மணமக்கள் யாரையும் தெரியாத ஒரு திருமணத்தில் கலந்து கொள்வது சற்று சங்கடமான விஷயம். இருந்தாலும் மணமகன் எனக்கு மிகவும் பழக்கம் என்பதால் அந்த திருமணத்திற்கு சென்றிருந்தேன். நான்காம் வரிசையில் ஒரு ஓரமாக இடம் பார்த்து அமர்ந்தேன். சில நிமிடங்களுக்கு பின் என்னருகில் ஒரு பருமனான நடுத்தர வயது நபர் வந்து அமர்ந்தார்.
"வணக்கம் தம்பி!" பேச்சு கொடுக்கிறார். அப்படியே கிளம்பும்வரை இவரை பிடித்து கொள்ள வேண்டும். இல்லையெனில் ஆடு திருட வந்தவன் போல தனியாக முழித்து கொண்டிருக்க வேண்டியதுதான்.
"வணக்கம் சார். எப்படி இருக்கீங்க?"
"நான் நல்லா இருக்கேன். தம்பி யாருன்னு தெரியலயே"
"நான் மாப்பிள்ளையோட நண்பன்"
"நான் மாப்பிளைக்கு ஒன்னு விட்ட மாமா முறை. அங்க கல்யாண மேடையில பச்சை புடவை கட்டி இருக்கிறது என்னோட சம்சாரம்." மேடையில் பார்த்தேன். அங்கே இவரை விட பருமனான ஒரு பெண் பச்சை புடவையில் இருந்தார்.
"ஆனா பாருங்க. இத்தனை செலவு செஞ்சு கல்யாணம் வச்சாலும் கல்யாண பொண்ணுக்கு போட்ட மேக்-அப்பே சரியில்ல. என்னோட பொண்டாட்டி கூட பொண்ணை விட அழகா தெரியுறா." நான் கல்யாண பெண்ணின் மேக்-அப்பை கவனித்தேன். அப்படி ஒன்றும் மோசமில்லை. இருந்தாலும் அவர் கூறியதற்கு பதில் சொல்ல வேண்டுமே. ஏதாவது நகைச்சுவையாக பதில் அளித்தால்தானே என்னை கலகலப்பானவன் என எண்ணி தொடர்ந்து பேசுவார்
"ஆமா சார்! நானும் அதையேதான் நெனச்சேன். கொண்டையா இது. உள்ள போய் குருவி கூடு கட்டினாலும் தெரியாது போல"
இதை நான் சொல்லி முடித்ததும் அவர் இடியென சிரிக்க தொடங்கினார். நான் அவ்வளவு பெரிய காமெடி செய்து விட்டேனா? என யோசித்து கொண்டே இருக்கும்போது அவர் சிரிப்பு சத்தம் மேலும் அதிகரித்தது.
"ஹஹஹஹாஹா." மண்டபத்தில் இருக்கும் பேச்சு குரல்களையும் மீறி அவர் சிரிப்பு ஒலிக்க தொடங்கியது.
"சார்! நார்மல் ஆகுங்க சார். எல்லாரும் நம்மளையே பாக்குறாங்க பாருங்க"
நான் சொன்னதையே அவர் கண்டு கொண்டதாக தெரியவில்லை. இப்போது வயிற்றை பிடித்து கொண்டு சிரிக்க தொடங்கியிருந்தார். அவர் சிரிப்பு இப்போது எனக்கு பயத்தை உண்டாக்கியிருந்தது. அந்த சிரிப்பு சத்தத்தை கேட்டு அவர் மனைவி மண மேடையிலிருந்து இறங்கி எங்களை நோக்கி ஓடி வர தொடங்கினார். அவரின் சிரிப்பு இன்னும் நிற்கவில்லை. திடீரென தரையில் விழுந்து உருண்டு உருண்டு சிரிக்க தொடங்கினார்.
"என்னங்க!" மூச்சு இரைக்க ஓடி வந்த அவரது மனைவி அவரை நெருங்கி அவரை எழுப்ப முயற்சி செய்து கொண்டிருந்தார்.
