Showing posts with label சுஜாதா. Show all posts
Showing posts with label சுஜாதா. Show all posts

Sunday, July 5, 2015

விடிவதற்குள் ஆம்பூர் வா!!!

“விடிவதற்குள் வா” என்று  சுஜாதா ஒரு புதினம் எழுதி இருக்கிறார். முதலில் கல்கியில் தொடர்கதையாக வந்துள்ளது. மண்டைக்காடு கலவரத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட இந்த நாவலில் ஊர் பெயரை மட்டும் மணல்காடு என்று மாற்றி விட்டார். மற்றபடி இந்துக்களுக்கும் கிறிஸ்தவ மீனவர்களுக்கும் இடையிலான மோதல் என்று மற்ற எல்லா விஷயங்களும் வெளிப்படையாகவே எழுதப்பட்டுள்ளது.

கத்தி மேல் நடப்பது போன்ற கதைக்களம். ஏதாவது இரண்டு பிரிவினரில் ஏதேனும் ஒருவருக்கு ஆதரவாக இருப்பது போல் எழுதி  இருந்தால் மிகப் பெரிய எதிர்ப்பை சுஜாதா சந்தித்திருக்க கூடும். ஆனாலும் கதையை முடிந்தவரை  மிகத் திறமையாக balance செய்துள்ளார். ஒரு அத்தியாத்தில் இந்துக்கள் கிறிஸ்தவர்கள் மேல்தான் தவறு என்று கூறுவது போல் எழுதி இருப்பார். அடுத்த அத்தியாத்தில் கிறிஸ்தவர்கள் தங்கள் தரப்பு நியாயத்தை கூறுவார்கள். அன்றைய நாட்களில்  இந்த தொடர்கதையை எதிர்த்து  யாரும் போராடாமல் இருந்தது ஆச்சரியமே.

இந்த நாவலின் கதை இதுதான். வெளிநாட்டில் வேலை பார்க்கும் ஒருவன் விடுமுறையில் மணல்காட்டுக்கு வரும்போது அவன் மனைவியை காணவில்லை. ஏற்கனவே கலவரத்துக்கு நேரம் பார்த்து கொண்டிருந்த அந்த ஊரில் இந்த சம்பவம் பதட்டத்தை அதிகப்படுத்தி மிகப் பெரிய கலவரத்தை ஏற்படுத்துகிறது. காவல்துறை ஒரு பக்கம் கலவரத்தை முனைப்புடன் கட்டுப்படுத்த, மறுபக்கம் அந்த பெண்ணைத் தேட என்று சுறுசுறுப்பாகிறது. கதையில் கலவரத்துக்கு காரணமாக பல விஷயங்கள் சொல்லப்பட்டிருந்தாலும் கலவரத்தை தொடங்குவது காணாமல் போன அந்த பெண்ணே. காவல்துறையும் அந்த பெண் கிடைத்தால் இந்த கலவரம் அடங்கிவிடும் என்றே நம்புகிறது. கதை முழுவதும் அந்த பெண்ணையும், அவள் கணவனையும் வைத்தே நகர்கிறது.

ஆம்பூரில் நடக்கும் சம்பவங்களை படிக்கும்போது ஏனோ இந்த கதை  நியாபகம் வந்தது. அதே போல் காணமல் போன பெண், கலவரம், பெண்ணைத் தேடும் காவல்துறை என்று எக்கச்சக்க ஒற்றுமைகள். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் “விடிவதற்குள் வா” புதினத்தில் கூறப்பட்ட  பெண் காணாமல் போன சம்பவம் சுஜாதாவின் கற்பனை. மண்டைக்காடு கலவரத்தில் அது போன்ற பெண் காணாமல் போன சம்பவம் எதுவும் நடந்ததாக தெரியவில்லை. இணையத்தில் தேடி பார்த்து விட்டேன்.


அன்று சுஜாதா மண்டைக்காடு கலவரத்திற்கு கற்பனையாக சொன்ன காரணம், இன்று ஆம்பூரில் கலவரத்திற்கு நிஜமான காரணம் ஆகிவிட்டது. சரி நாவலில் அந்த பெண் கிடைத்தாளா என்று கேட்கிறீர்களா? அதை இன்றைய செய்திகளை படித்து தெரிந்து கொள்ளவும். இன்று கதையாக எழுதப்படுபவைதான்  நாளை  செய்தியாக மாறுகிறது போலும்.


