Showing posts with label செமி ஃபிக்சன். Show all posts
Showing posts with label செமி ஃபிக்சன். Show all posts

Sunday, November 1, 2015

ரூம் நம்பர் 125

ந்த அருமையான மாலைப் பொழுதில் திருச்சி காவேரி பாலத்தின் காற்று சுகமாக தாக்கியது. ராஜா கையில்  வைத்திருந்த வங்கி தேர்வுக்கான புத்தகத்தை பையில் வைத்து கொண்டான்.

“இன்னும் எத்தனை தூரம்டா நடக்க விடுவ? இந்த பேங்க் பரிட்சைய மதுரைல வைக்காம திருச்சில வச்சு சாவடிக்கிறான்”

“ஏண்டா நொந்துகுற. திருச்சி எத்தனை அழகு பாரு. இன்னும் கொஞ்ச தூரம் நடந்தா ஸ்ரீரங்கம் போய் ரங்கநாதரை பாக்கலாம்”

 “நீ ஸ்ரீரங்கம் போக காரணம் ரங்கநாதரை பார்க்க இல்லன்னு எனக்கு நல்லா தெரியும்”

“காரணம் எதுவா இருந்தா என்ன?எப்பிடியும் பேங்க் பரீட்சை ஊத்த போகுது. திருச்சியை சுத்தி பாத்துட்டு போகலாம் வா”

“சரி அதுக்காக நடந்தேவா சுத்தி பாக்குறது. அங்க பஸ் வருது வா ஏறிக்கலாம்”

ருவரும் திருவானைக்காலில் இறங்கினோம்.

“என்னடா ஸ்ரீரங்கம் முன்னாடியே இறங்க சொல்லிட்ட. சிவனை முதல்ல கும்பிடலாம்னா”

“அதெல்லாம் இல்ல. இங்க ஒரு ஹோட்டல்ல நெய் தோசை நல்லா இருக்குமாம். பேப்பர்ல எல்லாம் வந்திருக்கு. அந்த ஹோட்டலுக்கு போவோம்னு”

“என்ன ஹோட்டல் அது?”

“ராமனுஜம் ஹோட்டல்”

“எங்க போய் தேடுவ”

“விசாரிக்கலாம்”

ந்த ஹோட்டலை கண்டுபிடிப்பது அத்தனை கடினமான காரியமாக இல்லை. பழைய வீடு ஒன்றில் இயங்கி கொண்டிருந்தது. தமிழ்நாடு முழுக்க பிரபலமான ஹோட்டல் என்பதற்க்கான அடையாளம் சிறிதும் இல்லை. தயங்கி தயங்கி உள்ளே நுழைந்தேன். அங்கிருந்த பழைய கடிகாரமும் ஒளி அமைப்பும் 1970ம் ஆண்டிலேயே அந்த ஹோட்டல் மட்டும் நின்று போனது போல தோற்றத்தை ஏற்படுத்தியது. வெள்ளை வேட்டி,கை பனியனுடன் ஊழியர்கள் பரிமாறிக் கொண்டிருந்தனர்.

“என்னடா. இதான் அந்த பிரபல ஹோட்டலா! நம்ம  ஊரு பரோட்டா கடை மாதிரில இருக்கு”

“எப்ப பாரு பரோட்டா கறி நினைப்புதான்.”

அங்கிருந்த மேஜையில் அமர்ந்தோம்  

“என்னடா இது. பழைய டேபிள். பேசாம அந்த கூண்டுக்குள்ள போய் உக்காரலாம் வா”

அவன் விரல் நீண்ட திசையில் பார்த்தேன். ஒரு இரும்பு  கூண்டு போன்ற அமைப்பு. அதில் சிலர் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர்.
“என்னடா இது கூண்டு?”

“மத்த ஹோட்டல்ல ஏசி ரூம் இருக்குமே. அது மாதிரி இங்க இது போல”

“வா அங்கேயே போய் உக்காரலாம்”

இருவரும் எழுந்து கூண்டை நோக்கி நடந்தோம். கூண்டின் உள்ளே நுழையப்போகும் நேரத்தில் ஒரு  ஒரு வெள்ளை பனியன் வந்து மறைத்தார்.

“உள்ள இடம் இல்ல அண்ணா. நீங்க அங்க உக்காந்துக்குறேளா?”

“இல்லங்க அங்க பாருங்க. இன்னும் நாலு பேரு உக்காரலாம்” என்றான் ராஜா.

