ஒரு மதியப் பொழுதில் என் நண்பனிடமிருந்து எனக்கு வந்த தொலைபேசி
அழைப்பில் இருந்து இந்த கதை தொடங்குகிறது.
“என்னடா மச்சான்? எப்பிடி இருக்க? ரொம்ப நாளா பேசவே இல்ல”
“அமெரிக்கால இருந்து ISD செஞ்சு பேசுற அளவு ஒரு விஷயமும் இல்ல. அதான்
பேசல”
கல்லூரி நாட்களில் இருந்த நக்கல் அவனுக்கு துளியும் குறையவில்லை.
“சரி! இப்போ என்ன விஷயம் சொல்லு.” குரலில் சற்று கோபத்தை சேர்த்து
கொண்டேன்.
“எனக்கு பொண்ணு பாத்துகிட்டு இருக்காங்க. உங்க ஊருல இருந்து ஒரு
பொண்ணு வந்து இருக்கு. அந்த பொண்ணு பத்தி கொஞ்சம் தகவல் வேணும்”
“சரி! பொண்ணு எந்த தெரு, அப்பா பேரு என்ன சொல்லு”
கூறினான்.
“சூப்பர் மச்சான். இது போதும். நான் குடும்பத்தை பத்தி விசாரிச்சு
நாளைக்கு சொல்லிடுறேன்”
“குடும்பம் பத்தி எல்லாம் நாங்க விசாரிச்சுக்கிறோம். நீங்க அந்த
பொண்ணு எப்பிடின்னு பார்த்து சொல்லுங்க.”
“பொண்ணு கேரக்டர் எப்பிடின்னும் விசாரிச்சுடலாம்.”
“டேய்! நான் அதெல்லாம் கேக்கல. அந்த பொண்ணு ஜாதகம் மட்டும்தான் எங்க
வீட்டுக்கு அனுப்பி இருக்காங்க. போட்டோ எதுவும் குடுக்கல. கல்யாண பேச்சு ஆரம்பிச்ச
பின்னாடிதான் ப்ரோக்கர் போட்டோ தருவாராம். ஜாதகம் பொருந்தவும்
எங்க வீட்டுலயும் அந்த பொண்ணு வீட்ல பேசலாம்னு இருக்காங்க”
“அப்புறம் என்ன? பேசி முடிச்சுடுங்க”
“அது எனக்கு தெரியாதா? கல்யாண பேச்சை ஆரம்பிக்க முன்னாடியே ஒரு முறை
அந்த பொண்ணு வெள்ளையா? கருப்பா? குண்டா? ஒல்லியா? அப்பிடின்னு நீ பார்த்து சொன்னா
நான் எங்க வீட்ல சொல்லி பேச சொல்லிடுவேன். ஒரு வேளை கல்யாண பேச்சு எடுத்த பின்னாடி
நான் போட்டோ பாக்கும்போது பொண்ணு
பிடிக்காட்டி சங்கடம் பாரு”
“நீ சொல்றது சரிதான். ஆனா அந்த பொண்ணை நான் எங்க போய் எப்பிடி பார்க்கிறது”
“அதான் அட்ரஸ் சொல்லி இருக்கேனே?”
“வாட் நான்சென்ஸ் யூ ஆர் டாகிங்? நான் அந்த பொண்ணு வீட்டு முன்னாடி
போய் நிக்கணுமா.”
“டேய் நண்பனுக்காக கொஞ்சம் கஷ்டப்படு. நீயும் நானும் படிக்கிற
காலத்துல கோவில், பஸ் ஸ்டாண்ட்னு எத்தனை பொண்ணுங்க பின்னாடி சுத்தி இருக்கிறோம்”
“சரி! என்னோட நண்பனுக்காக நான் இதுக்கு ஒத்துக்குறேன்”
“அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்”
“சொல்லு”
“அது எனக்கு பாத்து இருக்குற பொண்ணு. அதனால வெறிச்சு வெறிச்சு
பாத்துகிட்டு நிக்காம லேசா ஒரு பார்வை பாத்துட்டு வந்தா போதும்”
அடுத்த சனிக்கிழமை அவன் சொன்ன தெருவுக்குள் என் சைக்கிளில் நுழைந்தேன். மிக அமைதியான தெருவாக இருந்தது.
