Sunday, March 31, 2013

ஐபிஎல்,சினிமா ,சிந்தனை

"வலிமையானவையே பிழைத்து கொள்ளும்" என்கிற தத்துவத்தை டார்வின் கொசுக்களை பார்த்துதான் உருவாகியிருப்பார் போலும். மனிதன் இதுவரை சிட்டுகுருவியிலிருந்து சுறா மீன் வரை மனிதன் எவ்வளவோ உயிரினங்களை அழித்து இருந்தும் அவனால் ஏன் கொசுக்களை மட்டும் அழிக்கமுடியவில்லை? கொசுக்களுக்கெல்லாம் குளிராதா? போன்ற சந்தேகங்கள் என்னை போலவே டார்வினுக்கும் வந்து இருக்க வேண்டும். இப்படி சாதாரண மனிதனையும் டார்வினுக்கு இணையாக சிந்திக்க வைத்த மின்தடை வாழ்க.

பிஎல்  வரப்போகுது. எல்லாரும் IPL பார்க்க ஆர்வமா இருப்பீங்க. ஆரம்பத்துல T-20 கிரிக்கெட்டை எதிர்த்த ஒரே  கிரிக்கெட் போர்டான இந்தியன் கிரிக்கெட் போர்ட் இன்னைக்கு பணம் கிடைக்கும்குற ஒரே காரணத்துக்காக IPL  நடத்திகிட்டு இருக்கு. ஒரு வேளை ஆஸ்திரேலியா கூட டெஸ்ட்ல இந்தியா  தோத்து இருந்தா இந்த தடவை  IPL கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கும்.பார்க்கலாம் இந்த தடவை ஸ்கிரிப்ட் படி யாரு IPL  ஜெயிக்க போறாங்கன்னு.

"இரண்டாம் உலகம் " எப்ப வரும்னு காத்துக்கிட்டு இருக்கேன். 7G பாத்ததில் இருந்து செல்வராகவன் படம்னாலே ஒரு ஆர்வம். அந்த படத்துக்கு அப்புறம்  நான் செல்வராகவனை ஒரு ஜீனியஸா நினைக்க ஆரம்பிச்சேன்  . 7G க்கு அப்புறம்வந்த படங்கள்ல கூட எல்லா படத்துலயும் ரசிக்கிற மாதிரியோ இல்ல  அதிர வைக்கிற மாதிரியோ சீன்ஸ் நெறைய இருக்கும். இருந்தும் ஒட்டு மொத்த படமா பாக்கும்போது  எந்த படமும் பெருசா கிளிக் ஆகல. அந்த குறைய இந்த படம் தீர்க்கும்னு நம்புவோம். 



காதல் தோல்வின்னா, பெண்கள் மேல ஆண்கள் வன்முறைய பிரயோகிக்க என்ன காரணம். நிச்சயம் ஆணாதிக்க மனோபாவம்தான். எப்பவும் பெண் தனக்கு அடங்கியே  இருக்கணும்னு நெனைக்கிறான். ஒரு ஆண்  என்னதான் பெண்களை தனக்கு சரிசமமா நெனைக்கிற மாதிரி காமிச்சுக்கிட்டாலும் அவன் உள்மனசுல பெண்களை தனக்கு கீழதான் வச்சி இருக்கான். ஒரு பெண்ணால புறக்கணிக்கப்படுறதையோ,அவமானப்படுத்தப்படுறதையோ அவனால தாங்கிக்கவே முடியாது. உண்மைய சொல்லணும்னா இன்னும் ஒரு பெண்ணுக்கு கீழ வேலை செய்றதையே இன்னும் ஆண் விரும்பலை. ஒரு பெண் தன்னை பிடிக்கலைன்னு சொல்லிட்டா அவன் ஈகோ பெரிய அளவில்  பாதிக்கப்படுது. இது மாறணும்னா சின்ன வயசுல இருந்தே ஆணும் பெண்ணும் சமம்னு பசங்களுக்கு சொல்லி தர்றதுதான் ஒரே வழி.

