Wednesday, February 26, 2014

குற்றவாளிகளா ஐடி நிறுவனங்கள்?

மா மகேஸ்வரி கொலையில் கொலையாளிகளை பிடித்து விட்டதாக அறிவித்து விட்டனர். பத்திரிக்கைகள் இன்னும் இரண்டு நாளுக்கு பின் இது சம்பந்தமான செய்திகளை பெட்டி செய்தி அளவுக்கு சுருக்கி விடுவார்கள். நாமும் இப்படி ஒரு சம்பவம் நடந்ததை மறந்து விடுவோம்.

இந்த சம்பவம் பற்றி வந்த பெரும்பாலான கட்டுரைகளும், செய்திகளும்  உமா மகேஸ்வரி பணியாற்றிய நிறுவனமும் நடந்த கொலைக்கு ஒரு  காரணம் என்ற ரீதியில் எழுதி வருகின்றனர் சிலர். நிறுவனத்தில் வாகன வசதி செய்து கொடுத்து இருந்தால் குற்றம் நடந்து இருக்க வாய்ப்பில்லையாம். உண்மைதான். அலுவலக வாகனத்தில் வீடு திரும்பி இருந்தால் அந்த பெண் பாதுகாப்பாக வீடு திரும்பி இருக்கலாம். ஆனால் அந்த பெண்ணின் மரணத்திற்கு காரணம் அந்த நிறுவனம் ஊருக்கு வெளியே இருந்ததோ, அல்லது அந்த நிறுவனம் வாகனம் தராததோ மட்டும் அல்ல. உண்மையான காரணம் நமது சமூகம்தான்.

இருட்டிய பிறகு தனியாக  எந்த பெண்ணும் தெருவில் இறங்கி நடக்க கூடாது என்று சொல்வது போல இருக்கிறது இந்த சம்பவம். கிமு ஆக இருந்தால் என்ன? கிபி ஆக இருந்தால் என்ன? பெண்களின் நிலைமை இதுதான் என்று அழுத்தம் திருத்தமாக மீண்டும் ஒரு முறை பதிவு செய்து விட்டோம். இதை மாற்றும் வழி என்ன என்று சிந்திப்பதே இது போன்ற பிரச்சினைகளை நிரந்தரமாக தடுக்கும் வழி. அதை விட்டு விட்டு ஐடி நிறுவனங்களை சார்ந்த பிரச்சனையாக மட்டும் பார்ப்பது சரி இல்லை. இது ஐடி நிறுவனங்கள் தங்களை சரி செய்து கொண்டால் தேசத்தின் ஒட்டு மொத்த பெண்களுக்கும் பாதுகாப்பு கிடைத்து விடும் என கூறுவது போல் உள்ளது.


ஹிந்து பத்திரிக்கையில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார்கள். திருமணமான பெண்களுக்கு ஐடி துறையில் பணி உயர்வும், சம்பள உயர்வும் கிடைப்பது கடினமாக இருக்கிறது என்று ‘சேவ் தமிழ்ஸ்’ நடத்திய கருத்து கணிப்பில் தெரிய வந்திருப்பதாக கூறி இருக்கின்றனர்.


ஐடி துறையில் தொழிலாளர் உரிமைகள் மறுக்கப்படுகிறது என்பதில் இரு வேறு கருத்தே இல்லை. ஆனால் திருமணமான பெண்கள் தங்களுக்கு திறமை இருந்தாலும் பதவி உயர்வு மறுக்கப்படுகிறது என்பதெல்லாம் அபத்தம். உண்மையில் ஆணோ, பெண்ணோ திருமணமான பின் பொறுப்புகள் அதிகரிக்கின்றன. திருமணத்திற்கு முன்பு வேலை செய்ததை போல திருமணத்திற்கு பின் வேலை செய்ய முடிவதில்லை. குடும்ப பொறுப்புகள் வேலையில் அவர்களின் கவனத்தை குறைப்பது இயற்கையே. அதனால் ஒப்பீட்டளவில் பார்க்கும்போது அவர்களால் திருமணம் செய்யாதவர்களை போல விரைவில் பதவி உயர்வோ, ஊதிய  உயர்வோ பெற முடியவில்லை.

ஒரு உதாரணத்தை எடுத்து கொள்வோம். இரண்டு பெண்கள்  இருபத்தி இரண்டு வயதில் வேலைக்கு சேர்கின்றனர் என்று வைத்து கொள்வோம் . அவர்களில் ஒருவர்  மணம் செய்து கொண்டு இருபத்தி ஏழு வயதில் தாயாகி விடுகிறாள். குழந்தையின் உடல் நலம் காரணமாக  அடிக்கடி விடுப்பு எடுக்கிறாள்.  வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. அதே நேரம் இன்னொருத்திக்கு திருமணம் ஆகவில்லை. கடினமாக உழைக்கிறாள். அந்த வருடம் யாரோ ஒருவருக்கு மட்டுமே பதவி உயர்வு தர முடியும் என்ற சூழலில் நிர்வாகம் மணமாகாத பெண்ணுக்கு பதவி உயர்வு தருகிறது. அதுதானே நியாயம். இப்போது ஒருவேளை மணமான பெண்ணுக்கு பதவி உயர்வு கொடுத்தால், மணமாகாத பெண்ணால் தொடர்ந்து  எப்படி சிறப்பாக வேலை செய்ய முடியும்?

பின்னர் ஏன்  திறமை இருந்தாலும் பதவி உயர்வு மறுக்கப்படுவதாக கூறுகின்றனர்? அதுதான் மனித சுபாவம். உங்கள் நிறுவனம் உங்கள் திறமைக்கு ஏற்ற ஊதியமும், பதவி உயர்வும் அளிக்கிறதா என  எந்த துறையிலும் பணிபுரியும்  ஊழியர்களிடம்  கேட்டு பாருங்கள். எண்பது சதவீதம் பேர் இல்லை என்றே சொல்வார்கள். நிர்வாகம் தங்களை பயன்படுத்தி கொண்டு தங்களுக்கு நியாயமாக தர வேண்டியதை தரவில்லை என்றே சொல்வார்கள். இந்த கருத்து கணிப்பில் சொல்லியதை போல.

