Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts

Thursday, March 24, 2016

வசிய வாக்கு வங்கி

லக்சன்ல நம்ம கட்சி ஜெயிக்கணும்னா இதை செஞ்சே ஆகணும் தலைவரே. கொள்கை முரண்பாடு பத்தியெல்லாம் இப்போ யோசிக்காதீங்க” சோமுக கட்சித் தலைவரிடம் தனது யோசனையை அவர் மகன்  எடுத்து வைத்தார்.

“பதவி  மட்டுமே நமது ஒரே கொள்கை மகனே. வெற்றி பெற வழி  கூறடா என் கண்மணி. நிச்சயம் உன் யோசனை சிறப்பாகவே இருக்கும் என்பது என் நம்பிக்கை”

“அதுல என்ன சந்தேகம் தலைவரே. இதுவரை இந்த தேர்தலுக்காக நாமளும் பேப்பர் விளம்பரத்துக்கு ஐம்பது கோடி, டிவி விளம்பரத்துக்கு  நூறு கோடின்னு எக்கச்சக்கமா செலவு செஞ்சுட்டோம். இருந்தாலும் எந்த கருத்துகணிப்பும் நமக்கு சாதகமா இல்ல. இந்த முறையும் அசோமுகதான் ஜெயிக்கும் போல தோணுது. இப்போ ஜெயிக்கணும்னா நமக்கு இதுதான் ஒரே வழி”

“பீடிகை போதும் மகனே. யோசனையை கூறு”

“ சொல்றேன் தலைவா. கவனமா கேளுங்க. உலகத்துலேயே  பெரிய ஹிப்னாடிச  நிபுணரை சீனால இருந்துவரவழைச்சு இருக்கேன். சாதாரண ஆளு இல்ல அவரு. டிவி வழியாவே அவரால மனோவசியம் பண்ண முடியும். அவரால”

“மனோவசியத்தை என் பகுத்தறிவு ஏற்று கொள்ள மறுக்கிறது”

“தலைவா, நம்ம பகுத்தறிவை தேவைப்படும்போது மட்டும்   பயன்படுத்திக்கலாம். இப்போ சொல்றதை கேளுங்க.”

“சரி சொல் மகனே”

“நாளையோட நம்ம பிரச்சாரம் முடியுது. நாம என்ன பண்ணப் போறோம்னா சரியா ராத்திரி 9:59க்கு நாம நம்மளோட பத்து சேனல்ல எந்த நிகழ்ச்சி நடத்துனாலும் அதை பாதில நிறுத்திட்டு  நம்ம மனோவசியக்காரரை நேரடி ஒளிபரப்புல பேச விடுறோம்”

“நேரடி ஒளிபரப்பா?”

“ஆமா. நேரடி ஒளிபரப்புலதான் அவரால வசியம் செய்ய முடியும்.”

“அது சரி மகனே. ஏன் கடைசி நிமிசத்துல வசியம் செய்யணும். பேசாமல் ஒருநாள் முன்பேசெய்து விடுவோமே?”

“வசியத்தை எவ்வளவு  தாமதம் செய்யுறோமா அவ்வளவு நல்லது தலைவா. ஏன்னா மக்களை வசியத்தோட பிடியில ஒரு குறிப்பிட்ட நேரம்தான் வைக்க முடியும். அது எவ்வளவு நேரம்ங்குறது வசியம் செய்யப்பட்டவன்களோட மன பலத்தை பொருத்தது”

“புரிகிறது”

“புரிஞ்சதுல. அப்புறம் என்ன? நம்ம சேனலை அந்த நேரத்துல ஒரு கோடி பேரு பாப்பாங்கன்னு டிஆர்பி சொல்லுது தலைவா. நாம அந்த சீனாகாரனுக்கு செலவழிக்கிற நூறு கோடி நமக்கு ஒரு கோடி ஓட்டா திரும்ப வரப்போகுது... வெற்றி நமக்கே

“வெற்றி என்ற  சொல்லை கேட்டவுடன் இதயம்இனிக்கிறது. தந்தையை காத்த தனயன் நீ. அந்த வசியக்காரர் என்ன பேசுவார் மகனே?”'

“சோமுகவுக்கு ஓட்டு போடுங்கன்னு நாம எழுதி குடுத்துட்டா போதும். அதை அப்படியே  படிப்பார் அவர். அப்போ அவர் கண்ணை மட்டும் நாம டிவில காமிச்சாப் போதும்”

“இப்போது எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது கண்ணே. பார்வைக்கு இது சாதாரண பிரசாரம். ஆனால் நமக்கோ வெற்றி கனியை பறித்துக் கொடுக்கும் ராஜ தந்திரம். புலிக்கு பிறந்தது பூனையாகாது என்று நிரூபணம் செய்துவிட்டாயடா"

"வெற்றி நமக்கே தலைவா"

"வெற்றி என்பது மூன்றெழுத்து. கட்சி என்பது மூன்றெழுத்து. ஆனால் வசியம் என்பது மட்டும் நான்கெழுத்து.”

