Showing posts with label சிந்தனை. Show all posts
Showing posts with label சிந்தனை. Show all posts

Saturday, March 28, 2015

சென்னை, மதுரை, கோவை – நான் கண்ட தமிழகம்

“வேற்றுமையில் ஒற்றுமை”(???) காணும் நாடு பாரத நாடு என்று படித்திருப்பீர்கள். இதை பாடப்புத்தகத்தில் படிக்கும்போது நானும் உங்களைப் போலவே பல மாநிலங்களில் பல மொழி பேசுபவர்களும், பல கலாச்சாரத்தை பின்பற்றுபவர்களும் வாழ்வதால் இந்த பெயர் வந்தது என்று எண்ணிக்  கொண்டிருந்தேன். பின்னர் தமிழகத்தின் முக்கிய ஊர்கள் அனைத்துக்கும் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தபோது ஒரு மாநிலத்துக்குள்ளேயே எத்தனை விதமான வேறுபாடுகள் என்று புரிந்தது. ஒரே மொழி பேசும் மக்கள், அந்த மொழியை பேசும் விதத்திலும், நடந்து கொள்ளும் முறையிலும் எவ்வாறு மாறுபடுகிறார்கள் என்பது சற்று கவனித்து பார்த்தால்தான் புரியும்.

முதலில் தமிழ்நாட்டின் தலைநகரை எடுத்துக் கொள்வோம். சென்னையில் அடியெடுத்து வைத்த முதல் வாரம் மாநகரப் பேருந்தில் பயணித்தேன். கூட்டம் நிரம்பிய பேருந்தில் நீச்சல் அடித்து உள்ளே சென்று டிக்கெட் எடுக்கலாம் என்று நடத்துனரை கவனித்தவனுக்கு கிடைத்தது ஒரு கலாச்சார அதிர்ச்சி. “மேலே ஏறி வா. சில்லறையா குடு” என்று அறுபது வயது கொண்ட ஒரு பெரியவரை அதிகாரம் செய்து கொண்டிருந்தார்  முப்பது வயது  மிகாத  நடத்துனர். மரியாதை  இல்லாமல்  இப்படி எல்லாம் கூட  பேசுவார்களா  என்று நான்  வியந்து கொண்டிருக்கும்போது  “என்ன வேடிக்கை பாக்குற. டிக்கெட் எடு” என்று என் மேல் அன்பை பொழிந்தார் நடத்துனர். பேருந்தை விட்டு கீழே இறங்கும் முன் பேருந்தில் மேலும் இரண்டு வாய்த் தகராறுகள் வேறு.

இந்த ஊர் இப்படித்தானோ என்று எண்ணிக் கொண்டே பேருந்தை விட்டு இறங்கினேன். அங்கே நின்றிருந்த ஒருவரிடம் நான் போக வேண்டிய இடத்தை சொல்லி வழி கேட்டேன். அவர் என்னை மேலும் கீழும் பார்த்தார். “சரி! டீ வாங்கித்தா. வழி சொல்றேன்” என்றார்.  வழி சொல்வதற்கு எல்லாமா ஊதியம் கேட்பார்கள் இந்த ஊரில் என்று விழித்தேன். பக்கத்தில் இருந்தவர் எந்த ஊர்க்காரர் என்று தெரியவில்லை. என்னை கூப்பிட்டு வழி சொல்லி அனுப்பினார்.

பின்னர் சென்னை முழுக்க சுற்றி திரிந்தபோது பல தகராறுகளை பார்த்துள்ளேன். வலுகட்டாயமாக சில தகராறுகளிலும் இழுத்து விடப்பட்டுள்ளேன். ஆட்டோக்காரர்களுடன் தகராறு, பேருந்தில் தகராறு, சாலையில் தகராறு, கடைக்காரர்களுடன் தகராறு, அரசு அலுவலகங்களில் என்று யார் மேல் தவறு என்று கணித்து சொல்லிவிட முடியாத அளவுக்கு  தகராறுகள். அதில் பல தகராறுகள்  தேவையற்றவை  என்று கூட தோன்றும். அதே நேரத்தில் தங்கள் உரிமையை அறிந்து அதை பெற குரலை உயர்த்துவதில் சென்னை மக்களை மிஞ்ச முடியாது

பொதுவாகவே  சென்னை மக்கள் அனைவருமே படபடவென பேசக் கூடியவர்கள். அமைதியான இயல்பு கொண்ட சென்னைக்காரர்களை காண்பது அரிதிலும் அரிது. அமைதியாக இருந்தால் சென்னையில் வாழ்வது கடினம் என்பது கூட அதற்கு காரணமாக இருக்கலாம். தனக்குள் வரும் மனிதர்களை சென்னை தனக்கு தகுந்தாற்போல் மாற்றி கொண்டு விடும்.

இப்போது அப்படியே சென்னையிலிருந்து மதுரைக்கு வருவோம். மதுரைக்காரர்கள் சற்று வேறு விதம். முகவரி விசாரித்தால் அக்கறையாக பதில் சொல்வார்கள். இன்னும் சிலர் உங்களுடன் வந்து அந்த இடத்திலேயே விட்டுவிட்டு போவார்கள். அதே நேரத்தில் எந்த நேரத்தில் எப்போது கோபம் வரும் என்று கூற முடியாது. அதற்காக கோபம் வந்தால் சினிமாவில் காட்டுவது போல அரிவாளை தூக்கி கொண்டு ஓடி வர மாட்டார்கள். இயல்பாகவே மற்றவர்களிடம் அன்பு காட்டுபவர்கள். அதற்காக  மதுரை மக்கள் அனைவரும் தேவதூதர்கள் என்று அர்த்தம் இல்லை. ஜாதி உணர்வு சற்று அதிகமாக இருப்பது இவர்களின் பலவீனம். அதே போல் மதுரை வியாபாரிகளின்  மார்கெட்டிங் திறன் அலாதியானாது. சற்று அயர்ந்தால் நமக்கே தெரியாமல் நம்மிடம் பொருட்களை விற்று விட்டு பணத்தை எடுத்துக் கொள்வார்கள்.

இப்போது கோவைக்காரர்களை எடுத்து கொள்வோம். இப்படி கூட மரியாதையாக பேச முடியுமா என்று ஆச்சரியப்பட்டு போனது இவர்களிடம்தான். சென்னைக்காரர்களுக்கு நேர் எதிர். கோவைகாரர்கள்  யாரிடமாவது முகவரி கேட்டு பாருங்கள். நீங்கள் வயதில் பெரியவரா, சிறியவரா என்றெல்லாம் யோசிக்காமல் “அண்ணா. அப்பிடியே ரைட்ல போங்கண்ணா. லெப்ட்ல வாங்கண்ணா” என்று இவர்கள் கொங்கு தமிழில் பேசும் அழகை கேட்டு நமக்கே கோவையில் நிரந்தரமாக தங்கி விடத் தோன்றும்.

