Tuesday, November 26, 2013

எதற்காக அழுதாள்?

க்கத்து வீட்டு குழந்தை அழுது  கொண்டிருந்த சத்தம் கேட்டது. வெளியே சென்று பார்த்தேன். அதை அந்த வீட்டுகாரர்கள் யாரும் கண்டு கொண்டது போல தெரியவில்லை. மெதுவாக வீட்டுக்குள் எட்டி பார்த்தேன். உலகமே தெரியாமல் தொலைக்காட்சியில் மூழ்கி இருந்தனர்.

“அக்கா குழந்தை அழுது பாருங்க”

“அது அப்பிடித்தான் தம்பி. கொஞ்ச நேரத்துல நிறுத்திடும்.”

சற்றும் அலட்டி கொள்ளாமல் பதில் வந்தது.

“நான் வேணும்னா கொஞ்ச நேரம் தூக்கிட்டு வெளியே போய்ட்டு வரவா?”

“ம்”

என்ன ஆட்கள் இவர்கள் என்று நினைத்து கொண்டு அந்த குழந்தையை தூக்கி கொண்டேன்.

“பாப்பா! உன் பேர் என்னமா?”

அது சட்டைசெய்யாமல் அழுது கொண்டே இருந்தது. யாரோ அடித்து இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இப்படி அழ வாய்ப்பில்லை. அந்த குழந்தையை பார்க்க இப்போது எனக்கு பாவமாக இருந்தது.

“மாமா மிட்டாய் வாங்கி தரேன். அழ கூடாது என்ன?”

லேசாக அதன் அழுகை குறைந்தது போல் இருந்தது.

“உன் பேர் என்ன சொல்லு?”

“திவ்வ்வ்யா.” விசும்பலுக்கு இடையே அது சொன்னதை புரிந்து கொண்டேன்.

“எதுக்கு அழுகுற. யாரு அடிச்சா உன்னை?”

“யா...யா” மீண்டும் அழ தொடங்கியது. இந்த கேள்வியை நான் கேட்டு இருக்க கூடாது போலும். பாவம் இந்த கால குழந்தைகள். இந்த வயதிலேயே படிக்க சொல்லி அடித்து உதைத்து.

“சரிமா! அழாத. மிட்டாய் வாங்கி தரேன்.”

கடையை நெருங்கியதும் அதன் அழுகை மிகவும் குறைந்து இருந்தது. நான் கடையில் இருந்த ஒரு ஐம்பது பைசா மிட்டாய் பாட்டிலை திறந்து  ஒரு மிட்டாயை எடுத்தேன்.

“மாமா! இது வேணாம். முட்டை மிட்டாய் வேணும்.” அவள் முட்டை போல இருந்த ஒரு மிட்டாய் பாட்டிலை கை காட்டினாள்.

“அந்த சாக்லேட் ஒன்னு எடுங்க” வாங்கி அவள் கையில் கொடுத்தேன்.

“முப்பது ரூபாய் கொடுங்க சார்.” 

“என்ன முப்பது ரூபாயா?” அவசரமாக அந்த மிட்டாயை அவளிடம் இருந்து
பிடுங்க போனேன். அதற்குள் அதை  பாதி பிரித்து விட்டு இருந்தாள். வேறு வழி இல்லாமல் முப்பது ரூபாயை எடுத்து நீட்டினேன். எனக்கு இது தேவைதான்.
 
“இனிமே நல்லா படிக்கணும். அதான் அம்மா அடிக்க மாட்டாங்க”

“அம்மா என்னை எப்பவுமே அடிக்க மாட்டாங்க மாமா”

“அப்புறம் யாருதான் அடிச்சா?”

“யாருமே என்னை அடிக்கல.”

“கீழ விழுந்துட்டியா?”’

“இல்ல”

“யாரும் திட்டுனாங்களா?”
 
“ம்ஹும்"

“நீ மிட்டாய் கேட்டு வாங்கி தரலையா?”

