Showing posts with label புலம்பல். Show all posts
Showing posts with label புலம்பல். Show all posts

Friday, February 20, 2015

வாட்ஸ்அப் காப்பிகள் – தீர்விருந்தால் சொல்லவும்

இந்த வலைப்பூவில் எழுத ஆரம்பித்து இன்னும் சில நாட்களில் இரண்டு ஆண்டுகள் முடியப்போகிறது. பொழுதுபோக்குக்காக எதையோ கிறுக்குவோம் என்று தொடங்கி என்ன எழுதுவது  என்று தெரியாமல் என்னென்னவோ எழுதி ஒருவாறாக செட்டில் ஆகவே ஒரு வருடம் ஆகிவிட்டது. இரண்டு ஆண்டுகளில் பெரிதாக எதையும் சாதித்து விடவில்லை என்றாலும்  எழுத தொடங்கும்போது நான் கொண்டிருந்த லட்சியம் இந்த வலைப்பூவுக்கென்று   ஒரே ஒரு வாசகரையாவது பெற்று விட வேண்டும் என்பதுதான். அந்த லட்சியத்தில் நான் வெற்றி பெற்றுவிட்டேன் என்றே கருதுகிறேன். ஒவ்வொரு பதிவையும் ஆயிரம் பேர் படிக்கிறார்கள் என்றால் அதில் பத்து பேராவது இவன் எதையாவது உருப்படியாக எழுதி இருப்பானே என்று எழுதி படிக்கிறவர்கள் என்பது எனது கணிப்பு.

ஆரம்பத்தில் எல்லாம் எதையாவது எழுதி விட்டு பின்னூட்டங்கள் வந்து குவிந்து இருக்கும் என்று அடிக்கடி பார்த்து கொண்டே இருப்பேன். ஆனால் ஒரு கமெண்ட் வந்தாலே ஆச்சரியம். ஆனால் அந்த பின்னூட்டமும் பெரும்பாலும்  எழுதியதை படித்து பார்க்காமல் வந்த டெம்ப்லேட் வந்ததாகவே இருக்கும். பின்னர் போகப்போக பின்னூட்டங்களை எதிர்பார்ப்பது தவறு என்று புரிந்தது. நாமே எத்தனையோ பேரின் வலைப்பூக்களை படிக்கிறோம்;ஆனால் எத்தனை பேருக்கு பின்னூட்டம் இட்டிருப்போம் என்று மனதை சமாதானப்படுத்தி கொண்டேன். இருந்தாலும் என்னுடைய ஒரு வாசகரையாவது பெற்று விடுவது என்ற லட்சியத்தில்  வெற்றி பெற்றுவிட்டேனா  என்று எப்படி சரி பார்ப்பது என்று அறிய இயலவில்லை. பின்னர் கிடைக்கும் அத்தனை பாலோயர் விட்ஜெட்டுகளையும் வலைப்பூ பக்கத்தில் சேர்த்து ஒருவாறாக என்னுடைய லட்சியம் ஈடேறிவிட்டதை ஒருவாறாக அறிந்து கொண்டேன்.

சரி, இதற்கு ஏன் இத்தனை அலட்டல். ஏதோ இலக்கியத்தில் நோபல் பரிசு கிடைத்தது போல என்று நினைக்க வேண்டாம். இன்று காலையில் வாட்ஸ்அப்பில் வந்த ஒரு தகவலே இந்த பதிவை எழுதுவதன் காரணம். நான் ஓராண்டுக்கு முன் எழுதிய “ஒரு கார்ப்பரேட் நீதிக்கதை”என்ற பதிவு  அப்படியே ஒரு வாட்ஸ்அப் க்ரூப் மூலம் வந்திருந்தது. என்னுடைய பதிவு பல பேரை சென்றடைந்து கொண்டிருக்கிறது என்பது ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் யோசித்து எழுதியது  வலைப்பக்கம் பெயர் குறிப்பிடப்படாமல் சுற்றி வருவது சிறிது வருத்தம்தான். இந்த வருத்தம் எப்படிப்பட்டது என்பதை காக்கா வடை திருடிய கதையை எழுதியவர் இன்றிருந்தால் அவரால் உணர முடியும். யார் கண்டது, என்னுடைய கதையும் நாளை பெயர் தெரியாதவர் எழுதியது என்று அடையாளப்படுத்தப்பட்டு பல ஆண்டுகள் தமிழகத்தை சுற்றி சுற்றி வரலாம். 