இப்படி வாழும் இடத்திற்கு ஏற்ப குணங்கள் எப்படி மாறுகிறது என்பதற்கு பல காரணங்கள் இருக்க கூடும். ஆனால் இவை அனைத்தையும் கடந்து  தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும்  இருக்கும் ஒரே மாதிரியான சினிமா ரசிப்புத்தன்மையும், அரசியல் பார்வையும் ஒரு ஆச்சரியம்தான்.


Friday, February 20, 2015

வாட்ஸ்அப் காப்பிகள் – தீர்விருந்தால் சொல்லவும்

ந்த வலைப்பூவில் எழுத ஆரம்பித்து இன்னும் சில நாட்களில் இரண்டு ஆண்டுகள் முடியப்போகிறது. பொழுதுபோக்குக்காக எதையோ கிறுக்குவோம் என்று தொடங்கி என்ன எழுதுவது  என்று தெரியாமல் என்னென்னவோ எழுதி ஒருவாறாக செட்டில் ஆகவே ஒரு வருடம் ஆகிவிட்டது. இரண்டு ஆண்டுகளில் பெரிதாக எதையும் சாதித்து விடவில்லை என்றாலும்  எழுத தொடங்கும்போது நான் கொண்டிருந்த லட்சியம் இந்த வலைப்பூவுக்கென்று   ஒரே ஒரு வாசகரையாவது பெற்று விட வேண்டும் என்பதுதான். அந்த லட்சியத்தில் நான் வெற்றி பெற்றுவிட்டேன் என்றே கருதுகிறேன். ஒவ்வொரு பதிவையும் ஆயிரம் பேர் படிக்கிறார்கள் என்றால் அதில் பத்து பேராவது இவன் எதையாவது உருப்படியாக எழுதி இருப்பானே என்று எழுதி படிக்கிறவர்கள் என்பது எனது கணிப்பு.

ஆரம்பத்தில் எல்லாம் எதையாவது எழுதி விட்டு பின்னூட்டங்கள் வந்து குவிந்து இருக்கும் என்று அடிக்கடி பார்த்து கொண்டே இருப்பேன். ஆனால் ஒரு கமெண்ட் வந்தாலே ஆச்சரியம். ஆனால் அந்த பின்னூட்டமும் பெரும்பாலும்  எழுதியதை படித்து பார்க்காமல் வந்த டெம்ப்லேட் வந்ததாகவே இருக்கும். பின்னர் போகப்போக பின்னூட்டங்களை எதிர்பார்ப்பது தவறு என்று புரிந்தது. நாமே எத்தனையோ பேரின் வலைப்பூக்களை படிக்கிறோம்;ஆனால் எத்தனை பேருக்கு பின்னூட்டம் இட்டிருப்போம் என்று மனதை சமாதானப்படுத்தி கொண்டேன். இருந்தாலும் என்னுடைய ஒரு வாசகரையாவது பெற்று விடுவது என்ற லட்சியத்தில்  வெற்றி பெற்றுவிட்டேனா  என்று எப்படி சரி பார்ப்பது என்று அறிய இயலவில்லை. பின்னர் கிடைக்கும் அத்தனை பாலோயர் விட்ஜெட்டுகளையும் வலைப்பூ பக்கத்தில் சேர்த்து ஒருவாறாக என்னுடைய லட்சியம் ஈடேறிவிட்டதை ஒருவாறாக அறிந்து கொண்டேன்.

சரி, இதற்கு ஏன் இத்தனை அலட்டல். ஏதோ இலக்கியத்தில் நோபல் பரிசு கிடைத்தது போல என்று நினைக்க வேண்டாம். இன்று காலையில் வாட்ஸ்அப்பில் வந்த ஒரு தகவலே இந்த பதிவை எழுதுவதன் காரணம். நான் ஓராண்டுக்கு முன் எழுதிய “ஒரு கார்ப்பரேட் நீதிக்கதை”என்ற பதிவு  அப்படியே ஒரு வாட்ஸ்அப் க்ரூப் மூலம் வந்திருந்தது. என்னுடைய பதிவு பல பேரை சென்றடைந்து கொண்டிருக்கிறது என்பது ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் யோசித்து எழுதியது  வலைப்பக்கம் பெயர் குறிப்பிடப்படாமல் சுற்றி வருவது சிறிது வருத்தம்தான். இந்த வருத்தம் எப்படிப்பட்டது என்பதை காக்கா வடை திருடிய கதையை எழுதியவர் இன்றிருந்தால் அவரால் உணர முடியும். யார் கண்டது, என்னுடைய கதையும் நாளை பெயர் தெரியாதவர் எழுதியது என்று அடையாளப்படுத்தப்பட்டு பல ஆண்டுகள் தமிழகத்தை சுற்றி சுற்றி வரலாம். 

என்னுடைய பதிவுகள் அப்படியே நகல் எடுக்கப்பட்டு  பேஸ்புக்கிலும், பிற தளங்களிலும் பயன்படுத்தப்படுவதை பார்த்து இருக்கிறேன். இருந்தபோதும் வாட்ஸ்அப்பின் ரீச் அவற்றை விட மிக ஆழம். தவிர எந்த நாளில் யாரால் எங்கிருந்து ஆரம்பித்து யாரால் பரப்பப்பட்டது என்று அறிய வாய்ப்பில்லை. ஒரே நாளில் ஒரு தகவல் லட்சக்கணக்கானவர்களை அடைந்து விடும். நாளை அந்த கதையை நான்தான் எழுதினேன் என்று சொன்னாலும் “போய்யா! காமெடி பண்ணிக்கிட்டு” என்ற ரீதியில்தான் பதில் வரும். இது என்னுடைய பிரச்சினையாக மட்டும் இருக்க வாய்ப்பில்லை. பெரும்பாலான பதிவர்கள் இதே போன்ற சூழ்நிலையை சந்தித்திருக்கலாம். யாராவது தெரிந்திருந்தால் சொல்லுங்கள் இந்த பிரச்சினைக்கு தீர்வு என்ன என்று.


ஆனால் இதிலும் ஒரு சந்தோஷம். படிக்கும் வழக்கம் வெகுவாக குறைந்து வருகிறது என்று எண்ணியிருந்தேன். ஆனால் புத்தக கண்காட்சியில் விற்கும் புத்தகங்களும் இது போல் பரப்பப்படும் வாட்ஸ்அப் மூலம் தமிழில் பரப்பப்படும் தகவல்களும் என்னுடைய எண்ணத்தை மாற்றி வருகின்றன. வாசகர்களுக்கு பிடிப்பது போல எழுதினால் சுஜாதா, ராஜேஷ்குமார் போல புகழ் பெறப்போகும் எழுத்தாளர்கள் வருங்காலத்திலும் தோன்றலாம். கற்காலத்தில்  தோன்றிய  தோன்றிய மொழி டிஜிட்டல் யுகத்தில் புது அவதாரம் எடுக்கும் என்று நம்புவோம். 