“நான் கேட்டா இல்லன்னே சொல்ல மாட்டாங்க”

“அப்புறம் ஏன்தான் அழுத?” என்றேன். எரிச்சலுடன்.

“அந்த பலூன் வாங்கி குடு. சொல்றேன்.” பலூன் விற்று சென்றவரை கை காட்டியது.

குழந்தையா இது. இந்த வயதிலேயே வியாபாரம் பேசுகிறது. இருந்தாலும் என்னால் ஆர்வத்தை அடக்க முடியவில்லை. எதற்காக இது அப்படி அழுதது. வீட்டில் யாருமே கண்டு கொள்ளவில்லையே. அது ஏன்?

நேராக சென்று ஒரு பலூனை வாங்கி அவள்  கையில் திணித்தேன். இன்று ஐம்பது ரூபாய் மொய் எழுத வேண்டும் என தலையில் எழுதி இருக்கிறது போலும் 

. “சொல்லு! ஏன் அழுத?”

“கும்கி யானை செத்துப்போச்சு. அதான்”

“கும்கி யானையா?”

அதற்குள் அவளின் வீடு வந்து விட்டது. அவளின் தாய் வாசலிலேயே நின்று இருந்தார்.

“உங்க கிட்ட பலூன் கேட்டுட்டாளா. இவ எப்பவுமே இப்படிதான் தம்பி . விஜய் டிவில கும்கி படம் போடுறப்ப விடாம  பார்க்கிறது.  கடைசில யானை செத்து போனதும் அழறது.  எதாச்சும் வாங்கி குடுத்தா அமைதி ஆகிடுறது” அவர் குழந்தையை தூக்கி கொண்டு உள்ளே நடக்க தொடங்கினார். பிரபு சாலமன் கும்கி யானையை கொன்றதற்காக முதல் முறையாக நான் வருத்தப்பட தொடங்கினேன்
.

Monday, November 18, 2013

நாட்டாமை கைய வச்சா


“தம்பி! சீக்கிரம் வாங்க. நாட்டாமை இனிமே பஞ்சாயத்துக்கு வர மாட்டேன்னு சொல்லிட்டாராம்” பக்கத்துக்கு வீட்டுக்காரர் என்னிடம் சொல்லிவிட்டு ஓடினார்.


“என்னங்க ஆச்சு?” குரலால் அவரை விரட்டி பிடிக்க முயன்றேன்.


“நாட்டாமையை பத்தி ஒரு பொண்ணு தப்பா ஊரு முழுக்க சொல்லிட்டு திரியுதாம். அதனாலதான்.”


இந்த ஊருக்கு அரசாங்க வேலை கிடைத்து வந்ததிலிருந்தே இந்த ஊர் ஒரு புதுமையாக இருக்கிறது. என்ன என்னவோ பேசி கொள்கிறார்கள். செய்கிறார்கள். இப்போது நாட்டாமையே பஞ்சாயத்துக்கு வர மறுக்கிறார். பக்கத்துக்கு வீட்டுக்காரரை தொடர்ந்தேன்.

லமரத்திற்கு கீழே ஊரே கூடி இருந்தது.


அந்த கூட்டத்தின் நடுவில் இருந்தவர்தான் நாட்டாமையாக இருக்க வேண்டும். அந்த வெண்ணிற முறுக்கிய மீசையையும், முக சுருக்கங்களையும் வைத்து  அறுபது மதிக்கலாம். ஆனால் உடல் மிகவும் திடகாத்திரமாக இருந்தது.  பார்த்தவுடன் மரியாதை தர தூண்டும் கம்பீரம்.


உங்க குடும்பம் பஞ்சாயத்து  பண்றதுதான் காலகாலமா நடக்கிறது. நீங்க இப்பிடி பஞ்சாயத்துக்கு வர மாட்டேன்ன்னு சொன்னா எப்பிடியா?” கூட்டத்திலிருந்து  ஒரு பெரியவர்  நாட்டாமையை பார்த்து கேட்டார்.


