Saturday, March 28, 2015

சென்னை, மதுரை, கோவை – நான் கண்ட தமிழகம்

“வேற்றுமையில் ஒற்றுமை”(???) காணும் நாடு பாரத நாடு என்று படித்திருப்பீர்கள். இதை பாடப்புத்தகத்தில் படிக்கும்போது நானும் உங்களைப் போலவே பல மாநிலங்களில் பல மொழி பேசுபவர்களும், பல கலாச்சாரத்தை பின்பற்றுபவர்களும் வாழ்வதால் இந்த பெயர் வந்தது என்று எண்ணிக்  கொண்டிருந்தேன். பின்னர் தமிழகத்தின் முக்கிய ஊர்கள் அனைத்துக்கும் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தபோது ஒரு மாநிலத்துக்குள்ளேயே எத்தனை விதமான வேறுபாடுகள் என்று புரிந்தது. ஒரே மொழி பேசும் மக்கள், அந்த மொழியை பேசும் விதத்திலும், நடந்து கொள்ளும் முறையிலும் எவ்வாறு மாறுபடுகிறார்கள் என்பது சற்று கவனித்து பார்த்தால்தான் புரியும்.

முதலில் தமிழ்நாட்டின் தலைநகரை எடுத்துக் கொள்வோம். சென்னையில் அடியெடுத்து வைத்த முதல் வாரம் மாநகரப் பேருந்தில் பயணித்தேன். கூட்டம் நிரம்பிய பேருந்தில் நீச்சல் அடித்து உள்ளே சென்று டிக்கெட் எடுக்கலாம் என்று நடத்துனரை கவனித்தவனுக்கு கிடைத்தது ஒரு கலாச்சார அதிர்ச்சி. “மேலே ஏறி வா. சில்லறையா குடு” என்று அறுபது வயது கொண்ட ஒரு பெரியவரை அதிகாரம் செய்து கொண்டிருந்தார்  முப்பது வயது  மிகாத  நடத்துனர். மரியாதை  இல்லாமல்  இப்படி எல்லாம் கூட  பேசுவார்களா  என்று நான்  வியந்து கொண்டிருக்கும்போது  “என்ன வேடிக்கை பாக்குற. டிக்கெட் எடு” என்று என் மேல் அன்பை பொழிந்தார் நடத்துனர். பேருந்தை விட்டு கீழே இறங்கும் முன் பேருந்தில் மேலும் இரண்டு வாய்த் தகராறுகள் வேறு.

இந்த ஊர் இப்படித்தானோ என்று எண்ணிக் கொண்டே பேருந்தை விட்டு இறங்கினேன். அங்கே நின்றிருந்த ஒருவரிடம் நான் போக வேண்டிய இடத்தை சொல்லி வழி கேட்டேன். அவர் என்னை மேலும் கீழும் பார்த்தார். “சரி! டீ வாங்கித்தா. வழி சொல்றேன்” என்றார்.  வழி சொல்வதற்கு எல்லாமா ஊதியம் கேட்பார்கள் இந்த ஊரில் என்று விழித்தேன். பக்கத்தில் இருந்தவர் எந்த ஊர்க்காரர் என்று தெரியவில்லை. என்னை கூப்பிட்டு வழி சொல்லி அனுப்பினார்.

பின்னர் சென்னை முழுக்க சுற்றி திரிந்தபோது பல தகராறுகளை பார்த்துள்ளேன். வலுகட்டாயமாக சில தகராறுகளிலும் இழுத்து விடப்பட்டுள்ளேன். ஆட்டோக்காரர்களுடன் தகராறு, பேருந்தில் தகராறு, சாலையில் தகராறு, கடைக்காரர்களுடன் தகராறு, அரசு அலுவலகங்களில் என்று யார் மேல் தவறு என்று கணித்து சொல்லிவிட முடியாத அளவுக்கு  தகராறுகள். அதில் பல தகராறுகள்  தேவையற்றவை  என்று கூட தோன்றும். அதே நேரத்தில் தங்கள் உரிமையை அறிந்து அதை பெற குரலை உயர்த்துவதில் சென்னை மக்களை மிஞ்ச முடியாது

பொதுவாகவே  சென்னை மக்கள் அனைவருமே படபடவென பேசக் கூடியவர்கள். அமைதியான இயல்பு கொண்ட சென்னைக்காரர்களை காண்பது அரிதிலும் அரிது. அமைதியாக இருந்தால் சென்னையில் வாழ்வது கடினம் என்பது கூட அதற்கு காரணமாக இருக்கலாம். தனக்குள் வரும் மனிதர்களை சென்னை தனக்கு தகுந்தாற்போல் மாற்றி கொண்டு விடும்.