Monday, February 9, 2015

பெண்களுக்கு ஏன் சூர்யாவை பிடிக்கிறது ?

சில நாட்களாகவே என் மனதில் உள்ள  ஒரு கேள்வி பெண்களுக்கு சூர்யாவை ஏன் பிடிக்கிறது என்பதுதான். எந்த பெண்ணிடம் பிடித்த நடிகர் யார் என்று கேட்டால் தயங்காமல் சூர்யா என்று சொல்கின்றனர். சூர்யாவின் நடிப்பை பற்றியோ அழகை பற்றியோ எந்த சந்தேகமும் இல்லை. இருந்த போதும் எப்படி எல்லா பெண்களையும் கவர்ந்தார் மனிதர் என்பதுதான் ஆச்சரியம். அரிதாக மற்ற நடிகர்களின் பெயர்களை சிலர் கூறினாலும் “சூர்யாவையும் பிடிக்கும்” என்று இழுத்து கொண்டேதான் முடிக்கின்றனர். பத்து வயது முதல் முப்பது வயது வரை பெரும்பாலான பெண்கள் சூர்யா ரசிகைகளாகவே உள்ளனர்.

ஒரு வேளை சிக்ஸ்பேக்ஸ்தான் காரணமோ என்ற சந்தேகத்தில் ஒரு பெண்ணிடம் கேட்டேன். சூர்யாவை எந்த படத்திலிருந்து பிடிக்க ஆரம்பித்தது என்று. நான் எதிர்பார்த்த பதில் “அயன்” அல்லது “வாரணம் ஆயிரம்”. ஏனென்றால் ஆனால் அந்த பெண் சொன்ன பதில் “பூவெல்லாம் கேட்டு பார்”. அந்த படம் வெளிவந்தபொழுது அந்த பெண்ணுக்கு பத்து வயதுதான் இருந்திருக்கும். அந்த படம் சூர்யாவுக்கே எவ்வளவு பிடிக்கும் என்பது சந்தேகம்தான். ஆனால் பாருங்கள், அந்த பெண்ணுக்கு அந்த படம் பிடித்து  இருக்கிறது.

இந்த ரகசியத்தை எப்படியாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்று துணிந்து ஒரு பெண்ணிடம் கேட்டே விட்டேன் “அப்படி சூர்யாவிடம் என்ன ஸ்பெசலாக இருக்கிறது என்று உங்களுக்கு எதற்கு சூர்யாவை பிடிக்கிறது” என்று.

“எதற்காக கேட்கிறீர்கள்” என்றார் அந்த பெண்.

“இதை தெரிந்து கொண்டால் பெண்களை புரிந்து கொள்ளலாம் என்றுதான் ” என்றேன்.

அந்த பெண் சிறிது நேரம் யோசித்தார். “ஆண்களுக்கு எந்த நடிகர்களை பிடிக்கிறது?” என்று கேட்டார்

“பெரும்பாலும் விஜய், அஜித் என்று சொல்வார்கள்” என்றேன்.

“சரி. ஏன் விஜயை பிடிப்பவர்களுக்கு அஜித்தை பிடிக்கவில்லை. அஜித் பிடிப்பவர்களுக்கு விஜயை பிடிப்பதில்லை” என்று கேட்டார்.

“காரணம் சொல்வது கடினம். ஒரு வேளை விஜயை பிடிக்காமல் போனதால் அஜித்தை பிடித்து இருக்கலாம். அல்லது  அஜித்தை பிடிக்காமல் போனதால் விஜயை பிடித்து இருக்கலாம்” என்றேன்.

“அதுதான் ஏன்? இருவரின் கதை தேர்வு செய்யும் விதத்திலும் ஒரு வித்தியாசமும் இல்லை. நடிப்பிலும் பெரிய வித்தியாசம் ஏதும் சொல்ல முடியாது. பின்னர் ஏன்?” என்றார்.

“இதற்கு பதில் சொல்ல வரலாற்றை திருப்பி பார்க்க வேண்டியது இருக்கும். ஆரம்ப காலங்களில் ஒருவர்  நடித்த படங்கள் சில ஆண்களுக்கு பிடித்து இருக்கும். அதே நேரத்தில் மற்ற சில ஆண்களை வெறுப்படித்து இருக்கலாம் ” என்றேன்.

“பாருங்கள். பெண்களுக்கு  சூர்யாவை பிடித்திருக்கிறது. ஆனால் பாதி ஆண்களுக்கு பிடித்த நடிகரை இன்னொரு பாதி ஆண்களுக்கு பிடிப்பதில்லை. அப்படியானால் ஆண்களை அறிந்து கொள்வதுதானே கடினம்?” என்று கேட்டார்.

“யோசிக்க வேண்டிய கேள்வி. ஆனால்  நீங்கள் எப்பொழுதாவது ஆண்களை அறிந்து கொள்ள முயற்சி செய்திருக்கிறீர்களா?”  என்று கேட்டேன்

“நான் எதற்கு செய்ய வேண்டும்” என்று கேட்டு முகத்தை திருப்பி கொண்டார்.

உண்மையை சொல்லப் போனால் ஆண்களோ பெண்களோ மனிதர்களை  புரிந்து கொள்வதுதான் கடினம். ஆனால் பாருங்கள் ஆண்கள் எப்பொழுதும் பெண்களை புரிந்து கொள்ள முயன்று தோற்று பெண்களை புரிந்து கொள்ளவே முடியாது என்று எழுதி வைத்து விட்டனர். ஆனால் ஆண்களை புரிந்து கொள்ள பெண்கள் முயல்வதில்லை. ஆண்களும் கூட.


மேற்கண்ட பதிவில் பாதி கற்பனை 


Friday, November 14, 2014

இந்த கதையை நம்புறதும், நம்பாததும் உங்க இஷ்டம்!

தன் பின் வரும் எதையும் நீங்கள் நம்பப் போவதில்லை. உங்களை நம்ப வைப்பது எனது நோக்கமும் இல்லை. ஆனால் நம்பினாலும், நம்பாவிட்டாலும் இதை ஒரு முறை படித்து விடுங்கள். கடந்த மாதம் கடவுள் என்னை சந்திக்க வந்திருந்தார். விடாத வேலைப்பளு அவரை சோர்வு கொள்ள செய்திருந்தது. வந்தவர் நேராக என்னை நோக்கி இந்த கேள்வியை வீசினார்.