Thursday, August 1, 2013

கனகா,மீடியா,சுஜாதா

ரு நாவலின் முன்னுரையில் சுஜாதா  "நாளைக்கே ரேடியோ, செய்தித்தாள் எல்லாம் சேர்ந்து மூன்றாம் உலக யுத்தம் தொடங்கிவிட்டது என்று சொன்னால் நாமெல்லாம் நம்பத்தான் போகிறோம். கம்யூனிகேசன்  மீடியாவைவை கட்டுப்படுத்துபவர்களால் உலகையே கட்டுபடுத்த முடியும்" என்று எழுதியிருப்பார் . சமூக வலைத்தளங்கள் பெருகிவிட்ட நிலையில் மூன்றாம் உலகப்  போர் தொடங்கிவிட்டது என்றெல்லாம் எழுதி மக்களை நம்பவைப்பது கடினம். ஆனால் கனகா மரணமடைந்தார் என்று எழுதினால் நாம் நம்பித்தான் ஆக வேண்டும்.

கனகாவை பற்றின அந்த செய்தி எப்படி உருவானதோ தெரியாது. ஆனால் கிட்டத்தட்ட எல்லா செய்தி இணைய தளங்களும் இந்த செய்தியை பதிவேற்றி விட்டன. இந்த செய்தி வெளி வருவதற்கு இரண்டு நாட்கள் முன்னர்தான் கனகா கேரளாவில் கைவிடப்பட்ட கேன்சர் நோயாளிகளுக்கான மருத்துவமனையில் தன்னுடைய கடைசி நாட்களை எண்ணி வருவதாக இன்னொரு செய்தி. பாவம் கனகா . தான் மரணமடைந்த செய்தியை தானே படிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார். நல்ல வேளையாக  உள்ளூரில் இருந்ததால் உடனடியாக செய்தி தெரிந்து செய்தி அச்சில் ஏறும் முன் மறுப்பு வெளியிட்டு விட்டார். ஒரு வேளை வெளிநாட்டுக்கு சென்றிருந்து தமிழ்நாட்டில் நடப்பதை தெரிந்து கொள்ள முடியாத சூழலில் இருந்திருந்தால் அவ்வளவுதான். திரும்பி வந்து தான் கனகாதான் என நிரூபிக்க படாத பாடுபட்டிருக்க வேண்டும்.

 மீடியாக்கள் செய்திகளை தருவதை விட்டுவிட்டு, செய்திகளை உருவாக்கும் நிலைக்கு வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. . அதற்கு ஒரு உதாரணம்தான் கனகாவுக்கு நடந்தது. இப்போது சுஜாதா சொன்னதை மீண்டும் நினைவுபடுத்தி கொள்ளுங்கள்.கம்யூனிகேசன் மீடியாவை கட்டுப்படுத்துபவர்களால் உலகையே கட்டுப்படுத்த முடியும்.

 *************************

து கடந்த வாரம் வந்த இன்னொரு செய்தி. பிசிசிஐ நியமித்த விசாரணை குழு ஸ்ரீனிவாசன் குற்றமற்றவர் என்று அறிக்கை அளித்து விட்டதாம். அதனால் ஸ்ரீனிவாசன் மீண்டும் பிசிசிஐ  தலைவராக பதவி ஏற்று விட்டார். அதாவது அவர்கள் செய்த குற்றத்தை அவர்களே விசாரித்து தீர்ப்பு அளித்து கொண்டுள்ளனர் 'முதல்வன்' ரகுவரன் பாணியில் சொல்ல வேண்டுமானால் "அவரே குண்டு வைப்பாராம். அப்புறம் அவரே அதை எடுப்பாராம்".

நல்ல வேளையாக இந்த அறிக்கையை நீதிமன்றத்தில் அளித்தபோது நீதிபதிகள் 'நாட்டாமை' விஜயகுமார் போல "செல்லாது!! செல்லாது!!" என்று அறிவித்து விட்டனர். பார்க்கலாம் என்ன நடக்க போகிறது என்று.


Sunday, June 2, 2013

ஆ......சுஜாதா

 சில செய்திகள் நம்மை மிகவும் ஆச்சரியமடைய வைக்கும். அவை  விஷயங்கள் செவ்வாய் கிரகத்தில் இருக்கும் உயிரினங்களை பற்றியதாக இருக்கலாம். அல்லது மன்மோகன் சிங் ஒரு பிரச்சினை பற்றி வாய் திறந்து கருத்து  கூறியதாக இருக்கலாம். ஆனால் சில நேரங்களில் சில  சாதாரண செய்திகள் கூட நம்மை மிகவும் அதிசயிக்க வைக்கும். இன்று சுஜாதாவை பற்றி படித்த செய்தி அந்த வகை செய்தியே. தன்  வீட்டு பெண்கள் வெளியே செல்வதை கூட அவர் விரும்ப மாட்டார் என்ற செய்தி ஆச்சரியத்தின் உச்சம்.