வர்கள் திட்டப்படியே வசிய நிகழ்ச்சி நடந்தது. ஆனால் ஆளுங்கட்சி   அசோமுக ஆட்சியை பிடிக்கிறது. தோல்வியை ஆராயும் கூட்டத்தில் தலைவர் கோபத்தோடு அமர்ந்திருக்கிறார். அவரது மகனும் மற்ற கட்சி முக்கிய உறுப்பினர்களும் தலையை தொங்கப் போட்டு அமர்ந்திருக்கின்றனர். கோபத்தில் தலைவர் செந்தமிழை மறக்கிறார்.

“என்னய்யா இது? எப்பிடி இவ்ளோ மோசமா தோர்த்தோம்? வழக்கமா வர்ற ஓட்டு கூட வரலியே?”

“அதான் தலைவா எங்களுக்கும் புரியல”

“போச்சு இனி அஞ்சு வருஷம் ஒன்னும் செய்ய முடியாது.. எனக்கு அந்த சீனாகாரன் மேலதான் சந்தேகமா இருக்கு. என்னய்யா செஞ்சான் அவன். அந்த வீடியோவை காட்டுங்க” என்று தலைவர் கூறியதும் தனது பையில் இருந்த மொபைலை எடுத்து கட்சியின் சேனாதிபதி அந்த வீடியோவை ஓட வைக்கிறார்.

வீடியோவில் “ஆஆஆஆஆஆஆஆஆ” என்று இழுத்து கொட்டாவி  விட்ட சீனாக்காரர் . சோமுகவுக்கு ஓட்டு போடுங்க” என்றார்

“இன்னொரு முறை போடு”

“ஆஆஆஆஆஆஆஆஆ................. சோமுகவுக்கு ஓட்டு போடுங்க”

“அது என்னய்யா ஆஆஆஆஆஆஆஆஆ”

“அது ஆஆஆஆஆஆஆஆஆ இல்ல தலைவரே . அவர் கொட்டாவி விட்டார்”

“அடப்பாவிகளா. அது கேக்க ஆசோமுகவுக்கு ஓட்டு போடுங்கன்னு சொல்ற மாதிரி இருக்கு”

“அட ஆமாம் தலைவரே”

“ஆமாவா. வசியம் பண்றேன்னு சொந்த செலவிலே சூனியம் வச்சுட்டீங்களேடா. என்ன செஞ்சாலும் நம்மால ஜெயிக்க முடியலையே”


Monday, March 14, 2016

எல்லாரும் கெட்டவரே

“ஐயா. நீங்க பெரியவரு. facebook,whatsappல நெறைய எழுதறீங்க. இந்த முறை தேர்தல்ல எனக்கு  யாருக்கு ஒட்டு போடுறதுன்னு வழி காட்டுங்க ஐயா”

“அது என் கடமை தம்பி”

“இந்த முறை ஆளுங்கட்சிகே ஒட்டு போடலாமா?”

“ஸ்டிக்கர் ஓட்டுறது தவிர. ஒண்ணுமே செய்யல தம்பி அவங்க.  இந்த அஞ்சு வருசத்துல.அடிமை அரசியலை வளர்த்ததுதான் ஒரே சாதனை”

“அப்போ இதுக்கு முன்னாடி ஆண்டவங்களுக்கு?”

“இதுவரைக்கும் கோடிக்கணக்குல கொள்ளை அடிச்சது பத்தாதுன்னு திரும்ப வேற ரெண்டு பெரும் சேர்ந்து கூட்டணி வச்சுகிட்டு  ஒட்டு கேட்டு வராங்க. போன முறை பதவில இருந்தப்போ மக்களை  என்ன பாடுபடுத்தினாங்க இவங்க”

“அப்போ அந்த நடிகருக்கு?”

“அவர் பேசுறது அவருக்கே புரியாது.  கூட்டணிக்கு பேரம் பேசிட்டு எதுவும் சரியா வரலைன்னதும்  தனியா நின்னு கிங் ஆகப் போறதா அவரே சொல்லிக்கிறாரு. போன அஞ்சு வருசத்துல மக்களுக்கு எதாச்சும் பண்ணனும்னு முயற்சியாவது செஞ்சாரா?”

“அப்போ அந்த நாலு பேருக்கு?”

“நாலு பேரு மக்களுக்கு நல்லது பண்ணப் சேர்ந்துட்டாங்கலாம். இவங்க அவங்களோட பி டீம்யா. அதுல  எம்பியா இருந்தவரு அவர் தொகுதிக்கு என்ன நல்லது செஞ்சாரு முதல்ல?”

“அப்போ பெரிய படிப்பு படிச்சவருக்கு?”

“இத்தனை வருசமா ஜாதி அரசியல் பண்ணிட்டு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டு வரப் போறாங்களாம்.”

“அப்போ சென்ட்ரல் ஆளுங்களுக்கு”

“மதத்தை வச்சு அரசியல் பண்ற ஆளுங்க அவங்க. நாட்டை சுடுகாடா மாத்திடுவானுங்க”

“அப்படின்னா மிச்சம் இருக்குறவரு  செந்தமிழர்தான். கட்டாயம் அவரு நல்லவராதான் இருக்கணும்”

“இலங்கைத் தமிழரை காப்பாத்தப் போறேன்னு அரசியலுக்கு வந்துட்டு . இப்போ தமிழ்நாட்டை தமிழன்தான் ஆளணும்னு அரசியல் பண்றாரு. அவரை நம்பாதே தம்பி  ”

“ஐயா!. அப்போ இங்க யாருமே நல்லவங்க இல்லையா ஐயா. இந்த அரசியலை நினைச்சு  எனக்கு  மனசு நொந்து போச்சு. பக்கத்தில ஒரு ஆன்மீக குரு யோகா கிளாஸ் நடத்துறாரு. அங்க போய் சேர்ந்து சாமியாரா ஆயிடுறேன்”

“ஐயோ அவரா?. யானை தண்ணி குடிக்கப் போற பாதையெல்லாம் வளைச்சு போட்டுகிட்டாறு . அவர் மேல நெறைய கம்ப்லைண்ட்ஸ் இருக்கு தம்பி. அவர் கிட்ட எல்லாம் போகாத தம்பி.”

