சுஹாஷினி மேடம் அவர்களுக்கு,
சில நாட்களாக எனக்கு ஒரு சிறிய சிக்கல். அதை தீர்த்து வைக்க உங்களால்
மட்டுமே முடியும். உங்களிடம் இதை உங்களிடம் ஏன் கேட்கிறேன் என்று நினைக்க வேண்டாம்.
இந்த சிக்கல் தோன்றியதே உங்களால்தான். எனவே இதை தீர்த்து வைக்கவும் உங்களால் மட்டும்தான்
முடியும்.
நான்கு நாட்களுக்கு முன்னர் எனது வீட்டுக்கு ஒருவர் வந்தார். அவர்
யாரென்று கேட்டேன். அவர் ஒரு தகுதியான
பத்திரிக்கை விமர்சகராம். நீங்கள் ஒரு நாள் தகுதியான பத்திரிக்கையாளர்கள் தவிர
மற்ற யாரும் சினிமா பற்றி எழுதக்கூடாது என்று சொன்னதை கேட்டு என்னை எழுத விடாமல்
தடுக்க வந்திருக்கிறாராம்.
ஏதோ நகைச்சுவைதான் செய்கிறார் என்று நினைத்தேன். ஆனால் அவர் ஒவ்வொரு
முறையும் நான் கணிப்பொறியில் தட்டச்சு செய்ய முயலும்போதெல்லாம் ஓடி வந்து ஏன் கையை
பிடித்து கொள்கிறார். “ஐயா! நான் விமர்சனம் என்று எல்லாம் ஏதும் எழுதுவதில்லை.
இப்போது கூட மொக்கை கதை ஒன்று எழுதத்தான் போகிறேன்” என்றாலும் அவர் கேட்க மாட்டேன்
என்கிறார். சுஹாசினி மேடம் சொல்லியதை நான் செய்கிறேன் என்று கையை இன்னும் கெட்டியாக
பிடித்துக் கொள்கிறார்.
“என்ன சார் இது அநியாயம். நம் மக்கள் நினைவு தெரிந்த நாளில் இருந்தே
சினிமாவை பார்த்தே வளர்ந்து வந்த மக்கள். அவர்களை சினிமா பற்றி எழுதாதே என்றால்
வேறு எதை பற்றி எழுதுவது. ஒரு சினிமா பார்த்தால் அவர்கள் பார்வையில் அது எப்படி
இருக்கிறது என்று எழுதி வைக்கிறார்கள்.
அதையும் கூடாது என்றால் அவர்கள் வேறு எதை பற்றிதான் எழுதுவார்கள்? அப்படி எழுதுவதில்
என்ன தவறு இருக்கிறது?” என்றேன்.
அவர் பதிலுக்கு “அதெல்லாம் பேசாதே! சுஹாசினி மேடம் எழுத விடக்கூடாது
என்று கூறி விட்டார்கள்” என்று கையை விடாமலே பதில் சொல்கிறார்.
“எனக்கு புரிந்து விட்டது. வசூல் பாதிக்கக்கூடும் என்று
அஞ்சுகிறீர்கள். இணையத்தில் பத்து பேர் படம் அருமை என்று எழுதினால் பத்து பேர் படம்
மொக்கை என்று எழுதுகிறார்கள். அதை படித்தவர்களுக்கு படத்தை பற்றி எந்த ஒரு தெளிவான
அபிப்பிராயமும் வந்து விடப் போவதில்லை. படம் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள்
எப்படியும் பார்க்கத்தான் போகிறார்கள். ஒரு வேளை எல்லாரும் படம் மொக்கை என்று
எழுதிவிட்டால் அது படம் எடுத்தவரின் தவறு ஐயா” என்றேன்.
அவர் “தேவையில்லாமல் பேசாதே! மேடம் சரியாகத்தான் சொல்லுவார்” என்றார்.
“மௌசை பிடிக்கத் தெரிந்தவர்கள் எல்லாம் இனிமேல் விமர்சனம் என்று
எதுவும் எழுத மாட்டார்கள் என்றே வைத்து கொள்வோம். ஆனால் படம் பார்த்து
கொண்டிருக்கும்போதே வாட்ஸ்அப்பில் படத்தை பற்றி ஊரெல்லாம் சொல்லி விடுகிறார்களே.
அவர்களை எப்படி தடுப்பீர்கள்?” என்றேன்.
“அதெல்லாம் எனக்கு தெரியாது. மேடம் உங்களை எழுத விடக்கூடாது என்று
சொல்லிவிட்டார்”.
“இனிமேல் விமர்சிப்பவர்கள் தங்கள் தகுதியை வளர்த்து கொள்கிறேன் . சினிமா
நுணுக்கங்களை கரைத்து குடிக்கிறோம். பத்து பேரிடம் படத்தை பற்றிய கருத்தை கேட்டு
விட்டு விமர்சனம் செய்கிறேன் . சரிதானே?”
என்றேன்.
“இதையெல்லாம் செய்து விட்டால் நீ தமிழ் படம் பார்ப்பதையே நிறுத்தி விடுவாய்.
ஆனால் அதுவரை உன்னை எழுத விட மாட்டேன்”
என்றார். இவரை எப்படி சமாதானப்படுத்துவது என்றே தெரியவில்லை. நீங்கள் ஒரு வார்த்தை சொன்னால் இவர் கையை விட்டு விடுவார் என்று தோன்றுகிறது.
தயவு செய்து உதவி செய்யவும்.
பின்குறிப்பு: இப்போது மட்டும் எப்படி எழுதுகிறேன் என்று
கேட்காதீர்கள். அவரிடம் படம் மட்டும் பார்த்துக் கொள்கிறேன் என்று அனுமதி வாங்கி
கணிப்பொறியில் “ராவணன்” படம் போட்டு விட்டுவிட்டேன். பார்த்துக்கொண்டே தூங்கி
விட்டார். அந்த இடைவெளியில் இதை எழுதி விட்டேன்
சுஹாசினி மேடம் அவ்வளவு சொல்லியும் ராவணன் படத்தைப் பத்தி விமர்சனம் எழுதிட்டீங்க, எல்லாம் மவுஸ் பிடிக்க தெரியும்ங்கற தெனாவெட்டுதான்
ReplyDeleteநான் லேப்டாப் பயன்படுத்துகிறேன். எனவே எனக்கு மௌஸ் தேவையில்லை :)
Deleteவணக்கம்
ReplyDeleteசொல்லிய விதம் அருமை.. பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி!
DeleteSUPER...SUPER.
ReplyDeletekarthik amma ...
kalakarthik
Thanks Madam. Just gone through your blog. Don't have the words to say anything.
Delete