அவரின் எழுத்துகள் என்னை வசீகரித்தது ஸ்ரீரங்கத்து  தேவதைகள் படித்த பின். அந்த புத்தகத்தை ஒரே நாளில் இரண்டு முறை படித்தேன். தன் சொந்த வாழ்க்கையில் நடந்த சாதாரண நிகழ்வுகளை இவ்வளவு நகைச்சுவையுடனும், சுவாரசியமாகவும் எழுத முடியுமா என்று தோன்றியது. அதை விட நான் வியந்த விஷயம் ஸ்ரீரங்கத்து அக்ரஹார பின்னணி கொண்ட ஒருவர் சற்றும் தயக்கமின்றி காமத்தை பற்றி எழுதுகிறாரே என்று.

அந்த புத்தகத்தை படித்த பின் அவரின் மற்ற நாவல்களையும் தேடி பிடித்து படிக்க ஆரம்பித்தேன். அவரின் புகழுக்கான காரணம் விளங்கியது. அது, இது என்று பிரிக்காமல் அறிவியல் முதல் ஆன்மிகம் வரும் அனைத்தையும் எழுதுவது அவரின் சிறப்பு. நிச்சயம் ஒரு ஜீனியசால் மட்டுமே இது போல் எழுத முடியும் என்று எண்ணி கொண்டேன். தமிழில் எழுத்தாளாராக முயலும் 75 சதவீதம் பேர் சுஜாதா போலவே ஆக முயல்கின்றனர். இவ்வளவுக்கும் எழுத்து மட்டுமே சுஜாதாவின் தொழில் கிடையாது. 


அவரின் நாவல்களில் சிறப்பு  அவரின் பெண் கதாபாத்திரங்கள். அவர்கள்  எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது. கணேஷிடம் தன் கொங்கைகளை பற்றி விவாதிப்பார்கள்; வசந்தை கட்டி பிடித்து முத்தம் தருவார்கள்; எதற்கும் தயங்க மாட்டார்கள்.ஒரு சமகால அமெரிக்க பெண்ணுக்கு நிகராக அவரின் நாவல்களில் வரும் தமிழ் பெண்கள் இருப்பார்கள். இவர் ஜீனியஸ் மட்டும் இல்லை. நிச்சயம் ஒரு புரட்சியாளர் என்று எண்ணி கொண்டேன். பின்னே, 60 வயதுக்கு மேலும் தமிழ் சினிமாவுக்கு ஸ்கிரிப்ட் எழுதினாரானால் தன் மனதை அவர்   எவ்வளவு இளமையாக வைத்திருக்க வேண்டும்? தன் மகனை ஒரு வெளிநாட்டு பெண்ணை மணம் செய்ய அனுமதித்தவர் எவ்வளவு பெரிய முற்போக்கு சிந்தனையாளராக இருந்திருக்க வேண்டும்?

இப்படி  சுஜாதாவை பற்றின என் பிரமிப்பு உச்சத்தில் இருந்தபோது அவர் மரணமடைந்தார். அப்போது அவர் மனைவி அளித்த ஒரு பேட்டியில், தன் கணவருக்கு கோபமே வராது என்றும் கோபம் ஒரு மனிதனின் பலவீனம் என்பது அவர் எண்ணம் என்றும் கூறியிருந்தார். திருமணமான புதிதில் அவர்  ஒரு புதிய பல்பை உடைத்து விட்டாராம். தனது கணவர் என்ன கூற போகிறார் என்று அவர் பயந்து கொண்டிருந்த போது சுஜாதா சாதாரணமாக "விடு! வேற வாங்கிக்கலாம்" என்று கூறி விட்டாராம். தன் கணவரை பற்றி சிலாகித்து கூறியிருந்தார் அந்த பேட்டியில். சுஜாதா சிறந்த எழுத்தாளர் மட்டும் இல்லை, சிறந்த மனிதராகவும் வாழ்ந்து இருக்கிறார் என எண்ணி கொண்டேன்.

ஆனால் சுஜாதாவின் மனைவியின் இன்றைய பேட்டி, சுஜாதா பற்றிய என் மன பிம்பங்களை லேசாக அசைத்து பார்த்து இருக்கிறது. மிக பெரிய ஆச்சரியத்தை எனக்கு அளித்திருக்கிறது அந்த பேட்டி. ஒரு படைப்பாளியின் தனிப்பட்ட குணங்களை அவர் படைப்புகளை வைத்து தீர்மானிக்க முடியாது என தோன்றுகிறது. இனி மேல்  படைப்பாளியை அவன் படைப்புகளிலிருந்து பிரித்தே பார்க்க வேண்டும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...