இந்த மனுசங்களுக்கு என்னதான்பா வேணும். எப்ப பாரு அது இல்ல, இது இல்லன்னு வந்து புலம்பிகிட்டு. உங்களையெல்லாம் ஏன் படைச்சேன்னு இப்போ யோசிக்கிறேன்”

“டூ லேட் கடவுளே!”

“சரி இப்போ சொல்லு. நான் உலகத்தை எல்லாம் அழிக்க விரும்பல. ஆனா மனுஷங்களோட எல்லா பிரச்சினையையும் தீர்க்கணும்னு நினைக்கிறேன். எப்பிடி இருந்தா நீங்க சந்தோசமா இருப்பீங்க”

“கடவுளே! மனுசனோட முதல் பிரச்சினை ஆசை. அடுத்த பிரச்சினை பொறாமை. இது ரெண்டையும் தீர்த்து வச்சுடுங்க.”

“எப்பிடி சொல்லேன்?” கடவுள் ஆர்வமாக கேட்டார்.

“கொஞ்சம் பாருங்க. ஒருத்தன் பணக்காரனா இருக்கான். பெரிய வீட்ல இருக்கான். இன்னொருத்தன் ஏழையா இருக்கான். குடிசைல இருக்கான். எல்லாருக்கும் ஒரே மாதிரி சொந்த வீட்டையும், சொத்தையும் குடுங்க முதல்ல”

“இவ்வளவுதானா?” கடவுள் கேட்டுவிட்டு கைகளை தட்டினார். உலகம் எப்படி மாறிவிட்டது என்று என் கைகளில் பார் என்று உள்ளங்கையை விரித்து காட்டினார்.

ஆச்சரியம். அவர் உள்ளங்கைகளில் தெரிந்த உலகத்தில்  எல்லா வீடுகளும் ஒரே மாதிரி, எல்லா மனிதர்களும் விலை உயர்ந்த ஆடை அணிந்து. உலகமே மாறி விட்டது.

“சூப்பர் கடவுளே!“

“முடிந்ததா?”

“அது எப்பிடி முடியும் கடவுளே. கொஞ்ச நாள்ல மறுபடியும் புத்தி இருக்குறவன், மத்தவன் சொத்தை எல்லாம் ஏமாத்தி பிடிங்கிடுவான். அதனால எல்லாருக்கும் ஒரே மாதிரி புத்தியை குடுங்க.”

“இது முக்கியமா?”

“இதுதான் ரொம்ப முக்கியம்”

கடவுள் கைகளை தட்டினார். “இனிமே எல்லாரும் ஒரே மாதிரி புத்திசாலி” என்றார்.

“இனிமே மனுசங்க எல்லாரும் சந்தோசமா இருப்பாங்களா?”

“அதுக்குள்ள சந்தோசமா? உங்க கையை பாருங்க. அந்த பொண்ணு அந்த வடக்கு தெருல நடந்து போய்கிட்டு இருக்குற பொண்ணு கண்ணுக்கு லட்சணமா இல்ல?”

“ஆமாம்”

“பக்கத்து தெருல போற பொண்ணு இந்த பொண்ணை விட அழகு கம்மியா தெரியல?”

“மனிதா! அழகுங்குறது பாக்குற கண்ணுல”

“தத்துவம் எல்லாம் பேசாதீங்க கடவுளே. நீங்க என்ன பண்றீங்க உலகத்துல இருக்கிற எல்லா பொம்பளங்களையும் ஐஸ்வர்யாராய் மாதிரி அழகா மாத்திடுங்க. எல்லா ஆம்பளைங்களையும் அமெரிக்கால டாம் க்ரூஸ் அப்பிடின்னு ஒரு நடிகர் இருக்கார். அவரு மாதிரி மாத்திடுங்க”

“அப்போ ஒருத்தருக்கும் இன்னொருத்தருக்கும்  வித்தியாசம் தெரியாதே?”

“அட கடவுளே! அவங்கள மாதிரியே மாத்த சொல்லல. அவங்க மாதிரி அழகா மாத்திடுங்கன்னு சொன்னேன்.”

சொன்னதும் கடவுள் கை தட்டி கைகளை விரித்தார். ஆகா! உலகம்  முழுக்க  ஐஸ்வர்யாராய் மாதிரி பெண்கள். என்ன ஒரு கண் கொள்ளா காட்சி. ஆப்ரிக்காகாரனும், அமெரிக்காகாரனும் ஒரே நிறத்தில். இந்தியர்களும், வெள்ளைகாரர்களும் ஒரே மாதிரி அழகாக.

“அப்புறம் இன்னொன்னு நீங்க செய்யணும். இனிமே மனுஷனுக்கு பசிக்க கூடாது. நோய் எதுவும் வர கூடாது.”

“என்ன இது? முட்டாள்தனமா இருக்கு?”

“யோசிங்க கடவுளே. எல்லாருக்கும் ஒரே மாதிரி வீடு, சொத்து எல்லாம் கொடுத்தாச்சு. ஒரே மாதிரி புத்திசாலித்தனம் குடுத்தாச்சு. இனிமே யாரு எந்த வேலையை பாக்குறதுன்னு பிரச்சினை வரும். யாரும் வேலைக்கே போக மாட்டாங்க ஒரு கட்டத்துல. அப்போ பசியை எடுத்துட்டா எல்லாரும் இருக்குற வீட்ல சந்தோசமா அவங்களோட  ஐஸ்வர்யாராய் கூட வாழ்ந்துக்குவாங்களே.”

“சரிதான்! இனிமே யாருக்கும்  பசி, பிணி கிடையாது. போதுமா”

“செம கடவுளே! அப்புறம் எல்லாரையும் ஒரே மொழி பேச வச்சுடுங்க. எல்லாரையும் நீங்களே ஏதாவது ஒரு மதத்துக்கு மாத்தி விட்ருங்க. அப்புறம் பாருங்க.”

கடவுள் கைகளை தட்டினார்.

“இப்போ எல்லாரும் ஒரே மாதிரி பணக்காரங்க. எவனும் எவனையும் ஏமாத்த முடியாது. எல்லா பொம்பளைங்களும் அழகு. இனிமே யாரும் உங்க கிட்ட வந்து எதையும் கேட்க முடியாது. பசியும் கிடையாது. ஆசையும், பொறாமையும் இல்லாமலே போயிடும் இனிமே. சந்தோசம்தானே கடவுளே. இனிமே நீங்க நிம்மதியா தூங்கலாம்.”

