Showing posts with label ஜெயலலிதா. Show all posts
Showing posts with label ஜெயலலிதா. Show all posts

Monday, May 19, 2014

தமிழக தேர்தல் முடிவுகள் – ஒரு வாக்காளனின் பார்வை

அதிமுக இத்தனை பெரிய வெற்றி பெரும் என்று எதிர்பார்க்கவில்லை. அதிமுக  அப்படி ஒரு நல்லாட்சியையா கொடுத்து விட்டது? ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் இன்னும்  மின்சார பிரச்சினை தீர்ந்தபாடில்லை. சமூக விரோதிகள் யாரும் ஆந்திராவுக்கு ஓடிய மாதிரியும் தெரியவில்லை. பேருந்து கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு என்று அனைத்தையும் ஏற்றி விட்டனர். இருந்தபோதும் மக்கள் எந்த அடிப்படையில் அதிமுகவை வெற்றி பெற வைத்தனர் என்று தெரியவில்லை.

இதே போலத்தான் 2001 தேர்தலும். 1991-1996ல்  அதிமுகவினர் மேல் இருந்த ஊழல் வழக்குகளுக்கு பின் அவர்கள் இனிமேல் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை என்றுதான் அனைவரும் கணித்து இருந்தனர். போதாக்குறைக்கு 1991-1996 திமுக ஆட்சியிலும் பெரிதாக எந்த குறையும் இல்லாததால் மீண்டும் திமுகதான் என்று எண்ணியிருந்த வேளையில் யாரும் எதிர்பாராத தீர்ப்பை அளித்தனர் மக்கள். 2006ல் மீண்டும் திமுக வென்றாலும் தனிப்பெரும்பான்மை  பெற முடியவில்லை. இவற்றை வைத்து பார்க்கும்போது மக்கள் கலைஞரை விட புரட்சி தலைவி மேலேயே அதிக நம்பிக்கை கொண்டிருப்பது தெரிகிறது. ஆனால் அந்த நம்பிக்கையின் அடிப்படை என்ன என்பதுதான் புரியாத புதிர். இன்றைய நிலைமைக்கு அடுத்த சட்டமன்ற தேர்தலிலும் திமுக கௌரவமான இடங்களை பெறுவது சந்தேகமே.

திமுக மேல் நம்பிக்கை இல்லை, நடப்பது பாராளுமன்ற தேர்தல் வேறு. பின்னர் ஏன் பாரதிய ஜனதா கூட்டணியை ஆதரிக்கவில்லை என்றால் அந்த கட்சியில் கலைஞர்-ஜெயலலிதா போன்ற வசீகரமான தலைவர் இல்லாததுதான் காரணமாக தெரிகிறது. அதனால்தானே என்னவோ விஜயகாந்தை கூட்டணிக்கு இழுத்தனர். ஆனால் விஜயகாந்த் பிரசாரம் செய்த விதமோ பாரதிய ஜனதாவுக்கு இருந்த செல்வாக்கையும் துவம்சம் செய்து விட்டதாக இப்போது பாஜகவினரே  சந்தேகப்பட்டு கொண்டிருப்பார்கள். பாமக என்னும்  ஜாதிக் கட்சியை கூட்டணியில் சேர்த்தது அவர்களுக்கு எந்த பலனையும் தரவில்லை. விளைவு, அதிமுகவுக்கு எந்த போட்டியையும் இவர்களால் தர இயலவில்லை.

இவற்றில் இன்னொரு ஆச்சரியம் வைகோவின் தோல்வி. மனிதர் பெரியாறு ஆணை பிரச்சனையில் ஆளுக்கு முன் நின்று போராடினார். மக்கள் பிரச்சினை என்ன வென்றாலும் முதலில் வருகிறார். தமிழகம் முழுக்க அறியப்பட்டவர். இருந்தபோதும் வெற்றி  மட்டும் கிடைக்க மாட்டேன் என்கிறது. இதற்கு காரணம் ஜாதி அடையாளத்தால் பிரியும் வாக்குகள். ஜாதி பார்த்து ஓட்டு போடும் மக்கள் அத்தனை எளிதில் மாற மாட்டார்கள். எனவே இவர் துணிந்து தொகுதி மாறி நின்று பார்ப்பது நல்லது.

மொத்தத்தில் அதிமுகவின் வெற்றிக்கு எதிர் கட்சிகளின் மேல் நம்பிக்கையின்மையும், கட்சிகளின் பலமின்மையையுமே காரணமாக தெரிகிறது. புதிதாக ஒரு வலுவான அரசியல்  ஆளுமை உருவாகும் வரை மக்களுக்கு அதிமுகவை விட்டால் வேறு கதியில்லை.


Monday, July 1, 2013

ஜெயலலிதா ஏன் பிரதமராக வேண்டும்?