ஊருக்கார பயலுக நாக்கு மேல பல்லை போட்டு  என்னை பத்தி இப்பிடி பேச ஆரம்பிச்ச பின்னாடி நான் எப்பிடிடா பஞ்சாயத்து பண்றது?” அவர் குரலில் கடுமையான கோபம் தெரிந்தது.


ஐயா! ஏதோ ஒரு கிறுக்கு பிடிச்ச கழுதை உங்களை பத்தி தப்பா சொன்னா நாங்க நம்பிடுவோமாயா? இப்போ பாருங்க. நான் அவளையே கூப்பிட்டு உங்க கிட்ட மன்னிப்பு கேக்க வைக்கிறேன்.அந்த பெரியவர் நாட்டாமைக்கு பதிலளித்த கையோடு கூட்டத்தை நோக்கி திரும்பி செல்வி! எங்கடி இருக்க? உன்னாலதாண்டி அத்தனை பிரச்சினையும். முன்னாடி வாடிஎன்றார். மெதுவாக கூட்டம் பிளந்து வழிவிட தொடங்கியது. நான் ஆர்வமாக பார்க்க தொடங்கினேன்.


பயந்து கொண்டே மெதுவாக செல்வி என அழைக்கப்பட்ட அந்த பெண் முன்னால் வர தொடங்கினாள். அவளுக்கு பதினாறு வயது இருக்கலாம். இவள்தான் இந்த  கிராமத்தின் பேரழகி  என்று யோசிக்காமல் பட்டம் தரலாம். அப்படி ஒரு அழகு. மிரட்சி நிரம்பிய அந்த கண்கள் அவள் மேல் எனக்கு ஒரு பரிதாபத்தை ஏற்படுத்தியது.


சொல்லுடி! ஐயா மேல எந்த தப்பும் இல்லன்னு சொல்லு” அந்த பெரியவர் அவளை மிரட்டினார்.


அவள் இப்போது கிட்டத்தட்ட  அழுது விட்டு இருந்தாள். 


“வாய்ல என்ன வச்சு இருக்க. பேசுடி.” அவள் பின்னால் நின்றிருந்த பெண் அவள் முதுகில் ஒரு அடி கொடுத்தாள்.


அட பாவிகளா. ஒரு பெண்ணை இப்படியா நடத்துவது. நான் செல்வியையே பார்த்தேன். அவள் குனிந்து அழுது கொண்டு இருந்தாள்.


“ஐயா! என்ன மன்னிச்சிடுங்க ஐயா. நீங்க வெளிய சொல்ல கூடாதுன்னு சொல்லியும் நான் சொல்லிட்டேன்” அவள் திடீரென பெருங்குரல் எடுத்து கத்தினாள். நான் அங்கே இருந்த ஒவ்வொருவரின் முகத்தையும் பார்த்தேன். அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது.


“விளையாடாம உண்மையை சொல்லுடி.” அந்த பெரியவர் அந்த பெண்ணை பார்த்து முறைத்தார்.


“நான் உண்மையாத்தான் சொல்றேன். அன்னைக்கு எப்பவும் போல நாட்டமை வீட்டுக்கு வேலைக்கு போய் இருந்தேன். நாட்டாமை வீட்ல எல்லாரும் வெளியூருக்கு போய் இருந்தாங்க. நாட்டாமை மட்டும் தனியா இருந்தார்”


அவள் சொல்ல சொல்ல எனக்கு ரத்தஅழுத்தம்  ஏற ஆரம்பித்தது. இந்த நாட்டாமை நல்லவர் போல இருந்து கொண்டு என்ன வேலை செய்து இருக்கிறார். தனியாக இருந்த பெண்ணிடம். அதுவும் சின்ன பெண்ணிடம். இவரை போலீசில் பிடித்து கொடுக்காமல் இவர் ஆடும் நாடகத்தை இந்த ஊர்க்காரர்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள் . செல்வி! நீ கவலைபடாதே. இந்த ஊரே எதிர்த்தாலும் உனக்கு நியாயம் வாங்கி தருவேன். நான் அரசாங்க ஊழியன். என் மனதுக்குள்ளேயே செல்வியிடம் பேசி கொண்டிருந்தேன்.