பெரிய பெரிய வீடுகள். அவன் சொன்ன வீட்டு எண்ணை தேடி நடக்க தொடங்கினேன். நான்கு
வீடுகள் தாண்டிய பின் அந்த வீடு தெரிந்தது. வீட்டின் முன்னால் சைக்கிளை நிறுத்தி
செயினை மாட்டுவது போல பாவ்லா செய்தேன்.
நடுத்தர குடும்பம் என்பது வீட்டை பார்த்ததும் தெரிந்தது, அந்த பெண் தட்டுப்படுகிறாளா என்று பார்க்க
வேண்டும். சைக்கிள் வீட்டின் அருகில் டீ கடையோ, பெட்டிக்கடையோ தட்டுப்படுகிறதா
என்று தேடினேன். என் துரதிர்ஷ்டம். எதுவும் இல்லை. என்ன செய்வது என்று யோசித்தேன்.
எத்தனை நேரம்தான் செயினை கழட்டி கழட்டி மாட்டி கொண்டு இருப்பது.
நான் முழித்து கொண்டு இருந்தபோது அந்த வீட்டுக்குள் இருந்து ஒரு
பெரியவர் வெளியே வந்தார். கர்சீப் எடுத்து முகத்தை மறைத்து கொண்டேன். சே!
நட்புக்காக என்னவெல்லாம் செய்ய
வேண்டியுள்ளது. விதியை நொந்து கொண்டேன்
அந்த பெரியவர் விலகியதும் கர்சீப்பை விலக்கி முகத்தை வெளியே
காட்டினேன். அட! ஜன்னல் அருகில் ஒரு நைட்டி தெரிகிறதே. அதுதான் பெண்ணா. எழுந்து
நின்று முகத்தை பார்க்க முயன்றேன். சரியாக தெரியவில்லை. இன்னும் அருகில் சென்றால்
தெரியும். வேக வேகமாக ஜன்னலை நோக்கி நகர்ந்தேன். அவள் நகர்ந்து விட்டாள். வாசலை
நோக்கி போகிறாள். இரண்டே அடிதான். வாசல் நேராக போனால் பார்த்து விடலாம்.
பாய்ந்தேன். அவள் வாசலுக்கு முதுகை காட்டி வீட்டுக்குள் சென்று கொண்டிருந்தாள்.
திரும்பு! திரும்பு! ஒரே வினாடி போதும்.
“யாரு அது! வெளியே?” என்றது ஒரு
ஆண் குரல்.
ஆர்வத்தில் வீட்டு வாசலுக்கு மிக அருகே வந்து நின்று விட்டதை உணர்ந்து
பதித்தேன். ஊருக்குள் இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போகப் போகிறது. ஒரே ஓட்டமாக
ஓடி விடலாமா? வேண்டாம். அந்த ஆள் என் முகத்தை பார்த்து இருப்பார். ஓடினால் திருடன்
என்று முடிவே செய்து விடுவார்கள்.
“யாரு? கேக்குறேன்ல?” இப்போது குரலோடு ஒரு உருவமும் வாசலை நோக்கி
வந்தது. அவருக்கு ஐம்பது வயதுக்கு மேல் இருக்கும். ஆனாலும் கட்டான உடல். இப்போது
நான் ஓடினால் கூட துரத்தி பிடித்து விடுவார்.
வசமாக மாட்டி கொண்டேன். என்ன செய்வது?
“அட நீங்களா தம்பி! ஏன் தயங்கி தயங்கி நிக்குறீங்க? உள்ளே வாங்க”
என்ன இது? இவர் ஏன் என்னை உள்ளே அழைக்கிறார். உள்ளே செல்வது தவிர வேறு
வழி இல்லை.
“காலைலயே வருவீங்கன்னு சொன்னாங்க. கல்யாண விஷயமாத்தான வந்து இருக்கீங்க?”
“ஆமாங்க” என்றேன். தவறாக சொல்லிவிட்டேனா?
“பானு! கொஞ்சம் தண்ணி கொண்டு வா”
பானு! பானு! காதில் தேன் வந்து பாய்ந்தது. அவளே வந்து ஏன் முன்னால்
நிற்க்கபோகிறாள். ஆனால் என்ன இந்த ஆள். என்ன என்னவோ பேசுகிறார்? ஒரு வேளை என்னுடைய மாப்பிள்ளை போட்டோ இவர்கள்
வீட்டில் கிடைத்து நான் பெண் பார்க்க வந்திருக்கிறேன் என்று நினைத்து இவர். என்
நண்பனுக்கு நானே துரோகம் செய்யப்போகிறேனா?
