Wednesday, May 21, 2014

சென்னையை மெட்ரோ நகரமாக உணர்ந்த தருணம்

நான் முதல் முதலில் சென்னை வந்திருந்த சமயம். ஒரு மதியப்பொழுதில் கோடம்பாக்கத்தில் இருந்து தி.நகர் செல்ல பேருந்தில் ஏறி விட்டேன். பேருந்தில் கூட்டம் இல்லை. ஆனாலும்  இருக்கைகள் நிரம்பி இருந்தன. அமர்ந்திருந்த  நடத்துனரை தேடி  சென்று பயணசீட்டு வாங்க பத்து ரூபாயை எடுத்து நீட்டினேன்.

“ரெண்டு ரூபா டிக்கெட்டுக்கு பத்து ரூபாயை எடுத்து நீட்டினா எங்க போறது. பேசாம இறங்கிக்க” என்று சொல்லிவிட்டு வேகமாக எழுந்து முன்னால் சென்று விட்டார்.

கையில் சில்லறை வேறு சுத்தமாக இல்லை. அவர் திரும்பி என்னை கடந்து செல்லும் நேரம் வரை காத்து இருந்து பாவமாக முகத்தை வைத்து கொண்டு “சில்லறை இல்லை சார்” என்றேன்.

கடுப்பாக முகத்தை வைத்து கொண்டு பத்து ரூபாயை வாங்கி கொண்டு  சில்லறை தேடி எடுத்து கொடுத்தார்

இது நடந்து முடிந்தபோது அடுத்த நிறுத்தம் வந்து இருந்தது. வட இந்தியர் போல இருந்த ஒருவர் காதில் மொபைலை வைத்து கொண்டு பதட்டமாக  பேருந்தில் ஏறி நடுவில் சென்று நின்று கொண்டார். நடத்துனர் அமர்ந்த இடத்தில் இருந்தே ‘டிக்கெட்’ என்றதும் பத்து ரூபாயை எடுத்து நீட்டி திநகர் என்றார்.

“சேன்ஜ் நஹி. இறங்கிக்க.” வாசலைகாண்பித்து என்னிடம் பாடிய அதே பாட்டை திரும்ப ஆரம்பித்தார் நடத்துனர்.

“வொய் சுட் ஐ கெட் டவுன். திஸ் இஸ் யுவர் ரெஸ்பான்ஸ்சிபிலிட்டி டு கிவ் சேன்ஜ்”

அடப்பாவி. அவன்தான் பஸ்ஸை வாங்கி விட்டவன் போல இப்படி கத்துகிறானே. இதே வார்த்தையை அவர் என்னிடம் சொன்னபோது நான் எப்படி பம்மினேன்.

“சில்லறை இல்லன்னா இல்லைதான். டோன்ட் டாக்  இங்கிலீஷ் . இறங்கிடு”

“ஐ கான்ட்! திஸ் இஸ் கவர்மென்ட் ப்ரோபர்ட்டி! யு ஆர் பப்ளிக் சர்வன்ட். யூ கான்ட் ஆர்டர் மீ. ஐ ஆம் எ லாயர். ஐ நோ மை ரைட்ஸ் ” என்று சத்தத்தை மேலும் கூட்டினார்.

நடத்துனர் இப்போது சற்று குழம்பி விட்டார். இப்போது வட இந்தியருக்கு ஒரு ஆதரவு குரல் எழுந்தது.

“அவர் கூட ஏம்பா சண்டை  போடுற. சில்லறை கொடுத்துடேன்”

“என் கிட்ட சில்லறையே இல்லம்மா.”

இது வரைக்கும் அமைதியாகத்தான் சென்று கொண்டிருந்தது. கூட்டத்தில் அமர்ந்திருந்த ஒரு பெரியம்மா அந்த வட இந்தியரிடம் தனது கருத்தை சொல்ல ஆரம்பிக்கும் வரை. ஆங்கிலத்தை தமிழில் தட்டச்சுவது சிரமமாக இருப்பதால் இனி எல்லாமே தமிழில்.

