Wednesday, March 26, 2014

யாருக்குதாங்க வோட்டு போடுறது?

“சார்! எனக்கு நீங்க ஒரு உதவி செய்யணும்”

“சொல்லுங்க”

“வரப் போற தேர்தல்ல  எங்க குடும்பம் யாருக்கு ஒட்டு போடணும்னு நீங்கதான் சொல்லணும்”

“அது ஏன் நான் சொல்லணும்? எனக்கு என்ன தெரியும்”

“என்ன சார்? ப்ளாக் எல்லாம் எழுதுறீங்க. உங்களுக்கு தெரியாதது வேற யாருக்கு தெரியும்”

“யோவ்! அந்த ப்ளாக்ல எழுதுறதை நானே படிக்கிறது இல்ல. அவ்வளவு மட்டமா எழுதிகிட்டு இருக்கேன்”

“ரொம்ப தன்னடக்கமா பேசுறீங்க சார். ஆனா தயவு செஞ்சு இந்த உதவியை எனக்கு செய்ங்க. தப்பா யாருக்கும் போடக் கூடாதுன்னுதான் உங்ககிட்ட கேக்குறேன்.”

“சரி! நீ முதல்ல யாருக்கு போடலாம்னு யோசனைல இருக்க சொல்லு”

“காங்கிரஸ்”

“ஏன்யா! பத்து வருஷம் பட்டும் உனக்கு புத்தி வரலியா?”

“அப்போ பிஜேபி போட்டுடவா? மோடி பெரிய தலைவர்னு சொல்றாங்க”

“அது மட்டுமா சொல்றாங்க. அதெல்லாம் மீடியா கிளப்பி விடுறதுன்னும் சொல்றாங்க. அது மட்டும் இல்ல. அவர் வந்தா ஹிந்தியை திணிப்பார்னு வேற சொல்றாங்க. சொல்லு இந்த வயசுக்கு மேல ஹிந்தி கத்துப்பியா?”

“மாட்டேன் மாட்டேன். ஆனா அது எப்பிடிங்க ஹிந்தியை திணிக்க முடியும்?”

“ரொம்ப பேசாத. மத்தவங்க சொல்றதை நான் உனக்கு சொல்றேன். சரி உங்க குடும்பம் யாருக்கு ஓட்டு போட போறாங்க?”

“எங்க பெரிய அத்தை அரவிந்த் கேசரிவால்னு யாருக்கோ ஓட்டு போடப்போகுதாம்”

“அது அரவிந்த் கெஜ்ரிவால்யா”

“அது வட மொழில. தமிழ்ல கேசரின்னுதான் சொல்லணும்”

“எப்படியோ சொல்லி தொலை”

“அவருக்கு போடலாமா?”

“ஏன்யா! அவரே  எதுக்கெடுத்தாலும் போராடுவாரு. நாளைக்கு பிரதமர் ஆனதுக்கு அப்புறம் சர்வதேச மாநாடு எங்கயும் போயிட்டு அங்க சாப்பாடு சரி இல்லன்னு வெளிய வந்து போராட ஆரம்பிச்சா நம்ம நாட்டுக்கு எப்படிபட்ட அவமானம்? அந்த அவமானத்துக்கு உங்க பெரிய அத்தை காரணம் ஆகணுமா?”

“அதுவும் சரிதானுங்க. அப்போ கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஓட்டு போட சொல்லிடவா?”

“எதுக்கு? இந்தியா சீனா ஆகவா? நாளைக்கே அவங்க பேஸ்புக், ப்ளாக் எல்லாம் தடை செஞ்சுட்டா நான் எழுதறதை எல்லாம் எங்க போய் படிப்ப? நான் எழுதலன்னா நாட்டுக்கு எத்தனை பெரிய பேரிழப்பு.”

“வாஸ்தவம்தானுங்க. அப்போ திமுகதான்”

“திருந்தவே மாட்டீங்களா?”