“யோவ்வ்வ்வ்வ்”  

  

Sunday, January 24, 2016

தமிழ்நாடே ஜென்தான் – ஒரு அரசியல் ஜென் கதை

பான்பாக் என்ற ஜென் துறவி மக்களுக்கு போதனை செய்து கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்து கிஷிடோமோ என்ற  ஒருவர் எழுந்து “குருவே! உங்களை விட முற்றிய ஜென் நிலையை அடைந்த மக்கள் யாரேனும் இருக்கிறார்களா? அப்படி யாரேனும் இருந்தால் அவர்களை நான் பார்க்க முடியுமா” என்றார்.

அவரை பார்த்து புன்னகை செய்த ஜென் குரு “என்னை விட முற்றிய ஜென் துறவிகள் ஏழு கோடி பேர் இருக்கிறார்கள்.  அவர்களை பார்க்க வேண்டுமென்றால் நீ தமிழ்நாடு என்ற பகுதிக்கு செல்ல வேண்டும்” என்றார்

கிஷிடோமோ ஆச்சரியமடைந்தார். “அத்தனை கோடி ஜென் துறவிகள் ஒரே இடத்திலா? அவர்கள் எனக்கு போதனை அளிப்பார்களா?” 

”அவர்கள் போதனை அளிக்க மாட்டார்கள். நீ அவர்களுடன் இணைந்து இருபத்தி ஐந்து ஆண்டுகள் வாழ்ந்தால் நீ அவர்களை உணர்ந்து கொள்ளலாம்”  என்றார் துறவி.

கிஷிடோமோ  உடனே தாம் அவர்களுடன் வாழ்ந்து அவர்களை உணர்ந்து  வருவதாக கூறி தமிழ்நாடுக்கு வந்தார்.  

இருபத்தி ஐந்து ஆண்டுகள் கழிந்தன. ஜென் துறவியை பார்க்க மீண்டும் சொந்த ஊருக்கே வந்தார் கிஷிடோமோ. அவரை அடையாளம் கண்ட துறவி “நீங்கள் தேடியதை அறிந்து கொண்டீர்களா?” என்று கேட்டார்.

“அறிந்து கொண்டேன் குருவே. மிகப் பெரிய துறவிகள் அவர்கள். ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் என்று ஒன்று அரசியல் நடத்தி  அரசு நடத்த  ஒரு கட்சியை  தேர்ந்தெடுக்கிறார்கள்.  அடுத்த தேர்தலில் மற்றொரு  கட்சியை தேர்ந்தெடுக்கிறார்கள். ஆளும் காலத்தில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் என்ன தவறு செய்தாலும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றினாலும்   அவர்கள் அதைப் பெரிதாக எடுத்துக்கொண்டு அவர்களைப் புறக்கணிப்பதில்லை. அவர்களின் மேல் கோபம் எதுவும் கொள்ளாமல் அவர்களை மன்னித்து விடுகிறார்கள். இருபத்தி ஐந்து ஆண்டுகளாக அவர்களை மாறி மாறி தேர்ந்தெடுக்கும் சம நிலையையும் அவர்கள்  தவற விட்டதும்  இல்லை. மிகப் பக்குவம் அடைந்த நியாயஸ்தர்கள் அவர்கள்” என்றார்  கிஷிடோமோ.

"நீயும் பக்குவம் அடைந்து விட்டாய்" என்றார் குரு.

அவர்கள்  தேநீர் பருகினார்கள்.


Friday, January 1, 2016

இட்லி, தோசை, சட்னி - மறைக்கப்பட்ட வரலாறு

ட்லி, தோசை, சட்னி. நம் வாழ்வில் தவிர்க்க முடியாத உணவுப்பொருட்கள். தினம் தினம் இவற்றை உண்டு பசியாறும் நாம் என்றாவது ஒரு நாள் இவற்றின் வரலாறை பற்றி சிந்தித்திருப்போமா? இந்த உணவுப்பொருட்களின் உருவாக்கமும் ஒட்டு மொத்த பாரத ஒற்றுமையும் பின்னிப் பிணைந்து இருப்பதை   நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். இந்த உணவுப் பொருட்களை கண்டறிந்த அந்த மாமன்னரின் புதைந்து  போன சரித்திரத்தை  தோண்டி எடுத்து உங்களின் பார்வைக்கு அளிப்பதில் பெருமை கொள்கிறேன்.