“நானும் தமிழ்நாடு இல்லை. சென்னை வந்து 25 வருஷம் ஆச்சு. தமிழ் தெரியலனா சென்னைகாரங்க இப்பிடித்தான் செய்வாங்க. அங்க கண்ணாடி போட்டு நிக்குறானே ஒரு பையன். அவன் பத்து ரூபாயை கொடுத்ததும் இவர் சில்லறை கொடுத்தார். இப்போ நீ இங்கிலிஷ்ல கேட்டதும் தர மாட்டேங்குறார்.”

அந்த பெரியம்மா எதற்காக இந்த கருத்தை சொன்னார்கள் என்றே தெரியவில்லை. அவருக்கு யார் மேல் கோபம் என்பதும் புரியவில்லை. அடிப்பாவி! இதுல ஏன் என்னோட பேரை இழுக்குற என்று எண்ணி கொண்டிருந்தேன். வட இந்தியரோ இப்போது  கோபத்தின் உச்சத்தில் இருந்தார்.


“நான் மேலதிகாரிங்ககிட்ட போவேன். நான் யாரு தெரியுமா” என்று பேருந்து முழுவதும் கேட்க உரத்து சொன்னார்.

இப்போது முன்னிருக்கையில்  நடந்ததை கவனித்து கொண்டிருந்த ஒரு வீர தமிழருக்கு கோபம் வந்து விட்டது.

“வாயை மூடுடா! என்ன பேசிகிட்டு இருக்க. எனக்கு திநகர் இன்ஸ்பெக்டரை தெரியும்” சட்டை கையை  மடக்கி விட்டு எழுந்தார். அவர் சொன்னது   வட இந்தியருக்கு புரிந்திருக்க நியாயம் இல்லை. ஆனாலும் சட்டை கையை மடக்கி விட்டதன் அர்த்தம் புரிந்திருக்க வேண்டும். அவரின் உடல் விரைப்பானதை உணர முடிந்தது. அவர் கண்கள் சிவந்து விட்டன.

அடப்பாவிங்களா! ஒரு ரெண்டு ரூபாய்க்கு அடி தடிக்கெல்லாம் போறீங்களேடா

“ஒரு திநகர் கொடுங்க.” ஒரு குரல் என்னை கலைத்தது. இந்த நேரத்துலயும் டிக்கெட் கேட்கும் கடமையாளர் யார்? சிலிர்த்து கொண்டு திரும்பினேன். நடத்துனரின் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த இரண்டு பெண்களில் ஒருவர் டிக்கெட் எடுத்து கொண்டிருந்தார். இந்த பெண்கள் இத்தனை நேரமா டிக்கெட் எடுக்காமல் இருந்தார்கள் என்று அவர்களை நான் பார்த்து கொண்டிருந்தபோது அந்த பெண் அந்த டிக்கெட்டை வட இந்தியரிடம் நீட்டினார்.

“நீங்க எதுக்கு டிக்கெட் எடுக்கணும்?” வட இந்தியர்  கேட்டார்.

“பரவாயில்ல பிடிங்க” கொடுத்து விட்டு ஜன்னலுக்கு வெளியே பார்க்க ஆரம்பித்தார். இது நடந்து இரண்டு நிமிடங்களில் வட இந்தியர் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்து விட்டது. அடிக்க வந்தவரை முறைத்து கொண்டே யாருடனோ மொபைலில் தொடர்பு கொண்டு பேசிக்கொண்டே இறங்கிவிட்டார்.

“கண்டக்டருங்க சில்லறை வச்சுக்க வேணாமா? அவன் என்ன டென்சன்ல இருந்தானோ?”

“இவருக்கு இன்ஸ்பெக்டர் தெரியும்னா அவனுக்கு யாரை எல்லாம் தெரியுமோ? யாரை கூப்பிடான்னு தெரியல. அடிக்க வந்தவரை லேசுல விட மாட்டான்”

மக்களின் பலதரப்பட கருத்துகள் பேருந்து முழுவதும் ஒலிக்க தொடங்கின.

