Friday, September 4, 2015

மதுவிலக்கும் வசந்த மாளிகையும்

ரசியல் கட்சிகள் மது விலக்கு போராட்டத்தை மறந்து விட்டது போல தோன்றுகிறது. கட்சி பாகுபாடு இல்லாமல் அனைவரும் மதுவை ஒரு வாரத்துக்கு எதிர்த்து விட்டு தங்கள் மக்கள் பணியை செவ்வனே செய்த திருப்தியில் ஓய்வெடுக்க சென்று விட்டனர். மதுவிலக்கு வந்தால் தமிழ்நாட்டை காலி செய்துவிட்டு அண்டை மாநிலங்களில் குடி பெயரத் தயாராக இருந்த குடிமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்த மதுவிலக்கு போராட்டங்கள் ஆரம்பித்த நாளிலிருந்தே ஒரு சந்தேகம் என்னை பாடாய்படுத்துகிறது. அந்த சந்தேகத்தை எனக்கு ஏற்படுத்தியது ‘வசந்த மாளிகை’ திரைப்படம். நீங்கள் ஒரு வேளை அந்த படத்தை பார்த்து இருக்கலாம். படத்தின் முதல் பாதியில் சிவாஜி கணேசன் ‘குடி மகனே.....பெருங்குடி மகனே’ என்று  கண்ணதாசன் பாட்டு எழுதும் அளவுக்கு பெரிய குடிகாரராக இருப்பார். ‘ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் ஏன்..ஏன்’ என்று தன்னைத்தானே கேட்டுக் கொள்வார்.

இப்படி ஆனந்தமாக அவரின் வாழ்க்கை சென்று கொண்டிருக்கும்போது வாணிஸ்ரீ அவர் வாழ்க்கையில் வருவார். கதாநாயகன் குடிகாரன் என்றால் கதாநாயகியால் பொறுக்க முடியுமா? சிவாஜியை குடிக்க கூடாது என்று கூறி விடுவார். சிவாஜியும் மனம் திருந்தி ‘அன்னத்தை தொட்ட கைகளினால் மது கிண்ணத்தை தொட மாட்டேன்’ என்று பாடி விடுவார். அதற்கு பின்னர் வரும் காட்சிகளில் வாணிஸ்ரீ காதலை பிரேக் அப் செய்து விட, அவரை சமாதானம் செய்ய முடியாமல் சிவாஜி தவிப்பார். அவரின் உடல்நிலை வேறு கெட்டுப்போகும். சிவாஜியை பரிசோதிக்க வரும் மருத்துவர், மொடாக் குடிகாரரான சிவாஜி திடீரென்று  குடிப்பதை நிறுத்தியதால் உடல் நிலை கெட்டுப் போனது என்பார். அவரை மீண்டும் குடிக்க வற்புறுத்துவார். ஆனால் சிவாஜியோ வாணிஸ்ரீக்கு செய்த சத்தியத்தின்படி குடிக்கவே மாட்டேன் என்று அடம் பிடிப்பார். உடல்நிலை மோசம் அடையும். அதன் பின் வரும் காட்சிகள் நமக்கு தேவை இல்லை. அந்த மருத்துவரின் கருத்துகள் மட்டுமே கவனிக்கப்பட வேண்டியது.

அவரின் கருத்துப்படி, குடிகாரர்கள் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் குடியை நிறுத்த வேண்டுமா என்ன? குடியை ஒரே நாளில் நிறுத்தக்கூடாது என்று  ‘வசந்த மாளிகை’ படம் மட்டும் கூறவில்லை. சமீபத்தில் ஒரு நடிகர் உடல்நிலை பாதிக்கப்பட்டதற்கு குடியை திடீரென நிறுத்தியதுதான் காரணம் என்று ஒரு பத்திரிக்கை வேறு எழுதியது. கூகிள் செய்து பார்த்தால் மொடாக் குடியர்கள் திடீரென  குடியை நிறுத்தினால் பக்கவிளைவுகள் ஏற்படும் என்று தெரிகிறது.

அப்படியென்றால்  மதுவிலக்குக்கு பின் தமிழக குடிமக்களின் கதி?? மக்களின் நலம் பேணும் அரசாங்கம்  மருத்துவர்கள் சீட்டு குடுத்தால் மது கிடைக்கும் என்று சில வருடங்களுக்கு கொஞ்சமாக மதுவிலக்கை தளர்த்தி கொள்ளலாம் அல்லது மதுவை ரேஷன் முறையில் குடுக்கலாம். மது விற்பனையை  அரசாங்கம் எடுத்துக்கொண்டது புலி வாலை பிடித்தது போலத்தான்.

1 comment:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...