ஐடி நிறுவனங்கள் தர்மப்படி நடப்பதாக சொல்லவில்லை. இருந்தாலும் எதற்கெடுத்தாலும் அவர்களை மட்டுமே  குற்றம் சொல்வது சரியில்லை என்றே சொல்கிறேன். 


Saturday, February 22, 2014

ஒரு கூட்டணி பேச்சு வார்த்தை

“என்னை எதற்காக இப்படி அடைத்து வைத்து இருக்கிறீர்கள். என்னை வெளியே விடுங்கள்.” தடியாக இருந்த அந்த மனிதனிடம் கேட்டேன்.

“கொஞ்சம் பொறுமையாக இருங்கள் சார்! தலைவர் வந்து விடுவார்.” சொல்லிவிட்டு முகத்தை திருப்பி கொண்டான். எனக்கு அடி வயிறை முட்டி கொண்டு ஒன் பாத்ரூம் வந்தது. அவனிடம் கேட்கலாமா? 

வேண்டாம். தவறாக நினைத்து கொள்வான். முன் பின் தெரியாதவர்களின்  காரில் ஏறியது எத்தனை பெரிய தவறு என்று தெரிந்தது. கூட வந்து முகவரி  காண்பிக்க சொல்லி அவர்கள் முகவரிக்கு என்னை கடத்தி விட்டார்களே.

அந்த வீட்டை சுற்றி பார்க்க ஆரம்பித்தேன். சுவர் முழுக்க அரசியல் தலைவர்களின் படங்கள். அது கட்சி அலுவலகம் போல தெரிந்தது. எந்த கட்சி என்பதும் ஓரளவு அந்த படங்களை பார்த்ததும் புரிந்தது.

“தலைவர் வருகிறார்”

யார் தலைவர். ஆர்வத்தோடு பார்த்தேன். அவர் மெதுவாக மாடிப்படிகளில் இறங்கி வந்தார். வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி. பளிசென்ற முகம். இவரா? இவரை அடிக்கடி டிவியில் காமிப்பார்கள். செய்தி சானல்களின் லைவ் நிகழ்ச்சிகளில் அடிக்கடி வருவார்.

அவர் வந்து என் முன் இருந்த நாற்காலியில் அமர்ந்தார்.

“வணக்கம்! நான் யாரென்று உனக்கு தெரிந்து இருக்கலாம்.”

“நன்றாக தெரியும்”

“அப்போது நான் எந்த கட்சியின் மாநில தலைவர் என்றும் தெரிந்து இருக்குமே?”

“அதுவும் தெரியும்”

“நல்லது. உன்னை எதற்காக அழைத்து வந்திருக்கிறோம் தெரியுமா?”

“அழைத்து வரவில்லை. கடத்தி வந்திருக்கிறீர்கள்.”

“ஹாஹாஹா” பலமாக சிரித்தார். மொக்கை ஜோக்குக்கெல்லாம் சிரிக்கிறார். என்னால் இவர்களுக்கு ஏதோ வேலை ஆக வேண்டியிருக்கிறது என புரிந்து கொண்டேன்.

“பாருங்கள். எங்கள் கட்சி இந்தியாவின் மிகப் பெரிய தேசிய கட்சி. ஆனால் இங்கே தமிழ்நாட்டில் மட்டும் எங்களுக்கு செல்வாக்கு மிக குறைவு.”

“தமிழ்நாட்டில் மட்டும் இல்லை. தென் இந்தியா முழுக்கவே உங்களுக்கு செல்வாக்கு குறைவுதான்.” சொல்லிவிட்டு நாக்கை கடித்து கொண்டேன்.

“உண்மைதான். நீங்கள் வெளிப்படையாக பேசுகிறீர்கள்.”

“எப்பொழுதுமே நான் அப்படிதான். இதற்கும் என்னை பிடித்து வந்ததற்கும் என்ன சம்பந்தம்.”

“சம்பந்தம் இருக்கிறது. எங்கள் கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டுமென்றால் தமிழகத்தில் சில தொகுதிகளாவது கிடைக்க வேண்டும். தனியாக நின்றால் எங்களால் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க முடியாது. கூட்டணி பலம் வேண்டும்.”

“அதற்கென்ன? நீங்கள் அழைத்தால் கூட்டணிக்கு வர எல்லாரும் வரிசையில் நிற்க போகிறார்கள்.”

“அதுதான் இல்லை. நாங்கள் கூட்டணிக்கு அழைத்தாலே எல்லாரும் தூர ஓடி போகின்றனர். நாங்கள் மதவாதிகளாம். இதை மற்ற யாரும் சொன்னால் கூட பொறுத்து கொள்வோம். சொல்பவர் ஒரு ஜாதி கட்சி தலைவர். ஜாதியை வைத்து அரசியல் செய்பவர்களே எங்களை மதவாதிகள் என்றால் என்ன செய்வது? எப்படியோ ஒரே ஒரு கட்சி மட்டும் எங்களுடன் சேர ஒத்து கொண்டது. ஆனால் அவர்களை மட்டும் வைத்து கொண்டு ஜெயிக்க முடியாது என தலைமை நினைக்கிறது. இன்னும் கூட்டணி பலம் வேண்டுமாம்” அவர் குரலில் விரக்தி தெரிந்தது.

“புதிதாக ஒரு கட்சி வந்திருக்கிறதே. நீங்கள் அந்த கட்சி தலைமையுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்துவதாக பேப்பரில் படித்தேனே?”

“அந்த ஆளா? அவர் காலையில் எங்களுடன் பேசுகிறார். மாலையில் கட்சி தனித்து போட்டியிடும் என்கிறார். மறுநாள் மீண்டும் எங்களுடன் பேசுகிறார். அவர் எப்போது என்ன செய்வார் என்றே தெரியவில்லை நாங்கள் வெறுத்து போய் விட்டோம்”

“உங்கள் கஷ்டத்தை புரிந்து கொள்ள முடிகிறது சார். ஆனால் நான் உங்களுக்கு எவ்வாறு உதவ முடியும்.”

“நிச்சயம் முடியும். நாங்கள் இப்போது ஒரு பரிதாபமான நிலையில் இருக்கிறோம். இங்கே எங்களை சீண்டுவார் இல்லை. அதனால் உங்கள் கட்சியுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளோம். இப்போது உங்களுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்த போகிறேன்.”