“அப்போ ஆதிமுகவுக்கு வோட்டு போடவா? முதல்வரை பிரதமர் ஆக்கிடலாம்”

“ஆக்கலாம்தான் . ஆனா காஷ்மீர் பிரச்சனைக்கு யாரு காரணம், பொருளாதார சரிவுக்கு யாரு காரணம்னு வரலாறு பாடம் நடத்தியே அஞ்சு வருஷம் ஓட்டிடுவாங்க. நீ அவங்க செய்வாங்களா? எதுவும் நல்லது செய்வாங்களான்னு யோசிச்சுகிட்டே காலத்தை ஓட்ட வேண்டியதுதான் ”

“சரி அப்போ கூட்டணி எல்லாம் பாக்காம  வைகோவுக்கு ஓட்டு போட வேண்டியதுதான். நல்ல மனுஷன்.”

நல்ல மனுஷன்தான். ஆனா அவர் தேர்தல் அறிக்கையிலேயே இந்த குழப்பு குழப்பி இருக்காரே? அவர் மேல நம்பிக்கையே போச்சு.”

“அப்போ மனசை திடப்படுத்திகிட்டு எங்க சின்ன அத்தையை விஜயகாந்த் கட்சிக்கு குத்திட சொல்லிடவா.”

“சொல்லு. ஆனா அவங்க கட்சிக்காரங்க ஒருவேளை மந்திரி ஆனதுக்கப்புறம் அவங்க பேசுறது பிடிக்காம கேப்டன் அவங்க மூஞ்சில குத்திடாம. அத்தனை பெரிய பதவில இருக்குறவங்களுக்கு அவமானம்.”

“அப்போ யாருக்குதாங்க ஓட்டு போடுறது? பேசாம நோட்டா அப்பிடின்னு சொல்றாங்களே. அதுக்கு போட்டுடவா?”

“நீயும் நானும் மட்டும் அதுக்கு போட்டு என்ன ஆக போகுது.”

“அப்போ எதுக்குதான் போடுறது?”

“அது தெரியாமதான இத்தனை நேரம் உன் கூட மொக்கை போட்டேன், இதை படிக்கறாங்களே அவங்களை வேணும்னா கேளு. சொல்வாங்க”

“அவருக்குதான் தெரியல. ஏங்க படிக்கிறவங்களே நீங்களாச்சும் சொல்லுங்க. யாருக்குதாங்க வோட்டு  போடுறது?” 


Tuesday, March 18, 2014

ராஜேந்திரனின் சாட்டிங்கும், காயத்ரியுடன் டேட்டிங்கும்

ல்லூரியில் இறுதி ஆண்டின் கடைசி சில மாதங்கள். பாடங்கள் எல்லாம் நடத்தி முடித்து விட்டு வேறு என்ன செய்வது என்று தெரியாமல் ஆசிரியர்கள் எங்கள் வகுப்பு மாணவர்களை கணிப்பொறி ஆய்வகத்திலேயே சரணாகதி அடைய சொல்லி இருந்தனர்.

பொழுதுபோக்க என்ன செய்வது என்று தெரியாமல் நான் ஆர்குட் தளத்தில் மூழ்கி இருந்தபோது  கார்த்திகேயன் என்னை அழைத்தான்.

“மாப்பிள்ளை! விஷயம் தெரியுமா? இப்போ நம்ம கிளாஸ் பசங்க பொண்ணுங்க கிட்ட இருந்து மெயில் ஐடி வாங்கி சாட் செய்றானுங்கடா.”

“என்னடா இது? எப்பிடி வாங்குனாங்க? நம்ம காலேஜ்ல பசங்களும், பொண்ணுங்களும் பேசிக்க கூடாதுன்னு ரூலே இருக்கே? லேப்ல கூட நம்ம இந்த மூலைலயும் அவங்களை அந்த மூலைலயும்ல உக்கார வச்சு இருக்காங்க”

“கடைசி வருஷம் வந்தாச்சு. இன்னும் பயந்தா வேலைக்கு ஆகாதுன்னு எல்லாரும் துணிஞ்சு எறங்கிட்டாங்க.ஆனா பொண்ணுங்க ரொம்ப தெளிவு. பேசுனா மாட்டிப்போம்னு எப்பிடி டெக்னாலஜியை யூஸ் செய்யுதுங்க”

“வயித்தெரிச்சலை கெளப்பாத.”

