Thursday, July 31, 2014

நாம் கவனிக்கத் தவறிய கேப்டனின் யுனிவர்சல் மூவி!

லகப்படம்(universal movie) பற்றி பலர் சொல்லியும் எழுதியும் கேட்டு இருக்கிறேன். பொதுவாக உலகப்படம் என்பது கலாச்சார வேறுபாடுகளை தாண்டி  உலகத்தில் உள்ள அனைத்து மக்களாலும் ரசிக்கப்படக் கூடிய  படம் அல்லது உலக மக்கள் அனைவராலும் ஏற்று கொள்ளப்படக் கூடிய  பொதுவான கருத்துகளை கொண்டிருக்க கூடிய படம்  என்று எங்கேயோ யாரோ எழுதி இருந்ததே உலகப் படத்துக்கான சிறந்த வரையறை என்பது என் கருத்து.

பொதுவாக தமிழில் இது போன்ற உலகப்படங்கள் சமீப காலமாகத்தான் வருகின்றது என்று கூறுகிறார்கள். ஆனால் கலைக்கண்கள் கொண்டு கவனித்துப்  பார்க்கும்போது  தமிழில் நிறைய உலகப் படங்கள் கண்டுகொள்ளப்படாமல் இருக்கிறது. சமீபத்தில் நான் கண்டு ரசித்த அப்படிப்பட்ட ஒரு படத்தின் ஒரு காட்சியை இங்கே கூறுகிறேன். 

படத்தின் இறுதி காட்சி. தீவிரவாதிகள் விமானியை சுட்டு விடுகின்றனர். உயிருக்கு போராடும் விமானியால் விமானத்தை இயக்க முடியவில்லை. தீவிரவாதிகளை வீழ்த்தி விடும் கேப்டன் விஜயகாந்த் விமானியின் அறைக்கு வருகிறார். விமானியின் வழிகாட்டுதல்படி விமானத்தை ஒரு குடியிருப்பு பகுதியில் மரங்களுக்கு இடையே  பத்திரமாக லேன்ட் செய்கிறார்.


இதில் என்ன உலகத்தரம் என்று கேட்க வேண்டாம். மேலோட்டமாக பார்க்காமல் அந்த காட்சியை கூர்ந்து கவனியுங்கள். கேப்டன் உலக மக்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய நல்ல கருத்துகளை இந்த ஒரே  காட்சியில் எடுத்து சொல்கிறார் என்பது தெரியும். விமானி அவரை விமானத்தை இயக்க சொல்லும்போது ‘எனக்கு ஒன்னும் தெரியாதே’ என்கிறார். என்ன ஒரு நுட்பமான, ஆழமான வசனம் பாருங்கள். ஒரு விஷயம் உனக்கு தெரியாதென்றால் அதை ஒத்து கொள்ளத் தயங்காதே என்று போகிற போக்கில் சொல்லிவிட்டு போகிறார் கேப்டன். இன்று எத்தனை பேர் அப்படி ஒத்து கொள்கிறார்கள். ஒன்றுமே தெரியாவிட்டாலும் எல்லாமே தெரிந்தது போல பேசுபவர்கள்தானே அதிகம். அதை தன்னுடைய வசனம் மூலம் தவறு என்று புரிய வைக்கிறார் கேப்டன்.

“நான் சொல்லித்தரேன்! நீங்க உட்காருங்க” என்று விமானி பதில் அளித்ததும் தயங்காமல் விமானியின் இருக்கையில் அமர்கிறார் கேப்டன். தெரியாத விஷயத்தை கற்று கொள்ள தயங்கக் கூடாது என்பதுதான் கேப்டன் உலகுக்கு இதில் எடுத்துக் கூறும் கருத்து. மறு வினாடி விமானியின் வழிகாட்டுதல்படி அங்கே இருக்கும் ஒரு குச்சியை பிடித்து இழுக்கிறார். ஒரு வேளை விமானத்தின் பிரேக்காக இருக்க வேண்டும். உடனே விமானம் மரங்களுக்கு இடையே தரை இறங்குகிறது. வழவழப்பான ரன்வேயிலேயே விமானம் தரை இறங்குவது கஷ்டம். அப்படியிருக்க  இந்த மாதிரி இடத்தில் எல்லாம் விமானத்தை தரை இறக்க முடியாது என்று கேப்டன் நினைக்கவில்லை. விமானியை பார்த்து “என்னய்யா! விளையாடுறியா?” என்று பல்லை கடிக்கவில்லை. தன்னம்பிக்கையுடன் செயல்படுகிறார். பிரேக்கை வலு கொண்ட மட்டும் இழுத்து மரங்களுக்கு நடுவில்  விமானத்தை சேதாரமின்றி தரை இறக்குகிறார்.

