அந்த கார்ப்பரேட் நிறுவனத்தின் நேர்முகத்தேர்வு நடக்கும் அந்த
அறைக்குள் குழப்பம் நிலவியது. அங்கே இருந்த மனிதவள நிர்வாக அதிகாரிகள் நால்வரும் தங்களுக்குள்
ஆழமான விவாதத்தில் இருந்தனர். தாங்கள் வடிகட்டிய மூன்று பேரில் யாரை வேலைக்கு
எடுப்பது என்ற இறுதி முடிவு எடுக்க வேண்டும். ஆனால் அந்த மூவரும் ஒருவருக்கு
ஒருவர் சளைத்தவரில்லை. எத்தனை விவாதம் செய்தும் குழப்பம் தீரவில்லை.
இப்போது அவர்களுள் இருப்பதிலேயே வயதான அதிகாரி பேசத் தொடங்கினார்.
“நண்பர்களே! இந்த குழப்பத்தை தீர்க்க அந்த மூன்று பேரிடமும் ஒரு கேள்வி
கேட்கப் போகிறேன். அந்த கேள்வி மூலம் அவர்கள் மூவரும் எந்த அளவு நம்
நிறுவனத்துக்கு பொருந்துவார்கள் என்று பார்க்க போகிறேன். முதல் நபரை வர
சொல்லுங்கள்”
சில நிமிடங்களில் முதலாம் நபர் உள்ளே வந்தார்.
“வாருங்கள் ரவி! இந்த சுற்றில் உங்களிடம் நான் கேட்கப்போவது ஒரே
கேள்விதான். நீ இந்த நிமிடம் கடவுளாகி விட்டாய். என்ன செய்வாய் சொல்?”
“என்ன கேள்வி இது?”
“ஒரு கற்பனைதானே. சொல் என்ன செய்வாய்?”
“சரி நான் உண்மையை சொல்கிறேன். நீங்கள் நான் ஒரு சோம்பேறி என்று நினைத்தாலும் பரவாயில்லை. நான் பாட்டுக்கு சொர்க்கத்தில் சொகுசாக வாழ்வேன். அதை விட வேறு என்ன பெரிய வேலை எனக்கு?”
“சரி நீ போகலாம்”
“என்ன சார்! உண்மையாக பேசுகிறார் இவரை வேலைக்கு எடுத்துவிடலாமா?” வயதான
அதிகாரியிடம் கேட்டார் ஒருவர்.
“இத்தனை உண்மையாக இருப்பவர்களால் எப்படி கார்ப்பரேட் நிறுவனத்தில்
குப்பை கொட்ட முடியும். கூட இருப்பவர்கள் ஒரே மாதத்தில் இவனை தூக்கி சாப்பிட்டு
விடுவார்கள். அது மட்டும் இல்லை. சற்றும் பொறுப்பின்றி எந்த வேலையையும் செய்ய மாட்டேன் என்கிறார்.அடுத்தவரை வர சொல்லுங்கள்”
அவரை அழைத்தார்கள்.
“நீதான் கடவுள். இப்போது என்ன செய்வாய் இந்த நிறுவனத்துக்கு?”
“நிறுவனத்துக்கா? உலகத்துக்கு என்று கேளுங்கள். எல்லாரையும் ஒரே போன்ற
அழகோடும், புத்திசாலித்தனமோடும் படிப்பேன். ஏழை,பணக்காரன் என்ற வித்தியாசமே என்
உலகில் இருக்காது. மதம், இனம்....”
“நிறுத்து! நிறுத்து! நீ போகலாம். யாருய்யா கம்யூனிஸ்ட்டை உள்ளே
அனுப்பியது” அலறினார் அதிகாரி.
அந்த நபர் வெளியேறிய பின் மூன்றாம் நபர் அழைக்கப்பட்டார். அதே கேள்வி.
“நான் கடவுளாகிவிட்டால் எந்த வேலையையும் செய்ய மாட்டேன். சிறு
தெய்வங்களை படைத்தது அவர்களுக்கு எல்லா பொறுப்பையும் ஒப்படைத்துவிட்டு சொர்க்கத்தில் ஓய்வெடுப்பேன். என்னை
போற்றுபவர்களுக்கும், துதி பாடுவோருக்கும் என்னுடன் சொர்க்கத்தில் இடம்.”
இதை அவர் சொல்லி முடித்ததும் உயரதிகாரி எழுந்து கைத்தட்ட தொடங்கினார்.
“வெல்டன்! கார்ப்பரேட் நிறுவனத்தில் உயர் பொறுப்பு வரை முன்னேற எல்லாத் தகுதிகளும் உங்களிடத்தே உள்ளது. வேலையை அடுத்தவரிடம் தள்ளி விடும் சாதுர்யமும், ஜால்ரா அடிப்பவர்களை தூக்கி விடும் குணமும் உங்களுக்கு இயல்பாகவே அமைந்துள்ளது. நாளைக்கே வந்து சேர்ந்து விடுங்கள்”
“நன்றி சார்”
இதை பொறுமையாக படித்தவர்களுக்கு அந்த நிறுவனத்தின் பெயரை தெரிந்து
கொள்ளும் ஆசை இருக்கலாம். உங்கள் நிறுவனத்தின் பெயர்தான் நேர்காணல் நடந்த
நிறுவனத்தின் பெயரும்.
ரசித்தேன்.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஅருமையான தொகுப்பு அறியத்தந்தமைக்கு நன்றிகள் பல
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
super anna'
ReplyDelete