“நிறுத்துடி!” நாட்டமையின் கோப குரல் என் சிந்தனையை கலைத்தது. நான் அவர் பக்கம் திரும்பினேன். எழுந்து நின்றிருந்தார். கோபத்தில் மீசை துடித்து கொண்டிருந்தது.


“இனிமே என்ன நடந்ததுன்னு நான் சொல்றேன். இந்த பொண்ணு எப்பவும் வீட்டுக்கு வேலைக்கு வர பொண்ணுதான்.. ஆனா அதை சரியா பார்த்தது கூட இல்லை அன்னைக்கு வீட்டுக்கு வந்தது. சமையல்கட்டுக்குள்ள நின்னு சத்தமா பாட்டு பாடிகிட்டு இருந்தது. ஏதோ ஒரு ஆர்வத்துல நான் சமையல்கட்டுக்குள்ள எட்டி பார்த்தேன். அப்போதான் முதல் தடவையா அதை பார்த்தேன். நல்லா பளபளன்னு மின்னிச்சு. எனக்கு அதை  பார்த்ததும்  ஆசையை அடக்க முடியல. ரொம்ப நாளா  காஞ்சு போய் இருந்த மனசு அதை பார்த்ததும் சபலப்பட ஆரம்பிச்சது. தப்புன்னு புத்தி சொல்லியும் மனசு கேக்கல.” நாட்டாமை நிறுத்திவிட்டு அருகில் இருந்த செம்பில் இருந்து நீரை எடுத்து குடிக்க ஆரம்பித்தார். ஊரே உறைந்து போய் நின்று இருந்தது.


“முதல்ல நேரா அவ கிட்ட கேட்டுடலாம்னு நெனச்சேன். ஆனா அவ மறுத்துட்டா? இந்த வயசுல நான் இதை எங்க போய் கேப்பேன். இந்த சந்தர்ப்பம் தவறகூடதுன்னா பலவந்தம்தான் ஒரே வழின்னு முடிவு எடுத்தேன். மெதுவா உள்ளே போனேன். கொஞ்சம் தண்ணி இருந்தா குடு புள்ள அப்பிடின்னு கேட்டேன். சத்தம் கெட்டு அவ திரும்பினதும் அவ கைய பிடிச்சு.” சொல்லிவிட்டு கீழே குனிந்து கொண்டார். என்னால் அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை. என்ன ஊர் இது? இவர்களை எல்லாம் நடுரோட்டில் நிற்க வைத்து சுட வேண்டும்.


இப்போது நாட்டாமை மீண்டும் தொடர்ந்தார். “அவ கைய பிடிச்சு அவ கைல இருந்த லாலிபாப்பை பிடுங்கி என்னோட வாய்ல போட்டுகிட்டேன். அவ அப்பிடியே என்னை பார்த்துகிட்டே நின்னா. நான் என்னோட பைல இருந்து நூறு ரூபாயை எடுத்து இதை வெளிய சொல்லிடாதன்னு சொல்லி அனுப்பினேன். ஆனா இவ இதை ஊரெல்லாம் சொல்லி என்னோட மானத்தை வாங்குவான்னு நினைக்கவே இல்லை”


நாட்டாமை முடித்ததும் எனக்கு சிரிப்பதா, அழுவதா என தெரியவில்லை. அட பாவிகளா! ஒரு லாலிபாப்புக்கா இத்தனை களேபரம். வரும்போதே சொல்லி இருந்தால் நான் கண்டதையும் கற்பனை செய்து கொண்டிருக்க மாட்டேனே.


“ஐயா! இதுக்காக எல்லாம் நீங்க பஞ்சாயத்துக்கு வராம..”


அவர்கள் பேசி கொண்டு இருந்தனர். நான் மெதுவாக நழுவ ஆரம்பித்தேன்.



