உலகில் நடக்கும் பெரும்பாலான விஷயங்கள் ஒரு லாஜிக்கின் அடிப்படையிலேயே நடக்கிறது. ஒட்டு மொத்த பிரபஞ்ச இயக்கத்தையும் சில இயற்பியல் விதிகளின் மூலம் விளக்க முடியும். ஆனால் பிரபஞ்சத்தில் சில விஷயங்கள் எந்த ஒரு லாஜிக்கையும் பின்பற்றுவதில்லை. அதில் முக்கியமானது காதல். இந்த உயிரியல் விஷயத்தை எந்த இயற்பியல் கோட்பாட்டாலும் விளக்க முடியாது. காதல் என்றால் என்ன? உண்மையில் அப்படி ஏதும் இருக்கிறதா இல்லை அது முற்றிலும் உடற்கவர்ச்சி சார்ந்த விஷயமா என எத்தனை ஆராய்ந்தாலும் யாராலும் ஒரு திருப்திகரமான பதில் அளிக்க முடிவதில்லை. இருந்தாலும் இதை பற்றி எல்லாம் யோசிக்காமல் எல்லாரும் காதலித்து கொண்டே இருக்கிறோம். காதலும் காரணம் இல்லாமல் கண்டபடி வந்து கொண்டும், சென்று கொண்டும் இருக்கிறது.
இளங்கோ(பெயர் மாற்றப்பட்டுள்ளது) பள்ளியில் என்னுடன் படித்தவன். என்னுடைய தெருவும் கூட. பத்தாவது முடித்ததும் பாலிடெக்னிக் பக்கம் சென்று படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டான். வேலைக்கு செல்லாமல் சுற்றி கொண்டிருந்த நாட்களில் திடீரென வீட்டில் சென்று கம்ப்யூட்டர் கோர்ஸ் சேரப்போகிறேன் என்று சொல்லி இருக்கிறான். பயலுக்கு திடீரென்று படிப்பில் என்ன அக்கறை என்றெல்லாம் யோசிக்காமல் அவர்களும் சேர சொல்லி பணம் கொடுத்து அனுப்பி இருக்கின்றனர்.
ரம்யாவின் (கற்பனை பெயர்) பூர்விகம் எங்கள் ஊர்தான். இன்னும் சொல்ல போனால் அவள் எனது தெருதான். அவளது தந்தை பிழைப்புக்காக குடும்பத்துடன் வட இந்தியாவுக்கு சென்று விட்டார். அவர் +2 படிக்கும்போது அவர் காலமாகிவிட்டதால் ரம்யா தனது தாயுடன் மீண்டும் சொந்த ஊருக்கே வந்து விட்டாள்; பார்க்க களையாக வேறு இருப்பாள். தெருவில் பாதி பையன்கள் அவளை கவனிக்க தொடங்கி இருந்தனர்.நமது ஹீரோ இளங்கோவையும் சேர்த்து.அவள் விடுமுறைக்கு கம்ப்யூட்டர் கோர்ஸ் சேர்ந்து இருந்தாள்.
மற்ற பையன்கள் போல் ரம்யாவின் தெரு முனையிலேயே நிற்காமல் இளங்கோ ஸ்மார்ட் வொர்க் செய்து ரம்யாவுடன் கம்ப்யூட்டர் படிக்க சேர்ந்து விட்டான். அவனது திட்டப்படியே ரம்யா அவனை கவனிக்க தொடங்கினாள். வழக்கப்படியே நட்பில் தொடங்கி ஒரு கெட்ட நாளாக பார்த்து தனது காதலையும் சொல்லி விட்டான். அவளும் அதை ஏற்று கொள்ள காதல் தீப்பந்தம் கொழுந்து விட்டு ஏறிய தொடங்கி விட்டது.
காதல் நன்றாக போய் கொண்டு இருந்த போது இளங்கோவுக்கு ஒரு பிரச்சினை. கம்ப்யூட்டர் சென்டரில் இருக்கும் இரண்டு மணி நேரம் தவிர்த்து மீதமுள்ள 22 மணி நேரம் ரம்யாவுடன் பேச முடியவில்லை என்பதுதான் அது. தவிர இன்னும் சில நாட்களில் கோர்ஸ் முடிந்து விடும். எப்போதும் தொடர்பிலேயே இருக்க என்ன செய்வது என யோசித்த அவன் அவளுக்கு ஒரு செல்போன் பரிசளிக்க முடிவு செய்தான். முதல் முறை காதலிக்கு அளிக்கும் பரிசு.குறைந்த விலையில் கொடுத்தால் அவள் தவறாக எடுத்து கொள்வாளோ என நினைத்து நல்ல, விலை உயர்ந்த போன் அளிக்கலாம் என முடிவு செய்தான். சரி, பணத்துக்கு என்ன செய்வது? வழக்கப்படி தனது தந்தையின் கஜானாவில் கை வைத்து விட்டான். எப்போதும் போல யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள் என எண்ணி விட்டான். மொபைலை வாங்கி பரிசு அளித்தும் விட்டான். அந்த பெண்ணும் வேண்டாம் என சொல்லாமல் வாங்கி கொண்டு தனது தாயிடம் ஏதோ பொய் சொல்லி சமாளித்து விட்டாள்.
