Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Saturday, March 28, 2015

சென்னை, மதுரை, கோவை – நான் கண்ட தமிழகம்

“வேற்றுமையில் ஒற்றுமை”(???) காணும் நாடு பாரத நாடு என்று படித்திருப்பீர்கள். இதை பாடப்புத்தகத்தில் படிக்கும்போது நானும் உங்களைப் போலவே பல மாநிலங்களில் பல மொழி பேசுபவர்களும், பல கலாச்சாரத்தை பின்பற்றுபவர்களும் வாழ்வதால் இந்த பெயர் வந்தது என்று எண்ணிக்  கொண்டிருந்தேன். பின்னர் தமிழகத்தின் முக்கிய ஊர்கள் அனைத்துக்கும் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தபோது ஒரு மாநிலத்துக்குள்ளேயே எத்தனை விதமான வேறுபாடுகள் என்று புரிந்தது. ஒரே மொழி பேசும் மக்கள், அந்த மொழியை பேசும் விதத்திலும், நடந்து கொள்ளும் முறையிலும் எவ்வாறு மாறுபடுகிறார்கள் என்பது சற்று கவனித்து பார்த்தால்தான் புரியும்.

முதலில் தமிழ்நாட்டின் தலைநகரை எடுத்துக் கொள்வோம். சென்னையில் அடியெடுத்து வைத்த முதல் வாரம் மாநகரப் பேருந்தில் பயணித்தேன். கூட்டம் நிரம்பிய பேருந்தில் நீச்சல் அடித்து உள்ளே சென்று டிக்கெட் எடுக்கலாம் என்று நடத்துனரை கவனித்தவனுக்கு கிடைத்தது ஒரு கலாச்சார அதிர்ச்சி. “மேலே ஏறி வா. சில்லறையா குடு” என்று அறுபது வயது கொண்ட ஒரு பெரியவரை அதிகாரம் செய்து கொண்டிருந்தார்  முப்பது வயது  மிகாத  நடத்துனர். மரியாதை  இல்லாமல்  இப்படி எல்லாம் கூட  பேசுவார்களா  என்று நான்  வியந்து கொண்டிருக்கும்போது  “என்ன வேடிக்கை பாக்குற. டிக்கெட் எடு” என்று என் மேல் அன்பை பொழிந்தார் நடத்துனர். பேருந்தை விட்டு கீழே இறங்கும் முன் பேருந்தில் மேலும் இரண்டு வாய்த் தகராறுகள் வேறு.

இந்த ஊர் இப்படித்தானோ என்று எண்ணிக் கொண்டே பேருந்தை விட்டு இறங்கினேன். அங்கே நின்றிருந்த ஒருவரிடம் நான் போக வேண்டிய இடத்தை சொல்லி வழி கேட்டேன். அவர் என்னை மேலும் கீழும் பார்த்தார். “சரி! டீ வாங்கித்தா. வழி சொல்றேன்” என்றார்.  வழி சொல்வதற்கு எல்லாமா ஊதியம் கேட்பார்கள் இந்த ஊரில் என்று விழித்தேன். பக்கத்தில் இருந்தவர் எந்த ஊர்க்காரர் என்று தெரியவில்லை. என்னை கூப்பிட்டு வழி சொல்லி அனுப்பினார்.

பின்னர் சென்னை முழுக்க சுற்றி திரிந்தபோது பல தகராறுகளை பார்த்துள்ளேன். வலுகட்டாயமாக சில தகராறுகளிலும் இழுத்து விடப்பட்டுள்ளேன். ஆட்டோக்காரர்களுடன் தகராறு, பேருந்தில் தகராறு, சாலையில் தகராறு, கடைக்காரர்களுடன் தகராறு, அரசு அலுவலகங்களில் என்று யார் மேல் தவறு என்று கணித்து சொல்லிவிட முடியாத அளவுக்கு  தகராறுகள். அதில் பல தகராறுகள்  தேவையற்றவை  என்று கூட தோன்றும். அதே நேரத்தில் தங்கள் உரிமையை அறிந்து அதை பெற குரலை உயர்த்துவதில் சென்னை மக்களை மிஞ்ச முடியாது

பொதுவாகவே  சென்னை மக்கள் அனைவருமே படபடவென பேசக் கூடியவர்கள். அமைதியான இயல்பு கொண்ட சென்னைக்காரர்களை காண்பது அரிதிலும் அரிது. அமைதியாக இருந்தால் சென்னையில் வாழ்வது கடினம் என்பது கூட அதற்கு காரணமாக இருக்கலாம். தனக்குள் வரும் மனிதர்களை சென்னை தனக்கு தகுந்தாற்போல் மாற்றி கொண்டு விடும்.