முன்னொரு காலத்திலே தமிழ்நாட்டில் பெயர் தெரியாத மன்னர் ஒருவர் வாழ்ந்து வந்தார். தினமும் தானியங்களை வேக வைத்து சாப்பிடுவது அவருக்கு சலிப்புத் தட்டியது. எனவே பண்டைய பாரத தேசத்தின் சிறந்த அறிவியல் அறிஞர்கள் அனைவரையும் தனது நாட்டிற்கு வரவழைத்து “அறிஞர்களே! ஒரே மாதிரியான சாப்பாட்டை சாப்பிட்டு எனக்கு அலுத்து விட்டது. நீங்கள் ஒரு மாதம் நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். தேவையான  ஆராய்ச்சி செய்து  புதுமையான உணவுப்பொருட்களை உருவாக்குங்கள்” என்றார். மன்னர் சொல்லிவிட்டாரே என்று வேறு வழி இல்லாமல் அறிவியல் அறிஞர்களும் சம்மதித்தனர்.

நாட்கள் கடந்தது. கன்னட தேசத்தில் இருந்து வந்த அறிஞர் அரிசியை மாவாக ஆட்டி வைத்து விட்டு பின்னர் அதை என்ன செய்வது என்று செய்வது என்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தார். ஒரு நாள் குளிக்க வெந்நீர் தயார் செய்யும்போது அவரின் மூலையில் ஒரு மின்னல் வெட்டி மாவை நீராவியில் வேக வைத்து மன்னனுக்கு அளித்தார். அதை உண்ட மன்னனும் திருப்தி அடைந்து இந்த உணவை எதில் செய்தார் எனக் கேட்டார். கன்னடத்துக்காரர் தனது மொழியில் “ஹிட்டுலி” (மாவில்) என்றார். அதை சரியாக கேட்காத  மன்னர், “இட்டிலி! இட்டிலி! அருமை அறிஞரே” என்று அவரை பாராட்டி உலகின் முதல் இட்டிலியை தாம் சாப்பிட்டதாக  தனது  குடிமக்களுக்கு அறிவிக்க உத்தரவிட்டார்.

வெறும் இட்டிலியை சாப்பிட்டுக் கொண்டிருந்த  மன்னருக்கு ஏதோ ஒன்று குறைவதாக தோன்றியது. தேங்காயை அரைத்து வைத்து தொட்டுக் கொண்டால் சுவையாக இருக்கும் என எண்ணினார். தனது பணியாளை அழைத்து தேங்காயை உடனே அரைத்து கொண்டு வர  ஆணையிட்டார். ஆனால் பணியால் மரத்தின் மேல் ஏறி தேங்காயை பறித்து அரைத்து கொண்டு வர நேரம் ஆகிவிட்டது. கோவம் அடைந்த மன்னர் பணியாளிடம்,”சட்டுன்னு அரைக்க மாட்டாயா?” என்று கோபத்துடன் கேட்டார். பயத்தில் பணியாள் வாய் குளறி “சட்டினி தான் மன்னா” என்றான். “குடு அந்த சட்டினியை” என்று மன்னர் அதை வாங்கி உண்டு அந்த சுவையில் மயங்கினார்.

இட்லி, சட்டினியை மட்டும் நான்கு  நாட்கள் சாப்பிட்ட மன்னருக்கு அப்போதுதான் வரவழைத்து இருந்த வட இந்திய அறிஞர்  நினைவுக்கு வந்தார். இத்தனை நாட்கள் ஆகியும் அவர் எதுவும் கண்டு பிடிக்காமல் போனதால் ஆத்திரம் அடைந்த அவர் வேகமாக அந்த வட இந்திய சமையல்காரரை வரவழைத்து அன்றைய  இரவுக்குள்  புதிய உணவு வரவில்லை என்றால் தலை துண்டாகி விடும் என்று எச்சரித்தார். பயந்தபோன  வட இந்திய அறிஞர் வேகமாக தனது ஆராய்ச்சி நிலையம் வந்தார். அங்கே கன்னடக்காரர் இட்லிக்கு அரைத்து வைத்து இருந்த மாவு   புளித்துப் போய் இருந்தது. ஆத்திரத்தில் அந்த மாவைத் தூக்கி வெளியே கொட்டி விட்டு அமர்ந்து அழத் தொடங்கினார். இறுதியில் மன்னரிடம் மன்னிப்பு கேட்டு அழலாம் என்று வெளியே வந்தபோது தான் வெளியே கொட்டிய மாவு வெயிலில் காய்ந்த கருங்கல்லில் விழுந்து வடிவம் மாறியிருப்பதை கவனித்தார். அதை சுவைத்து பார்த்தவர் அதே போல் நிறைய செய்து மன்னரை காண சென்றார்.அந்த பண்டத்தை எடுத்து சுவைத்த மன்னர் உற்சாகம் அடைந்து அந்த பண்டத்தை மன்னருக்கு சென்று தந்தார். அதன் சுவையில் மெய் மறந்த மன்னர் இன்னும் சாப்பிட நினைத்து  “ரெண்டு வேண்டும்” என்றார். வட இந்தியருக்கு அவர் சொல்வது புரியாமல் “ரெண்டு? கியா ரெண்டு” என்றார். எரிச்சல் அடைந்த மன்னர் தனக்கு தெரிந்த ஹிந்தியில் “அதாண்டா தோ. சை இவனை வச்சுகிட்டு” என்றார். அதை “தோசை”  என்று புரிந்து கொண்ட ஹிந்திகாரர் உணர்ச்சிப்பெருக்கில் “தோசை! தோசை!” என்று வாய்விட்டு கத்தினார். மன்னரும் மகிழ்ச்சி அடைந்து வட இந்தியருக்கு மூடை மூடையாக  தங்க காசுகள் வழங்கினார்.

