Monday, May 16, 2016

அப்சரஸ் வந்திருந்தாள்

னது புத்தம் புதிய வீட்டின் சமையல் அறைக்குள்  அந்த தவளையைப் பார்த்ததும் ராஜுவுக்கு அறுவறுப்பாக இருந்தது. வந்த அந்த தவளை அவனை சற்று அலட்சியமாக பார்த்து விட்டு தனது வழியில் தத்தி தத்தி செல்ல ஆரம்பித்தது. அந்த தவளை பாத்திரங்களின் உள்ளே சென்று ஒளிந்து கொள்ளும் வாய்ப்பு இருந்ததை உணர்ந்த ராஜு வேகமாக அந்த தவளையை தவளையை மிதித்து பலமாக நசுக்கத் தொடங்கினான். சில வினாடிகளுக்கு பின் தவளை இறந்திருக்கும் என்று திருப்தி அடைந்து காலை நகர்த்தியதும்தான் தவளையின் உடலில் இருந்து புகை வருவதை உணர்ந்தான். அவன் என்ன நடக்கிறது என்று யோசிப்பதற்குள் புகை சமையல் அறை முழுவதும் பரவியது. புகைக்கு அவனுக்கு  மூச்சு முட்டியது..

அப்போதுதான் அதை கவனித்தான்.புகையின் மத்தியிலிருந்து ஒரு பெண் வெளிப்பட ஆரம்பித்தாள். ராஜு கண்களை கசக்கிவிட்டு கவனிக்கத் தொடங்கினான். சந்தேகமே இல்லை. உண்மையிலேயே அவள் பெண்தான். அந்த பெண் அப்படி ஒரு அழகு.ஹன்ஷிகா, தமன்னா எல்லாம் பிச்சை வாங்க வேண்டும். புராணப் படங்களில் வருவது போல உடை அணிந்திருந்தாள். உடலில் ஒரு இடம் விடாமல் நகை அணிந்திருந்தாள். அதிகம் ஜொலிப்பது தங்கமா இல்லை அவளின் முகமா என்று பட்டிமன்றமே நடத்ததலாம். நடப்பது கனவா இல்லை நனவா என்று நம்ப முடியாமல் ராஜு எக்கச்சக்கமாக பயந்திருந்தான். அந்த பெண், ஒரு பேய்தான் என்று முடிவு எடுத்து விட்டான். வெளியே ஓடலாம் என்றால் அந்த பெண் கட்சிதமாக வழியை மறைத்துக்கொண்டு நின்றிருந்தாள்.

ராஜுவுக்கு வேர்த்துக் கொட்டியது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “யாரு நீ?” என்றான்.

அந்த பெண் புன்னகை செய்தாள். “முதலில் உங்களுக்கு மிகுந்த நன்றிகள். பயப்படாதீர்கள் அன்பரே. நான்தான் அப்சரஸ்..”

“அப்சரஸ்னா ஒருவகை பேய்தான?”

“இல்லை இல்லை. நான் தேவலோக மங்கை.”

“நம்புற மாதிரியே இல்லையே?”

“நம்புங்கள் அன்பரே . தவளை பெண்ணாக மாறியதை பார்த்தீர்களா இல்லையா?”

“பார்த்தேன்”

“பின் என்ன சந்தேகம்?”

“சரி. நீங்க ஏன் பூமிக்கு  வந்தீங்க? அதுவும் என் வீட்டுக்கு?”

“ஒரு  லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஒரு ரிஷியை நான் அவமதித்தேன். அந்த ரிஷி எனக்கு இரண்டு சாபங்களை குடுத்தார். அதில் முதல் சாபம் நான் பூமியில் தவளையாக பிறக்க வேண்டும். அதன் பின் மானுடன் ஒருவன் என்னை தனது காலால் நசுக்கி சாப விமோட்சனம் அளிப்பான் என்பது. நான் அந்த ஒரு மானிடனுக்காக . ஒரு லட்சம் ஆண்டுகள் காத்திருந்து இதோ உங்களை கண்டடைந்து விட்டேன்”

ராஜுவுக்கு சந்தேகமாக இருந்தது. ஆனால் அவள் கூறுவதை நம்புவதுதான் அவனுக்கிருந்த ஒரே வழி. பின்னே பூட்டிய வீட்டுக்குள் தவளை பெண்ணாக மாறுகிறது என்றால் இப்படி ஒரு விளக்கம் இருந்தால்தான் உண்டு.

“சரி அப்சரஸ். இப்ப  நீங்க  உங்க லோகத்துக்கு போகலாம்தானே?”

“அது முடியாது அன்பரே. இன்னொரு சாபம் இன்னும் என் மேல் இருக்கிறது அதுவும் தீர்ந்தால்தான் நான் தேவலோகம் செல்ல முடியும்.”

