Tuesday, March 18, 2014

ராஜேந்திரனின் சாட்டிங்கும், காயத்ரியுடன் டேட்டிங்கும்

ல்லூரியில் இறுதி ஆண்டின் கடைசி சில மாதங்கள். பாடங்கள் எல்லாம் நடத்தி முடித்து விட்டு வேறு என்ன செய்வது என்று தெரியாமல் ஆசிரியர்கள் எங்கள் வகுப்பு மாணவர்களை கணிப்பொறி ஆய்வகத்திலேயே சரணாகதி அடைய சொல்லி இருந்தனர்.

பொழுதுபோக்க என்ன செய்வது என்று தெரியாமல் நான் ஆர்குட் தளத்தில் மூழ்கி இருந்தபோது  கார்த்திகேயன் என்னை அழைத்தான்.

“மாப்பிள்ளை! விஷயம் தெரியுமா? இப்போ நம்ம கிளாஸ் பசங்க பொண்ணுங்க கிட்ட இருந்து மெயில் ஐடி வாங்கி சாட் செய்றானுங்கடா.”

“என்னடா இது? எப்பிடி வாங்குனாங்க? நம்ம காலேஜ்ல பசங்களும், பொண்ணுங்களும் பேசிக்க கூடாதுன்னு ரூலே இருக்கே? லேப்ல கூட நம்ம இந்த மூலைலயும் அவங்களை அந்த மூலைலயும்ல உக்கார வச்சு இருக்காங்க”

“கடைசி வருஷம் வந்தாச்சு. இன்னும் பயந்தா வேலைக்கு ஆகாதுன்னு எல்லாரும் துணிஞ்சு எறங்கிட்டாங்க.ஆனா பொண்ணுங்க ரொம்ப தெளிவு. பேசுனா மாட்டிப்போம்னு எப்பிடி டெக்னாலஜியை யூஸ் செய்யுதுங்க”

“வயித்தெரிச்சலை கெளப்பாத.”

“உனக்கென்ன வயித்தெரிச்சல்?”

“பின்ன நம்மளால செய்ய முடியாத விஷயத்தை மத்தவன் செஞ்சா. ஆமா காயத்ரி யாரு கூடவும் சாட் செய்யலதான?”

“நீ வேற. அவதான் எல்லாரோடவும் சாட் செய்யுறா. கொஞ்சம் சுத்தி  பாரு.”

பார்த்தேன். எல்லா மாணவர்களின்  திரையிலும் பேரழகி காயத்ரியின் சாட் விண்டோ தவறாமல் திறந்து இருந்தது. சிலர் அவர்களின் ரசனைக்கு ஏற்றபடி மற்ற சில பெண்களுடனும் சாட்டி கொண்டு இருந்தனர்.

“அப்போ நாம ரெண்டு பேரும்தான் வேஸ்டா?”

“ஆமாண்டா.”

விரக்தியுடன் திரும்பி கொண்டேன். நாமும் ஐடி வாங்கி  சாட் செய்தால்தான் என்ன? சே! சே! புலி பசித்தாலும் புல்லை தின்னாது. நம்முடைய நோக்கம் பெண்களை கலாய்ப்பது மட்டுமே. கடலை போடுவது போன்ற அற்ப விசயங்களில் நாம் ஈடுபடக் கூடாது. மனதுக்கு சமாதானம் சொல்லிக் கொண்டேன். அமைதியாக சில நிமிடங்கள் கழிந்த போதுதான் ராஜேந்திரன் கையில் கட்டுடன் ஆய்வகத்துக்குள் நுழைந்தான்.

“ராஜேந்திரா! என்னடா கட்டு?”

“சைக்கிள்ல இருந்து விழுந்துட்டேன்.” சொல்லிக் கொண்டே எனக்கு அருகில் இருந்த கணிப்பொறியை இயக்கினான். நேராக மெய்லை திறந்து சாட்டுக்கு காயத்ரியை அழைத்தான்.

“ராஜேந்திரா! நீ எப்படா அவ ஐடி வாங்குன?”

“நேத்தே வாங்கிட்டேன். நேத்து சாயந்தரம் அரை மணி நேரம் சாட் செஞ்சோம்” அவன் முகத்தில் பெருமை பொங்கியது. 

“கார்த்திகேயா! இங்க வாடா. நம்ம ராஜேந்திரன் என்ன செய்ய போறான் பாரு.” ஏதோ அதிசய காட்சியை பார்க்கப் போவது போல் கார்த்திகேயனையும் துணைக்கு அழைத்து கொண்டேன். கண்கள் விரிய திரையை பார்க்க தொடங்கினோம்.

ராஜ்: ஹாய்!!!

பதில் இல்லை. நானும், கார்த்திகேயனும் ஏளனப் புன்னகையோடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.

காயத்ரி: ஹாய்!! J

சில நிமிடங்களுக்கு பின் பதில் அளித்தாள். பாவம் அவள் என்ன செய்வாள். முப்பது மாணவர்களுக்கும் பதில் அளித்து விட்டு இவனுக்கு  பதில் சொல்ல  நேரம் ஆகி இருக்கும்.