இரண்டு ரூபாய் பிரச்சினை மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினையாகி விட்டதை யோசித்து கொண்டே பேருந்தில் இருந்து இறங்கினேன். தசாவாதாரம் கியாஸ் தியரிபடி இந்த சண்டைக்கு காரணம் யார்? யார் மேல் தவறு என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இந்திய நகரங்களில் சில நுணுக்கமான பிரச்சினைகள் இருப்பது மட்டும் தெரிந்தது

சரி இதை முழுக்க படித்து இருந்தால் நீங்களாவது சொல்லுங்கள். தவறு சில்லறை இல்லாத கண்டக்டர் மீதா? ஆரம்பத்தில் இருந்தே உரத்த குரலில் பேசிய ? சண்டையை பெரிதாக்கிய அந்த பெரியம்மா மீதா? அடிக்க வந்தவர் மீதா? இதை ஒரு விஷயம் என பதிவிட்டு கொண்டிருக்கும் என் மீதா? இல்லை எத்தனை மொக்கை பதிவிட்டாலும் வந்து படிக்கும் உங்கள் மீதா?



Monday, May 19, 2014

தமிழக தேர்தல் முடிவுகள் – ஒரு வாக்காளனின் பார்வை

திமுக இத்தனை பெரிய வெற்றி பெரும் என்று எதிர்பார்க்கவில்லை. அதிமுக  அப்படி ஒரு நல்லாட்சியையா கொடுத்து விட்டது? ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் இன்னும்  மின்சார பிரச்சினை தீர்ந்தபாடில்லை. சமூக விரோதிகள் யாரும் ஆந்திராவுக்கு ஓடிய மாதிரியும் தெரியவில்லை. பேருந்து கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு என்று அனைத்தையும் ஏற்றி விட்டனர். இருந்தபோதும் மக்கள் எந்த அடிப்படையில் அதிமுகவை வெற்றி பெற வைத்தனர் என்று தெரியவில்லை.

இதே போலத்தான் 2001 தேர்தலும். 1991-1996ல்  அதிமுகவினர் மேல் இருந்த ஊழல் வழக்குகளுக்கு பின் அவர்கள் இனிமேல் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை என்றுதான் அனைவரும் கணித்து இருந்தனர். போதாக்குறைக்கு 1991-1996 திமுக ஆட்சியிலும் பெரிதாக எந்த குறையும் இல்லாததால் மீண்டும் திமுகதான் என்று எண்ணியிருந்த வேளையில் யாரும் எதிர்பாராத தீர்ப்பை அளித்தனர் மக்கள். 2006ல் மீண்டும் திமுக வென்றாலும் தனிப்பெரும்பான்மை  பெற முடியவில்லை. இவற்றை வைத்து பார்க்கும்போது மக்கள் கலைஞரை விட புரட்சி தலைவி மேலேயே அதிக நம்பிக்கை கொண்டிருப்பது தெரிகிறது. ஆனால் அந்த நம்பிக்கையின் அடிப்படை என்ன என்பதுதான் புரியாத புதிர். இன்றைய நிலைமைக்கு அடுத்த சட்டமன்ற தேர்தலிலும் திமுக கௌரவமான இடங்களை பெறுவது சந்தேகமே.

திமுக மேல் நம்பிக்கை இல்லை, நடப்பது பாராளுமன்ற தேர்தல் வேறு. பின்னர் ஏன் பாரதிய ஜனதா கூட்டணியை ஆதரிக்கவில்லை என்றால் அந்த கட்சியில் கலைஞர்-ஜெயலலிதா போன்ற வசீகரமான தலைவர் இல்லாததுதான் காரணமாக தெரிகிறது. அதனால்தானே என்னவோ விஜயகாந்தை கூட்டணிக்கு இழுத்தனர். ஆனால் விஜயகாந்த் பிரசாரம் செய்த விதமோ பாரதிய ஜனதாவுக்கு இருந்த செல்வாக்கையும் துவம்சம் செய்து விட்டதாக இப்போது பாஜகவினரே  சந்தேகப்பட்டு கொண்டிருப்பார்கள். பாமக என்னும்  ஜாதிக் கட்சியை கூட்டணியில் சேர்த்தது அவர்களுக்கு எந்த பலனையும் தரவில்லை. விளைவு, அதிமுகவுக்கு எந்த போட்டியையும் இவர்களால் தர இயலவில்லை.