இப்போது அப்படியே சென்னையிலிருந்து மதுரைக்கு வருவோம். மதுரைக்காரர்கள் சற்று வேறு விதம். முகவரி விசாரித்தால் அக்கறையாக பதில் சொல்வார்கள். இன்னும் சிலர் உங்களுடன் வந்து அந்த இடத்திலேயே விட்டுவிட்டு போவார்கள். அதே நேரத்தில் எந்த நேரத்தில் எப்போது கோபம் வரும் என்று கூற முடியாது. அதற்காக கோபம் வந்தால் சினிமாவில் காட்டுவது போல அரிவாளை தூக்கி கொண்டு ஓடி வர மாட்டார்கள். இயல்பாகவே மற்றவர்களிடம் அன்பு காட்டுபவர்கள். அதற்காக  மதுரை மக்கள் அனைவரும் தேவதூதர்கள் என்று அர்த்தம் இல்லை. ஜாதி உணர்வு சற்று அதிகமாக இருப்பது இவர்களின் பலவீனம். அதே போல் மதுரை வியாபாரிகளின்  மார்கெட்டிங் திறன் அலாதியானாது. சற்று அயர்ந்தால் நமக்கே தெரியாமல் நம்மிடம் பொருட்களை விற்று விட்டு பணத்தை எடுத்துக் கொள்வார்கள்.

இப்போது கோவைக்காரர்களை எடுத்து கொள்வோம். இப்படி கூட மரியாதையாக பேச முடியுமா என்று ஆச்சரியப்பட்டு போனது இவர்களிடம்தான். சென்னைக்காரர்களுக்கு நேர் எதிர். கோவைகாரர்கள்  யாரிடமாவது முகவரி கேட்டு பாருங்கள். நீங்கள் வயதில் பெரியவரா, சிறியவரா என்றெல்லாம் யோசிக்காமல் “அண்ணா. அப்பிடியே ரைட்ல போங்கண்ணா. லெப்ட்ல வாங்கண்ணா” என்று இவர்கள் கொங்கு தமிழில் பேசும் அழகை கேட்டு நமக்கே கோவையில் நிரந்தரமாக தங்கி விடத் தோன்றும்.

இப்படி வாழும் இடத்திற்கு ஏற்ப குணங்கள் எப்படி மாறுகிறது என்பதற்கு பல காரணங்கள் இருக்க கூடும். ஆனால் இவை அனைத்தையும் கடந்து  தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும்  இருக்கும் ஒரே மாதிரியான சினிமா ரசிப்புத்தன்மையும், அரசியல் பார்வையும் ஒரு ஆச்சரியம்தான்.


Monday, March 23, 2015

முடிவில்லா காதல் கதை

நீங்கள் இந்த கதையை படிக்க ஆரம்பிக்கும் முன் நான் என்னை பற்றி சொல்லி விடுகிறேன். என்னுடைய பெயர் காயத்ரி. நான் மிக அழகாக இருப்பதாக நான் பத்தாவது படிக்கும்போது காதல் கடிதம் கொடுத்த ஷங்கர் எழுதி இருந்தான். அது நடந்து ஏழு ஆண்டுகள் ஆன பின்னும் வெளியே போகும்போது என்னை உற்று உற்று பார்க்கும் ஆண்கள் நான் முன்பை விட அழகாகி இருப்பதை உறுதிபடுத்துகின்றனர்.

சரி என்னுடைய புராணம் இப்போது எதற்கு. இந்த கதை என்னை பற்றியது இல்லை. சற்று பொறுங்கள். உடனே அவசரப்பட்டு படிப்பதை நிறுத்திவிடாதீர்கள்.  நான் இப்போது சொல்லப்போகும் கதை என்னை விட அழகான என் தோழியை பற்றியது. அவள் பெயர் அர்ச்சனா. பெண்கள் கூட அவளை பேரழகி என்று பொறாமையில்லாமல் ஒத்து கொள்வார்கள். அப்படிப்பட்ட அழகு அவளுக்கு. ஓர் ஆண்டுக்கு முன் நாங்கள் இருவரும் ஒரே நேரத்தில்தான் இந்த மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தோம். எனக்கு அவளை பார்த்தவுடன் பிடித்து விட்டது. பார்த்தவுடன் சிரித்தாள். பின்னர் அவளே வந்து பேசினாள். ஒரே நாளில் நாங்கள் நெருங்கிய தோழிகள் ஆகி விட்டோம். நான் என்று இல்லை. அவள் யாரையும் எளிதில் ஒரே நாளில் தோழி ஆக்கிவிடுவாள். அடுத்தத்த இருக்கையாக பார்த்து  அமர்ந்து கொண்டோம்.

மூன்று மாதங்களுக்கு  பின் எங்கள் குழுவில்  புதிதாக வந்து சேர்ந்தான் ராஜேஷ். இவனை ஏனோ எனக்கு பார்த்தவுடன் பிடிக்கவே இல்லை. சோகம் அப்பிய முகம். எப்போதும் எதையோ பறி கொடுத்தவன் போல நடவடிக்கை. தேவை இருந்தால் மட்டும்  எங்களுடன் அளவாக பேசுவான். இப்படி நாட்கள் சென்று கொண்டிருந்தபோதுதான் ஒரு சாதாரண வெள்ளிகிழமையில்தான் இந்த கதை ஆரம்பித்தது. ஒரு நாள் காலில் கட்டுடன் வந்து இருந்தான். நொண்டி நொண்டி வந்து இடத்தில் அமர்ந்தான். நான் பேசாமல் இருந்திருக்கலாம். ஆனால் விதியை மாற்ற முடியுமா. பேசி விட்டேன்.

