Friday, September 8, 2017

ஜூலி சூழ் உலகு

பிக்பாஸ் வீட்டுக்கும் IT நிறுவனங்களுக்கும் பெரிய வேறுபாடு ஒன்றும் இல்லை என்றே தோன்றுகிறது. அந்த பிக்பாஸ் வீட்டை போலவே டீம் என்ற பெயரில் முன்பின் தெரியாத பத்து பேரை டீம் என்ற பெயரில் சேர்த்து விட்டு டெய்லி டாஸ்க் என்று கொடுப்பார்கள். ஆன்சைட் மேனேஜர் என்ற பெயரில் முகம் தெரியாத பிக்பாஸ் ஒருவர் அடிக்கடி போனில் வந்து மிரட்டுவார். ப்ராஜெக்ட்  முடித்தால் வெளிநாட்டிலிருந்து மிட்டாய் அனுப்பி வைப்பார்.

இந்த பத்து பேர் கொண்ட டீம் அமையுமே அதில்தான் விசயமே இருக்கிறது. கட்டாயம் ஒரே மாதிரியான ஜீவன்களை ஒரே டீமில் பார்க்க முடியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு துருவமாக இருப்பார்கள். டீமில் இருக்கும் பெண்களுக்குள் வெளியே சொல்லிக் கொள்ளாமல் ஒரு பனிப்போர் நடந்து கொண்டே இருக்கும். அந்த போருக்கு காரணம் என்ன என்று யாரும் அறிந்து கொள்ள முடியாது. சொல்லப் போனால் அந்த பெண்களுக்கே அந்த காரணம் தெரியுமா என்பது சந்தேகம்'

டீமில் கட்டாயம் ஒரு ஸ்ரீ இருப்பார். எப்போதும் குழப்பத்தோடு எதையோ யோசித்து கொண்டு இருப்பார். டாஸ்க் செய்யலாமா வேண்டாமா என்று அவர்களின் சிந்தனை இருக்காது. டீமில் இருந்து எப்படி கழண்டு ஓடுவது என்று மட்டுமே யோசிப்பார்கள். அதே போல் டீமில் கணேஷ் கேரக்டர் ஒன்று இருக்கும். டீமில் எந்த பஞ்சாயத்து நடந்தாலும் ரியாக்ஷன் எதுவும் காட்டாது. ஆனால் ப்ராஜெக்ட் பார்ட்டி என்றால் மட்டும் முதல் ஆளாக ஆஜராகி . சாப்பாட்டை வெளுத்துக் கட்டும்.

அதே போல  டீமின் சிநேகன்கள்  வேடிக்கை விளையாட்டு என்று சொல்லி விட்டால் போதும்.\;குதூகலம்  ஆகி விடுவார்கள். கம்பெனி  பாஸ்கள் என்ன சொன்னாலும்  கையை கட்டி ஆமாம் சாமி போடுவார்கள். பெண்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் விழுந்தடித்து உதவுவார்கள். பெண்களோடு சேர்ந்து கொண்டு புரணி பேசுவார்கள்.

ரைசா போன்று முழு மேக்கப்பில் வரும் ஒரு பெண் கேரக்டரையும் தவறாமல் காணலாம். அவர்கள் ஆபீசுக்கு வருகிறார்களா அல்லது பேஷன் ஷோவுக்கு வருகிறார்களா என்று கண்டுபிடிக்கவே முடியாது. தமிழ் தெரிந்தாலும் தெரியாதது போல எப்போதும் ஆங்கிலத்திலேயே பேசுவார்கள். க்யுட் ரியாக்சன் என்று நினைத்துக் கொண்டு முகத்தை கோணலாக்கி அடிக்கடி பயம் காட்டுவார்கள். வேலை செய்ய சொன்னால் மட்டும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி ஓய்வறை சென்று படுத்துக் கொள்வார்கள். ஆர்த்தி போல ஒரு கேரக்டர் எப்போது பார்த்தாலும் சம்பந்தம் இல்லாமல் லொட லொட என்று பேசிக் கொண்டே திரியும்.

ஆரவ் கேரக்டர் எப்போதும் பெண்களுடனேயே சுத்தும். அதே போல வையாபுரி போல ஒருவர்  இருப்பார். அனைவரையும் சகட்டு மேனிக்கு கலாய்ப்பார்.  வெளிநாட்டு மிட்டாய் வரும்போது மனைவிக்கு வேண்டும், பையனுக்கு வேண்டும் என்று இரண்டு மிட்டாய்களை பையில் போட்டுக் கொள்வார். சக்தி கேரக்டர் எப்போதும் கெத்தாகவே சுத்தி வரும். பெரிய ஆள் என்று நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் கொஞ்ச நாள் சென்றே அவரை பற்றி தெரியும்.

