Thursday, August 21, 2014

மனசுக்குள்ள பேய் இருக்கு!

ம்முடைய பிரச்சினைகள் நம்முடைய வாயிலிருந்தே தொடங்குகிறது என்று எங்கேயோ படித்தது நினைவுக்கு வந்தது. உண்மைதான். எங்கள் பழைய வீட்டில் பேய் இருக்கிறது, நாங்கள் வீட்டையே காலி செய்ய அந்த பேய்தான் காரணம் என்று நண்பன் சொன்னதை சொன்னதை கேட்டு கொண்டு பேசாமல் போய் இருக்கலாம். ‘பேய் எல்லாம் மனசுலதான் இருக்கு’ என்று வீர வசனம் பேசி அவனிடம் சவால் விட்டு அந்த வீட்டில் ஒரு இரவு தனியாக தங்க ஒப்புக்கொண்டு. இப்போது கூட ஒன்றும் கெட்டு போய்விடவில்லை வெளியே போய் விடலாம். ஆனால் ஏதோ ஒன்று தடுத்தது. எனது தைரியத்தையும், பேய் இல்லையென்பதையும் நிரூபிக்க ஒரே வாய்ப்பாக கிடைத்து இருக்கிறது. விட்டுவிடக் கூடாது

அந்த வீடு சற்று பெரிய வீடுதான். மாடி அறையில் பேய் இருக்கிறது என்று அவன் தெளிவாக கூறியிருந்தான். ஒரு வழியாக மனதை திடப்படுத்திக் கொண்டு அந்த அறையிலிருந்த கட்டிலில் படுத்துக் கொண்டேன். பத்து மணிக்கே பயமாக இருந்தது. பழைய வீடு என்றால் மின்சாரத்தை கூடவா பிடுங்கிவிடுவான் பாவி. மெழுகுவர்த்தி முடியும் முன் தூங்கி  விட வேண்டும். காற்று இல்லாமல் வியர்த்தது. எழுந்து சென்று ஜன்னலை திறந்தேன். கண்ணுக்கு எட்டிய வரை ஆள் நடமாட்டமே இல்லை. இப்படி ஒரு அத்துவான காட்டில் வீடு இருந்தால் யாருக்குதான் பயம் வராது.

கட்டிலுக்கு வந்து தூங்க முயற்சித்தேன். யாரையும் பயமுறுத்தும் சூழ்நிலைதான். இந்த நிலையில் தூக்கம் பிடித்தால்தான் ஆச்சரியம். நண்பன் கூறிய பேய்க்கதை நியாபகம் வந்து தொலைத்தது. வேண்டாம் வேறு எதையாவது யோசி; நஸ்ரியாவுக்கு திருமணம் முடிந்ததாமே, இந்திய அணி இங்கிலாந்தில் தோற்றதற்கு யார் காரணம்? அஞ்சான் சுறாவை மிஞ்சிவிட்டதாமே? இப்படி எதையாவது யோசி. அதையே நினைத்தால் அதுதான் தெரியும். மனதை திசை திருப்ப முயற்சி செய்தேன். அவன் சொன்னதை நினைக்காதே. நினைக்காதே. நமச்சிவாய, நமச்சிவாய, நமச்சிவாய

பேய் இல்லைன்னு சொல்றியே? அன்னைக்கு எனக்கு என்ன நடந்தது தெரியுமா? எனக்கு மட்டும் இல்ல. எங்க குடும்பத்துல எல்லாருக்கும். நடு ராத்திரில யாரோ அழுகுற சத்தம் கேக்கும். கண்ணை திறந்து பார்த்தா மூலைல குத்துகால் போட்டு உக்காந்து ஒரு உருவம் அழுதுகிட்டு இருக்கும். அப்போ நாம அசைஞ்சா அந்த உருவம் எந்திரிச்சு நம்ம கிட்ட ஓடி வரும். அப்பிடியே அலறி அடிச்சு எழுந்து உக்காந்தா அது மறைஞ்சுடும். நல்ல வேலையா தனியா யாரும் அது கிட்ட மாட்டுனது இல்ல.

அவன் சொன்னது வார்த்தைகள்  கற்பனையில் உருப்பெற தொடங்கின. நினைக்காதே! நினைக்காதே! வேறு நினை. எம்.ஜி.ஆர் பாட்டு, ரஜினி ஸ்டைல் இப்படி எதையாவது நினை. என்ன முயன்றாலும் மீண்டும் மீண்டும் அவன் சொன்ன கதையிலேயே மனது சென்று நின்றது. பயப்படாதே! பேய் என்று ஒன்று இருந்தால்தானே அது வரும். எல்லாம் கற்பனை. நிழலை பார்த்து பயந்த அவனை நினைத்து சிரி. ஒன்று, இரண்டு, மூன்று நூறு வரை சொல்லி தூங்கி விடு.

1, 2, 3,.........,572 யாரோ அழுவது போல் இருக்கிறதே. கண்ணை திறந்து பார்த்து விடலாமா? வேண்டாம் இது பிரம்மை.

பிரம்மை என்றால் என்ன? கண்ணை திறந்து பார்த்து உறுதி செய்து விடலாம். எப்படியும் எதுவும் இருக்கப்போவதில்லை.

கண்ணை திறந்தால் பேயை நம்பியது போல் ஆகிவிடும். கண்ணை திறக்காதே. புரண்டு படுக்க முயன்றேன். புரண்டால் அது அருகே ஓடி வருமாமே. அழுகுரல் வேறு இப்போது தெளிவாக கேட்கிறது. கண்ணை திறக்காதே. புரண்டும் படுக்காதே. நாளை காலை வரை சமாளித்தாலே போதும். நாம் ஜெயித்து விடலாம்.

ச்சே! ஏன்ன இது? இப்படி பயப்படவா இங்கே வந்து படுத்தோம். கண்ணை திற. ஒன்றுமே இருக்காது. எல்லாம் பிரம்மை.

திற! திறக்காதே!  

திற! திறக்காதே! 

மெதுவாக கண்களை திறந்தேன். அங்கே யாரோ அமர்ந்து . பதறி அடித்து எழுந்து ஓடத் தொடங்கினேன்.

“ஏதோ சொன்ன? மனசுதான் பேய்ன்னு. பின்ன ஏன் எழுந்து ஓடி வந்த?” 
அவன் குரலில் நக்கல் தெரிந்தது. எதிர்பார்த்ததுதான்.


“இப்பவும் சொல்றேன். மனசுதான் பேய்” மிக உறுதியான குரலில் சொன்னேன்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...