இந்த காட்சியை அருகில் இருந்து பார்த்து கொண்டிருந்தவர் “என்னயா? இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?” என்றார். இப்படி நம் படங்கள்  சிறந்தவை இல்லை  என்ற எண்ணம் கொண்டவர்களை என்ன செய்வது என்று தெரியவில்லை. தமிழ் சினிமா உலகளவில் கவனம் பெறாமல் போனதற்கு இவர்கள் போன்றவர்கள்தான் காரணம். சேதுபதி ஐ.பி.எஸ் என்ற அந்த படத்தின் ஒரே காட்சியிலேயே இத்தனை உலகத்தரம் வாய்ந்த கருத்துகள் இருக்கும்போது மொத்த படமும் எத்தனை கருத்து குவியலாக இருக்க வேண்டும். கவனித்து பார்த்த்தால் உங்களுக்கே புரியும். கேப்டன் உணர்த்தி  இருக்கும் கருத்துகள் மொத்த  உலகத்துக்கும்  பொதுவானது என்று யாரேனும் மறுக்க முடியுமா? அரசாங்கம் இதை பரிசீலித்து அந்த படத்துக்கு சிறப்பு அனுமதி கொடுத்து விருது வழங்கும் விழாக்களுக்கும், திரைப்பட விழாக்களுக்கும் அனுப்ப வேண்டும்.

ஒரே காட்சியிலேயே இத்தனை விஷயங்கள் இருந்தால் தமிழ் சினிமாவின் ஓட்டு மொத்த வரலாற்றில் இது போன்ற எத்தனை படங்கள் கண்டுக்கொள்ளப்படாமல்  போயிருக்ககூடும். எனவே நாம்  தொடர்ந்து பழைய உலக  படங்களை பார்த்து அரசாங்கத்துக்கு பரிந்துரைக்க தயாராக வேண்டும். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?


Monday, July 28, 2014

ஒரு மல்டிலெவல் மார்க்கெடிங் ஏஜெண்டும், நானும்

துரங்க வேட்டை”யில் மல்டிலெவல் மார்க்கெடிங் பற்றி காண்பித்து இருந்தார்கள். பார்த்தபோது எனக்கு நான் சந்தித்த ஒரு மல்டிலெவல் மார்கெடிங் ஏஜென்டின் நினைவு வந்தது. பணத்தின் மேல் பேராசை கொண்ட ஒருவரை எப்படி வேண்டுமானாலும்  மூளைசலவை செய்யலாம் என்பதை அவர் மூலமே முதலில் தெரிந்து கொண்டேன்.

ஒரு நாள் வழக்கப்படி மாட்டுத்தாவணியில் இருந்து ஊருக்கு திரும்ப பேருந்தில் ஏறி ஜன்னல் ஓரம் இடம் பிடித்து அமர்ந்தேன். பேருந்து கிளம்ப சில நிமிடங்கள் இருந்தது. கவனத்தை இளையராஜா பாடலில் திருப்பி பேருந்தில் ஏறுபவர்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன்.

சில நிமிடங்களில்  வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட் அணிந்து கொண்டு ஒரு இளைஞர் பேருந்தில் ஏறினார். எனக்கு பக்கவாட்டில் இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தார். எனக்கு அவர் என்னையே பார்ப்பது போல தோன்றியது. நான் நினைத்தது சரிதான் என்று நிரூபிக்கும் வகையில் என் இடம் மாறி என் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டார்.

“உங்களை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு._______ பள்ளிகூடத்துலதான படிச்சீங்க?” தனது முதல் கேள்வியை வீசினார்.

“ஆமாங்க. நீங்களும் அங்கதான்  படிச்சீங்களா?”

“இல்ல. ஆனா எங்க வீடு அந்த தெருலதான் இருக்கு. அதான் உங்களை பார்த்த மாதிரி இருக்கு போல”

ஆயிரம் பேருக்கு மேல் படிக்கும் அந்த பள்ளிகூடத்தில் என்னை பார்த்தது போல இருக்கிறது என்றால் என் முகத்தில் ஏதோ களை இருக்கிறது போல என்று எண்ணி பெருமைபட்டு கொண்டேன். வழக்கமாக என்னை பார்த்தாலே பயந்து ஓடுபவர்கள் மத்தியில் என்னை தேடி வந்து ஒருவர் பேசுகிறார் என்ற சந்தோசம் வேறு.

“ஆமா...ஆமா...சரி நீங்க இப்போ என்ன பண்றீங்க?” நட்பை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகும் முயற்சியில் இறங்கினேன்


“நான் தமிழ்நாடு மின்வாரியத்துல வேலை செய்யுறேன்”

“ரொம்ப பிஸியான வேலைதான். நேரத்துக்கு கரண்ட் கட் பண்ணனும்.”

“அத்தனை பிஸி எல்லாம் இல்லைங்க. நாங்க நேரத்துக்கு கரண்ட் கட் பண்ணாம போனாலும் கரண்ட் அதுவாவே நின்னுடும்.” சிரித்து கொண்டே பதில் உரைத்தார். எனக்கு  ஒன்றரை மணி நேரத்துக்கு  சரியான பொழுதுபோக்கு கிடைத்ததை எண்ணி புளங்காகிதம் அடைந்தேன். அப்படியே தமிழ்நாட்டில் மின் நிலவரத்தை இவர் மூலம் தெரிந்து கொண்டு விட வேண்டியதுதான்.

“ஆமா! இந்த கரண்ட் கட் எல்லாம் சரி பண்ணவே முடியாதா?”

“அதெல்லாம் வாய்ப்பே இல்லைங்க. கூடங்குளம் வந்தா சரி ஆகிடும்னு சொல்றாங்க. ஆனா அதெல்லாம் சும்மா. சரி நீங்க எங்க வேலை பாக்குறீங்க?”

