நேற்று அந்த உணவகத்தில் உள்ளே அவர் வரும்போதே எனக்கு மிகவும்
வித்தியாசமாக தெரிந்தார். டீ-ஷர்ட், ஜீன்ஸ் என்று சாதாரணமாகவே உடை அணிந்து இருந்தாலும்
அவரின் அதீத கறுப்பு நிறம் அவர் ஆப்பிரிக்காவிலிருந்து வந்தவர் என்று உணர்த்தியது.அவருக்கு
முப்பது வயதுக்குள் இருக்கலாம். இந்த ஏரியாவில் இவர்களுக்கு என்ன வேலை என்று
யோசிக்க தொடங்கினேன். வந்தவர் நேராக வந்து எனக்கு எதிராக அமர்ந்தார்.
சப்ளையரோ பெரிதாக அலட்டி கொள்ளாமல்வழக்கப்படி அசுவாரசியமாக வந்து தட்டை எடுத்து அவருக்கு முன்
வைத்து விட்டு தண்ணீர் எடுக்க சென்றார். சில வினாடிகளில் ஆப்பிரிக்கர் பெருங்குரலில்
கத்த தொடங்கினார்.
“வாட் இஸ் திஸ்?”
அவரின் சத்தத்தை கேட்டு ஓட்டலே ஒரு வினாடி அதிர்ந்து திரும்பி
பார்த்தது. ஏதேனும் பெரிய தவறு நடந்து விட்டதா என்று அதிர்ந்து கல்லாவில் அமர்ந்து இருந்த முதலாளி எண்ணி கொண்டு இருந்த பணத்தை விட்டு
விட்டு நிமிர்ந்தார். நானும் நிமிர்ந்தேன்.
ஆப்பிரிக்காக்காரர் தட்டில் இருந்த
வாழை இலையை கையில் எடுத்து கொண்டு கல்லாவில் இருந்த முதலாளியை வெறித்து
கொண்டிருந்தார்.
“பனானா லீப்”
“திஸ் இஸ் நாட் கிளீன். ஐ டோன்ட் வான்ட்”
முதலாளி தலையில் அடித்து கொண்டு சப்ளையரை அழைத்தார்.
“மணி! பிளாஸ்டிக் பேப்பர் போட்டு குடு”
மணி என்று அழைக்கப்பட்டவர் எப்படி இருந்தார் என்றால் நீங்கள் கடைசியாக
பார்த்த ஹோட்டல் சப்ளையரை நினைவுபடுத்தி கொள்ளுங்கள். அந்த மணியாகப்பட்டவர் என்னை பார்த்து “இவனை எல்லாம் உள்ளே விட்டு நம்ம
உயிரை எடுக்குறானுங்க! வாழை இலை சுத்தமா எப்பிடி இருக்கும். நம்ம ஊருக்கு வந்து
நம்மளை மாதிரி சாப்பிட மாட்டானா” என்றார்.
“நல்ல வேளை சுத்தமா இருந்தா இலையை சாப்பிட்டு இருப்பான்! “ என்றேன்.
“அப்பிடி செஞ்சா கூட சந்தோசமா இருந்து இருப்பேனே ?” என்று அலுத்து
கொண்டே உள்ளே சென்று பிளாஸ்டிக் பேப்பரை தட்டில்
விரித்து கொண்டு ஆப்பிரிக்கர் முன்
வைத்தார். மறு வினாடி ஆப்பிரிக்கர் அந்த பிளாஸ்டிக் பேப்பரை எடுத்து மேஜையில் விரித்து தட்டை அதன் மேல் வைத்தார்.
மணிக்கு இந்த முறை கோபம் சற்று அதிகமாகவே வந்து விட்டது.
“பாருங்க சார்! அநியாயம் பண்றான்” என்று முதலாளியிடம் முறையிட்டார்.
“நீங்க டென்சன் ஆகாதீங்க மணி! என்னமோ செஞ்சுட்டு போறான்” என்றார்
முதலாளி.
“வாட் ஈடிங்?” மணி தன்னுடைய ஆங்கில அறிவை பிரயோகித்தார் .
