வீட்டுக்குள் நுழையும்போதே “கவிதா! சீக்கிரமா வா. ரெண்டு முக்கியமான
விசயம்” என்று கூறிக்கொண்டே நுழைந்தேன். கவிதா என்னை திரும்பி பார்த்துவிட்டு
மீண்டும் தொலைக்காட்சியில் கண்களை செலுத்தினாள். என்னுடைய அவசரம் எதுவும்
புரிந்ததாக தெரியவில்லை.
“அப்பிடி என்ன டிவி கேக்குது உனக்கு? ரெண்டு முக்கியமான விசயம் சொல்ல
போறேன் உன்கிட்ட ”
“புதுசா என்ன சொல்லிட போற?” என்று மீண்டும் திரும்பி கொண்டாள். டிவியை
நிறுத்த மாட்டாள். அப்படியே டிவி சத்தத்துடனே சொல்லி விட வேண்டியதுதான்.
“நான் வேலைய விட்டுட்டேன் கவிதா”
“என்னது?” இப்போது டிவியை அவளே நிறுத்து விட்டாள்.
“உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சு போச்சா? நாப்பது ஆயிரம் சம்பளம் வர்ற
வேலை. அதுல மாசம் முப்பது வாங்குன கடனுக்கே கட்டிக்கிட்டு இருக்கோம். வேலைய
விட்டுட்டு பிச்சை எடுக்கலாம்னு ஐடியாவா?”
“இரு இரு. ஒரு ரெண்டு நிமிசம் குறுக்க பேசாம நான் சொல்றத கேளு.இதோ
இந்த பாத்திரம்தான் நம்ம கோடீஸ்வரன் ஆக்க போகுது.” சொல்லி கொண்டே அந்த பாத்திரத்தை எடுத்தேன்.
“அட பாவி மனுஷா. பிச்சை எடுக்க பாத்திரம் வாங்கிட்டே வந்துட்டயா”
“ஒரு நிமிஷம் நான் சொல்றத கேளேன்”
“சொல்லு” அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது
“அட்சய பாத்திரம் கேள்விப்பட்டு
இருக்கியா? அதுதான் இது.” அவள் புரியாமல் பார்த்தாள்.
“அட்சயாவோட பாத்திரத்தை நீ ஏன் தூக்கிகிட்டு வந்த?”
“இரு உனக்கு புரியிற மாதிரி சொல்றேன். அட்லீஸ்ட் மகாபாரதம் கேள்விபட்டு இருக்கியா?”
“அதான் எல்லா டிவிலயும் போடுறானே”
“ரைட். அதுல திரவுபதி அட்சய பாத்திரம் வச்சு இருப்பாங்க. என்ன
சாப்பாடு வேணும்னாலும், எத்தனை பேருக்கு வேணும்னாலும்
கொடுக்கும் அது. இந்த பாத்திரம் அதே மாதிரி ஒரு பாத்திரம்தான்”
“அதே கம்பெனிக்காரன் பாத்திரமா.”
“அது எந்த கம்பெனியோடதா இருந்தா என்ன? நான் சொல்றதை கேளு. நேத்து
ஆதவனார் மலை கோவிலுக்கு போய் இருந்தேன்ல. அப்போ ஒரு சாமியாரை பார்த்தேன். அவர் இதை
எனக்கு குடுத்து அவருக்கு இது தேவைப்படாதுன்னு சொல்லி இதை வச்சு நான் பசியில
கஷ்டப்படுறவங்களுக்கு உதவணும்னு கேட்டுகிட்டார். நானும் சரின்னு சொல்லிட்டு
வாங்கிட்டு வந்துட்டேன்”
“யாரோ ஏதோ சொன்னா வாங்கிட்டு
வந்துடுவியா?”
“இரு. உன்னை நம்ப வைக்கிறேன். உனக்கு இப்போ சாப்பிட என்ன வேணும். இங்க
வந்து இந்த பாத்திரத்துகிட்ட கேளு”
“உனக்கு முத்தி போச்சு”
“கேளு அப்புறம் பாரு”
“சரி! எனக்கு தயிர் சாதம் வேணும்”
“இப்போ பாத்திரத்துக்குள்ள பாரு”
அவள் பார்த்தாள். கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.