“எனக்கு கவர்மென்ட் உத்தியோக யோகம் எல்லாம் இல்லை. மதுரைல ஒரு பிரைவேட் கம்பெனில வேலை”

“சம்பளம் எவ்வளவு வாங்குறீங்க?” அடுத்த கேள்வியில் அதிர்ச்சி அளித்தார். பழகிய பத்தே நிமிடங்களில் சம்பளம் கேட்கிறாரே. அரசாங்க ரகசியத்தை எல்லாம் நான் கேட்டிருக்க கூடாதோ? சில நொடிகள் குழம்பி சம்பளத்தை தவறாக சொல்ல முடிவு செய்தேன்.

“என்னங்க ஒரு பத்தாயிரம். அதுலயும் அப்பிடி இப்பிடி பிடிச்சு ஒரு எட்டு நெருங்கிதான் கைக்கு வரும்”

அவர் முகத்தில் ஒரு புன்னகை தெரிந்தது.

“நீங்க என்ன படிச்சு இருக்கீங்க? இன்ஜினியரிங்தானே”

“ஆமா”

“பாருங்க இன்ஜினியரிங் படிச்சு எட்டாயிரம்தான் வாங்குறீங்க. உங்க முதலாளி உங்களை விட கம்மியாதான்  படிச்சு இருப்பார். ஆனா எவ்வளவு சம்பாதிக்கிறார். எப்பிடின்னு நினைக்கிறீங்க”

உண்மையில் என் எம்.டி  இங்கிலாந்து சென்று பல பட்டங்களை வாங்கியவர். எனக்கு என்னமோ அதை அவரிடம் சொல்ல பிடிக்கவில்லை.

“அவர் திறமைசாலி அதான்”

“திறமைதான். ஆனா அவர் திறமை என்னன்னா அவருக்கு மத்தவங்க நேரத்தை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க தெரிஞ்சு இருக்கு. உங்க நேரத்தை எடுத்திகிட்டு உங்களுக்கு பணம் தரார். ஆனா அதை விட அதிக பணம் உங்க நேரத்துல அவர் சம்பாதிக்கிறார். நேரம்தான் எல்லாம். உங்க நேரத்தை நீங்களே பயன்படுத்திகிட்டா நீங்களும் அதிக பணம் சம்பாதிக்கலாம்”

அவர் பேசுவது யாரோ சொல்லிக் கொடுத்து பேசுவது போல தெரிந்தது.

“அதெல்லாம் எதுக்குங்க. சம்பளம் வருது அது போதும்”

“இப்போ உங்களுக்கு இது போதும். நாளைக்கு? இன்னும் இருபது வருஷம் கழிச்சு முப்பதாயிரம் வாங்குவீங்க. அது போதுமா? இப்போ நான் உங்களுக்கு உங்க நேரத்தை எப்படி பணமாக்குறதுன்னு இப்போ உங்களுக்கு  சொல்லித்தரேன்”

அவர்  நோக்கம் எனக்கு தெளிவாக புரிந்து விட்டது.

“ஆம்வேயா? மோடிகேரா?”

“ஆம்வேலாம் இல்லை. மோடிகேர்தான். இப்போ  நான் பெரிய தொழிலதிபர்களை உருவாக்குற முயற்சியில இருக்கேன். அப்பிடியே கம்பெனியோட சோப்பு, ஷாம்பூ விக்கணும். எம்.எல்.எம்தான் நம்ம நேரத்தை பணமாக்குற வழி ”

“எம்.எல்.எம் கான்செப்டே தப்புங்க. இப்பிடி ஒவ்வொருத்தரும் பத்து பேரை சேர்த்து விட்டா கடைசில எல்லாருமே விக்கிறவங்க ஆயிடுவாங்க. அப்புறம் அந்த பொருளை எல்லாம் கடைசில யாருதான் வாங்குறது?”

இதை கேட்டதும் கடகடவென்று சிரித்தார்.

“இன்ஜினியரிங் எப்பிடி பாஸ் ஆனீங்க. இது கூட புரியல. அது அப்பிடி இல்லங்க”

“அது எப்பிடியோ நம்ம ஊருக்கு  இதெல்லாம் ஒத்துவராது. ரொம்ப காஸ்ட்லி ப்ராடக்ட் . இங்கெல்லாம் அதை யாரு வாங்குவா, ரெண்டு ரூபா சாஷேல ஷாம்பூ வாங்கி குளிச்சா போதும்னு சொல்லிடுவாங்க”

அவர் முகம் மாறியது.” நீங்க எப்பவாச்சும் இவங்களோட டூத் பேஸ்ட்டை யூஸ் செஞ்சு இருக்கீங்களா. யூஸ் செஞ்சு பாருங்க. அப்புறம் இப்பிடி பேச மாட்டீங்க”

“அதெல்லாம் எதுக்குங்க. நமக்குதான் கோபால் பல்பொடி இருக்கே?”

“கோபால் பல்பொடியா?”

“என்ன முகத்தை சுருக்குறீங்க? பெரிய மல்டி நேஷனல் கம்பெனி தெரியும்ல. மலேசியா, சிங்கப்பூர், இலங்கைன்னு பெரிய மார்க்கெட்.”

அவர் வெறுப்பு அடைவது நன்றாக தெரிந்தது.

