Showing posts with label ரசனை. Show all posts
Showing posts with label ரசனை. Show all posts

Wednesday, November 13, 2013

நான், செல்வராகவன்

"காதல் கொண்டேன்" படம் பார்த்தபோது செல்வராகவன்  மேல் பெரிதாக அபிப்பிராயம் ஏதும் வரவில்லை.அதற்கு அந்த படம் ஏற்கனவே வெளிவந்த சில படங்களின் சாயலில் இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். கஸ்தூரிராஜா மகன் என்ற அளவில் மட்டுமே அவர் நினைவில் இருந்தார்.அவரின் அடுத்த படத்தை பார்த்து அவரின் ரசிகனாக மாற போகிறேன் என்று அப்போது நான் அறிந்திருக்கவில்லை.

அதன் பின் சில நாட்கள் கழித்து அவரின் '7G ரெயின்போ காலனி' படம் வெளிவந்தது.  படத்தை பற்றிய விமர்சனங்கள் நேர்மறையாக இருந்ததால் அந்த படத்தை சென்று பார்த்தேன். அந்த படத்தின் இறுதி காட்சி ஏற்படுத்திய பாதிப்பு மறைய இரண்டு நாள் ஆனது. அதுவும் நான் பார்த்தது திரைப்படம்;   உண்மை இல்லை என்று எனக்குள் நானே திரும்ப திரும்ப சொல்லி கொண்டதாலேயே  அத்தனை விரைவாக என்னால் மீள முடிந்தது. இத்தனைக்கும் அந்த படத்தின் கதை படம் பார்க்கும் முன்பே எனக்கு தெரியும். ஒருவேளை கதை தெரியாமல் படம் பார்த்திருந்தால் என்ன ஆகி இருக்கும் என்று தெரியவில்லை.

இப்படி '7G ரெயின்போ காலனி'  செல்வராகவன் மேல் எனக்கு ஒரு பிரமிப்பை ஏற்படுத்தி விட்டு இருந்தது. படம் நெடுக கதாபாத்திரங்கள் உடனேயே பயணிக்க வைத்து, திரையில் நடக்கும் காட்சிகளை உண்மை என நினைக்க வைத்து, இறுதியில் நம்மையே படத்தின் கதாபாத்திரங்களாக உணர வைத்த அவரின் திறமை அவரை ஒரு ஜீனியசாக என்னை நினைக்க வைத்தது.  மனித உணர்வுகளை இத்தனை நுணுக்கமாக புரிந்து வைத்து இருக்கும் இவரின் எந்த படத்தையும் தவற விட கூடாது என முடிவு செய்தேன்.


அடுத்து செல்வராகவன் எடுத்த படம் 'புதுப்பேட்டை'. படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே படத்தை மிகவும் எதிர் பார்க்க ஆரம்பித்து விட்டேன். படம் வெளிவந்த முதல் நாளே அடித்து பிடித்து டிக்கெட் எடுத்து திரை அரங்கினுள் உற்சாகமாக சென்று அமர்ந்தேன். தனுஷ் ' தொண்டையில ஆப்ரேசன்' என்ற வசனத்தை பேசியதும் உற்சாகம் மேலும் அதிகரித்தது. ஆனால் படத்தின் இரண்டாம் பாதியில் உற்சாகம் கொஞ்சம் கொஞ்சமாய் வடிய தொடங்கி படம் முடியும்போது சுத்தமாக இல்லாமல் போனது. இருந்தபோதும் 'படம் எப்படி?' என்று கேட்டவர்களிடம் 'நல்லாத்தான் இருக்கு. என்ன கொஞ்சம் மெதுவா போகுது' என்றே பதில் கூறினேன். செல்வராகவன் எங்கேயோ தவற விட்டுவிட்டார். அடுத்த படத்தில் சரி செய்து விடுவார் என எனக்கு நானே சமாதானம் சொல்லி கொண்டேன்.