பாரதியார் கவிதைகளை படிச்சா ஆச்சரியமா இருக்கு. அவர் சிந்தனைகளை பாக்கும்போது எப்படி ஒரு மனிதரால இப்படி எல்லாம் சிந்திக்க முடியும்னு பிரமிப்பா இருக்கு. அரசியல்ல ஆரம்பிச்சு ஆன்மிகம் வரை அவர் எழுதாத ஏரியாவே இல்ல. பாட்டுலயே மக்களுக்கு தைரியம் சொல்லி,  ஞானம் கொடுத்து, அவங்களை நெனைச்சு கவலைப்பட்டு, புரட்சிகரமா சிந்திச்சு, இயற்கையை ரசிச்சு இப்படி சொல்லிகிட்டே போகலாம். வறுமை நிலையிலையும் அவருக்கு இருந்த ஆட்டிடுயூட் நம்ப முடியாதது .அவர் இன்னும் கொஞ்ச காலம் உயிரோட இருந்தா நமக்கு இன்னும் எவ்வளவோ கிடைச்சு இருக்கும். நேரம் கிடைச்சா அவர் கவிதைகளை படிச்சு பாருங்க. நீங்களே சொல்லுவீங்க அவர் ஒரு ஆச்சரியம்னு.

கருத்து சொல்லிட்டு போங்க 




Wednesday, March 27, 2013

வாத்தியார்களும், நாமும் (சின்னதா பிளாஷ் பேக் போயிட்டு வாங்க )

உங்களோட ஒன்னாம் வகுப்பு ஆசிரியரை நினைவிருக்கிறதா? எத்தனை வருஷம் ஆனாலும் நீங்க அவங்களை மறந்து இருக்க மாட்டீங்க. எழுத்து அறிவித்தவன் இறைவன்னு சொன்னா  நமக்கு எழுத படிக்க சொல்லி தந்த அவங்களும் இறைவன் மாதிரிதான். அதனாலதானோ என்னவோ அவங்க நம்ம நெனவுல எப்பவுமே இருக்காங்க. உண்மையிலேயே ஆசிரியர் தொழில் புனிதமானது. ஒரு ஆசிரியர்  எல்லா மாணவர்களையும் தன் பிள்ளையா ஏத்துகிட்டு பாடம் எடுக்கிறவறா இருக்கணும். வேலைல இருந்து  ரிடையர் ஆனப்புறமும், வழில சந்திக்கிற முன்னாள்  மாணவர்கள் மரியாதை கொடுத்து பேசும்போது ஏற்படுற சந்தோசம் இருக்கே, அதுதான் இந்த தொழில் தர்ற சந்தோசம். அதே நேரத்துல ஆசிரியர்கள் படுற கஷ்டமும் கொஞ்ச நஞ்சமில்லை.

ஆசிரியர்களுக்கும் நமக்குமான உறவு அழகானது. ஆரம்ப பள்ளியில இருந்து  கல்லூரி காலம் வரை நாம விதவிதமான ஆசிரியர்களை சந்திக்கிறோம். வயசு ஆக ஆக ஆசிரியர்கள் பத்தின நம்ம பார்வையும் மாறிகிட்டே வந்து  இருக்கும். ஆனாலும் இன்னைக்கும் நம்மோளோட ஆசிரியர்கள் பத்தி நினைக்கும்போது நமக்கு பலவிதமான  நினைவுகள் வரும்.

பெரும்பாலும் நம்ம ஆரம்ப பள்ளி நாட்கள்ல பெண் ஆசிரியர்களையே  பாத்து இருப்போம். காரணம் சின்ன பசங்களுக்கு பொறுமையா சொல்லி தர பெண் ஆசிரியர்களாலேயே முடியும். ஆரம்ப பள்ளி காலத்துல ஆசிரியர்களை நாம சாதாரண மனுசங்களா நினைச்சு இருக்க மாட்டோம் . அவங்க மேல ஒரு பயமும் , மரியாதையும் இருந்திருக்கும். சிலருக்கு அவங்க ஆசிரியர் ஒரு தேவதை மாதிரி கூட தெரிஞ்சு இருப்பாங்க. சிலருக்கு ஆசிரியர் மேல ஒரு பக்தி கூட இருந்து இருக்கும்.

தொடக்கப் பள்ளி முடிச்ச பின்னாடி நமக்கும், ஆசிரியர்களுக்குமான உறவு  கொஞ்ச கொஞ்சமா வேற பரிமாணத்தை அடைஞ்சு இருக்கும். அவங்க மேல உள்ள மரியாதை சுத்தமா குறைஞ்சு, அவங்களுக்கு பட்ட பேரு வச்சு பேசுற அளவு போயிருக்கும். நமக்கு  15,16 வயசு ஆகும்போது  அவங்க நமக்கு வில்லனா தெரிய ஆரம்பிச்சு  இருப்பாங்க.