சில நேரங்களில் அபூர்வமாக ஓவியா போன்ற சில கேரக்டர்களும் டீமில் இருக்கும். மனதில் பட்டதை பேசும். பெரியவர் சிறியவர் என்று வித்தியாசம் பார்க்காமல் எது தவறு என்று பட்டென சொல்லி விடுவார்கள். ஆனால் ஓவியா போன்றவர்கள் மாட்டிக் கொண்டால்  டீமில் இருக்கும் மற்றவர்கள் அவரை பைத்தியமே ஆக்கி விடுவார்கள்.
காயத்ரி போன்ற தாதா கேரக்டர்  ஒன்றும் டீமில் இருக்கும். பெரும்பாலும் இந்த காயத்ரிகள் லீடர் லெவலில் இருப்பதால் மற்றவர்கள் மிக பவ்வியமாக நடந்து கொள்ளுவார்கள்.

கடைசியாக வரும் இந்த ஜூலிக்கள்தான் மிக முக்கியமானவர்கள். தனக்கு லாபம் கிடைக்கும் என்பதால் காயத்ரிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு இணக்கமாக நடந்து கொள்வார்கள். தான் முன்னேற நிறைய பொய் சொல்லுவார்கள். என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். நல்லவர் போல நடிப்பார்கள். நம் வாயை கிளறி நம்மிடம் இருந்தே விசயத்தை வாங்கி நேரம் பார்த்து பிக்பாசிடம் போட்டு குடுத்து விடுவார்கள். அநேகமாக  டீமில் பாதி பேருக்குள் இந்த ஜூலி கேரக்டர் இருக்கும்.

இப்படி வித்தியாசமான  கேரக்டர்கள் இருந்தாலும் எத்தனை பேர் டீமில் இருந்தாலும் அந்த வித்தியாசம்தான் it கம்பெனிகளை சுவாரசியம் ஆக்குகிறது. பிக்பாசையும்.


Wednesday, January 25, 2017

ரஜினியை பயன்படுத்தி புரட்சியாளராகும் வழிமுறை

சிலருக்கு புரட்சியாளர் ஆக வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அப்படி புரட்சியாளர் ஆக எளிய வழி ரஜினியை திட்டுவது. ரஜினியை திட்டுவதன் மூலம் கிடைக்கும் லாபம் என்னவென்றால்  எளிதில் மக்களின் கவனத்தை உங்கள் பக்கம் திருப்ப முடியும். ரஜினியை திட்டுபவர்கள்   புத்திசாலிகள் என்று கூட சிலர் நம்பி விடுவார்கள். இப்படி எளிய முறையில் புரட்சியாளர் ஆகும் வழிமுறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கீழே உள்ளே வழிமுறைகளை பின்பற்றும் முன் ஒன்றை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ரஜினியை வைத்து புரட்சியாளராக முயற்சி  செய்யும்போது  கட்டாயமாக செய்தித்தாளோ, புத்தகங்களோ படிக்கக் கூடாது. அப்படி செய்தால் சிந்திக்க தொடங்கி விடுவீர்கள். பின்னர் புரட்சியாளராக மாற முடியாது. முடிந்தவரை facebook,whatsapp மூலம் மட்டுமே செய்திகளை தெரிந்து கொள்ள வேண்டும். இதை மனதில் நிறுத்திக் கொண்டு  வழிமுறைகளை படியுங்கள்.

Step 1:
facebook மூலம் மட்டும் நாட்டு நடப்பை  கவனித்துக் கொண்டே இருங்கள். நாட்டில் ஏதேனும் பிரச்சினை எழும்போது “ ரஜினி இதை பத்தி  ஒன்னும் சொல்லலடா” என்று status போடவும். உண்மையிலேயே ரஜினி அதை பற்றி ஏதேனும் சொல்லி இருக்கிறாரா என்றெல்லாம் கவலைப் பட தேவையில்லை. எல்லா பிரச்சினைக்கும் ரஜினி ஏன் கருத்து கூறவோ, போராடவோ  வர வேண்டும் என்று  மூளையை பயன்படுத்தி  யோசிக்க ஆரம்பித்து விட்டீர்கள் என்றால் மேலே படிக்காதீர்கள்.