“அந்த பெஞ்சுக்கு எல்லாம் நாங்க சப்ளை பண்றது கிடையாது”

“வாடா ராஜா. இடம் இல்ல போல” நாங்கள் பின்னால் நடந்த நொடியில் இரண்டு புதியவர்கள் அந்த கூண்டுக்குள் நுழைந்து நாங்கள் அமர சென்ற இடத்தில் அமர்ந்தனர்.

“என்னங்க அந்த டேபிள்க்கு சப்ளை இல்லன்னு சொன்னீங்க. அவங்களை மட்டும் விட்டுடீங்க” என்றேன்.

“அவா எங்க ரெகுலர் கஸ்டமர்.”

“நாங்களும் இன்னைக்கு இருந்து ரெகுலர் ஆகிக்குறோம். எங்களை உள்ளே விடுங்க”

“சொன்ன புரிஞ்சுகோங்க. பிரச்சினை பண்ணாதீங்க”

“என்ன நாங்க பிரச்சினை பண்றோமா. ராஜா புரியுதா. அந்த கூண்டுக்குள்ள அவங்க ஆளுங்க மட்டும்தான் போகணுமாம். என்ன நான் சொல்றது சரிதான?”

“ஆமா அப்பிடிதான். இதெல்லாம் இங்க இருக்குற பழக்கம்”

“நாங்களும் உங்க ஆளுங்கதான். பார்த்தா தெரியல”

“எல்லாரும் இங்க வாங்களேன். இவா தகராறு பண்றா” பனியன் கூப்பிட்டதும் அனைத்து பணியாட்களும் எங்களை சூழ்ந்தனர். எனக்கு சற்று பயம் வந்தது.

“வாடா ராஜா, போய்டலாம்”

“இதெல்லாம் இப்பிடியே விடக் கூடாது. இவங்க பண்றது எவ்ளோ பெரிய தப்பு தெரியுமா. போலீஸ்கிட்ட கம்ப்ளைன்ட் குடுத்தா அவ்ளோதான்”
இப்போது அங்கிருந்தவர்களிலேயே வயதானவர் பேசத் தொடங்கினார். 

“தம்பிகளா. இப்போ உங்களுக்கு உள்ள போகணும் அவ்ளோதானே. போய் நன்னா சாப்பிடுங்கோ”

எங்கள் முகத்தில் பெருமிதம். புரட்சி செய்து எதையோ சாதித்தது போல் உணர்ந்தோம்.

“தாத்தா. மனுசங்க எல்லாரும் சமம்தான். இனிமே இப்பிடி எல்லாம் பிரிச்சு வைக்காத. வாடா போகலாம் என்று ராஜா சாப்பிடாமலே வெளியே நடந்தான்.

“எண்டா சாப்பிடாம வந்த?”

“நாம அந்த கூண்டுக்குள்ள போனா நாம உக்காந்தா இடத்தை கழுவி விடுவானுங்க. எதுக்கு அவங்களுக்கு கஷ்டம். அதான்”

ருவரும் திருச்சி வந்து சேர்ந்தோம். தங்குவதற்கு  இடம் தேடி அங்கிருந்த லாட்ஜ்களை சலிக்கத் தொடங்கினோம். எங்கும் இடம் கிடைக்காமல் அங்கிருந்த சிறிய லாட்ஜ் ஒன்றில் கடைசியாக முயற்சி செய்தோம். அங்கிருந்த மீசைக்காரரின் கை காலை பிடித்தாவது இடம் வாங்கி விட முடிவு செய்து அவரை அணுகினோம்.

“சார். நாளைக்கு பரீட்சை. எப்பிடியாச்சும் அட்ஜஸ்ட் செஞ்சு ஒரு ரூம் குடுத்தா நல்லா இருக்கும்”

“எல்லாம் புல் ஆயிடுச்சே தம்பிகளா”

“கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க சார்”

“சரி ஒன்னு செய்யுங்க. இங்க ஒரு ரூம்ல உங்களை மாதிரியே பரீட்சை எழுத வந்த மூணு பசங்க தங்கி இருக்காங்க. பாவம் ஏழை பசங்க போல. வாடகை அதிகம்னு வருத்தப்பட்டாங்க. உங்களுக்கு ஓகேன்னா  அவங்க கூட தங்கிக்கோங்க. வாடகை ஷேர் செஞ்சுக்கலாம்”

“ரொம்ப சந்தோஷம் சார். நாங்க அவங்க கூடவே தங்கிக்கிறோம்”

“ரூம் நம்பர் 125”

இருவரும் மாடி ஏறி அந்த அறையை அடைந்தோம். கதவை தட்டினோம். எங்கள் வயதை ஒத்த ஒருவன் வந்து கதவை திறந்தான். அறையில் இன்னும் இரண்டு பேர்.