குறிப்பா 13 வயசை  தாண்டுன பசங்களுக்கு பாடம் எடுக்கிற கட்டத்துல பெண் ஆசிரியர்கள் படுற பாடு கொஞ்ச நஞ்சமில்லை. தன்னை பத்தின பசங்களோட மோசமான கமெண்டை கேட்டும் கேட்காத மாதிரி இருந்துகிட்டும், பசங்க தன மேல படர விடுற பார்வைல இருந்து தன்னை காத்துகிட்டும் பாடம் எடுக்க வேண்டிய கஷ்டம் அவங்களுக்கு. இது மட்டும் இல்லாம, பசங்க பாத்ரூம்ல 'ஐ லவ் யூ டீச்சர்' னும், படம் வரைஞ்சு பாகங்களை குறிச்சு ஏற்படுத்துற அவமானங்களையும் பொறுத்துக்கணும்.காலேஜ் லெக்சரர்ஸ் நிலைமை சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

ஆனா என்ன  இருந்தாலும் சில ஆசிரியர்கள்,  நமக்கு   ரொம்ப பிடிச்சவங்களா இருப்பாங்க. அவங்க உங்களுக்கு சோறு ஊட்டி விட்டு இருக்கலாம்,  உங்களை எல்லார் முன்னாடியும்  பாராட்டுனவங்களா இருக்கலாம், நீங்க காதலிச்சவங்களா இருக்கலாம், உங்களுக்கு பீஸ் கட்டி உதவி செஞ்சவங்களா  இருக்கலாம், நீங்க செஞ்ச தப்பை கண்டிச்சுட்டு மட்டும் விட்டவங்களா இருக்கலாம், உங்க தலைல குட்டி பாடத்தை புரிய வச்சு பாஸ் செய்ய வச்சவங்களா இருக்கலாம் . 

 நம்மளை ஸ்பெஸலா பீல் பண்ண வைக்கிற ஆசிரியர்களை நமக்கு சுலபமா  பிடிச்சு போகுது. இதே மாதிரி ஒரு ஆசிரியர் எல்லா மாணவர்களையும் பீல் பண்ண வைக்கும்போது அவங்க மாணவர்களோட பேவரிட் ஆயிடறாங்க. இந்த மாதிரி ஆசிரியர்களை மாணவங்க விட்டு கொடுக்குறதே இல்ல. அவங்களுக்காக எதையும் செய்ய தயார் ஆயிடுறாங்க. இப்படிப்பட்ட ஆசிரியர்களுக்கு  மாணவங்ககிட்ட கிடைக்குற மரியாதையே தனி.

ஆனா இன்னைக்கு சூழ்நிலை "வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை" அப்படின்னு நெனைக்கிற மாதிரி மாறிட்டு வருது. வேற வேலை கிடைக்காம போனவங்கதான் பெரும்பாலும் ஆசிரியர் தொழிலுக்கு வராங்கா. டிவிலயும், இன்டர்நெட்லயும் எல்லாத்தையும் கத்துகிற மாணவர்களுக்கு மத்தியில இவங்க பாடு இன்னும் திண்டாட்டமா இருக்க போகுது. ஆனாலும் இவங்கள்லயும் மாணவர்களுக்கு பிடிச்ச ஆசிரியர்கள் உருவாகத்தான் போறாங்க. மாணவர்கள் மதிக்கிற ஆசிரியர்கள் உருவாகத்தான் போறாங்க . ஏன்னா நேத்துக்கும், இன்னைக்கும் மட்டும் இல்ல. என்னைக்குமே குரு தெய்வம்தான் . என்னைக்குமே மரியாதையான வேலை வாத்தியார் வேலைதான்.

விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன 

Sunday, March 24, 2013

சுட்டி குட்டீஸ் -மிஸ் செஞ்சுடாதீங்க, இல்ல வருத்தபடுவீங்க

ட்டு  வருசம்  முன்னாடி வரைக்கும்  சன் டிவியோட பொற்காலம் அப்படின்னு சொல்லலாம். சன் டிவில  என்ன நிகழ்ச்சி போட்டாலும் மக்கள் வேற வழி இல்லாம  பாத்து தீத்தாங்க. அது ராதிகா ஆன்ட்டி ஆம்பளைங்களை எல்லாம் அறைஞ்சு தன்னம்பிக்கை பெண்ணா வலம் வந்த சீரியலா இருந்தாலும் சரி. இல்ல கால் மேல கால் போட்டுகிட்டு சினிமாக்கு எல்லாம் நம்பர் சொன்ன டாப் 10 மூவிஸா இருந்தாலும் சரி. அவங்க கொடுத்ததெல்லாம் ஹிட்டுதான். 