இத்தனை வருஷம் அப்புறம் அந்த சாபம் எல்லாம் காலாவதி ஆகி இருக்கும். நீங்க தேவலோகம் போக எந்த தடையும் இருக்க வாய்ப்பு இல்லை”

“நானும் அப்படி இருக்கத்தான் ஆசைப்படுகிறேன் அன்பரே”

“அப்போ தேவலோகம் போகலாம்தானே?”

“அது எப்படி அன்பரே. எனக்கு உதவி செய்த உங்களுக்கு நான் உபகாரம்  செய்ய வேண்டாமா?”

“கட்டாயம் செய்யத்தான் வேண்டும். நீங்க என்ன பண்றீங்க ஒரு பத்து கோடி ரூபாய் எனக்கு குடுத்து உதவி செஞ்சா நான் என்னோட கடன் எல்லாம் அடைச்சுட்டு கடைசி காலம் வரைக்கும் சந்தோசமா  இருப்பேன்”
“ரூபாய் என்றால்”

“ம்ம். செல்வம், பொருள்”

“செல்வம் தர என்னால் முடியாது அன்பரே.”

“என்னம்மா இப்படி சொல்லுற. தேவலோகவாசிகள்  ஜீபூம்பானு சொல்லி  பணம் கொண்டுவர முடியாதா?”

“சித்து வேலை எனக்கு தெரியாது”

“அப்போ கெளம்பு”

“அது எப்படி. எனக்கு இத்தனை உதவி செய்த உங்களை நான் விவாகம் செய்து கொண்டு வாழ்நாள் முழுக்க உங்களுக்கு சேவை ஆற்ற வேண்டும். அதன் பின் தேவலோகம் சென்று விடுவேன்”

“அய்யோ அப்சரஸ். எப்படிப்பட்ட  ஒரு வாய்ப்பை எனக்கு கொடுத்து இருக்கீங்க. ஆனா எனக்கு ஏற்கனவே  கல்யாணம் ஆயிடிச்சு.  உங்களை கல்யாணம் பண்ண சட்டம் ஒத்துக்காது. அப்படியே சம்மதிச்சாலும் என்னோட பொண்டாட்டி சம்மதிக்கமாட்டா.”

“நீங்கள் அப்படி  சொல்லக்கூடாது நாதா”

“புரிஞ்சுக்கோங்க. இத்தனை அழகான பொண்ணை வச்சு காப்பாத்துறது இந்த ஊருல ரொம்ப கஷ்டம். அது மட்டும் இல்லாம நீங்க பணம்னா என்னன்னு கேக்குறீங்க. இனிமே நீங்க பணத்தை பத்தி தெரிஞ்சுகிட்டு இந்த ஊருக்கு அட்ஜஸ்ட் ஆகிறது எல்லாம் வாய்ப்பே இல்ல. . புரிஞ்சுக்கோங்க”

“தங்களுக்கு சேவை செய்யாமல் போவது எனக்கு வருத்தமாக இருக்கிறது” என்றாள் அப்சரஸ். உண்மையிலேயே வருத்தம் அவள் முகத்தில் தெரிந்தது.

“அப்போ ஒன்னு செய்யுங்க. எப்படியும் ஒரு பத்து கிலோக்கு நகை போட்டு இருக்கீங்க. அதுல ஒரு இரண்டு கிலோ எனக்கு குடுத்துடுங்க. என் பொண்டாட்டி ரொம்ப  சந்தோசப்படுவா. நானும் சந்தோசப்படுவேன்"

“இல்லை அன்பரே. அது என்னால் முடியாது. அது தேவலோக தங்கம்.”

ராஜுவுக்கு ஏமாற்றமாக இருந்தது. இத்தனை நகை இவளுக்கு எதற்கு எப்படியும் தேவலோகத்தில் எப்படியும் குறைந்த விலைக்கு  இதே போல நிறைய நகை கிடைக்கும் என்று நினைத்தவனுக்கு அந்த யோசனை வந்தது.. இவளின் மொத்த நகைகளையும் திருடிவிட்டால் இவள் எங்கே போய் புகார் குடுப்பாள். எப்படியாவது இன்று இரவுக்கு இவளை இங்கே தங்க சொல்லி நகைகளை அபகரித்து விடலாம். காலையில் எழுந்து கேட்டால் எனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறி விடலாம். இவள் நடந்ததை வெளியே போய் சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள். முடிந்தால் இந்த பேரழகியை  வெளியே விற்கவும் கூட முயன்று பார்க்கலாம். ஆனால் அதற்கு இவளை முதலில் இங்கிருந்து வெளியேற விடக் கூடாது. அவளை அவனின் சிந்தனையை அப்சரஸ் கலைத்தாள்.

“என்ன சிந்தனை அன்பரே”

“அப்சரஸ். நீ எனக்கு உதவி செய்யணும்  அதானே உன் ஆசை. இன்னைக்கு  ராத்திரி  இங்கேயே தங்கு. நாம நாளைக்கு கல்யாணம் செஞ்சுக்கலாம்”

“மகிழ்ச்சி அன்பரே”

அப்சரசை தனது படுக்கை அறைக்கு அழைத்து சென்றான் ராஜு.