“சார்! நீங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள். நான் எந்த கட்சியின் தலைவரும் கிடையாது. நான் ஒரு சாதாரண..”

“நீங்கள் கட்சி தலைவரில்லை. ஆனால் ஒரு சங்க தலைவர்தானே?”

“ஆமாம். ஆனால்...”

“அது போதும். உங்கள் சங்கத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள்?”

“தமிழகம் முழுக்க ஆயிரம் பேர் வரை இருக்கிறார்கள்”

“அது போதும் எங்களுக்கு. இந்த நிமிடம் முதல் உங்கள் சங்கம்  எங்கள் கட்சியுடன் கூட்டணி வைத்து கொள்ள போகிறது. நாளை பிரஸ் மீட் வைத்து அறிவித்து விடுவோம். நீங்கள் எங்கள் கட்சி சின்னத்திலேயே போட்டியிட போகிறீர்கள். உங்களுக்கு பத்து தொகுதிகள். சம்மதம்தானே? ”

“ஆனால் கொள்கை ஒன்றாக இருந்தால்தானே கூட்டணி அமைக்க முடியும்?”

“எல்லா கட்சிகளின் ஒரே கொள்கை பதவிதான். அதற்காக யாரும் யாரிடமும் கூட்டணி வைத்து கொள்ளலாம். சம்மதம் சொல்லுங்கள்”

“நீங்கள் சொல்வது சரிதான். ஆனால்...”

“தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். ஒரு கட்சியை கூட உன்னால் கூட்டணிக்கு சேர்க்க முடியவில்லையா என்று மேலே இருந்து எனக்கு குடைச்சல் கொடுக்கிறார்கள். நான் இன்னும் இரண்டு நாட்களில் யாரையாவது கூட்டணிக்கு சேர்த்தே ஆக வேண்டும். என் கஷ்டத்தை புரிந்து கொள்ளுங்கள்”

“புரிகிறது. ஆனால்...”

“என்ன தயக்கம்? தொகுதி போதாதா? இன்னும் நான்கு தொகுதிகளை தருகிறேன். தேர்தல் செலவுக்கு முப்பது  கோடி பணம்  தருகிறேன். இன்னும் என்ன வேண்டும்?”

நான் பதில் பேசவில்லை.

“ராமதாஸ்! அதை கொண்டு வா”

ராமதாஸ் என்று அழைக்கப்பட்டவர் ஒரு பெட்டியை கொண்டு வந்து என் முன்னால் வைத்தார்.

“இதில் அறுபது லட்சம் இருக்கிறது. இது உங்களுக்கு மட்டும்.”

என் கண்கள் விரிந்தன. அறுபது லட்சமா?

“இது அட்வான்ஸ்தான். தேர்தல் சமயத்தில் இன்னும் எதிர்பார்க்கலாம்”

“எனக்கு சம்மதம் சார். நாளை மறுநாள் நல்ல நாள். அன்றே நம் கூட்டணியை அறிவித்து விடலாம்.”

“மிக்க மகிழ்ச்சி. நான் சாதித்து விட்டேன்” அவர் முகத்தில் மகிழ்ச்சி அப்பட்டமாக தெரிந்தது. பதவி தப்பி விட்ட நிம்மதியும்.

நான் எழுந்து கொண்டேன். “சார்! ஒரு முக்கியமான விஷயம்.”

“சொல்லுங்கள்”

“நான் ஒன் பாத்ரூம் போக வேண்டும்.”

வலது பக்கம் ஒரு அறையை காட்டினார். உள்ளே சென்று வேலையை முடித்து விட்டு கொண்டு வந்தேன்.

“நான் வருகிறேன் சார்”

“நன்றி”

அந்த வீட்டை விட்டு வெளியே வந்தேன். இது என்ன கனவா? கூட்டணி பேச்சு வார்த்தை. கையில் அறுபது லட்சம். அரசியலில் எதுவும் நடக்கும் என்பது இதுதானா?”

பாவம் அந்த மனிதர். குழப்பத்தில் என்ன செய்வது என்றே தெரியவில்லை அவருக்கு. நேபாளத்து கூர்க்கா சங்க தலைவரை கூப்பிட்டா கூட்டணி பேச்சு வார்த்தை நடத்துவது? எங்கள் சங்கத்தில் யாருக்கும் இந்தியாவில் ஓட்டே கிடையாது. அவரை நினைத்து சிரிப்பதா? அழுவதா? என்றே தெரியவில்லை.

நேபாளத்துக்கு அடுத்த விமானம் எப்போது என்று விசாரிக்க மொபைலை வெளியே எடுத்தேன்.



பாகிஸ்தான் உளவாளி

ளவாளிகளை பற்றி தெரிந்து கொள்வது ஆர்வமூட்டக்கூடிய ஒரு விஷயம். எதிரிகளின் கூடாரத்துக்குள்ளேயே ஊடுருவி அவர்களை பற்றி தகவல் திரட்டுபவர்கள் எத்தனை பெரிய வீரர்களாய் இருக்க வேண்டும். அது மட்டுமா? அவர்களிடம் நவீன தொழில் நுட்பங்கள் அனைத்தும் இருக்கும். பேனாவுக்குள் இருந்து  துப்பாக்கி குண்டுகள் பாயும். சட்டை பட்டனில்  கேமரா வைத்து இருப்பார்கள். இப்படி ஜேம்ஸ்பாண்ட் முதல் கமலஹாசன் வரை நாம் பார்த்த அத்தனை உளவாளிகளும் நம்மை வியக்க வைப்பவர்களாகவே இருக்கிறார்கள்.

சில வருடங்களுக்கு முன் எங்கள் ஊரில் ஒரு வித்தியாசமான மனிதர் சுற்றி திரிந்தார். பார்த்தால்அறுபது வயது மதிக்க கூடியவராக இருந்தார். நீண்ட வெள்ளை தாடி, சிகப்பு பேண்ட், நீண்ட மஞ்சள் சட்டை, முதுகில் ஒரு பெரிய மூட்டை இவற்றோடு ஊரை சுற்றி வருவார். தோற்றத்தை வைத்து அவர் எந்த ஊர் என்று கணித்து சொல்ல முடியாது. தமிழர் போலவும் தெரிவார்; வட இந்தியர் போலவும் தெரிவார்.

