பான்பாக் என்ற ஜென் துறவி மக்களுக்கு போதனை
செய்து கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்து கிஷிடோமோ என்ற ஒருவர் எழுந்து “குருவே! உங்களை விட முற்றிய
ஜென் நிலையை அடைந்த மக்கள் யாரேனும் இருக்கிறார்களா? அப்படி யாரேனும் இருந்தால்
அவர்களை நான் பார்க்க முடியுமா” என்றார்.
அவரை பார்த்து புன்னகை செய்த ஜென் குரு “என்னை
விட முற்றிய ஜென் துறவிகள் ஏழு கோடி பேர் இருக்கிறார்கள். அவர்களை பார்க்க வேண்டுமென்றால் நீ தமிழ்நாடு
என்ற பகுதிக்கு செல்ல வேண்டும்” என்றார்
கிஷிடோமோ ஆச்சரியமடைந்தார். “அத்தனை கோடி ஜென்
துறவிகள் ஒரே இடத்திலா? அவர்கள் எனக்கு போதனை அளிப்பார்களா?”
”அவர்கள் போதனை அளிக்க மாட்டார்கள். நீ
அவர்களுடன் இணைந்து இருபத்தி ஐந்து ஆண்டுகள் வாழ்ந்தால் நீ அவர்களை உணர்ந்து
கொள்ளலாம்” என்றார் துறவி.
கிஷிடோமோ உடனே தாம் அவர்களுடன் வாழ்ந்து அவர்களை
உணர்ந்து வருவதாக கூறி தமிழ்நாடுக்கு
வந்தார்.
இருபத்தி ஐந்து ஆண்டுகள் கழிந்தன. ஜென் துறவியை
பார்க்க மீண்டும் சொந்த ஊருக்கே வந்தார் கிஷிடோமோ. அவரை அடையாளம் கண்ட துறவி “நீங்கள்
தேடியதை அறிந்து கொண்டீர்களா?” என்று கேட்டார்.
“அறிந்து கொண்டேன் குருவே. மிகப் பெரிய துறவிகள்
அவர்கள். ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் என்று ஒன்று அரசியல் நடத்தி அரசு நடத்த ஒரு கட்சியை தேர்ந்தெடுக்கிறார்கள். அடுத்த தேர்தலில் மற்றொரு கட்சியை தேர்ந்தெடுக்கிறார்கள். ஆளும் காலத்தில்
தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் என்ன தவறு செய்தாலும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றினாலும் அவர்கள் அதைப் பெரிதாக
எடுத்துக்கொண்டு அவர்களைப் புறக்கணிப்பதில்லை. அவர்களின் மேல் கோபம் எதுவும் கொள்ளாமல் அவர்களை மன்னித்து விடுகிறார்கள். இருபத்தி ஐந்து ஆண்டுகளாக அவர்களை மாறி மாறி தேர்ந்தெடுக்கும் சம நிலையையும் அவர்கள் தவற விட்டதும் இல்லை. மிகப் பக்குவம் அடைந்த நியாயஸ்தர்கள்
அவர்கள்” என்றார் கிஷிடோமோ.
"நீயும் பக்குவம் அடைந்து விட்டாய்" என்றார் குரு.
அவர்கள் தேநீர் பருகினார்கள்.
//அவர்கள் தேநீர் பருகினார்கள்//
ReplyDeleteஆக மொத்தம் நம்ம நாட்டு அரசியல் தேனீர் அருந்துவதை விட மோசமாகி விட்டது.