Thursday, December 31, 2015

அவனா? ஆவியா?

ந்த பேருந்துகாரன் நடுராத்திரி இரண்டு மணிக்கு கொண்டு  வந்து இறக்கி விடுவான் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. எனது  கிராமத்துக்கு செல்ல மணல் சாலையில் இரண்டு மைல் நடக்க வேண்டும். இறக்கிவிட்ட கண்டக்டர் பேசாமலாவது சென்று இருக்கலாம். “பேய் நடமாட்டம் இருக்குற ரோடு சார். பத்திரம்” என்று பயமுறுத்தி விட்டான்.

நிலா வெளிச்சத்தில் பாதை தெளிவாக தெரிந்தது. இருந்தபோதும் பயம். சின்ன வயதில் இருந்து எத்தனை கதைகள் இந்த பாதையைப் பற்றி. பேய் அடித்தது எனவும், துரத்தியது எனவும். வேகமாக நடக்கத் தொடங்கினேன். திடீரென பின்னால் வந்த குரல் கேட்டு திரும்பினேன்.

“தம்பி எங்க போறீங்க?” என்றவாறே முண்டாசு கட்டிய முதியவர் ஒருவர் பின்னால் நடந்து வந்து கொண்டிருந்தார். நடையில் வயதுக்கு மீறிய வேகம். எங்கிருந்து முளைத்தார் அவர்?

“சனலூருக்கு” என்றேன்.

“உங்கள ஊருல பார்த்தது இல்லையே ஊருல. யாரு மகன் நீங்க?”

“அருணாசலம் பையன். சின்ன வயசுல இருந்தே வெளியூர்ல படிச்சவன். நீங்களும் சனலூருக்குதான் போறீங்களா?”

“ஆமாம். டவுன்ல வாத்தியார் படம் படம் பாத்துட்டு வந்துட்டு இருந்தேன். நல்ல வேள. ஊரு வரைக்கும் துணை  நீங்க கிடைச்சுடுச்சு” என்று சொல்லிக்கொண்டே என்னோடு நடக்கத் தொடங்கினார். அவர் மேல் இருந்து வர்ணிக்க முடியாத ஒரு விதமான நெடி அடித்தது. இவரை நம்பலாமா என்ற சந்தேகம் மனதில் பரவியது.

“இந்த வழியா பேய் நடமாட்டம் இருக்குதாமே. நீங்க எப்பிடி படத்துக்கு போயிட்டு வறீங்க”

“அதெல்லாம் சும்மா தம்பி. போன வருஷம் எவனோ ஒருத்தன் இங்க நெஞ்சு வலி வந்து செத்து போய்ட்டான். நம்ம ஆளுங்க உடனே அவனை பேய் அடிச்சதுன்னு சொல்லிட்டாங்க”

“இங்க அப்போ பேய் இல்லையா?”

“பேய் இல்லன்னு நான் எங்க சொன்னேன். பேய் அந்த ஆளை அடிக்கலைன்னுதான் சொன்னேன்”

அவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்து கொள்வது எனக்கு சற்று சிரமமாக இருந்தது. கேள்வியை சற்று மாற்றி கேட்கலாம் என்று முடிவு  செய்தேன்

“அப்போ உங்களுக்கு பேய் மேல பயம் இல்லையா?”

“எதுக்குங்க பயப்படணும். நமக்கு பேய பார்த்தா பயம். பேய்க்கு நம்மள பார்த்தா பயம். ”

எனக்கு ஏதோ உறுத்தியது. இவரின் கால்களை அவருக்கு தெரியாமல் பார்த்து விட வேண்டும்.

“என்ன தம்பி யோசிக்கிறீங்க” என்று சொல்லி எனது சிந்தனையை கலைத்தார்.