Saturday, November 16, 2013

சுமதி டீச்சரின் மாணவர்கள்

லைமை ஆசிரியரின் அறைக்குள் சென்று வந்த பின் சுமதி டீச்சர் ஒரு மாதிரியாக இருந்தார். கண்கள் சிவந்து இருந்தன. அநேகமாக அழுது இருந்திருக்க கூடும்.

“டேய்! நீ செஞ்ச வேலைதான் காரணம் போலடா. செம திட்டு வாங்கி அழுதுகிட்டு இருக்காங்க பாரு” அருகில் அமர்ந்திருந்த சிவகுமாரை பார்த்து கூறினேன்.

“நல்லா அழனும்டா இவ. கிளாஸ்ல அத்தனை பொண்ணுங்க முன்னாடி என்னை எப்படி எல்லாம் திட்டி அடிச்சு அவமானபடுத்தி இருப்பா.” அவன் சிறிதும் அலட்டி கொண்டது போல தெரியவில்லை.

சில நிமிடங்களுக்கு சுமதி டீச்சர் நாற்காலியை விட்டு எழுந்தார்.

“பசங்களா! இப்போ நான் வீட்டுக்கு போறேன். அமைதியா உக்காந்து படிச்சுகிட்டு இருங்க. இனிமே வேற யாராவது வருவாங்க” கூறிவிட்டு வகுப்பறையை விட்டு வேகமாக வெளியேறினார். அவரின் மனம் மிகுந்த காயம் அடைந்து இருக்க வேண்டும். சுமதி டீச்சருக்கும், ராமநாதன் சாருக்கும் தொடர்பு இருப்பதாக பள்ளி கழிப்பறையில் எழுதி விட்டேன் என்று சிவா கூறியதுமே எனக்கு பதறி விட்டது. அப்படியென்றால் டீச்சருக்கு எப்படி இருக்க வேண்டும்? தலைமை ஆசிரியர் விசாரிக்கும்போது கூனி குறுகி நின்றிருப்பார். இருந்தாலும் சிவா ரொம்ப மோசம். இனிமே இவனிடம் இருந்து விலகி விட வேண்டும் என முடிவு எடுத்தேன். தெளிவாக திட்டமிட்டு இருட்டிய பிறகு கழிப்பறையில் எழுதி இருக்கிறான் என்றால் எத்தனை சாமர்த்தியம் வேண்டும்.

“நாந்தான் செஞ்சேன்னு உனக்கு மட்டும்தான் தெரியும். எவன் கிட்டயாச்சும் மூச்சு விட்ட உன்னை தொலைச்சுடுவேன்” என்றான்.

“நீ எழுதுனதை அழிச்சுட்டாங்க போலடா”

“தெரியும். காலைல முதல் ஆளா ஹெட்மாஸ்டர் வந்து இருப்பான். அதை படிச்சுட்டு யாரையாவது கூப்பிட்டு அழிக்க சொல்லி இருப்பான். இவ எப்ப வருவான்னு பாத்துகிட்டே இருந்து வந்ததும் கூப்டு  ராவி இருக்கான்.” வில்லத்தனமாக சிரித்தான்.

ரு வாரம் கடந்தது. சுமதி டீச்சர் பள்ளிக்கு வருவது போல தெரியவில்லை. திடீரென குள்ளமாக, கண்ணாடி போட்ட ஒருவர் வகுப்புக்கு வந்து அவரை  எங்களின் புது வகுப்பாசிரியர் என சொல்லி கொண்டார்.

“டீச்சர் வேலைய விட்டுட்டு போய்ட்டாங்க போலடா.” நான்
சிவகுமாரிடம் சொன்னேன்.

“அவ அப்படி எல்லாம் போக மாட்டா. நாளைக்கே வந்து நிப்பா பாரு”

“இல்லடா. எல்லாரும் அவங்க வேலைய விட்டு போயிட்டதா சொல்றாங்க.  நான் வாட்ச்மேன் தாத்தாகிட்ட கூட கேட்டேன். அவரும் அப்பிடிதான் சொன்னாரு.”