என்னுடைய பதிவுகள் அப்படியே நகல் எடுக்கப்பட்டு  பேஸ்புக்கிலும், பிற தளங்களிலும் பயன்படுத்தப்படுவதை பார்த்து இருக்கிறேன். இருந்தபோதும் வாட்ஸ்அப்பின் ரீச் அவற்றை விட மிக ஆழம். தவிர எந்த நாளில் யாரால் எங்கிருந்து ஆரம்பித்து யாரால் பரப்பப்பட்டது என்று அறிய வாய்ப்பில்லை. ஒரே நாளில் ஒரு தகவல் லட்சக்கணக்கானவர்களை அடைந்து விடும். நாளை அந்த கதையை நான்தான் எழுதினேன் என்று சொன்னாலும் “போய்யா! காமெடி பண்ணிக்கிட்டு” என்ற ரீதியில்தான் பதில் வரும். இது என்னுடைய பிரச்சினையாக மட்டும் இருக்க வாய்ப்பில்லை. பெரும்பாலான பதிவர்கள் இதே போன்ற சூழ்நிலையை சந்தித்திருக்கலாம். யாராவது தெரிந்திருந்தால் சொல்லுங்கள் இந்த பிரச்சினைக்கு தீர்வு என்ன என்று.


ஆனால் இதிலும் ஒரு சந்தோஷம். படிக்கும் வழக்கம் வெகுவாக குறைந்து வருகிறது என்று எண்ணியிருந்தேன். ஆனால் புத்தக கண்காட்சியில் விற்கும் புத்தகங்களும் இது போல் பரப்பப்படும் வாட்ஸ்அப் மூலம் தமிழில் பரப்பப்படும் தகவல்களும் என்னுடைய எண்ணத்தை மாற்றி வருகின்றன. வாசகர்களுக்கு பிடிப்பது போல எழுதினால் சுஜாதா, ராஜேஷ்குமார் போல புகழ் பெறப்போகும் எழுத்தாளர்கள் வருங்காலத்திலும் தோன்றலாம். கற்காலத்தில்  தோன்றிய  தோன்றிய மொழி டிஜிட்டல் யுகத்தில் புது அவதாரம் எடுக்கும் என்று நம்புவோம். 


Friday, January 3, 2014

இது அவங்களுக்கே அநியாயமா தெரியாதா?

வாரத்தின் முதல் நாள் அலுவலகத்தின் உள்ளே நுழைந்ததும் என்னுடைய கண்கள் பவித்ராவை தேடின. அவளின் நாற்காலி காலியாக இருந்தது .அவள் அலுவலகம் வரவில்லை என்று புரிந்தது. இன்றைய  பொழுது மிகவும் மெதுவாக போகப்போகிறது என்று மனம் சொன்னது.

பவித்ராவுக்கு  ஊர் மதுரை பக்கம். அவள்  பெரிய அழகு எல்லாம் இல்லை.  ஆனால் இந்த அலுவலகத்தில் சேர்ந்த சில நாட்களிலேயே எல்லாருக்கும் பிடித்தவள் ஆகிவிட்டாள். கலகலப்பான பேச்சு, எப்போதும் சிரித்த முகம் என்று அனைவரையும் கவர்ந்து விட்டாள். வேலை அதிக மன அழுத்தம் அளிக்கும்போதேல்லாம் எல்லாரும் தேடி செல்வது அவளைத்தான். அவளின் நகைச்சுவை பேச்சிலே மன அழுத்தம் குறைகிறது என்று எல்லாரும் கிட்டத்தட்ட அவளின் ரசிகர்கள் ஆகிவிட்டோம். இதோ இப்போது ஒரு நாள் அவள் இல்லை என்றதுமே இங்கே பலரது முகம் வாடி விட்டது.

"ராம்! பவித்ரா வரலியா?"

"அவ அம்மாவுக்கு உடம்பு முடியல அப்பிடின்னு லீவ் சொல்லிட்டா"

அவன் சொன்னதை கேட்டதும் அதிர்ந்தேன். கடந்த வெள்ளிதானே அவள் அம்மா ஊரில் இருந்து வருவதாக சொன்னாள்.வந்தவுடன் உடம்பு சரி இல்லாமல் போய் விட்டதா?

"என்ன உடம்புக்குன்னு சொன்னாளா?"

