Showing posts with label மதுவிலக்கு. Show all posts
Showing posts with label மதுவிலக்கு. Show all posts

Friday, September 4, 2015

மதுவிலக்கும் வசந்த மாளிகையும்

அரசியல் கட்சிகள் மது விலக்கு போராட்டத்தை மறந்து விட்டது போல தோன்றுகிறது. கட்சி பாகுபாடு இல்லாமல் அனைவரும் மதுவை ஒரு வாரத்துக்கு எதிர்த்து விட்டு தங்கள் மக்கள் பணியை செவ்வனே செய்த திருப்தியில் ஓய்வெடுக்க சென்று விட்டனர். மதுவிலக்கு வந்தால் தமிழ்நாட்டை காலி செய்துவிட்டு அண்டை மாநிலங்களில் குடி பெயரத் தயாராக இருந்த குடிமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்த மதுவிலக்கு போராட்டங்கள் ஆரம்பித்த நாளிலிருந்தே ஒரு சந்தேகம் என்னை பாடாய்படுத்துகிறது. அந்த சந்தேகத்தை எனக்கு ஏற்படுத்தியது ‘வசந்த மாளிகை’ திரைப்படம். நீங்கள் ஒரு வேளை அந்த படத்தை பார்த்து இருக்கலாம். படத்தின் முதல் பாதியில் சிவாஜி கணேசன் ‘குடி மகனே.....பெருங்குடி மகனே’ என்று  கண்ணதாசன் பாட்டு எழுதும் அளவுக்கு பெரிய குடிகாரராக இருப்பார். ‘ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் ஏன்..ஏன்’ என்று தன்னைத்தானே கேட்டுக் கொள்வார்.

இப்படி ஆனந்தமாக அவரின் வாழ்க்கை சென்று கொண்டிருக்கும்போது வாணிஸ்ரீ அவர் வாழ்க்கையில் வருவார். கதாநாயகன் குடிகாரன் என்றால் கதாநாயகியால் பொறுக்க முடியுமா? சிவாஜியை குடிக்க கூடாது என்று கூறி விடுவார். சிவாஜியும் மனம் திருந்தி ‘அன்னத்தை தொட்ட கைகளினால் மது கிண்ணத்தை தொட மாட்டேன்’ என்று பாடி விடுவார். அதற்கு பின்னர் வரும் காட்சிகளில் வாணிஸ்ரீ காதலை பிரேக் அப் செய்து விட, அவரை சமாதானம் செய்ய முடியாமல் சிவாஜி தவிப்பார். அவரின் உடல்நிலை வேறு கெட்டுப்போகும். சிவாஜியை பரிசோதிக்க வரும் மருத்துவர், மொடாக் குடிகாரரான சிவாஜி திடீரென்று  குடிப்பதை நிறுத்தியதால் உடல் நிலை கெட்டுப் போனது என்பார். அவரை மீண்டும் குடிக்க வற்புறுத்துவார். ஆனால் சிவாஜியோ வாணிஸ்ரீக்கு செய்த சத்தியத்தின்படி குடிக்கவே மாட்டேன் என்று அடம் பிடிப்பார். உடல்நிலை மோசம் அடையும். அதன் பின் வரும் காட்சிகள் நமக்கு தேவை இல்லை. அந்த மருத்துவரின் கருத்துகள் மட்டுமே கவனிக்கப்பட வேண்டியது.

அவரின் கருத்துப்படி, குடிகாரர்கள் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் குடியை நிறுத்த வேண்டுமா என்ன? குடியை ஒரே நாளில் நிறுத்தக்கூடாது என்று  ‘வசந்த மாளிகை’ படம் மட்டும் கூறவில்லை. சமீபத்தில் ஒரு நடிகர் உடல்நிலை பாதிக்கப்பட்டதற்கு குடியை திடீரென நிறுத்தியதுதான் காரணம் என்று ஒரு பத்திரிக்கை வேறு எழுதியது. கூகிள் செய்து பார்த்தால் மொடாக் குடியர்கள் திடீரென  குடியை நிறுத்தினால் பக்கவிளைவுகள் ஏற்படும் என்று தெரிகிறது.

அப்படியென்றால்  மதுவிலக்குக்கு பின் தமிழக குடிமக்களின் கதி?? மக்களின் நலம் பேணும் அரசாங்கம்  மருத்துவர்கள் சீட்டு குடுத்தால் மது கிடைக்கும் என்று சில வருடங்களுக்கு கொஞ்சமாக மதுவிலக்கை தளர்த்தி கொள்ளலாம் அல்லது மதுவை ரேஷன் முறையில் குடுக்கலாம். மது விற்பனையை  அரசாங்கம் எடுத்துக்கொண்டது புலி வாலை பிடித்தது போலத்தான்.

