Friday, September 8, 2017

ஜூலி சூழ் உலகு

பிக்பாஸ் வீட்டுக்கும் IT நிறுவனங்களுக்கும் பெரிய வேறுபாடு ஒன்றும் இல்லை என்றே தோன்றுகிறது. அந்த பிக்பாஸ் வீட்டை போலவே டீம் என்ற பெயரில் முன்பின் தெரியாத பத்து பேரை டீம் என்ற பெயரில் சேர்த்து விட்டு டெய்லி டாஸ்க் என்று கொடுப்பார்கள். ஆன்சைட் மேனேஜர் என்ற பெயரில் முகம் தெரியாத பிக்பாஸ் ஒருவர் அடிக்கடி போனில் வந்து மிரட்டுவார். ப்ராஜெக்ட்  முடித்தால் வெளிநாட்டிலிருந்து மிட்டாய் அனுப்பி வைப்பார்.

இந்த பத்து பேர் கொண்ட டீம் அமையுமே அதில்தான் விசயமே இருக்கிறது. கட்டாயம் ஒரே மாதிரியான ஜீவன்களை ஒரே டீமில் பார்க்க முடியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு துருவமாக இருப்பார்கள். டீமில் இருக்கும் பெண்களுக்குள் வெளியே சொல்லிக் கொள்ளாமல் ஒரு பனிப்போர் நடந்து கொண்டே இருக்கும். அந்த போருக்கு காரணம் என்ன என்று யாரும் அறிந்து கொள்ள முடியாது. சொல்லப் போனால் அந்த பெண்களுக்கே அந்த காரணம் தெரியுமா என்பது சந்தேகம்'

டீமில் கட்டாயம் ஒரு ஸ்ரீ இருப்பார். எப்போதும் குழப்பத்தோடு எதையோ யோசித்து கொண்டு இருப்பார். டாஸ்க் செய்யலாமா வேண்டாமா என்று அவர்களின் சிந்தனை இருக்காது. டீமில் இருந்து எப்படி கழண்டு ஓடுவது என்று மட்டுமே யோசிப்பார்கள். அதே போல் டீமில் கணேஷ் கேரக்டர் ஒன்று இருக்கும். டீமில் எந்த பஞ்சாயத்து நடந்தாலும் ரியாக்ஷன் எதுவும் காட்டாது. ஆனால் ப்ராஜெக்ட் பார்ட்டி என்றால் மட்டும் முதல் ஆளாக ஆஜராகி . சாப்பாட்டை வெளுத்துக் கட்டும்.

அதே போல  டீமின் சிநேகன்கள்  வேடிக்கை விளையாட்டு என்று சொல்லி விட்டால் போதும்.\;குதூகலம்  ஆகி விடுவார்கள். கம்பெனி  பாஸ்கள் என்ன சொன்னாலும்  கையை கட்டி ஆமாம் சாமி போடுவார்கள். பெண்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் விழுந்தடித்து உதவுவார்கள். பெண்களோடு சேர்ந்து கொண்டு புரணி பேசுவார்கள்.

ரைசா போன்று முழு மேக்கப்பில் வரும் ஒரு பெண் கேரக்டரையும் தவறாமல் காணலாம். அவர்கள் ஆபீசுக்கு வருகிறார்களா அல்லது பேஷன் ஷோவுக்கு வருகிறார்களா என்று கண்டுபிடிக்கவே முடியாது. தமிழ் தெரிந்தாலும் தெரியாதது போல எப்போதும் ஆங்கிலத்திலேயே பேசுவார்கள். க்யுட் ரியாக்சன் என்று நினைத்துக் கொண்டு முகத்தை கோணலாக்கி அடிக்கடி பயம் காட்டுவார்கள். வேலை செய்ய சொன்னால் மட்டும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி ஓய்வறை சென்று படுத்துக் கொள்வார்கள். ஆர்த்தி போல ஒரு கேரக்டர் எப்போது பார்த்தாலும் சம்பந்தம் இல்லாமல் லொட லொட என்று பேசிக் கொண்டே திரியும்.

ஆரவ் கேரக்டர் எப்போதும் பெண்களுடனேயே சுத்தும். அதே போல வையாபுரி போல ஒருவர்  இருப்பார். அனைவரையும் சகட்டு மேனிக்கு கலாய்ப்பார்.  வெளிநாட்டு மிட்டாய் வரும்போது மனைவிக்கு வேண்டும், பையனுக்கு வேண்டும் என்று இரண்டு மிட்டாய்களை பையில் போட்டுக் கொள்வார். சக்தி கேரக்டர் எப்போதும் கெத்தாகவே சுத்தி வரும். பெரிய ஆள் என்று நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் கொஞ்ச நாள் சென்றே அவரை பற்றி தெரியும்.

சில நேரங்களில் அபூர்வமாக ஓவியா போன்ற சில கேரக்டர்களும் டீமில் இருக்கும். மனதில் பட்டதை பேசும். பெரியவர் சிறியவர் என்று வித்தியாசம் பார்க்காமல் எது தவறு என்று பட்டென சொல்லி விடுவார்கள். ஆனால் ஓவியா போன்றவர்கள் மாட்டிக் கொண்டால்  டீமில் இருக்கும் மற்றவர்கள் அவரை பைத்தியமே ஆக்கி விடுவார்கள்.
காயத்ரி போன்ற தாதா கேரக்டர்  ஒன்றும் டீமில் இருக்கும். பெரும்பாலும் இந்த காயத்ரிகள் லீடர் லெவலில் இருப்பதால் மற்றவர்கள் மிக பவ்வியமாக நடந்து கொள்ளுவார்கள்.

கடைசியாக வரும் இந்த ஜூலிக்கள்தான் மிக முக்கியமானவர்கள். தனக்கு லாபம் கிடைக்கும் என்பதால் காயத்ரிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு இணக்கமாக நடந்து கொள்வார்கள். தான் முன்னேற நிறைய பொய் சொல்லுவார்கள். என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். நல்லவர் போல நடிப்பார்கள். நம் வாயை கிளறி நம்மிடம் இருந்தே விசயத்தை வாங்கி நேரம் பார்த்து பிக்பாசிடம் போட்டு குடுத்து விடுவார்கள். அநேகமாக  டீமில் பாதி பேருக்குள் இந்த ஜூலி கேரக்டர் இருக்கும்.

இப்படி வித்தியாசமான  கேரக்டர்கள் இருந்தாலும் எத்தனை பேர் டீமில் இருந்தாலும் அந்த வித்தியாசம்தான் it கம்பெனிகளை சுவாரசியம் ஆக்குகிறது. பிக்பாசையும்.


1 comment:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...