இப்போது அப்படியே சென்னையிலிருந்து மதுரைக்கு வருவோம். மதுரைக்காரர்கள் சற்று வேறு விதம். முகவரி விசாரித்தால் அக்கறையாக பதில் சொல்வார்கள். இன்னும் சிலர் உங்களுடன் வந்து அந்த இடத்திலேயே விட்டுவிட்டு போவார்கள். அதே நேரத்தில் எந்த நேரத்தில் எப்போது கோபம் வரும் என்று கூற முடியாது. அதற்காக கோபம் வந்தால் சினிமாவில் காட்டுவது போல அரிவாளை தூக்கி கொண்டு ஓடி வர மாட்டார்கள். இயல்பாகவே மற்றவர்களிடம் அன்பு காட்டுபவர்கள். அதற்காக  மதுரை மக்கள் அனைவரும் தேவதூதர்கள் என்று அர்த்தம் இல்லை. ஜாதி உணர்வு சற்று அதிகமாக இருப்பது இவர்களின் பலவீனம். அதே போல் மதுரை வியாபாரிகளின்  மார்கெட்டிங் திறன் அலாதியானாது. சற்று அயர்ந்தால் நமக்கே தெரியாமல் நம்மிடம் பொருட்களை விற்று விட்டு பணத்தை எடுத்துக் கொள்வார்கள்.

இப்போது கோவைக்காரர்களை எடுத்து கொள்வோம். இப்படி கூட மரியாதையாக பேச முடியுமா என்று ஆச்சரியப்பட்டு போனது இவர்களிடம்தான். சென்னைக்காரர்களுக்கு நேர் எதிர். கோவைகாரர்கள்  யாரிடமாவது முகவரி கேட்டு பாருங்கள். நீங்கள் வயதில் பெரியவரா, சிறியவரா என்றெல்லாம் யோசிக்காமல் “அண்ணா. அப்பிடியே ரைட்ல போங்கண்ணா. லெப்ட்ல வாங்கண்ணா” என்று இவர்கள் கொங்கு தமிழில் பேசும் அழகை கேட்டு நமக்கே கோவையில் நிரந்தரமாக தங்கி விடத் தோன்றும்.

இப்படி வாழும் இடத்திற்கு ஏற்ப குணங்கள் எப்படி மாறுகிறது என்பதற்கு பல காரணங்கள் இருக்க கூடும். ஆனால் இவை அனைத்தையும் கடந்து  தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும்  இருக்கும் ஒரே மாதிரியான சினிமா ரசிப்புத்தன்மையும், அரசியல் பார்வையும் ஒரு ஆச்சரியம்தான்.


Monday, July 28, 2014

ஒரு மல்டிலெவல் மார்க்கெடிங் ஏஜெண்டும், நானும்

துரங்க வேட்டை”யில் மல்டிலெவல் மார்க்கெடிங் பற்றி காண்பித்து இருந்தார்கள். பார்த்தபோது எனக்கு நான் சந்தித்த ஒரு மல்டிலெவல் மார்கெடிங் ஏஜென்டின் நினைவு வந்தது. பணத்தின் மேல் பேராசை கொண்ட ஒருவரை எப்படி வேண்டுமானாலும்  மூளைசலவை செய்யலாம் என்பதை அவர் மூலமே முதலில் தெரிந்து கொண்டேன்.

ஒரு நாள் வழக்கப்படி மாட்டுத்தாவணியில் இருந்து ஊருக்கு திரும்ப பேருந்தில் ஏறி ஜன்னல் ஓரம் இடம் பிடித்து அமர்ந்தேன். பேருந்து கிளம்ப சில நிமிடங்கள் இருந்தது. கவனத்தை இளையராஜா பாடலில் திருப்பி பேருந்தில் ஏறுபவர்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன்.

சில நிமிடங்களில்  வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட் அணிந்து கொண்டு ஒரு இளைஞர் பேருந்தில் ஏறினார். எனக்கு பக்கவாட்டில் இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தார். எனக்கு அவர் என்னையே பார்ப்பது போல தோன்றியது. நான் நினைத்தது சரிதான் என்று நிரூபிக்கும் வகையில் என் இடம் மாறி என் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டார்.

“உங்களை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு._______ பள்ளிகூடத்துலதான படிச்சீங்க?” தனது முதல் கேள்வியை வீசினார்.

“ஆமாங்க. நீங்களும் அங்கதான்  படிச்சீங்களா?”