"என்னங்க ஆச்சு இவருக்கு?" மிக மெல்லிய குரலில் அவர் மனைவியிடம் கேட்டேன்.
"நான் கேக்க வேண்டியதை நீங்க கேக்குறீங்க." அவர் குரலில் கோபம் அப்பட்டமாக தெரிந்தது.
"இல்லைங்க சும்மா தமாஷ் பண்ணேன். கேட்டதும் சிரிக்க ஆரம்பிச்சுட்டார்" வார்த்தைகளை விழுங்கி விழுங்கி ஒருவாறாக சொல்லி முடித்தேன்.
"என்னது தமாஷ் பண்ணீங்களா? எங்க உங்களுக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா? அவருக்கே சிரிக்கிற வியாதி இருக்கு. அவர் கிட்ட போய் தமாஷ் செஞ்சேன்னு சொல்றீங்களே"
எனக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. அதென்ன புதிதாக சிரிக்கிற வியாதி. அந்த நபரோ இது எதையும் கண்டு கொள்ளாமல் சிரித்து கொண்டே தரையில் உருண்டு கொண்டிருந்தார். . அவர் கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது. இதற்குள் எங்களை சுற்றி திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் சிலர் சூழ்ந்து விட்டனர்.
"என்னங்க இங்க தாலி கட்டுற நேரத்தில" என்றார் அதில் ஒரு பெரியவர்.
"இவன் என்னமோ சொல்லி இவரை சிரிக்க வச்சுட்டாங்க." அந்த பெண்ணின் வார்த்தைகளில் மரியாதை மிகவும் குறைந்து விட்டது. கண்ணில் நீர் அணைகட்டாக தேங்கி எப்போதும் உடைந்து விடும் நிலையில் இருந்தது.
"சரி! இப்போ என்னம்மா செய்றது?" என்றார் அந்த பெரியவர்.
"இவரை இப்போவே ஹாஸ்பிடல் தூக்கிட்டு போகாட்டி இப்படி சிரிச்சு சிரிச்சே செத்துடுவார்."
அந்த பெண் சொல்லியதை கேட்டதும் எனக்கு தூக்கி வாரி போட்டது. அப்படி ஏதாவது நடந்தால் இந்த பெண் நிச்சயம் போலீசில் கம்ப்ளைன்ட் செய்து என்னை கொலை வழக்கில் உள்ளே தள்ளாமல் விட மாட்டாள். புது விதமான சோதனையில் அல்லவா சிக்கி கொண்டேன்.
"என்னம்மா கல்யாண வீட்ல அப சகுனமா பேசிக்கிட்டு. யப்பா சிரிக்க வச்ச தம்பி. இவரை ஹாஸ்பிடலுக்கு தூக்கிகிட்டு போப்பா." அந்த பெரியவர் கூறிய பதிலில் அக்கறையை விட எங்கள் மூவரையும் வெளியில் அனுப்பிவிடும் ஆர்வமே தெரிந்தது. எப்படியாவது இங்கிருந்து நழுவி விடலாம் என பார்த்தால் கிழம் நன்றாக மாட்டி விட்டு விட்டது.
"சரிங்க. கூட்டிகிட்டு போறேன். ஆனா யாராவது கூட கை கொடுத்து இவரை ஆட்டோ வரைக்கும் கூட்டிகிட்டு வந்து விடுங்க."
ஒரு வழியாக மூன்று பேர் சேர்ந்து சிரமப்பட்டு அவரை ஒரு ஆட்டோவில் ஏற்றினோம். நான் அவரின் ஒரு புறம் ஒடுங்கி கொண்டேன். அவர் மனைவி ஒரு புறம் அமர்ந்து கொண்டார். பாவி. அந்த ஆசாமி சிரிப்பதை கொஞ்சம் கூட குறைக்கவில்லை.