அதற்கு மறுநாள்  அந்த நாட்டின் குடிமகன் ஒருவர் மன்னரை சந்தித்து விழுந்து வணங்கி தான் கையில் வைத்து இருந்த பொருளை சாப்பிட குடுத்தார்.  அரசர் அதை தனது  அரசவைக்கு வந்து இருந்த வெளிநாட்டு பயணி ஒருவருக்கு குடுக்க அதை உண்ட வெளிநாட்டுக்காரர்  “it is stinking” என்றார். அதிர்ச்சியடைந்த மன்னர் “என்னய்யா இது மோசமான வாடை?” என்று குடிமகனிடம் வினவினார். “மன்னா! அது கேட்டு போச்சு. அவரை இதை சாப்பிட சொல்லுங்க” என்று வேறு ஒன்றை எடுத்துக் கொடுத்தார். அதன் சாப்பிட்ட வெளிநாட்டுக்காரர் “வாடை is awsome” என்று சொல்ல வடை அவதாரம் எடுத்தது.

அதன் பின் அந்த மன்னர் அரசாட்சியை துறந்து தான்  கண்டறிந்த உணவுப் பொருட்களை தமிழகம் முழுவதும் பரப்பினார். இவ்வாறாக இன்று நாம் சாப்பிடும்  இட்லி,சட்னி,தோசை,வடை வேறு வேறு மொழிகள் மூலம் பெயர் பெற்றது. இப்படி அந்த அந்த உணவுப்பொருட்களை பரப்பிய மன்னரின் நினைவு நாள் இன்று. இன்றைய தேதியில் மட்டும் அல்ல. இட்லி, வடை, தோசை உண்ணும்போதெல்லாம்  அந்த மன்னரை   நினைவு கொள்ள வேண்டியது நம் கடமை.

முழுக்க முழுக்க பொழுதுபோக்குக்காக எழுதப்பட்டது. படிப்பவர்கள்  யாரேனும்   இதை நம்பித் தொலைத்தால் வத்திகுச்சி வலைப்பூ பொறுப்பேற்காது

Tuesday, October 6, 2015

தமிழ் ஃபேண்டசி சினிமா

ஃபேண்டசி என்ற வார்த்தை சில நாட்களாக அடிக்கடி கண்ணில்படுகிறது. ஃபேண்டசி என்றால்  நடக்க முடியாத, நடக்கவே வாய்ப்பில்லாத  கற்பனை என்று ஆராய்ந்து அறிந்து கொண்டேன்.  அந்த வகையில் ஊழல்  இல்லாத அரசியல் என்பது ஃபேண்டசிக்கு ஒரு சிறந்த  உதாரணம்.

‘புலி’ படம் தமிழில் அபூர்வமாக  வந்திருக்கும் ஃபேண்டசி படம் என்று கூறுகிறார்கள். எனக்கு என்னவோ தமிழில் ஃபேண்டசி படங்களுக்கு பஞ்சமே இல்லை என்றே தோன்றுகிறது. உதாரணத்துக்கு ‘சுள்ளான்’ படத்தை எடுத்துக் கொள்வோம். தனுஷ் படம் முழுக்க புவி  ஈர்ப்பு விசைக்கு சவால் விட்டு படம் முழுக்க பறந்து பறந்து வில்லனின் ஆட்களை தாக்குவார். ‘குருவி’ விஜயோ நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதலில் கற்பனைக்கும் எட்டாத பல சாதனைகளை புரிந்து இருப்பார். இப்படி நிஜ வாழ்வில்  நடக்க வாய்ப்பே இல்லாத  காட்சிகள் பல நிரம்பிய குருவியும், சுள்ளானும் ஏன் ஃபேண்டசிக்குள் வராது என்று நான் கேட்கிறேன். கேப்டனின் ‘நரசிம்மா’வையும் மறந்து விடக் கூடாது. இதே போல சூப்பர் ஸ்டாரில் தொடங்கி சுப்ரீம் ஸ்டார், அல்டிமேட் ஸ்டார்   எல்லா மாஸ் ஹீரோக்களும் பல ஃபேண்டசி படங்களில் நடித்தவர்களே.

தமிழில் ‘எந்திரன்’ வந்ததே. அது முழுக்க அறிவியல் புனைவு படம்தானே என்று நினைத்து  imdb வலைத்தளத்தை ஆராய்ந்து கொண்டிருந்தேன். இந்தியர் அல்லாத வெளிநாட்டவர் பலரும் படம் பற்றிய தங்கள் கருத்துகளை பதிவு செய்திருந்தனர். அதில் பெரும்பான்மையோருக்கு எழுதி இருந்த சந்தேகம் “அது எப்படி இந்தியாவில் பேசிக் கொண்டிருந்த  வசீகரனும் சனாவும் திடீரென  மச்சுபிச்சுக்கு சென்று பாடி ஆடிவிட்டு வருகிறார்கள்?” என்பது . அவர்களை பொறுத்தவரையில் நமது  டூயட் பாடல்கள் அனைத்தும் அவர்களால் ஏற்று கொள்ள முடியாத, நடக்க துளியும்  வாய்ப்பே இல்லாத கற்பனை. ஆக அவர்களை பொறுத்தவரையில்  டூயட் காட்சிகள் அனைத்தும் ஃபேண்டசி காட்சிகள்தான்.