“இல்ல. ஆனா எங்க வீடு அந்த தெருலதான் இருக்கு. அதான் உங்களை பார்த்த மாதிரி இருக்கு போல”

ஆயிரம் பேருக்கு மேல் படிக்கும் அந்த பள்ளிகூடத்தில் என்னை பார்த்தது போல இருக்கிறது என்றால் என் முகத்தில் ஏதோ களை இருக்கிறது போல என்று எண்ணி பெருமைபட்டு கொண்டேன். வழக்கமாக என்னை பார்த்தாலே பயந்து ஓடுபவர்கள் மத்தியில் என்னை தேடி வந்து ஒருவர் பேசுகிறார் என்ற சந்தோசம் வேறு.

“ஆமா...ஆமா...சரி நீங்க இப்போ என்ன பண்றீங்க?” நட்பை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகும் முயற்சியில் இறங்கினேன்


“நான் தமிழ்நாடு மின்வாரியத்துல வேலை செய்யுறேன்”

“ரொம்ப பிஸியான வேலைதான். நேரத்துக்கு கரண்ட் கட் பண்ணனும்.”

“அத்தனை பிஸி எல்லாம் இல்லைங்க. நாங்க நேரத்துக்கு கரண்ட் கட் பண்ணாம போனாலும் கரண்ட் அதுவாவே நின்னுடும்.” சிரித்து கொண்டே பதில் உரைத்தார். எனக்கு  ஒன்றரை மணி நேரத்துக்கு  சரியான பொழுதுபோக்கு கிடைத்ததை எண்ணி புளங்காகிதம் அடைந்தேன். அப்படியே தமிழ்நாட்டில் மின் நிலவரத்தை இவர் மூலம் தெரிந்து கொண்டு விட வேண்டியதுதான்.

“ஆமா! இந்த கரண்ட் கட் எல்லாம் சரி பண்ணவே முடியாதா?”

“அதெல்லாம் வாய்ப்பே இல்லைங்க. கூடங்குளம் வந்தா சரி ஆகிடும்னு சொல்றாங்க. ஆனா அதெல்லாம் சும்மா. சரி நீங்க எங்க வேலை பாக்குறீங்க?”

“எனக்கு கவர்மென்ட் உத்தியோக யோகம் எல்லாம் இல்லை. மதுரைல ஒரு பிரைவேட் கம்பெனில வேலை”

“சம்பளம் எவ்வளவு வாங்குறீங்க?” அடுத்த கேள்வியில் அதிர்ச்சி அளித்தார். பழகிய பத்தே நிமிடங்களில் சம்பளம் கேட்கிறாரே. அரசாங்க ரகசியத்தை எல்லாம் நான் கேட்டிருக்க கூடாதோ? சில நொடிகள் குழம்பி சம்பளத்தை தவறாக சொல்ல முடிவு செய்தேன்.

“என்னங்க ஒரு பத்தாயிரம். அதுலயும் அப்பிடி இப்பிடி பிடிச்சு ஒரு எட்டு நெருங்கிதான் கைக்கு வரும்”

அவர் முகத்தில் ஒரு புன்னகை தெரிந்தது.

“நீங்க என்ன படிச்சு இருக்கீங்க? இன்ஜினியரிங்தானே”

“ஆமா”

“பாருங்க இன்ஜினியரிங் படிச்சு எட்டாயிரம்தான் வாங்குறீங்க. உங்க முதலாளி உங்களை விட கம்மியாதான்  படிச்சு இருப்பார். ஆனா எவ்வளவு சம்பாதிக்கிறார். எப்பிடின்னு நினைக்கிறீங்க”

உண்மையில் என் எம்.டி  இங்கிலாந்து சென்று பல பட்டங்களை வாங்கியவர். எனக்கு என்னமோ அதை அவரிடம் சொல்ல பிடிக்கவில்லை.

“அவர் திறமைசாலி அதான்”

“திறமைதான். ஆனா அவர் திறமை என்னன்னா அவருக்கு மத்தவங்க நேரத்தை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க தெரிஞ்சு இருக்கு. உங்க நேரத்தை எடுத்திகிட்டு உங்களுக்கு பணம் தரார். ஆனா அதை விட அதிக பணம் உங்க நேரத்துல அவர் சம்பாதிக்கிறார். நேரம்தான் எல்லாம். உங்க நேரத்தை நீங்களே பயன்படுத்திகிட்டா நீங்களும் அதிக பணம் சம்பாதிக்கலாம்”

அவர் பேசுவது யாரோ சொல்லிக் கொடுத்து பேசுவது போல தெரிந்தது.