"இவருக்கு அடிக்கடி இப்படி வருமா"
நான் கேட்ட கேள்விக்கு அந்த பெண்ணிடம் இருந்து ஒரு முறைப்பு மட்டுமே பதிலாக வந்தது. ஆட்டோவில் ஏற்றியதற்கு பதில் ஆம்புலன்சில் ஏற்றி இருக்கலாம். கடைசியில் மருத்துவமனையில் அவரை சேர்ப்பித்து அந்த பெண்ணிடம் சிறிது பணம் கொடுத்து விட்டு ஊர் திரும்பினேன்.
இது நடந்து சில நாட்களுக்கு பின் என்னுடைய நண்பனிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. நிச்சயம் அந்த ஆசாமி தன்னுடைய சிரிப்புக்கான காரணத்தை இவனிடம் சொல்லி இருப்பார். இவனின் மனைவி கொண்டையை பற்றி பேசியதற்காக என்னை நாக்கை பிடுங்கும்படி நான்கு கேள்வி கேட்க போகிறான். தயக்கத்துடன் மொபைலை எடுத்தேன்.
"மச்சி! சாரிடா என்னால மேடைய விட்டு இறங்க முடியல"
"அது பரவாயில்லைடா. அப்புறம் என்ன ஆச்சு அவருக்கு"
"அவருக்கு மயக்க மருந்து கொடுத்து தூங்க வச்சுடாங்க. எந்திரிச்சதும் சரி ஆகிட்டார்"
"என்ன வியாதி அவருக்கு?"
"சிரிக்கிற வியாதின்னு கேள்விப்பட்டு இருக்கியா? சிரிக்க மாட்டாங்க. சிரிக்க ஆரம்பிச்சா நிறுத்த மாட்டாங்க. பத்து கோடி பேருல ஒருத்தருக்கு அந்த வியாதி இருக்குமாம்."
"அந்த பத்து கோடில ஒருத்தன் ஏன் கிட்டவா வந்து உக்காரணும்." நான் சொல்லியதும் அவன் சிரிக்க தொடங்கினான்.
"சிரிக்காதே. யாரு சிரிச்சாலும் பயமா இருக்கு."
"டேய்! அதை பத்தி பேசாத விடுடா." சொல்லிவிட்டு மீண்டும் சிரித்தான். இப்போது எனக்கு பயம் சற்று குறைந்து இருந்தது.அவன் மனைவியின் கொண்டை பற்றி ஜோக் அடித்ததற்கு அவனிடம் மன்னிப்பு கேட்க முடிவு செய்தேன். என்னதான் அவன் பெருந்தன்மையாக அதை பற்றி பேச வேண்டாம் என்று கூறினாலும் மன்னிப்பு கேட்பதுதானே முறை.
"மாப்பிள்ளை! உங்க மாமா எதுக்கு சிரிச்சார்ன்னு உன்கிட்ட சொல்லிட்டாரா." தயக்கத்தோடு கேட்டேன்.
"அவர் எப்படி சொல்லுவாரு. அவர்தான் சிரிக்க ஆரம்பிக்கும்போதே எதுக்கு சிரிக்கிறோம்னு மறந்துடுவாராச்சே." அவன் சொல்லி முடித்ததும் நான் தொடர்பை துண்டித்து விட்டு தரையில் விழுந்து உருண்டு உருண்டு சிரிக்க தொடங்கினேன்.
அருமையான நகைச்சுவைக் கதை
ReplyDeleteமிகவும் ரசித்தேன்
லேசாக மனதிற்குள் நானும் தொடர்ந்து
சிரிக்கத் துவங்கிவிடுவேனோ என
பயமாகவும் இருக்கிறது
மனம் கவர்ந்த பதிவு
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார்.
Deleteஹா... ஹா... சிரிப்பும் சுவாரஸ்யமும்....
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்...
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார்.
Delete//தரையில் விழுந்து உருண்டு உருண்டு சிரிக்க தொடங்கினேன்//
ReplyDeleteஒட்டுவாரெட்டியா.
சிரித்தவர் எதற்காக சிரித்தோம் என்றே மறந்துவிட்டார் என்பதை கேட்டதும் கதாநாயகன் சிரித்தான் என்றே சொல்ல வந்தேன். மற்றபடி அந்த நோய் கதாநாயகனுக்கு பரவவில்லை :)
Delete