வாழ்க்கையில் வெற்றி பெற எது தேவை? இந்த கேள்வியை நம்மிடம் கேட்டால் நம் பதில் என்னவாக இருக்கும்? சிலர் கடின உழைப்பு என்பீர்கள். சிலர் விடா முயற்சி என்பீர்கள். சிலரின் பதிலோ இரண்டுமே என்பதாய் இருக்கும். எல்லாவற்றையும் விட அதிர்ஷ்டமே தேவை என சிலர் கூற கூடும். உண்மையில் கொக்ககோலா ஃபார்முலாவை விட வெற்றியின் ஃபார்முலா ரகசியமானது. புதிரானதும் கூட.
சமீபத்தில் வெளி வந்த இரண்டு படங்களின் நாயகர்களை எடுத்து கொள்வோம். முதலில் 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' விஜய் சேதுபதி. இந்த படத்தில் இவர் பேசும் ஒவ்வொரு வசனத்திற்கும் விசில் அள்ளுகிறது. விரல் விட்டு எண்ணி விட கூடிய அளவிலேயான படங்களில் நடித்து இருந்தாலும் ஒரு மாஸ் ஹீரோவுக்கான ஓபனிங் கிடைக்கிறது. இத்தனைக்கும் இவர் ஆக்சன் ஹீரோ இல்லை. கடினமான நடன அசைவுகளை செய்து மக்களை கவரவும் இல்லை.சினிமா சார்ந்த குடும்ப பின்னணியும் கிடையாது. தான் நடித்த அத்தனை படங்களிலும் ஒரு இயல்பான நாயகனாகவே தோன்றியுள்ளார்.
விஜய் சேதுபதியின் இந்த அளவு சாதித்ததற்கு என்ன காரணம்? இந்த கேள்விக்கு நாம் கூறக்கூடிய பதில் உழைப்பும், முயற்சியும் என்பதாகவே இருக்கும் . குறும்படங்களில் நடித்து வந்தவர் அதிலேயே திருப்தி அடைந்து விடாமல் தொடர்ந்து திரை உலகில் வாய்ப்பு தேடி கிடைத்த சிறு சிறு வேடங்களில் நடித்து இன்று எல்லோராலும் விரும்பப்படும் நடிகராக திகழ்கிறார் என்றால் அது எத்தனை பெரிய விஷயம். நாளை திரைத்துறையில் நுழைய விரும்பவர்கள் இவரையே முன்னுதாரணமாய் எடுத்து கொள்ளும் நாளும் வரலாம். விஜய் சேதுபதி அதற்கு தகுதியானவரும் கூட.
அப்படியானால் இவரைப் போல திறமையும், உழைப்பும் இருந்தால் முன்னேறி விடலாமா? 'ஆறு மெழுவர்த்திகள்' ஷாமை பற்றி நினைத்தால் அப்படி தோன்றவில்லை. ஆரம்ப காலத்தில் சாக்லேட் பாயாக அறியப்பட்ட ஷாம் நடித்த எந்த படமும் பெரிய வெற்றி பெறவில்லை. இருந்த போதும் விடா முயற்சியோடு தமிழ் திரை உலகில் தன்னை நிலை நிறுத்த தன்னுடைய உழைப்பை கொட்டி நடித்த இந்த படமும் வணிக ரீதியில் வெற்றி படமாக தோன்றவில்லை. இந்த படத்திற்காக தூங்காமல் கண்களை வீங்க வைத்து பட்ட கஷ்டமெல்லாம் அதற்கு ஏற்ற பலனை பெறாமலேயே போய் விட்டது எனலாம். இவரின் உழைப்பிற்கு பரிசாக சில பாராட்டுகள் கிடைக்கலாம். அவ்வளவுதான்.
ஷாம் செய்த தவறுதான் என்ன? சரியான கதையை தேர்வு செய்யவில்லையா? அல்லது படம் வெளியான நேரம் சரி இல்லையா? சொல்ல போனால் சில குறைகள் இருந்தாலும் 'ஆறு மெழுவர்த்திகள்' ஒரு நல்ல படம். எந்த நேரத்தில் வெளியாகி இருந்தாலும் ஓடி இருக்க வேண்டும். இருந்தாலும் இந்த படம் சரியான வரவேற்பு பெறாமால் போனதற்கு அதிர்ஷ்டம் இல்லை என்று சொல்வதை விட வேறு எந்த காரணமும் கிடைக்கவில்லை.
இப்படி கடினமாக உழைத்தும், திறமை இருந்தும் வெற்றி பெறமுடியாத ஷாம்கள் நம்மிடையே எத்தனையோ பேர் இருக்கின்றனர். அதிர்ஷ்ட தேவதையை போல நாமும் அவர்களை கண்டுகொள்வதில்லை. இறுதியில் விஜய் சேதுபதிகளின் வாழ்க்கை வரலாறாக பதியப்படுகிறது. ஷாம்கள் அறியப்படாமலேயே போகின்றனர். அவர்களோடு சேர்த்து வெற்றியின் ஃபார்முலாவும் நம்மால் புரிந்து கொள்ள முடியாமலேயே போகின்றது.
வணக்கம்
ReplyDeleteநல்ல விமர்சனம் பதிவு அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இருவரையும் பற்றி நல்லதொரு அலசல்... தொடர வாழ்த்துக்கள்...
ReplyDeleteBeautiful
ReplyDelete