“அதெல்லாம் எதுக்குங்க. சம்பளம் வருது அது போதும்”

“இப்போ உங்களுக்கு இது போதும். நாளைக்கு? இன்னும் இருபது வருஷம் கழிச்சு முப்பதாயிரம் வாங்குவீங்க. அது போதுமா? இப்போ நான் உங்களுக்கு உங்க நேரத்தை எப்படி பணமாக்குறதுன்னு இப்போ உங்களுக்கு  சொல்லித்தரேன்”

அவர்  நோக்கம் எனக்கு தெளிவாக புரிந்து விட்டது.

“ஆம்வேயா? மோடிகேரா?”

“ஆம்வேலாம் இல்லை. மோடிகேர்தான். இப்போ  நான் பெரிய தொழிலதிபர்களை உருவாக்குற முயற்சியில இருக்கேன். அப்பிடியே கம்பெனியோட சோப்பு, ஷாம்பூ விக்கணும். எம்.எல்.எம்தான் நம்ம நேரத்தை பணமாக்குற வழி ”

“எம்.எல்.எம் கான்செப்டே தப்புங்க. இப்பிடி ஒவ்வொருத்தரும் பத்து பேரை சேர்த்து விட்டா கடைசில எல்லாருமே விக்கிறவங்க ஆயிடுவாங்க. அப்புறம் அந்த பொருளை எல்லாம் கடைசில யாருதான் வாங்குறது?”

இதை கேட்டதும் கடகடவென்று சிரித்தார்.

“இன்ஜினியரிங் எப்பிடி பாஸ் ஆனீங்க. இது கூட புரியல. அது அப்பிடி இல்லங்க”

“அது எப்பிடியோ நம்ம ஊருக்கு  இதெல்லாம் ஒத்துவராது. ரொம்ப காஸ்ட்லி ப்ராடக்ட் . இங்கெல்லாம் அதை யாரு வாங்குவா, ரெண்டு ரூபா சாஷேல ஷாம்பூ வாங்கி குளிச்சா போதும்னு சொல்லிடுவாங்க”

அவர் முகம் மாறியது.” நீங்க எப்பவாச்சும் இவங்களோட டூத் பேஸ்ட்டை யூஸ் செஞ்சு இருக்கீங்களா. யூஸ் செஞ்சு பாருங்க. அப்புறம் இப்பிடி பேச மாட்டீங்க”

“அதெல்லாம் எதுக்குங்க. நமக்குதான் கோபால் பல்பொடி இருக்கே?”

“கோபால் பல்பொடியா?”

“என்ன முகத்தை சுருக்குறீங்க? பெரிய மல்டி நேஷனல் கம்பெனி தெரியும்ல. மலேசியா, சிங்கப்பூர், இலங்கைன்னு பெரிய மார்க்கெட்.”

அவர் வெறுப்பு அடைவது நன்றாக தெரிந்தது.

“சார்! நீங்க எல்லாத்தையும் தப்பா புரிஞ்சு இருக்கீங்க. மதுரைல ஒரு டாக்டர் இப்போ எம்.எல்.எம்ல  மாசத்துக்கு ஒரு லட்சம் சம்பாதிக்கிறார். இதை வச்சே கார் எல்லாம் வாங்கிட்டார். இந்த வாரம் ஞாயித்துக்கிழமை மதுரைல ஒரு மீட்டிங் இருக்கு. போய் கலந்துக்குங்க. அந்த டாக்டர் பேசுறதை கேட்டதும் உங்களுக்கே புரியும். அப்பிடியே என்னோட பேரை அங்கே ரெபரன்ஸ்னு குடுத்துடுங்க”

“டாக்டர் பேஷண்டுக்கு உங்க கம்பெனி  சோப்பையும், ஷாம்பையும் பிரிஷ்க்ரிப்சன் எழுதி கொடுத்து வித்துடுவார். நான் எப்பிடி விக்கிறது. தவிர இந்த வாரம்  ஞாயித்துக்கிழமை நான் ரெஸ்ட் எடுக்கணும். உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? இதே மாதிரி எம்.எல்.எம்ல  ட்ரை பண்ணி காசை விட்ட நிறைய பேரை எனக்கு தெரியும்.”

அவர் கோபத்தின் உச்சிக்கே போய்விட்டார் என்பது அவரின் கண்களில் தெரிந்தது.

“சரி உங்க நண்பர்கள் போன் நம்பர் இருந்தா குடுங்க. யாராச்சும் இதுல இன்ட்ரஸ்ட் காமிக்கலாம்”

“எனக்கு நண்பர்களே இல்லீங்க. அப்பிடி யாரையும் நான் வச்சுகுறதே இல்ல.”