இளங்கோவின் தந்தை பெரிய தொகை தனது கையிருப்பில் குறைவதை கண்டு பிடித்து விட்டார். இளங்கோவை கூப்பிட்டு விசாரிக்க ஒரு கட்டத்தில் தனது திருமண தேதி நெருங்கி விட்டதாக நினைத்து உண்மையை சொல்லி விட்டான். அதிர்ச்சி அடைந்த தந்தை இதை 'டீல்' செய்யும் பொறுப்பை இளங்கோவின் தாயிடம் விட்டு விட்டார்.
இளங்கோவின் தாய் கூந்தலை முடிந்து கொண்டு நேராக ரம்யாவின் வீட்டு வாசலுக்குசென்றுஇருக்கிறார். தனக்கு தெரிந்த, தான் இதுவரை பயன்படுத்திய, பயன்படுத்தாத எல்லாகெட்ட வார்த்தைகளையும் பயன்படுத்த இது போன்ற ஆட்களை இது வரை பார்த்திராத ரம்யாவின் தாய்க்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஒட்டு மொத்த தெருவும் வேடிக்கை பார்த்த அவமானமும், தனது பெண் மேல் வைத்திருந்த நம்பிக்கை பொய்த்த ஏமாற்றமும் சேர்ந்து கொள்ள கண்ணில் நீர் வழிய நின்று கொண்டு இருந்திருக்கிறார். இளங்கோவின் தாய் திட்டி முடித்து விட்டு சென்ற சில மணி நேரத்துக்குள் தற்கொலை செய்து கொண்டார்.
மரணத்துக்கு வந்த ரம்யாவின் உறவினர்கள் நடந்த விஷயம் அறிந்ததும் ஆவேசம் அடைந்து இருக்கிறார்கள். அவர்களில் சிலர் இளங்கோவை கொலை செய்யும் வெறியுடன் அவன் வீட்டுக்கு சென்று இருக்கிறார்கள். இளங்கோ சுதாரித்து தப்பித்து ஓட முயன்றபோது தெருவிலேயே வைத்து அவனை கத்தியால் குத்தி விட்டார்கள். ரத்த வெள்ளத்தில் கிடந்த இளங்கோவை எப்படியோ அவனது வீட்டார் காப்பாற்றி மருத்துவமனை கொண்டு சென்று இருக்கிறார்கள். இப்போது தந்தை, தாய் இல்லாமல் ரம்யா; உயிருக்கு போராடி கொண்டு இளங்கோ.
மேற்கூறிய சம்பவங்கள் நடந்து இப்போது சில வருடங்கள் ஓடி விட்டன. இப்போது இளங்கோ வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு தந்தையும் ஆகி விட்டான். தாயின் மரணத்துக்கு பின் உறவினர் வீட்டுக்கு சென்று விட்ட ரம்யாவுக்கும் இப்போது திருமணம் ஆகி குழந்தை இருக்க வேண்டும். கடைசியில் இவர்களின் காதல் ஒரு உயிரை பறித்ததுதான் மிச்சம்.
'ராட்டினம்' என்றொரு படம். ரம்யா-இளங்கோவின் கதையை மீண்டும் நினைவுபடுத்தியது. இந்த லாஜிக் இல்லாத காதல் இன்னும் எத்தனை ரம்யா-இளங்கோக்களை உலகத்தில்உருவாக்க போகிறது என தெரியவில்லை. மண்ணில் இந்த காதல் இன்றி வாழ முடியுமா? என யோசித்து கொண்டே இருக்கிறேன்.
படிப்பை பாதியிலேயே நிறுத்தும் போதே - அவ்வளவு தான்...!
ReplyDeleteஅவசரம்... எல்லாமே அவசரம்...
யோசித்துக் கொண்டே இருங்கள்... செயலில் வேண்டாம்...