“என்ன சார்” என்றான் அவன்.

“சாரி.ரூம் மாறி வந்துட்டோம்” கூறிவிட்டு ராஜா வேகமாக மீண்டும் கீழே இறங்கத் தொடங்கினான்.

“டேய்! என்னடா ஆச்சு. நமக்கு தங்க இந்த இடம் கிடைச்சதே பெருசு”
ராஜா பதில் சொல்லவில்லை.

“என்னடா பிரச்சினை?”

“அவங்களை பார்த்தயா? கீழ் ஜாதி பசங்க மாதிரி இருக்காங்க. அவங்க கூட எப்பிடி தங்குறது” என்றான். 


Monday, February 9, 2015

பெண்களுக்கு ஏன் சூர்யாவை பிடிக்கிறது ?

சில நாட்களாகவே என் மனதில் உள்ள  ஒரு கேள்வி பெண்களுக்கு சூர்யாவை ஏன் பிடிக்கிறது என்பதுதான். எந்த பெண்ணிடம் பிடித்த நடிகர் யார் என்று கேட்டால் தயங்காமல் சூர்யா என்று சொல்கின்றனர். சூர்யாவின் நடிப்பை பற்றியோ அழகை பற்றியோ எந்த சந்தேகமும் இல்லை. இருந்த போதும் எப்படி எல்லா பெண்களையும் கவர்ந்தார் மனிதர் என்பதுதான் ஆச்சரியம். அரிதாக மற்ற நடிகர்களின் பெயர்களை சிலர் கூறினாலும் “சூர்யாவையும் பிடிக்கும்” என்று இழுத்து கொண்டேதான் முடிக்கின்றனர். பத்து வயது முதல் முப்பது வயது வரை பெரும்பாலான பெண்கள் சூர்யா ரசிகைகளாகவே உள்ளனர்.

ஒரு வேளை சிக்ஸ்பேக்ஸ்தான் காரணமோ என்ற சந்தேகத்தில் ஒரு பெண்ணிடம் கேட்டேன். சூர்யாவை எந்த படத்திலிருந்து பிடிக்க ஆரம்பித்தது என்று. நான் எதிர்பார்த்த பதில் “அயன்” அல்லது “வாரணம் ஆயிரம்”. ஏனென்றால் ஆனால் அந்த பெண் சொன்ன பதில் “பூவெல்லாம் கேட்டு பார்”. அந்த படம் வெளிவந்தபொழுது அந்த பெண்ணுக்கு பத்து வயதுதான் இருந்திருக்கும். அந்த படம் சூர்யாவுக்கே எவ்வளவு பிடிக்கும் என்பது சந்தேகம்தான். ஆனால் பாருங்கள், அந்த பெண்ணுக்கு அந்த படம் பிடித்து  இருக்கிறது.

இந்த ரகசியத்தை எப்படியாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்று துணிந்து ஒரு பெண்ணிடம் கேட்டே விட்டேன் “அப்படி சூர்யாவிடம் என்ன ஸ்பெசலாக இருக்கிறது என்று உங்களுக்கு எதற்கு சூர்யாவை பிடிக்கிறது” என்று.

“எதற்காக கேட்கிறீர்கள்” என்றார் அந்த பெண்.

“இதை தெரிந்து கொண்டால் பெண்களை புரிந்து கொள்ளலாம் என்றுதான் ” என்றேன்.

அந்த பெண் சிறிது நேரம் யோசித்தார். “ஆண்களுக்கு எந்த நடிகர்களை பிடிக்கிறது?” என்று கேட்டார்

“பெரும்பாலும் விஜய், அஜித் என்று சொல்வார்கள்” என்றேன்.

“சரி. ஏன் விஜயை பிடிப்பவர்களுக்கு அஜித்தை பிடிக்கவில்லை. அஜித் பிடிப்பவர்களுக்கு விஜயை பிடிப்பதில்லை” என்று கேட்டார்.

“காரணம் சொல்வது கடினம். ஒரு வேளை விஜயை பிடிக்காமல் போனதால் அஜித்தை பிடித்து இருக்கலாம். அல்லது  அஜித்தை பிடிக்காமல் போனதால் விஜயை பிடித்து இருக்கலாம்” என்றேன்.

“அதுதான் ஏன்? இருவரின் கதை தேர்வு செய்யும் விதத்திலும் ஒரு வித்தியாசமும் இல்லை. நடிப்பிலும் பெரிய வித்தியாசம் ஏதும் சொல்ல முடியாது. பின்னர் ஏன்?” என்றார்.