“உனக்கென்ன வயித்தெரிச்சல்?”

“பின்ன நம்மளால செய்ய முடியாத விஷயத்தை மத்தவன் செஞ்சா. ஆமா காயத்ரி யாரு கூடவும் சாட் செய்யலதான?”

“நீ வேற. அவதான் எல்லாரோடவும் சாட் செய்யுறா. கொஞ்சம் சுத்தி  பாரு.”

பார்த்தேன். எல்லா மாணவர்களின்  திரையிலும் பேரழகி காயத்ரியின் சாட் விண்டோ தவறாமல் திறந்து இருந்தது. சிலர் அவர்களின் ரசனைக்கு ஏற்றபடி மற்ற சில பெண்களுடனும் சாட்டி கொண்டு இருந்தனர்.

“அப்போ நாம ரெண்டு பேரும்தான் வேஸ்டா?”

“ஆமாண்டா.”

விரக்தியுடன் திரும்பி கொண்டேன். நாமும் ஐடி வாங்கி  சாட் செய்தால்தான் என்ன? சே! சே! புலி பசித்தாலும் புல்லை தின்னாது. நம்முடைய நோக்கம் பெண்களை கலாய்ப்பது மட்டுமே. கடலை போடுவது போன்ற அற்ப விசயங்களில் நாம் ஈடுபடக் கூடாது. மனதுக்கு சமாதானம் சொல்லிக் கொண்டேன். அமைதியாக சில நிமிடங்கள் கழிந்த போதுதான் ராஜேந்திரன் கையில் கட்டுடன் ஆய்வகத்துக்குள் நுழைந்தான்.

“ராஜேந்திரா! என்னடா கட்டு?”

“சைக்கிள்ல இருந்து விழுந்துட்டேன்.” சொல்லிக் கொண்டே எனக்கு அருகில் இருந்த கணிப்பொறியை இயக்கினான். நேராக மெய்லை திறந்து சாட்டுக்கு காயத்ரியை அழைத்தான்.

“ராஜேந்திரா! நீ எப்படா அவ ஐடி வாங்குன?”

“நேத்தே வாங்கிட்டேன். நேத்து சாயந்தரம் அரை மணி நேரம் சாட் செஞ்சோம்” அவன் முகத்தில் பெருமை பொங்கியது. 

“கார்த்திகேயா! இங்க வாடா. நம்ம ராஜேந்திரன் என்ன செய்ய போறான் பாரு.” ஏதோ அதிசய காட்சியை பார்க்கப் போவது போல் கார்த்திகேயனையும் துணைக்கு அழைத்து கொண்டேன். கண்கள் விரிய திரையை பார்க்க தொடங்கினோம்.

ராஜ்: ஹாய்!!!

பதில் இல்லை. நானும், கார்த்திகேயனும் ஏளனப் புன்னகையோடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.

காயத்ரி: ஹாய்!! J

சில நிமிடங்களுக்கு பின் பதில் அளித்தாள். பாவம் அவள் என்ன செய்வாள். முப்பது மாணவர்களுக்கும் பதில் அளித்து விட்டு இவனுக்கு  பதில் சொல்ல  நேரம் ஆகி இருக்கும்.

ராஜ்: எப்பிடி இருக்க?
காயத்ரி: நல்லா இருக்கேன். என்ன கைல கட்டு?

இதை படித்ததும் நானும் கார்த்திகேயனும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டோம்.

“கார்த்தி! இது வேற மாதிரி போகுது. அவ அக்கறையா விசாரிக்கிற மாதிரி தெரியுது.”

“இப்போ என்ன செய்யுறது?”

“அவ உக்காந்து இருக்குற இடத்துல இருந்து இவன் தெரிவானா?”

“மாட்டான்”

“அப்போ அவன் கைய பிடி. ஏதோ டைப் பண்றான். சீக்கிரம்.”

கார்த்திகேயன் பாய்ந்து சென்று ராஜேந்திரன் கையை பிடித்து கொண்டான்.