இவற்றில் இன்னொரு ஆச்சரியம் வைகோவின் தோல்வி. மனிதர் பெரியாறு ஆணை பிரச்சனையில் ஆளுக்கு முன் நின்று போராடினார். மக்கள் பிரச்சினை என்ன வென்றாலும் முதலில் வருகிறார். தமிழகம் முழுக்க அறியப்பட்டவர். இருந்தபோதும் வெற்றி  மட்டும் கிடைக்க மாட்டேன் என்கிறது. இதற்கு காரணம் ஜாதி அடையாளத்தால் பிரியும் வாக்குகள். ஜாதி பார்த்து ஓட்டு போடும் மக்கள் அத்தனை எளிதில் மாற மாட்டார்கள். எனவே இவர் துணிந்து தொகுதி மாறி நின்று பார்ப்பது நல்லது.

மொத்தத்தில் அதிமுகவின் வெற்றிக்கு எதிர் கட்சிகளின் மேல் நம்பிக்கையின்மையும், கட்சிகளின் பலமின்மையையுமே காரணமாக தெரிகிறது. புதிதாக ஒரு வலுவான அரசியல்  ஆளுமை உருவாகும் வரை மக்களுக்கு அதிமுகவை விட்டால் வேறு கதியில்லை.


Sunday, May 18, 2014

மரியாதைக்குரிய மோடி அவர்களுக்கு

திப்பிற்கும், மரியாதைக்குரிய மோடி அவர்களுக்கு,

ஒரு இந்திய குடிமகன் எழுதி  கொள்வது. முதலில் தங்களின் சரித்திர சாதனை வெற்றிக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். தேச மக்கள் உங்களை ஒரு கதாநாயகனாகவே உருவகித்து கொண்டிருக்கிறார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் தெளிவாக காட்டி விட்டன. அந்த நம்பிக்கையை நீங்கள் காப்பாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எங்களிடம் இருக்கிறது.

தங்களிடம் நல்ல திட்டங்கள் இருக்கிறது. மற்ற கட்சியினரை விட உங்கள் கட்சியினரிடம்  தேச பக்தியும் அதிகமாகவே இருக்கிறது. வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பொருளாதாரமும், நிர்வாகமும் படித்தவர்களை விட தேநீர் கடையில் பணிபுரிந்த உங்களாலேயே இந்தியாவின் பிரச்சினைகளை புரிந்து கொள்ள முடியும் என்பதில் எனக்கு துளியும் சந்தேகமில்லை.

மற்ற எந்த பிரச்சினைகளையும் விட எதிர்காலத்தில் நம்மை பெரிய சங்கடத்தில் ஆழ்த்தப்போகும் தண்ணீர் பற்றாக்குறையை நீங்கள் இப்போதே உங்கள் நீர் மேலாண்மை  திட்டங்கள் மூலம் எளிதில் சரி செய்து விடுவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. உழவர்களின் வாழ்க்கையும், தேச பாதுகாப்பும் இனி கட்டாயம் மேம்படும். உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்க போகிறது. நாட்டின் பொருளாதாரமும், தனி நபர் வாழ்க்கை தரமும் உயரப்போகிறது. இவற்றை எல்லாம் நீங்கள் எளிதில் செய்து முடிக்க போகிறீர்கள். ஏனென்றால் இதற்கு முன் பதவியில்  இருந்தவர்கள் தங்களை  பற்றி மட்டுமே சிந்திப்பவர்கள். பாட புத்தகத்தில் படித்ததை அப்படியே மக்களிடம் பிரயோகித்து பார்த்து நாட்டை வளப்படுத்தியதாக நினைப்பவர்கள் . நீங்கள் நாட்டை பற்றி சிந்திப்பவர். இந்தியர்களின் பிரச்சினைகள் நுணுக்கமானவை என்பதை அறிந்தவர்.