“சார்! நீங்க எல்லாத்தையும் தப்பா புரிஞ்சு இருக்கீங்க. மதுரைல ஒரு டாக்டர் இப்போ எம்.எல்.எம்ல  மாசத்துக்கு ஒரு லட்சம் சம்பாதிக்கிறார். இதை வச்சே கார் எல்லாம் வாங்கிட்டார். இந்த வாரம் ஞாயித்துக்கிழமை மதுரைல ஒரு மீட்டிங் இருக்கு. போய் கலந்துக்குங்க. அந்த டாக்டர் பேசுறதை கேட்டதும் உங்களுக்கே புரியும். அப்பிடியே என்னோட பேரை அங்கே ரெபரன்ஸ்னு குடுத்துடுங்க”

“டாக்டர் பேஷண்டுக்கு உங்க கம்பெனி  சோப்பையும், ஷாம்பையும் பிரிஷ்க்ரிப்சன் எழுதி கொடுத்து வித்துடுவார். நான் எப்பிடி விக்கிறது. தவிர இந்த வாரம்  ஞாயித்துக்கிழமை நான் ரெஸ்ட் எடுக்கணும். உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? இதே மாதிரி எம்.எல்.எம்ல  ட்ரை பண்ணி காசை விட்ட நிறைய பேரை எனக்கு தெரியும்.”

அவர் கோபத்தின் உச்சிக்கே போய்விட்டார் என்பது அவரின் கண்களில் தெரிந்தது.

“சரி உங்க நண்பர்கள் போன் நம்பர் இருந்தா குடுங்க. யாராச்சும் இதுல இன்ட்ரஸ்ட் காமிக்கலாம்”

“எனக்கு நண்பர்களே இல்லீங்க. அப்பிடி யாரையும் நான் வச்சுகுறதே இல்ல.”

“நீங்க நெகட்டிவாவே வளர்ந்துட்டீங்க, அதான் உங்களுக்கு நண்பர்களே இல்லை. இப்படி யோச்சிக்கிறவரை நீங்க வாழ்க்கையில  முன்னேறவே மாட்டீங்க” இப்பொழுது கோபம் வார்த்தைகளில் வந்து விழுந்தது. அவரின் விலைமதிப்பில்லாத நேரத்தை நான் வீணடித்து விட்டது காரணமாக இருக்கலாம்.

அடுத்த முப்பது நிமிடங்கள் ஊரை அடையும்வரை இருவரும் பேசிக்கொள்ளவில்லை. எனக்கு அதில் சந்தோசம்தான் . ஊர் வந்ததும் திரும்பி பார்க்காமல் இறங்கி சென்று விட்டேன்.

இது நடந்து நான்கு வருடங்கள் இருக்கும். இப்போது ஊரில் புதியதாக  கார் எதுவும் ஓடுவதாக தெரியவில்லை. மூன்றே மாதங்களில் எதார்த்தம் புரிந்த பின் அவர் எம்.எல்.எம் தொழிலை விட்டு இருக்கலாம். ஆனால் அதற்குள் அவர் தன்னுடைய நண்பர்கள் அனைவரையும் தன்னைவிட்டு விலகி ஓட வைத்து இருப்பார். அவருக்கு எதார்த்தம் புரிய வைத்ததில் என்னுடைய பங்களிப்பும் இருப்பது ஒரு வகையில் மகிழ்ச்சியே.


Tuesday, July 22, 2014

ஒரு ஆசிரியையின் மோசமான நாள்

ன்னை பொறுத்தவரை ஆசிரியர்களாக இருப்பது கடினமான காரியம். அதுவும் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் ஆசிரியராக இருப்பது. அந்த வயது மாணவர்களுக்கு தாங்கள் பெரியவர்களா, சிறியவர்களா என்ற குழப்பம் இருப்பது போலவே ஆசிரியர்களுக்கும் அவர்களை பெரியவர்களாக நடத்துவதா, சிறியவர்களாக நடத்துவதா என்ற குழப்பம் இருக்கும். இது தவிர மாணவர்களின் கேலி, கிண்டல்களையும் கண்டும் காணாதது போல பொறுத்து கொள்ள வேண்டும்.

எங்கள் பள்ளியில் வாரம் ஒரு நாள்  பிரார்த்தனையின் போது கொடி ஏற்றுவார்கள். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு ஆசிரியர் என்ற ரீதியில் கொடி ஏற்றும் வாய்ப்பு கிடைக்கும். ஒரு நிறைந்த திங்கள்கிழமை நாளில் அந்த வாய்ப்பு பள்ளியில் புதிதாக வேலைக்கு சேர்ந்திருந்த   ஆசிரியைக்கு கிடைத்தது. அந்த ஆசிரியையும் தனக்கு எதிராக விதி சதி செய்யப்போவதை உணராமல் எல்லா பல்லும் வெளியே தெரியுமாறு சிரித்துக் கொண்டு உற்சாகமாக கொடி ஏற்ற கொடி கம்ப பீடத்தில் ஏறினார்.