“கைய விடுடா”

“பொறுமையா இரு. கொஞ்ச நேரத்துல விட்டுடுறோம்.” சொல்லிவிட்டு நான் அவனுடைய  மெயிலில் இருந்து  காயத்ரிக்கு பதில் அனுப்ப தொடங்கினேன்.

காயத்ரி: என்ன பதிலே இல்ல? கைல என்ன ஆச்சு?
ராஜ்: நாய் கடிச்சுடுச்சு.
காயத்ரி: இப்போ எப்பிடி இருக்கு?
ராஜ்: இப்போ என்னால குலைக்க மட்டும்தான் முடியுது. லொள்! லொள்! வவ்! வவ்!

தகவலை தட்டி விட்டு ராஜேந்திரனின் முகத்தை பார்த்தேன். கைகளை விடுவிக்க போராடி கொண்டு இருந்தான். கண்கள் கோபத்தில் சிவந்து போய், அவள் என்ன நினைப்பாளோ என்ற பயத்தில் முகம் வேர்த்து.

காயத்ரி: டாக்டரை பார்த்தியா? என்ன சொன்னார்?
ராஜ்: பார்க்க போனேன். ஆனா அவரையே நான்  கடிச்சு வச்சுட்டேன்.  லொள்! லொள்! வவ்! வவ்!
காயத்ரி: L

“என்னை விடுங்கடா” ராஜேந்திரனின் குரல் சத்தமாக ஒலிக்கத் தொடங்கியது.

“போதும் கார்த்தி! இனிமே அவ இவன் கூட சாட் செய்வான்னு நினைக்குற?”

அவன் கையை விட்டு விட்டான்.

“இன்னைக்கு நல்லா தூங்கலாம். வா லஞ்ச் போகலாம். அப்புறம்  சினிமா.”

நாங்கள் வெளியேறினோம்.

றுநாள் ராஜேந்திரன் மிக விரைவாக கல்லூரிக்கு  வந்து விட்டு இருந்தான்.

“என்னடா? இத்தனை சீக்கிரம்?”

“நேத்து காயத்ரி  எனக்கு போன் செஞ்சா.”

“எதுக்கு? கேவலமா சாட் பண்ணதுக்கு காய்ச்சி எடுக்கவா? ஹா ஹா”

“இல்லை. நேத்து என் கூட சாட் செஞ்ச பின்னாடி ரொம்ப சந்தோசமா சிரிச்சு கிட்டே இருந்தாளாம். எனக்கு நல்ல ஹுயூமர் சென்சுன்னு பாராட்டுனா. கை காயத்தை எப்பிடி இத்தனை ஸ்போர்டிவா எடுத்துகிட்டு காமெடி அடிக்கிறன்னு ஒரே பாராட்டு, எல்லாரும் சாட்ல வழிஞ்சப்போ நான் மட்டும்தான் இயல்பா பேசினேனாம்”

“லூசா அவ? அழகு இருந்தா அறிவு இருக்காதா என்ன?”

“கோவப்படாத. உனக்குத்தான் நான் தாங்க்ஸ் சொல்லணும்.”

“அப்போ வொர்க் அவுட் ஆயிடுச்சா?”

“ஆயிடும். இன்னைக்கு வெளியே வேற கூப்பிட்டு இருக்காளே.”

சொல்லிவிட்டு சிரித்துக் கொண்டான். இதுதான் பிள்ளையார் பிடிக்க போய் குரங்காக போவதா? நாம் என்ன அத்தனை பெரிய காமெடியா செய்து விட்டோம்? குழம்பிக் கொண்டேன், இருந்தாலும் கதையில் இன்னொரு ட்விஸ்ட் வந்து காயத்ரி  அவனை தனியாக அழைத்து போய் சாட்டில் கலாய்த்ததற்கு நான்கு சாத்து சாத்தி அனுப்பினாலும் அனுப்புவாள் என்று நினைத்து கொண்டு மறுநாளை எதிர்பார்த்து நம்பிக்கையுடன் காத்து இருக்க தொடங்கினேன். 

Wednesday, March 12, 2014

பெண் பார்க்கும் படலம்

ரு மதியப் பொழுதில் என் நண்பனிடமிருந்து எனக்கு வந்த தொலைபேசி அழைப்பில் இருந்து இந்த கதை தொடங்குகிறது.