அவரின் உடையின் நிறங்களும், அவர் முதுகில் இருந்த மூட்டையும் ஊரில் இருந்த அனைவரின் கவனத்தையும் எளிதில் அவர் மேல் திருப்பி விட்டது. பிச்சைக்காரர் போல தெரிந்தாலும் அவர் யாரிடமும் பிச்சை கேட்டு சென்றதில்லை. அவர் எங்கே தங்குகிறார் என்பதும் யாருக்கும் தெரியவில்லை. அதை விட பெரிய ரகசியமாக அவர் வைத்து இருந்த மூட்டை இருந்தது. அதற்குள் அவருடைய துணிமணிகள் இருக்கிறது என சிலர் நினைத்து கொண்டு இருந்தார்கள். இன்னும் சிலரோ அவர் அதில் அவர் குப்பைகளை சேகரித்து விற்று காசு சம்பாதிக்கிறார் என்றார்கள்.


இப்படி ஊரறிந்த மர்ம மனிதராக இருந்த அவரை சில நாட்களாக காணவில்லை. எங்கே சென்றார் அவர் என அனைவரும் யோசித்து கொண்டிருந்தபோதுதான் அந்த தகவல் கிடைத்தது. அந்த பெரியவர் பாகிஸ்தான் உளவாளியாம். அவர் மூட்டைக்குள் இருந்தவை எல்லாம் அதி நவீன தகவல் தொடர்பு சாதனங்களாம். எங்கள் ஊரை பற்றி தினமும் சேகரித்த தகவல்களை இரவு சுடுகாட்டுக்குள் சென்று பாகிஸ்தான் அனுப்பி விடுவாராம். எப்படியோ போலீசுக்கு இந்த தகவல் கிடைத்து அவரை கைது செய்து விட்டார்களாம். அவரை பிச்சைக்காரராக அறிந்து இருந்த அனைவரும் அவரை பற்றி உண்மை அறிந்ததும் திடுக்கிட்டார்கள். ஊரே அந்த கிழவரை பற்றி பரபரப்பாக பேச தொடங்கியது.

பேசியவர்கள் இரண்டு  நாட்களில்  பின் அவரை பற்றி மறந்தும் போனார்கள். மூன்றாவது நாள் அந்த கிழவர் மீண்டும் தெருவில் தட்டுபட தொடங்கினார். இப்போது ஊர்க்காரர்கள் அவர் எப்படி  வெளியே வந்தார் என்று யூகித்து பேசிக் கொண்டனர். போலீஸ் அவர் திட்டம் என்ன என்று அறிய அவரை வெளியே விட்டு விட்டார்களாம் . கிழவரும்  தன் மீது போலீசுக்கு சந்தேகம் நீங்கி விட்டது என நினைத்து சதி திட்டம் தீட்டும்போது ரகசியமாக(??) பின் தொடரும் போலீஸ் அவரை கையும் களவுமாக  பிடித்து அவரின் சதி செயலையும் கண்டறிந்து தடுத்து விடுமாம். இந்திய போலீசின் திறமையை எண்ணி ஊரே மெய் சிலிர்த்து கொண்டது.

சில நாட்களில் அந்த கிழவரை மீண்டும் காணவில்லை. இப்போது அவரை பற்றி அதிகம் யாரும் பேசவில்லை. பேசி அலுத்து விட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம். அந்த கிழவரை பக்கத்துக்கு ஊரில் பார்த்ததாக சிலர் கூறினார்கள். அதற்கு மேல் அவரை எல்லாரும் மறந்து விட்டார்கள். இன்று வரை அவர் உண்மையிலேயே  பாகிஸ்தான் உளவாளியா? போலீஸ் அவரை கைது செய்ததா? அவர் மூட்டையில் என்ன இருந்தது என யாருக்கும் தெரியாது. அதை விட பாகிஸ்தான் உளவாளிக்கு மதுரை பக்கத்தில் உள்ள ஒரு சிறிய டவுனில் உளவு பார்க்க என்ன இருக்கிறது என்பதும் யாருக்கும் புரியாத ரகசியம்.

அவரை உளவாளி என கிளப்பிவிட்டது யார்? அந்த கதையை விறுவிறுப்பாக அமைத்து கொடுத்தது யார் என தெரியவில்லை. எது எப்படியோ, அந்த கிழவர் எங்கள் மக்களுக்கு பரபரப்பாக பேச ஒரு விஷயத்தை கொடுத்து ஒரு ஸ்பை த்ரில்லர் படத்தில் எங்களையும் கதாபாத்திரமாக்கி விட்டார். நாங்களும் ஒரு உளவாளியை நேரில் பார்த்த சந்தோசத்தை இழக்க விரும்பாமல் அவரை எங்கள் மனதில் உளவாளியாகவே நிறுத்தி கொண்டோம்.
  

Wednesday, February 19, 2014

ஹரிஹரன் - இரண்டாம் வகுப்பு

ரியான வேலை கிடைக்காமல் சுற்றி கொண்டிருந்த நாட்களில் ஒரு சிறிய நிறுவனத்தில்(??) எனக்கு வேலை கிடைத்தது. சிறிய என்றால் மிக மிக  சிறிய. நிறுவன முதலாளியின்  வீட்டின் மாடியில் இருந்த  அறைதான் அலுவலகம். அந்த பத்துக்கு ஆறு அளவிலான அறையில் நான்கு கணிப்பொறிகள். அதில் ஆண்கள் இரண்டு, பெண்கள் இரண்டு என என்னையும் சேர்த்து நான்கு ஊழியர்கள். அறையின் நடுவில் எங்கள் முதலாளி தனது மடிக்கணினியுடன் அமர்ந்திருப்பார்.

முதலாளியின் குடும்பம் அந்த வீட்டிலேயே இருந்ததால் அவரின் குடும்ப உறுப்பினர்கள் சில நேரங்களில்  எங்கள் அலுவலக அறைக்கு வருவார்கள். சில நேரங்களில் வீட்டில் ஏதாவது வித்தியாசமாக சமைத்து இருந்தால் எங்களுக்கு கொண்டு வந்து தருவார்கள். இந்த பதிவின் நாயகனான  எங்கள் முதலாளியின் ஏழு வயது பையனும் விடுமுறை நாட்களில் அடிக்கடி எங்கள் அலுவலகத்துக்கு விஜயம் செய்வான். அவன் அப்போது இரண்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்தான். ஆள் நன்றாக கொழுக் மொழுக்கென்று இருப்பான். ஒரே பையன் என்பதால் வீட்டில் செல்லம் அதிகம். எங்களிடம் அதிகாரமாக பேசுவான். அவன் வந்தால் முதலாளி தனது கணிணியை அவனுக்கு விளையாட கொடுத்து விடுவார்.

