Wednesday, April 13, 2016

அடுத்த முதல்வர்? நடுநிலை வாக்காளர்கள் விரும்புவது யாரை?

ரப்போகும் சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு வாக்களிப்பது என்று நடுநிலை வாக்காளர்களுக்கு ஒரே குழப்பமாக உள்ளது. தமிழர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். இல்லையென்றால் அவர்களுக்கு இத்தனை சிறந்த அரசியல் தலைவர்கள் கிடைத்திருப்பார்களா? மாநிலத்தின் முன்னேற்றமும் , மக்களின் நலனுமே நோக்கம் எனக் கொண்டு  முதுமை, உடல் நலக்குறைவு அனைத்தையும் மறந்து இந்த வேகாத வெயிலிலும் ஊரெல்லாம் சுற்றி பிரசாரம் செய்கிறார்களே நமது முதல்வர் வேட்பாளர்கள். இவர்கள் மக்களின் அனைத்து பிரச்சினைகளையும் எப்படியும் தீர்த்து விடுவார்கள். .இப்போதைக்கு மக்களுக்கு இருக்கும் ஒரே பிரச்சினை  இவர்களில் யாருக்கு முதல்வர் நாற்காலியை பரிசளிப்பது என்பதுதான். அத்தனை நல்லவர்கள் நம் தலைவர்கள். 

தற்போதையை முதல்வரையே எடுத்துக்கொள்ளுங்கள். மாநில தலைநகரமே வெள்ளம் வந்து மூழ்கும் வேளை. அப்படிப்பட்ட சிக்கலான வேளையிலும் எத்தனை நிதானமாக செயல்பட்டார் அவர். அப்படிப்பட்ட பொறுமையான அணுகுமுறை ஒரு தலைவருக்கு  எத்தனை முக்கியம். மதுவிலக்கு கேட்டு தமிழகமே கொந்தளித்த போதும் “ஆல்கஹால் வித்டிராயல் சிண்ட்ரோம்(alcohol withdrawal syndrome)” வந்து மக்கள் பாதிக்கப்படக்கூடாது என பொறுமையாக படிப்படியாக மதுவிலக்கை அமுல்படுத்தப்போகிறார் அவர். குடிமக்களின் உடல்நலத்தை முக்கியமாக நினைக்கும் தலைவரால்தானே இப்படி செயல்பட முடியும். அதுமட்டுமா? மக்களுக்காகவே உழைத்து அந்த வேலைச்சுமையால் அமைச்சர்கள் தங்கள் உடல்நலத்தை கண்டு கொள்வதில்லை என்று உணர்ந்து அவர்களை அடிக்கடி உடலை வளைக்கும்  உடற்பயிற்சி  செய்ய வைத்தார். மேலும் ஊழல்வாதிகளை சட்டத்தால் ஒன்றும் செய்ய முடியாது என்று உணர்ந்து தவறு செய்த அமைச்சர்களை நான்கு நாட்கள் வீட்டு சிறையில் கடும் தண்டனை கொடுத்தாராம். இப்படி நீதி வழுவாமல் நடக்கும் அரசியல்வாதியை இதுவரை வரலாறு கண்டதில்லை. அடிக்கடி கூட்டம் நடத்தி போக்குவரத்தை தடை செய்தது எதற்காக? ஆராய்ந்து பார்த்தால் காற்று மாசுபாட்டை சற்று நேரமாவது தடுத்து மக்களுக்கு நல்ல காற்றை தருவதற்கு  என்று புரியும்  . இப்படி சற்று நுணுக்கமாக யோசித்தால்  ஐந்து ஆண்டுகளில் இந்த  அரசு செயல்படாதது போலத் தெரிந்தாலும் மக்களின் நன்மைக்காக இது போல பல மறைமுக திட்டங்களை தீட்டி இருப்பது தெரியும்.

அடுத்து தமிழினத் தலைவரை பற்றி  பார்ப்போம் . தனது உடல் பொருள் ஆவியை மக்களுக்காகவே அர்ப்பணித்தவர் அல்லவா அவர்? அவருடையதை மட்டும் அர்ப்பணித்திருந்தால் கூட பரவாயில்லை. தனது குடும்பத்தினர் நூறு பேரையும் அதே போல தியாகம் செய்ய வைத்தவர் ஆயிற்றே. அரசு கொடுத்த இலவசத் தொலைக்காட்சியை மக்கள் அதிகம் பார்த்து தங்கள் கண்களை கெடுத்துக்கொள்ளக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக பதினாறு மணி நேரம் மின்தடை செய்தார். எப்படிப்பட்ட ராஜ தந்திரம் அது? மக்களிடம் அதிக நிலம் சேர்ந்து விட்டால் ஏழை, பணக்காரர் வேறுபாடு அதிகரிக்கும் என்று அவரின் கட்சியினரே நில அபகரிப்பு செய்து ஒரு புதிய கம்யூனிஸ சித்தாந்தத்தை உருவாக்கினார்களே? வேறு எந்த கட்சிக்காவது இப்படி ஒரு வரலாறு உண்டா? அது மட்டுமா, நூறு கோடிக்கு மேலே எண்களே இல்லை என்று எண்ணிக் கொண்டிருந்த மக்களுக்கு ஒரு லட்சம் கோடியை அறிமுகம் செய்தார்களே? அந்த லட்சம் கோடிக்கு எத்தனை பூஜ்ஜியங்கள் என்று விரல் விட்டு எண்ணி நாம் கணித அறிவை வளர்த்தோமே . இப்படி நமது அறிவை விரிவடைய செய்தது எத்தனை பெரிய சாதனை.

இவர்களுக்கு அடுத்த இடத்தில் இருப்பவரும் இவர்களுக்கு சற்றும் சளைத்தவர் இல்லை. பதவியை பிடிப்பதையே கொள்கையாக கொண்டு கட்சி வைத்துள்ளாரே. இவரின் வெளிப்படைத்தன்மை வேறு யாருக்கு உண்டு. பத்திரிக்கையாளர்களையும், கட்சியினரையும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் பொது இடத்தில் அடித்தும், துப்பியும் குழந்தை மனதோடு நடந்து கொள்கிறாரே. இப்படி குழந்தை மனம் கொண்ட ஒரு தலைவர் உலகில் எங்கேயும் உண்டோ? மனைவியையும், மச்சானிடமும் கட்சியை கொடுத்து கட்சியை குடும்ப சொத்தாக மாற்றி  புரட்சி செய்தவர், நாளை ஆட்சியை பிடித்தால் தமிழ்நாட்டையும் தனது குடும்ப சொத்தாக எண்ணி பத்திரமாக பார்த்துக் கொள்வார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

இந்தியாவில், ஏன் உலகத்திலேயே இப்படிப்பட்ட தலைவர்கள் கிடைப்பது அரிது. நடுநிலை வாக்காளர்களுக்கு இப்படிப்பட்ட தலைவர்களுள்  ஒரே ஒருவரை தேர்வு செய்வது மிகக் கடினம் என்பதால் மத்திய அரசு சட்ட திருத்தம் செய்து இந்த மூவரையும் தமிழக முதல்வராக பணியாற்ற அனுமதிப்பதே சிறந்த தீர்வாக இருக்க முடியும்


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...