அவங்களும் சந்தோசமா ஒரு நாளைக்கு 12 மணி நேரம் மெகா சீரியல் காமிச்சு போட்டியே இல்லாம நம்பர் ஓன்னா இருந்தாங்க. லைவ் ப்ரோக்ராம்ல  பாட்டு போடற  காலம் வந்த அப்புறமும் விடாம உமாவை வச்சு உங்கள் சாய்ஸ் நடத்திகிட்டு இருந்தாங்கனா பாத்துகங்களேன். அம்சமா டிவிக்கு  வந்த உமா, ஆன்ட்டி ஆன அப்புறமும் அந்த  நிகழ்ச்சியை  நடத்தி சாதனை படைச்சாங்க  . நல்லா இல்லாட்டியும் மக்கள் வேற வழி இல்லாம அவங்க அரைச்ச மாவுலேயே இட்லி சுட்டு சாப்பிட்டு இருந்தாங்க 

இப்பிடி போயிட்டு இருந்தப்போ விஜய் டிவி, ஸ்டார் விஜயா மாறிச்சு. மாறினவங்க புதுசு புதுசா யோசிச்சு நிகழ்ச்சி செய்ய ஆரம்பிச்சாங்க. ரியாலிட்டி ஷோனு ஆரம்பிச்சு நிகழ்ச்சில வர்ற எல்லாரையும் அழ விட்டும்,  சண்டை போட விட்டும் மக்களை கவர் பண்ண ஆரம்பிச்சாங்க  மக்களும் கொஞ்சம் கொஞ்சமா விஜய் டிவி பக்கம் பார்வையை திருப்புனாங்க. ஆரம்பத்துல சன் டிவி அதை பெருசா எடுத்துகிட்ட மாதிரி தெரியல. "கலக்க போவது யாரு" மாதிரி சில  நிகழ்ச்சிகளை  மட்டும் விஜய் டிவி கிட்ட இருந்து காப்பி அடிச்சுகிட்டாங்க . ஆனா புதுசா முளைச்ச கலைஞர் டிவி அப்படியே விஜய் டிவியை காப்பி அடிச்சது. அது மட்டும் இல்லாம  சன் டிவி ல இருந்த ஆளுங்களை வேற தன் பக்கம் இழுத்திகிச்சு. சன் டிவிக்கு தலை வலி ஆரம்பிச்சு.


இபோ சன் டிவி எதாவது புதுசா செய்ய வேண்டிய கட்டாயம். அவங்களும் ட்ரை பண்ணாங்க. ஆனாலும் பெருசா ஏதும் கிளிக் ஆகல. காப்பி அடிச்சு செஞ்ச நிகழ்ச்சிகளும் செட் ஆகல. இருந்தாலும் அவங்க ட்ரை பண்றதை விடல. ஆனா இப்போ கொஞ்ச நாளா அவங்களுக்கு ஒரு நிகழ்ச்சி திருப்தியான நிகழ்ச்சி கிடைச்சு இருக்கு. அதான் சுட்டி குட்டீஸ். முன்னாடி சன் டிவில "மலரும் மொட்டும்" அப்படின்னு ஒரு நிகழ்ச்சி வரும். பிள்ளைங்க வந்து அமைதியா பாட்டு பாடிட்டு போகும். கேக்குற கேள்விக்கு பதில் சொல்லும். பொதுவா இந்த மாதிரி சொல்லி குடுத்ததை அப்படியே  செய்யுறது போர் அடிக்கும் . அதுக்கு பதிலா அந்த குழந்தைங்களயே சுதந்திரமா பேச விட்டா என்ன ஆகும் ? அதுதான் இந்த நிகழ்ச்சி.

குழந்தைங்களை வச்சு ஒரு டாக் ஷோ நடத்துறது எல்லாராலும் செய்ய முடியாத ஒரு விஷயம். அதை இமான் அண்ணாச்சி அற்புதமா செய்றார்.குழந்தைங்க ஒரு விசயத்தை எப்படி புரிஞ்சு வச்சு இருக்குனு அவங்க கிட்ட கேள்வி கேட்டு தெரிஞ்சுகிறதுதான் நிகழ்ச்சியோட ஐடியா. கூடவே அவங்க அப்பா, அம்மா சண்டை குடும்ப விஷயம் எல்லாத்தையும் அவங்க பார்வைல தெரிஞ்சுகிறது காமெடியா இருக்கு. அப்படியே சமயத்துல  அவங்க பேசுற பேச்சு பயமாவும், இந்த காலத்துல ஒரே பிள்ளை பெத்துகிட்டு அதுக்கும் ஓவரா செல்லம் கொடுத்து கெடுக்குறாங்களோன்னு கவலையாவும் இருக்கு. இதெல்லாம் யோசிக்காம பாத்தா நிச்சயம் 15 நிமிஷம் விழுந்து விழுந்து சிரிக்கலாம்.
 