“சந்தோசம்! இன்னும் ஏதாவது யோசனை இருந்தா என்னை கூப்பிட்டு சொல்லு. இன்னும் ரெண்டு நாள் டைம் எடுத்து நாம எந்த கரெக்சன் இருந்தாலும் செஞ்சுக்கலாம்”

கடவுள் மறைந்து விட்டார்.

டவுளுக்கு உலகை சீரமைக்க உதவிய திருப்தியுடன் வீட்டை விட்டு வெளியே வந்து  நடக்க தொடங்கினேன். நேராக என்னுடைய வீட்டுக்கு சென்றேன். உலகம் அமைதியாக இருந்தது. எல்லாரும் வீட்டுக்குள் முடங்கி இருந்தனர். அதனால் என்ன? யாருக்கும் எந்த குறையும் இல்லையே இப்போது. இதோ சமத்துவ உலகம். கடைகள் இல்லை. எந்த ஒரு போக்குவரத்தும் இல்லை. ஏதோ ஒரு டாம் க்ரூஸ் மட்டும்  தனது ஐஸ்வர்யாராயுடன்  என்னை கடந்து சென்றார். அவர்கள் எங்கே போகிறார்கள்? நேரம் போக்க  சிறிது உலாவிவிட்டு வருவது மட்டுமே அவர்களின் நோக்கமாக இருக்கலாம்.  

ஏதோ ஒரு இனம் புரியாத கவலை என்னை கவ்வியது. வித்தியாசங்களே உலகை இயங்க வைப்பதாக தோன்றியது. பசி வேண்டும். கவலை வேண்டும். தேடல் வேண்டும். வாழ்வதற்கு ஒரு காரணம் வேண்டும். இப்படியே போனால் சிறிது நாட்களில் எல்லாருக்கும் பித்து பிடித்து விடும். உலகம் அதுவாகவே அழிந்து விடும். மீண்டும் கடவுளை கூப்பிட்டு பேச தொடங்கினேன். பின்னர் என்ன? சில நிமிடங்கள்  டாம் க்ரூஸ், ஐஸ்வர்யாராய் போல இருந்த நீங்களும் நானும் மீண்டும் பழைய உருவத்தையே அடைந்து விட்டோம். இதெல்லாம் எப்போது நடந்தது என்று யோசிக்க வேண்டாம். அதை கடவுள் அப்போதே  மறக்க வைத்து விட்டார். ஆனால் பாவம். அவரின் பிரச்சினைதான் இன்னும் தீர்ந்தபாடு இல்லை.

Monday, October 20, 2014

இது வாட்ஸ்அப் காலம்

மீப காலத்தைய தகவல்  தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகம் பிரமிக்க வைக்கிறது. திருபாய் அம்பானியின் கனவு என்று ஆயிரம் ரூபாய்க்கு நேற்றுதான் செல்போன் கொடுத்தது போல உள்ளது. குறுகிய காலத்தில் அது  கிடுகிடுவென வளர்ந்து இன்று வாட்ஸ்அப்பில்  வந்து நிற்கிறது.

பேஸ்புக் கூட சிறிது நேரத்தில் போர் அடித்து விடும். ஆனால் வாட்ஸ்அப்பில் அந்த பிரச்சினை கிடையாது. பள்ளி நண்பர்கள், கல்லூரி நண்பர்கள் ஒரு உடன் பணி செய்பவர்கள், சொந்த பந்தங்கள் என்று அனைவருடனும் ஒரு குரூப் ஆரம்பித்து விட வேண்டியது. நேரம் காலம் தெரியாமல் என்று வாட்ஸ் அப்ப வேண்டியது. காதலிப்பவர்களுக்கு இன்னும் எளிது. யாருக்கும் சந்தேகம் வராமல் போர்வைக்குள் இரவு முழுக்க சாட் செய்யலாம்.

வாட்ஸ்அப்பின் இந்த அதீத வளர்ச்சி அனைத்து பொழுதுபோக்கு ஊடகங்களுக்கும் ஒரு பெரும் சவாலாக இருக்கப் போகிறது. தியேட்டர்களிலும், டிவி முன்னரும் அமர்ந்து சாட் செய்யும் இந்த வசதி. வாசிக்கும் பழக்கமோ வெகு விரைவில்  முற்றிலும் அழிந்து விடும். ஏனென்றால் பேசுவதற்கு ஆள் இல்லாத நேரங்களில்தானே மற்ற பொழுதுபோக்குகள் நமக்கு தேவை.



இதெல்லாம் இருக்கட்டும். இந்த வாட்ஸ்அப், பேஸ்புக்கிலும் நம் ஆட்கள் செய்யும் தொல்லைதாங்கவில்லை. முன்பு மஞ்சள் நிறத்தில் ஒரு நோட்டிஸ் அடித்து கொடுப்பார்கள். ஏதாவது கடவுள் பெயரை குறிப்பிட்டு இதே போல் நீங்கள் நூறு பேருக்கு நோட்டீஸ் அடித்து கொடுத்தால் அந்த கடவுளின் நல்லாசி கிடைக்கும். தவறினால் பரிட்சையில் தேற மாட்டீர்கள், வேலை போய் விடும் என்று பகிரங்க மிரட்டல் விடுப்பார்கள். போதாக்குறைக்கு ஏதாவது ஒரு வட இந்திய சேட்டின் பெயரை குறிப்பிட்டு அவரின் கலெக்டர் வேலை இதை அலட்சியப்படுத்தியதால் பறிபோய்விட்டது என்று வேறு இருக்கும். இன்று மங்கல்யான் காலத்திலும் மஞ்சள் நோட்டீஸ் வாட்ஸ்அப்பில் பரப்பப்படுகிறது. தமிழன் பழசை மறந்துட்டான்னு யாருய்யா சொன்னது?