உடற்கல்வி ஆசிரியர் கொடி ஏற்றும் கயிறை கையில் கொடுத்ததும் ஏதோ ஐ.நா சபைத் தலைவர்  போல தலையை நிமிர்த்தி மேலே பார்த்து கொண்டார். பின்னர் அந்த கயிறை ஒயிலாக இழுத்தார் பாருங்கள் . மின்னல் வேகத்தில் மேலே ஏறிய கொடி விரிந்து அதே வேகத்தில் மீண்டும் கீழே இறங்கத் தொடங்கியது. பதட்டத்தில் அந்த ஆசிரியை மீண்டும் கயிற்றின் ஏதோ ஒரு முனையை பிடித்து மீண்டும் இழுக்க கொடி சரியாக பாதி கம்பத்தில் நின்று கொண்டது.

 இது போதாதா? பள்ளியின் மாணவர் தலைவன் உட்பட அனைவரும் சிரிக்க தொடங்கி விட்டார்கள். ஒரு சில ஆசிரியர்களும் சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் சிரித்து விட்டார்கள். ஏதும் கொடி அவமதிப்பில் சிக்கி விடுவோமோ என்ற சந்தேகத்தில் தலைமை ஆசிரியரின்  முகத்தில் ஈ ஆடவில்லை. ‘வாரத்துல முதல் நாள்  கொடி ஏத்த சொன்னா இது துக்க நாள் மாதிரி  கொடியை பாதி கம்பத்துல பறக்க விடுது’ என்று பக்கத்தில் இருந்தவன் கமெண்ட் அடிக்கவும் நான் கொஞ்சம் அதிகமாகவே சிரித்து விட்டேன். உடற்கல்வி ஆசிரியர் சுறுசுறுப்பாக செயல்பட்டு கொடியை கீழே இறக்கி மடக்கி வைத்தார்.

எல்லாம் சற்று அடங்கியதும் தலைமை ஆசிரியர் பேச ஆரம்பித்தார். எதுவும் நடக்காத தொனியில் இன்று கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்த ஆசிரியைக்கு நன்றி என்று கூறி முடித்தவுடன் அருகில் இருந்தவன் மீண்டும் ‘ஏத்தி வச்சுச்சா? இறக்கில்ல வச்சுச்சு’’ என்று மெல்லிய குரலில் சொல்ல மீண்டும் அசர்ந்தப்பமாக சிரித்து தொலைத்து விட்டேன். இந்த முறை நான் மட்டும் சிரித்தால் தனியாக தெரிந்து விட்டது. நான்கு, ஐந்து தலைகள் என் பக்கம் திரும்பி விட்டன . இப்போது தலைமை ஆசிரியர் ‘நீங்கள் சிறுவர்கள் அல்ல. இது போன்ற சந்தர்ப்பங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கற்று கொள்ள வேண்டும்’ என்று கூறி உரையை முடித்து விட்டார்.

தேசிய கீதம் பாடி பிரார்த்தனை கூட்டம் முடிந்ததும் வகுப்புக்கு செல்ல முயன்றபோது பள்ளியின் அனைத்து உடற்கல்வி ஆசிரியர்களும் எங்கள் வகுப்பு மாணவர்களை  சுற்றி வளைத்து வெயிலில் முட்டி போட சொல்லி அன்பு கட்டளை இட்டனர். ‘சின்ன பசங்களை  விட்டுடலாம்  சார்! எருமை மாடு மாதிரி வளர்ந்துட்டு எப்பிடி சிரிச்சானுங்க பார்த்தீங்கள்ள’ என்று ஒரு வழுக்கை தலை ஆசிரியர் கையில் குச்சியை தட்டி கொண்டே சொன்னார். எங்களில்  ஒரு மாணவன் மயக்கம் அடைந்ததால்  முப்பது நிமிடங்களுக்கு பின் வகுப்புக்கு திரும்பிவிட்டோம். எங்கள் வகுப்பு மட்டும் மாட்டியதற்கு நான்தான் காரணம் என்று எண்ணி என்னை மற்றவர்கள் அடித்து நொறுக்க போகிறார்கள் என்று எண்ணி பயந்து கொண்டே இருந்தேன். நல்ல வேளையாக எந்த முட்டாள் பயலுக்கும் அந்த எண்ணம் தோன்றவில்லை.

மறுநாள் கொடி ஏற்றிய ஆசிரியை ஓய்வறையில் அழுததாக ஒரு வதந்தி மாணவர்களிடையே பரவியது. முதல் மாணவர்கள் சில பேர் ‘பாவம் டீச்சர்’ என்று என்று பரிதாபப்பட்டுவிட்டு மீண்டும் முதல் நாள் நடந்ததை பற்றி பேசி சிரித்து கொண்டிருந்தனர்.

சில நாட்களுக்கு முன் பள்ளி பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனை பிடித்து அந்த டீச்சரை பற்றி விசாரித்தேன். இப்போது கொடி நன்றாகவே ஏற்றுகிறார்கள் என்றான். ஆனால் அவன் ‘அந்த டீச்சர் என்ன கோமாளித்தனம் செஞ்சுச்சு தெரியுமா?’ என்று இன்னொரு கதை சொன்னான். இதே போல அத்தனை ஆசிரியர்களுக்கும் ஒரு கதை சொல்லி சிரித்தான். காரணங்கள் மாறினாலும் நிஜமாகவே ஆசிரியர்களாக இருப்பது கஷ்டம்தான்.