அடுத்த பிரதமர் யார் என்பதே இன்றைய ஹாட் டாபிக். மோடியையும், ராகுலையும் பலர் முன் மொழிந்தாலும் என்னுடைய ஓட்டு புரட்சி தலைவிக்கே. சமீபத்தில் அவர் எடுத்த நடவடிக்கைகளில் உள்ள ராஜ தந்திரமும் , வகுத்த திட்டங்களில் உள்ள மக்கள் அக்கறையும் என்னை அவர் பக்கம் சாய வைத்து விட்டன. நான் மட்டும் சாய்ந்தால் போதுமா? நீங்களும் சாய வேண்டாமா? அதற்காகவே இதை எழுதுகிறேன். ஆனால் நீங்கள் அதிகமா சாய்ந்து கீழே விழுந்து அடிபட்டு கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.

 ஒரு அதிரடி நடவடிக்கை:

அவர் கைது செய்யப்படுவார் என்று யாருமே நினைத்து கூட பார்த்து இருக்க மாட்டார்கள்.  சாதாரண மனிதரா அவர்? தனக்காக உயிரை கொடுக்க துணிந்த  50 லட்சம் பேரை கொண்டவர் . அப்படிப்பட்ட  ஒரு மனிதரை கைது செய்வது என்பது சாதாரண விசயமா என்ன? அதற்கு எத்தனை துணிச்சல் வேண்டும்.   புரட்சி தலைவியால் தவிர வேறு யாரால் இத்தகைய அதிரடி நடவடிக்கை எடுக்க முடியும்? கைதுக்கு பின் அவரை பின் பற்றும் அந்த 50 லட்சம் பேரும் மாபெரும் போராட்டத்தில் இறங்குவர் என்பதை கணித்து அவரை திஹாருக்கு மாற்றியது சாணக்கியர்களும் போற்றும் ராஜ தந்திரமல்லவா? நாளை சீனாக்காரனையும் , பாகிஸ்தான்காரனையும் எதிர்க்க வேண்டுமானால் இத்தகைய துணிச்சல்தானே தேவை. என்னதான் பவர் ஸ்டாரின் ரசிகன் என்றாலும், சட்டத்தை காப்பாற்றும் நோக்கில் புரட்சி தலைவி எடுத்த  அதிரடி நடவடிக்கை என்னை அவருக்கு ஆதரவு அளிக்க செய்து விட்டது.



ஒரு மக்கள் நல திட்டம்:

எல்லாருக்கும் சம உரிமை பற்றி பேசும் நாடு இது. ஆனால் இந்த நாட்டில் ஒதுக்க பட்ட ஒரு இனம் உண்டு. தினம் தினம் குடித்து அரசுக்கு வருவாய் அளிப்பதோடு இல்லாமல், வாய் நிறைய தத்துவம் பேசி தமது நண்பர்களை மகிழ்விக்கும் குடிகாரர்களின் நலன் பற்றி சிந்திக்க கூட யாரும் இல்லை. இப்படி தாம் அரசால் ஒதுக்கப்படுகிறோமே என்ற கவலையிலேயே அதிகம் குடிப்பவர்களும்  உண்டு.

அப்படி என்னதான் அவர்களுக்கு குறை என்கிறீர்களா? குவாட்டரும், கட்டிங்கும் வாங்கி மிக்சிங்குக்கு சுகாதாரமான தண்ணீர் கிடைக்காமல் அவதி பட்டு வந்தனர் அவர்கள். தினமும் மினரல் வாட்டரும், கோக்கும் வாங்கி கலந்தால் கட்டு படி ஆகாது. ஒரு ரூபாய் பாக்கெட் நீரோ தரமற்றது . வாங்கி கலந்தால்  உடல் நிலை பாதிக்கும். இப்படிப்பட்ட சிக்கலான பிரச்சனையால்  சொல்லொணா துன்பத்தை அனுபவித்து வந்தனர். 

ஆனால் இப்போதோ புரட்சி தலைவியின் பத்து ரூபாய் குடி தண்ணீர் திட்டத்தால் அவர்களின் முகத்தில் சிரிப்பு மீண்டுள்ளது. இனி மிக்சிங் பற்றி கவலை இல்லை. பஸ்களில் கிடைக்கவிருக்கும் சரக்கு விரைவில் டாஸ்மாக்கையும் வந்து சேரும். அதன் பின் குறைந்த செலவில் நிறைந்த திருப்தி பெறலாம்  என்று ஆடி பாடி மகிழ்ந்து வருகின்றனர்.  இப்படி குடி மக்களின் நுணுக்கமான பிரச்சனைகளையும் தீர்த்து வைத்து இது மக்கள் நலம் பேணும் அரசு என புரட்சி தலைவி நிரூபித்து விட்டார்.

எனவே மக்களின் குறைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு, சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்பட வேண்டுமெனில் மத்தியில் அஇஅதிமுக தலைமையில் ஆட்சி அமைவதே சிறந்தது என்பதே எனது கருத்து. அண்ணா நாமம் வாழ்க! புரட்சி தலைவர் MGR நாமம் வாழ்க! என்று சொல்லி என் கட்டுரையை முடித்து கொள்கிறேன்.

இந்த பதிவால் யாருடைய மனமாவது புண்படுமாயின் இந்த பதிவை உடனே நீக்கி விடுவேன்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...