"அதெல்லாம் நான் கேட்டுகல."

சொல்லிவிட்டு கணிப்பொறி திரையை வெறிக்க தொடங்கினான். நான்  என்னை அறியாமல் மொபைலை எடுத்து பவித்ராவின் எண்ணை அழைத்தேன். அவள் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக பதிவு செய்யப்பட குரல் குரல் கூறியது. 

 ஏதேனும் பிரச்சினையில் மாட்டி இருப்பாளோ? யோசித்து கொண்டே  என்னுடைய நாற்காலியில் சென்று அமர்ந்தேன். வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. மனம் பவித்ராவை சுற்றி வந்து கொண்டே இருந்தது. அவள் அருகில்தான்  அவளின் அக்காவுடன் வீடு எடுத்து தங்கி இருப்பதாக சொல்லி இருக்கிறாள். கவிதாவுக்கு அவள் வீடு தெரியும் .  விசாரித்து விட்டு நேரே சென்று பார்த்து விடலாமா? அதுதான் சரி. பழகிய பழக்கத்துக்கு இது கூட செய்யாவிட்டால் எப்படி? முடிவு எடுத்துவிட்டு அவளின் வீட்டுக்கு கிளம்பினேன்.

கவிதா கூறிய அடையாளங்களை வைத்து கிண்டியில் அந்த சிறிய  அபார்ட்மெண்டின் முதல் மாடியில் கடைசி வீட்டை கண்டு பிடிப்பது பெரும்பாடாக ஆகிவிட்டது. அழைப்பு மணியை அழுத்திய சில வினாடிகளில் கதவை பவித்ராவே திறந்தாள்.

"ஹை பவி!"

என்னை எதிர்பார்த்திராத அவள் ஒரு நொடி திகைத்து பின் சமாளித்தாள்.

"உள்ளே வாங்க"

வீட்டின் உள்ளே சென்றேன்.

"அம்மாவுக்கு உடம்பு சரி இல்லையாமே. என்ன ஆச்சு ?"

"BP ஜாஸ்தி ஆயிடுச்சு. உள்ளே இருக்காங்க. வா பார்க்கலாம்."

"எதனால?"

"அவங்க கிட்டயே கேளுங்க. நேத்து இருந்து ஒரே புலம்பல். அதுல BP ஏறி படுத்து இருக்காங்க. முடிஞ்சா அவங்களை சமாதானப்படுத்துங்க "

சொல்லிக்கொண்டே அந்த அறை உள்ளே அழைத்து சென்றாள் . கட்டிலில் பவித்ரா ஜாடையில் அவளின்  அம்மா படுத்து இருந்தார். இவர் BP அதிகரிக்கும் அளவு புலம்பி இருக்கிறார் என்றால் அப்படி என்ன நடந்து இருக்கும்?

"அம்மா! இவர் ஏன் கூட வேலை செய்யுறவர்"

அந்த அம்மா என்னை பார்த்தார்.

"இப்போ எப்படிமா இருக்கு உடம்பு?" முடிந்த அளவு குரலில் பரிவை சேர்த்து கேட்டேன் .

"அது இருக்கட்டும்பா. நான் கேக்குறதுக்கு பதில் சொல்லு முதல்ல. நீயும் இங்கே பெட்டி தட்டுற வேலை பாக்குறவன்தான"

"என்னது?" நான் பவித்ராவை பார்த்தேன்.

"அவங்க கம்ப்யூட்டரை சொல்றாங்க"

"ஆமா. நானும் ஐடி வேலைதான் பாக்குறேன்"

"ஏம்பா! இவ நான் ஊருல இருந்து வந்ததும் பீனிக்ஸ் மாலு அப்பிடின்னு சொல்லிட்டு எங்கேயோ கூட்டிகிட்டு போனா. பெரிய பெரிய கடை கண்ணி எல்லாம் பார்த்துகிட்டு ரொம்ப நேரம் நடந்து  வந்ததுல  பசிக்கிதுன்னு சொல்லிட்டேன். உடனே கல்யாண வீடு விருந்து மாதிரி எல்லாம் கும்பல் கும்பலா உக்காந்து சாப்பிட்டுகிட்டு இருந்த இடத்துக்கு என்னை கூட்டிகிட்டு போய்   ரெண்டு பூரி வாங்கி தந்தா."