நிகழ்ச்சில 2 குழந்தைங்க என்ன பேசிச்சின்னு கீழ கொடுத்து இருக்கேன் பாருங்க.

 இமான் அண்ணாச்சி : உங்க அம்மா, அப்பாவை கொஞ்ச தூரம் தள்ளி இருக்கும்போது எப்படிமா கூப்பிடுவாங்க?
குழந்தை:ஏங்க! குறுக்கு வலிக்குது. வந்து தைலம் தேச்சு விடுங்களேன்.

இமான் அண்ணாச்சி  : அம்மா, அப்பாவை அடிப்பாங்களா?
குழந்தை:  கிட்சன்ல இருக்கும்போது டிஸ்டர்ப் பண்ணா அடிச்சிடுவாங்க 

 நல்ல வேளை. எடிட் செஞ்சு போட்டதால குடும்ப மானம் தப்பிச்சது. இல்ல அந்த குழந்தை சொன்னது எல்லாம் போட்டு இருந்தா மானம் காத்துல பறந்து இருக்கும். இனிமேலாச்சும் குழந்தைங்க முன்னாடி ஒழுங்கா இருங்கப்பா.

நிகழ்ச்சி ஆரம்பிச்ச புதுசுல கொஞ்சமா விளம்பரம் இருந்துச்சு. ஆனா இப்போ 15 நிமிஷம் விளம்பரம்தான் ஓடுது. எப்படியோ சன் டிவிக்கு இந்த நிகழ்ச்சி ஹிட்டுதான். நிச்சயம் இந்த நிகழ்ச்சியை மிஸ் செஞ்சுடாதீங்க, இல்ல வருத்தபடுவீங்க 

 கருத்து சொல்லிட்டு போங்க 


Saturday, March 23, 2013

திருட்டு டிவிடிய ஆதரிங்க

"அந்த காலத்துல நாங்க அரை அணா கொடுத்து படம் பாப்போம். வீட்டுக்கு வரப்போ எங்க பாட்டி வீட்டுக்குள்ள விடாம வாசல்ல நிறுத்திடுவாங்க. இப்போ  நீங்க கொஞ்சம் கூட யோசிக்காம  பதினஞ்சு ரூபாய் கொடுத்து படம் பாக்குறீங்க". இப்பிடி என் தாத்தா சொன்னது பதினெட்டு வருஷம் முன்னாடி. நல்ல வேளை இப்போ நடக்கிறது எல்லாம் பாக்காம போய் சேந்துட்டார். இப்போ 100 ரூபாய், 150 ருபாய் கொடுத்தெல்லாம் படம் பாக்குறது தெரிஞ்சா என்ன சொல்லுவாருன்னு நெனச்சே பாக்க முடியல.

வருசா வருசம் விலைவாசி கூடுது அப்பிடின்னு நம்ம எல்லாருக்கும் தெரியும். ஆனா சினிமா  தியேட்டர் டிக்கெட் மாதிரி வேற எந்த பொருளும் விலை கூடுன மாதிரி தெரியல. 2003 ல "தூள்" படம் 25 ரூபாய் கொடுத்து பாத்தேன். ஆனா இன்னைக்கு அந்த தியேட்டர்ல படம் பாக்கணும்னா 100 ரூபாய் வேணும்.  அதாவது 10 வருசத்துக்குள்ள 75 ரூபாய் கூடி இருக்கு. இதுல சின்ன ஒரு பெரிய ஊருன்னு எந்த வித்தியாசமும் இல்ல. 



லேட்டஸ்ட்டா ஒரு படம் வந்திச்சே வத்திக்குச்சினு. அந்த படம் பாக்கலாம்னு போனேன். மெட்ராஸ் அடுத்து இருக்குற ஒரு சின்ன ஊருதான். சின்ன தியேட்டர்தான். முகம் தெரியாத ஒரு ஹீரோ, புதுசா வந்த டைரக்டர். ஆனா அவன் சொன்ன டிக்கெட் விலை 100 ரூபா.  தியேட்டர்ல மொத்தமா 10 பேரு கூட இல்ல. பைரசி பிரச்னை. அதான் சீக்கிரமா காசு எடுக்க பாக்கறோம்னு அவங்க சொல்றாங்க. ஆனா 50 ரூபாய் டிக்கெட் வச்சா கூட்டம் நிச்சயாம ஜாஸ்தி ஆகும். மௌத்-டாக்ல படத்துக்கு விளம்பரமும் ஆகுமே. இது அவங்களுக்கும் தெரியும். ஆனா  தியேட்டர்க்கு வரவன் கிட்ட எவ்வளவு முடியுமோ அவ்ளோ காசு பிடுங்கணும்னு ஆசைல மத்ததெல்லாம் மறஞ்சுடுது. டிவி வந்ததால சில தியேட்டர் மூடுனது உண்மை. ஆனா மிச்ச முள்ள தியேட்டர்ங்க மூடபட்டா அதுக்கு தியேட்டர்காரங்கதான் காரணமா இருப்பாங்க 