“இதற்கு பதில் சொல்ல வரலாற்றை திருப்பி பார்க்க வேண்டியது இருக்கும். ஆரம்ப காலங்களில் ஒருவர்  நடித்த படங்கள் சில ஆண்களுக்கு பிடித்து இருக்கும். அதே நேரத்தில் மற்ற சில ஆண்களை வெறுப்படித்து இருக்கலாம் ” என்றேன்.

“பாருங்கள். பெண்களுக்கு  சூர்யாவை பிடித்திருக்கிறது. ஆனால் பாதி ஆண்களுக்கு பிடித்த நடிகரை இன்னொரு பாதி ஆண்களுக்கு பிடிப்பதில்லை. அப்படியானால் ஆண்களை அறிந்து கொள்வதுதானே கடினம்?” என்று கேட்டார்.

“யோசிக்க வேண்டிய கேள்வி. ஆனால்  நீங்கள் எப்பொழுதாவது ஆண்களை அறிந்து கொள்ள முயற்சி செய்திருக்கிறீர்களா?”  என்று கேட்டேன்

“நான் எதற்கு செய்ய வேண்டும்” என்று கேட்டு முகத்தை திருப்பி கொண்டார்.

உண்மையை சொல்லப் போனால் ஆண்களோ பெண்களோ மனிதர்களை  புரிந்து கொள்வதுதான் கடினம். ஆனால் பாருங்கள் ஆண்கள் எப்பொழுதும் பெண்களை புரிந்து கொள்ள முயன்று தோற்று பெண்களை புரிந்து கொள்ளவே முடியாது என்று எழுதி வைத்து விட்டனர். ஆனால் ஆண்களை புரிந்து கொள்ள பெண்கள் முயல்வதில்லை. ஆண்களும் கூட.


மேற்கண்ட பதிவில் பாதி கற்பனை 


Thursday, September 4, 2014

ஆப்பிரிக்காகாரரும், அன்னபூர்ணா ஹோட்டலும்

நேற்று அந்த உணவகத்தில் உள்ளே அவர் வரும்போதே எனக்கு மிகவும் வித்தியாசமாக தெரிந்தார். டீ-ஷர்ட், ஜீன்ஸ் என்று சாதாரணமாகவே உடை அணிந்து இருந்தாலும் அவரின் அதீத கறுப்பு நிறம் அவர் ஆப்பிரிக்காவிலிருந்து வந்தவர் என்று உணர்த்தியது.அவருக்கு முப்பது வயதுக்குள் இருக்கலாம். இந்த ஏரியாவில் இவர்களுக்கு என்ன வேலை என்று யோசிக்க தொடங்கினேன். வந்தவர் நேராக வந்து எனக்கு எதிராக அமர்ந்தார்.

சப்ளையரோ பெரிதாக அலட்டி கொள்ளாமல்வழக்கப்படி  அசுவாரசியமாக வந்து தட்டை எடுத்து அவருக்கு முன் வைத்து விட்டு  தண்ணீர் எடுக்க சென்றார். சில  வினாடிகளில் ஆப்பிரிக்கர் பெருங்குரலில் கத்த தொடங்கினார்.

“வாட் இஸ் திஸ்?”

அவரின் சத்தத்தை கேட்டு ஓட்டலே ஒரு வினாடி அதிர்ந்து திரும்பி பார்த்தது. ஏதேனும் பெரிய தவறு நடந்து விட்டதா என்று அதிர்ந்து கல்லாவில் அமர்ந்து இருந்த  முதலாளி எண்ணி கொண்டு இருந்த பணத்தை விட்டு விட்டு நிமிர்ந்தார். நானும் நிமிர்ந்தேன்.

ஆப்பிரிக்காக்காரர் தட்டில் இருந்த வாழை இலையை கையில் எடுத்து கொண்டு கல்லாவில் இருந்த முதலாளியை வெறித்து கொண்டிருந்தார்.

“பனானா லீப்”

“திஸ் இஸ் நாட் கிளீன்.  டோன்ட் வான்ட்”

முதலாளி தலையில் அடித்து கொண்டு சப்ளையரை அழைத்தார்.