“அர்ச்சனா! என்ன நம்ம கல்லுளிமங்கன் இன்னைக்கு நொண்டிகிட்டே வந்து இருக்காரு”

“பேசாம இருடி. பாவம் அடிபட்டு இருக்கு. அதை போய் கிண்டல் பண்ணிக்கிட்டு”

“பாருடா. அவரு மேல சாப்ட் கார்னரா”

“ஏன் இருக்ககூடாதா? அவனும் நம்மளை மாதிரிதானே”

“விட்டா அவன்கிட்டயே போய் நலம் விசாரிப்ப போல?”

“விசாரிச்சாதான் என்ன?”

சொல்லிவிட்டு எழுந்து விடுவிடுவென அவள் இருக்கையை நோக்கி நடந்தாள்.

“என்ன ஆச்சு ராஜேஷ் கால்ல”

“பைக்ல இருந்து விழுந்துட்டேன்”

“எப்பிடி?”

“ம்ம். பொத்துன்னு.”

எனக்கு எரிச்சல் ஆகியது. என்ன மனிதன் இவன். நலம் கேட்க வந்தவளையே எரிச்சல் அடைய செய்கிறான். ஆனால் அர்ச்சனாவோ புன்னகைத்தாள்.

“சரி. லஞ்ச் நான் வாங்கி வந்து தரேன். நீ கஷ்டப்பட்டு கேண்டீன் போக வேண்டாம்”

“நான் கேட்டேனா உன்கிட்ட. எனக்கு தெரியும் என்னை பார்த்துக்க.”

“இப்போ எதுக்கு கோபப்படுற?”

“நீங்க பாட்டுக்கு வருவீங்க. உங்களுக்கு வேலை முடியிற வரை பல்லைக் காட்டி பேசுவீங்க. அப்புறம் டாட்டா காட்டிட்டு போய்டுவீங்க. நாங்க  உங்களையே நெனச்சுகிட்டு உருகிகிட்டு இருக்கணும். ஆம்பளையா இருந்து பார். வலி தெரியும்”

படபடவென பொரிந்தான் அவன். அர்ச்சனாவின் கண்களில் நீர் திரண்டது தெரிந்தது.

“நான் கேசுவலாதான் கேட்டேன்”

“நீ இனிமே கேக்கவே கூடாதுன்னுதான் நான் பேசினேன்”

அர்ச்சனா திரும்பினாள்.

“தேவையாடி உனக்கு இது. லவ் பெயிலியர்ல பைத்தியம் ஆகிடிச்சு அது”

“சரி இனிமே அதைபத்தி பேசாதே”

ரண்டு மாதங்கள் ஆகியது. இப்போது அவனுடன் எங்கள் குழுவில் உள்ள யாரும் பேசுவதில்லை.  அவன் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படுவதாக தெரிவதில்லை.  ஒரு நாள் மாலைப்பொழுதில் அவன் அர்ச்சனாவை நோக்கி வந்தான்.

“அர்ச்சனா! எனக்கு நம்ம அப்ளிகேசன்ல ஒரு சந்தேகம். உனக்கு மட்டும்தான் அதை பத்தி தெரியும்னு சொல்றாங்க. கொஞ்சம் ஹெல்ப் பண்ண முடியுமா?”

“எனக்கு வேலை இருக்கே. ஒரு அரை மணி நேரம் அப்புறம் வரவா?”
“இல்ல. இது கொஞ்சம் அவசரம்.”

“சரி வரேன்”

எழுந்து அவன் பின்னாலேயே சென்று விட்டாள். அரை மணி நேரத்துக்கு பின் திரும்பினாள். எனக்கு அவள் மேல் ஆத்திரமாக வந்தது.

“ஏய் அச்சு. உனக்கு இது தேவையா? அவன் என்னென்ன பேசுனான்னு அதுக்குள்ள மறந்துட்டியா. இப்போ உன்னோட வேலைய விட்டு போய் அவனுக்கு ஹெல்ப் பண்ணனும்னு யாரு என்ன தேவை”

“இன்னா செய்தாருக்கு நன்மை செய்யணும்னு திருவள்ளுவர் சொல்லி இருக்கார்”

“ஹ்ம்ம். சில ஜென்மங்களை திருத்தவே முடியாதுன்னு எங்க அப்பா  சொல்லியிருக்கார்”

“ஹஹஹா”

“சரி.தேங்க்ஸ் எதுவும் சொன்னானா”

“இல்லை”

இது நடந்த மறுநாள் அவன் மீண்டும் எங்கள் இருக்கையை  நோக்கி வந்தான்.