ஒரு செவ்வாய்கிழமை மாலைப் பொழுதில் அவன் அலுவலக அறைக்குள் பாய்ந்து வந்தான். எப்போதும் விடுமுறை நாளில்தானே வருவான். இன்றைக்கு எதற்கு வந்திருக்கிறான்? அதுவும் இத்தனை உற்சாகமாக என்று நினைத்து கொண்டேன்.

“என்னடா? ஹோம் வொர்க் செய்யலியா?” என்றார் முதலாளி.

“நாளைக்கு லீவு. நாளைக்கு செஞ்சுக்குறேன்.”

“நாளைக்கு எதுக்குடா லீவு?”

“எங்க மிஸ்சுக்கு கல்யாணம்”

“அப்பிடியா?” என்ற முதலாளி மீண்டும் வேலையை கவனிக்க தொடங்கினார்.

இப்போது நமது ஹீரோ பாவமாக முகத்தை வைத்து கொண்டான்.

“அப்பா! எங்க மிஸ்சுக்கு பாப்பாவே இல்லையாம்பா.... அதான் அவங்க கல்யாணம் செஞ்சுக்க போறாங்கலாம்பா” என்றான்.

நாங்கள் இருந்ததால் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அவனை பார்க்காமல் முகத்தை திருப்பி கொண்டு  “ம்” என்று சொல்லி வைத்தார் முதலாளி.

இப்போது  அவன் மீண்டும் “அப்பா! எனக்கும் ரெண்டு பாப்பா... வேணும்னு ஆ......சையா இருக்குப்பா.......” என்று இழுத்து இழுத்து லொள்ளு சபா மனோகர் பாணியில் சொன்னானே பார்க்க வேண்டும்.

அவன் முகத்தையும், சொல்லிய விதத்தையும் பார்த்ததும் எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. பெண் ஊழியர்களோ எதுவுமே நடக்காதது போல முகத்தை இறுக்கமாக வைத்து கொண்டார்கள். ஆனால் அவர்களும் அனேகமா தனியாக நினைத்து நினைத்து சிரித்திருப்பார்கள். நான் சிரிப்பை மெல்லவும் முடியாமல், மிழுங்கவும் முடியாமல் அறையை விட்டு வெளியேறி தனியாக சென்று பத்து நிமிடங்கள் சிரித்துவிட்டு சிரிப்பு அடங்கிய பின்னரே அறைக்கு திரும்பினேன்.

அன்று அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய பின்னர் என் நண்பனிடம் இந்த விஷயத்தை கூறி “இரண்டாம் வகுப்பு படிக்கிற பசங்க வகுப்புல  எப்பிடி எல்லாம் பேசிக்கிறாங்க பாரேன். இவன் நாலாவது படிக்கும்போது கூட படிக்கிற  பொண்ணை லவ் பண்றேன்னு இழுத்துட்டு வந்துடுவான்” என்றேன்.

“இந்த ஜெனரேஷன் ரொம்ப அட்வான்ஸ்டா. இதெல்லாம் பெருசா எடுத்துக்க கூடாது” என்றான்.

“அதில்லடா! நானெல்லாம் மூணாம் வகுப்பு வரை குழந்தைங்களை கடைல செஞ்சுவிப்பாங்கன்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன்.” என்றேன்.

“நீயாவது பரவாயில்ல! நானெல்லாம் பனிரெண்டாம் வகுப்பு படிக்கிற வரைக்கும் பையனும், பொண்ணும் கட்டி பிடிச்சுகிட்டா உடனே  குழந்தை உண்டாகிடும் அப்பிடின்னு நெனைச்சுகிட்டு இருந்தேன்” என்றான், சீரியஸாக முகத்தை வைத்து கொண்டு.


நான் பதில் சொல்லவில்லை. அவன்தான் இந்த ஜெனரேஷன் ரொம்ப ரொம்ப அட்வான்ஸ் என்று ஒரே பதிலில் புரிய வைத்து விட்டானே?


Monday, February 17, 2014

திருவள்ளுவர் என்னும் புலவரின் வாழ்வு

நான் இரண்டாம் வகுப்பு படித்த காலத்தில்  திருவள்ளுவரை பற்றி ஒரு பாடம் இருக்கும். திருவள்ளுவர் எங்கே பிறந்தார் என்று துல்லியமாக தெரியவில்லை என்று சொல்லி  ஒரு நான்கு, ஐந்து ஊர்களை சொல்லி அவைகளில் ஏதோ ஒரு ஊரில் அவர் பிறந்து இருக்க வேண்டும் என்று சொல்லி இருப்பார்கள். இப்படி திருவள்ளுவரை பற்றி துல்லியமாக எதுவும் தெரியாதது பலருக்கு வசதியாக இருக்கிறது என்று அப்போது நான் அறிந்திருக்கவில்லை. அப்போது  தொடங்கி பன்னிரண்டாம் வகுப்பு வரை திருவள்ளுவரை பற்றியும், திருக்குறளையும் கற்று கொடுக்காத வகுப்பே இல்லை.

உண்மையில் அப்போது திருக்குறளை மனனம் செய்வது கடினமான காரயமாக இருந்தது. அதிலும் ஒரு வார்த்தையை கொடுத்து அதில் தொடங்கும் குறளை எழுது என்று கேட்பார்கள். அதை கூட எழுதி விடலாம். ஆனால் ஒரு வார்த்தை கொடுத்து அதில் முடியும் குறளை எழுத சொல்லுவார்கள். அது சற்று கடினமான விஷயம். பாட புத்தகத்தில் உள்ள அனைத்து குறள்களையும் பிசிறு இன்றி படித்து இருந்தால்தான் அது சாத்தியம். அப்போதெல்லாம்   திருவள்ளுவரை பற்றி நினைத்தால் எரிச்சலாக வரும். யாருய்யா இந்த ஆள்? அவர் பாட்டுக்கு எதையோ எழுதி விட்டு போய் விட்டார், இப்போது நாம் கஷ்டப்பட வேண்டியுள்ளது என சலித்து கொள்வேன்.

