Tuesday, November 15, 2016

பீதாம்பரபட்டி மக்கள்

“தம்பி! கொஞ்சம் சீக்கிரம்  ஆலமரத்து கிட்ட வாங்க” என்று அந்த பெரியவர் பதட்டமாக என்னை அழைத்தார்.

“என்னய்யா ஆச்சு? எதுக்கு இப்பிடி மூச்சு வாங்குறீங்க?”

“நம்ம ஊருக்கு ஒரு சிக்கல் தம்பி. நீங்களே வந்து என்னன்னு பாருங்க” என்று பெரியவர் என் கையை பிடித்து இழுக்காத குறையாக என்னை அழைத்தார். குழப்பத்தோடு அவருடன் நடக்க ஆரம்பித்தேன்.

“எதுவும் பெரிய பிரச்சினையா?”

“அப்பிடித்தான் தோணுது, அதான் ஊருல இருக்குற படிச்ச பசங்களையெல்லாம் கூப்பிடுறோம் என்றார். நூறு வீடுகள் கூட இல்லாத கிராமத்துக்கு அப்படி என்ன பெரிய பிரச்சினை வந்து விடப்போகிறது என்று குழப்பமாக இருந்தது. அதே நேரத்தில்  ஊரில் பன்னிரண்டாம் வகுப்பு பாஸ் செய்த சிலரில் நானும் ஒருவன் என்று நினைக்கும்போது மிகவும்  பெருமையாகவும் இருந்தது.

“புதுசா பாக்டரி கட்ட திட்டம்  எதுவும் போட்டுக்கிட்டுபோட்டு இருக்காங்களா?கவர்மென்ட் பூமிக்கடியில பெட்ரோல், நிலக்கரின்னு எதுவும் கண்டு பிடிச்சு நம்மள ஊர காலி பண்ண சொல்றாங்களா?”

“அதெல்லாம் இல்ல தம்பி. வந்து பாருங்க”

அவர் சொல்லி முடிக்கும்போதே அந்த ஆலமரம் கண்ணுக்கெட்டும் தூரத்தில் வந்து விட்டது. மரத்தை சுற்றி ஊரே திரண்டிருந்தது. சலசலவென்று பேசிக் கொண்டிருந்தவர்களை “வழி விடுங்க. வழி விடுங்க.படிச்ச பயலை கூட்டிகிட்டு வந்துட்டேன்”  என்றவாறே  விலக்கி என்னை உள்ளே கூட்டி சென்றார்.

“அங்க பாருங்க தம்பி”

பார்த்ததும் வியந்தேன்.  மரத்துக்கு கீழே அடர் பச்சை நிறத்தில் ஒரு எட்டு வயது சிறுவன்  அமர்ந்திருந்தான்.அவன் கண்கள் மட்டு இரத்த சிகப்பாக. சட்டை அணியாமல் இடுப்பில் மட்டும் ஒரு துணியை சுற்றி இருந்தான். அவன் கண்கள் வேகமாக சுழன்று கூட்டத்தில் இருந்த ஒவ்வொருவரையும் எடை போடுவது போல தெரிந்தது. மொட்டை அடித்து ஒரு வாரம் ஆனா தலை போல அவன் தலையில் லேசாக  போல தலையில் முடி லேசாக எட்டி பார்த்தது.

“என்னங்க? பெயிண்ட் டின்னுல விழுந்துட்டானா? யாரோட பையன்” என்றேன்

“அவன் நம்ம ஊரே இல்லப்பா யாரு, எங்க இருந்து வந்தான்னே தெரியல. காலைல இரத்தினம் பால் ஊத்தப் போகும்போது  இவனை இங்க பார்த்து இருக்கான். பார்த்ததும் பயந்து  போய்  ஊருக்குள்ள ஓடி வந்து எங்களை எல்லாம்  கூட்டிகிட்டு வந்தான்” என்றார் கூட்டத்தில் இருந்த ஒருவர்.

“பேச்சு குடுத்து பார்த்தீங்களா?”