தேசம் முன்னேற நாட்டின் தலைவன் மட்டும் பாடுபட்டால் போதாது. தேசத்தின் ஒவ்வொருவரும் பாடுபடவேண்டும் என்ற எண்ணத்தை இந்தியர்களின் மனதில் கொண்டு வந்து விடுவீர்கள். இந்தியர்களை மற்ற நாட்டினர் மரியாதையாக பார்க்கும் நிலை வரும். அந்த நிலையை நீங்கள் கொண்டு வருவீர்கள். ஒருவேளை தங்களால் இவற்றை எல்லாம் செய்ய இயலாவிட்டால்தான் ஆச்சரியம்.


ஆனால் மனதை உறுத்தும் ஒரே விஷயம் தேர்தல் பிரசாரங்களில் உங்களுக்கு எதிராக எதிர்கட்சியினர் பயன்படுத்திய முக்கிய  ஆயுதமான மதவாதம்தான். மதரீதியில் உங்களின் அரசு  ஒரு உண்மையான மத சார்பற்ற அரசாகவே  இருக்க விரும்புகிறேன். அனைத்து மதத்தாரும் அவர்களுக்கான உரிமைகளை பெற்று சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம். இதுவே உங்களின் கொள்கையாகவும் இருக்க வேண்டும். உங்கள் அரசு  நிச்சயம் மதம் சார்ந்து  ஒரு தலை பட்சமாக செயல்படும் அரசாக இருக்காது. ஏனென்றால் வழிபாட்டு முறையும், வழிபடும் கடவுளும் வேறுபட்டாலும்  அவர்கள்  கண்ணனையே சென்று அடைவதாகத்தானே கீதை சொல்கிறது.


Saturday, May 10, 2014

யாமிருக்க பயமே - கட்டாயம் பாருங்க

மிழில் பேய் படங்கள் வருவது இப்போது  மிகவும் குறைந்து விட்டது. 13ம் நம்பர் வீடு, உருவம் போன்ற மாதிரியான படங்களை தமிழில் இப்போது  யாரும் எடுக்காமல் தமிழ் பேய் பட ரசிகர்கள் ஹாலிவுட் படங்களை பார்த்து சந்தோசப்பட்டு கொள்ள வேண்டிய நிலை. காமெடி படங்கள் மட்டும்தான் ஓடும் என்றால் யார்தான்  பேய் படம் எடுப்பார்கள். அபூர்வமாக அவ்வப்போது ‘காஞ்சனா’ போன்ற படங்கள் வெளிவந்தாலும் ஓட்டு மொத்தமாக வெளி வரும் பேய் படங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இந்த சூழ்நிலையில் காமெடியையும், பயத்தையும் கலந்து கொடுத்து காட்சிக்கு காட்சி ரசிகர்களுக்கு புது அனுபவம் குடுக்கும் படமாக வந்துள்ளது ‘யாமிருக்க பயமே’   

கதாநாயகனுக்கு எதிர்பாராத வகையில் பங்களா ஒன்று கிடைக்கிறது. அவர் அந்த  பங்களாவுக்கு குடி புகுந்ததும் நடக்கும் சம்பவங்களை நிறைய காமெடி, கொஞ்சம் பயம், கொஞ்சம் சஸ்பென்ஸ், கொஞ்சம் கவர்ச்சி  என்று சரியான விகிதத்தில் கலந்து கொடுத்து இருக்கிறார்கள். படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை திரையரங்கில் அனைவரும் சிரித்து கொண்டே இருக்கிறார்கள். டைட்டிலில் இருந்து படம் முடியும் வரை எல்லாமே புதிதாக இருக்கிறது (குறைந்தபட்சம் தமிழ் படம் மட்டும் பார்ப்பவர்களுக்கு)


கதையில் குறைகளே இல்லையா என்று கேட்டால் நிறைய சொல்லலாம்தான். ஆனால் காமெடி படத்திலும், பேய் படத்திலும் லாஜிக் எதற்கு பார்க்க வேண்டும். கொடுத்த  காசுக்கு படம் திருப்தியாக இருக்கிறது அவ்வளவுதான். இரட்டை அர்த்த வசனங்களை கொஞ்சம் குறைத்து கொண்டிருந்தால் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் என்று சொல்லி விடலாம். இப்போதைக்கு  இது பார்க்க வேண்டிய படம் என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.


