Thursday, January 30, 2014

ஆணாதிக்க சமூகம்

ன்னுடைய கல்லூரி இறுதி நாட்களின் போது கூட படித்த நண்பர்களில் சிலர் ஆட்டோகிராப் புத்தகத்தில் மற்றவர்களை பற்றி தகவல் திரட்டி கொண்டிருந்தனர் . பெயர், முகவரி, விறுப்பு வெறுப்புகள், லட்சியம் என்று ஒரு பக்கம் முழுக்க தகவல்களை மற்றவர்களிடம் இருந்து வாங்கி இருந்தான் ஒரு நண்பன். இது போன்ற விஷயங்களில் எனக்கு விருப்பம் இல்லை என்றாலும் ஒரு நாகரீகத்திற்காக நானும் எதையோ நிரப்பி கொடுத்தேன்.

அப்போது தற்செயலாக இல்லை, இல்லை ஒரு ஆர்வத்தில் பக்கங்களை புரட்டி மற்றவர்கள் என்ன எழுதி  இருக்கிறார்கள் என்று பார்த்தேன்.குறிப்பாக பெண்கள் என்ன எழுதி இருக்கிறார்கள் என்று. இது முறையற்ற செயல் என்று சிலருக்கு தோன்றலாம். ஆனால் மாணவிகளை மாணவர்கள் பார்த்தாலே கூப்பிட்டு எச்சரிக்கை விடும் கல்லூரியில் படித்த எனக்கு உடன் படித்த பெண்களை பற்றி தெரிந்து கொள்ள வேறு வழி தெரியவில்லை. திருட்டுத்தனமாக பெண்கள் பக்கம் சென்று வந்த அந்த நோட்டு புத்தகத்தை நபடிப்பது தவறு இல்லை என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன்.  உண்மையை சொல்லுங்கள். உங்களுக்கே அவர்கள் என்ன எழுதி இருந்தனர் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கிறதுதானே?

ஒவ்வொரு பக்கமாக பார்த்து கொண்டு வந்த பொழுது அவர்கள் லட்சியம் என்று எழுதி இருந்ததை பார்த்து எனக்கு சிரிப்பதா, அழுவதா என்றே தெரியவில்லை. கிட்டத்தட்ட அனைவரும் ஒரே போல் நல்ல தாயாக இருக்க வேண்டும், நல்ல மனைவியாக இருக்க வேண்டும் என்று எழுதி இருந்தனர்.  அதில் சில புத்திசாலிகள் பெண்களும் அடக்கம்.அடிப் பாவிகளா! லட்சக்கணக்கில் செலவு செய்து படித்து விட்டு நல்ல வேலைக்கு சென்று சம்பாதிக்க வேண்டும் என்று இன்னொரு வரியை சேர்த்து எழுத தோன்றவில்லையே என்று நொந்து கொண்டேன். ஏனென்றால் அந்த புத்தகத்தில் எழுதி இருந்த மாணவர்களின்  லட்சியம் பெரும்பாலும் ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றுவதாகவே இருந்தது. இந்த பெண்களை குற்றம் சொல்லி என்ன செய்வது? காலம் காலமாக அவர்கள் மனதில் விதைக்கப்பட்டதைதான் அவர்கள் எழுதி இருக்கிறார்கள் என்று புரிந்தது. 

தென் தமிழகத்தில் இருக்கும் நிலைமை இதுதான். பெண்களை நன்கு படிக்க வைப்பது. பின் வெளியூரில் வேலைக்கு அனுப்ப தயக்கம் காட்டி சிறிது நாள் வீட்டிலேயே வைத்து இருந்து பின்  திருமணம் செய்து வைப்பது.  அதற்கு எதற்கு அவர்களை படிக்க வைக்க வேண்டும்?  இந்தியா போன்ற புத்திசாலிதனத்தை மூலதனமாக கொண்டு வளர்ந்து வரும் நாட்டுக்கு இது மிக பெரிய  இழப்பு அல்லவா? இந்த அரிய கருத்தை  பக்கத்தில் இருந்த நண்பனிடம் சொன்னேன்.

"அட போடா!பொண்ணுங்க  வேலைக்கு போறதாலதான் பசங்களுக்கு வேலை கிடைக்க மாட்டேங்குது. இவளுக வீட்லயே இருந்துட்டா அந்த வேலை ஒரு பையனுக்கு கிடைச்சு அவன் குடும்பத்தை காப்பாத்துவான்" என்றான் அவன்.

ஆணாதிக்க சிந்தனை  என்றால் என்ன என்று புரிய ஆரம்பித்த நாள் அது.

- தொடரும் 

2 comments:

  1. தொடருங்கள் ,ஆதரவு கிடைக்காமலா போய்விடும் ?
    த ம 1

    ReplyDelete
  2. நன்றாகவே புரிய வைத்துள்ளது அனுபவம்...!

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...