எனக்கு புரிந்து விட்டது. பூரி இவருக்கு ஒத்து கொள்ளவில்லை போலும். தன் மகளை குறை சொல்ல போகிறார்.

"எண்ணெய்  சாப்பிட்டது ஒத்துக்கலியா?"

"அது இல்லப்பா. அந்த பூரி நல்லாவே இல்ல.  ஒரு மாதிரி சப்புன்னு இருந்தது . குருமா கொஞ்சம் பரவாயில்ல"

"இங்க உங்க ஊருமாதிரி இல்லம்மா. எல்லாம் சுமாராதான் இருக்கும்"

"சுமாரா இருந்தா பரவாயில்ல. அது எவ்வளவுன்னு கேளு"

"எவ்வளவு"

"இத்துனூண்டு இத்துனூண்டா ரெண்டு பூரி 150 ரூபாயாம். அதை அப்பிடி என்ன பெட்ரோல்லயா சமைக்கிறாங்க. அதை வாங்க அவ்வளவு கூட்டம் வேற "

அந்த அம்மாவின் குரல் அதிகரித்தது.

"விடுங்கம்மா. இங்க பெரிய பெரிய மால்ல எல்லாம் அப்பிடித்தான்"

"இந்த காசுல ஒரு குடும்பமே ஒரு நாளைக்கு சாப்பிடலாம். இத்தனை விலை வைக்கிறது அவங்களுக்கே அநியாயமா படல. இப்பிடியா கொள்ளை அடிக்கிறது. இதை யாருமே தட்டி கேக்க மாட்டாங்களா "

எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இந்த அம்மா நேற்று பார்த்தது இந்தியாவின் இன்னொரு முகம். பணத்தை பற்றி கவலை இல்லாத, வறுமை என்றால் அர்த்தம் அறியாத மக்கள் இவருக்கு விசித்திரமாய் படுகிறார்கள் .  பணம் என்பது சேமிக்க என்றும், அது மதிப்பு மிகுந்தது என்றும் சொல்லி கொடுக்கப்பட்டு வளர்ந்தவருக்கு கிரெடிட் கார்டை தேய்த்து கொண்டு, பணத்தை அலட்சியமாக  வீசி எறிந்து கொண்டு  இருக்கும்  இன்னொரு சமுதாயம் அதிர்ச்சி அளிக்கிறது. 

"சரி! நீங்க ரெஸ்ட் எடுங்க. இனிமே நீங்க அங்க போகாதீங்க. அவ்வளவுதான்"

சொல்லிவிட்டு வெளியே வந்தேன்.

"எப்போ அதை மறக்க போறாங்கன்னு தெரியல. இப்பிடி புலம்புனா எத்தனை டேப்லெட் போட்டாலும் யூஸ் இல்ல  " பவித்ரா சொல்லிவிட்டு தெற்று பல் தெரிய சிரித்தாள்.

"சரி நான் வரேன்"

வீட்டை விட்டு வெளியேறி அலுவலகம் வந்த பின்னும்  அந்த அம்மா கேட்டது மனத்தில் ஓடி கொண்டே இருந்தது. 

"இது அவங்களுக்கே அநியாயமா தெரியாதா? இதை யாருமே தட்டி கேட்க மாட்டாங்களா?"

நிச்சயம் மாட்டார்கள். மனதில் இந்த பதிலை பதிய வைத்து கொண்டு வேலையில் கவனம் செலுத்த தொடங்கினேன்.

புத்தாண்டு அன்று ஃபீனிக்ஸ் மாலில் 150 ரூபாய்க்கு ரெண்டு பூரி வாங்கிய பாதிப்பில் எழுதிய கற்பனை கதை.




Tuesday, November 5, 2013

கொஞ்சம் கிரிக்கெட்

இந்தியா-ஆஸ்திரேலியா ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடந்து முடிந்து விட்டது. போட்டிக்கு போட்டி அதிவேக சதம், அதிவேக அரை சதம், இரட்டை சதம் என பல புதிய சாதனைகள் படைக்கப்பட்டு பழைய சாதனைகள் தகர்க்கப்பட்டன. . பந்தை பேட்ஸ்மேன்கள் நினைத்த போதெல்லாம்  எல்லை கோட்டை தாண்டி அடித்தனர். இதற்கு முன் இது போன்ற பேட்ஸ்மேன்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய எந்த ஒரு தொடரையும் பார்த்தது போல நினைவில்லை.