“பேசுனோம். ஆனா இங்கிலீஷ்ல பதில் சொல்றான். அதான் படிச்ச பயலுகளை கூப்பிட்டு யாருன்னு விசாரிக்க பாக்குறோம்”

இங்கிலீஷ் என்றதும் எனக்கு தூக்கி வாரி போட்டது. “நம்ம ஊரு பையன் இல்லன்னா போலீஸ்ல சொல்லிடலாம். அவங்க வந்து விசாரிக்கட்டும்”

“நம்ம ஊருல கலவரம்  நடந்து அவனவன் வெட்டிகிட்டு செத்தாலே  போலீஸ் ஒரு வாரம் கழிச்சுதான்  வரும். இதுக்கு எப்ப வருவாங்கன்னு யாருக்கு தெரியும்”
அவங்க வந்து விசாரிக்கட்டும். . நாம நம்ம வேலைய பார்க்கலாம்” என்று நடக்க ஆரம்பித்தேன்.

கூட்டத்தில் இருந்த ஒரு வெள்ளை மீசை பெருசு , “என்ன தம்பி? ஊருல எல்லாரும் இவனை பார்த்து பயந்து போய் இருக்காங்க. இவன் யாரு என்னன்னு தெரிஞ்சுக்க வேண்டாமா. விசாரிச்சு சொல்லுங்க” என்றார்.

“ஆமாப்பு. இன்னைக்கு முழுக்க கரண்ட்டு இருக்காதாம். வீட்டுக்கு போனா நாடகம் பாக்காம பொழுது போகாது. கொஞ்சம் இவனை என்னன்னு கேளு” என்றது இன்னொரு கிழவி.

சுற்றி இருந்த வயது பெண்களும் ஆர்வமாக என்னையே பார்க்கவும் தயக்கமாக அந்த பச்சை பையனிடம் சென்றேன். கூர்மையாக என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“வாட் இஸ் யுவர் நேம்?”

“மியா கியா மயா க்கி கூ”

“விச் ப்ளேஸ் யு கம்?”

“கூ க்கி மமூ பஷி”

திரும்பி கூட்டத்தை பார்த்தேன். “என்னய்யா? இங்கிலீஷ்தான் பேசுறானா?” என்றார் ஊர் தலைவர்.

“அப்படிதான் தெரியுது”.

“அப்போ உனக்கும் புரியலையா?” என்று சொல்லிவிட்டு சத்தமாக சிரித்தார். நான் சத்தம் காட்டாமல் கூட்டத்தில் ஒதுங்கினேன்.

“இவன் ஏலியன் மாதிரி இருக்கான் பா” என்றார் கூடத்தில் இருந்த இன்னொரு சிறுவன்.

“எலி எல்லாம் இல்லடா. கை காலு எல்லாம் மனுஷன் மாதிரிதான் இருக்குது”. என்றது ஒரு  கிழவி பதில்  சொல்லியது.

அருகில் இருந்த  ஒரு இளம் பெண் “இவனை நாமளே கொண்டு போய் வளர்த்துக்கலாம் மா. அழகா இருக்கான்” என்றாள் தனது தாயிடம்.

“அவன் கரப்பான்பூச்சி மட்டும் தாண்டி தின்பான்” என்று அவளின் தோழி கூறியதும் உவ்வே என்றாள்.

“இது பேயா,பிசாசான்னு தெரியலையே”, “மஞ்சக் காமாலை மாதிரி பச்சை காமாலைன்னு  சீக்கு வந்து இப்பிடி ஆயிட்டானா”, “அமெரிக்கால பச்சை மனுசங்க இருக்காங்கப்பா. நான் படிச்சு இருக்கேன்” என்று ஆளாளுக்கு பேசிக் கொண்டிருந்தனர்.

“எல்லாரும்  அமைதியா இருங்கப்பா. இவனை என்ன செய்யலாம்னு யோசனை சொல்லுங்க” என்றார் தலைவர்.

அப்போது  ஒரு பெண் கூட்டத்தின் நடுவில் வந்து “தேவனே! தேவனே! கடைசியிலே  எங்க ஊருக்கே வந்துட்டீங்களா” என்று சொல்லிவிட்டு மண்ணில் விழுந்து புரளத் தொடங்கினாள். 

“பிரச்சினை ரொம்ப புதுசா இருக்கே” என்று தலைவர் தனது கன்னத்தை தடவத் தொடங்கினார். கூட்டம் மீண்டும் சலசலக்க தொடங்கியது.