“என்ன இது. உள்ள தயிர்சாதம் இருக்கு. அதுவும் கருவேப்பிலை எல்லாம்
போட்டு”
“எடுத்து சாப்பிட்டு பாரு”
அவள் எடுத்து சுவைத்தாள்
“என்ன ருசி. இது மாதிரி சாப்பிட்டதே இல்ல.”
“இப்போ தெரியுதா எதுக்கு வேலைய விட்டேன்னு?”
“மூணு வேளை சோறு கிடைச்சா மட்டும் போதுமா? மத்ததுக்கு காசு”
“இந்த பாத்திரம் நாம சாப்பிட இல்ல. ஊருக்கே சோறு போட. வெளிநாட்டு பீட்சா
கடை எல்லாம் இனிமே காணாம போகப்போகுது. இப்போதைக்கு தினமும் அஞ்சாயிரம் வியாபாரம்
நடந்தா கூட போதும். ரெண்டே வருஷத்துல கடையை விரிவாக்கி சீக்கிரமா கோடீஸ்வரன்
ஆயிடலாம்.”
“என்னய்யா என்னென்னமோ சொல்ற?”
“சீக்கிரம் புரியும். இப்போ இதுகிட்டே
பீட்சா கேக்குறேன் பாரு. பாத்திரமே சூடா பீட்சா குடு”
பீட்சா வந்ததும் எடுத்து சாப்பிட ஆரம்பித்தேன். இனிமேல் நானும் ஒரு
தொழில் அதிபர்.
திட்டமிட்டபடி ஒரு கட்டடத்தை வாடகைக்கு பிடித்து விட்டேன். இரண்டு பேரை வேலைக்கும்
எடுத்தாகி விட்டது. இனி அட்சய பாத்திரம் என்னை கோடீஸ்வரன் ஆக்க போவதுதான் பாக்கி.
கடையினுள் ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தபோது கவிதா மொபைலில் அழைத்தாள்.
“என்ன எல்லாம் ஏற்பாடாயிடுச்சா?”
“எல்லாமே. வேலைக்கும் ஆளும் எடுத்தாச்சு. புதன்கிழமை நம்ம கவிதாஸ் பீட்சா கடையை திறந்துடலாம்.”
“பாத்திரம் பத்திரம்தானே?”
“அதெல்லாம் பூஜை ரூம்ல பத்திரமா எடுத்து வச்சாச்சு”
“குட்”
“வேலைக்கு எத்தனை பையங்க?” அவள் அந்த பையன்களில் அழுத்தம் கொடுப்பது
தெரிந்தது.
“அது வந்து கவி, நாம செய்யப் போற வேலைக்கு பையன்களை நம்ப முடியாது.
அதனால ரெண்டு பொண்ணுங்களை” இணைப்பு துண்டிக்கப்பட்டது. அநேகமாக இப்போது மேக்அப்
செய்து கொண்டிருப்பாள். இன்னும் ரெண்டு மணி நேரத்துக்கு பின் இங்கே கிளம்புவாள்.
அதற்குள் அந்த பெண்களிடம் பேசி விட வேண்டும். அவர்களை அழைத்தேன்.
“பொண்ணுங்களா. உங்க வேலை இங்க சப்ளை பண்றது மட்டும்தான். எந்த காரணம்
கொண்டும் கிச்சன் உள்ள வரக் கூடாது. நான் பீட்சா செஞ்சு செஞ்சு வெளிய கொண்டு வந்து
குடித்துடுவேன் என்ன? காஷியர் வேலைக்கு நாளைக்கு இன்னொரு பொண்ணு வரும்”
“சரிங்க சார்”
“சரி. போய் எல்லாத்தையும் எடுத்து வைங்க.” அவர்கள் திரும்பி நடக்க
ஆரம்பித்தார்கள். இன்னொரு பெண் என சொன்னது கவிதாவை. அவளே காஷியர் வேலை பார்க்கட்டும். சிறிது சமாதானம்
அடைவாள்.