இது போன்ற தொடர்கள் பார்ப்பதற்கு வேண்டுமானால் விறுவிறுப்பாக இருப்பது போல தோன்றலாம். ஆனால் இப்படிப்பட்ட தொடர்களால் கிரிக்கெட்டுக்கு எந்தவித பலனும் இல்லை. எல்லை கோட்டுக்கு அருகில் அதிக பட்சம் நான்கு பேர் நிற்கலாம் என்பதில் தொடங்கி இரண்டு புதிய பந்துகள், பேட்ஸ்மேன்களுக்கு எந்த ஒரு சிரமமும் தராத பிட்ச் என பல காரணங்களும் சேர்ந்து ரன் குவிப்பதை மிக  சுலபமாக்கி விட்டது. பேட்ஸ்மேன்கள் சிக்ஸர் அடிப்பதை மிக எளிதாக செய்கின்றனர். இதே நிலை தொடர்ந்தால் பந்தை அதிக தூரம் அடிப்பவரே சிறந்த பேட்ஸ்மேன் என எதிர்காலத்தில் கருதப்படலாம். கிரிக்கெட் ஆட்டம், பேஸ்பால் ஆட்டம் போல மாறி விடும். சச்சினின் சத சாதனைகளை எட்டாவதாக களம் இறங்கும் ஒரு வீரர் முறியடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.


பந்து வீச்சாளர்களின் நிலையோ  மிக பரிதாபம் . இரண்டு புது பந்துகள் என்பதால் பந்தின் கடின தன்மை 50 ஓவருக்கும் குறையாது; சுழலவும் (spin) செய்யாது ;ரிவர்ஸ் ஸ்விங் வீசவும் வழி இல்லை. வீசப்படும் பந்து நான்கு  அல்லது ஆறுக்கு விரட்டப்பட கூடாது என்றால் ஒரே வழி பந்தை யார்க்கராக வீசுவதுதான். ஆனால் ஓவரின் ஆறு பந்தையும் துல்லியமாக  யார்க்கராக வீசுவது அத்தனை எளிதில்லை. சிறு தவறு செய்தாலும் பந்து புல் டாஸாக மாறி பேட்ஸ்மேன்களின் பணியை மிகவும் எளிதாக்கும். வரும் காலங்களில் ஒரு நாள் போட்டியில் 500 ரன்கள் அடிக்கப்பட்டு, அந்த ஸ்கோரும் சேஸ் செய்யபட்டலாம்.

உண்மையான கிரிக்கெட் என்பது பேட்ஸ்மேன்களும், பந்துவீச்சாளர்களும் மோதி கொள்வது. ஆனால் ஐசிசியின் புதிய விதிகள் அது பேட்ஸ்மேன்களும் பேட்ஸ்மேன்களும் மோதிக் கொள்வது என்றாக்கிவிட்டது. இந்த விதிகள் மாற்றப்படாவிட்டால் இனி நம்மால் உடல் பலத்தை மட்டுமே நம்பி ஆடும் கிரிக்கெட் ஆட்டத்தை மட்டுமே காண முடியும். ஒருவேளை எப்போதாவது  நுணுக்கமான கிரிக்கெட் ஆட்டத்தை காண வேண்டுமென்று தோன்றினால் யூ ட்யூபில் சச்சினின் பழைய வீடியோக்களை பார்த்து கொள்ள வேண்டியதுதான்.

Saturday, June 22, 2013

பணம் என்ன மரத்திலா காய்க்குது?

சமீபத்தில் ஒரு பிறந்த நாள் விழாவுக்கு சென்றிருந்தேன். ஒரு பிரபல ஹோட்டலின் முதல் தளத்தில்  விழா ஏற்பாடு செய்யபட்டிருந்தது. உறவினர், நண்பர்கள் என கிட்டத்தட்ட  100 பேர் வரை வந்திருந்தனர். வந்திருந்த அனைவருக்கும், இலைக்கு 200 ரூபாய் மதிப்பில் விருந்து அளிக்கப்பட்டது . கிட்டத்தட்ட ஒரு ஏழை குடும்பம், திருமணத்திற்கு செய்ய கூடிய செலவை அந்த பிறந்த நாள் விழாவுக்காக செலவு செய்திருந்தனர். இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் பிறந்த நாள் கொண்டாடியவரின்  வயது ஒன்று. அவரின் பெற்றோர்கள்  நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

