Friday, June 20, 2014

இந்தியர்களுக்கு ஏன் கால்பந்து மோகம் இல்லை?

லகம் முழுவதும் கால்பந்து ஜூரம் பிடித்து ஆட்டி கொண்டிருக்கும் இந்த வேளையில் இந்திய கால்பந்து அணி பெரிய அளவில் சோபிக்காமல் இருப்பதற்கும், இந்தியர்களுக்கு கால்பந்தின் மேல் மோகம் குறைவாக இருப்பதற்கும் காரணம் என்ன என்று சிந்திக்கிறேன். கிரிக்கெட் பார்க்கும்  அத்தனை பேருக்கும் கால்பந்து  பிடிக்க வேண்டாம். ஆனால் அதில் சரி பாதி பேர் பார்த்தாலும் கால்பந்து இந்தியாவில் எங்கேயோ சென்று இருக்குமே? அது ஏன் நடக்கவில்லை?

கால்பந்து முரட்டு ஆட்டம் என்பதால் நமக்கு ஒத்து வரவில்லை என்று சொல்லிவிட முடியாது. ரேசன் கடைகளிலும், முதல் நாள் டிக்கெட் எடுப்பதற்கும் எத்தனை கூட்டத்தையும் நெட்டி தள்ளி இலக்கை அடையும் நம்மால் ஏன் ஒரு பந்தை உதைத்து இலக்கை அடைய வைக்க முடியவில்லை? பிரேசிலின்  மைதானங்களில்  எத்தனை கவர்ச்சியான பெண்கள் அமர்ந்து இருந்தாலும் நம்மால் ஏன் கால்பந்து போட்டிகளை IPL போட்டிகள் போல ரசிக்க முடியவில்லை? 


இதை பற்றி ஆழமாக ஆராய்ந்து பார்க்கும்போது இதற்கு காரணம் நம் பண்பாடும், கலாச்சாரமும் என்றே தோன்றுகிறது. சற்றே சிந்தித்து பாருங்கள். நீங்கள் சிறு வயதில் எதேனும் பொருளை காலால் உதைத்து இருந்தால் ‘என்ன திமிரு பாரு! எல்லாத்தையும் உதைச்சுகிட்டே திரியுது’ என்று வசை பாடியிருப்பார்கள். இல்லாவிடில் ‘எதையும் காலால உதைக்க கூடாதுப்பா. நல்ல பழக்கம் இல்லை’ என்று அறிவுரை வழங்கியிருப்பார்கள். சில நேரங்களில் உதைத்த பொருளை தொட்டு வணங்க வேண்டிய நிலையும்  வந்து  இருக்கலாம்.

இப்படி சிறு வயதில் விதைக்கப்பட்ட இந்த கருத்து நம் மனதில் ஆழமாக பதிந்து நாம்  வளர்ந்து  கால்பந்தை  உதைக்கும்போது தடுக்கிறது. ஆழ்மனம் நமக்கே  தெரியாமல் உள்ளிருந்து கூக்குரல் கொடுத்து நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்று எச்சரிக்கிறது. பின்னே எங்கே இருந்து உடைத்து  விளையாடுவது? பந்தை எதிரணியினர் தட்டி செல்வதை வேடிக்கை பார்க்க வேண்டியதுதான். 

இந்த பதிவு முழுக்க முழுக்க பதிவரின் பொழுதுபோக்குக்காக எழுதப்பட்டது. கால்பந்து இந்தியாவில் பிரபலம் அடையாமல் இருப்பதற்கும் இந்த பதிவுக்கும் ஏதேனும் தொடர்பிருந்தால் அது தற்செயலானது.


5 comments:

  1. புட்பால் என்ற உண்மையான வலிமையான விளையாட்டை தவிர்க்கும் நம்முடைய சோம்பேறித்தனத்துக்கு இப்படி கூட ஒரு விளக்கம் இருக்கிறதா என்ன? வியந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா! இது விளையாட்டாக எழுதப்பட்டதே.

      Delete
  2. எந்த விச்யம் அதிகக் குழப்பத்தை உருவாக்குகிறதோ அதையே மக்கள், குறிப்பாகப் பெண்கள், விரும்பிப் பார்க்கிறார்கள். நண்பர்களிடையே, குடும்பத்தினரிடையே ஒது ஒரு விவாத மேடையாக உருவாகும். கிரிக்கெட்டில் உள்ளது போன்ற எவன் முதலில் பேட் செய்ய வருகிறான், எத்தனை ரன் தேவை, எவன் எத்தனை ரன் எடுக்கிறான், அடுத்து எவன் வருவான் என்ற குழப்பங்கள் கால்பந்து விளையாட்டில் இல்லாதது இரு காரணாமாக இருக்குமோ.

    கோபாலன்

    ReplyDelete
    Replies
    1. இதுவும் வித்தியாசமான எண்ணம்தான். இந்தியர்களுக்கு குழப்பினால்தான் பிடிக்குமோ?

      Delete
  3. பார்க்கவும்:
    http://dharumi.blogspot.in/2014/06/760.html?showComment=1403356408025#c766569282667937218

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...