“ஒன்னும் இல்லங்க”

“நான் சொல்லட்டா”

“சொல்லுங்க”

“இப்போ பேய் வந்தா உங்களை என்ன செய்யும்னு யோசிக்கிறீங்க. சரியா? இதுல என்ன யோசனை. பேய் வந்து மூஞ்சிய காமிச்சாலே பயத்துல இரத்தக் குழாய் எல்லாம் வெடிச்சுடும். அவ்ளோதான்” என்று சொல்லி சிரித்தார். எங்கிருந்தோ ஒரு நாய் வேறு அசர்ந்தப்பமாக ஊளையிட்டு தொலைத்தது.

எனக்கு திடுக் என்றது. இப்போது தனது டிராகுலா பல்லைக் காட்டி சிரிப்பாரோ.

“வேண்டாங்க வேண்டாம்” என்றேன்

“என்னாச்சு தம்பி? என்ன வேண்டாம்?”

“காளியாத்தா, மாரியாத்தா, காளியாத்தா, மாரியாத்தா” என்று ஜெபிக்கத் தொடங்கினேன். என்னை அறியாமல்.

“என்ன ஆச்சு தம்பி. துணைக்கு ஆள்  இருக்கும்போதே எதுக்கு இத்தனை பயப்படுறீங்க?”

“ஒன்னும் இல்லைங்க. கொஞ்சம் தண்ணி குடிச்சுக்கவா” என்றேன்.

“குடிங்க”

தண்ணீர் எடுக்க முயல்வது போல வேண்டுமென்றே கைப்பையை கீழே போட்டேன்.

“தவறிடிச்சு சார்” சொல்லிக் கொண்டே குனிந்து அவரின் கால்களை தேடினேன். சரியாக இருந்தது.

“தம்பிக்கு நடக்க முடியாட்டி நான் தூக்கி தோள்ல வச்சுக்குறேன். 

ஹாஹா”

இவர் நிச்சயம் மனிதன் இல்லை. ஏதோ தவறாகத் தெரிகிறது. செருப்பை எடுத்து கைகளில் பிடித்துக் கொண்டேன்.

“என்கிட்ட வராத” அவரை விட்டு விலகி வேகமாக ஓடத் தொடங்கினேன்.

பொழுது விடிந்தது. சிரமத்துடன் கண்களை திறந்தேன். அந்த முதியவர் என் கட்டிலின் அருகில் நின்று கொண்டிருந்தார். பார்க்க மருத்துவர் போல இருந்தார். அவரின் பக்கத்தில் ஒரு பெண். அவள் பார்க்க நர்ஸ் போல இருந்தாள்.

“இவரை பத்திரமா பார்த்துக்கோமா”

“சின்ன வயசுல இருந்து பேய் கதையா கேட்டு கேட்டு பேயை பத்தியே நினைச்சு பயந்து பயந்து இப்போ இவரே பேயை பத்தி நெறையா கற்பனை பண்ணிக்கிறார். இவருக்கு பேய் மேலேயே ஒரு obsession, hallucination .. நேத்து ராத்திரி என் கிட்டயே என்னென்னமோ பேசி இவரை சமாளிக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடிச்சு”

அந்த பெண் என்னை பார்த்து  சிநேகமாக சிரித்தாள். “நான்  பார்த்துக்குறேன் டாக்டர்” என்றார். 

அந்த டாக்டர் என்னை பார்த்து “டேக் கேர்” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார். நான் நர்சை பார்த்தேன். கொஞ்சம் கிட்ட வாங்க என்றேன்.

“என்னங்க”

“நேத்து ராத்திரி ஏதோ ஒரு சின்ன குழப்பம். மத்தபடி எனக்கு சரி ஆயிடிச்சு. அந்த டாக்டர் கிட்ட சொல்லுங்க ப்ளீஸ். நான் வீட்டுக்கு போகணும்.”

“சரிங்க நான் சொல்றேன்”

“தேங்க்ஸ். எனக்கு பிரச்சினை ஏதும் இல்லைன்னு உங்களுக்கு புரியுதுல” என்றேன்

நர்ஸ் தனது சிவந்த நாக்கை வயிறு வரை நீட்டி “நல்லா புரியுது” என்றாள்.


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...