“நீங்க நெகட்டிவாவே வளர்ந்துட்டீங்க, அதான் உங்களுக்கு நண்பர்களே இல்லை. இப்படி யோச்சிக்கிறவரை நீங்க வாழ்க்கையில  முன்னேறவே மாட்டீங்க” இப்பொழுது கோபம் வார்த்தைகளில் வந்து விழுந்தது. அவரின் விலைமதிப்பில்லாத நேரத்தை நான் வீணடித்து விட்டது காரணமாக இருக்கலாம்.

அடுத்த முப்பது நிமிடங்கள் ஊரை அடையும்வரை இருவரும் பேசிக்கொள்ளவில்லை. எனக்கு அதில் சந்தோசம்தான் . ஊர் வந்ததும் திரும்பி பார்க்காமல் இறங்கி சென்று விட்டேன்.

இது நடந்து நான்கு வருடங்கள் இருக்கும். இப்போது ஊரில் புதியதாக  கார் எதுவும் ஓடுவதாக தெரியவில்லை. மூன்றே மாதங்களில் எதார்த்தம் புரிந்த பின் அவர் எம்.எல்.எம் தொழிலை விட்டு இருக்கலாம். ஆனால் அதற்குள் அவர் தன்னுடைய நண்பர்கள் அனைவரையும் தன்னைவிட்டு விலகி ஓட வைத்து இருப்பார். அவருக்கு எதார்த்தம் புரிய வைத்ததில் என்னுடைய பங்களிப்பும் இருப்பது ஒரு வகையில் மகிழ்ச்சியே.


Tuesday, July 22, 2014

ஒரு ஆசிரியையின் மோசமான நாள்

ன்னை பொறுத்தவரை ஆசிரியர்களாக இருப்பது கடினமான காரியம். அதுவும் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் ஆசிரியராக இருப்பது. அந்த வயது மாணவர்களுக்கு தாங்கள் பெரியவர்களா, சிறியவர்களா என்ற குழப்பம் இருப்பது போலவே ஆசிரியர்களுக்கும் அவர்களை பெரியவர்களாக நடத்துவதா, சிறியவர்களாக நடத்துவதா என்ற குழப்பம் இருக்கும். இது தவிர மாணவர்களின் கேலி, கிண்டல்களையும் கண்டும் காணாதது போல பொறுத்து கொள்ள வேண்டும்.

எங்கள் பள்ளியில் வாரம் ஒரு நாள்  பிரார்த்தனையின் போது கொடி ஏற்றுவார்கள். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு ஆசிரியர் என்ற ரீதியில் கொடி ஏற்றும் வாய்ப்பு கிடைக்கும். ஒரு நிறைந்த திங்கள்கிழமை நாளில் அந்த வாய்ப்பு பள்ளியில் புதிதாக வேலைக்கு சேர்ந்திருந்த   ஆசிரியைக்கு கிடைத்தது. அந்த ஆசிரியையும் தனக்கு எதிராக விதி சதி செய்யப்போவதை உணராமல் எல்லா பல்லும் வெளியே தெரியுமாறு சிரித்துக் கொண்டு உற்சாகமாக கொடி ஏற்ற கொடி கம்ப பீடத்தில் ஏறினார்.

உடற்கல்வி ஆசிரியர் கொடி ஏற்றும் கயிறை கையில் கொடுத்ததும் ஏதோ ஐ.நா சபைத் தலைவர்  போல தலையை நிமிர்த்தி மேலே பார்த்து கொண்டார். பின்னர் அந்த கயிறை ஒயிலாக இழுத்தார் பாருங்கள் . மின்னல் வேகத்தில் மேலே ஏறிய கொடி விரிந்து அதே வேகத்தில் மீண்டும் கீழே இறங்கத் தொடங்கியது. பதட்டத்தில் அந்த ஆசிரியை மீண்டும் கயிற்றின் ஏதோ ஒரு முனையை பிடித்து மீண்டும் இழுக்க கொடி சரியாக பாதி கம்பத்தில் நின்று கொண்டது.

