Tuesday, October 6, 2015

தமிழ் ஃபேண்டசி சினிமா

ஃபேண்டசி என்ற வார்த்தை சில நாட்களாக அடிக்கடி கண்ணில்படுகிறது. ஃபேண்டசி என்றால்  நடக்க முடியாத, நடக்கவே வாய்ப்பில்லாத  கற்பனை என்று ஆராய்ந்து அறிந்து கொண்டேன்.  அந்த வகையில் ஊழல்  இல்லாத அரசியல் என்பது ஃபேண்டசிக்கு ஒரு சிறந்த  உதாரணம்.

‘புலி’ படம் தமிழில் அபூர்வமாக  வந்திருக்கும் ஃபேண்டசி படம் என்று கூறுகிறார்கள். எனக்கு என்னவோ தமிழில் ஃபேண்டசி படங்களுக்கு பஞ்சமே இல்லை என்றே தோன்றுகிறது. உதாரணத்துக்கு ‘சுள்ளான்’ படத்தை எடுத்துக் கொள்வோம். தனுஷ் படம் முழுக்க புவி  ஈர்ப்பு விசைக்கு சவால் விட்டு படம் முழுக்க பறந்து பறந்து வில்லனின் ஆட்களை தாக்குவார். ‘குருவி’ விஜயோ நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதலில் கற்பனைக்கும் எட்டாத பல சாதனைகளை புரிந்து இருப்பார். இப்படி நிஜ வாழ்வில்  நடக்க வாய்ப்பே இல்லாத  காட்சிகள் பல நிரம்பிய குருவியும், சுள்ளானும் ஏன் ஃபேண்டசிக்குள் வராது என்று நான் கேட்கிறேன். கேப்டனின் ‘நரசிம்மா’வையும் மறந்து விடக் கூடாது. இதே போல சூப்பர் ஸ்டாரில் தொடங்கி சுப்ரீம் ஸ்டார், அல்டிமேட் ஸ்டார்   எல்லா மாஸ் ஹீரோக்களும் பல ஃபேண்டசி படங்களில் நடித்தவர்களே.

தமிழில் ‘எந்திரன்’ வந்ததே. அது முழுக்க அறிவியல் புனைவு படம்தானே என்று நினைத்து  imdb வலைத்தளத்தை ஆராய்ந்து கொண்டிருந்தேன். இந்தியர் அல்லாத வெளிநாட்டவர் பலரும் படம் பற்றிய தங்கள் கருத்துகளை பதிவு செய்திருந்தனர். அதில் பெரும்பான்மையோருக்கு எழுதி இருந்த சந்தேகம் “அது எப்படி இந்தியாவில் பேசிக் கொண்டிருந்த  வசீகரனும் சனாவும் திடீரென  மச்சுபிச்சுக்கு சென்று பாடி ஆடிவிட்டு வருகிறார்கள்?” என்பது . அவர்களை பொறுத்தவரையில் நமது  டூயட் பாடல்கள் அனைத்தும் அவர்களால் ஏற்று கொள்ள முடியாத, நடக்க துளியும்  வாய்ப்பே இல்லாத கற்பனை. ஆக அவர்களை பொறுத்தவரையில்  டூயட் காட்சிகள் அனைத்தும் ஃபேண்டசி காட்சிகள்தான்.

இப்படி தமிழ் சினிமாவில்  ஃபேண்டசி கொட்டி கிடக்க ‘புலி’ படத்தை மட்டும் ஃபேண்டசி என்று சொல்வது தமிழ் திரையுலகத்துக்கு நாம் இழைக்கும் அநீதியாகவேபடுகிறது.

குறிப்பு: ஒரு வேளை தமிழ் ஃபேண்டசி படங்கள் பார்த்து உங்களுக்கு சலித்து போய் இருந்தால் Pan’s Labyrinth என்கிற ஸ்பானிஷ்  படத்தை பாருங்கள்.


1 comment:

  1. அருமையான தேடல்...கொஞ்சம் சமூகம் பக்கம் வாங்களேன்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...