ஒரு மல்டிப்ளெக்ஸ் தியேட்டர்ல டிக்கெட் ஜாஸ்தி சொன்னா சரிதான் . சின்ன சின்ன  தியேட்டர்ல கூட இப்பிடி காசு பிடுங்குறதுதான் பொறுக்க முடியல. இருந்தாலும் சினிமா பாக்காம எப்படி ஒரு  தமிழனால இருக்க முடியும்.அதுனால கேட்ட காசை குடுத்து உள்ளேயும் போயிடுறோம். அப்படி உள்ள போனதுக்கப்புறம் நடக்கிறது கொடுமை. படம் ஆரம்பிச்ச உடனே பின்னாடி இருன்னு ஒருத்தன் "சார்! படம் மறைக்கிது. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி உக்காருங்க" னு  சொல்லுவான். வேற வழி. அப்பிடியே கீழ சரிஞ்சு உக்கார வேண்டியதுதான். நிச்சயம் வீட்டுக்கு முதுகு வலியோட போகலாம்.

இப்போ ஏதோ புது டெக்னாலஜில படம் போடுவான் போல. கரண்ட் 2 மணி நேரம் மட்டும் இருக்குற ஊருல எதுக்கு டெக்னாலஜினு தெரியல. கரண்ட் கட் ஆனா சவுண்ட் கட் ஆயிடுது. ஆனா படம் மட்டும் ஓடிகிட்டே இருக்கு. ஆப்ரேடர் நாம போடற சத்ததுல  முழிச்சுகிட்டா ஓகே. இல்ல ஜெனரேடர் ஆன் பண்ற வரைக்கும் ஊமை படம்தான்.

அப்புறம் இன்டர்வல்ல சாப்பிடுற பண்டங்களுக்கு  அவன் வைக்கிறதுதான் விலை. பசில என்ன பண்றதுன்னு சொன்ன காசை குடுத்து அதயும் வாங்கிப்போம். இப்பிடி எல்லா கஷ்டத்தையும் மீறி படம் பாக்குறோம். அந்த படம் நல்லா இருந்தா இந்த கஷ்டம் எல்லாம் மறைஞ்சிடும். ஆனா வர படத்துல பாதி நம்ம கஷ்டத்தை ஜாஸ்தியாத்தான் ஆக்குது.

ஆகவே மக்களே நான் என்ன சொல்ல வரேன்னா இனிமே நாம திருட்டு DVD லயே படம் பாப்போம். திருட்டு DVD பாக்குறதுக்கு குற்ற உணர்ச்சி எல்லாம் வேண்டாம். அவங்க பணம் சம்பாதிக்க பாக்கும்போது நாம நம்ம பணத்தை மிச்சம் பிடிக்கிறதுல  என்ன தப்பு. தியேட்டர் போகாட்டி சினிமா அழிஞ்சிடுமேனு கேக்குறீங்களா? அதுக்காக கவலை பட வேணாம். சினிமாலாம் DTH ல வரும். அப்புறம் சன் டிவிலயே ரிலீஸ் ஆகும். என்ன சினிமான்னு பேரு மட்டும் சீரியல்னு மாறிடும். அதுனால நமக்கு ஒன்னும் நஷ்டம் இல்ல. 

கருத்து சொல்லிட்டு போங்க 

Friday, March 22, 2013

ஆஸ்கார் நாயகன் விஜய், இளையராஜா, இலக்கியம்

நாட்ல நடக்குற போராட்டங்கள பாக்கும்போது சந்தோசம்தான். ஈழ தமிழர்களுக்கு நல்லது நடக்கும்னு தோணுது. ஆனா தனி தமிழ்நாடு அப்பிடின்னு சிலர் உளர்றதை பாக்குறப்போ எரிச்சலா  வருது. இவங்க என்ன பேசுறோம்னு தெரிஞ்சுதான் பேசுறாங்களானு புரியல . அரசாங்கம் இவங்களை ஆரம்பத்திலேயே இரும்பு கரம் கொண்டு அடக்கணும். இல்லாட்டி  எல்லாமே தப்பா போக சான்ஸ் இருக்கு.
விஜய்க்கு சரியா எக்ஸ்பிரசன் காட்ட வராதுன்னு நெனச்சிட்டு இருந்தேன். ஆனா பிச்சு உதறிட்டார். அப்பிடியே கொஞ்சம் அந்த மூஞ்சிய பாருங்க. கெக்கே பிக்கேன்னு உங்களுக்கு சிரிப்பு வரல. சரியான டைரக்டர் மட்டும் கெடச்சா நம்ம அண்ணன் ஆஸ்கார் வாங்குற நாள் ரொம்ப தூரத்துல இல்ல.