இப்படி தமிழ் சினிமாவில்  ஃபேண்டசி கொட்டி கிடக்க ‘புலி’ படத்தை மட்டும் ஃபேண்டசி என்று சொல்வது தமிழ் திரையுலகத்துக்கு நாம் இழைக்கும் அநீதியாகவேபடுகிறது.

குறிப்பு: ஒரு வேளை தமிழ் ஃபேண்டசி படங்கள் பார்த்து உங்களுக்கு சலித்து போய் இருந்தால் Pan’s Labyrinth என்கிற ஸ்பானிஷ்  படத்தை பாருங்கள்.


Sunday, May 3, 2015

ஓகே கண்மணி – இயக்குனர்கள் மாறினால்

லிவிங் டுகெதர் என்ற ஒற்றை வரியை எடுத்து கொண்டு படம் காட்டி விட்டார் மணிரத்னம். மணிரத்னம் காதல் படம் எடுக்கிறார் என்று தெரிந்ததும் இளம் பெண்களும் தியேட்டர் நோக்கி படை எடுத்து    படத்தை வெற்றி பெற செய்து விட்டனர். எளிமையான ஒரு வரி கதையை மணிரத்னம் அவர் பாணியில் டெவலப் செய்து  படமாக்கி விட்டார். இதே ஒன் லைன் மற்ற இயக்குனர்கள் கையில் கிடைத்து இருந்தால் என்ன செய்து இருப்பார்கள் என்று யோசித்ததன் விளைவு கீழே.

பாலாவின் கதை:

உதவி இயக்குனர்: சார் நாம லிவிங் டுகெதர், அதாவது கல்யாணம் செய்யாம சேர்ந்து வாழறதை பத்தி படம் எடுக்குறோம் சார்.

பாலா: கல்யாணம் செய்யாம சேர்ந்து வாழணுமா? நல்ல ஒன் லைன். சரி நான் டெவலப்  பண்றேன். எழுதி வச்சுக்கோங்க. கதாநாயகன் போடி மலை மேல  கஞ்சா தோட்டத்துல வேலை பாக்குறான்.  கதாநாயகி போடி டவுன்ல பிச்சை எதுக்குறா

உ.இ: சூப்பர் சார்.

பாலா: கதாநாயகனை ஒரு நாள்  போலீஸ் பிடிச்சுகிட்டு போயிடுது. ஸ்டேஷன்ல வச்சு அடிச்சு தெருல தூக்கி போடுறாங்க. மயக்கத்துல இருக்குற அவரை தெரு நாய்ங்க எல்லாம் சேர்ந்து  அவரை கடிக்க வருதுங்க. அங்க பிச்சை எடுத்துகிட்டு இருக்குற நாயகி அவரை காப்பாத்தி அவளோட வீட்டுக்கு கொண்டு போறா. நாயகனுக்கு மயக்கம் தெளிஞ்சதும் கதாநாயகி மங்கலா தெரியுறா. ராஜா சார் பாட்டு வைக்கிறோம் இந்த இடத்துல

உ.இ: பின்னுறீங்க சார். இந்த இடத்துலேயே ரசிகர்கள் எல்லாம் கரைஞ்சு போய்டுவாங்க

பாலா:கதாநாயகிக்கு கல்யாணத்துல எல்லாம் நம்பிக்கை இல்லை அப்படிங்குறா. இந்த இடத்துல ஒரு பிளாஷ்பேக் போடுறோம். அவளோட சின்ன வயசுல கதாநாயகி  அப்பா அம்மாவுக்கு சண்டை வந்து  ரெண்டு பெரும் மாத்தி மாத்தி தலைல கல்லை தூக்கி போட்டு செத்து போய்டுறாங்க. இவ பிச்சைக்காரி  ஆயிடுறா. கதாநாயகனுக்கு கல்யாணம் அப்படின்னா என்னன்னே தெரியாது. ஏன்னா அவன் கஞ்சா தோட்டத்துலயே வளர்ந்தவன் சின்ன வயசுல இருந்து. அதனால கல்யாணம் பண்ணாம வாழறாங்க ரெண்டு பேரும்

உ.இ: இனிமே அவங்க எப்படி கல்யாணம் செஞ்சுக்க போறாங்கனு கதையை கொண்டு போய்டலாமா  சார்.

பாலா: என்ன பேசுற. அப்படி எல்லாம் படம் எடுத்தா படம் எப்படி ஓடும்.

உ.இ: கோவிச்சுக்காதீங்க சார்.  நீங்களே சொல்லுங்க.

பாலா: இப்போ இவங்க சேர்ந்து இருக்கிறது பிடிக்காம  பிச்சைக்கார கூட்ட தலைவனும், கஞ்சா கூட்ட தலைவனும் இவங்களுக்கு பல வகைல தொல்லை தராங்க. ஒரு நாள் கதாநாயகியை அடிச்சு அவளை மயக்கம் போட வச்சுடுறாங்க. கதாநாயகன் கோபத்துல ரெண்டு வில்லன்களையும் கொன்னு போட்டுடுறான்

உ.இ: இப்போ ரெண்டு பெரும் சேர்ந்து சந்தோசமா வாழறாங்களா?