“மணி! பிளாஸ்டிக் பேப்பர் போட்டு குடு”

மணி என்று அழைக்கப்பட்டவர் எப்படி இருந்தார் என்றால் நீங்கள் கடைசியாக பார்த்த ஹோட்டல் சப்ளையரை நினைவுபடுத்தி கொள்ளுங்கள். அந்த மணியாகப்பட்டவர்  என்னை பார்த்து “இவனை எல்லாம் உள்ளே விட்டு நம்ம உயிரை எடுக்குறானுங்க! வாழை இலை சுத்தமா எப்பிடி இருக்கும். நம்ம ஊருக்கு வந்து நம்மளை மாதிரி சாப்பிட மாட்டானா” என்றார்.

“நல்ல வேளை சுத்தமா இருந்தா இலையை சாப்பிட்டு இருப்பான்! “ என்றேன்.

“அப்பிடி செஞ்சா கூட சந்தோசமா இருந்து இருப்பேனே ?” என்று அலுத்து கொண்டே  உள்ளே சென்று பிளாஸ்டிக் பேப்பரை தட்டில் விரித்து கொண்டு ஆப்பிரிக்கர்  முன் வைத்தார். மறு வினாடி ஆப்பிரிக்கர் அந்த பிளாஸ்டிக் பேப்பரை எடுத்து மேஜையில்  விரித்து தட்டை அதன் மேல் வைத்தார்.

மணிக்கு இந்த முறை கோபம் சற்று அதிகமாகவே வந்து விட்டது.

“பாருங்க சார்! அநியாயம் பண்றான்” என்று முதலாளியிடம் முறையிட்டார்.

“நீங்க டென்சன் ஆகாதீங்க மணி! என்னமோ செஞ்சுட்டு போறான்” என்றார் முதலாளி.


“வாட் ஈடிங்?” மணி  தன்னுடைய ஆங்கில அறிவை பிரயோகித்தார் .

இப்போதுதான் ஆப்ரிக்கருக்கு என்ன சாப்பிடுவது என்று சந்தேகம் வந்து இருக்க வேண்டும். சில வினாடிகள் யோசித்து “சிக்கன்” என்றார்.

மணிக்கு ரத்த அழுத்தம் எகிறி இருக்க வேண்டும். கண்கள் சிவந்தது தெரிந்தது.

“ஒன்லி வெஜிடேரியன்! நோ சிக்கன்”

“ஓகே! கிவ் மீ திஸ் ஐடம்” ஆப்ரிக்கரின் கை நான் சாப்பிட்டு கொண்டு இருந்த தோசையை நோக்கி நீண்டது.

“வெயிட்.” மணி உள்ளே சென்று விட்டார்.

ஆப்ரிக்கர் ‘லோலோலோ’ என்று ஏதோ பாட தொடங்கினார். சில நிமிடங்களில் தோசை வந்தது.

“கிவ் மீ ஸ்பூன்”

“தோசைக்கு  ஸ்பூன் கேட்கிறான் சார்” என்றார் மணி.

“கேக்குறதை எல்லாம் கொடுங்க” என்றார் முதலாளி. மணி ஸ்பூன் எடுக்க திரும்பிய வினாடியில் என்ன நினைத்தாரோ ஆப்ரிக்கர். தோசையை நான்காக மடித்து வாய்க்குள் திணித்து விட்டார்.

“அண்ணே! இருங்க. நான் அப்போ வந்த தோசையையே இன்னும் சாப்பிடல. இவர் அதுக்குள்ள தோசையை முடிச்சுட்டார்" என்றேன் மணியை பார்த்து.


“இப்போ சாம்பாரை இவன் தலையிலதான் ஊத்தணும்” என்றார் மணி.

“கிவ் மீ எ கிளாஸ்”

“கிளாஸ் கேக்குறான் பாருங்க” என்றேன்

“இருடா தரேன் ” என்று தண்ணீர் வைக்கும் கிளாசை எடுத்து முன்னே வைத்தார் மணி. ஆப்ரிக்கர் யோசிக்காமல் சாம்பார் வாளியில் இருந்து ஒரு கரண்டி சாம்பாரை எடுத்து க்ளாஸில் ஊற்றி குடிக்க தொடங்கினார்.

மணி இப்போது சிரிக்க தொடங்கி இருந்தார்.

“என்னண்ணே! சிரிக்கிறீங்க?” என்றேன்.

“முடிச்சுட்டான்.எப்பிடியோ தொல்லை தீர்ந்தது” என்றார்.

அவர் சந்தோசம் அதிக நேரம் நிலைக்கவில்லை. ஆப்ரிக்கரின் கை மீண்டும் பக்கத்து மேஜையில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தவரின் தட்டை நோக்கி நீண்டது.