கால மாற்றம் – காதல் தற்கொலைகள்

தொன்னூறுகளில் காதல் தோல்வி என்று ஒரு கான்செப்ட்  இருந்தது. தினத்தந்தியில் அடிக்கடி காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை, காதல் ஜோடி தற்கொலை என்று செய்திகளை பார்க்கலாம். அதில் பாதிக்கும் மேலான தற்கொலைகளின் காரணம்  ஒரு தலை காதல் என்பது இன்னும் கொடுமை. .இப்படி காதல் தோல்வி அடைந்தவர்களில் சிலர் தேவதாஸ் பாணியில் தாடி வளர்த்து சுற்றுவார்கள். இன்னும் சிலர் மரணதேவனை நாடி செய்திகளில் வருவார்கள். இப்போது அந்த மாதிரியான செய்திகளை பார்ப்பதே அபூர்வமாகிவிட்டது. இப்போது வரும் செய்திகள் கள்ளக்காதல் காரணமாக நடக்கும் கொலைகளை பற்றியவை.

இப்படி குறைந்து விட்ட காதல் தற்கொலைகள்  எதை காட்டுகின்றன? காதலிப்பவர்கள் குறைந்து விட்டார்கள் என்பதையா? அப்படி இருக்க முடியாது. காதலர்கள் உண்மையில் அதிகரித்தே உள்ளனர். காதலர்கள் அதிகரித்த பின்னர் காதல் தற்கொலைகள் குறைந்தது விசித்திரம்தான். ஆனால் இது நமது  சிந்தனை, பொருளாதாரம், சமூகம் என பல விஷயங்கள் கடந்த பதினைந்து ஆண்டுகளில் மிகப் பெரிய மாற்றத்தை அடைந்து இருப்பதையே காட்டுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு இளம் ஆணும், பெண்ணும் பொது இடத்தில்  நின்று பேசிக்கொண்டு இருந்தாலே வித்தியாசமாக பார்ப்பார்கள். ஆனால் இன்றோ ஆண்கள் பெண்களுடன் பழகும் வாய்ப்பை அதிகம் பெற்று விட்டதால் ஒரே பெண்ணுடன் வாழ்க்கை முடிந்து விடும் என்ற எண்ணம் அவர்களுக்கு இல்லை. காதல் ஒரு முறைதான்  பூக்கும்  என்று நினைக்காமல் அடுத்த காதலை தேடிப்  போகும் பக்குவத்தை இந்த தலைமுறையினர் பெற்று விட்டனர். ஒரு பெண் வேண்டாம் என்று சொல்லிவிட்டால் அடுத்த பெண்ணை தேடுவது அவர்களுக்கு கடினமாக இல்லை. ஒருதலை காதலால் வாழ்க்கையை முடித்து கொள்ளுவது  பைத்தியக்காரத்தனம் என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள்.


காதலில் வரும் அடுத்த பிரச்சினை பெற்றோர் எதிர்ப்பு. யார் தடுத்தாலும்  , எதிர்த்தாலும் காவல் நிலையம் சென்று தாங்கள் விரும்பியவர்களையே திருமணம் செய்து கொள்ளும்  துணிச்சல் காதலர்களுக்கு வந்து விட்டது. அவர்களுக்கு கிடைத்து இருக்கும் பொருளாதார வசதிகளும் இதற்கு துணை புரிகிறது. பெற்றோர்கள் துணை  இல்லாமல் தங்களால் வாழ முடியும் என்ற நம்பிக்கை வந்து விட்ட பின்னர் அவர்கள் எதை பற்றியும் கவலைப்படுவது இல்லை. பள்ளி , கல்லூரி வயதில்  காதலிப்பவர்கள்  கூட தெளிவாக சிந்திக்கின்றனர். தங்கள் நிலை என்ன என்பதை  தெளிவாக உணர்ந்துள்ளனர். தங்களுக்கு வேலை கிடைக்கும்வரை  காதல் வீட்டுக்கு தெரியாமல் பார்த்து கொண்டு சரியான  நேரத்தில் திருமணம் செய்து கொள்கின்றனர்.

