அந்த காலைப் பொழுதில் மதுரை டிவிஎஸ் நகர் பரபரப்பாக
இயங்கிக் கொண்டிருந்தது. அந்த டிவிஎஸ் நகரின் முதல் தெருவில் ஆறாவது வீட்டில் கதை ஆரம்பிக்கிறது.
“என்னமா
தலை வாருற. நான் இன்னும் சின்னப் பொண்ணு இல்ல. இன்னைக்கு ப்ளஸ் ஒன் ஜாயின் பண்ணப்
போறேன். நீ இப்பிடி ரெட்டை ஜடை போட்டா எல்லா பசங்களும் கிண்டல் பண்ணுவாங்க” என்றாள் கீர்த்தனா.
“இந்த வயசுல ரெட்டை சடை போடாம எப்படி போடுவ. எவனாச்சும்
கிண்டல் பண்றான்னா எனக்கு போன் பண்ணு.
வந்து உண்டு இல்லன்னு ஆக்கி விட்டுடுறேன் ” என்றாள் அவளின் அம்மா
“முதல் நாளே ஸ்கூலுக்கு லேட் ஆக்கிடுவ போலயே.
சீக்கிரம் கிளம்புமா” என்று அவளின் அப்பா குரல் குடுத்தார்.
“இதோ கிளம்பிட்டேன் பா. ஜஸ்ட் பைவ் மினிட்ஸ்.
லேசா பவுடர் அடிச்சிட்டு கிளம்ப வேண்டியதுதான்”
“சரி. ஸ்கூல்ல யாரும் எப்போ யூனிபார்ம் வரும்னு
கேட்டா அடுத்த வாரம்னு சொல்லு"
முப்பது நிமிடங்கள் கழிந்த பின் அவள் தனது சைக்கிளில்
பள்ளிக்கு கிளம்பினாள். ஏற்கனவே பத்து
நிமிடங்கள் தாமதம் ஆகிவிட்ட பரபரப்பில் வேகவேகமாக சைக்கிளை மிதிக்கத் தொடங்கினாள்.
முதல் நாள் தாமதத்தை மன்னித்து
விடுவார்கள் என்ற தைரியம் அவளுக்கு. பத்து வருடங்கள் படித்த பள்ளியை விட்டுகிட்டு
புது பள்ளி. புது நண்பர்கள். பயமும் மகிழ்ச்சியும் கலந்த ஒரு உணர்வு அவளுக்கு.
அந்த பள்ளி கட்டிடம் பிரம்மாண்டமாக
நின்றிருந்தது. இதுவரை படித்த பள்ளியை விட இது மிகப் பெரிய பள்ளி. எந்த பக்கம்
செல்வது என்று தெரியவில்லை. பதினோராம் வகுப்பு முதல் மாடியில் என்று அவளின் தந்தை
கூறியது நினைவுக்கு வந்தது. மாடிப் படிகளில் ஏறி வேகமாக ஓடத் தொடங்கினாள்.
X A
X B
X C
XI A
XI B
அப்பாடா. கண்டுபிடித்துவிட்டாள். தயக்கத்துடன் வகுப்பில்
நுழைய முயலும்போது அந்த குரல் தடுத்தது.
“ஹலோ மேடம். எங்க போறீங்க?”
குரல் வந்த திசையில் திரும்பினாள். ஒல்லியாக ஒரு
உருவம் கண்ணாடி அணிந்து நின்று கொண்டிருந்தது.
“யாரு நீ?”
“மை நேம் இஸ் காந்தி”
“உன் பேரை கேட்கல. எதுக்கு என்னை உள்ள விட மாட்டேங்குற.?”
“உனக்கு அஞ்சு நிமிஷம் முன்னாடி வந்த என்னையே
உள்ள விடல. இப்போ வந்த உன்னை உள்ள விட்டுடுவாங்களா?”
“நீ எதுக்கு லேட்டா வந்த?”
“இப்போதான லீவ் முடிஞ்சுது. அதனால காலைல எந்திரிக்க கஷ்டமா இருந்தது”
“மிஸ் காரணம் கேட்டதுக்கு இப்படித்தான் பதில்
சொன்னயா?”
“இல்ல. சிம்பிளா தூங்கிட்டேன்னு சொன்னேன்”
“உன்னை வெளிய நிறுத்துனதுல தப்பே இல்ல.
காந்தின்னு பேர் வச்சதால உண்மைய
மட்டும்தான் பேசுவியா? ” சொல்லிக் கொண்டே வகுப்பினுள் நுழைந்தாள். வகுப்பரையில் ஒரு இளம்பெண் பாடம் எடுத்துக் கொண்டிருந்தாள்.
“எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்”
“யாரு நீ?”
“மை நேம் இஸ் கீர்த்தி. இந்த கிளாஸ்தான் மிஸ்”
“நீங்க எதுக்கு மேடம் லேட்?”
“நான் ஸ்கூலுக்கு சீக்கிரமே வந்துட்டேன் மேடம். கரஸ்பாண்டன்ட்
அங்கிளை மீட் செஞ்சுட்டு வர டைம் ஆகிடுச்சு”
“கரஸ்பாண்டன்ட் உனக்கு அங்கிளா?”
“ஆமா மிஸ். அவரை எப்பவும் அப்படிதான்
கூப்பிடுவேன்”
“சரி நீ உள்ள வந்து உக்காரும்மா.”
அவள் வகுப்புக்குள் நுழைந்தாள்.
“எந்த டெஸ்க்ல மிஸ்”
“பர்ஸ்ட் டெஸ்க்ல”
முதல் பாட வேளை முடிந்தது. வெளியில் நின்றிருந்த
மாணவன் வகுப்புக்குள் நுழைந்தான். ஆசிரியர்களுடன் அறிமுகப்படுத்தி கொள்வதில்
அன்றைய பொழுது முடிந்தது. கீர்த்தனா வீட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள்.
“கீர்த்தனா. ஒரு நிமிசம் நில்லு”
“சொல்லுங்க காந்தி”
“நெஜமாவே கரஸ்பாண்டன்ட் உனக்கு தெரிஞ்சவரா?”
“ஆமா. எனக்கு தெரிஞ்சவர்தான். அட்மிசன் அப்போ பார்த்தேன்.”
“என்னது? எந்த தைரியத்துல பொய் சொன்ன?”
“கரஸ்பாண்டன்ட் கிட்ட அவங்க பொய் இதெல்லாம் கேட்க
மாட்டாங்கங்குற தைரியத்துலதான். இனிமே பாரு அந்த மிஸ் எனக்கு என்ன மரியாதை
தராங்கன்னு”
“ரெட்டை ஜடை போட்டு பாப்பா மாதிரி இருந்துட்டு
என்ன தெளிவா இருக்க?”
“நான் மட்டும் இல்ல. இங்க எல்லா பொண்ணுங்களும்
தெளிவுதான். நீ மொட்டை போடாத காந்தி மாதிரி பேசுறதை நிறுத்திட்டு பொய் சொல்ல
கத்துக்கோ.
அவள் சைக்கிளை மிதிக்கத் தொடங்கினாள். அவன்
பார்த்துக் கொண்டே நின்றான்.
'பொய்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின்'என்கிற குறள்நெறியை கடைப்பிடிப்பவரா , கீர்த்தி :)
ReplyDeleteWaiting!!! Good!!!
ReplyDelete