“தலைவரே! ஏதோ ஒரு வண்டி வருது பாருங்க” என்று கூட்டத்தில் ஒருவர் சொன்னதும் எல்லாரும் அந்த திசையை கவனித்தோம்.

“போலீஸ் வண்டி மாதிரி இல்லையேப்பா” என்றார் தலைவர்.

“அதுல  அடுத்த தலைமுறை  டிவினு போட்டு இருக்கு பாருங்க” என்றேன்.

டிவி என்றதும் பையனை மறந்து எங்கள் கவனம் அந்த வண்டியின் மேல் திரும்பியது. “டிவியா?” என்று  உருண்டு கொண்டிருந்த பெண்ணும் எழுந்து கவனித்தாள்.

அந்த வேன் எங்கள் அருகில் வந்ததும் அதில் இருந்து கேமராவுடன் இரண்டு பேர் இறங்கினர். மூன்றாவதாக ஒருவர் குதித்து பின்னால் நடந்து கொண்டே  “மக்களே. இந்த ஊருல ஒரு அமானுஷ்யமான விசயம் நடக்குதுன்னு எங்களுக்கு தகவல் வந்தது. அதை பார்க்க இந்த ஊரு மக்கள் எல்லாம் கூடி இருக்காங்க” என்று சொல்லிவிட்டு  “சொல்லுங்க. இங்க என்ன நடக்குது  என்று கேட்டுவிட்டு கூடத்தில் ஒருவரிடம் மைக்கை நீட்டினார்.

அவர் முகத்தை துடைத்துக் கொண்டு  “இங்க ஒரு சின்ன பையன் வந்து இருக்கான் . யாருன்னு அடையாளம் தெரியல. அவன் பச்சை நிறத்துல...”  என்று ஆரம்பித்து முழு கதையையும் கூறி முடித்தார்.

“நேயர்களே! இப்போ இந்த அதிசய பையனை நாங்களே சென்னைக்கு கொண்டு போய் போலீஸ்ல ஒப்படைக்கப் போறோம்” என்று நடப்பதை யாரும் உணரும் முன்னரே  அவர்கள் அந்த சிறுவனை தூக்கி வேனில் ஏற்றினார்கள். நாங்கள் சிறிது நேரம் நின்று விட்டு கலைந்து சென்றோம்.

ரண்டு நாட்களுக்குப் பின் மீண்டும் ஊரே பரபரப்பாகி ஊர்த் தலைவர் வீட்டில் கூடி பத்து மணிக்காக காத்து இருந்தோம்.

“நம்ம ஊரை பத்தி உலகத்துக்கே தெரியப் போகுது இப்போ. நமக்கு அந்த பையன் யாருன்னு தெரியப் போகுது. எல்லாரும் வெளியூர்ல இருக்குற சொந்தகாரங்களுக்கு சொல்லிட்டீங்கள்ல” என்றார் தலைவர்.

“சொல்லிட்டேன் தலைவரே.” என்று வேகமாக சொன்னார் டிவியில் பேட்டி கொடுத்தவர்.

“தலைவரே!  நம்ம ஊரை காட்டுறாங்க பாருங்க”

எல்லாரும் ஆவலாக பார்த்தோம். எங்கள் ஊர் பெயர்ப் பலகையும் வயலையும் காட்டினார்கள். அனைவரின் முகமும் பல்லாக மாறியது. பின்னர் எங்க ஊருக்கு வந்த நிருபர் டிவியில் தோன்றினார். அவரை பார்த்ததும் சிலர் விசில் அடித்தார்கள்.

“நம்ம ஊரு வேர்ல்ட் பேமஸ் ஆச்சுடா ”  என்றார் தலைவர்.

“இது வரைக்கும் தனி மனிதர்கள் கிட்ட விளையாண்டு முட்டாள் ஆக்கின நம்ம நிகழ்ச்சியில முதல் முறையா ஒரு ஊரையே முட்டாள் ஆக்கி இருக்கோம். அதை நீங்க பார்த்து ரசிக்கப் போறீங்க” என்று அந்த நிருபர் பேசிக் கொண்டிருந்தார்.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...