Friday, January 1, 2016

இட்லி, தோசை, சட்னி - மறைக்கப்பட்ட வரலாறு

ட்லி, தோசை, சட்னி. நம் வாழ்வில் தவிர்க்க முடியாத உணவுப்பொருட்கள். தினம் தினம் இவற்றை உண்டு பசியாறும் நாம் என்றாவது ஒரு நாள் இவற்றின் வரலாறை பற்றி சிந்தித்திருப்போமா? இந்த உணவுப்பொருட்களின் உருவாக்கமும் ஒட்டு மொத்த பாரத ஒற்றுமையும் பின்னிப் பிணைந்து இருப்பதை   நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். இந்த உணவுப் பொருட்களை கண்டறிந்த அந்த மாமன்னரின் புதைந்து  போன சரித்திரத்தை  தோண்டி எடுத்து உங்களின் பார்வைக்கு அளிப்பதில் பெருமை கொள்கிறேன்.

முன்னொரு காலத்திலே தமிழ்நாட்டில் பெயர் தெரியாத மன்னர் ஒருவர் வாழ்ந்து வந்தார். தினமும் தானியங்களை வேக வைத்து சாப்பிடுவது அவருக்கு சலிப்புத் தட்டியது. எனவே பண்டைய பாரத தேசத்தின் சிறந்த அறிவியல் அறிஞர்கள் அனைவரையும் தனது நாட்டிற்கு வரவழைத்து “அறிஞர்களே! ஒரே மாதிரியான சாப்பாட்டை சாப்பிட்டு எனக்கு அலுத்து விட்டது. நீங்கள் ஒரு மாதம் நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். தேவையான  ஆராய்ச்சி செய்து  புதுமையான உணவுப்பொருட்களை உருவாக்குங்கள்” என்றார். மன்னர் சொல்லிவிட்டாரே என்று வேறு வழி இல்லாமல் அறிவியல் அறிஞர்களும் சம்மதித்தனர்.

நாட்கள் கடந்தது. கன்னட தேசத்தில் இருந்து வந்த அறிஞர் அரிசியை மாவாக ஆட்டி வைத்து விட்டு பின்னர் அதை என்ன செய்வது என்று செய்வது என்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தார். ஒரு நாள் குளிக்க வெந்நீர் தயார் செய்யும்போது அவரின் மூலையில் ஒரு மின்னல் வெட்டி மாவை நீராவியில் வேக வைத்து மன்னனுக்கு அளித்தார். அதை உண்ட மன்னனும் திருப்தி அடைந்து இந்த உணவை எதில் செய்தார் எனக் கேட்டார். கன்னடத்துக்காரர் தனது மொழியில் “ஹிட்டுலி” (மாவில்) என்றார். அதை சரியாக கேட்காத  மன்னர், “இட்டிலி! இட்டிலி! அருமை அறிஞரே” என்று அவரை பாராட்டி உலகின் முதல் இட்டிலியை தாம் சாப்பிட்டதாக  தனது  குடிமக்களுக்கு அறிவிக்க உத்தரவிட்டார்.

வெறும் இட்டிலியை சாப்பிட்டுக் கொண்டிருந்த  மன்னருக்கு ஏதோ ஒன்று குறைவதாக தோன்றியது. தேங்காயை அரைத்து வைத்து தொட்டுக் கொண்டால் சுவையாக இருக்கும் என எண்ணினார். தனது பணியாளை அழைத்து தேங்காயை உடனே அரைத்து கொண்டு வர  ஆணையிட்டார். ஆனால் பணியால் மரத்தின் மேல் ஏறி தேங்காயை பறித்து அரைத்து கொண்டு வர நேரம் ஆகிவிட்டது. கோவம் அடைந்த மன்னர் பணியாளிடம்,”சட்டுன்னு அரைக்க மாட்டாயா?” என்று கோபத்துடன் கேட்டார். பயத்தில் பணியாள் வாய் குளறி “சட்டினி தான் மன்னா” என்றான். “குடு அந்த சட்டினியை” என்று மன்னர் அதை வாங்கி உண்டு அந்த சுவையில் மயங்கினார்.

