பின் அசைக்க முடியாத சூப்பர் ஸ்டார். முதல்வர் பதவியையே அவருக்கு  கொடுக்க தயாராக இருந்தனர் மக்கள். ஆனால் அடுத்த தலை முறை நடிகர்கள் இன்னும் அந்த உயரத்தில் பாதி கூட அடையவில்லை. இப்போது அதர்வா, விக்ரம் பிரபு என மூன்றாம் தலை முறை நடிகர்களும் நடிக்க வந்து விட்டனர்.

ஆரம்பத்தில் இருந்தே சூப்பர் சூப்பர் ஸ்டார் ஆக முயன்று வரும் விஜயும், அஜித்தும் எங்கே தவற விட்டனர்? கால மாற்றம், ரஜினிக்கு இருந்த வசீகரம் என அனைத்தையும் விட்டு விடலாம்.  இவற்றை மீறி அவர்கள் செய்த தவறு ரஜினி போல் பறந்து பறந்து அடித்து பஞ்ச் வசனம் பேசினால் சூப்பர் ஸ்டார் ஆகி விடலாம் என கணித்தது. இவற்றை செய்தால் மக்கள் சூப்பர் ஸ்டார் ஆக்கி விடுவார்கள் எனில் விஜயகாந்த் தானே பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்திருக்க வேண்டும்? ரஜினி போல் அனைவருக்கும் ஏற்ற கதைகளில் நடிக்காமல் அதிரடி நாயகர்களாவே நடித்தால் சூப்பர் ஸ்டார் ஆகி விடலாம் என்று எண்ணியதே அவர்கள் செய்த தவறு. எது எப்படியோ இன்னும் சில ஆண்டுகள் பொறுத்து பார்க்கலாம். யார்தான் சூப்பர் ஸ்டார் ஆகிறார்கள் என்று.

Saturday, July 6, 2013

சிங்கம் II - itz சிங்கம் டான்ஸ்

கதை முன்னுரை :

 உங்களில் சிலருக்கு 'சிங்கம்' முதல் பாகத்தின் இறுதி காட்சி நினைவில் இருக்கலாம். அதில் காட்டியபடி வேலையை விடுவது போல நாடகமாடி தூத்துக்குடியில் நடக்கும் ஆயுத கடத்தலை கண்டுபிடிக்க களம் இறங்குகிறார் சூர்யா. ஆனால் தன் பழைய வாழ்வை மறந்து வாழும் வழக்கமான ஹீரோக்கள் போல ஆட்டோ ஒட்டுநர் தொழிலிலோ, காய்கறி விற்கும் தொழிலிலோ இறங்காமல் ஒரு பள்ளியில் நேர்மையான  NCC ஆசிரியராக பணியில் சேர்கிறார். இது துரை சிங்கத்துக்கு முன்னுரை.


 இப்போது கதையில் ஒரு சின்ன  ட்விஸ்ட். 'சிங்கம்' முதல் பாகத்தில் சொல்லியது போல  சூர்யா-அனுஷ்கா திருமணம் முன்பே நடந்திருக்கவில்லை.  திருமணமான பின் அனுஷ்கா கவர்ச்சியாக டூயட் ஆடினால் ரசிகர்கள் ஒத்து கொள்ள மாட்டார்கள் என இயக்குனர் ஹரி அவர்களின் திருமணத்தை இந்த படத்தில் ரத்து செய்து விடுகிறார். இதனை அனுஷ்கா நன்கு பயன்படுத்தி கொண்டு அவ்வப்போது வந்து சூர்யாவுடன் காதல் செய்து விட்டு போகிறார். கூடவே சூர்யா வேலை செய்யும் பள்ளியில் படிக்கும் ஹன்சிகாவும் சூர்யா மேல் காதல் கொள்கிறார். இது துரை சிங்கத்தின்  காதல் வாழ்க்கைக்கு முன்னுரை

இப்போது கதை

கதை ஒன்றும் புதிதோ, வித்தியாசமானதோ இல்லை. ஆசிரியர் வேலை செய்து கொண்டே ஆயுத கடத்தல் பற்றி  ரகசியமாக புலனாய்வு செய்கிறார் சூர்யா. ஆனால் இயக்குனர் ஹரியோ ஆயுத கடத்தலை காட்டினால் விடுதலை புலிகள், நக்சலைட்டுகள் என சர்ச்சை கிளப்புவார்கள் என்று முன்னெச்சரிக்கையாக ஆயுத கடத்தல் கும்பலை போதை மருந்து கடத்த செய்து விடுகிறார்.அதையும் திறமையாக கண்டு பிடித்து விடுகிறார் சூர்யா. பின்னர் அந்த கும்பலை வேட்டையாடுகிறார். 