 சிலரை நெனச்சா மட்டும்தான் கடவுள் எப்படி இவங்களுக்கு இவ்வளவு அறிவை கொடுத்தார்னு ஆச்சரியமா இருக்கும். அப்படி ஒருத்தர் இளையராஜா. அவரோட ஒவ்வொரு பாட்டையும் கேக்கும்போது பிரமிப்பா இருக்கு. எங்க எந்த மாதிரி சத்தம் கொடுத்தா செட் ஆகும்;எப்படி மெட்டு போட்டா கேக்க இனிமையா இருக்கும் இது மாதிரி எல்லாமே அவருக்கு பிறவியிலேயே வந்து இருக்கு. கிட்டத்தட்ட அவரு கடவுள் நமக்கு கொடுத்த கிப்ட். இது ரொம்ப ஓவர்னு சொல்றவங்க "கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே" பாட்டு டவுன்லோட் செஞ்சு அமைதியான இடத்தில உக்காந்து கவனமா கேளுங்க. நான் சொல்றது சரின்னு புரியும்.
மிழ்நாட்ல  பிறந்தததுக்கு நாம பெருமை பட வேண்டியதுக்கு முக்கியமான காரணம் நம்ம இலக்கியங்கள். ஆனா அது இன்னும் நம்மளுக்கு சரியா புரியல. அந்த காலத்துல நம்ம கனியன் பூங்குன்றனார் எப்படியெல்லாம் சிந்திச்சு பாட்டு எழுதி இருக்கார் பாருங்க. "யாதும் ஊரே! யாவரும் கேளிர்!"  அப்படின்னு எல்லா ஊரையும் சொந்த ஊரு ஆக்கி எல்லாரையும் நம்ம சொந்தம் ஆக்கிட்டார். இப்படி யோசிக்க எவ்வளவு பரந்த சிந்தனை வேணும்? சாலமன் பாப்பையா சொன்ன மாதிரி சங்க இலக்கியம் படிங்கயா. இளமையா இருக்கலாம்.

முடிஞ்சா கமெண்ட் போட்டுட்டு போங்க.


Wednesday, March 20, 2013

ஈழ போராட்டம் - புதிய விதி செய்த மாணவர்கள்

17 வயதில் - ஒரு பாடம் விடாமல் டுயூசன் போய் +2 பரீட்சை எழுதுவதும்

18 வயதில் - நெடுஞ்சாலை ஓரம்  எதாவது பொறியியல் கல்லூரியை தேடி  கண்டு பிடித்து  படிப்பதும் .

21 வயதில் - அதிலும் அரியர் மேல் அரியர் வைத்து கடைசி செமஸ்டரில் எல்லாவற்றையும் க்ளியர் செய்வதும்  

23 வயதிற்குள் - கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கியோ அல்லது மாமா, மச்சான் என்று  ரெபரன்ஸ் பிடித்தோ ஒரு சாப்ட்வேர் நிறுவனத்திலோ அல்லது அரசு நிறுவனத்திலோ வேலை வாங்குவதும் 

25 வயதில் - விசாவிற்கு காத்திருந்து டாலரில் சம்பாதிக்க அமெரிக்கா செல்வதும் 

27 வயதில் - அமெரிக்கா மாப்பிள்ளை அல்லது அரசாங்க மாப்பிள்ளை  அந்தஸ்துடன் ஒரு பெண்ணை பிடித்து மணம் செய்வதும் 

30 வயதில் - பிள்ளை பெற்று கொள்வதும் 

32 வயதில் - ஒரு வீடு வாங்கி வாழ்கையில் செட்டில் ஆகி விட்டதாக நிம்மதி அடைவதும்  

58 வயதில் - "நாங்கல்லாம் அந்த காலத்தில" என அலட்டி கொள்வதும் 

மேற்கண்டவை மட்டுமே தமிழனின் உயர்ந்த பட்ச இலட்சியங்கள் என நினைத்து கொண்டிருந்தேன். நான் எண்ணிய அனைத்தையும் தவறு என புரிய வைத்து விட்டனர் இந்த மாணவர்கள்.  தமிழ்நாடு முழுவதும் கொழுந்து விட்டு எரியும்  தீயை ஒரு வத்திகுச்சியாக இருந்து கொளுத்திய அவர்களுக்கு ஒரு சல்யூட்.