இப்போதுதான் ஆப்ரிக்கருக்கு என்ன சாப்பிடுவது என்று சந்தேகம் வந்து
இருக்க வேண்டும். சில வினாடிகள் யோசித்து “சிக்கன்” என்றார்.
மணிக்கு ரத்த அழுத்தம் எகிறி இருக்க வேண்டும். கண்கள் சிவந்தது
தெரிந்தது.
“ஒன்லி வெஜிடேரியன்! நோ சிக்கன்”
“ஓகே! கிவ் மீ திஸ் ஐடம்” ஆப்ரிக்கரின் கை நான் சாப்பிட்டு கொண்டு
இருந்த தோசையை நோக்கி நீண்டது.
“வெயிட்.” மணி உள்ளே சென்று விட்டார்.
ஆப்ரிக்கர் ‘லோலோலோ’ என்று ஏதோ பாட தொடங்கினார். சில நிமிடங்களில்
தோசை வந்தது.
“கிவ் மீ ஸ்பூன்”
“தோசைக்கு ஸ்பூன் கேட்கிறான் சார்” என்றார் மணி.
“கேக்குறதை எல்லாம் கொடுங்க” என்றார் முதலாளி. மணி ஸ்பூன் எடுக்க
திரும்பிய வினாடியில் என்ன நினைத்தாரோ ஆப்ரிக்கர். தோசையை நான்காக மடித்து
வாய்க்குள் திணித்து விட்டார்.
“அண்ணே! இருங்க. நான் அப்போ வந்த தோசையையே இன்னும் சாப்பிடல. இவர்
அதுக்குள்ள தோசையை முடிச்சுட்டார்" என்றேன் மணியை பார்த்து.
“இப்போ சாம்பாரை இவன் தலையிலதான் ஊத்தணும்” என்றார் மணி.
“கிவ் மீ எ கிளாஸ்”
“கிளாஸ் கேக்குறான் பாருங்க” என்றேன்
“இருடா தரேன் ” என்று தண்ணீர் வைக்கும் கிளாசை எடுத்து முன்னே
வைத்தார் மணி. ஆப்ரிக்கர் யோசிக்காமல் சாம்பார் வாளியில் இருந்து ஒரு கரண்டி
சாம்பாரை எடுத்து க்ளாஸில் ஊற்றி குடிக்க தொடங்கினார்.
மணி இப்போது சிரிக்க தொடங்கி இருந்தார்.
“என்னண்ணே! சிரிக்கிறீங்க?” என்றேன்.
“முடிச்சுட்டான்.எப்பிடியோ தொல்லை தீர்ந்தது” என்றார்.
அவர் சந்தோசம் அதிக நேரம் நிலைக்கவில்லை. ஆப்ரிக்கரின் கை மீண்டும்
பக்கத்து மேஜையில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தவரின் தட்டை நோக்கி நீண்டது.
“கிவ் மீ திஸ் ஐடம்”
நான் மணியை பார்த்தேன். அதற்கு மேல் அங்கே இருந்தால் போலீஸ் கேசில்
முக்கிய சாட்சியாக நிற்க வேண்டிய நிலை வரும் என்று தோன்றியது. கையை கழுவிவிட்டு
நேராக முதலாளியிடம் சென்றேன்.
“ஏன் சார்? அதை கொண்டுவா, இதை கொண்டுவான்னு உயிரை வாங்குறான். நீங்க பேசாம
இருக்குறீங்களே?” என்றேன்.
“விடுங்க தம்பி! ஒரு தடவை பாம்பே போய் எதை எப்பிடி சாப்பிடறதுன்னு
தெரியாம மூணு நாளா சரியா சாப்பிடாம ஊரு வந்து சேர்ந்தேன். ஆனா அவனை பாருங்க. எங்க
இருந்தோ வந்து எதை பத்தியும் கவலைப்படாம சாப்பிட்டுகிட்டு இருக்கான். அவனை
பாராட்டணும்” என்றார்.
அதுவும் உண்மைதான்.
No comments:
Post a Comment