சிவாவின் முகம் மாறியது.

“நல்லா விசாரிச்சாயா?”

“இன்னும் என்ன விசாரிக்கறது. இப்போ ஸ்கூல் முழுக்க அவங்களை பத்தி தப்பு தப்பா வேற பேச ஆரம்பிச்சுட்டாங்க. இந்த அவமானத்துக்கு அப்புறம் அவங்களால எப்பிடி பசங்களுக்கு நடுவுல நின்னு பாடம் எடுக்க முடியும். அநியாயமா அவங்களை வேலையை விட்டு துரத்திட்டியேடா. அவங்க குடும்பம் வேற கஷ்டப்படுற குடும்பமாம்.  வாட்ச்மேன் தாத்தா சொன்னார்..”

“இல்லடா. அவ வேலைய விட்டு போவாங்கன்னு நினைக்கவே இல்லை. லேசா அழ வச்சு பாக்கலாம்னு நெனச்சேன். ஆனா இந்த அளவு போகும்னு” அவன் முகத்தில் உண்மையான வருத்தம் தெரிந்தது.

“சரி விடு. இதை மறந்துடு”

“எப்பிடி மறக்குறது. அவங்க வீடு எங்க இருக்குன்னு தெரியுமா?”

“அவங்க இந்த ஊரே இல்ல. பக்கத்து ஊரு. ஏன் கேக்குற?”

“அவங்க கிட்ட நாந்தான் எழுதுனேன்னு மன்னிப்பு கேக்கணும்.
“என்னடா சொல்ற. நீ செஞ்சது மன்னிக்கிற விஷயமா? பேசாம மூடிகிட்டு இரு.” சொல்லிவிட்டு திரும்பிக்கொண்டேன்.

டுத்த திங்கள் கிழமை சிவா சற்று உற்சாகமாக தெரிந்தான். என்னை பள்ளி மைதானத்தில் இருந்த மரத்தின் கீழ் அழைத்து சென்று பேச தொடங்கினான்.

“எப்படியோ டீச்சர் விலாசம் கண்டுபிடிச்சு அவங்க கிட்ட போய் மன்னிப்பு கேட்டுட்டேன்டா. இப்போதான் மனசு லேசா இருக்கு”

“நீ நெஜமாவே தைரியசாலி. டீச்சரை பத்தி எழுதுனதுலயும் சரி. மன்னிப்பு கேட்டதும் சரி.”

“நேத்து அவங்க வீட்டுக்கு போய் பார்த்தா  நெறைய கூட்டம். ஏதோ விஷேசம் போல. எப்பிடியோ டீச்சரை பிடிச்சு பேசிட்டேன்”

“அத்தனை பேரு மத்தியிலா?”

“இல்ல. தனியா பேசணும்னு சொன்னதும் என்னை கொல்லைக்கு கூட்டிகிட்டு போய்ட்டா.”

“அப்புறம்”

“விசயம் சொன்னதும் அடிச்சா. ரெண்டு அறை வேகமா. ஆனா மூணாவது அறை  செல்லமா தட்டுனா. அதுக்குள்ள யாரோ வந்து நேரமாச்சுன்னு சொல்லவும் வீட்டுக்குள்ள போய்ட்டாங்க. வீட்ல சொல்லி என்னை அடிக்க ஆளு கூட்டிக்கிட்டு வருவாளோன்னு பயந்தேன். அப்பிடி எதுவும் செய்யல. ரொம்ப நல்லவடா அவ. இல்ல இல்ல அவங்க”

உணர்ச்சிவசப்பட்ட குரலில் பேசினான். இவன் நல்லவனா, கெட்டவனா?

“அப்புறம் இன்னொரு விஷயம். நேத்து அவங்க வீட்டுல கூட்டமா இருந்ததே ஏன் தெரியுமா? அவங்களை பொண்ணு பாக்க வந்து இருந்தாங்க. மாப்பிள்ளை ராமனாதன் சார்.”