அதே திருவள்ளுவரை பற்றி இப்போது நினைத்தால் பிரமிப்பாக உள்ளது. ஒரு பதிவு எழுதுவதே மிக சிரமமாக உள்ளது. அப்படியே எழுதினாலும் அதில் அத்தனை பிழைகள். ஆனால் திருவள்ளுவரை பாருங்கள். ஆயிரத்து முன்னூற்று முப்பது குறள்களை எழுதி இருக்கிறார். அதுவும் கடினமான இலக்கிய வடிவமான குறள் வெண்பா வடிவில். அத்தனை பாடல்களையும் அசை, சீர், தளை எல்லாம் தட்டாமல் இலக்கணப்படி எழுத வேண்டுமானால் எத்தனை புத்திசாலியாக இருக்க வேண்டும்? அதுவும் ஒவ்வொரு குறளிலும் இருக்கும் கருத்துகள் என்ன சாதாரணமானதா? அவற்றை எழுத எத்தனை அனுபவமும், சிந்தனையும் தேவை. அத்தனை புத்திசாலித்தனத்துக்கு ஒரு வேளை அவர் இப்போது பிறந்து இருந்தால் எளிதாக அமெரிக்க விசா பெற்று அமெரிக்காவில்  ஆராய்ச்சி செய்ய சென்று இருப்பார்.

என்னதான் புத்திசாலித்தனம் இருந்து இருந்தாலும் திருக்குறளை எழுதுவது அவருக்கு எளிதான காரியமாக இருந்து இருக்காது. புலமையும், வறுமையும் பிரிக்க முடியாதது என்பதால் வள்ளுவர் பெரும் செல்வந்தராக இருந்திருக்க  வாய்ப்பில்லை. அவர் பனை ஓலையை எடுத்து ஒவ்வொரு  எழுத்தாக செதுக்கி கொண்டிருந்தபோது வாசுகி “என்ன இவர்? பக்கத்து வீட்டு ஆண்களெல்லாம் சுறுசுறுப்பாக வேலைக்கு செல்லும்போது இவர்  மட்டும் எதையோ எழுதி கொண்டுள்ளார்?” என்று நினைத்து இருக்கலாம். திருவள்ளுவர் எழுதியதை வாசுகி வாசித்து இருந்தால் அதுவே பெரிய விசயம்தான். என்னதான் கணவன் சொல்லை மீறாமல் சொன்ன சொல்லுக்கு உடனே ஓடி வருபவராக  இருந்திருந்தாலும் வாசுகியும் ஒரு பெண்தானே? இதையும் வள்ளுவர் சமாளித்து இருக்க வேண்டும்.

அத்தனை குறள்களையும் எழுத அவருக்கு சில  ஆண்டுகள் பிடித்து இருக்கலாம். அத்தனை ஆண்டுகளுக்கும் அவரை ஸ்பான்சர் செய்ய ஏதாவது ஒரு மன்னரை பிடிக்க வேண்டி இருந்து இருக்கும். அந்த இடைப்பட்ட காலத்தில் ஸ்பான்சர் செய்த மன்னர் போரில் எதுவும் தோற்று விட்டால் வேறு மன்னரிடம் ஸ்பான்சர்ஷிப் கேட்டு செல்ல வேண்டியதாக இருந்து இருக்கும். இது அவருக்கு பெரிய பிரச்சனையாக இருந்து இருக்கும்.

வள்ளுவர் திருக்குறளை மதுரையில் அரங்கேற்றம் செய்ததாக வேறு சொல்லுவார்கள். ஒரு வேளை அவர் பிறந்தது மைலாப்பூர் என்று வைத்து கொண்டால் மதுரைக்கு செல்ல எத்தனை கஷ்டப்பட்டு இருப்பார்? இன்றைக்கே சென்னையிருந்து, மதுரைக்கு செல்வது பெரும்பாடாக உள்ளது. தேசிய நெடுஞ்சாலையும், ரயில்வே ட்ராக்கும் இல்லாத காலத்தில் அவர் மதுரை செல்ல எத்தனை பேரிடம் வழி விசாரித்து இருக்க வேண்டும். வண்டலூரை வந்து சேர்வதற்குள்ளாகவே பெரும்பாடாக இருந்து இருக்கும்.

இதென்ன அர்த்தமில்லாமல் என்னென்னவோ சொல்லி கொண்டுள்ளேன் என்கிறீர்களா? சமீபத்தில் சந்தித்த ஒரு பெரியவர் திருவள்ளுவர் ஒரு கிறிஸ்தவர்தான் என்று சாதித்தார். அதற்கு லாஜிக்கே இல்லாமல் ஒரு விளக்கம் வேறு கொடுத்தார். அவரை சொல்லி குற்றமில்லை. யாரோ சொல்லி கொடுத்ததை இவர் மற்றவர்களுக்கு சொல்கிறார். திருவள்ளுவர் சொன்ன கருத்துகளை எல்லாம் மறந்து விட்டு இப்படி சம்பந்தமில்லாமல் அவரை மதம் மாற்றுகிறார்களே? நாமும் அவர்கள்  போல திருவள்ளுவர் பற்றி ஆராய்ச்சி செய்தால் என்ன என்று முயற்சி செய்து பார்த்தேன். அவ்வளவுதான்.

Friday, February 14, 2014

ஒரு காதலர் தினத்தில்

ந்த மதிய பொழுது தந்த சோம்பலில் அலுவலகம் மந்தமாக இயங்கி கொண்டு இருந்தது. ரமேஷின் கைகள் நடுங்கி கொண்டு இருந்தன.

"ரொம்ப பயமா இருக்குடா."  அவன் பயம் முகத்தில் நன்றாகவே தெரிந்தது.

"பயப்படுறவன் எல்லாம்  தூரத்துல நின்னு வெறிச்சு பாத்துட்டு ஓடிடணும். கிட்ட யாருமே இல்ல. இதான் சரியான நேரம். சீக்கிரம் போய் வேலையை முடிச்சிடு." 