“கிவ் மீ திஸ் ஐடம்”

நான் மணியை பார்த்தேன். அதற்கு மேல் அங்கே இருந்தால் போலீஸ் கேசில் முக்கிய சாட்சியாக நிற்க வேண்டிய நிலை வரும் என்று தோன்றியது. கையை கழுவிவிட்டு நேராக முதலாளியிடம் சென்றேன்.

“ஏன் சார்? அதை கொண்டுவா, இதை கொண்டுவான்னு உயிரை வாங்குறான். நீங்க பேசாம இருக்குறீங்களே?” என்றேன்.

“விடுங்க தம்பி! ஒரு தடவை பாம்பே போய் எதை எப்பிடி சாப்பிடறதுன்னு தெரியாம மூணு நாளா சரியா சாப்பிடாம ஊரு வந்து சேர்ந்தேன். ஆனா அவனை பாருங்க. எங்க இருந்தோ வந்து எதை பத்தியும் கவலைப்படாம சாப்பிட்டுகிட்டு இருக்கான். அவனை பாராட்டணும்” என்றார்.

அதுவும் உண்மைதான்.

Monday, July 28, 2014

ஒரு மல்டிலெவல் மார்க்கெடிங் ஏஜெண்டும், நானும்

துரங்க வேட்டை”யில் மல்டிலெவல் மார்க்கெடிங் பற்றி காண்பித்து இருந்தார்கள். பார்த்தபோது எனக்கு நான் சந்தித்த ஒரு மல்டிலெவல் மார்கெடிங் ஏஜென்டின் நினைவு வந்தது. பணத்தின் மேல் பேராசை கொண்ட ஒருவரை எப்படி வேண்டுமானாலும்  மூளைசலவை செய்யலாம் என்பதை அவர் மூலமே முதலில் தெரிந்து கொண்டேன்.

ஒரு நாள் வழக்கப்படி மாட்டுத்தாவணியில் இருந்து ஊருக்கு திரும்ப பேருந்தில் ஏறி ஜன்னல் ஓரம் இடம் பிடித்து அமர்ந்தேன். பேருந்து கிளம்ப சில நிமிடங்கள் இருந்தது. கவனத்தை இளையராஜா பாடலில் திருப்பி பேருந்தில் ஏறுபவர்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன்.

சில நிமிடங்களில்  வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட் அணிந்து கொண்டு ஒரு இளைஞர் பேருந்தில் ஏறினார். எனக்கு பக்கவாட்டில் இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தார். எனக்கு அவர் என்னையே பார்ப்பது போல தோன்றியது. நான் நினைத்தது சரிதான் என்று நிரூபிக்கும் வகையில் என் இடம் மாறி என் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டார்.

“உங்களை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு._______ பள்ளிகூடத்துலதான படிச்சீங்க?” தனது முதல் கேள்வியை வீசினார்.

“ஆமாங்க. நீங்களும் அங்கதான்  படிச்சீங்களா?”

“இல்ல. ஆனா எங்க வீடு அந்த தெருலதான் இருக்கு. அதான் உங்களை பார்த்த மாதிரி இருக்கு போல”

ஆயிரம் பேருக்கு மேல் படிக்கும் அந்த பள்ளிகூடத்தில் என்னை பார்த்தது போல இருக்கிறது என்றால் என் முகத்தில் ஏதோ களை இருக்கிறது போல என்று எண்ணி பெருமைபட்டு கொண்டேன். வழக்கமாக என்னை பார்த்தாலே பயந்து ஓடுபவர்கள் மத்தியில் என்னை தேடி வந்து ஒருவர் பேசுகிறார் என்ற சந்தோசம் வேறு.

“ஆமா...ஆமா...சரி நீங்க இப்போ என்ன பண்றீங்க?” நட்பை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகும் முயற்சியில் இறங்கினேன்


“நான் தமிழ்நாடு மின்வாரியத்துல வேலை செய்யுறேன்”

“ரொம்ப பிஸியான வேலைதான். நேரத்துக்கு கரண்ட் கட் பண்ணனும்.”

“அத்தனை பிஸி எல்லாம் இல்லைங்க. நாங்க நேரத்துக்கு கரண்ட் கட் பண்ணாம போனாலும் கரண்ட் அதுவாவே நின்னுடும்.” சிரித்து கொண்டே பதில் உரைத்தார். எனக்கு  ஒன்றரை மணி நேரத்துக்கு  சரியான பொழுதுபோக்கு கிடைத்ததை எண்ணி புளங்காகிதம் அடைந்தேன். அப்படியே தமிழ்நாட்டில் மின் நிலவரத்தை இவர் மூலம் தெரிந்து கொண்டு விட வேண்டியதுதான்.