“ரொம்ப தேங்க்ஸ் அர்ச்சனா”

“என்ன தேங்க்ஸ் எல்லாம்”

“இல்ல நான் அன்னைக்கு ஏதோ ஒரு மூட்ல ரொம்ப பேசிட்டேன். அதை எல்லாம் மனசுல வச்சுக்காம”

“வேணும்னா எனக்கு ஒரு சிலை வச்சுடுறீங்களா?”

அவன் புன்னகைத்தான்

“உங்களுக்கு ஜோக் எல்லாம் அடிக்க தெரியுமா?”

“உங்களுக்கு சிரிக்க கூடத் தெரியுமா?”

இப்போது இருவரும் சேர்ந்து புன்னகைத்தனர்.

“ஆம்பளையா இருந்தாதான் கஷ்டம் தெரியும்னு சொன்னீங்களே. அப்பிடி என்ன கோபம் பொண்ணுங்க மேல உங்களுக்கு”

“பொண்ணுங்க மேல இல்ல. ஒரே ஒரு பொண்ணு மேல. எல்லாரும் அவளை மாதிரியே இருப்பாங்கன்னு நெனச்சது என்னோட முட்டாள்தனம்”

என்னால் அதற்கு மேல்  பொறுக்க முடியவில்லை.

“அச்சு. கொஞ்சம் வெளிய போகணும் வரியா?”

ரியாக இரண்டு நாட்களுக்கு பின் “காயத்ரி! அர்ச்சனா இன்னைக்கு வரலியா?” என்றவாறே வந்தான் அவன். எல்லாம் அர்ச்சனா கொடுக்கும் இடம். அவள் வந்தாலும் வராவிட்டாலும் இவனுக்கு என்ன?

“அவ லீவ்”

“என்ன லீவ் திடீர்னு. உடம்பு சரி இல்லையா?”

“தெரியலையே”

“நீங்க எனக்கு ஒரு ஹெல்ப் செய்வீங்களா?”

“என்னது?”

“போன வருஷம் இதே மார்ச் மாசம். நான் லவ் பண்ண பொண்ணு என்னை விட்டுட்டு போய்ட்டா. அவ என்னை ஈசியா தூக்கி போட்டுட்டா. ஆனா என்னால அவளை மறக்கவே முடியல . எல்லா நேரமும் அவ நினைப்புதான் ஆறு மாசம் வீட்டுக்குள்ளயே அடைஞ்சு கிடந்தேன். ஒரு வழியா மனசை தேத்திக்கிட்டு இங்க வந்து வேலைக்கு சேர்ந்தேன்”

“நான் என்ன செய்யணும்னு சொல்லுங்க”

“சரி. அவ என்னை விட்டுட்டு போன பின்னாடி பொண்ணுங்கன்னாலே எனக்கு வெறுப்பு. எல்லா பொண்ணுங்களும் சுயநலம் பிடிச்சவங்..”

“ராஜேஷ். நான் அர்ச்சனா மாதிரி இல்ல. இப்பிடி எல்லாம் என்கிட்டே பேசுனா அவ்வளவுதான்”

“சரிங்க. நான் விசயத்தை சொல்லிடுறேன். நான் அர்ச்சனாவை லவ் பண்றேன். அவ வேற யாரையும் லவ் பண்றாளான்னு நீங்க சொல்லிட்டா போதும். நான் அவகிட்ட பேசிக்குவேன்”

எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அர்ச்சனாவுக்கு இவன் பொருத்தமா? ஏதோ கவலையில் சிடுமூஞ்சியாக இருக்கிறான். ஆனால் அடிப்படையில் நல்லவன். ஆனால் அர்ச்சனா பற்றி தெரிந்திருந்தால் இவன் இப்படி கேட்டிருப்பானா. அர்ச்சனா என்ன சொல்லுவாள்.“நாளைக்கு அவ வந்துடுவா. நீங்க அவகிட்ட பேசுங்க” என்றேன்.

றுநாள் அர்ச்சனாவை அழைத்து கொண்டு பூங்காவுக்கு சென்று விட்டேன். ராஜேஷையும் வர சொல்லி இருந்தேன். அவன் வருவதை அவளுக்கு சொல்லவில்லை. எங்களுக்கு முன்னரே ராஜேஷ் பூங்காவுக்கு வந்து  விட்டான். அர்ச்சனா அவனை எதிர்பார்க்கவில்லை

“ஹே ராஜேஷ். நீ எங்க இங்க?”

“காயத்ரி! நீ சொல்லலியா?”

நான் அமைதியாக இருந்தேன்

“அர்ச்சனா! நான் நேராவே சொல்றேன். எனக்கு உன்னை பிடிச்சு இருக்கு”
அர்ச்சனா என்னை பார்த்தாள். “அவர் உன்னை நெஜமாவே லவ் பண்றாரு அச்சு”

“எப்பிடி திடீர்னு லவ்?” என்றாள் ராஜேஷை பார்த்து

“திடீர்னு வர்றதுதான் லவ். அதுவும் இது மனசை பார்த்து வந்த லவ் ”

“அப்போ நல்ல மனசு இருந்தா மட்டும் போதுமா உங்களுக்கு. என்னை பத்தி உங்களுக்கு வேற என்ன தெரியும்?”