"நீ என் கிட்ட வந்து நின்னுக்கோ.  அவ ஒரு வேளை சத்தம் போட ஆரம்பிச்சான்னா.."

"டேய்! அவ படிச்ச பொண்ணு. பிடிக்காட்டி முகத்துக்கு நேரா சொல்லிடுவா. பயப்படாம போ."

"இல்லடா. அது..."

"டேய்! நீதான அவ பச்சை டிரஸ் போட்டு இருக்குறதே உனக்காக அப்பிடின்னு சொல்லி என்னை கூட்டிகிட்டு வந்த."

"அவ என் கூட நல்லா பேசுறா. பழகுறா. ஆனா காதல்னு ஆரம்பிச்சா தப்பா எடுத்துகிட்டா"

"தப்பாதான் எடுத்துப்பா. இதெல்லாம் பார்த்தா தொழில் பண்ண முடியுமா பாஸ்."

நான் சொன்னதும் முறைத்தான்.

"சரி விடு. நான் கேக்குறதுக்கு  பதில் சொல்லு, காலைல இருந்து உன் கூட பேசுனாளா?"

"ஆமா. ஆனா தினமும் எப்படியும் என் கூட பேசிடுவா"

"அடுத்த கேள்வி. பேசும்போது அடிக்கடி சிரிப்பாளா?"

"அவளுக்கு எப்பவுமே சிரிச்ச முகம்தான்."

"ம்ம். அப்போ ரொம்ப சரி. அவ உன்னை காதலிக்கிறா. பாரு. உன் கூட தினமும் பேசுறா. அதுவும் சிரிச்சுகிட்டே பேசுறா. காதலர் தினத்தன்னிக்கு பச்சை டிரஸ் போட்டுகிட்டு வந்து உன் முன்னாடி நிக்குறா. இதுக்கு மேல ஒரு பொண்ணு என்னதான் பண்ண முடியும். இது கூட புரியலையா உனக்கு." 

நான் சொல்லிய காரணங்கள் எனக்கே மிகையாக தெரிந்தன. இருந்தாலும் வாழ்வில் முதல் முறையாக ஒரு ஆண் பெண்ணிடம்  காதல் சொல்லும் காட்சியை காணும் ஆவலில் அவனை தூண்டி விட்டேன்.

"அப்போ போகலாமா?"

"போடா மடையா. "

"போறேன். ஆனா அங்க நான் பேசுறது இங்க உனக்கு கேக்குமா?"

"இப்போ நாம பேசுற மாதிரி பேசுனா கேட்காது. கொஞ்சம் சத்தமா பேசுனா கேக்கும்"

"அப்போ ஒரு வேளை  அவ என்னை பிடிக்கலன்னு சொல்லிட்டா வெளிய சொல்லி என்னை அசிங்கப்படுத்த கூடாது."

"என்னடா நீ! உன்னை எப்பிடி நான்"

நான் சொல்ல வந்ததை கேட்காமல் அவன் இருக்கையில் இருந்து எழுந்து தயங்கி தயங்கி அவளை நோக்கி முன்னேறினான். 

"டேய்! காதலிக்க போறவன் மாதிரி போ. கற்பழிக்க போறவன் மாதிரி போகாத."

திரும்பி முறைத்து விட்டு நடந்தான்.


"ஸ்வாதி!" அவன் கூப்பிட்டது எனக்கு துல்லியமாக கேட்டது.

நான் காதுகளை தீட்டி கொண்டேன்.

"சொல்லுங்க ரமேஷ். என்ன வேலை இல்லையா?"

"வேலை இருக்கு. அதான் இந்த பக்கம் வந்தேன்."

அவன் உளறும் போதுதான் புத்திசாலித்தனமாக பேசுவான் போல.

"என்ன வேலை?"

"உங்க டிரஸ் நல்லா இருக்கு."

"தேங்க்ஸ்"

"பிப்ரவரி 14 அன்னைக்கு பச்சை கலர் டிரஸ்ல வந்து இருக்கீங்க"

"ஏன்? அதனால என்ன?"

"இல்ல. அப்பிடி வந்தா காதலிக்க ரெடி அப்பிடின்னு சொல்லுவாங்க"

"அப்பிடியா? அப்போ நீங்க என்ன கலர் டிரஸ்ல வந்து இருக்கீங்க?"

"இது ப்ளூ கலர் ஸ்வாதி. ஏன் உங்களுக்கு தெரியலயா?"

எனக்கு எரிச்சலாக வந்தது. எல்.கே.ஜி வகுப்பா எடுக்கிறான்?

"எனக்கு எப்பிடிங்க தெரியும். எனக்குதான் கடவுள் அந்த அதிர்ஷ்டத்தை தரலியே"

"என்ன சொல்றீங்க?"

"ரமேஷ்! இந்த விஷயம் இங்க எல்லாருக்குமே தெரியும். உங்களுக்கு மட்டும் தெரியாதா? எனக்கு நிறத்தை பிரிச்சு பார்க்க முடியாது. நிறக்குருடு. மஞ்சள், பச்சை, சிகப்பு, ஆரஞ்ச் எல்லாமே எனக்கு ஒண்ணுதான். பரம்பரை வியாதி . எனக்கு இன்னும் சரியான மாப்பிள்ளை கிடைக்காததுக்கு இது கூட ஒரு காரணம்."

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. எழுந்து அவள் முகத்தை பார்த்தேன். எப்போதும் போல அதே சிரித்த முகம் . ரமேஷை பார்த்தேன். அவன் முகத்திலும் அதிர்ச்சி. ரமேஷ்! திரும்பி வந்து விடு. அவள் உன்னை காதலிக்கவில்லை. அவளின் சிரிப்பு, உடை எதுவுமே உனக்காக இல்லை. எழுந்து சென்று அவனை அழைத்து வந்து விடலாமா என்று யோசித்தேன்

"சாரி சுவாதி. கஷ்டப்படுத்திட்டேன்"

"இதுக்கு எதுக்கு சாரி? 

"சரி! அப்போ ஐ லவ் யூ"

"ரமேஷ்"

"சீரியசாதான் சொல்றேன். கொஞ்ச நாள் காதலிக்கலாம். நவம்பர்ல கல்யாணம் செஞ்சுக்கலாம்."

அவள் பதில் சொல்லாமல் குனிந்து கொண்டாள். ரமேஷ் திரும்பி வந்து விட்டான். 