“ஆமா! இந்த கரண்ட் கட் எல்லாம் சரி பண்ணவே முடியாதா?”

“அதெல்லாம் வாய்ப்பே இல்லைங்க. கூடங்குளம் வந்தா சரி ஆகிடும்னு சொல்றாங்க. ஆனா அதெல்லாம் சும்மா. சரி நீங்க எங்க வேலை பாக்குறீங்க?”

“எனக்கு கவர்மென்ட் உத்தியோக யோகம் எல்லாம் இல்லை. மதுரைல ஒரு பிரைவேட் கம்பெனில வேலை”

“சம்பளம் எவ்வளவு வாங்குறீங்க?” அடுத்த கேள்வியில் அதிர்ச்சி அளித்தார். பழகிய பத்தே நிமிடங்களில் சம்பளம் கேட்கிறாரே. அரசாங்க ரகசியத்தை எல்லாம் நான் கேட்டிருக்க கூடாதோ? சில நொடிகள் குழம்பி சம்பளத்தை தவறாக சொல்ல முடிவு செய்தேன்.

“என்னங்க ஒரு பத்தாயிரம். அதுலயும் அப்பிடி இப்பிடி பிடிச்சு ஒரு எட்டு நெருங்கிதான் கைக்கு வரும்”

அவர் முகத்தில் ஒரு புன்னகை தெரிந்தது.

“நீங்க என்ன படிச்சு இருக்கீங்க? இன்ஜினியரிங்தானே”

“ஆமா”

“பாருங்க இன்ஜினியரிங் படிச்சு எட்டாயிரம்தான் வாங்குறீங்க. உங்க முதலாளி உங்களை விட கம்மியாதான்  படிச்சு இருப்பார். ஆனா எவ்வளவு சம்பாதிக்கிறார். எப்பிடின்னு நினைக்கிறீங்க”

உண்மையில் என் எம்.டி  இங்கிலாந்து சென்று பல பட்டங்களை வாங்கியவர். எனக்கு என்னமோ அதை அவரிடம் சொல்ல பிடிக்கவில்லை.

“அவர் திறமைசாலி அதான்”

“திறமைதான். ஆனா அவர் திறமை என்னன்னா அவருக்கு மத்தவங்க நேரத்தை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க தெரிஞ்சு இருக்கு. உங்க நேரத்தை எடுத்திகிட்டு உங்களுக்கு பணம் தரார். ஆனா அதை விட அதிக பணம் உங்க நேரத்துல அவர் சம்பாதிக்கிறார். நேரம்தான் எல்லாம். உங்க நேரத்தை நீங்களே பயன்படுத்திகிட்டா நீங்களும் அதிக பணம் சம்பாதிக்கலாம்”

அவர் பேசுவது யாரோ சொல்லிக் கொடுத்து பேசுவது போல தெரிந்தது.

“அதெல்லாம் எதுக்குங்க. சம்பளம் வருது அது போதும்”

“இப்போ உங்களுக்கு இது போதும். நாளைக்கு? இன்னும் இருபது வருஷம் கழிச்சு முப்பதாயிரம் வாங்குவீங்க. அது போதுமா? இப்போ நான் உங்களுக்கு உங்க நேரத்தை எப்படி பணமாக்குறதுன்னு இப்போ உங்களுக்கு  சொல்லித்தரேன்”

அவர்  நோக்கம் எனக்கு தெளிவாக புரிந்து விட்டது.

“ஆம்வேயா? மோடிகேரா?”

“ஆம்வேலாம் இல்லை. மோடிகேர்தான். இப்போ  நான் பெரிய தொழிலதிபர்களை உருவாக்குற முயற்சியில இருக்கேன். அப்பிடியே கம்பெனியோட சோப்பு, ஷாம்பூ விக்கணும். எம்.எல்.எம்தான் நம்ம நேரத்தை பணமாக்குற வழி ”

“எம்.எல்.எம் கான்செப்டே தப்புங்க. இப்பிடி ஒவ்வொருத்தரும் பத்து பேரை சேர்த்து விட்டா கடைசில எல்லாருமே விக்கிறவங்க ஆயிடுவாங்க. அப்புறம் அந்த பொருளை எல்லாம் கடைசில யாருதான் வாங்குறது?”

இதை கேட்டதும் கடகடவென்று சிரித்தார்.