'புதுப்பேட்டை' படத்தின் விமர்சனங்கள் நல்ல விதமாக இல்லாமல் போனதும் செல்வராகவன் தெலுங்கு படம் எடுக்க போய் விட்டார். இவர் திரும்ப வராமல் போனால் தமிழ் சினிமா ஒரு நல்ல இயக்குனரை இழந்து விடும் என்று எண்ணி வருத்தம் கொண்டேன். நல்ல வேளையாக(?) அவர் தமிழுக்கு திரும்பி விட்டார். 'ஆயிரத்தில் ஒருவன்' என்று ஒரு படம் அறிவித்தார். இதற்கு இடையில் அவர் இயக்கிய தெலுங்கு படம் 'யாரடி நீ மோகினி' என்ற பெயரில் தமிழில் ரீமேக் ஆனது. சாதாரண கதை என்றாலும் நன்றாகவே இருந்தது.

அதிக நாட்கள் தயாரிப்பில் இருந்த பின் 'ஆயிரத்தில் ஒருவன்' வெளியானது. படம் எனக்கு பிடித்தே இருந்தது. இது வரை பார்க்காத ஒரு களம்; புதுமையான காட்சிகள் என்று சிறப்பாகவே செய்து இருந்தார். ஓரளவு திருப்தியுடன் திரை அரங்கை விட்டு வெளியே வரும்போது 'குப்பை மாதிரி படம் எடுத்து இருக்கான்' என்று ஒரு பெண் விமர்சித்ததை கேட்டேன். அந்த பெண்ணின் கருத்து அன்றைக்கு பெரும்பாலான தமிழர்களின் கருத்தோடு ஒத்து போனது. படம் இரண்டாம் பாகம் சரி இல்லை என்று பெரும்பாலோனோர் விமர்சித்து இருந்தனர். படத்தின் கதை பெரிய அளவில் சர்ச்சைகளையும் கிளப்பியது.

அதன் பின் 'ஆயிரத்தில் ஒருவன்- இரண்டாம் பாகம்' எடுக்க செல்வராகவன் கிளம்பியயதாக நினைவு. ஆனால்அந்த முயற்சியை அவர் கை விட்டு விட்டார். ஒரு பேட்டியில் அந்த படம் தற்போதைய சூழலில் ஓடாது என்று எண்ணியதாலேயே கை விட்டு விட்டதாக கூறி இருந்தார். அவர் எண்ணியதிலும் ஒரு நியாயம் இருக்கிறது. நிச்சயம் முதல் பாகம் பார்த்தவர்களில் பாதி பேர் இரண்டாம் பாகம் பார்க்க வந்து இருக்க மாட்டார்கள். இருந்தபோதிலும் முதல் பாகம் பாதியில் நின்றதால் அந்த கதையின் முடிவு என்ன என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் என்னை விட்டு போகவில்லை. யாரேனும் செல்வராகவனின் நண்பர்கள் இதை படித்தால் அவரிடம் கதையை கேட்டு சொல்லுங்கள்.

'மயக்கம் என்ன' செல்வராகவனின் அடுத்த படம். வழக்கமான செல்வராகவன் படங்களை போலவே இதிலும் அற்புதமான பாடல்கள் மற்றும் பின்னணி இசை  இருந்தாலும்   படம் பார்க்கும்போது   எதையோ எடுக்க நினைத்து அவசர கோலத்தில் எதையோ எடுத்தது போல எண்ணம் வருவதை தடுக்க இயலவில்லை. இதில் மிக மெதுவாக செல்லும் காட்சிகள் வேறு. இருந்த போதும் சில காட்சிகளில் வழக்கமான செல்வராகவன் டச் காண கிடைத்தது. இருந்த போதிலும் பழைய '7G' செல்வராகனை இனி காணவே முடியாதோ என எனக்குள் சந்தேகம் வர தொடங்கியது இந்த படத்திற்கு பின்தான்.