“என்னடா மச்சான்? எப்பிடி இருக்க? ரொம்ப நாளா பேசவே இல்ல”

“அமெரிக்கால இருந்து ISD செஞ்சு பேசுற அளவு ஒரு விஷயமும் இல்ல. அதான் பேசல”

கல்லூரி நாட்களில் இருந்த நக்கல் அவனுக்கு துளியும் குறையவில்லை.

“சரி! இப்போ என்ன விஷயம் சொல்லு.” குரலில் சற்று கோபத்தை சேர்த்து கொண்டேன்.

“எனக்கு பொண்ணு பாத்துகிட்டு இருக்காங்க. உங்க ஊருல இருந்து ஒரு பொண்ணு வந்து இருக்கு. அந்த பொண்ணு பத்தி கொஞ்சம் தகவல் வேணும்”

“சரி! பொண்ணு எந்த தெரு, அப்பா பேரு என்ன சொல்லு”

கூறினான்.

“சூப்பர் மச்சான். இது போதும். நான் குடும்பத்தை பத்தி விசாரிச்சு நாளைக்கு சொல்லிடுறேன்”

“குடும்பம் பத்தி எல்லாம் நாங்க விசாரிச்சுக்கிறோம். நீங்க அந்த பொண்ணு எப்பிடின்னு பார்த்து சொல்லுங்க.”

“பொண்ணு கேரக்டர் எப்பிடின்னும் விசாரிச்சுடலாம்.”

“டேய்! நான் அதெல்லாம் கேக்கல. அந்த பொண்ணு ஜாதகம் மட்டும்தான் எங்க வீட்டுக்கு அனுப்பி இருக்காங்க. போட்டோ எதுவும் குடுக்கல. கல்யாண பேச்சு ஆரம்பிச்ச பின்னாடிதான் ப்ரோக்கர் போட்டோ தருவாராம். ஜாதகம் பொருந்தவும்  எங்க வீட்டுலயும் அந்த பொண்ணு வீட்ல பேசலாம்னு இருக்காங்க”

“அப்புறம் என்ன? பேசி முடிச்சுடுங்க”

“அது எனக்கு தெரியாதா? கல்யாண பேச்சை ஆரம்பிக்க முன்னாடியே ஒரு முறை அந்த பொண்ணு வெள்ளையா? கருப்பா? குண்டா? ஒல்லியா? அப்பிடின்னு நீ பார்த்து சொன்னா நான் எங்க வீட்ல சொல்லி பேச சொல்லிடுவேன். ஒரு வேளை கல்யாண பேச்சு எடுத்த பின்னாடி நான் போட்டோ  பாக்கும்போது பொண்ணு பிடிக்காட்டி சங்கடம் பாரு”

“நீ சொல்றது சரிதான். ஆனா அந்த பொண்ணை நான் எங்க போய் எப்பிடி பார்க்கிறது”

“அதான் அட்ரஸ் சொல்லி இருக்கேனே?”

“வாட் நான்சென்ஸ் யூ ஆர் டாகிங்? நான் அந்த பொண்ணு வீட்டு முன்னாடி போய் நிக்கணுமா.”

“டேய் நண்பனுக்காக கொஞ்சம் கஷ்டப்படு. நீயும் நானும் படிக்கிற காலத்துல கோவில், பஸ் ஸ்டாண்ட்னு எத்தனை பொண்ணுங்க பின்னாடி சுத்தி இருக்கிறோம்”

“சரி! என்னோட நண்பனுக்காக நான் இதுக்கு ஒத்துக்குறேன்”

“அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்”

“சொல்லு”

“அது எனக்கு பாத்து இருக்குற பொண்ணு. அதனால வெறிச்சு வெறிச்சு பாத்துகிட்டு நிக்காம லேசா ஒரு பார்வை பாத்துட்டு வந்தா போதும்”

டுத்த சனிக்கிழமை அவன் சொன்ன தெருவுக்குள் என் சைக்கிளில்  நுழைந்தேன். மிக அமைதியான தெருவாக இருந்தது. பெரிய பெரிய வீடுகள். அவன் சொன்ன வீட்டு எண்ணை தேடி நடக்க தொடங்கினேன். நான்கு வீடுகள் தாண்டிய பின் அந்த வீடு தெரிந்தது. வீட்டின் முன்னால் சைக்கிளை நிறுத்தி செயினை மாட்டுவது போல பாவ்லா செய்தேன்.