Step 2:
ரஜினி அந்த பிரச்சினை  பற்றி கருத்து கூறியது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுவிட்டால் கவலைப்பட வேண்டாம். “இப்போ இவரை யாரு கருத்து சொல்ல கூப்பிட்டா?” என்று status தட்டி விடுங்கள். ரஜினிக்கு எதிராக யார் என்ன சொன்னாலும் share செய்து விடுங்கள். அதனுடன் நானும் முன்னாள் ரஜினி ரசிகனே என்றும் சேர்த்துக் கொள்ளலாம்.

Step 3:
உங்களை போன்ற புரட்சியாளர்களுக்கு எப்போதும் முதிர்ச்சி அடையப் போவதில்லை என்பதால் ரஜினியை கிழவன் என்று குறிப்பிடவும். உங்களுக்கோ, உங்கள் பரம்பரைக்கோ  முடி உதிரும் பிரச்சினை இல்லை என்று உறுதியாக தெரிந்தால் அவரை சொட்டை  என்றும் குறிப்பிடலாம்.

Step 4:
முந்தைய  நிலையை கடந்த பின் ரஜினி ரசிகர்கள் ரஜினி, அந்த பிரச்சினையில் எடுத்த நிலைப்பாட்டை பற்றி பேசுவார்கள். அப்போது நீங்கள் “ரஜினி சின்ன பொண்ணு கூட டூயட் பாடுறாருடா” என்று சம்பந்தமில்லாமல் உளற வேண்டும்.

Step 5:
அடுத்து ரஜினி ரசிகர்கள், ரஜினி மக்களுக்கு செய்யும் உதவிகளை பற்றி பேசுவார்கள். அப்போது “ரஜினி கர்நாடகாடா” என்று எதிர் தாக்குதல் புரியலாம். அடிக்க மாட்டார் என்று உறுதியாக தெரிந்தால் அந்த ரஜினி ரசிகரையும் திட்டலாம்.

Step 6:
ரஜினியின் அடுத்த படத்தை tamilrockersல் மட்டுமே பார்க்கப் போகிறேன் என்று status போட வேண்டும். அவ்வளவு ரோசக்காரன் ரஜினி படம் பார்க்காம இருக்கலாமே என்று யாரேனும் கேட்டுவிட்டால் “ரஜினி தமிழ்நாட்டுக்கு ஒண்ணுமே செய்யலடா” எனலாம்.

step 7:
ரஜினி படம் வெளியாகும் நேரத்தில் “ரஜினிக்கு நடிக்கவே தெரியாதுடா” என்று கை நோக status போடுங்கள். “நடிகன்னா கமல்தான்” எனலாம். அல்லது விஜய், அஜித் என்று தேவைக்கேற்ப பேரை போட்டு கொள்ளலாம்.

Step 8:
ரஜினி படம் வெளி வந்த முதல் இரண்டு நாட்களுக்குள் தியேட்டர் சென்று பார்த்து விடவும். படம் பார்க்க செல்லும் முன் தியேட்டர் வாசலில்   செல்பி எடுத்துக் கொள்ள வேண்டும். படம் எப்படி இருந்தாலும் படம் முடிந்து வெளியே வரும்போது  “படம் குப்பைடா. ரஜினி அவ்வளவுதான்டா ”  என்று கூவிக் கொண்டே வர வேண்டும்.

Step 9:
படம் 100 நாட்கள் ஓடினாலும் சரி, 150 நாட்கள் ஓடினாலும் சரி. ஒரு நாளும் கூவுவதை நிறுத்த வேண்டாம். இந்த நிலையில் உங்களை யாரும் அதிகம் கண்டுகொள்ள மாட்டார்கள். அதை பற்றி கவலைப்பட தேவையில்லை. உங்கள் வயிற்றெரிச்சல் தீரும்வரை படத்தையும், ரஜினியையும் கழுவி ஊற்றவும்.

Step 10:
முதல் நிலைக்கு சென்று புரட்சி போராட்டத்தை தொடரவும்.

இப்படி மேலே குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றி தமிழகத்தில் ஒரு கோடி பேர் போராளிகளாக உள்ளனர். அவர்களுடன் நீங்களும் ஒரு கோடியே ஒன்னாவது போராளியாக இணைய வாழ்த்துக்கள்.
LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...