“நல்ல பொண்ணுன்னு தெரியும். எப்பவும் சிரிச்சுகிட்டே இருப்பீங்க”

“சாரிங்க. ஒத்துவராது”

“சரி உங்க இஷ்டம். ஆனா ஏன் பிடிக்கலைன்னு சொல்லுங்க?”

“சொல்ல தேவை இல்லன்னு நெனைக்கிறேன்”

“இதுதாங்க பொண்ணுங்ககிட்ட.ரொம்ப வீக்கான மனசு. எதுக்கு எடுத்தாலும் பயம் ”

“எனக்கா?”

நான் எதிர் பார்க்கவே இல்லை. ஆனால் அவன் அவள் முன் மண்டியிட்டான். “ நான் உங்களை நெஜமாவே லவ் பண்றேன். நீங்க எப்படி சொன்னாலும் நான் என்னை மாத்திகிடுறேன்” என்றான் 

 “நான் நேத்து ஏன் லீவ் தெரியுமா? கோர்ட் போயிருந்தேன்”

“எதுக்கு?”

“ரெண்டு வருஷம் முன்னாடி பெங்களுர்ல ஒரு பொண்ணை மூணு பசங்க ரேப் செஞ்சுட்டாங்கன்னு படிச்சு இருப்பீங்க. இப்போ நியாபகம் இருக்குமான்னு தெரியல. அந்த பொண்ணு பேரை சுதானு பேப்பர்ல எழுதுவாங்க. அந்த பொண்ணோட உண்மையான பேரு அர்ச்சனா. அந்த சம்பவம் நடந்த பின்னாடி ஆறு மாசம் கவுன்சிலிங் மேல கவுன்சிலிங் பொய் அந்த அதிர்ச்சியில இருந்து வெளிய வந்து உங்க முன்னாடி நிக்கிறா. அதுவும் சிரிச்ச முகமா”

அவன் முகத்தில் ஆயிரம் வோல்ட் அதிர்ச்சி.

“அன்னைக்கு சொன்னீங்களே. ஆம்பளையா இருந்தாதான் வலி புரியும்னு. அதே மாதிரிதான் என்னோட இந்த  வலிய உங்களால புரிஞ்சுக்க முடியாது”

அவனிடம் பதிலே இல்லை. என்னை சொல்ல வேண்டும். தேவை இல்லாமல் அவனை இங்கே கூப்பிட்டு இப்போது எல்லாருக்கும் சங்கடம்.

“பொண்ணா இருக்கிறதும்  கஷ்டம்னு இப்போவாச்சும் ஒத்துப்பீங்களா.” அவள் கண்ணில் நீர் திரள கூறினாள். ஆனால் அவள் ஒரு போதும் அழுததில்லை

“என்னங்க சொல்றீங்க. கல்யாணம் செஞ்சுப்பீங்களா?”

அவன் என்ன சொல்லப் போகிறான் என்று அறிய உங்களை போலவே நானும் காத்திருந்தேன்.  


   

Sunday, March 22, 2015

அமிஞ்சிக்கரையில் அட்சய பாத்திரம்

வீட்டுக்குள் நுழையும்போதே “கவிதா! சீக்கிரமா வா. ரெண்டு முக்கியமான விசயம்” என்று கூறிக்கொண்டே நுழைந்தேன். கவிதா என்னை திரும்பி பார்த்துவிட்டு மீண்டும் தொலைக்காட்சியில் கண்களை செலுத்தினாள். என்னுடைய அவசரம் எதுவும் புரிந்ததாக தெரியவில்லை.

“அப்பிடி என்ன டிவி கேக்குது உனக்கு? ரெண்டு முக்கியமான விசயம் சொல்ல போறேன் உன்கிட்ட ”

“புதுசா என்ன சொல்லிட போற?” என்று மீண்டும் திரும்பி கொண்டாள். டிவியை நிறுத்த மாட்டாள். அப்படியே டிவி சத்தத்துடனே சொல்லி விட வேண்டியதுதான்.

“நான் வேலைய விட்டுட்டேன் கவிதா”

“என்னது?” இப்போது டிவியை அவளே நிறுத்து விட்டாள்.

“உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சு போச்சா? நாப்பது ஆயிரம் சம்பளம் வர்ற வேலை. அதுல மாசம் முப்பது வாங்குன கடனுக்கே கட்டிக்கிட்டு இருக்கோம். வேலைய விட்டுட்டு பிச்சை எடுக்கலாம்னு ஐடியாவா?”

“இரு இரு. ஒரு ரெண்டு நிமிசம் குறுக்க பேசாம நான் சொல்றத கேளு.இதோ இந்த பாத்திரம்தான் நம்ம கோடீஸ்வரன் ஆக்க போகுது.”  சொல்லி கொண்டே அந்த பாத்திரத்தை எடுத்தேன்.