இப்போது 'இரண்டாம் உலகம்' அடுத்த வாரம் வெளியாக போகிறது. பாடல்கள், இரண்டு டீசர்கள் வெளியாகி விட்டன. டீசர்களை பார்த்தால் ஹாலிவுட் படம் போல் முயன்று இருப்பார் என தோன்றுகிறது. அனிருதின் பின்னணி இசையில் இரண்டாவதாக வந்த டீசர் முதல் டீசரை விட சிறப்பாக இருக்கிறது. பாடல்களும் நன்றாகவே இருக்கின்றன. '7G' யில் நான் பார்த்து வியந்த செல்வராகவன் இந்த படத்தின் மூலம் மீண்டும் தான் ஒரு ஜீனியஸ் என்று நிரூபிப்பார் என நம்புகிறேன். பொறுத்து இருந்து பார்க்கலாம்.


Wednesday, July 24, 2013

தனுஷ் - ஒரு சிறிய அலசல் (அல்லது) நான் தனுஷ் ரசிகனான கதை

தனுஷை நான் கவனிக்க ஆரம்பித்தது 'காதல் கொண்டேன்' படத்திலிருந்து. ஒல்லி உடல்வாகு, கறுத்த நிறம், ஒட்டிய கன்னம் ஆனால் இவை  அனைத்தையும் மீறி அவர் வெளிப்படுத்திய அபார நடிப்பு என்னை கவர்ந்தது. ஆனாலும் அந்த மெலிந்த உருவத்தோடு, பள்ளிக்கூடபையனாக எத்தனை படங்களில் இவரால் நடிக்க முடியும் என நினைத்து கொண்டேன். மற்ற ஹீரோக்கள் நடிக்கும் கதைகள் இவருக்கு  பொருந்தாது என்பது அப்போது என்னுடைய எண்ணம். என்னுடைய அந்த கணிப்பை தனது அடுத்த படமான 'திருடா திருடி'யிலேயே தகர்த்தார் தனுஷ். 

'திருடா திருடி' படத்தை திரையரங்கில் பார்த்தேன். அந்த படத்தில் அவர் முகத்தை முதல் முறை திரையில் காட்டியபோது ரசிகர்கள் எழுப்பிய ஆரவாரம் என்னை திகைக்க வைத்தது. 2 படங்கள் மட்டுமே நடித்து ஒரு சிறிய நகரத்தில் இதனை ரசிகர்களை சம்பாதித்து விட்டாரே என ஆச்சரியப்பட்டேன். அந்த படத்தில் அவர் ஏற்று நடித்து இருந்த குறும்புக்கார இளைஞர் வேடம் அவரை நோக்கி மேலும் நகர்த்தியது.

அந்த கால கட்டத்தில் 'திருடா திருடி' வெற்றியோடு சேர்த்து வரிசையாக 3 வெற்றி படங்கள் கொடுத்து இருந்தார் தனுஷ். அப்போது சரியான வழிகாட்டுதல் இல்லாமலோ அல்லது வேறு எந்த காரணத்தாலோ வரிசையாக படங்களை ஒப்பு கொண்டார். ஆனால் அத்தனை படங்களுக்கும் நேரம் ஒதுக்க முடியாமல் கால்ஷீட் பிரச்சனையில் சிக்கி  கோர்ட் படி  ஏறினார் இப்படி ஒரு நல்ல காரணம், ஒரு மோசமான காரணம் இரண்டும் சேர்ந்து அவரை மீடியா டார்லிங்காக மாற்றி இருந்தது. அந்த நேரத்தில் அவர் டிவியில் அவர் அளித்த பேட்டிகள் அனைத்தையும் ஒன்று விடாமல் பார்த்தேன். அவர் பேச்சில் இருந்த முதிர்ச்சி என்னை அசர அடித்தது. 