இந்த மாற்றத்திற்கு இன்னொரு முக்கிய காரணம் இந்த தலைமுறை பெற்றோர்கள்  பொதுவாக அதிக கெளரவம் பார்க்கும்  நடுத்தட்டு பெற்றோர்கள் இப்போது காதலை எல்லாம் அதிகம் எதிர்ப்பது இல்லை. தங்கள் பிள்ளைகளின் சந்தோசமே முக்கியம் என்ற ரீதியில்தான் பெரும்பாலானோர் சிந்திக்கின்றனர். ஒரு வேளை தங்கள் பெண் செட்டில் ஆகாத பையனை காதலித்தாலும் அவனுக்கும் ஒரு வேலை தேடி கொடுத்து தங்கள் பெண்ணுடன் சேர்த்து வைக்கும் பெற்றோர்கள் எல்லாம் இருக்கின்றனர்.

எந்த காரணத்தை கொண்டு பார்த்தாலும் காதல் தற்கொலைகள் குறைந்ததன் காரணம் ஆண்கள் பெண்களுடன் பழகும் வாய்ப்பை அதிகம் பெற்று விட்டதாகவே தோண்டுகிறது. சிலர் உண்மையான காதல் குறைந்து விட்டதுதான் இதற்கு காரணம்  என சொல்லலாம். அப்படி சொன்னால் உண்மையான காதல் என்றால் என்ன? காதல் என்பது முற்றிலும் உடல் சார்ந்த ஹார்மோன்கள் செய்யும் லீலை என்கிறது அறிவியல். காதல் என்பதை மனம் சார்ந்து புனிதப்படுத்த நினைக்கின்றனர் சிலர். உடலில் தொடங்கி மனதில் முடிவது காதல் என்போர் சிலர். ஆனால் காதலை எந்த ஒரு அறிவுப் பூர்வமான  எந்த வரையறைக்குள்ளும் கொண்டு வந்து விட முடியாது. அப்படி கொண்டு வந்து விட்டால் காதல் தனது கவர்ச்சியை இழந்து விடும். இப்படி காதலையே வரையறுக்க முடியாதபோது உண்மையான காதலை எப்படி வரையறுப்பது. ஆக முன்பு உண்மையான காதல் இருந்தது, இப்போது இல்லை என்று சொல்ல முடியாது.

இந்த மாற்றத்தை நம்முடைய திரைப்படங்களில் கூட அப்பட்டமாக காண முடிகிறது. ‘புன்னகை மன்னன்’ தொடக்க காட்சி போல இப்போது எந்த படத்திலும் காட்சி இல்லை. காதலை எதிர்க்கும் ‘அலைகள் ஓய்வதில்லை’ பாணி வில்லன்கள் எந்த படத்திலும் வருவதில்லை.  இப்போது காதல் படம் எடுத்தால் கூட காதலர்களுக்கு இடையே ஈகோ பிரச்சினை வருவதாகவே காட்டுகின்றனர். இப்படியான மாற்றம் ஆரோக்கியமானதுதான். ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் காதல் முழுக்க முழுக்க மேற்கத்திய பாணியை அடைந்துவிடாமலும் பார்த்து கொள்ள வேண்டும்.


Sunday, May 4, 2014

நாட் சோ அமேசிங் ஸ்பைடர்மேன் - 2

ஸ்பைடர்மேன் படங்களின் மேல் எப்போதும் எனக்கு விருப்பம் அதிகம். காரணம் ஸ்பைடர்மேன் படங்களில் ஆக்சன், செண்டிமெண்ட், காதல் என்று சரியான விகிதத்தில் கலந்து கிட்டத்தட்ட ஒரு கமர்ஷியல் தமிழ் படம் போலவே கொடுத்து இருப்பார்கள். ஸ்பைடர்மேன் முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் விறுவிறுப்பு. மூன்றாம்  பாகம் சற்று சொதப்பல்தான்.

