கடவுள் எதற்கு தேவையோ இல்லையோ குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு
பதில் சொல்லவாவது அவர் கண்டிப்பாக தேவை. பின்னே உங்கள் குழந்தை “அரிசி எப்பிடி மண்ணுல
இருந்து எப்படி முளைக்குது” என்று கேட்டால் “சாமி முளைக்க வைப்பாருடா” என்ற பதிலை தவிர்த்து
வேறு எதை சொல்வது. அதே போன்ற ஒரு கேள்வியை நான் கேட்ட நேரத்தில்தான் கடவுள் எனக்கு
அறிமுகப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். எனவே கடவுள் எனக்கு அறிமுகமான காலத்தை நினைவு
தெரியாத காலம் என்று எடுத்து கொள்ளலாம். எல்லா இந்திய குழந்தைகளை போலவே தெய்வ நம்பிக்கை
மனதில் விதைக்கப்பட்டது. புரியாத விஷயங்களுக்கு எல்லாம் விடையாக கடவுள் கிடைத்தார்.
அவர் எங்கே இருக்கிறார் என்று கேட்ட போதெல்லாம் அவர் வானத்தில் இருக்கிறார் என்று
பதில் கூறிவிடுவார்கள். பெரியவர்கள் சொல்வது போல அவர் வானத்தில் இருக்கிறார் என்று
நம்பி விட்டேன்.
அதிக ஆசைகள் இல்லாத பால பருவத்தை தாண்டி, ஆரம்ப பள்ளி காலத்தில்
கடவுள் நமக்கு கேட்டதெல்லாம் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் அவரிடம் நிறைய
கோரிக்கைகளை வைக்க ஆரம்பித்து விட்டேன். கோரிக்கைகள் என்றால் பெரிய கோரிக்கைகள்
எல்லாம் கிடையாது. நானும் ராம.நாராயணன் படத்தில்
வரும் குழந்தைகள் போல தெய்வ சக்தியுடன் அற்புதங்களை புரிய வேண்டும் போன்ற எளிய கோரிக்கைகள்
மட்டுமே. ஆனால் என்னதான் கடவுளை வேண்டினாலும் அவர் எனக்கு தரிசனம் தரவில்லை.
அற்புத சக்திகளையும் தரவில்லை. என்னுடைய பக்தியில் ஏதோ குறை இருக்கிறது போலும் என்று
சந்தேகம் கொள்ள தொடங்கினேன். வகுப்பறையில் பாடம் நடத்தி கொண்டிருக்கும்போது நான் கடவுளை
சிந்தித்து கொண்டிருப்பேன். ஒரு நாள் பாட புத்தகத்தில் சூரிய குடும்பத்தை படமாக பார்த்தபோது கடவுள் இருக்கிற
இடத்தை இதில் குறிக்காமல் விட்டு விட்டார்களே என்று கோபம் வந்து அதன் பின் படிப்பிலேயே
ஆர்வம் குறைந்து விட்டது.
இப்படி பக்தி மார்க்கத்தில் தீவிரமாக இருந்த காலத்தில்தான் அந்த
வாசகங்கள் முதல்முறையாக என்னுடைய கண்ணில்
பட்டன. ‘கடவுளை நம்பியவன் காட்டுமிராண்டி; கடவுளை பரப்பியவன் ஏமாற்றுக்காரன்’ என்ற
ரீதியில் இருக்கும் அந்த வாசகங்கள். வாசகங்களுக்கு கீழே பெரியார் என்று எழுதியிருந்தது.
கடவுளை கூட திட்டலாமா என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இதை பற்றி பெரியவர்களிடம்
கேட்க முடியாது. கூட படித்த நண்பனிடம் ‘கடவுளை கும்பிடாம இருக்காங்களே? கடவுள்
அவங்களை சந்தோசமா வச்சிருக்க மாட்டார்தானே?” என்று கேட்டேன். அவனோ ‘கமலஹாசன் கூட
கடவுளை கும்பிட மாட்டாராம். அவர் கிட்ட பணம் இல்லையா என்ன? எல்லா நடிகைகளுக்கும்
அவரைத்தான் பிடிக்கும் தெரியுமா?” என்றான். ‘அதுதான் அவர் படம் எல்லாம் ஓடாம
போகுதா? ரஜினி மாதிரி சாமி கும்பிட்டால்ல படம் நல்லா ஓடும்” என்றேன். கடவுளை
விட்டு கொடுக்காமல்.
இப்படி கடவுள் மேல் மிகுந்த பயபக்தியுடன் மேல்நிலை பள்ளியில் அடி
எடுத்து வைத்தேன். வழக்கப்படி கடவுளிடம் வைத்த கோரிக்கைகளுக்கும் அளவில்லை. ஆனால் காமிக்ஸ்
புத்தகம் வேண்டும், நிறைய மார்க் எடுக்க வேண்டும் என்று இப்போது கோரிக்கைகள்
சிறிது பகுத்தறிவுடன் மாறி விட்டிருந்தன. சில நேரங்களில் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டும் விட்டன. ‘கடவுள் இருக்காரு
குமாரு’ என்று அப்போதெல்லாம் கடவுளுக்கு நன்றி செலுத்துவேன். சில நேரங்களில்
கோரிக்கைகள் தோல்வி அடையும்போது கடவுள் மேல் லேசாக சந்தேகம் எழும். இப்படியெல்லாம்
யோசிக்க கூடாது. அதெல்லாம் தப்பு என்று அந்த எண்ணங்களை வளர விடாமல் பார்த்து
கொள்வேன்.