 இது போதாதா? பள்ளியின் மாணவர் தலைவன் உட்பட அனைவரும் சிரிக்க தொடங்கி விட்டார்கள். ஒரு சில ஆசிரியர்களும் சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் சிரித்து விட்டார்கள். ஏதும் கொடி அவமதிப்பில் சிக்கி விடுவோமோ என்ற சந்தேகத்தில் தலைமை ஆசிரியரின்  முகத்தில் ஈ ஆடவில்லை. ‘வாரத்துல முதல் நாள்  கொடி ஏத்த சொன்னா இது துக்க நாள் மாதிரி  கொடியை பாதி கம்பத்துல பறக்க விடுது’ என்று பக்கத்தில் இருந்தவன் கமெண்ட் அடிக்கவும் நான் கொஞ்சம் அதிகமாகவே சிரித்து விட்டேன். உடற்கல்வி ஆசிரியர் சுறுசுறுப்பாக செயல்பட்டு கொடியை கீழே இறக்கி மடக்கி வைத்தார்.

எல்லாம் சற்று அடங்கியதும் தலைமை ஆசிரியர் பேச ஆரம்பித்தார். எதுவும் நடக்காத தொனியில் இன்று கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்த ஆசிரியைக்கு நன்றி என்று கூறி முடித்தவுடன் அருகில் இருந்தவன் மீண்டும் ‘ஏத்தி வச்சுச்சா? இறக்கில்ல வச்சுச்சு’’ என்று மெல்லிய குரலில் சொல்ல மீண்டும் அசர்ந்தப்பமாக சிரித்து தொலைத்து விட்டேன். இந்த முறை நான் மட்டும் சிரித்தால் தனியாக தெரிந்து விட்டது. நான்கு, ஐந்து தலைகள் என் பக்கம் திரும்பி விட்டன . இப்போது தலைமை ஆசிரியர் ‘நீங்கள் சிறுவர்கள் அல்ல. இது போன்ற சந்தர்ப்பங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கற்று கொள்ள வேண்டும்’ என்று கூறி உரையை முடித்து விட்டார்.

தேசிய கீதம் பாடி பிரார்த்தனை கூட்டம் முடிந்ததும் வகுப்புக்கு செல்ல முயன்றபோது பள்ளியின் அனைத்து உடற்கல்வி ஆசிரியர்களும் எங்கள் வகுப்பு மாணவர்களை  சுற்றி வளைத்து வெயிலில் முட்டி போட சொல்லி அன்பு கட்டளை இட்டனர். ‘சின்ன பசங்களை  விட்டுடலாம்  சார்! எருமை மாடு மாதிரி வளர்ந்துட்டு எப்பிடி சிரிச்சானுங்க பார்த்தீங்கள்ள’ என்று ஒரு வழுக்கை தலை ஆசிரியர் கையில் குச்சியை தட்டி கொண்டே சொன்னார். எங்களில்  ஒரு மாணவன் மயக்கம் அடைந்ததால்  முப்பது நிமிடங்களுக்கு பின் வகுப்புக்கு திரும்பிவிட்டோம். எங்கள் வகுப்பு மட்டும் மாட்டியதற்கு நான்தான் காரணம் என்று எண்ணி என்னை மற்றவர்கள் அடித்து நொறுக்க போகிறார்கள் என்று எண்ணி பயந்து கொண்டே இருந்தேன். நல்ல வேளையாக எந்த முட்டாள் பயலுக்கும் அந்த எண்ணம் தோன்றவில்லை.

மறுநாள் கொடி ஏற்றிய ஆசிரியை ஓய்வறையில் அழுததாக ஒரு வதந்தி மாணவர்களிடையே பரவியது. முதல் மாணவர்கள் சில பேர் ‘பாவம் டீச்சர்’ என்று என்று பரிதாபப்பட்டுவிட்டு மீண்டும் முதல் நாள் நடந்ததை பற்றி பேசி சிரித்து கொண்டிருந்தனர்.

சில நாட்களுக்கு முன் பள்ளி பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனை பிடித்து அந்த டீச்சரை பற்றி விசாரித்தேன். இப்போது கொடி நன்றாகவே ஏற்றுகிறார்கள் என்றான். ஆனால் அவன் ‘அந்த டீச்சர் என்ன கோமாளித்தனம் செஞ்சுச்சு தெரியுமா?’ என்று இன்னொரு கதை சொன்னான். இதே போல அத்தனை ஆசிரியர்களுக்கும் ஒரு கதை சொல்லி சிரித்தான். காரணங்கள் மாறினாலும் நிஜமாகவே ஆசிரியர்களாக இருப்பது கஷ்டம்தான்.