இவர்கள் ஒரு வகை என்றால் இன்னொரு வகையினர் செய்தியை உருவாக்குபவர்கள். தங்கள் மனதுக்கு தோன்றியதை எல்லாம் டைப்பி அந்த செய்தியை பரப்பிவிட்டு விடுவார்கள். சில நாட்களுக்கும் முன் இப்படித்தான். மோடி அமெரிக்க பொருட்களை எல்லாம் புறக்கணித்து இந்திய பொருட்களை வாங்க சொல்கிறார் என்று. அவர்கள் சொல்ல வந்த கருத்து என்னவோ சரிதான். ஆனால் ஏன் மோடியை துணைக்கு அழைத்து கொள்கிறார்கள்? உண்மையில் மோடி அமெரிக்க பொருட்களை புறக்கணிக்க சொன்னால் எந்த விதமான பின்விளைவுகள் வரும் என்று கூட சிந்திக்காமல் அந்த தகவல் பலரால் தொடர்ந்து பரப்பப்பட்டது. இதை கூட விட்டு விடலாம். எதில் எதில் விளையாடுவது என்றே இல்லாமல் தென் தமிழகத்தின் ஒரு ஊரில் பள்ளி வாகனம் விபத்தில் சிக்கிவிட்டது. குழந்தைகளுக்காக பிரார்த்தியுங்கள் என்று நடக்காத ஒரு விபத்தை பரப்பிவிட்டார்கள். இதே தகவல் சில ஆண்டுகளுக்கு முன் குறுஞ்செய்தியிலும் பரப்பப்பட்டதுதான் இதில் கவனிக்கத்தக்கது. அதே போல் சில ஆண்டுகளாக ஆறு மாதத்திற்கு ஒரு முறை பரப்பப்படும் ஒரு வதந்தி ஒரு குளிர்பானத்தில் எய்ட்ஸ் நோயாளியின் ரத்தம் கலந்துவிட்டது. எனவே அதை வாங்காதீர்கள் என்பது. யாராவது அந்த பானத்தை குடித்து கொண்டிருக்கும்போது அந்த செய்தியை படித்து இருந்தால் பயத்திலேயே உயிர் போயிருக்கும்.

இது போன்ற தகவல்களை  வாட்ஸ்அப் மூலமோ அல்லது மற்ற எந்த தகவல் தொழில்நுட்ப சாதனங்களின் மூலமோ மற்றவர்களுக்கு பார்வர்ட் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் தகவலை உருவாக்கியது நாமில்லை என்றாலும் நாம் அனுப்பிய தகவலுக்கு நாம்தான் பொறுப்பு.
  

Sunday, June 15, 2014

நான் கடவுள் தேடிய கதை

டவுள் எதற்கு தேவையோ இல்லையோ குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லவாவது அவர் கண்டிப்பாக தேவை. பின்னே உங்கள் குழந்தை “அரிசி எப்பிடி மண்ணுல இருந்து எப்படி முளைக்குது” என்று கேட்டால் “சாமி முளைக்க வைப்பாருடா” என்ற பதிலை தவிர்த்து வேறு எதை சொல்வது. அதே போன்ற ஒரு கேள்வியை நான் கேட்ட நேரத்தில்தான் கடவுள் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். எனவே கடவுள் எனக்கு அறிமுகமான காலத்தை நினைவு தெரியாத காலம் என்று எடுத்து கொள்ளலாம். எல்லா இந்திய குழந்தைகளை போலவே தெய்வ நம்பிக்கை மனதில் விதைக்கப்பட்டது. புரியாத விஷயங்களுக்கு எல்லாம் விடையாக கடவுள் கிடைத்தார். அவர் எங்கே இருக்கிறார் என்று கேட்ட போதெல்லாம் அவர் வானத்தில் இருக்கிறார் என்று பதில் கூறிவிடுவார்கள். பெரியவர்கள் சொல்வது போல அவர் வானத்தில் இருக்கிறார் என்று நம்பி விட்டேன்.

அதிக ஆசைகள் இல்லாத பால பருவத்தை தாண்டி, ஆரம்ப பள்ளி காலத்தில் கடவுள் நமக்கு கேட்டதெல்லாம் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் அவரிடம் நிறைய கோரிக்கைகளை வைக்க ஆரம்பித்து விட்டேன். கோரிக்கைகள் என்றால் பெரிய கோரிக்கைகள் எல்லாம் கிடையாது. நானும்  ராம.நாராயணன் படத்தில் வரும் குழந்தைகள் போல தெய்வ சக்தியுடன் அற்புதங்களை புரிய வேண்டும் போன்ற எளிய கோரிக்கைகள் மட்டுமே. ஆனால் என்னதான் கடவுளை வேண்டினாலும் அவர் எனக்கு தரிசனம் தரவில்லை. அற்புத சக்திகளையும் தரவில்லை. என்னுடைய பக்தியில் ஏதோ குறை இருக்கிறது போலும் என்று சந்தேகம் கொள்ள தொடங்கினேன். வகுப்பறையில் பாடம் நடத்தி கொண்டிருக்கும்போது நான் கடவுளை சிந்தித்து கொண்டிருப்பேன். ஒரு நாள் பாட புத்தகத்தில்  சூரிய குடும்பத்தை படமாக பார்த்தபோது கடவுள் இருக்கிற இடத்தை இதில் குறிக்காமல் விட்டு விட்டார்களே என்று கோபம் வந்து அதன் பின் படிப்பிலேயே ஆர்வம் குறைந்து விட்டது.

இப்படி பக்தி மார்க்கத்தில் தீவிரமாக இருந்த காலத்தில்தான் அந்த வாசகங்கள் முதல்முறையாக  என்னுடைய கண்ணில் பட்டன. ‘கடவுளை நம்பியவன் காட்டுமிராண்டி; கடவுளை பரப்பியவன் ஏமாற்றுக்காரன்’ என்ற ரீதியில் இருக்கும் அந்த வாசகங்கள். வாசகங்களுக்கு கீழே பெரியார் என்று எழுதியிருந்தது. கடவுளை கூட திட்டலாமா என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இதை பற்றி பெரியவர்களிடம் கேட்க முடியாது. கூட படித்த நண்பனிடம் ‘கடவுளை கும்பிடாம இருக்காங்களே? கடவுள் அவங்களை சந்தோசமா வச்சிருக்க மாட்டார்தானே?” என்று கேட்டேன். அவனோ ‘கமலஹாசன் கூட கடவுளை கும்பிட மாட்டாராம். அவர் கிட்ட பணம் இல்லையா என்ன? எல்லா நடிகைகளுக்கும் அவரைத்தான் பிடிக்கும் தெரியுமா?” என்றான். ‘அதுதான் அவர் படம் எல்லாம் ஓடாம போகுதா? ரஜினி மாதிரி சாமி கும்பிட்டால்ல படம் நல்லா ஓடும்” என்றேன். கடவுளை விட்டு கொடுக்காமல்.

இப்படி கடவுள் மேல் மிகுந்த பயபக்தியுடன் மேல்நிலை பள்ளியில் அடி எடுத்து வைத்தேன். வழக்கப்படி கடவுளிடம் வைத்த கோரிக்கைகளுக்கும் அளவில்லை. ஆனால் காமிக்ஸ் புத்தகம் வேண்டும், நிறைய மார்க் எடுக்க வேண்டும் என்று இப்போது கோரிக்கைகள் சிறிது பகுத்தறிவுடன் மாறி விட்டிருந்தன. சில நேரங்களில் கோரிக்கைகள்  நிறைவேற்றப்பட்டும் விட்டன. ‘கடவுள் இருக்காரு குமாரு’ என்று அப்போதெல்லாம் கடவுளுக்கு நன்றி செலுத்துவேன். சில நேரங்களில் கோரிக்கைகள் தோல்வி அடையும்போது கடவுள் மேல் லேசாக சந்தேகம் எழும். இப்படியெல்லாம் யோசிக்க கூடாது. அதெல்லாம் தப்பு என்று அந்த எண்ணங்களை வளர விடாமல் பார்த்து கொள்வேன்.