நடுத்தர குடும்பம் என்பது வீட்டை பார்த்ததும் தெரிந்தது, அந்த பெண் தட்டுப்படுகிறாளா என்று பார்க்க வேண்டும். சைக்கிள் வீட்டின் அருகில் டீ கடையோ, பெட்டிக்கடையோ தட்டுப்படுகிறதா என்று தேடினேன். என் துரதிர்ஷ்டம். எதுவும் இல்லை. என்ன செய்வது என்று யோசித்தேன். எத்தனை நேரம்தான் செயினை கழட்டி கழட்டி மாட்டி கொண்டு இருப்பது.

நான் முழித்து கொண்டு இருந்தபோது அந்த வீட்டுக்குள் இருந்து ஒரு பெரியவர் வெளியே வந்தார். கர்சீப் எடுத்து முகத்தை மறைத்து கொண்டேன். சே! நட்புக்காக  என்னவெல்லாம் செய்ய வேண்டியுள்ளது. விதியை நொந்து கொண்டேன்

அந்த பெரியவர் விலகியதும் கர்சீப்பை விலக்கி முகத்தை வெளியே காட்டினேன். அட! ஜன்னல் அருகில் ஒரு நைட்டி தெரிகிறதே. அதுதான் பெண்ணா. எழுந்து நின்று முகத்தை பார்க்க முயன்றேன். சரியாக தெரியவில்லை. இன்னும் அருகில் சென்றால் தெரியும். வேக வேகமாக ஜன்னலை நோக்கி நகர்ந்தேன். அவள் நகர்ந்து விட்டாள். வாசலை நோக்கி போகிறாள். இரண்டே அடிதான். வாசல் நேராக போனால் பார்த்து விடலாம். பாய்ந்தேன். அவள் வாசலுக்கு முதுகை காட்டி வீட்டுக்குள் சென்று கொண்டிருந்தாள். திரும்பு! திரும்பு! ஒரே வினாடி போதும்.

“யாரு அது! வெளியே?” என்றது ஒரு  ஆண் குரல்.

ஆர்வத்தில் வீட்டு வாசலுக்கு மிக அருகே வந்து நின்று விட்டதை உணர்ந்து பதித்தேன். ஊருக்குள் இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போகப் போகிறது. ஒரே ஓட்டமாக ஓடி விடலாமா? வேண்டாம். அந்த ஆள் என் முகத்தை பார்த்து இருப்பார். ஓடினால் திருடன் என்று முடிவே செய்து விடுவார்கள்.

“யாரு? கேக்குறேன்ல?” இப்போது குரலோடு ஒரு உருவமும் வாசலை நோக்கி வந்தது. அவருக்கு ஐம்பது வயதுக்கு மேல் இருக்கும். ஆனாலும் கட்டான உடல். இப்போது நான் ஓடினால் கூட துரத்தி பிடித்து விடுவார்.

வசமாக மாட்டி கொண்டேன். என்ன செய்வது?

“அட நீங்களா தம்பி! ஏன் தயங்கி தயங்கி நிக்குறீங்க? உள்ளே வாங்க”

என்ன இது? இவர் ஏன் என்னை உள்ளே அழைக்கிறார். உள்ளே செல்வது தவிர வேறு வழி இல்லை.

“காலைலயே வருவீங்கன்னு சொன்னாங்க. கல்யாண விஷயமாத்தான வந்து இருக்கீங்க?”

“ஆமாங்க” என்றேன். தவறாக சொல்லிவிட்டேனா?