Sunday, June 15, 2014

நான் கடவுள் தேடிய கதை

டவுள் எதற்கு தேவையோ இல்லையோ குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லவாவது அவர் கண்டிப்பாக தேவை. பின்னே உங்கள் குழந்தை “அரிசி எப்பிடி மண்ணுல இருந்து எப்படி முளைக்குது” என்று கேட்டால் “சாமி முளைக்க வைப்பாருடா” என்ற பதிலை தவிர்த்து வேறு எதை சொல்வது. அதே போன்ற ஒரு கேள்வியை நான் கேட்ட நேரத்தில்தான் கடவுள் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். எனவே கடவுள் எனக்கு அறிமுகமான காலத்தை நினைவு தெரியாத காலம் என்று எடுத்து கொள்ளலாம். எல்லா இந்திய குழந்தைகளை போலவே தெய்வ நம்பிக்கை மனதில் விதைக்கப்பட்டது. புரியாத விஷயங்களுக்கு எல்லாம் விடையாக கடவுள் கிடைத்தார். அவர் எங்கே இருக்கிறார் என்று கேட்ட போதெல்லாம் அவர் வானத்தில் இருக்கிறார் என்று பதில் கூறிவிடுவார்கள். பெரியவர்கள் சொல்வது போல அவர் வானத்தில் இருக்கிறார் என்று நம்பி விட்டேன்.

அதிக ஆசைகள் இல்லாத பால பருவத்தை தாண்டி, ஆரம்ப பள்ளி காலத்தில் கடவுள் நமக்கு கேட்டதெல்லாம் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் அவரிடம் நிறைய கோரிக்கைகளை வைக்க ஆரம்பித்து விட்டேன். கோரிக்கைகள் என்றால் பெரிய கோரிக்கைகள் எல்லாம் கிடையாது. நானும்  ராம.நாராயணன் படத்தில் வரும் குழந்தைகள் போல தெய்வ சக்தியுடன் அற்புதங்களை புரிய வேண்டும் போன்ற எளிய கோரிக்கைகள் மட்டுமே. ஆனால் என்னதான் கடவுளை வேண்டினாலும் அவர் எனக்கு தரிசனம் தரவில்லை. அற்புத சக்திகளையும் தரவில்லை. என்னுடைய பக்தியில் ஏதோ குறை இருக்கிறது போலும் என்று சந்தேகம் கொள்ள தொடங்கினேன். வகுப்பறையில் பாடம் நடத்தி கொண்டிருக்கும்போது நான் கடவுளை சிந்தித்து கொண்டிருப்பேன். ஒரு நாள் பாட புத்தகத்தில்  சூரிய குடும்பத்தை படமாக பார்த்தபோது கடவுள் இருக்கிற இடத்தை இதில் குறிக்காமல் விட்டு விட்டார்களே என்று கோபம் வந்து அதன் பின் படிப்பிலேயே ஆர்வம் குறைந்து விட்டது.

இப்படி பக்தி மார்க்கத்தில் தீவிரமாக இருந்த காலத்தில்தான் அந்த வாசகங்கள் முதல்முறையாக  என்னுடைய கண்ணில் பட்டன. ‘கடவுளை நம்பியவன் காட்டுமிராண்டி; கடவுளை பரப்பியவன் ஏமாற்றுக்காரன்’ என்ற ரீதியில் இருக்கும் அந்த வாசகங்கள். வாசகங்களுக்கு கீழே பெரியார் என்று எழுதியிருந்தது. கடவுளை கூட திட்டலாமா என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இதை பற்றி பெரியவர்களிடம் கேட்க முடியாது. கூட படித்த நண்பனிடம் ‘கடவுளை கும்பிடாம இருக்காங்களே? கடவுள் அவங்களை சந்தோசமா வச்சிருக்க மாட்டார்தானே?” என்று கேட்டேன். அவனோ ‘கமலஹாசன் கூட கடவுளை கும்பிட மாட்டாராம். அவர் கிட்ட பணம் இல்லையா என்ன? எல்லா நடிகைகளுக்கும் அவரைத்தான் பிடிக்கும் தெரியுமா?” என்றான். ‘அதுதான் அவர் படம் எல்லாம் ஓடாம போகுதா? ரஜினி மாதிரி சாமி கும்பிட்டால்ல படம் நல்லா ஓடும்” என்றேன். கடவுளை விட்டு கொடுக்காமல்.