Wednesday, July 16, 2014

கார்ப்பரேட் நிறுவனத்தில் ஒரு நேர்காணல்

ந்த கார்ப்பரேட் நிறுவனத்தின் நேர்முகத்தேர்வு நடக்கும் அந்த அறைக்குள் குழப்பம் நிலவியது. அங்கே இருந்த மனிதவள நிர்வாக அதிகாரிகள் நால்வரும் தங்களுக்குள் ஆழமான விவாதத்தில் இருந்தனர். தாங்கள் வடிகட்டிய மூன்று பேரில் யாரை வேலைக்கு எடுப்பது என்ற இறுதி முடிவு எடுக்க வேண்டும். ஆனால் அந்த மூவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவரில்லை. எத்தனை விவாதம் செய்தும் குழப்பம் தீரவில்லை.

இப்போது அவர்களுள் இருப்பதிலேயே வயதான அதிகாரி பேசத் தொடங்கினார்.

“நண்பர்களே! இந்த குழப்பத்தை தீர்க்க அந்த மூன்று பேரிடமும் ஒரு கேள்வி கேட்கப் போகிறேன். அந்த கேள்வி மூலம் அவர்கள் மூவரும் எந்த அளவு நம் நிறுவனத்துக்கு பொருந்துவார்கள் என்று பார்க்க போகிறேன். முதல் நபரை வர சொல்லுங்கள்”

சில நிமிடங்களில் முதலாம் நபர் உள்ளே வந்தார்.

வாருங்கள் ரவி! இந்த சுற்றில் உங்களிடம் நான் கேட்கப்போவது ஒரே கேள்விதான். நீ இந்த நிமிடம் கடவுளாகி விட்டாய்.  என்ன செய்வாய் சொல்?”

“என்ன கேள்வி இது?”

“ஒரு கற்பனைதானே. சொல் என்ன செய்வாய்?”

“சரி நான் உண்மையை சொல்கிறேன். நீங்கள் நான் ஒரு சோம்பேறி என்று நினைத்தாலும் பரவாயில்லை. நான் பாட்டுக்கு சொர்க்கத்தில் சொகுசாக வாழ்வேன். அதை விட வேறு என்ன பெரிய வேலை எனக்கு?

“சரி நீ போகலாம்”

“என்ன சார்! உண்மையாக பேசுகிறார் இவரை வேலைக்கு எடுத்துவிடலாமா?” வயதான அதிகாரியிடம் கேட்டார் ஒருவர்.

“இத்தனை உண்மையாக இருப்பவர்களால் எப்படி கார்ப்பரேட் நிறுவனத்தில் குப்பை கொட்ட முடியும். கூட இருப்பவர்கள் ஒரே மாதத்தில் இவனை தூக்கி சாப்பிட்டு விடுவார்கள். அது மட்டும் இல்லை. சற்றும் பொறுப்பின்றி எந்த வேலையையும் செய்ய மாட்டேன் என்கிறார்.அடுத்தவரை வர சொல்லுங்கள்”

அவரை அழைத்தார்கள்.

“நீதான் கடவுள். இப்போது என்ன செய்வாய் இந்த நிறுவனத்துக்கு?”

“நிறுவனத்துக்கா? உலகத்துக்கு என்று கேளுங்கள். எல்லாரையும் ஒரே போன்ற அழகோடும், புத்திசாலித்தனமோடும் படிப்பேன். ஏழை,பணக்காரன் என்ற வித்தியாசமே என் உலகில் இருக்காது. மதம், இனம்....”

“நிறுத்து! நிறுத்து! நீ போகலாம். யாருய்யா கம்யூனிஸ்ட்டை உள்ளே அனுப்பியது” அலறினார் அதிகாரி.

அந்த நபர் வெளியேறிய பின் மூன்றாம் நபர் அழைக்கப்பட்டார். அதே கேள்வி.

“நான் கடவுளாகிவிட்டால் எந்த வேலையையும் செய்ய மாட்டேன். சிறு தெய்வங்களை படைத்தது அவர்களுக்கு எல்லா பொறுப்பையும் ஒப்படைத்துவிட்டு சொர்க்கத்தில் ஓய்வெடுப்பேன். என்னை போற்றுபவர்களுக்கும், துதி பாடுவோருக்கும் என்னுடன் சொர்க்கத்தில் இடம்.”

இதை அவர் சொல்லி முடித்ததும் உயரதிகாரி எழுந்து கைத்தட்ட தொடங்கினார்.

“வெல்டன்! கார்ப்பரேட்  நிறுவனத்தில் உயர் பொறுப்பு வரை  முன்னேற எல்லாத் தகுதிகளும் உங்களிடத்தே உள்ளது. வேலையை அடுத்தவரிடம் தள்ளி விடும் சாதுர்யமும், ஜால்ரா அடிப்பவர்களை தூக்கி விடும் குணமும் உங்களுக்கு இயல்பாகவே அமைந்துள்ளது. நாளைக்கே வந்து சேர்ந்து விடுங்கள்”

“நன்றி சார்”


இதை பொறுமையாக படித்தவர்களுக்கு அந்த நிறுவனத்தின் பெயரை தெரிந்து கொள்ளும் ஆசை இருக்கலாம். உங்கள் நிறுவனத்தின் பெயர்தான் நேர்காணல் நடந்த நிறுவனத்தின் பெயரும்.


Monday, July 14, 2014

கொஞ்சம் மறந்துடுங்க!!!