Sunday, March 17, 2013

ஈழம் உருவானால்?

கடந்த சில நாட்களாக தமிழ்நாடு கொந்தளித்து கொண்டு இருக்கின்றது. லயோலா கல்லூரி  மாணவர்கள் பற்ற வைத்த தீ தமிழ்நாடு முழுவதும் பரவி கொண்டு இருக்கிறது. ராஜபக்ஷேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், இலங்கையில் நடந்ததை இன படுகொலையாக அறிவிக்க வேண்டும், தனி ஈழம் வேண்டும் என பல கோரிக்கைகளுடன் போராடிக்கொண்டு இருக்கின்றனர். கோரிக்கைகள் நிறைவேருகின்றதோ இல்லையோ, குறைந்த பட்சம் ஈழ மக்கள் தனியாக இல்லை என்பதையாவது இந்த போராட்டங்கள் இலங்கை அரசுக்கு உணர்த்தும்.

ஈழம் ஏன் தேவை?



சிங்களர்களிடம் எப்போதும் ஒரு தமிழன வெறுப்பு இருந்து கொண்டே வருகிறது. புலிகள், தமிழர்களின்  எந்த உரிமையை காப்பதற்காக போராடினார்களோ  அதை இனி சிங்களர்களிடமிருந்து  தமிழர்கள் பெறுவது கடினம் என்றே தோன்றுகிறது. மேலும் இலங்கையில் தமிழர்களின் அடையாளங்கள்  அளிக்கப்பட்டு வருகிறது என்பதை அறியும்போது தனி ஈழம்தான் ஒரே தீர்வு என்று சொல்வது சரி என்றே படுகிறது. இல்லாவிடில் இலங்கை தமிழர்கள் தங்கள் அடையாளம் இழந்து இரண்டாம் தர குடி மக்களாகவே வாழ வேண்டி இருக்கும்.  மக்களிடம் வாக்களிப்பு நடத்தி அவர்கள் விரும்பினால் தனி ஈழம் அமைத்து கொடுப்பதே உலகம் அவர்களுக்கு செய்ய வேண்டியது.

நடைமுறை சிக்கல்கள் 

ஆனால்  உலக நாடுகளுக்கு தங்கள் சுயநலம்தான் முக்கியமே தவிர எப்போதும் தனி நாடு கோரிக்கையை ஆதரிக்க போவது இல்லை. அதிலும் இந்தியா ஒருபோதும் ஈழத்திற்கு ஆதரவு தராது.

ஈழம் உருவானால்?

ஒரு வேளை  ஈழம் உருவானாலும் அதன் எதிர்காலம் கவலைப்பட வேண்டிய ஒன்றாகவே இருக்கும். ஒரு சிறிய தீவில் இலங்கையை  பகைத்து கொண்டு ஈழம் உருவாகுமானால் அதன் பின் என்ன நடக்கும் என்று சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்தியா-பாகிஸ்தான், இஸ்ரேல்-பாலஸ்தீனம் போன்ற நாடுகளை விட இந்த நாடுகளின் உறவு மிக மோசமாக இருக்கும். அடிக்கடி நடக்கபோகும் போர்களால் பாதிப்பு அடைய போவது மீண்டு ஈழ மக்களே. என்னதான் வலிமையான ராணுவத்தை ஈழ மக்கள் உருவாக்கினாலும் அவர்களின் அமைதியான வாழ்க்கை கேள்விக்குறிதான். காலம் முழுவதும் பாதுகாப்புக்கு  மற்ற நாடுகளை நம்பியே ஈழ மக்களால்  வாழ முடியாது


ஈழம் தீர்வா ?

தனி ஈழம்தான் சிறந்த தீர்வு என்று தோன்றினாலும் அந்த மக்களின் நிம்மதியான வாழ்க்கைக்கான வழி என்ன என்று சிந்தித்து செயல்படுவதே நம் கடமை. மீண்டும் அந்த மக்களை மீண்டும்  போர்க்களத்தில் நிறுத்துவது தீர்வாகாது. இனியாவது அவர்களுக்கு நல்லதே நடக்கும் என நம்புவோம்.

விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்கு கவனிக்கவும் ஈழம் வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. அந்த மக்களின் நிம்மதியான வாழ்க்கைக்கு வழி செய்ய வேண்டும் என்றே கூறியுள்ளேன்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...