அந்த பெண் கையில் தண்ணீர் செம்புடன் வந்து கொண்டிருந்தாள். அப்படி ஒரு
அழகு. இவளுக்காக நண்பனுக்கு துரோகம் செய்தால் கூட தப்பில்லை. அவள் விரலில் என்
கைபட்டுவிடாமல் கவனமாக செம்பை வாங்கினேன். என் கண்ணியம் கண்டு வியந்து இருப்பாள்
என்று தோன்றியது.அப்படியே பேச்சு கொடுத்து குரலும் எப்படி என்று பார்த்து விடலாமா?
அவள் உள்ளே சென்று விட்டாள்.
“இதான் தம்பி என் பொண்ணு! இது அவளோட போட்டோ”
“போட்டோ எல்லாம் எதுக்குங்க? நேருல பார்த்தாச்சே. அதுவும் நைட்டில”
“நீங்க பார்த்தா போதுமா. மாப்பிள்ளைங்க கேட்டா தர வேண்டாமா? பாருங்க.
போட்டோல புடவைல இருக்கா. சரி உங்ககிட்ட வேற ஜாதகம் இருக்கா? உங்ககிட்ட நெறைய
ஜாதகம் இருக்கும்னு சொன்னாங்கன்னுதான் ராஜாராம் கிட்ட சொல்லி உங்களை வர சொன்னேன்.”
அடப்பாவி. என்னை புரோக்கர் என்று நினைத்தா பேசிக்கொண்டு இருக்கிறார்.
“இப்போ ஜாதகம் கொண்டு வரல. நாளைக்கு கொண்டு வரேன்.”
“இன்னொரு முக்கியமான விஷயம். பொண்ணு போட்டோவை ஜாதகம் பொருந்தி கல்யாண பேச்சு ஆரம்பிச்ச பின்னாடிதான் மாப்பிள்ளை வீட்டுக்கு குடுக்கணும். இருங்க நீங்க வந்ததை ராஜாராம்கிட்ட போன்ல சொல்லிடுறேன்.”
“நீங்க சொல்லுங்க! எனக்கு ஒரு அவசர வேலை இருக்கு. நான் கிளம்புறேன்”
சொல்லிவிட்டு பதிலுக்கு காத்து இருக்காமல் வீட்டிலிருந்து
வெளியேறினேன்.
“டேய்! பொண்ணு போட்டோவை வாட்ஸ்அப்ல அனுப்பி இருக்கேன். பார்த்தியா”
“கிரேட் டா நீ! பாத்துட்டு வர சொன்னா போட்டோவே அனுப்பிட்ட”
“சரி சரி! உங்க வீட்ல சொல்லி சீக்கிரம் பேசி முடிக்க சொல்லு. இல்ல அவங்க
அப்பா வேற பையனை பாத்திடுவாரு”
“பொண்ணு பிடிச்சாச்சுல. அதெல்லாம் பேசிடலாம்.”
“அதுக்கு முன்னாடி ரெண்டு விஷயம். உன் கல்யாணத்துக்கு நான் வர
மாட்டேன்.”
“ரொம்ப நல்லது மச்சி. அடுத்தது?”
“கல்யாணம் முடிஞ்சதும் பொண்ணை
கூட்டிகிட்டு போறயோ இல்லியோ பொண்ணோட அப்பாவை
அமெரிக்கா கூட்டிகிட்டு போயிடணும்.”
"!!!!!"
வாசகர்களுக்கு - இந்த வலைப்பூவில் எழுதப்படுபவை ஒருவேளை உங்களுக்கு
பிடித்து இருந்தால் அதை எனக்கு ஏதாவது ஒரு வழியில் தெரியப்படுத்தவும்.
ஹா... ஹா... பெரியவரை கூட்டிகிட்டு போக வேண்டியது தான்...
ReplyDeleteசெமையா இருக்கு எனக்கு பெண் பார்த்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்த பதிவு என்னை செம குஷியாக்கிவிட்டது ,, நல்ல பதிவு விறுவிறுப்பாக இருந்தது ,,
ReplyDeletesuper!
ReplyDeleteஅருமை👌
ReplyDelete