திரைக்கதை

விறுவிறுப்பான திரைக்கதை என்பார்களே. விறுவிறுப்பு அதிகமானால் என்ன ஆகும் என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணம். படம் முழுக்க சூர்யா யாரையாவது துரத்தி கொண்டே இருக்கிறார் அல்லது அடித்து கொண்டே இருக்கிறார். நகரம், கடல், காடு, மலை என ஐந்து வகை நிலங்களிலும் சேசிங் செய்து ஒரு புது சாதனையே படைத்துள்ளார்

படம் ஆரம்பித்ததும் ஒரு  பாடல் , சண்டை காட்சி . பின்னர் ஒரு காதல் காட்சி, பின்னர் ஒரு சேசிங் காட்சி, பின்னர் சந்தானம் காமெடி, அதன் பின் மீண்டும் ஒரு சண்டை காட்சி, ஒரு டூயட் பாடல், பின் மீண்டும் ஒரு சேசிங், அதன் பின் ஒரு சண்டை, பின்னர் காமெடி, அதன் பின் ...... என்ன தலை சுற்றுகிறதா. விறுவிறுப்பாக படம் எடுக்கிறேன் என்று சூர்யாவை அரை மணி நேரம் ஓடவும், ஒரு மணி நேரம் சண்டை போடவும், அரை மணி நேரம் ஆக்ரோஷமாக வசனம் பேசவும் வைத்துள்ளார் ஹரி.

சூர்யா:

வழக்கப்படி தன் வேலையை கட்சிதமாக செய்துள்ளார்.  அதிரடி போலீசுக்கு தேவையான சிறந்த உடல் மொழி. ஆனால் அமைச்சர் முதல் அடியாள் வரை வரை முறை இல்லாமல் எல்லாரிடமும் ஆக்ரோஷ வசனம் பேசுவது ஓவர். என்ன செய்வது? சிங்கம் வேஷம் போட்டால் சீறித்தானே ஆக வேண்டும்.

மற்ற நட்சத்திரங்கள்:

2 கதாநாயகிகள், நான்கு வில்லன்கள், 2 காமெடியன்கள், நிறைய குண சித்திர நடிகர்கள் என நிறைய பேர் உள்ளனர்.  ஆனால் யாருமே மனதில் பதியவில்லை. யாரையுமே முழுமையாக பயன்படுத்தவில்லை.

இசை, கேமரா, எடிட்டிங் மற்ற தொழில் நுட்ப விஷயங்கள்:

பாடல் இசையோ, பின்னணிஇசையோ  சொல்லி கொள்ளும்படி இல்லை.

மற்ற தொழில் நுட்ப விஷயங்கள் பற்றி கருத்து கூற விரும்பவில்லை. காரணம் அவை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.

சர்ச்சை கிளம்ப  வாய்ப்புள்ள இடங்கள்:

1. ஆப்ரிக்க வில்லனை குரங்கு, அனிமல் என கண்டபடி இன வெறியோடு திட்டுகிறார் சூர்யா. எனவே ஆப்ரிக்காவில் இந்த படத்துக்கு எதிராக போராட்டம் நடக்க வாய்ப்பு உள்ளது.
2. போலீஸ் துறையில் நேர்மையற்றவர்களே அதிகம் உள்ளது போல் காட்டுகிறார்கள்.
3. ஹன்சிகாவுக்கு ஏற்படும் சோக முடிவும் தங்கள் மனதை புண்படுத்துவதாக அவரின் ரசிகர்கள் போராட்டம் நடத்தலாம்.

முடிவுரை:

முதல் பாகத்தை விட சிறப்பாக எடுக்க வேண்டும் என ஹரிக்கு நெருக்கடி. எனவே  சிங்கத்தின் வேகத்தையும், சீற்றத்தையும் அதிகமாக்க முயன்றுள்ளார். கடைசியில் சிங்கம் ரசிகர்கள் மேலே பாய்ந்து குதறி விட்டது. முதல் பாகத்துடன் ஒப்பிட்டால் இந்த படம் மிக சுமார். ஆனால் என்னதான் கால்கள் பழுதுபட்டாலும் சிங்கம் சிங்கம்தானே. அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் சென்றால் நிச்சயம் ஒரு முறை பார்க்க கூடிய படம்தான் இந்த சிங்கம் II

Monday, July 1, 2013

ஜெயலலிதா ஏன் பிரதமராக வேண்டும்?

டுத்த பிரதமர் யார் என்பதே இன்றைய ஹாட் டாபிக். மோடியையும், ராகுலையும் பலர் முன் மொழிந்தாலும் என்னுடைய ஓட்டு புரட்சி தலைவிக்கே. சமீபத்தில் அவர் எடுத்த நடவடிக்கைகளில் உள்ள ராஜ தந்திரமும் , வகுத்த திட்டங்களில் உள்ள மக்கள் அக்கறையும் என்னை அவர் பக்கம் சாய வைத்து விட்டன. நான் மட்டும் சாய்ந்தால் போதுமா? நீங்களும் சாய வேண்டாமா? அதற்காகவே இதை எழுதுகிறேன். ஆனால் நீங்கள் அதிகமா சாய்ந்து கீழே விழுந்து அடிபட்டு கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.