“பானு! கொஞ்சம் தண்ணி கொண்டு வா”

பானு! பானு! காதில் தேன் வந்து பாய்ந்தது. அவளே வந்து ஏன் முன்னால் நிற்க்கபோகிறாள். ஆனால் என்ன இந்த ஆள். என்ன என்னவோ பேசுகிறார்?  ஒரு வேளை என்னுடைய மாப்பிள்ளை போட்டோ இவர்கள் வீட்டில் கிடைத்து நான் பெண் பார்க்க வந்திருக்கிறேன் என்று நினைத்து இவர். என் நண்பனுக்கு நானே துரோகம் செய்யப்போகிறேனா?

அந்த பெண் கையில் தண்ணீர் செம்புடன் வந்து கொண்டிருந்தாள். அப்படி ஒரு அழகு. இவளுக்காக நண்பனுக்கு துரோகம் செய்தால் கூட தப்பில்லை. அவள் விரலில் என் கைபட்டுவிடாமல் கவனமாக செம்பை வாங்கினேன். என் கண்ணியம் கண்டு வியந்து இருப்பாள் என்று தோன்றியது.அப்படியே பேச்சு கொடுத்து குரலும் எப்படி என்று பார்த்து விடலாமா? அவள் உள்ளே சென்று விட்டாள்.

“இதான் தம்பி என் பொண்ணு! இது அவளோட போட்டோ”

“போட்டோ எல்லாம் எதுக்குங்க? நேருல பார்த்தாச்சே. அதுவும் நைட்டில”

“நீங்க பார்த்தா போதுமா. மாப்பிள்ளைங்க கேட்டா தர வேண்டாமா? பாருங்க. போட்டோல புடவைல இருக்கா. சரி உங்ககிட்ட வேற ஜாதகம் இருக்கா? உங்ககிட்ட நெறைய ஜாதகம் இருக்கும்னு சொன்னாங்கன்னுதான் ராஜாராம் கிட்ட சொல்லி உங்களை வர சொன்னேன்.”

அடப்பாவி. என்னை புரோக்கர் என்று நினைத்தா பேசிக்கொண்டு இருக்கிறார்.

“இப்போ ஜாதகம் கொண்டு வரல. நாளைக்கு கொண்டு வரேன்.”

“இன்னொரு முக்கியமான விஷயம். பொண்ணு போட்டோவை ஜாதகம் பொருந்தி கல்யாண பேச்சு ஆரம்பிச்ச பின்னாடிதான் மாப்பிள்ளை வீட்டுக்கு குடுக்கணும். இருங்க நீங்க வந்ததை ராஜாராம்கிட்ட   போன்ல சொல்லிடுறேன்.”

“நீங்க சொல்லுங்க! எனக்கு ஒரு அவசர வேலை இருக்கு. நான் கிளம்புறேன்”

சொல்லிவிட்டு பதிலுக்கு காத்து இருக்காமல் வீட்டிலிருந்து வெளியேறினேன்.

டேய்! பொண்ணு போட்டோவை வாட்ஸ்அப்ல அனுப்பி இருக்கேன். பார்த்தியா”

“கிரேட் டா நீ! பாத்துட்டு வர சொன்னா போட்டோவே அனுப்பிட்ட”

“சரி சரி! உங்க வீட்ல சொல்லி சீக்கிரம் பேசி முடிக்க சொல்லு. இல்ல அவங்க அப்பா வேற பையனை பாத்திடுவாரு”

“பொண்ணு பிடிச்சாச்சுல. அதெல்லாம் பேசிடலாம்.”

“அதுக்கு முன்னாடி ரெண்டு விஷயம். உன் கல்யாணத்துக்கு நான் வர மாட்டேன்.”

“ரொம்ப நல்லது மச்சி. அடுத்தது?”

“கல்யாணம்  முடிஞ்சதும் பொண்ணை கூட்டிகிட்டு போறயோ இல்லியோ  பொண்ணோட அப்பாவை அமெரிக்கா கூட்டிகிட்டு போயிடணும்.”

"!!!!!"

வாசகர்களுக்கு - இந்த வலைப்பூவில் எழுதப்படுபவை ஒருவேளை உங்களுக்கு பிடித்து இருந்தால் அதை எனக்கு ஏதாவது ஒரு வழியில் தெரியப்படுத்தவும்.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...