கடவுளும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்த நேரத்தில்தான் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் வந்தது. சில மாதங்களுக்கு பின் தேர்வு முடிவுகளும் வந்தது. மதிப்பெண்களை பார்த்ததும் எனக்கு பேரதிர்ச்சி. வழக்கமாக பள்ளி தேர்வுகளில் பெரும் மதிப்பெண்களை கூட பொது தேர்வில் எடுக்கவில்லை. ‘கடவுள் நமக்கு இப்படி செஞ்சுட்டாரே. இனிமே அவர் கூட பேச்சு வார்த்தை வச்சுக்க கூடாது’ என்று முடிவு செய்தேன். கவனியுங்கள். இப்போதும் அவர் மேல் முழுவதுமாக  நம்பிக்கை இழக்கவில்லை. என்னுடைய நோக்கம் கடவுளை குற்ற உணர்ச்சியில் தள்ளி அதன் மூலம் பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்களை பெறுவது.

அவ்வப்போது கடவுளை வணங்குவது  என்ற ரீதியில் அடுத்து வந்த நாட்கள் ஓடின. பனிரெண்டாம் வகுப்பில் வாய்த்த ஆங்கில ஆசிரியர் ஒரு ஆன்மீகவாதி. ‘பாபா’ படம் ஓடிய தியேட்டரில் அவரை பார்த்ததை சொன்னதும் படத்தில்  ஆன்மீகம் இருக்கிறது என்று சொன்னதாலேயே சென்றேன் என்றார். ஆனால் ஆன்மீகத்தை பற்றி படத்தில் சரியாக எதுவுமே சொல்லவில்லை என்றார். ‘எல்லாம் கடவுள்தான் என்று சொன்னவர்கள் அதை சரியாக விளக்கவில்லை’  என்றவர் பின்னர் ஒரு பென்சிலை கையில் எடுத்து கொண்டு ‘இந்த பென்சில் இங்க இருக்குதுன்னா அதுக்கு இடம் கொடுக்கிறது ஸ்பேஸ் அதாவது வெற்றிடம். எல்லா இடத்திலும் இருக்கிற வெற்றிடம்தான் கடவுள்’ என்றார். அவர் சொன்ன கருத்தை விட அவர் இந்து பெயரில் வாழும் முஸ்லீமோ என்றுதான் சிந்தித்தேன். இருந்தாலும் அவர் கருத்து மனதில் ஒரு சிறிய தூண்டுதலை ஏற்படுத்தியது. இடைக்காலத்தில் பெற்ற  அறிவியல் அறிவு  கடவுள் வானத்தில் இல்லை என்றால் வேறு எங்கே இருக்கிறார் என்று கேள்வி கேட்க தொடங்கியிருந்தது.

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மிகப்  பெரிய சந்தோசம் தரவில்லை என்றாலும் அதிக அதிர்ச்சியும் தரவில்லை. ஒரு வேளை நாம் படித்ததால்தான் மதிப்பெண் பெற்றோமா? இல்லை கடவுள்தான் மதிப்பெண் பெற வைத்தாரா என்ற சந்தேகம் மீண்டும் தலை தூக்கியது.

பின்னர் தமிழனில் தலை எழுத்துக்கு விதிவிலக்காக மாறாமல் பொறியியல் கல்லூரியில் அடி எடுத்து வைத்தேன். கடவுள் பற்றி முன்பிருந்த எண்ணங்கள்  மெதுவாக உடைய ஆரம்பித்த தருணம். அந்த நேரத்தில்தான் கடவுளை பற்றி முற்றிலும் சந்தேகம் கொள்ள வைக்கும் ஒரு சம்பவம் நடந்தது. எனக்கு அந்த சம்பவத்தில் நேரடி தொடர்பு இல்லையென்றாலும் கடவுளை பற்றி நிறைய யோசிக்க வைத்தது அந்த சம்பவம். அது கும்பகோணம் தீ விபத்து.


 தொடரும் 

விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன 


Wednesday, May 21, 2014

சென்னையை மெட்ரோ நகரமாக உணர்ந்த தருணம்

நான் முதல் முதலில் சென்னை வந்திருந்த சமயம். ஒரு மதியப்பொழுதில் கோடம்பாக்கத்தில் இருந்து தி.நகர் செல்ல பேருந்தில் ஏறி விட்டேன். பேருந்தில் கூட்டம் இல்லை. ஆனாலும்  இருக்கைகள் நிரம்பி இருந்தன. அமர்ந்திருந்த  நடத்துனரை தேடி  சென்று பயணசீட்டு வாங்க பத்து ரூபாயை எடுத்து நீட்டினேன்.

“ரெண்டு ரூபா டிக்கெட்டுக்கு பத்து ரூபாயை எடுத்து நீட்டினா எங்க போறது. பேசாம இறங்கிக்க” என்று சொல்லிவிட்டு வேகமாக எழுந்து முன்னால் சென்று விட்டார்.

கையில் சில்லறை வேறு சுத்தமாக இல்லை. அவர் திரும்பி என்னை கடந்து செல்லும் நேரம் வரை காத்து இருந்து பாவமாக முகத்தை வைத்து கொண்டு “சில்லறை இல்லை சார்” என்றேன்.

கடுப்பாக முகத்தை வைத்து கொண்டு பத்து ரூபாயை வாங்கி கொண்டு  சில்லறை தேடி எடுத்து கொடுத்தார்

இது நடந்து முடிந்தபோது அடுத்த நிறுத்தம் வந்து இருந்தது. வட இந்தியர் போல இருந்த ஒருவர் காதில் மொபைலை வைத்து கொண்டு பதட்டமாக  பேருந்தில் ஏறி நடுவில் சென்று நின்று கொண்டார். நடத்துனர் அமர்ந்த இடத்தில் இருந்தே ‘டிக்கெட்’ என்றதும் பத்து ரூபாயை எடுத்து நீட்டி திநகர் என்றார்.

“சேன்ஜ் நஹி. இறங்கிக்க.” வாசலைகாண்பித்து என்னிடம் பாடிய அதே பாட்டை திரும்ப ஆரம்பித்தார் நடத்துனர்.