“அட பாவி மனுஷா. பிச்சை எடுக்க பாத்திரம் வாங்கிட்டே வந்துட்டயா”

“ஒரு நிமிஷம் நான் சொல்றத கேளேன்”

“சொல்லு” அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது

“அட்சய பாத்திரம் கேள்விப்பட்டு  இருக்கியா? அதுதான் இது.” அவள் புரியாமல் பார்த்தாள்.

“அட்சயாவோட பாத்திரத்தை நீ ஏன் தூக்கிகிட்டு வந்த?”

“இரு உனக்கு புரியிற மாதிரி சொல்றேன். அட்லீஸ்ட்  மகாபாரதம் கேள்விபட்டு இருக்கியா?”

“அதான் எல்லா டிவிலயும் போடுறானே”

“ரைட். அதுல திரவுபதி அட்சய பாத்திரம் வச்சு இருப்பாங்க. என்ன சாப்பாடு   வேணும்னாலும், எத்தனை பேருக்கு வேணும்னாலும் கொடுக்கும் அது. இந்த பாத்திரம் அதே மாதிரி ஒரு பாத்திரம்தான்”

“அதே கம்பெனிக்காரன் பாத்திரமா.”

“அது எந்த கம்பெனியோடதா இருந்தா என்ன? நான் சொல்றதை கேளு. நேத்து ஆதவனார் மலை கோவிலுக்கு போய் இருந்தேன்ல. அப்போ ஒரு சாமியாரை பார்த்தேன். அவர் இதை எனக்கு குடுத்து அவருக்கு இது தேவைப்படாதுன்னு சொல்லி இதை வச்சு நான் பசியில கஷ்டப்படுறவங்களுக்கு உதவணும்னு கேட்டுகிட்டார். நானும் சரின்னு சொல்லிட்டு வாங்கிட்டு வந்துட்டேன்”

“யாரோ ஏதோ சொன்னா  வாங்கிட்டு வந்துடுவியா?”

“இரு. உன்னை நம்ப வைக்கிறேன். உனக்கு இப்போ சாப்பிட என்ன வேணும். இங்க வந்து இந்த பாத்திரத்துகிட்ட கேளு”

“உனக்கு முத்தி போச்சு”

“கேளு அப்புறம் பாரு”

“சரி! எனக்கு தயிர் சாதம் வேணும்”

“இப்போ பாத்திரத்துக்குள்ள பாரு”

அவள் பார்த்தாள். கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.

“என்ன இது. உள்ள தயிர்சாதம் இருக்கு. அதுவும் கருவேப்பிலை எல்லாம் போட்டு”

“எடுத்து சாப்பிட்டு பாரு”

அவள் எடுத்து சுவைத்தாள்

“என்ன ருசி. இது மாதிரி சாப்பிட்டதே இல்ல.”

“இப்போ தெரியுதா எதுக்கு வேலைய விட்டேன்னு?”

“மூணு வேளை சோறு கிடைச்சா மட்டும் போதுமா? மத்ததுக்கு காசு”

“இந்த பாத்திரம் நாம சாப்பிட இல்ல. ஊருக்கே சோறு போட. வெளிநாட்டு பீட்சா கடை எல்லாம் இனிமே காணாம போகப்போகுது. இப்போதைக்கு தினமும் அஞ்சாயிரம் வியாபாரம் நடந்தா கூட போதும். ரெண்டே வருஷத்துல கடையை விரிவாக்கி சீக்கிரமா கோடீஸ்வரன் ஆயிடலாம்.”

“என்னய்யா என்னென்னமோ சொல்ற?”

 “சீக்கிரம் புரியும். இப்போ இதுகிட்டே பீட்சா கேக்குறேன் பாரு. பாத்திரமே சூடா பீட்சா குடு”

பீட்சா வந்ததும் எடுத்து சாப்பிட ஆரம்பித்தேன். இனிமேல் நானும் ஒரு தொழில் அதிபர்.

திட்டமிட்டபடி ஒரு கட்டடத்தை வாடகைக்கு  பிடித்து விட்டேன். இரண்டு பேரை வேலைக்கும் எடுத்தாகி விட்டது. இனி அட்சய பாத்திரம் என்னை கோடீஸ்வரன் ஆக்க போவதுதான் பாக்கி. கடையினுள் ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தபோது கவிதா மொபைலில் அழைத்தாள்.

“என்ன எல்லாம் ஏற்பாடாயிடுச்சா?”

“எல்லாமே. வேலைக்கும் ஆளும் எடுத்தாச்சு. புதன்கிழமை நம்ம கவிதாஸ்  பீட்சா கடையை திறந்துடலாம்.”

“பாத்திரம் பத்திரம்தானே?”

“அதெல்லாம் பூஜை ரூம்ல பத்திரமா எடுத்து வச்சாச்சு”

“குட்”

“வேலைக்கு எத்தனை பையங்க?” அவள் அந்த பையன்களில் அழுத்தம் கொடுப்பது தெரிந்தது.