. 

Monday, March 4, 2013

மதுவிலக்கு சாத்தியமா?


 "அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு" என்று சொன்ன ஒரு நாட்டில்  இன்று அரசே  நஞ்சை அளவுக்கு அதிகமாக விற்று கொண்டு இருக்கிறது. அதுவும் தமிழகத்தின் ஒரு அடையாளமாகவே குடி பழக்கம் மாறி போகும் அளவிற்கு.  இந்தியாவிலேயே வேறு எந்த தொழிலும் தனியாரிடமிருந்து அரசுக்கு வந்த பின் வேறு எந்த தொழிலாவது  இந்த அளவு வெற்றிகரமாக நடந்திருக்கிறதா என்று தெரியவில்லை. அந்த வகையில் தமிழன் சாதனை படைத்து கொண்டிருக்கிறான். இந்த நிலையை மாற்ற  சுயநலம் ஏதுமின்றி  தன் உயிரையும் பொருட்படுத்தாமல் மது விலக்கிற்காக உண்ணாவிரதம் இருந்ததிரு. சசி பெருமாள் அவர்களுக்கு முதலில் வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன். ஒரு மாதம்  உண்ணாவிரதம் இருந்தும்  இவருக்கு ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் குடுத்து செய்திகள் வெளியிடாதது துரதிர்ஷ்டம். 



 மதுவிலக்கு ஏன் தேவை?

குடிப்பதனால் தனக்கு கேடுதான் என்று திரைபடத்தில் கீழே எச்சரிக்கை காண்பிக்காவிட்டாலும் குடிப்பவர்களுக்கு தெரியும். தன் மக்களுக்கு ஊற்றி கொடுப்பதனால் நாட்டுக்கு ஒரு பயனும் இல்லை என்று அரசுக்கும் தெரியும். இருப்பினும் இரண்டு தரப்புமே தற்காலிக சந்தோசமே பெரிதாக தெரிகிறது.குடிக்கலாமா? வேண்டாமா? என்று  நடக்கும் மன போராட்டத்தில்  பெரும்பாலும் கடைசியாக ஒரு முறை குடித்து கொள்வோம் என்ற முடிவையே குடிப்பவன் தினமும் எடுக்கிறான். ஒரு கட்டத்திற்கு பின் அந்த மன போராட்டம் மறைந்து குடிக்காமல் இருக்க முடியாது என்ற நிலையை அடைகிறான். தன்னை தானே முற்றிலும் அழித்து கொள்கிறான்.


 அரசோ எதற்கும் கவலைப்படாமல்  வருமானத்துக்காக தற்கொலைக்கு ஈடான செயலை செய்து வருகிறது . குடி பழக்கம் தவறு என்ற எண்ணம் சிறிது சிறிதாக மறைந்து வருவதால் எதிர்காலத்தில் ஒரு தலைமுறையே குடிக்கு முழுமையான அடிமைகளாக மாறினாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை. 

மதுவிலக்கு சாத்தியமா?

உலகமயமாகிவிட்ட இன்றைய நிலையில் முழு மதுவிலக்கு சாத்தியம் இல்லை என்பதயும் ஒத்துகொள்ள வேண்டும். முழு மதுவிலக்கு காவல்துறைக்கு அதிகப்படி வருமானத்துக்குத்தான் வாய்ப்பு தரும். மேலும் முழுவதும் குடி அடிமை ஆனவர்களுக்கு ஒரே நாளில் முற்றிலும் இந்த பழக்கத்திலிருந்து விடுபடுவதும் சாத்தியம் இல்லை. திடீரென்று இந்த பழக்கத்தை நிறுத்துவது எதிர் விளைவுகளையே தரும்.

மதுக்கடைகளை குறைத்து கொள்வது மட்டுமே இப்போதைக்கான தற்காலிக தீர்வு .மேலும்  டார்கெட் வைத்து சாராயம் விற்பது போன்றவற்றை தவிர்த்து,   மதுவுக்கு மார்க்கெடிங் செய்வதை அரசு  குறைத்து கொள்ள வேண்டும்.மக்களுக்கும் மதுவுக்குமான  இடைவெளியை அதிகரிக்க வழி செய்ய வேண்டும். இப்போதைக்கு மது பாட்டிலை உடைக்க முடியாதுதான். ஆனால் சற்று தள்ளியாவது வைக்க வேண்டும். செய்யுமா அரசு?

இதை பற்றி உங்கள் கருத்துகளை விட்டு செல்லுங்கள்  


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...