ஸ்பைடர்மேன் படங்களின் மேல் எப்போதும் எனக்கு விருப்பம் அதிகம்.
காரணம் ஸ்பைடர்மேன் படங்களில் ஆக்சன், செண்டிமெண்ட், காதல் என்று சரியான
விகிதத்தில் கலந்து கிட்டத்தட்ட ஒரு கமர்ஷியல் தமிழ் படம் போலவே கொடுத்து
இருப்பார்கள். ஸ்பைடர்மேன் முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் விறுவிறுப்பு. மூன்றாம் பாகம் சற்று சொதப்பல்தான்.
ஸ்பைடர்மேன் மூன்று பாகங்களுக்கு பின் ஸ்பைடர்மேனை அமேசிங் ஸ்பைடர்மேனாக மாற்றி எடுத்து வெளியிட்டார்கள். முதல் பாகம் எந்த குறையும் இல்லை. ஆனால் தற்போது வெளி
வந்து இருக்கும் இரண்டாம் பாகம் சற்று ஏமாற்றம்தான். ஸ்பைடர்மேனின் பெற்றோர்கள்,
ஆஸ்கார்ப் நிறுவனத்தில் நடக்கும் சதி செயல்கள் என்று கதை சென்றாலும் ஒரு சராசரி ‘B’
சென்ட்டர் ரசிகனை திருப்திபடுத்துமாறு படம் இல்லை.
ஸ்பைடர்மேன் படங்களின் உண்மையான ஹீரோ வில்லன்தான். வில்லன் வலுவாக
இருந்தால்தான் ஸ்பைடர்மேனால் தன்னுடைய
முழு பலத்தையும் காட்டி சண்டையிட
முடியும். ஆனால் இந்த பாகத்தில் ஒரு விபத்தில் மின்சாரத்தை பாய்ச்சும்/தேக்கும் சக்தி வரப் பெற்ற வில்லன் அத்தனை எடுபடவில்லை. வழக்கமாக ஸ்பைடர்மேன்
படங்களில் வில்லன்கள் எதிர்பாராத நேரத்தில் நகரத்தை தாக்குவார்கள். ஆனால் இந்த
படத்தில் எப்போதெல்லாம் வில்லன் நகரத்தை தாக்குவான் என்று எளிதில் கணித்து விட
முடிகிறது. எப்போதெல்லாம் ஸ்பைடி தன் காதலியை நெருங்குகிறாரோ அப்போதெல்லாம் வில்லன்
வருவான் என்று நினைக்கிறோம். சொல்லிவைத்தார் போல வில்லனும் வந்து விடுகிறான்.
பெரிய பெரிய வில்லன்களை ஊதி தள்ளிய ஸ்பைடி
அவனை எளிதில் தோற்கடித்து விடுகிறார்.
படம் முடியும் நேரத்தில் ஸ்பைடியின் நண்பன் வில்லனாக மாறி ஸ்பைடியை அழிக்க
கிளம்புகிறார். அந்த வில்லனும் சப்பையாக போய் விட எல்லா எதிர்பார்ப்பும்
புஸ்சென்று போய் விடுகிறது. இருந்தாலும் இந்த வில்லன்களுடன் நடக்கும் சண்டையில் ஸ்பைடி தனது காதலியை இழந்து மனச் சோர்வுக்கு ஆளாகிறார். ஸ்பைடியின் நண்பன் அவரை அழிக்க
அடியாட்களை தயார் செய்து அனுப்புகிறார். ஸ்பைடி அவர்களுள் ஒரு அடியாளுடன் மோதப்
போகும்போது படத்தை முடித்து விடுகிறார்கள்.
மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளிவந்திருக்கும் இந்த ‘அமேசிங்
ஸ்பைடர்மேன் 2’ நிஜத்தில் அமேசிங்காக இல்லை. குழந்தைகளுக்கு போர் அடிக்கும். வழக்கப்படி
தொழில்நுட்ப ரீதியில் வலுவாக இருந்தாலும் கதையும் திரைக்கதையும் வலுவில்லாமல் போய் விட்டது. அமெரிக்கர்களுக்கு ஓர் வேளை படம்
பிடித்து இருந்தாலும் டப்பிங்கில் பார்க்கும் தமிழர்களுக்கு இது ஒரு சராசரி படம்தான். இருந்தாலும் ஸ்பைடர்மேன்
ரசிகர்கள் படத்தை ஒரு முறை பார்க்கலாம்.