நாட்கள் உருண்டு ஓடிய பின் அந்த வருடம் நவம்பரில் ரமேஷ்-சுவாதி திருமணத்துக்கு சென்று இருந்தேன். அடுத்த ஆறு மாதங்களில் அவர்கள் இருவருமே வேறு வேலைக்கு சென்று விட்டார்கள்.நான்கு வருடங்களுக்கு பின் ரமேஷை பேருந்து நிலையத்தில் சந்தித்தேன். ஒரு ஆண் குழந்தை இருப்பதாக சொன்னான். அந்த குழந்தைக்கு நிறத்தை பிறித்தறிவதில் எந்த  குறைபாடும் இல்லை என்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்களாம் .

"காதலர் தினத்தன்னைக்கு காதலை சொன்னதால பெரிய வெற்றி போல" என்றேன்.

"காதலர் தினம் எல்லாம் பைத்தியகாரத்தனம். காதலுக்கு நாள், கிழமை எல்லாம் இல்லை. உண்மையான காதலர்களுக்கு எல்லா நாளும் கொண்டாட்டமான நாள்தான்" என்றான்.

அனுபவப்பட்டவன் ஆயிற்றே. சொல்லுவது சரியாகத்தான் இருக்கும்.



Monday, February 3, 2014

கேப்டனின் ஊழல் எதிர்ப்பு மாநாடு

ரம்பிக்கும்போதே "நான் கொஞ்சம் முன்ன பின்ன பேசுவேன். நீங்களே கோர்த்துகோங்க" என்று ஆரம்பிக்கிறார். பின்னர் தனது வலது பக்கம் யாரையோ பார்த்து என்னவோ சொல்கிறார். விழிப்புடன் இருக்கும் 'கேப்டன்'  டிவி ஊழியர்கள் அவர் பேசுவது கேட்காமல் குரலை கட் செய்து விட்டு ஒரு பாடலை ஒலிக்க விடுகின்றனர். மீண்டும் அவர் குரல் கேட்கும்போது யாரோ ஒரு காவல் துறை அதிகாரியை திட்டுகிறார். தான் காவல்துறை அதிகாரியாக அதிக படங்கள் நடித்ததை எண்ணி வெட்கப்படுவதாகவும், இனி தானோ, தன் மகனோ போலீசாக எந்த படத்திலும் நடிக்க மாட்டோம் என்று சூளுரைக்கிறார். 

பின் அவர் ஆரம்பிக்கும்போதே சொன்னது போல தொடர்ச்சியற்ற கருத்துகள். ஜெயலலிதாவை திட்ட சில நிமிடங்கள், தன்னுடைய தொண்டர்களின் பலம் பற்றி சில நிமிடங்கள், தன்னை குடிகாரன் என்று சொல்பவர்களுக்கு பதிலளித்து சில நிமிடங்கள், சுய புராணம் சில நிமிடங்கள் , தொண்டர்களை பத்திரமாக ஊர் திரும்ப சொல்லி சில நிமிடங்கள், கூட்டணி பற்றி சில நிமிடங்கள்,  ஊழல் எதிர்ப்பு மாநாடு என்று பெயர் வைத்து விட்டோமே என்று ஊழலை பற்றி ரெண்டு வரிகள். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கிறுகிறுக்க வைத்து விட்டார் விஜயகாந்த்.  எந்த வித முன் தயாரிப்பும் இன்றி அவரிடமிருந்து  வந்த வார்த்தைகளை ஒரு சினிமா  எடிட்டர் போல  வெட்டி, ஒட்டி அவரின் தொண்டர்களும் புரிந்து கொண்டார்கள். நடுநடுவில் அவர் சீறிய போதெல்லாம் அவர் குரலை தொலைகாட்சியினர் கட் செய்து விட்டனர்.


அரசியல்வாதிகளின் மூலதனமே பேச்சுதான். இத்தனை அனுபவம் வாய்ந்த கலைஞரே கூட தயாரிப்பு இல்லாமல் எந்த மாநாட்டிலும் பேசுவது போல தெரியவில்லை. சில நேரங்களில் காகிதத்தில் எழுதி  வந்தும் வாசிப்பார். இப்போது விஜயகாந்தின் அவசர தேவை அவர் பேசவேண்டியதை எழுதி தர கூடிய ஒருவர். அப்படி ஒருவரை விஜயகாந்த் கண்டு பிடித்து பயன்படுத்தினால் அவருக்கு அரசியலில் பெரிய வெற்றி பெற கூடிய சாத்தியம் இருக்கிறது. செய்ய தவறினால் அவருக்கு இயல்பாகவே அமைந்த வாய்ப்பை அவரே வீணடிக்கிறார் எனலாம்

விஜயகாந்த் பேசியது எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். அதென்ன கட்சி தொடங்கி இதனை ஆண்டுகளுக்கு பின் ஊழல் எதிர்ப்பு? ஆம் ஆத்மியின் அதிரடி வெற்றி விஜயகாந்தை யோசிக்க வைத்து இருக்க வேண்டும். கெஜ்ரிவாலை போல அவரும் ஊழல் எதிர்ப்பை கையில் எடுத்து ஒரு மாநாடும் நடத்தி விட்டார். அதில் வியக்க வாய்த்த விசயம் அவர் சேர்த்த கூட்டம். எங்கிருந்து இத்தனை பேரை கூட்டினார் என்று அவரின் கட்சியினருக்கே வெளிச்சம். அதை விட பெரிய விஷயம் தன் தொண்டர்களிடம் கருத்து கேட்டு கூட்டணி இல்லை என்று சொன்னது. அந்த அறிவிப்பு தன்னுடைய டிமாண்டை அதிகரிக்கும் உத்தியா அல்லது உண்மையான அறிவிப்பா என்று போக போகவே தெரியும்.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். விஜயகாந்த் எப்போதும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று அரசாங்க அதிகாரிகள் கடவுளை வேண்டி கொள்வார்கள். ஏனென்றால் முதல்வரை சந்திக்க போகும்போது,  தலைமை ஆசிரியரை பார்க்க போகும் பள்ளிகூட பையன் போல எப்போது அடி கிடைக்கும் என்று  பயந்து நடுங்கி கொண்டேதானே போக வேண்டியது இருக்கும். 


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...