இட்லி, சட்டினியை மட்டும் நான்கு  நாட்கள் சாப்பிட்ட மன்னருக்கு அப்போதுதான் வரவழைத்து இருந்த வட இந்திய அறிஞர்  நினைவுக்கு வந்தார். இத்தனை நாட்கள் ஆகியும் அவர் எதுவும் கண்டு பிடிக்காமல் போனதால் ஆத்திரம் அடைந்த அவர் வேகமாக அந்த வட இந்திய சமையல்காரரை வரவழைத்து அன்றைய  இரவுக்குள்  புதிய உணவு வரவில்லை என்றால் தலை துண்டாகி விடும் என்று எச்சரித்தார். பயந்தபோன  வட இந்திய அறிஞர் வேகமாக தனது ஆராய்ச்சி நிலையம் வந்தார். அங்கே கன்னடக்காரர் இட்லிக்கு அரைத்து வைத்து இருந்த மாவு   புளித்துப் போய் இருந்தது. ஆத்திரத்தில் அந்த மாவைத் தூக்கி வெளியே கொட்டி விட்டு அமர்ந்து அழத் தொடங்கினார். இறுதியில் மன்னரிடம் மன்னிப்பு கேட்டு அழலாம் என்று வெளியே வந்தபோது தான் வெளியே கொட்டிய மாவு வெயிலில் காய்ந்த கருங்கல்லில் விழுந்து வடிவம் மாறியிருப்பதை கவனித்தார். அதை சுவைத்து பார்த்தவர் அதே போல் நிறைய செய்து மன்னரை காண சென்றார்.அந்த பண்டத்தை எடுத்து சுவைத்த மன்னர் உற்சாகம் அடைந்து அந்த பண்டத்தை மன்னருக்கு சென்று தந்தார். அதன் சுவையில் மெய் மறந்த மன்னர் இன்னும் சாப்பிட நினைத்து  “ரெண்டு வேண்டும்” என்றார். வட இந்தியருக்கு அவர் சொல்வது புரியாமல் “ரெண்டு? கியா ரெண்டு” என்றார். எரிச்சல் அடைந்த மன்னர் தனக்கு தெரிந்த ஹிந்தியில் “அதாண்டா தோ. சை இவனை வச்சுகிட்டு” என்றார். அதை “தோசை”  என்று புரிந்து கொண்ட ஹிந்திகாரர் உணர்ச்சிப்பெருக்கில் “தோசை! தோசை!” என்று வாய்விட்டு கத்தினார். மன்னரும் மகிழ்ச்சி அடைந்து வட இந்தியருக்கு மூடை மூடையாக  தங்க காசுகள் வழங்கினார்.

அதற்கு மறுநாள்  அந்த நாட்டின் குடிமகன் ஒருவர் மன்னரை சந்தித்து விழுந்து வணங்கி தான் கையில் வைத்து இருந்த பொருளை சாப்பிட குடுத்தார்.  அரசர் அதை தனது  அரசவைக்கு வந்து இருந்த வெளிநாட்டு பயணி ஒருவருக்கு குடுக்க அதை உண்ட வெளிநாட்டுக்காரர்  “it is stinking” என்றார். அதிர்ச்சியடைந்த மன்னர் “என்னய்யா இது மோசமான வாடை?” என்று குடிமகனிடம் வினவினார். “மன்னா! அது கேட்டு போச்சு. அவரை இதை சாப்பிட சொல்லுங்க” என்று வேறு ஒன்றை எடுத்துக் கொடுத்தார். அதன் சாப்பிட்ட வெளிநாட்டுக்காரர் “வாடை is awsome” என்று சொல்ல வடை அவதாரம் எடுத்தது.

அதன் பின் அந்த மன்னர் அரசாட்சியை துறந்து தான்  கண்டறிந்த உணவுப் பொருட்களை தமிழகம் முழுவதும் பரப்பினார். இவ்வாறாக இன்று நாம் சாப்பிடும்  இட்லி,சட்னி,தோசை,வடை வேறு வேறு மொழிகள் மூலம் பெயர் பெற்றது. இப்படி அந்த அந்த உணவுப்பொருட்களை பரப்பிய மன்னரின் நினைவு நாள் இன்று. இன்றைய தேதியில் மட்டும் அல்ல. இட்லி, வடை, தோசை உண்ணும்போதெல்லாம்  அந்த மன்னரை   நினைவு கொள்ள வேண்டியது நம் கடமை.

முழுக்க முழுக்க பொழுதுபோக்குக்காக எழுதப்பட்டது. படிப்பவர்கள்  யாரேனும்   இதை நம்பித் தொலைத்தால் வத்திகுச்சி வலைப்பூ பொறுப்பேற்காது

1 comment:

  1. இதே போன்று பொங்கல் உப்புமா இவற்றின் சரித்திரத்தையும் எடுத்து எழுதுங்கள்.

    --
    Jayakumar

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...