 'சம்பாதிக்கும்போதுதான் பணத்தின் மதிப்பு தெரியும்' என்று பெரியவர்கள் கூற கேட்டிருப்போம். ஆனால் இது போன்ற விழாக்களை பார்க்கும்போது பெரியவர்கள் கூறியது தவறோ என்று தோன்றுகிறது. எதற்காக இது போன்ற விழாக்கள்? அந்த குழந்தையின் சந்தோசத்துக்கா? ஒரு வயது குழந்தை அந்த விழாவால் என்ன சந்தோசமடையும்? அந்த குழந்தையின் சந்தோசத்துக்கு ஒரு சிறிய பொம்மை போதும். பெரியவர்கள் தங்கள் கவுரவத்தை நிலை நாட்ட இது போன்ற விழாக்கள் தேவை என்று கூறலாம். ஆனால் இது என்ன வகையான கவுரவம் என்று புரியவில்லை. தங்களின் வசதியான பொருளாதார சூழலையும், குழந்தை மேல் வைத்திருக்கும் அன்பையும் இது போல்தான் காட்ட வேண்டுமா? 


 இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம் இன்றைய   திருமண விழாக்களில் நடக்கும் விருந்துகள்.  இலைக்கு இவ்வளவு என பேசிவிட்டு வகை, வகையாக பரிமாறுகின்றனர். நிச்சயம் ஒரு சாதாரண மனிதனால் இவர்கள் இலையில் பரிமாறும் அனைத்தையும் சாப்பிட முடியாது. இன்னும் சிலருக்கோ சாப்பிட ஆசை இருந்தாலும் உடல் நிலையால் பரிமாறப்படும் அனைத்தையும் சாப்பிட முடிவதில்லை. இறுதியில் எக்கச்சக்கமான உணவு பொருட்கள் குப்பை தொட்டியை சென்று சேர்கின்றன. சோமாலியாவில் உணவு இல்லாமல் மக்கள் சாகும்போது நாம் இப்படி உணவை  வீணாக்கலாமா என்றெல்லாம் யோசிக்க வேண்டாம். நாம் கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை இப்படி பாழ்  செய்வது சரியா என்றாவது யோசிக்கலாமே?

செலவு செய்யத்தானே பணம்.இதை மிச்சபடுத்தி என்ன செய்யபோகிறோம் என சிலர் கேட்கலாம். இன்றைய சூழலில் பொருளாதாரம் எப்போது சுறுசுறுப்படையும்? எப்போது மந்தமடையும்? என யாருக்கும் தெரியாது. அரசாங்க ஊழியர்கள் தவிர மற்ற யாருக்கும் வேலை உத்தரவாதம் இல்லை. இப்படிப்பட்ட நிலையில் கையில் இருக்கும் பணத்தையெல்லாம் அநாவசியமாக செலவு செய்வது புத்திசாலித்தனமா?

இப்போது ஒரு சிலரே  இது போல் ஆடம்பர விழாக்கள் நடத்துகின்றனர் . இதை பார்த்து மற்றவர்களும் இதே போல் செய்ய ஆரம்பித்து இதை ஒரு அத்தியாவசிய தேவை போல் மாற்றிவிட கூடாது என்பதே என் கவலை.

Sunday, May 26, 2013

விஜய் டிவி - இதெல்லாம் எனக்கு நல்லதா படல

புதுசாவும், கலர் ஃபுல்லாவும் .நிகழ்ச்சி தரதுல விஜய் டிவியை அடிச்சுக்க தமிழ்ல வேற சேனலே இல்ல. இந்த மேட்டர் அவங்க ஜோடி நிகழ்ச்சி பத்தினது. இதை எழுதலாமா வேணாமான்னு ஒரு குழப்பம். இருந்தாலும் எழுத வேற மேட்டர் இல்லை. அதனால இதையே எழுதலாமுன்னு முடிவு பண்ணிட்டேன். 