பாலா: அதான் இல்லை. மயக்கம் போட்ட கதாநாயகி மயக்கம் தெளிஞ்சு அவளை கொன்னுட சொல்றா.

உ.இ: எதுக்கு சார்?

பாலா: இப்படி எல்லாம் கேக்க கூடாது. சொல்றா அவ்வளவுதான். உடனே கதாநாயகனும் அவ குரல்வலையை கடிச்சு துப்பிடுறான். ராஜா சார் பேக் ரவுண்டுல பாட்டு பாட படம் முடியுது.  

உ.இ: படம் ஹிட்டு சார். இந்த போட்டோ பாருங்க. இவர்தான் துல்கர் சல்மான். இவரை இந்த படத்துல நடிக்க வைப்போமா சார்.

பாலா: நிச்சயமா. அவர் கிட்ட சொல்லிடு. இன்னைல இருந்து படம் முடியுற வரை குளிக்க கூடாது. பல்லு விலக்க கூடாது. ரொம்ப சிவப்பா இருக்காரு ஆளு. கொஞ்சம் கரிய வாங்கி மேல பூசிக்க சொல்லு. மொட்டை அடிச்சு விட்டுடு. கதாநாயகி யாரு போடலாம்.

உ.இ: போட்டோ பாருங்க சார். இவங்க நித்யா மேனன்.

பாலா: என்ன இந்த அம்மா குண்டா இருக்கு. படம் முடியிற வரைக்கும்  அவங்க தண்ணி மட்டும்தான் குடிக்கணும். சொல்லிடு

உ.இ: நிச்சயம் சார்!

கெளதம் மேனன் ஸ்டைல்:

கெளதம்: ஆக்சுவல்லி திஸ் இஸ் பெண்டாஸ்டிக் லைன். கதை சொல்றேன் கேட்டுகோங்க. ஹீரோ ஒரு போலீஸ் ஆபீஸர். அவர் ஒரு பொண்ணோட லிவிங் டுகெதர்ல இருக்கார். ரௌடிஸ் அந்த  பொண்ணை  கொன்னுடுறாங்க. ஹீரோவுக்கு கால்ல அடி. ஹீரோயின் ITல வொர்க் பண்ற முப்பது வயசு லேடி. அவரோட லிவிங் டுகெதர்ல இருக்குற  பையன்  ரௌடிசுக்கும் போலீசுக்கும் நடக்குற சண்டைல நடுவுல சிக்கி கொல்லப்படுறார். அந்த நேரத்துல ஹீரோயின் கர்ப்பமா வேற இருக்காங்க. அடிபட்ட ஹீரோவும், கர்ப்பிணி ஹீரோயினும் ஹாஸ்பிடல்ல மீட் பண்றாங்க. ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியா இருக்க கல்யாணம் செஞ்சுக்காமலே கணவன் மனைவியா  சேர்ந்து வாழறாங்க.

உ.இ: (கண்ணை கட்டுதே) சூப்பர் சார். தமிழ் சினிமாவுக்கே புதுசு இது.

கெளதம்: இப்போ என்ன ஆகுதுன்னா அவங்க சேர்ந்து வாழ்ந்து நெறைய இங்கிலீஷ்  வசனம் பேசி கடைசில  கல்யாணம் செஞ்சுக்க  முடிவு பண்றாங்க.  அப்போ பார்த்து ரௌடிஸ் திரும்ப வந்து அந்த பொண்ணை கடத்திட்டு போய் ECR ரோட்ல ஒளிச்சு வச்சுடுறாங்க.

உ.இ: அதுக்கு மேல என்ன சார். ஒரு சண்டை. ஹீரோ அந்த பொண்ணை தேடி கண்டு பிடிச்சுடுறார். ஆனா உயிரோடவா? இல்ல உயிர் இல்லாமலா?

கெளதம்: ரெண்டு கிளைமாக்ஸ் வச்சுடுறோம். ஒன்னுல அந்த பொண்ணு உயிரோட வருது. இன்னொன்னுல  செத்து போயிடுது.


உ.இ: நல்ல கதை சார். பேர் என்ன சார்?

கெளதம்: கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா

பதிவு முழுக்க முழுக்க முழுக்க கற்பனையே. யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டதல்ல. எதிர்ப்பு வரும் பட்சத்தில் உடனே நீக்கப்படும்.

Saturday, April 18, 2015

சுஹாஷினி மேடம் அவர்களுக்கு

சுஹாஷினி மேடம் அவர்களுக்கு,

சில நாட்களாக எனக்கு ஒரு சிறிய சிக்கல். அதை தீர்த்து வைக்க உங்களால் மட்டுமே முடியும். உங்களிடம் இதை உங்களிடம் ஏன் கேட்கிறேன் என்று நினைக்க வேண்டாம். இந்த சிக்கல் தோன்றியதே உங்களால்தான். எனவே இதை தீர்த்து வைக்கவும் உங்களால் மட்டும்தான் முடியும்.