“தேவி. இங்க வா.” நாற்காலிகளை ஒழுங்குபடுத்த என்னுடைய பணிப்பெண்ணை
உதவிக்கு அழைத்தேன். அவள் முதல் நாள் விசுவாசத்தில் அவசரமாக ஓடி வந்தாள்.
பார்த்ததும் அதிர்ந்தேன் என்றால் அது தவறு. அதற்கும் மேல். எப்படி ஒரு பெண்ணிற்கு
பத்து நிமிடத்தில் தாடி முளைத்து நரைக்கவும்
முடியும். தேவியா இது. இல்லை. உடை மட்டும் தேவி. முகம் எனக்கு அட்சய பாத்திரம் குடுத்த சாமியார்.
“சாமி! நீங்க இப்போ எதுக்கு வந்தீங்க ”
“என்ன காரியம் செய்தாய் நீ? உனக்கு ஏழைகளுக்கு உதவ பாத்திரம்
கொடுத்தால் நீ சுய லாபம் அடைய பார்க்கிறாயா?”
“அப்படி இல்ல சாமி. தினமும் ரெண்டு ஏழைங்களுக்கு பீட்சா குடுக்கணும்.
அந்த லட்சியதுக்குதான் இந்த கடை
ஆரம்பிச்சேன்”
“பொய் உரைக்காதே”
“போங்க சாமி. நான் சொல்றதை கேளுங்க. நீங்க எத்தனை நாள்தான் அந்த மலைல
கஷ்டப்படுவீங்க? பிரச்சினை செய்யாம இருங்க. உங்களை பார்ட்னரா சேத்துக்குறேன். கடைலயே
நீங்க தங்கிக்கலாம். என்ன?”
சாமியார் பொறுமை இழப்பது தெரிந்தது.
“நீ புரியாமல் தவறு செய்கிறாய்.”
“அதெல்லாம் நல்லா புரிஞ்சுதான் செய்கிறேன் சாமி. நீங்க பாட்டுக்கு இதே
மாதிரி வீட்டுக்கு போய் பாத்திரத்தை எடுத்துட்டு போய்டாதீங்க”
“குடுத்ததை எடுக்கும் பழக்கம் எனக்கு கிடையாது”
“சரி. பாத்திரம் வேலை செய்யவிடாம செஞ்சுடாதீங்க”
“நான் உன்னை போல் அல்ல”
சாமியார் மெதுவாக துவண்டார். அவரின்
தாடி மறைந்து தேவியின் முகம் அழகான முகம் தெரியத் தொடங்கவும் , கவிதா
கடைக்குள் நுழையவும் சரியாக இருந்தது.
“என்னய்யா செஞ்ச அந்த பொண்ணை?”
“கவிதா! கத்தாத. என்ன நடந்ததுன்னா” அவளிடம் விளக்கி சொன்னேன்.
“அக்கா. சீக்கிரம் உள்ள விடுங்க”
“இருங்கடா. இன்னும் கடை ஓபன் ஆகல. 9 மணிக்கு நல்ல நேரம் வரட்டும்”
நான் அவர்கள் பேசியதை கவனிக்காமல் கிச்சனுக்குள் சென்றேன். அட்சய
பாத்திரத்தை எடுத்து கைகளை உள்ளே விட்டேன்.
“லார்ஜ் பீட்சா குடு பாத்திரமே” பாத்திரம் சூடான பீட்சா கொடுத்தது.
“தேவி. அந்த பசங்களுக்கு கொண்டு பொய் குடு” அவள் அதை எடுத்து கொண்டு
அவர்களிடம் கொடுத்தாள். எப்படியோ முதல் முயற்சி வெற்றி. அந்த பையன்கள் அதை
சந்தோசமாக சாப்பிட்டுவிட்டு சென்றார்கள்.
அடுத்த ஒரு மணி நேரம் யாரும் வரவில்லை தேவி என்னை அழைத்தாள். “சார்!
கஸ்டமர் வந்து இருக்காங்க” வெளியே எட்டி பார்த்தேன். ஒரு காதல் ஜோடி.
“ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ண சொல்லுமா” என்று சொல்லிவிட்டு
பாத்திரத்திடம் சென்றேன். “ரெண்டு பீட்சா பாத்திரமே” என்று சொல்லிவிட்டு அதனுள்
கையை விட்டேன். கை பாத்திரத்தில் அடிப்பாகத்தில் சென்று முட்டியது. என்ன ஆயிற்று
இதற்கு? சொன்னது காதில் விழவில்லையா? சத்தமாக சொன்னேன். பலனில்லை. “கவிதா! இங்க
சீக்கிரம் வா”
கவிதா வேகமாக உள்ளே வந்தாள். “என்னங்க ஆச்சு?”
“இது வேலை செய்யல?”
“என்னது? இதை எங்க குடுத்து சர்வீஸ் பாக்குறது?”
“ஆத்திரத்தை கிளப்பதா” நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே கவிதாவுக்கு
தாடி முளைக்க தொடங்கியது.
“ஹா ஹா ஹா”
“சாமி. என்ன செஞ்சீங்க? பாத்திரம் வேலை செய்யல”
“நான் ஒன்றும் செய்யவில்லை. பாத்திரத்தை கொடுத்துவிட்டு நான் அன்று
என்ன சொன்னேன். சொல்”
“பசிக்கிறவங்களுக்கு உதவ”
“இப்பொழுது நீ யாருக்காக உணவு கேட்கிறாயோ அவர்களுக்கு பசி இல்லை.
அதனால் இது உணவு தரவில்லை”
“யோவ்! விளையாடுறியா. இதை ஏன் அப்பவே சொல்லல”
“நான் சரியாகத்தான் சொன்னேன். நீ சரியாக புரிந்து கொள்ளவில்லை”
“அப்போ கவிதாவுக்கு வந்த தயிர் சாதம். அந்த பசங்களுக்கு வந்த பீட்சா”
“அவர்கள் அப்போது பசியில் இருந்தவர்கள்”
“சரி விடு. அப்போ பசியோட வரவங்க கேட்டா சாப்பாடு வரும்ல?”
“வரும். ஆனால் நீ பணம் பெற்று கொண்டால் அது உதவி ஆகாது.
பாத்திரம் முற்றிலும் வேலை செய்வதை நிறுத்தி விடும்”
“போச்சு போச்சு. அப்போ இந்த பாத்திரத்தை வச்சு என்ன செய்யுறது.
பரோட்டா கடைன்னாலும் ஊருல இருந்து மாஸ்டர் கூட்டிகிட்டு வருவேன். திடீர்னு பீட்சா
மாஸ்டருக்கு எங்க போறது”
“அதை நீயே முடிவு செய்து கொள்”
சாமியார் மயங்கி விழுந்து கவிதாவாக மாறினார்.
“என்னங்க ஆச்சு?”
“முதல்ல அந்த ரெண்டு பேருக்கும் வெளிய பீட்சா வாங்கிட்டு வரேன். நீ
அதுக்குள்ள கடையை மூடிடு. அந்த ரெண்டு பொண்ணுங்களுக்கு கொஞ்சம் பணம் குடுத்து
அனுப்பி வச்சுடு”
முதல் நாளிலேயே கடைக்கு மூடுவிழா நடத்திவிட்டு ஆட்டோவில் ஏறினோம்.
“இதை நம்பி வேலையை
விட்டாச்சு. இப்போ என்ன செய்ய?”
“நாளைக்கு இருந்து வேற வேலை தேட ஆரம்பிக்கலாம்”
“இந்த பாத்திரம்”
“உண்மையிலேயே சுயநலம் இல்லாம மத்தவங்களுக்கு உதவி செய்யுற ஆள் இருந்தா இந்த பாத்திரம் அவங்ககிட்ட
போகட்டும்” என்று சொல்லிவிட்டு பாத்திரத்தை ஆட்டோவில் இருந்து வெளியே தூக்கி எறிந்தேன். ஒருவேளை அந்த பாத்திரம் உங்கள் கையில் கிடைத்தால் நீங்களாவது எடுத்து
பசித்தவர்களுக்கு உதவுங்கள்.
வணக்கம்
ReplyDeleteகதையின் உரையாடல் நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-