“இன்ஜினியரிங் எப்பிடி பாஸ் ஆனீங்க. இது கூட புரியல. அது அப்பிடி இல்லங்க”

“அது எப்பிடியோ நம்ம ஊருக்கு  இதெல்லாம் ஒத்துவராது. ரொம்ப காஸ்ட்லி ப்ராடக்ட் . இங்கெல்லாம் அதை யாரு வாங்குவா, ரெண்டு ரூபா சாஷேல ஷாம்பூ வாங்கி குளிச்சா போதும்னு சொல்லிடுவாங்க”

அவர் முகம் மாறியது.” நீங்க எப்பவாச்சும் இவங்களோட டூத் பேஸ்ட்டை யூஸ் செஞ்சு இருக்கீங்களா. யூஸ் செஞ்சு பாருங்க. அப்புறம் இப்பிடி பேச மாட்டீங்க”

“அதெல்லாம் எதுக்குங்க. நமக்குதான் கோபால் பல்பொடி இருக்கே?”

“கோபால் பல்பொடியா?”

“என்ன முகத்தை சுருக்குறீங்க? பெரிய மல்டி நேஷனல் கம்பெனி தெரியும்ல. மலேசியா, சிங்கப்பூர், இலங்கைன்னு பெரிய மார்க்கெட்.”

அவர் வெறுப்பு அடைவது நன்றாக தெரிந்தது.

“சார்! நீங்க எல்லாத்தையும் தப்பா புரிஞ்சு இருக்கீங்க. மதுரைல ஒரு டாக்டர் இப்போ எம்.எல்.எம்ல  மாசத்துக்கு ஒரு லட்சம் சம்பாதிக்கிறார். இதை வச்சே கார் எல்லாம் வாங்கிட்டார். இந்த வாரம் ஞாயித்துக்கிழமை மதுரைல ஒரு மீட்டிங் இருக்கு. போய் கலந்துக்குங்க. அந்த டாக்டர் பேசுறதை கேட்டதும் உங்களுக்கே புரியும். அப்பிடியே என்னோட பேரை அங்கே ரெபரன்ஸ்னு குடுத்துடுங்க”

“டாக்டர் பேஷண்டுக்கு உங்க கம்பெனி  சோப்பையும், ஷாம்பையும் பிரிஷ்க்ரிப்சன் எழுதி கொடுத்து வித்துடுவார். நான் எப்பிடி விக்கிறது. தவிர இந்த வாரம்  ஞாயித்துக்கிழமை நான் ரெஸ்ட் எடுக்கணும். உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? இதே மாதிரி எம்.எல்.எம்ல  ட்ரை பண்ணி காசை விட்ட நிறைய பேரை எனக்கு தெரியும்.”

அவர் கோபத்தின் உச்சிக்கே போய்விட்டார் என்பது அவரின் கண்களில் தெரிந்தது.

“சரி உங்க நண்பர்கள் போன் நம்பர் இருந்தா குடுங்க. யாராச்சும் இதுல இன்ட்ரஸ்ட் காமிக்கலாம்”

“எனக்கு நண்பர்களே இல்லீங்க. அப்பிடி யாரையும் நான் வச்சுகுறதே இல்ல.”

“நீங்க நெகட்டிவாவே வளர்ந்துட்டீங்க, அதான் உங்களுக்கு நண்பர்களே இல்லை. இப்படி யோச்சிக்கிறவரை நீங்க வாழ்க்கையில  முன்னேறவே மாட்டீங்க” இப்பொழுது கோபம் வார்த்தைகளில் வந்து விழுந்தது. அவரின் விலைமதிப்பில்லாத நேரத்தை நான் வீணடித்து விட்டது காரணமாக இருக்கலாம்.

அடுத்த முப்பது நிமிடங்கள் ஊரை அடையும்வரை இருவரும் பேசிக்கொள்ளவில்லை. எனக்கு அதில் சந்தோசம்தான் . ஊர் வந்ததும் திரும்பி பார்க்காமல் இறங்கி சென்று விட்டேன்.

இது நடந்து நான்கு வருடங்கள் இருக்கும். இப்போது ஊரில் புதியதாக  கார் எதுவும் ஓடுவதாக தெரியவில்லை. மூன்றே மாதங்களில் எதார்த்தம் புரிந்த பின் அவர் எம்.எல்.எம் தொழிலை விட்டு இருக்கலாம். ஆனால் அதற்குள் அவர் தன்னுடைய நண்பர்கள் அனைவரையும் தன்னைவிட்டு விலகி ஓட வைத்து இருப்பார். அவருக்கு எதார்த்தம் புரிய வைத்ததில் என்னுடைய பங்களிப்பும் இருப்பது ஒரு வகையில் மகிழ்ச்சியே.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...