ராஜ்: எப்பிடி இருக்க?
காயத்ரி: நல்லா இருக்கேன். என்ன கைல கட்டு?

இதை படித்ததும் நானும் கார்த்திகேயனும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டோம்.

“கார்த்தி! இது வேற மாதிரி போகுது. அவ அக்கறையா விசாரிக்கிற மாதிரி தெரியுது.”

“இப்போ என்ன செய்யுறது?”

“அவ உக்காந்து இருக்குற இடத்துல இருந்து இவன் தெரிவானா?”

“மாட்டான்”

“அப்போ அவன் கைய பிடி. ஏதோ டைப் பண்றான். சீக்கிரம்.”

கார்த்திகேயன் பாய்ந்து சென்று ராஜேந்திரன் கையை பிடித்து கொண்டான்.

“கைய விடுடா”

“பொறுமையா இரு. கொஞ்ச நேரத்துல விட்டுடுறோம்.” சொல்லிவிட்டு நான் அவனுடைய  மெயிலில் இருந்து  காயத்ரிக்கு பதில் அனுப்ப தொடங்கினேன்.

காயத்ரி: என்ன பதிலே இல்ல? கைல என்ன ஆச்சு?
ராஜ்: நாய் கடிச்சுடுச்சு.
காயத்ரி: இப்போ எப்பிடி இருக்கு?
ராஜ்: இப்போ என்னால குலைக்க மட்டும்தான் முடியுது. லொள்! லொள்! வவ்! வவ்!

தகவலை தட்டி விட்டு ராஜேந்திரனின் முகத்தை பார்த்தேன். கைகளை விடுவிக்க போராடி கொண்டு இருந்தான். கண்கள் கோபத்தில் சிவந்து போய், அவள் என்ன நினைப்பாளோ என்ற பயத்தில் முகம் வேர்த்து.

காயத்ரி: டாக்டரை பார்த்தியா? என்ன சொன்னார்?
ராஜ்: பார்க்க போனேன். ஆனா அவரையே நான்  கடிச்சு வச்சுட்டேன்.  லொள்! லொள்! வவ்! வவ்!
காயத்ரி: L

“என்னை விடுங்கடா” ராஜேந்திரனின் குரல் சத்தமாக ஒலிக்கத் தொடங்கியது.

“போதும் கார்த்தி! இனிமே அவ இவன் கூட சாட் செய்வான்னு நினைக்குற?”

அவன் கையை விட்டு விட்டான்.

“இன்னைக்கு நல்லா தூங்கலாம். வா லஞ்ச் போகலாம். அப்புறம்  சினிமா.”

நாங்கள் வெளியேறினோம்.

றுநாள் ராஜேந்திரன் மிக விரைவாக கல்லூரிக்கு  வந்து விட்டு இருந்தான்.

“என்னடா? இத்தனை சீக்கிரம்?”

“நேத்து காயத்ரி  எனக்கு போன் செஞ்சா.”

“எதுக்கு? கேவலமா சாட் பண்ணதுக்கு காய்ச்சி எடுக்கவா? ஹா ஹா”

“இல்லை. நேத்து என் கூட சாட் செஞ்ச பின்னாடி ரொம்ப சந்தோசமா சிரிச்சு கிட்டே இருந்தாளாம். எனக்கு நல்ல ஹுயூமர் சென்சுன்னு பாராட்டுனா. கை காயத்தை எப்பிடி இத்தனை ஸ்போர்டிவா எடுத்துகிட்டு காமெடி அடிக்கிறன்னு ஒரே பாராட்டு, எல்லாரும் சாட்ல வழிஞ்சப்போ நான் மட்டும்தான் இயல்பா பேசினேனாம்”

“லூசா அவ? அழகு இருந்தா அறிவு இருக்காதா என்ன?”

“கோவப்படாத. உனக்குத்தான் நான் தாங்க்ஸ் சொல்லணும்.”

“அப்போ வொர்க் அவுட் ஆயிடுச்சா?”

“ஆயிடும். இன்னைக்கு வெளியே வேற கூப்பிட்டு இருக்காளே.”

சொல்லிவிட்டு சிரித்துக் கொண்டான். இதுதான் பிள்ளையார் பிடிக்க போய் குரங்காக போவதா? நாம் என்ன அத்தனை பெரிய காமெடியா செய்து விட்டோம்? குழம்பிக் கொண்டேன், இருந்தாலும் கதையில் இன்னொரு ட்விஸ்ட் வந்து காயத்ரி  அவனை தனியாக அழைத்து போய் சாட்டில் கலாய்த்ததற்கு நான்கு சாத்து சாத்தி அனுப்பினாலும் அனுப்புவாள் என்று நினைத்து கொண்டு மறுநாளை எதிர்பார்த்து நம்பிக்கையுடன் காத்து இருக்க தொடங்கினேன். 

2 comments:

  1. வொர்க் அவுட் ஆக என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கு...! ம்...

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...