“அது வந்து கவி, நாம செய்யப் போற வேலைக்கு பையன்களை நம்ப முடியாது. அதனால ரெண்டு பொண்ணுங்களை” இணைப்பு துண்டிக்கப்பட்டது. அநேகமாக இப்போது மேக்அப் செய்து கொண்டிருப்பாள். இன்னும் ரெண்டு மணி நேரத்துக்கு பின் இங்கே கிளம்புவாள். அதற்குள் அந்த பெண்களிடம் பேசி விட வேண்டும். அவர்களை அழைத்தேன்.

“பொண்ணுங்களா. உங்க வேலை இங்க சப்ளை பண்றது மட்டும்தான். எந்த காரணம் கொண்டும் கிச்சன் உள்ள வரக் கூடாது. நான் பீட்சா செஞ்சு செஞ்சு வெளிய கொண்டு வந்து குடித்துடுவேன் என்ன? காஷியர் வேலைக்கு நாளைக்கு இன்னொரு பொண்ணு வரும்”

“சரிங்க சார்”

“சரி. போய் எல்லாத்தையும் எடுத்து வைங்க.” அவர்கள் திரும்பி நடக்க ஆரம்பித்தார்கள். இன்னொரு பெண் என சொன்னது கவிதாவை. அவளே  காஷியர் வேலை பார்க்கட்டும். சிறிது சமாதானம் அடைவாள்.

“தேவி. இங்க வா.” நாற்காலிகளை ஒழுங்குபடுத்த என்னுடைய பணிப்பெண்ணை உதவிக்கு அழைத்தேன். அவள் முதல் நாள் விசுவாசத்தில் அவசரமாக ஓடி வந்தாள். பார்த்ததும் அதிர்ந்தேன் என்றால் அது தவறு. அதற்கும் மேல். எப்படி ஒரு பெண்ணிற்கு பத்து நிமிடத்தில் தாடி முளைத்து நரைக்கவும்  முடியும். தேவியா இது. இல்லை. உடை மட்டும் தேவி. முகம்  எனக்கு அட்சய பாத்திரம் குடுத்த சாமியார்.

“சாமி! நீங்க இப்போ எதுக்கு வந்தீங்க ”

“என்ன காரியம் செய்தாய் நீ? உனக்கு ஏழைகளுக்கு உதவ பாத்திரம் கொடுத்தால் நீ சுய லாபம் அடைய பார்க்கிறாயா?”

“அப்படி இல்ல சாமி. தினமும் ரெண்டு ஏழைங்களுக்கு பீட்சா குடுக்கணும். அந்த லட்சியதுக்குதான்  இந்த கடை ஆரம்பிச்சேன்”

“பொய் உரைக்காதே”

“போங்க சாமி. நான் சொல்றதை கேளுங்க. நீங்க எத்தனை நாள்தான் அந்த மலைல கஷ்டப்படுவீங்க? பிரச்சினை செய்யாம இருங்க. உங்களை பார்ட்னரா சேத்துக்குறேன். கடைலயே நீங்க தங்கிக்கலாம். என்ன?”

சாமியார் பொறுமை இழப்பது தெரிந்தது.

“நீ புரியாமல் தவறு செய்கிறாய்.”

“அதெல்லாம் நல்லா புரிஞ்சுதான் செய்கிறேன் சாமி. நீங்க பாட்டுக்கு இதே மாதிரி வீட்டுக்கு போய் பாத்திரத்தை எடுத்துட்டு போய்டாதீங்க”

“குடுத்ததை எடுக்கும் பழக்கம் எனக்கு கிடையாது”

“சரி. பாத்திரம் வேலை செய்யவிடாம செஞ்சுடாதீங்க”

“நான் உன்னை போல் அல்ல”

சாமியார் மெதுவாக துவண்டார். அவரின்  தாடி மறைந்து தேவியின் முகம் அழகான முகம் தெரியத் தொடங்கவும் , கவிதா கடைக்குள் நுழையவும் சரியாக இருந்தது.

“என்னய்யா செஞ்ச அந்த பொண்ணை?”

“கவிதா! கத்தாத. என்ன நடந்ததுன்னா” அவளிடம் விளக்கி சொன்னேன்.

 புதன்கிழமை கடை திறந்தாகிவிட்டது. கவிதா பட்டுப்புடைவையில் கேஷியராக வீற்றிருந்தாள். முதல் நாள் அனைவருக்கும் பீட்சா இலவசம் என்ற அறிவிப்பை கேட்டதும் நான்கு பள்ளிக்கூட பையன்கள் எட்டு மணிக்கெல்லாம் கடை வாசலுக்கு வந்து விட்டனர்.

“அக்கா. சீக்கிரம் உள்ள விடுங்க”

“இருங்கடா. இன்னும் கடை ஓபன் ஆகல. 9 மணிக்கு நல்ல நேரம் வரட்டும்”

நான் அவர்கள் பேசியதை கவனிக்காமல் கிச்சனுக்குள் சென்றேன். அட்சய பாத்திரத்தை எடுத்து கைகளை உள்ளே  விட்டேன்.