“என் பொண்டாட்டி நைட்டி எடுத்து தரவா”

“நைட்டி என்றால்?”

“இரவு உடை”

அப்சரஸ் இனிமையாக சிரித்து, “அதெல்லாம் வேண்டாம்.திருமணம் முடியும்வரை தேவலோக உடைகளையே அணிந்து கொள்கிறேன் ” என்றாள்.

பாவி, நகையை கழட்டாமல் தூங்கப் போகிறாளே இவள் என்று ராஜு நினைத்துக் கொண்டான். இரவு பலவந்தமாக திருடி விட முடிவு எடுத்தான். அப்சரஸ் அந்த அறையில் படுத்துக் கொண்டாள். ராஜு இன்னொரு அறையில் படுத்துக் கொண்டான்.

ரவு ஒரு மணி.

ராஜு சத்தம் எழுப்பாமல் அந்த அறைக்குள் வந்தான். அப்சரஸ் அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள். மெதுவாக சென்று அவளின் கால்களில் அணிந்து இருந்த அந்த பெயர் தெரியாத ஆபரணத்தை கழட்ட முயற்சி செய்தான் ராஜு. அந்த நகை  அவன் கையில் வந்தவுடன் திடுமென எழுந்தாள் அப்சரஸ். எழுந்தவள் பெருங்குரல் எடுத்து அழத் தொடங்கினாள். ராஜுவுக்கு ஒன்றும் புரியவில்லை. எதிர்ப்பாள் என்று எதிர்பார்த்தால் அழுகிறாளே. அவளின் அழுகை பலமாகிக் கொண்டே போனது. ராஜுவின் காதுகள் வலிக்கத் தொடங்கின

“அப்சரஸ். அழாத. என் தலையே வெடிச்சுடும் போல இருக்கு. . தெரியாம நகையை எடுத்துட்டேன். நீயே வச்சுக்க ”

“நான் அதற்கு அழவில்லை நண்பரே”

“பின்ன?”

“அந்த இரண்டாம் சாபம் இன்னும் என்னை விட்டு  நீங்கவில்லை. இப்போதுதான் சாபமே தொடங்கியிருக்கிறது. என்னால் அதை உணர முடிகிறது.இன்னும் எத்தனை நாள் அந்த சாபத்தோடு நான் வாழ வேண்டுமோ தெரியவில்லை”

“இன்னுமா அந்த சாபம் கன்டின்யு ஆகுது?”  

“நானும் அந்த சாபம் இனி பாதிக்காது என்றுதான் நினைத்தேன். ஆனால் விடாமல் துரத்துகிறது” சொல்லிக்கொண்டே அப்சரஸ் தனது உடலை பயங்கரமாக முறுக்கத் தொடங்கினாள். அவள் கண்கள் சிகப்பாக மாறத் தொடங்கியது. “எனக்கு உடலெல்லாம் வலிக்கிறது என்றாள்.

 “சரி என்ன சாபம்னு சொல்லுங்க. சரி செய்ய முயற்சி பண்ணலாம்”
“இல்லை. உங்களால் அது முடியாது”

“நான் முயற்சி பண்றேன்.இது ஏதோ உடம்பு பிரச்சினை மாதிரிதான் இருக்கு. நல்ல டாக்டர் கிட்ட கூட்டிபோறேன் ஆனா நான் உனக்கு சரி செஞ்சு விட்டா எனக்கு உன் நகை முழுக்க தரணும் சரியா”

“சரி” என்றாள் ராஜு உற்சாகம் ஆனான். இன்னமும் நகைகளை அடைய வாய்ப்பு இருக்கிறது

“நான் உங்களால் தவளை வாழ்வில் இருந்து விடுபட்டேன் என்று நீங்கள் அறிவீர்கள்”

“ஆமா. மேலே சொல்லு”

“இரண்டாம் சாபத்தின்படி நான் தவளை வாழ்வில் இருந்து விடுபட்டு  நான் பகலில் அப்சரஸாக வாழ்ந்தாலும் .....”

அவள் வாயில் இருந்து வார்த்தை வரத் தடுமாறியது. அவள் கை விரல்கள் தடித்து நகம் நீள்வது போல ராஜுவுக்கு தோன்றியது. ராஜு லேசாக பயந்தான்

“வாழ்ந்தாலும்????”.

“மூன்றாம் ஜாமத்தில் மனித ரத்தம் குடிக்கும் பூதமாக மாறி விடுவேன்” என்று அவள் சொல்லி முடிக்கும்போது அவளின் நாக்கு வயிறு வரை நீண்டு வளர்ந்து இருந்தது. சில வினாடி சிரமங்களுக்குப் பின் ராஜுவின் ரத்தத்தை அவள் குடிக்கத் தொடங்கியிருந்தாள்.
   

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...