நேத்து டிவில அந்த ஜோடி நிகழ்ச்சில ரொமான்ஸ் ரவுண்டாம். ஆடுன ஜோடிங்கல்லாம் கட்டி உருளாத குறைதான். அட அவங்களாவது பெரியவங்க, பக்குவப்பட்டவங்க பரவாயில்லன்னு விட்டுடலாம் . அதுல  ர ஃபிக்-காப்ரியல்ங்குற ஜோடில ரெண்டு பேருக்குமே முழுசா 16 வயசு கூட இருக்காது. அவங்க ரெண்டு பெரும் ஒருத்தரையொருத்தர்  தொட்டு தொட்டு ஆடிட்டு இருக்காங்க. அந்த பொண்ணு முகத்துல அப்பிடி காதல் உணர்ச்சிகளை காட்டுது. நல்ல வேளை, பெரியவங்க ஆடுனத விட மூவ்மெண்ட்ஸ் கொஞ்சம் டீசன்ட்தான்.


இப்பிடி சின்ன பசங்களை வச்சு ப்ரோக்ராம் நடத்துறதை எல்லாம் குழந்தை தொழிலாளிகள் லிஸ்ட்ல சேக்க முடியாதா?. இதை டிவில காமிச்சா இதெல்லாம் தப்பு இல்லன்னு மக்கள் மனசுல பதியாதா? குறைஞ்ச பட்சம் கீழ 'இந்த நிகழ்ச்சியால் உங்கள் மன நலம் பாதிக்கப்படலாமு'ன்னு கீழ எச்சரிக்கை வாசகமாச்சும் காமிக்க சொல்லணும்.

எனக்கு என்ன பயம்னா நாளைக்கு 'ஜோடி ஜூனியர்'னு புது நிகழ்ச்சி ஆரம்பிச்சு சின்ன பசங்களையா ஆட விட்டுடுவாங்களோன்னு. அப்புறம் கொஞ்ச நாள்ல கோபிநாத் 'சீரழியும் இளைய சமுதாயம். காரணம் யார்?' அப்பிடின்னு 'என் தேசம் என் மக்கள்' நிகழ்ச்சி நடத்துறதை நாம பாக்க வேண்டி வரும். அப்புறம் இதே மாதிரி ஒரு ஹேர் ஆயில் விளம்பரம். ஒரு ஸ்கூல் பொண்ணை ரெண்டு ஸ்கூல் பசங்க கமெண்ட் அடிச்சுகிட்டே ஃபாலோ-அப் செஞ்சுகிட்டே போறாங்க. எனக்கு என்னமோ இதெல்லாம் நல்லதா படல.

Saturday, March 23, 2013

திருட்டு டிவிடிய ஆதரிங்க

"அந்த காலத்துல நாங்க அரை அணா கொடுத்து படம் பாப்போம். வீட்டுக்கு வரப்போ எங்க பாட்டி வீட்டுக்குள்ள விடாம வாசல்ல நிறுத்திடுவாங்க. இப்போ  நீங்க கொஞ்சம் கூட யோசிக்காம  பதினஞ்சு ரூபாய் கொடுத்து படம் பாக்குறீங்க". இப்பிடி என் தாத்தா சொன்னது பதினெட்டு வருஷம் முன்னாடி. நல்ல வேளை இப்போ நடக்கிறது எல்லாம் பாக்காம போய் சேந்துட்டார். இப்போ 100 ரூபாய், 150 ருபாய் கொடுத்தெல்லாம் படம் பாக்குறது தெரிஞ்சா என்ன சொல்லுவாருன்னு நெனச்சே பாக்க முடியல.

வருசா வருசம் விலைவாசி கூடுது அப்பிடின்னு நம்ம எல்லாருக்கும் தெரியும். ஆனா சினிமா  தியேட்டர் டிக்கெட் மாதிரி வேற எந்த பொருளும் விலை கூடுன மாதிரி தெரியல. 2003 ல "தூள்" படம் 25 ரூபாய் கொடுத்து பாத்தேன். ஆனா இன்னைக்கு அந்த தியேட்டர்ல படம் பாக்கணும்னா 100 ரூபாய் வேணும்.  அதாவது 10 வருசத்துக்குள்ள 75 ரூபாய் கூடி இருக்கு. இதுல சின்ன ஒரு பெரிய ஊருன்னு எந்த வித்தியாசமும் இல்ல. 