“லார்ஜ் பீட்சா குடு பாத்திரமே” பாத்திரம்  சூடான பீட்சா கொடுத்தது.

“தேவி. அந்த பசங்களுக்கு கொண்டு பொய் குடு” அவள் அதை எடுத்து கொண்டு அவர்களிடம் கொடுத்தாள். எப்படியோ முதல் முயற்சி வெற்றி. அந்த பையன்கள் அதை சந்தோசமாக சாப்பிட்டுவிட்டு சென்றார்கள்.

அடுத்த ஒரு மணி நேரம் யாரும் வரவில்லை தேவி என்னை அழைத்தாள். “சார்! கஸ்டமர் வந்து இருக்காங்க” வெளியே எட்டி பார்த்தேன். ஒரு காதல் ஜோடி.

“ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ண சொல்லுமா” என்று சொல்லிவிட்டு பாத்திரத்திடம் சென்றேன். “ரெண்டு பீட்சா பாத்திரமே” என்று சொல்லிவிட்டு அதனுள் கையை விட்டேன். கை பாத்திரத்தில் அடிப்பாகத்தில் சென்று முட்டியது. என்ன ஆயிற்று இதற்கு? சொன்னது காதில் விழவில்லையா? சத்தமாக சொன்னேன். பலனில்லை. “கவிதா! இங்க சீக்கிரம் வா”

கவிதா வேகமாக உள்ளே வந்தாள். “என்னங்க ஆச்சு?”

“இது வேலை செய்யல?”

“என்னது? இதை எங்க குடுத்து சர்வீஸ் பாக்குறது?”

“ஆத்திரத்தை கிளப்பதா” நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே கவிதாவுக்கு தாடி முளைக்க தொடங்கியது.

“ஹா ஹா ஹா”

“சாமி. என்ன செஞ்சீங்க? பாத்திரம் வேலை செய்யல”

“நான் ஒன்றும் செய்யவில்லை. பாத்திரத்தை கொடுத்துவிட்டு நான் அன்று என்ன சொன்னேன். சொல்”

“பசிக்கிறவங்களுக்கு உதவ”

“இப்பொழுது நீ யாருக்காக உணவு கேட்கிறாயோ அவர்களுக்கு பசி இல்லை. அதனால் இது உணவு தரவில்லை”

“யோவ்! விளையாடுறியா. இதை ஏன் அப்பவே சொல்லல”

“நான் சரியாகத்தான் சொன்னேன். நீ சரியாக புரிந்து கொள்ளவில்லை”

“அப்போ கவிதாவுக்கு வந்த தயிர் சாதம். அந்த பசங்களுக்கு வந்த பீட்சா”

“அவர்கள் அப்போது பசியில் இருந்தவர்கள்”

“சரி விடு. அப்போ பசியோட வரவங்க கேட்டா சாப்பாடு வரும்ல?”

“வரும். ஆனால் நீ பணம் பெற்று கொண்டால் அது உதவி ஆகாது. பாத்திரம் முற்றிலும் வேலை செய்வதை நிறுத்தி விடும்”

“போச்சு போச்சு. அப்போ இந்த பாத்திரத்தை வச்சு என்ன செய்யுறது. பரோட்டா கடைன்னாலும் ஊருல இருந்து மாஸ்டர் கூட்டிகிட்டு வருவேன். திடீர்னு பீட்சா மாஸ்டருக்கு எங்க போறது”

“அதை நீயே முடிவு செய்து கொள்”

சாமியார் மயங்கி விழுந்து கவிதாவாக மாறினார்.

“என்னங்க ஆச்சு?”

“முதல்ல அந்த ரெண்டு பேருக்கும் வெளிய பீட்சா வாங்கிட்டு வரேன். நீ அதுக்குள்ள கடையை மூடிடு. அந்த ரெண்டு பொண்ணுங்களுக்கு கொஞ்சம் பணம் குடுத்து அனுப்பி வச்சுடு”

முதல் நாளிலேயே கடைக்கு மூடுவிழா நடத்திவிட்டு ஆட்டோவில் ஏறினோம்.

“இதை நம்பி  வேலையை விட்டாச்சு. இப்போ என்ன செய்ய?”

“நாளைக்கு இருந்து வேற வேலை தேட ஆரம்பிக்கலாம்”

“இந்த பாத்திரம்”

“உண்மையிலேயே சுயநலம் இல்லாம மத்தவங்களுக்கு உதவி செய்யுற  ஆள் இருந்தா இந்த பாத்திரம் அவங்ககிட்ட போகட்டும்” என்று சொல்லிவிட்டு பாத்திரத்தை ஆட்டோவில் இருந்து  வெளியே தூக்கி எறிந்தேன். ஒருவேளை  அந்த பாத்திரம் உங்கள் கையில் கிடைத்தால் நீங்களாவது எடுத்து பசித்தவர்களுக்கு உதவுங்கள்.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...