ஸ்பைடர்மேன் மூன்று பாகங்களுக்கு பின்  ஸ்பைடர்மேனை அமேசிங் ஸ்பைடர்மேனாக மாற்றி எடுத்து வெளியிட்டார்கள். முதல் பாகம் எந்த குறையும் இல்லை. ஆனால் தற்போது வெளி வந்து இருக்கும் இரண்டாம் பாகம் சற்று ஏமாற்றம்தான். ஸ்பைடர்மேனின் பெற்றோர்கள், ஆஸ்கார்ப் நிறுவனத்தில் நடக்கும் சதி செயல்கள் என்று கதை சென்றாலும் ஒரு சராசரி ‘B’ சென்ட்டர் ரசிகனை திருப்திபடுத்துமாறு படம் இல்லை.


ஸ்பைடர்மேன் படங்களின் உண்மையான ஹீரோ வில்லன்தான். வில்லன் வலுவாக இருந்தால்தான் ஸ்பைடர்மேனால் தன்னுடைய முழு பலத்தையும்  காட்டி சண்டையிட முடியும். ஆனால் இந்த பாகத்தில் ஒரு விபத்தில் மின்சாரத்தை பாய்ச்சும்/தேக்கும்  சக்தி வரப் பெற்ற  வில்லன் அத்தனை எடுபடவில்லை. வழக்கமாக ஸ்பைடர்மேன் படங்களில் வில்லன்கள் எதிர்பாராத நேரத்தில் நகரத்தை தாக்குவார்கள். ஆனால் இந்த படத்தில் எப்போதெல்லாம் வில்லன் நகரத்தை தாக்குவான் என்று எளிதில் கணித்து விட முடிகிறது. எப்போதெல்லாம் ஸ்பைடி தன் காதலியை நெருங்குகிறாரோ அப்போதெல்லாம் வில்லன் வருவான் என்று நினைக்கிறோம். சொல்லிவைத்தார் போல வில்லனும் வந்து விடுகிறான். பெரிய பெரிய வில்லன்களை  ஊதி தள்ளிய ஸ்பைடி அவனை எளிதில் தோற்கடித்து விடுகிறார்.

படம் முடியும் நேரத்தில் ஸ்பைடியின் நண்பன் வில்லனாக மாறி ஸ்பைடியை அழிக்க கிளம்புகிறார். அந்த வில்லனும் சப்பையாக போய் விட எல்லா எதிர்பார்ப்பும் புஸ்சென்று போய் விடுகிறது. இருந்தாலும் இந்த வில்லன்களுடன் நடக்கும் சண்டையில் ஸ்பைடி தனது காதலியை இழந்து மனச் சோர்வுக்கு ஆளாகிறார். ஸ்பைடியின் நண்பன் அவரை அழிக்க அடியாட்களை தயார் செய்து அனுப்புகிறார். ஸ்பைடி அவர்களுள் ஒரு அடியாளுடன் மோதப் போகும்போது படத்தை முடித்து விடுகிறார்கள்.


மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளிவந்திருக்கும் இந்த ‘அமேசிங் ஸ்பைடர்மேன் 2’ நிஜத்தில் அமேசிங்காக இல்லை. குழந்தைகளுக்கு போர் அடிக்கும். வழக்கப்படி தொழில்நுட்ப ரீதியில் வலுவாக இருந்தாலும் கதையும் திரைக்கதையும் வலுவில்லாமல்  போய் விட்டது. அமெரிக்கர்களுக்கு ஓர் வேளை படம் பிடித்து இருந்தாலும் டப்பிங்கில் பார்க்கும்  தமிழர்களுக்கு  இது ஒரு சராசரி படம்தான். இருந்தாலும் ஸ்பைடர்மேன் ரசிகர்கள் படத்தை ஒரு முறை பார்க்கலாம்.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...