இத்தகைய சூழலில் வெளி வந்த படம்தான் தனுஷ் முதல் முதலாக நடித்த ஆக்சன்(!!) படம் 'சுள்ளான்'. பறந்து பறந்து அடித்தும் பஞ்ச் வசனம் பேசியும் தன்னால் ஆக்சன் படமும் நடிக்க முடியும் என நிரூபித்தார் தனுஷ். படம் அத்தனை மோசமில்லை என்றாலும் தனுஷ் அடித்தால் அவர் கீழே விழாமல் அடி வாங்கியவர் கீழே விழுகிறார் என்பதை தமிழ் ரசிகர்களின் இயற்பியல் அறிவு ஏற்று கொள்ளாமல் போனதால் அந்த படம் தோல்வி அடைந்தது. அதற்கு பின் தனுஷ் அது போன்ற கதையில் இன்று வரை நடிக்கவில்லை. அந்த படம் என்னை பெரிதாக கவர தவறினாலும், அந்த படம் வெளி வந்த சமயம் தனுஷின் வாழ்வில் நடந்த ஒரு முக்கியமான விஷயம் தனுஷ் ரசிகனாக மாறுவதில் இருந்த ஒரு சிறிய மன தடையையும் நீக்கியது. அது தனுசின் திருமணம். தலைவரின் பெண்ணையே திருமணம் செய்து கொண்டு தலைவரின் உறவாக மாறிவிட்டவரை குழப்பமே இல்லாமல் ஏற்று கொள்ளலாம்தானே?

அதற்கு பின் 'திருவிளையாடல் ஆரம்பம்', 'யாரடி நீ மோகினி' போன்ற படங்களில் நடித்து தனக்கு காமெடி நடிப்பும் வரும் என்று நிரூபித்தார். 'அது ஒரு கனா காலம்', 'பொல்லாதவன்' போன்ற படங்களில் நடித்து தன்னை ஒரு க்ளாஸ் நடிகனாகவும் நிரூபித்தார். 'ஆடுகளம்' அவருக்கு தேசிய விருது பெற்று தந்தது. 'ஓய் திஸ் கொல வெறி' மிக பெரிய புகழ்  பெற்று தந்தது. இப்போது 'ராஞ்ச்னா' அவரை இந்தியா முழுவதும் கவனிக்கும் ஒரு நடிகனாக மாற்றியுள்ளது. இந்த வளர்ச்சி நான் எதிர் பாராதது. உண்மையில் தனுஷே எதிர் பார்த்திருக்க மாட்டார்.

வேறு எந்த தமிழ் ஹீரோவும் இத்தனை படம் நடிக்கவில்லையா? புகழ் பெறவில்லையா? தனுஷ் மட்டும் என்ன அதிசயம் என்கிறீர்களா? நிச்சயம் அதிசயம்தான். தனுஷ்  ரசிக்கத்தக்க மாஸ் ஆக்சன் படமோ, வசூலை அள்ளி குவிக்கும் பெரிய வெற்றி படமோ குடுத்து புகழ் அடையவில்லை. இந்தியாவே கொண்டாடும் கமலுக்கு கூட அவ்வப்போது ஆக்சன் படங்கள் தேவைப்பட்டது. ஆனால் தனுஷ்  முழுக்க முழுக்க நடிப்பு திறனை மட்டுமே வைத்து இதனை சாதித்து உள்ளார். ஏதோ ஒரு வகையில் பெரும்பாலான ரசிகர்கள் தன்னையே தனுஷ் திரையில் பிரதிபலிப்பதாக எண்ணி கொண்டனர். இதுவே தனுஷின் வெற்றிக்கு இன்னொரு காரணம். 

கடந்த வாரம் நான் 'மரியான்' பார்க்க சென்றிருந்த போதும் தனுஷை திரையில் காட்டியதும் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். ஆனால் இந்த முறை நான்  ஆச்சரியப்படவில்லை. ஏனென்றால் ஒரு ரசிகனின் உணர்வுகளை மற்றொரு ரசிகன் புரிந்து கொள்ள முடியும்தானே?