“என்ன?”

“உண்மைதான். வாயை பிளக்கதா. அவங்க பேரு ரொம்ப கெட்டு போயிடிச்சுன்னு  ராமநாதன் சாரே அவங்களை கல்யாணம் செய்ய முடிவு செஞ்சு இருப்பார் போல. எப்பிடியோ நான் செஞ்ச வேலையால டீச்சருக்கு கல்யாணம் ஆக போகுது” பெருமிதத்துடன் கூறினான்.

ரு வாரத்துக்கு பின் வாட்ச்மேன் தாத்தா ஒரு நாள் பள்ளிக்கு விடுப்பு எடுத்து இருந்தார். நிறைய அவர் வந்ததும் அவரிடம் சென்று பேச்சு குடுத்தேன்.

“எங்க தாத்தா போயிருந்தீங்க நேத்து?”

“சுமதி டீச்சருக்கு நேத்து கல்யாணம். உனக்கு தெரியாதா?”

“இல்லையே. யாரு கூட?” அப்பாவி போல கேட்டேன்

“ராமநாதன் சார். நெறைய வாத்தியாருங்களும் வந்து இருந்தாங்களே” 

“அப்பிடியா. அந்த டீச்சரை பத்தி எல்லாம் தப்பா பேசிக்கிட்டு இருந்தாங்க. நல்ல வேளை. ராமநாதன் சார் அவங்களை கல்யாணம் செஞ்சுகிட்டார்”

“தப்பா எல்லாம் பேசலவே. எல்லாரும் சரியாத்தான் பேசுனாங்க. பள்ளிக் கூடத்துல ரெண்டு பெரும் சேர்ந்து கொஞ்ச நஞ்ச கூத்தா அடிச்சாங்க. ஹெட்மாஸ்டர் இது தெரிஞ்சதும் சாமி ஆடிட்டார். அந்த பொண்ணு டெம்ப்ரவரியா வேலைல இருந்ததால அப்பவே வீட்டுக்கு அனுப்பிட்டார். ராமநாதனை ஒன்னும் செய்ய முடியாம கண்டிச்சு  விட்டுட்டார். இனிமே பள்ளிகூடத்துல கௌரவமா இருக்கணும்னா சுமதி டீச்சரை கல்யாணம் செஞ்சுக்குறதுதான் ஒரே வழின்னு ராமநாதன் அவசர கல்யாணம் செஞ்சு கிட்டான்”

சொல்லி கொண்டே போனார் தாத்தா. எனக்கு புரிய சற்று நேரம் பிடித்தது.

“ஆனா தாத்தா. பாத்ரூம்ல யாரோ எழுதி வச்சதாலதான் இது வெளிய தெரிஞ்சதுன்னு சொன்னாங்க”

தாத்தா ஒரு மாதிரியாக பார்த்தார்.

“இந்த பிரச்சனை புகைய ஆரம்பிச்ச நேரம் பார்த்து பாத்ரூம்ல எவனோ கரிய வச்சு கிறுக்கி இருந்தான். ஆனா அதை நான் அன்னைக்கு ராத்திரி  பார்த்த உடனே அழிச்சுட்டேன். யாரும் அதை படிச்சு இருக்க வாய்ப்பே இல்லையே.”

உளறி விட்டேன் என்று தோன்றியது. “வகுப்பு ஆரம்பிக்க போகுது வரேன் தாத்தா” என்று கூறி விட்டு நகர்ந்தேன்.

வகுப்பில் நுழைந்ததும் சிவா, “ஏண்டா லேட்” என்றான் 

வாட்ச்மேன் தாத்தா உடன் பேசி கொண்டிருந்தேன் என்று சொன்னேன். என்ன பேசினேன் என்று சொல்லவில்லை. பாவம். சுமதி டீச்சருக்கு தன்னால்தான் திருமணம் ஆனது என்று அவன் நம்பிக்கொண்டு இருக்கட்டும்.
 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...