கடவுளும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்த நேரத்தில்தான் பத்தாம் வகுப்பு
பொது தேர்வுகள் வந்தது. சில மாதங்களுக்கு பின் தேர்வு முடிவுகளும் வந்தது.
மதிப்பெண்களை பார்த்ததும் எனக்கு பேரதிர்ச்சி. வழக்கமாக பள்ளி தேர்வுகளில் பெரும்
மதிப்பெண்களை கூட பொது தேர்வில் எடுக்கவில்லை. ‘கடவுள் நமக்கு இப்படி செஞ்சுட்டாரே.
இனிமே அவர் கூட பேச்சு வார்த்தை வச்சுக்க கூடாது’ என்று முடிவு செய்தேன்.
கவனியுங்கள். இப்போதும் அவர் மேல் முழுவதுமாக நம்பிக்கை இழக்கவில்லை. என்னுடைய நோக்கம் கடவுளை
குற்ற உணர்ச்சியில் தள்ளி அதன் மூலம் பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்களை
பெறுவது.
அவ்வப்போது கடவுளை வணங்குவது என்ற ரீதியில் அடுத்து வந்த நாட்கள் ஓடின. பனிரெண்டாம்
வகுப்பில் வாய்த்த ஆங்கில ஆசிரியர் ஒரு ஆன்மீகவாதி. ‘பாபா’ படம் ஓடிய தியேட்டரில் அவரை
பார்த்ததை சொன்னதும் படத்தில் ஆன்மீகம்
இருக்கிறது என்று சொன்னதாலேயே சென்றேன் என்றார். ஆனால் ஆன்மீகத்தை பற்றி படத்தில்
சரியாக எதுவுமே சொல்லவில்லை என்றார். ‘எல்லாம் கடவுள்தான் என்று சொன்னவர்கள் அதை
சரியாக விளக்கவில்லை’ என்றவர் பின்னர் ஒரு
பென்சிலை கையில் எடுத்து கொண்டு ‘இந்த பென்சில் இங்க இருக்குதுன்னா அதுக்கு இடம் கொடுக்கிறது
ஸ்பேஸ் அதாவது வெற்றிடம். எல்லா இடத்திலும் இருக்கிற வெற்றிடம்தான் கடவுள்’
என்றார். அவர் சொன்ன கருத்தை விட அவர் இந்து பெயரில் வாழும் முஸ்லீமோ என்றுதான்
சிந்தித்தேன். இருந்தாலும் அவர் கருத்து மனதில் ஒரு சிறிய தூண்டுதலை ஏற்படுத்தியது.
இடைக்காலத்தில் பெற்ற அறிவியல் அறிவு கடவுள் வானத்தில் இல்லை என்றால் வேறு எங்கே
இருக்கிறார் என்று கேள்வி கேட்க தொடங்கியிருந்தது.
பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மிகப் பெரிய சந்தோசம் தரவில்லை என்றாலும் அதிக அதிர்ச்சியும்
தரவில்லை. ஒரு வேளை நாம் படித்ததால்தான் மதிப்பெண் பெற்றோமா? இல்லை கடவுள்தான் மதிப்பெண்
பெற வைத்தாரா என்ற சந்தேகம் மீண்டும் தலை தூக்கியது.
பின்னர் தமிழனில் தலை எழுத்துக்கு விதிவிலக்காக மாறாமல் பொறியியல்
கல்லூரியில் அடி எடுத்து வைத்தேன். கடவுள் பற்றி முன்பிருந்த எண்ணங்கள் மெதுவாக உடைய ஆரம்பித்த தருணம். அந்த
நேரத்தில்தான் கடவுளை பற்றி முற்றிலும் சந்தேகம் கொள்ள வைக்கும் ஒரு சம்பவம்
நடந்தது. எனக்கு அந்த சம்பவத்தில் நேரடி தொடர்பு இல்லையென்றாலும் கடவுளை பற்றி நிறைய
யோசிக்க வைத்தது அந்த சம்பவம். அது கும்பகோணம் தீ விபத்து.
சிந்தனை ஆரம்பித்து விட்டதல்லவா... அது தான்...
ReplyDeleteதொடர்கிறேன்...
எனக்கு ரொம்ப பிடித்த எழுத்தாளர் ராஜேஷ்குமார் கடவுளைப் பற்றி சொன்னது,
ReplyDelete"அவ்வளவு பெரிய ஆலமரம் தோன்றுவதற்கான ஃபார்முலாவை ஒரு சின்ன விதைக்குள்ளே புகுத்தியவர்"