லேட்டஸ்ட்டா ஒரு படம் வந்திச்சே வத்திக்குச்சினு. அந்த படம் பாக்கலாம்னு போனேன். மெட்ராஸ் அடுத்து இருக்குற ஒரு சின்ன ஊருதான். சின்ன தியேட்டர்தான். முகம் தெரியாத ஒரு ஹீரோ, புதுசா வந்த டைரக்டர். ஆனா அவன் சொன்ன டிக்கெட் விலை 100 ரூபா.  தியேட்டர்ல மொத்தமா 10 பேரு கூட இல்ல. பைரசி பிரச்னை. அதான் சீக்கிரமா காசு எடுக்க பாக்கறோம்னு அவங்க சொல்றாங்க. ஆனா 50 ரூபாய் டிக்கெட் வச்சா கூட்டம் நிச்சயாம ஜாஸ்தி ஆகும். மௌத்-டாக்ல படத்துக்கு விளம்பரமும் ஆகுமே. இது அவங்களுக்கும் தெரியும். ஆனா  தியேட்டர்க்கு வரவன் கிட்ட எவ்வளவு முடியுமோ அவ்ளோ காசு பிடுங்கணும்னு ஆசைல மத்ததெல்லாம் மறஞ்சுடுது. டிவி வந்ததால சில தியேட்டர் மூடுனது உண்மை. ஆனா மிச்ச முள்ள தியேட்டர்ங்க மூடபட்டா அதுக்கு தியேட்டர்காரங்கதான் காரணமா இருப்பாங்க 

ஒரு மல்டிப்ளெக்ஸ் தியேட்டர்ல டிக்கெட் ஜாஸ்தி சொன்னா சரிதான் . சின்ன சின்ன  தியேட்டர்ல கூட இப்பிடி காசு பிடுங்குறதுதான் பொறுக்க முடியல. இருந்தாலும் சினிமா பாக்காம எப்படி ஒரு  தமிழனால இருக்க முடியும்.அதுனால கேட்ட காசை குடுத்து உள்ளேயும் போயிடுறோம். அப்படி உள்ள போனதுக்கப்புறம் நடக்கிறது கொடுமை. படம் ஆரம்பிச்ச உடனே பின்னாடி இருன்னு ஒருத்தன் "சார்! படம் மறைக்கிது. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி உக்காருங்க" னு  சொல்லுவான். வேற வழி. அப்பிடியே கீழ சரிஞ்சு உக்கார வேண்டியதுதான். நிச்சயம் வீட்டுக்கு முதுகு வலியோட போகலாம்.

இப்போ ஏதோ புது டெக்னாலஜில படம் போடுவான் போல. கரண்ட் 2 மணி நேரம் மட்டும் இருக்குற ஊருல எதுக்கு டெக்னாலஜினு தெரியல. கரண்ட் கட் ஆனா சவுண்ட் கட் ஆயிடுது. ஆனா படம் மட்டும் ஓடிகிட்டே இருக்கு. ஆப்ரேடர் நாம போடற சத்ததுல  முழிச்சுகிட்டா ஓகே. இல்ல ஜெனரேடர் ஆன் பண்ற வரைக்கும் ஊமை படம்தான்.

அப்புறம் இன்டர்வல்ல சாப்பிடுற பண்டங்களுக்கு  அவன் வைக்கிறதுதான் விலை. பசில என்ன பண்றதுன்னு சொன்ன காசை குடுத்து அதயும் வாங்கிப்போம். இப்பிடி எல்லா கஷ்டத்தையும் மீறி படம் பாக்குறோம். அந்த படம் நல்லா இருந்தா இந்த கஷ்டம் எல்லாம் மறைஞ்சிடும். ஆனா வர படத்துல பாதி நம்ம கஷ்டத்தை ஜாஸ்தியாத்தான் ஆக்குது.

ஆகவே மக்களே நான் என்ன சொல்ல வரேன்னா இனிமே நாம திருட்டு DVD லயே படம் பாப்போம். திருட்டு DVD பாக்குறதுக்கு குற்ற உணர்ச்சி எல்லாம் வேண்டாம். அவங்க பணம் சம்பாதிக்க பாக்கும்போது நாம நம்ம பணத்தை மிச்சம் பிடிக்கிறதுல  என்ன தப்பு. தியேட்டர் போகாட்டி சினிமா அழிஞ்சிடுமேனு கேக்குறீங்களா? அதுக்காக கவலை பட வேணாம். சினிமாலாம் DTH ல வரும். அப்புறம் சன் டிவிலயே ரிலீஸ் ஆகும். என்ன சினிமான்னு பேரு மட்டும் சீரியல்னு மாறிடும். அதுனால நமக்கு ஒன்னும் நஷ்டம் இல்ல. 

கருத்து சொல்லிட்டு போங்க 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...