பொதுவாக நான் தண்டவாளத்தை அப்படி கடப்பவனில்லை. ஆனால் அந்த நள்ளிரவில்  லெவல் கிராசிங் வரை சென்று திரும்ப சோம்பேறித்தனம்.  இந்த வழியில் சென்றால் சில நிமிடங்களில் வீட்டை அடைந்து விடலாம் .அந்த சோம்பல் ஒரு மறக்க முடியாத இரவை தரப்போகிறது என்று நான் உணரவில்லை.

இருட்டில் கவனமாக அடி எடுத்து வைத்து தண்டவாளத்தில் நடக்க தொடங்கினேன். எதையாவது மிதித்து தொலைத்து விடக் கூடாது. அப்போதுதான் தண்டவாளத்தில் அந்த மூட்டையை  அதை பார்த்தேன். மூட்டை போல இலை அது. லேசாக அசைவது போல தெரிந்தது. யார் அது? அடப்பாவமே. யாரோ தற்கொலை செய்ய முயல்கிறார்கள். விரைவாக அவரை நோக்கி ஓடி அவரை தூக்கி விட்டேன்.

“எழுந்திருங்கள்.”

அவர் அதிகம் சிரமப்படுத்தவில்லை. கையை பிடித்து இழுத்ததும் அவரே எழுந்து விட்டார்.  இருட்டில் முகம் தெரியவில்லை. அவருக்கு ஒரு நாற்பது வயது இருக்கக் கூடும். தயங்கி நின்ற அவரிடம் பேசத் தொடங்கினேன்

“என்ன பிரச்சினை உங்களுக்கு. வாழ வழியா இல்லை?”

“நான் படும் கஷ்டத்தை நீங்கள்பட்டால் தெரியும் உங்களுக்கு”

“யாருக்குதான் கஷ்டம் இல்லை. என்னையே எடுத்து கொள்ளுங்கள். கை நிறைய சம்பளம். ஆனால் ஊரெல்லாம் கடன். வீட்டுக்கு, காருக்கு என்று கட்டி தீர்த்த பிறகு கையில் வரும் பணத்தை வைத்து குடும்பம் நடத்துவது எத்தனை கஷ்டமாக உள்ளது தெரியுமா? ஆமாம் உங்களுக்கு என்ன பிரச்சினை? இந்த வயதில் காதல் தோல்வி காரணமாக இருக்காது. ஒருவேளை நீங்களும் கடன் வாங்கி மாட்டி கொண்டீர்களா?”

“பணமெல்லாம் எனக்கு ஒரு பிரச்சினையே இல்லை. வீடெல்லாம் பணம்தான். ஒரு உண்மை சொல்லவா. என் அப்பா அந்த காலத்திலேயே கறுப்பு பணம் சேர்த்து வைத்தவர்”

“வேறு என்ன பிரச்சினை. நீங்கள் விரும்பினால் சொல்லலாம். இல்லையென்றால் ரயில் இன்னும் சிறிது நேரத்தில் வரும்.”


அவர் சிறிது யோசித்தார்.

“நீ கேட்பதால் சொல்கிறேன். எனக்கு மன பாரம் சற்று குறையலாம். என்னுடைய பிரச்சினையே என்னுடைய நியாபக சக்தி”

“என்ன? இது ஒரு பிரச்சினையா? நியாபக மறதியில் திண்டாடுகிறார்கள் ஒவ்வொருவரும். நீங்கள் நியாபக சக்திதான் பிரச்சினை என்கிறீர்கள்”

“இந்த கொடுமையை அனுபவித்தால்தான் உனக்கு புரியும். எனக்கு எதுவுமே மறக்காது. முப்பது வருடம் முன்பு நடந்த விஷயம் போல நேற்று போல நியாபகம் இருக்கும். உன்னுடைய முதல் காதல் உனக்கு நியாபகம் இருக்கிறதா?”

சற்றே யோசித்தேன். இந்த மனிதரை பேசாமல் விட்டு இருக்கலாமோ? வலிய சென்று மாட்டி கொண்டேனே. சரி பேச்சு கொடுப்போம். ஒரு வேளை அவர் மனம் மாறினால் சந்தோசம்தானே.

“அப்போது நான் எட்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். என் வகுப்பில்  பெண். பெரிய அழகி. பெயர் ஆயிஷா என்று நியாபகம்”

“நிறுத்து. காதலி பெயர் கூட நினைவில்லை பார் உனக்கு”

“ஆம், நாள் ஆகிவிட்டதே”

“இப்போது என்னுடைய கதையை கேள். நேற்றுதான் நடந்தது போல் உள்ளது. என்னுடைய கீதா என்னை விட்டுவிட்டு வேறு யாரையோ திருமணம் செய்து கொண்டு...”

முடிக்காமல் அழ ஆரம்பித்தார்.

“நான் உங்களுடைய முதல் காதலை பற்றி கேட்டேன். நீங்கள் எதையோ..”

“இது என்னுடைய முதல் காதல்தான். நான் இரண்டாம் வகுப்பு படித்தபோது அவளை காதலித்தேன்”

“புரிகிறது. சிறு வயதிலேயே காதலிக்க ஆரம்பித்து பின்னர்  பிரிந்தால் கஷ்டம்தான். ஆமாம் உங்கள் காதல் ஏன் பிரிந்தது?”