பின்குறிப்பு:

'மயக்கம் என்ன', '3', 'மரியான்' இந்த மூன்று படங்களையும் பார்த்த பின் திரை அரங்கை விட்டு மன உளைச்சலுடனே வெளியே வந்தேன். அதற்கு காரணம் தான் திரையில் காட்டிய உணர்வுகளை ரசிகர்களுக்கு கடத்தும் தனுஷின் நடிப்பாற்றலா? அல்லது இயக்குனர்களின் திறமையா என சொல்ல தெரியவில்லை. எப்படியானாலும் தனுஷ் தொடர்ச்சியாக இது போன்ற படங்களில் நடிக்காமல் சற்று இடைவெளி விடுவது நல்லது என தோன்றுகிறது.



Friday, March 22, 2013

ஆஸ்கார் நாயகன் விஜய், இளையராஜா, இலக்கியம்

நாட்ல நடக்குற போராட்டங்கள பாக்கும்போது சந்தோசம்தான். ஈழ தமிழர்களுக்கு நல்லது நடக்கும்னு தோணுது. ஆனா தனி தமிழ்நாடு அப்பிடின்னு சிலர் உளர்றதை பாக்குறப்போ எரிச்சலா  வருது. இவங்க என்ன பேசுறோம்னு தெரிஞ்சுதான் பேசுறாங்களானு புரியல . அரசாங்கம் இவங்களை ஆரம்பத்திலேயே இரும்பு கரம் கொண்டு அடக்கணும். இல்லாட்டி  எல்லாமே தப்பா போக சான்ஸ் இருக்கு.
விஜய்க்கு சரியா எக்ஸ்பிரசன் காட்ட வராதுன்னு நெனச்சிட்டு இருந்தேன். ஆனா பிச்சு உதறிட்டார். அப்பிடியே கொஞ்சம் அந்த மூஞ்சிய பாருங்க. கெக்கே பிக்கேன்னு உங்களுக்கு சிரிப்பு வரல. சரியான டைரக்டர் மட்டும் கெடச்சா நம்ம அண்ணன் ஆஸ்கார் வாங்குற நாள் ரொம்ப தூரத்துல இல்ல.


 சிலரை நெனச்சா மட்டும்தான் கடவுள் எப்படி இவங்களுக்கு இவ்வளவு அறிவை கொடுத்தார்னு ஆச்சரியமா இருக்கும். அப்படி ஒருத்தர் இளையராஜா. அவரோட ஒவ்வொரு பாட்டையும் கேக்கும்போது பிரமிப்பா இருக்கு. எங்க எந்த மாதிரி சத்தம் கொடுத்தா செட் ஆகும்;எப்படி மெட்டு போட்டா கேக்க இனிமையா இருக்கும் இது மாதிரி எல்லாமே அவருக்கு பிறவியிலேயே வந்து இருக்கு. கிட்டத்தட்ட அவரு கடவுள் நமக்கு கொடுத்த கிப்ட். இது ரொம்ப ஓவர்னு சொல்றவங்க "கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே" பாட்டு டவுன்லோட் செஞ்சு அமைதியான இடத்தில உக்காந்து கவனமா கேளுங்க. நான் சொல்றது சரின்னு புரியும்.
தமிழ்நாட்ல  பிறந்தததுக்கு நாம பெருமை பட வேண்டியதுக்கு முக்கியமான காரணம் நம்ம இலக்கியங்கள். ஆனா அது இன்னும் நம்மளுக்கு சரியா புரியல. அந்த காலத்துல நம்ம கனியன் பூங்குன்றனார் எப்படியெல்லாம் சிந்திச்சு பாட்டு எழுதி இருக்கார் பாருங்க. "யாதும் ஊரே! யாவரும் கேளிர்!"  அப்படின்னு எல்லா ஊரையும் சொந்த ஊரு ஆக்கி எல்லாரையும் நம்ம சொந்தம் ஆக்கிட்டார். இப்படி யோசிக்க எவ்வளவு பரந்த சிந்தனை வேணும்? சாலமன் பாப்பையா சொன்ன மாதிரி சங்க இலக்கியம் படிங்கயா. இளமையா இருக்கலாம்.

முடிஞ்சா கமெண்ட் போட்டுட்டு போங்க.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...