“வொய் சுட் ஐ கெட் டவுன். திஸ் இஸ் யுவர் ரெஸ்பான்ஸ்சிபிலிட்டி டு கிவ் சேன்ஜ்”

அடப்பாவி. அவன்தான் பஸ்ஸை வாங்கி விட்டவன் போல இப்படி கத்துகிறானே. இதே வார்த்தையை அவர் என்னிடம் சொன்னபோது நான் எப்படி பம்மினேன்.

“சில்லறை இல்லன்னா இல்லைதான். டோன்ட் டாக்  இங்கிலீஷ் . இறங்கிடு”

“ஐ கான்ட்! திஸ் இஸ் கவர்மென்ட் ப்ரோபர்ட்டி! யு ஆர் பப்ளிக் சர்வன்ட். யூ கான்ட் ஆர்டர் மீ. ஐ ஆம் எ லாயர். ஐ நோ மை ரைட்ஸ் ” என்று சத்தத்தை மேலும் கூட்டினார்.

நடத்துனர் இப்போது சற்று குழம்பி விட்டார். இப்போது வட இந்தியருக்கு ஒரு ஆதரவு குரல் எழுந்தது.

“அவர் கூட ஏம்பா சண்டை  போடுற. சில்லறை கொடுத்துடேன்”

“என் கிட்ட சில்லறையே இல்லம்மா.”

இது வரைக்கும் அமைதியாகத்தான் சென்று கொண்டிருந்தது. கூட்டத்தில் அமர்ந்திருந்த ஒரு பெரியம்மா அந்த வட இந்தியரிடம் தனது கருத்தை சொல்ல ஆரம்பிக்கும் வரை. ஆங்கிலத்தை தமிழில் தட்டச்சுவது சிரமமாக இருப்பதால் இனி எல்லாமே தமிழில்.

“நானும் தமிழ்நாடு இல்லை. சென்னை வந்து 25 வருஷம் ஆச்சு. தமிழ் தெரியலனா சென்னைகாரங்க இப்பிடித்தான் செய்வாங்க. அங்க கண்ணாடி போட்டு நிக்குறானே ஒரு பையன். அவன் பத்து ரூபாயை கொடுத்ததும் இவர் சில்லறை கொடுத்தார். இப்போ நீ இங்கிலிஷ்ல கேட்டதும் தர மாட்டேங்குறார்.”

அந்த பெரியம்மா எதற்காக இந்த கருத்தை சொன்னார்கள் என்றே தெரியவில்லை. அவருக்கு யார் மேல் கோபம் என்பதும் புரியவில்லை. அடிப்பாவி! இதுல ஏன் என்னோட பேரை இழுக்குற என்று எண்ணி கொண்டிருந்தேன். வட இந்தியரோ இப்போது  கோபத்தின் உச்சத்தில் இருந்தார்.


“நான் மேலதிகாரிங்ககிட்ட போவேன். நான் யாரு தெரியுமா” என்று பேருந்து முழுவதும் கேட்க உரத்து சொன்னார்.

இப்போது முன்னிருக்கையில்  நடந்ததை கவனித்து கொண்டிருந்த ஒரு வீர தமிழருக்கு கோபம் வந்து விட்டது.

“வாயை மூடுடா! என்ன பேசிகிட்டு இருக்க. எனக்கு திநகர் இன்ஸ்பெக்டரை தெரியும்” சட்டை கையை  மடக்கி விட்டு எழுந்தார். அவர் சொன்னது   வட இந்தியருக்கு புரிந்திருக்க நியாயம் இல்லை. ஆனாலும் சட்டை கையை மடக்கி விட்டதன் அர்த்தம் புரிந்திருக்க வேண்டும். அவரின் உடல் விரைப்பானதை உணர முடிந்தது. அவர் கண்கள் சிவந்து விட்டன.

அடப்பாவிங்களா! ஒரு ரெண்டு ரூபாய்க்கு அடி தடிக்கெல்லாம் போறீங்களேடா

“ஒரு திநகர் கொடுங்க.” ஒரு குரல் என்னை கலைத்தது. இந்த நேரத்துலயும் டிக்கெட் கேட்கும் கடமையாளர் யார்? சிலிர்த்து கொண்டு திரும்பினேன். நடத்துனரின் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த இரண்டு பெண்களில் ஒருவர் டிக்கெட் எடுத்து கொண்டிருந்தார். இந்த பெண்கள் இத்தனை நேரமா டிக்கெட் எடுக்காமல் இருந்தார்கள் என்று அவர்களை நான் பார்த்து கொண்டிருந்தபோது அந்த பெண் அந்த டிக்கெட்டை வட இந்தியரிடம் நீட்டினார்.

“நீங்க எதுக்கு டிக்கெட் எடுக்கணும்?” வட இந்தியர்  கேட்டார்.

“பரவாயில்ல பிடிங்க” கொடுத்து விட்டு ஜன்னலுக்கு வெளியே பார்க்க ஆரம்பித்தார். இது நடந்து இரண்டு நிமிடங்களில் வட இந்தியர் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்து விட்டது. அடிக்க வந்தவரை முறைத்து கொண்டே யாருடனோ மொபைலில் தொடர்பு கொண்டு பேசிக்கொண்டே இறங்கிவிட்டார்.

“கண்டக்டருங்க சில்லறை வச்சுக்க வேணாமா? அவன் என்ன டென்சன்ல இருந்தானோ?”

“இவருக்கு இன்ஸ்பெக்டர் தெரியும்னா அவனுக்கு யாரை எல்லாம் தெரியுமோ? யாரை கூப்பிடான்னு தெரியல. அடிக்க வந்தவரை லேசுல விட மாட்டான்”

மக்களின் பலதரப்பட கருத்துகள் பேருந்து முழுவதும் ஒலிக்க தொடங்கின.

இரண்டு ரூபாய் பிரச்சினை மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினையாகி விட்டதை யோசித்து கொண்டே பேருந்தில் இருந்து இறங்கினேன். தசாவாதாரம் கியாஸ் தியரிபடி இந்த சண்டைக்கு காரணம் யார்? யார் மேல் தவறு என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இந்திய நகரங்களில் சில நுணுக்கமான பிரச்சினைகள் இருப்பது மட்டும் தெரிந்தது

சரி இதை முழுக்க படித்து இருந்தால் நீங்களாவது சொல்லுங்கள். தவறு சில்லறை இல்லாத கண்டக்டர் மீதா? ஆரம்பத்தில் இருந்தே உரத்த குரலில் பேசிய ? சண்டையை பெரிதாக்கிய அந்த பெரியம்மா மீதா? அடிக்க வந்தவர் மீதா? இதை ஒரு விஷயம் என பதிவிட்டு கொண்டிருக்கும் என் மீதா? இல்லை எத்தனை மொக்கை பதிவிட்டாலும் வந்து படிக்கும் உங்கள் மீதா?



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...