“சொல்ல தெரியவில்லை எனக்கு. கீதா நான் வளர்ந்து பெரியவன் ஆகும்வரை காத்து இருப்பாள் என்று நினைத்தேன். அவளிடம் காதலை சொல்ல சரியான நேரம் பார்த்திருந்தேன். ஆனால் சற்று தாமதித்து விட்டேன். கீதாவோ அவசரப்பட்டு விட்டாள்.”

“என்ன? இரண்டாம் வகுப்பில் காதலித்த பெண்ணிடம் அவளுக்கு திருமணம் ஆகும்வரை காதல் சொல்ல நேரம் வரவில்லையா?”

“எனக்கு தைரியம் இல்லை. கீதா கையில் இருந்த குச்சி என்னை என் காதலை சொல்ல விடாமல் தடுத்து விட்டது. அந்த குச்சியை கண்டாலே எனக்கு பயம்”

“எனக்கு புரியவில்லை. கீதா உங்கள் உடன் படித்த பெண்தானே?”

“இல்லை இல்லை. அவள்தான் என் இரண்டாம் வகுப்பு ஆசிரியை. இப்போது நினைத்தாலும்......”

எனக்கு எரிச்சலாக  வந்தது. பைத்தியகாரன்.

“எப்போதே நடந்த கதையை நினைத்தா அழுகிறீர்கள்? இப்போது கீதா டீச்சரின் பிள்ளைகளுக்கே திருமணம் ஆகியிருக்குமே?”

“ஆகிவிட்டது. ஆனால் கீதா டீச்சரின் திருமணம் நேற்று நடந்தது போலவே உள்ளது”

எனக்கு இப்போது அவரின் பிரச்சினை புரிந்து விட்டது. அவரை எப்படி திசை திருப்பலாம். பொதுவாக ஏதாவது பேசலாம்.

“சரி அழுகையை நிறுத்துங்கள். உங்களுக்கு என்ன விளையாட்டு பிடிக்கும் சொல்லுங்கள்”

“கிரிக்கெட்”

அவர் முகத்தில் பிரகாசம். அவரை சமாளித்து விடலாம் என தோன்றியது. மெதுவாக திசை திருப்பிவிட வேண்டியதுதான்.

“சொல்லுங்கள் 2011ல் இந்தியா உலக கோப்பையை ஜெயித்தது நினைத்து பாருங்கள். அப்போது எத்தனை சந்தோசத்தில் இருந்திருப்பீர்கள்”

“நான் அதை பார்க்கவில்லை. 96 உலகக்கோப்பையில் இந்தியா ஈடன் கார்டனில் மோசமாக தோற்றது நினைவிருக்கிறதா? அதன் பின் என்னால் கிரிக்கெட் பார்க்கவே முடியவில்லை. அன்று நான் எப்படி அழுதேன் தெரியுமா? அன்றே நான் தற்கொலை செய்திருக்க வேண்டும். என்ன ஒரு தோல்வி அது”

மீண்டும் அழுகை. எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. காம்ப்ளியும், அசாருதீனுக்குமே அந்த தோல்வி நினைவில் இருக்காது. ஆனால் அவரை பார்க்கவும் பாவமாக இருந்தது. மறதியும் ஒரு வகையில் வரம்தான் போல. இன்னும் பேசினால் ஏதாவது ஒன்றை சொல்லி அழுது கொண்டே இருப்பார். சந்தோசத்தை விட சோகம்தானே மனத்தை அதிகம் பாதிக்கும்.

“ நீங்கள் டாக்டரிடம் சென்று காட்டி இருக்கிறீர்களா?”

“நிறைய பேரிடம். பயன் இல்லை. இது நோய் இல்லை என்கிறார்கள்”

“ஒன்று செய்யுங்கள். எனக்கு தூக்கம் வருகிறது. என்னுடைய வீடு பக்கத்து தெருவில் இரண்டாம் வீடு. நாளை காலை வாருங்கள். கூகிளில்  தேடி  என்ன செய்வது என்று பார்க்கலாம்”

சொல்லிவிட்டு நகர முயன்றேன்.

“சரி நிச்சயம் வருகிறேன். எனக்கு ஏதோ உங்களால் நன்மை நடக்கும் என்று தோன்றுகிறது. உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை . என் மேல் அக்கறை  கொண்ட உங்கள் முகத்தை பார்க்க வேண்டும். வெளிச்சத்துக்கு வாருங்கள்”

சற்று நடந்து வெளிச்சத்திற்கு வந்தோம். என்னுடைய முகத்தை கூர்ந்து பார்த்தார்.

“டேய் நீயா?”

“என்னை உங்களுக்கு தெரியுமா?”

“தெரியுமாவா? மூன்று வருடம் முன் தியேட்டரில் என் காலை மிதித்து விட்டு மன்னிப்பு கூட கேட்காமல் சென்றவன்தானே நீ. எனக்கு எத்தனை வலித்தது தெரியுமா?”

அவரின் முகம் சிவந்தது. அருகில் வேறு யாரும் இல்லை . கொலை ஏதும் செய்து விடுவானோ? என் முகத்தை முறைத்து  பார்க்க தொடங்கினான். எந்த தியேட்டரில்  இவன் காலை மிதித்தேன். யோசித்து...........

“ஆ........”


என்னுடைய காலை ஓங்கி மிதித்து விட்டு  அவர் ஓடி கொண்டிருந்தார்.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...