மதிப்பிற்கும், மரியாதைக்குரிய மோடி அவர்களுக்கு,
ஒரு இந்திய குடிமகன் எழுதி கொள்வது.
முதலில் தங்களின் சரித்திர சாதனை
வெற்றிக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். தேச மக்கள் உங்களை ஒரு கதாநாயகனாகவே
உருவகித்து கொண்டிருக்கிறார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் தெளிவாக காட்டி விட்டன.
அந்த நம்பிக்கையை நீங்கள் காப்பாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எங்களிடம் இருக்கிறது.
தங்களிடம் நல்ல திட்டங்கள் இருக்கிறது. மற்ற கட்சியினரை விட உங்கள்
கட்சியினரிடம் தேச பக்தியும் அதிகமாகவே
இருக்கிறது. வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பொருளாதாரமும், நிர்வாகமும் படித்தவர்களை
விட தேநீர் கடையில் பணிபுரிந்த உங்களாலேயே இந்தியாவின் பிரச்சினைகளை புரிந்து
கொள்ள முடியும் என்பதில் எனக்கு துளியும் சந்தேகமில்லை.
மற்ற எந்த பிரச்சினைகளையும் விட எதிர்காலத்தில் நம்மை பெரிய
சங்கடத்தில் ஆழ்த்தப்போகும் தண்ணீர் பற்றாக்குறையை நீங்கள் இப்போதே உங்கள் நீர்
மேலாண்மை திட்டங்கள் மூலம் எளிதில் சரி
செய்து விடுவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. உழவர்களின் வாழ்க்கையும், தேச பாதுகாப்பும்
இனி கட்டாயம் மேம்படும். உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்க போகிறது. நாட்டின்
பொருளாதாரமும், தனி நபர் வாழ்க்கை தரமும் உயரப்போகிறது. இவற்றை எல்லாம் நீங்கள்
எளிதில் செய்து முடிக்க போகிறீர்கள். ஏனென்றால் இதற்கு முன் பதவியில் இருந்தவர்கள் தங்களை பற்றி மட்டுமே சிந்திப்பவர்கள். பாட புத்தகத்தில்
படித்ததை அப்படியே மக்களிடம் பிரயோகித்து பார்த்து நாட்டை வளப்படுத்தியதாக
நினைப்பவர்கள் . நீங்கள் நாட்டை பற்றி சிந்திப்பவர். இந்தியர்களின் பிரச்சினைகள் நுணுக்கமானவை
என்பதை அறிந்தவர்.
தேசம் முன்னேற நாட்டின் தலைவன் மட்டும் பாடுபட்டால் போதாது. தேசத்தின்
ஒவ்வொருவரும் பாடுபடவேண்டும் என்ற எண்ணத்தை இந்தியர்களின் மனதில் கொண்டு வந்து
விடுவீர்கள். இந்தியர்களை மற்ற நாட்டினர் மரியாதையாக பார்க்கும் நிலை வரும். அந்த
நிலையை நீங்கள் கொண்டு வருவீர்கள். ஒருவேளை தங்களால் இவற்றை எல்லாம் செய்ய இயலாவிட்டால்தான்
ஆச்சரியம்.
ஆனால் மனதை உறுத்தும் ஒரே விஷயம் தேர்தல் பிரசாரங்களில் உங்களுக்கு
எதிராக எதிர்கட்சியினர் பயன்படுத்திய முக்கிய ஆயுதமான மதவாதம்தான். மதரீதியில் உங்களின் அரசு ஒரு உண்மையான மத சார்பற்ற அரசாகவே இருக்க விரும்புகிறேன். அனைத்து மதத்தாரும்
அவர்களுக்கான உரிமைகளை பெற்று சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதுதான் எங்களின்
விருப்பம். இதுவே உங்களின் கொள்கையாகவும் இருக்க வேண்டும். உங்கள் அரசு நிச்சயம் மதம் சார்ந்து ஒரு தலை பட்சமாக செயல்படும் அரசாக இருக்காது. ஏனென்றால் வழிபாட்டு முறையும், வழிபடும் கடவுளும் வேறுபட்டாலும் அவர்கள் கண்ணனையே சென்று அடைவதாகத்தானே கீதை சொல்கிறது.
No comments:
Post a Comment