 ஒரு அதிரடி நடவடிக்கை:

அவர் கைது செய்யப்படுவார் என்று யாருமே நினைத்து கூட பார்த்து இருக்க மாட்டார்கள்.  சாதாரண மனிதரா அவர்? தனக்காக உயிரை கொடுக்க துணிந்த  50 லட்சம் பேரை கொண்டவர் . அப்படிப்பட்ட  ஒரு மனிதரை கைது செய்வது என்பது சாதாரண விசயமா என்ன? அதற்கு எத்தனை துணிச்சல் வேண்டும்.   புரட்சி தலைவியால் தவிர வேறு யாரால் இத்தகைய அதிரடி நடவடிக்கை எடுக்க முடியும்? கைதுக்கு பின் அவரை பின் பற்றும் அந்த 50 லட்சம் பேரும் மாபெரும் போராட்டத்தில் இறங்குவர் என்பதை கணித்து அவரை திஹாருக்கு மாற்றியது சாணக்கியர்களும் போற்றும் ராஜ தந்திரமல்லவா? நாளை சீனாக்காரனையும் , பாகிஸ்தான்காரனையும் எதிர்க்க வேண்டுமானால் இத்தகைய துணிச்சல்தானே தேவை. என்னதான் பவர் ஸ்டாரின் ரசிகன் என்றாலும், சட்டத்தை காப்பாற்றும் நோக்கில் புரட்சி தலைவி எடுத்த  அதிரடி நடவடிக்கை என்னை அவருக்கு ஆதரவு அளிக்க செய்து விட்டது.ஒரு மக்கள் நல திட்டம்:

எல்லாருக்கும் சம உரிமை பற்றி பேசும் நாடு இது. ஆனால் இந்த நாட்டில் ஒதுக்க பட்ட ஒரு இனம் உண்டு. தினம் தினம் குடித்து அரசுக்கு வருவாய் அளிப்பதோடு இல்லாமல், வாய் நிறைய தத்துவம் பேசி தமது நண்பர்களை மகிழ்விக்கும் குடிகாரர்களின் நலன் பற்றி சிந்திக்க கூட யாரும் இல்லை. இப்படி தாம் அரசால் ஒதுக்கப்படுகிறோமே என்ற கவலையிலேயே அதிகம் குடிப்பவர்களும்  உண்டு.

அப்படி என்னதான் அவர்களுக்கு குறை என்கிறீர்களா? குவாட்டரும், கட்டிங்கும் வாங்கி மிக்சிங்குக்கு சுகாதாரமான தண்ணீர் கிடைக்காமல் அவதி பட்டு வந்தனர் அவர்கள். தினமும் மினரல் வாட்டரும், கோக்கும் வாங்கி கலந்தால் கட்டு படி ஆகாது. ஒரு ரூபாய் பாக்கெட் நீரோ தரமற்றது . வாங்கி கலந்தால்  உடல் நிலை பாதிக்கும். இப்படிப்பட்ட சிக்கலான பிரச்சனையால்  சொல்லொணா துன்பத்தை அனுபவித்து வந்தனர். 

ஆனால் இப்போதோ புரட்சி தலைவியின் பத்து ரூபாய் குடி தண்ணீர் திட்டத்தால் அவர்களின் முகத்தில் சிரிப்பு மீண்டுள்ளது. இனி மிக்சிங் பற்றி கவலை இல்லை. பஸ்களில் கிடைக்கவிருக்கும் சரக்கு விரைவில் டாஸ்மாக்கையும் வந்து சேரும். அதன் பின் குறைந்த செலவில் நிறைந்த திருப்தி பெறலாம்  என்று ஆடி பாடி மகிழ்ந்து வருகின்றனர்.  இப்படி குடி மக்களின் நுணுக்கமான பிரச்சனைகளையும் தீர்த்து வைத்து இது மக்கள் நலம் பேணும் அரசு என புரட்சி தலைவி நிரூபித்து விட்டார்.

எனவே மக்களின் குறைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு, சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்பட வேண்டுமெனில் மத்தியில் அஇஅதிமுக தலைமையில் ஆட்சி அமைவதே சிறந்தது என்பதே எனது கருத்து. அண்ணா நாமம் வாழ்க! புரட்சி தலைவர் MGR நாமம் வாழ்க! என்று சொல்லி என் கட்டுரையை முடித்து கொள்கிறேன்.

இந்த பதிவால் யாருடைய மனமாவது புண்படுமாயின் இந்த பதிவை உடனே நீக்கி விடுவேன்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...