நான்கு நாட்களுக்கு முன்னர் எனது வீட்டுக்கு ஒருவர் வந்தார். அவர் யாரென்று கேட்டேன். அவர் ஒரு தகுதியான பத்திரிக்கை விமர்சகராம். நீங்கள் ஒரு நாள் தகுதியான பத்திரிக்கையாளர்கள் தவிர மற்ற யாரும் சினிமா பற்றி எழுதக்கூடாது என்று சொன்னதை கேட்டு என்னை எழுத விடாமல் தடுக்க வந்திருக்கிறாராம்.

ஏதோ நகைச்சுவைதான் செய்கிறார் என்று நினைத்தேன். ஆனால் அவர் ஒவ்வொரு முறையும் நான் கணிப்பொறியில் தட்டச்சு செய்ய முயலும்போதெல்லாம் ஓடி வந்து ஏன் கையை பிடித்து கொள்கிறார். “ஐயா! நான் விமர்சனம் என்று எல்லாம் ஏதும் எழுதுவதில்லை. இப்போது கூட மொக்கை கதை ஒன்று எழுதத்தான் போகிறேன்” என்றாலும் அவர் கேட்க மாட்டேன் என்கிறார். சுஹாசினி மேடம் சொல்லியதை நான் செய்கிறேன் என்று கையை இன்னும் கெட்டியாக பிடித்துக் கொள்கிறார்.

“என்ன சார் இது அநியாயம். நம் மக்கள் நினைவு தெரிந்த நாளில் இருந்தே சினிமாவை பார்த்தே வளர்ந்து வந்த மக்கள். அவர்களை சினிமா பற்றி எழுதாதே என்றால் வேறு எதை பற்றி எழுதுவது. ஒரு சினிமா பார்த்தால் அவர்கள் பார்வையில் அது எப்படி இருக்கிறது  என்று எழுதி வைக்கிறார்கள். அதையும் கூடாது என்றால் அவர்கள் வேறு எதை பற்றிதான் எழுதுவார்கள்? அப்படி எழுதுவதில் என்ன தவறு இருக்கிறது?” என்றேன்.

அவர் பதிலுக்கு “அதெல்லாம் பேசாதே! சுஹாசினி மேடம் எழுத விடக்கூடாது என்று கூறி விட்டார்கள்” என்று கையை விடாமலே பதில் சொல்கிறார்.

“எனக்கு புரிந்து விட்டது. வசூல் பாதிக்கக்கூடும் என்று அஞ்சுகிறீர்கள். இணையத்தில் பத்து பேர் படம் அருமை என்று எழுதினால் பத்து பேர் படம் மொக்கை என்று எழுதுகிறார்கள். அதை படித்தவர்களுக்கு படத்தை பற்றி எந்த ஒரு தெளிவான அபிப்பிராயமும் வந்து விடப் போவதில்லை. படம் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் எப்படியும் பார்க்கத்தான் போகிறார்கள். ஒரு வேளை எல்லாரும் படம் மொக்கை என்று எழுதிவிட்டால் அது படம் எடுத்தவரின் தவறு ஐயா” என்றேன்.

அவர் “தேவையில்லாமல் பேசாதே! மேடம் சரியாகத்தான் சொல்லுவார்” என்றார்.

“மௌசை பிடிக்கத் தெரிந்தவர்கள் எல்லாம் இனிமேல் விமர்சனம் என்று எதுவும் எழுத மாட்டார்கள்  என்றே வைத்து கொள்வோம். ஆனால் படம் பார்த்து கொண்டிருக்கும்போதே வாட்ஸ்அப்பில் படத்தை பற்றி ஊரெல்லாம் சொல்லி விடுகிறார்களே. அவர்களை எப்படி தடுப்பீர்கள்?” என்றேன்.

“அதெல்லாம் எனக்கு தெரியாது. மேடம் உங்களை எழுத விடக்கூடாது என்று சொல்லிவிட்டார்”.

“இனிமேல் விமர்சிப்பவர்கள் தங்கள் தகுதியை வளர்த்து கொள்கிறேன் . சினிமா நுணுக்கங்களை கரைத்து குடிக்கிறோம். பத்து பேரிடம் படத்தை பற்றிய கருத்தை கேட்டு விட்டு  விமர்சனம் செய்கிறேன் . சரிதானே?” என்றேன்.

“இதையெல்லாம் செய்து விட்டால் நீ தமிழ் படம் பார்ப்பதையே நிறுத்தி விடுவாய். ஆனால் அதுவரை உன்னை  எழுத விட மாட்டேன்” என்றார். இவரை எப்படி சமாதானப்படுத்துவது என்றே தெரியவில்லை. நீங்கள் ஒரு வார்த்தை சொன்னால் இவர் கையை விட்டு விடுவார் என்று தோன்றுகிறது. தயவு செய்து உதவி செய்யவும்.

பின்குறிப்பு: இப்போது மட்டும் எப்படி எழுதுகிறேன் என்று கேட்காதீர்கள். அவரிடம் படம் மட்டும் பார்த்துக் கொள்கிறேன் என்று அனுமதி வாங்கி கணிப்பொறியில் “ராவணன்” படம் போட்டு விட்டுவிட்டேன். பார்த்துக்கொண்டே தூங்கி விட்டார். அந்த இடைவெளியில் இதை எழுதி விட்டேன்
  

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...