இப்படி கடவுள் மேல் மிகுந்த பயபக்தியுடன் மேல்நிலை பள்ளியில் அடி எடுத்து வைத்தேன். வழக்கப்படி கடவுளிடம் வைத்த கோரிக்கைகளுக்கும் அளவில்லை. ஆனால் காமிக்ஸ் புத்தகம் வேண்டும், நிறைய மார்க் எடுக்க வேண்டும் என்று இப்போது கோரிக்கைகள் சிறிது பகுத்தறிவுடன் மாறி விட்டிருந்தன. சில நேரங்களில் கோரிக்கைகள்  நிறைவேற்றப்பட்டும் விட்டன. ‘கடவுள் இருக்காரு குமாரு’ என்று அப்போதெல்லாம் கடவுளுக்கு நன்றி செலுத்துவேன். சில நேரங்களில் கோரிக்கைகள் தோல்வி அடையும்போது கடவுள் மேல் லேசாக சந்தேகம் எழும். இப்படியெல்லாம் யோசிக்க கூடாது. அதெல்லாம் தப்பு என்று அந்த எண்ணங்களை வளர விடாமல் பார்த்து கொள்வேன்.

கடவுளும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்த நேரத்தில்தான் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் வந்தது. சில மாதங்களுக்கு பின் தேர்வு முடிவுகளும் வந்தது. மதிப்பெண்களை பார்த்ததும் எனக்கு பேரதிர்ச்சி. வழக்கமாக பள்ளி தேர்வுகளில் பெரும் மதிப்பெண்களை கூட பொது தேர்வில் எடுக்கவில்லை. ‘கடவுள் நமக்கு இப்படி செஞ்சுட்டாரே. இனிமே அவர் கூட பேச்சு வார்த்தை வச்சுக்க கூடாது’ என்று முடிவு செய்தேன். கவனியுங்கள். இப்போதும் அவர் மேல் முழுவதுமாக  நம்பிக்கை இழக்கவில்லை. என்னுடைய நோக்கம் கடவுளை குற்ற உணர்ச்சியில் தள்ளி அதன் மூலம் பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்களை பெறுவது.

அவ்வப்போது கடவுளை வணங்குவது  என்ற ரீதியில் அடுத்து வந்த நாட்கள் ஓடின. பனிரெண்டாம் வகுப்பில் வாய்த்த ஆங்கில ஆசிரியர் ஒரு ஆன்மீகவாதி. ‘பாபா’ படம் ஓடிய தியேட்டரில் அவரை பார்த்ததை சொன்னதும் படத்தில்  ஆன்மீகம் இருக்கிறது என்று சொன்னதாலேயே சென்றேன் என்றார். ஆனால் ஆன்மீகத்தை பற்றி படத்தில் சரியாக எதுவுமே சொல்லவில்லை என்றார். ‘எல்லாம் கடவுள்தான் என்று சொன்னவர்கள் அதை சரியாக விளக்கவில்லை’  என்றவர் பின்னர் ஒரு பென்சிலை கையில் எடுத்து கொண்டு ‘இந்த பென்சில் இங்க இருக்குதுன்னா அதுக்கு இடம் கொடுக்கிறது ஸ்பேஸ் அதாவது வெற்றிடம். எல்லா இடத்திலும் இருக்கிற வெற்றிடம்தான் கடவுள்’ என்றார். அவர் சொன்ன கருத்தை விட அவர் இந்து பெயரில் வாழும் முஸ்லீமோ என்றுதான் சிந்தித்தேன். இருந்தாலும் அவர் கருத்து மனதில் ஒரு சிறிய தூண்டுதலை ஏற்படுத்தியது. இடைக்காலத்தில் பெற்ற  அறிவியல் அறிவு  கடவுள் வானத்தில் இல்லை என்றால் வேறு எங்கே இருக்கிறார் என்று கேள்வி கேட்க தொடங்கியிருந்தது.

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மிகப்  பெரிய சந்தோசம் தரவில்லை என்றாலும் அதிக அதிர்ச்சியும் தரவில்லை. ஒரு வேளை நாம் படித்ததால்தான் மதிப்பெண் பெற்றோமா? இல்லை கடவுள்தான் மதிப்பெண் பெற வைத்தாரா என்ற சந்தேகம் மீண்டும் தலை தூக்கியது.

பின்னர் தமிழனில் தலை எழுத்துக்கு விதிவிலக்காக மாறாமல் பொறியியல் கல்லூரியில் அடி எடுத்து வைத்தேன். கடவுள் பற்றி முன்பிருந்த எண்ணங்கள்  மெதுவாக உடைய ஆரம்பித்த தருணம். அந்த நேரத்தில்தான் கடவுளை பற்றி முற்றிலும் சந்தேகம் கொள்ள வைக்கும் ஒரு சம்பவம் நடந்தது. எனக்கு அந்த சம்பவத்தில் நேரடி தொடர்பு இல்லையென்றாலும் கடவுளை பற்றி நிறைய யோசிக்க வைத்தது அந்த சம்பவம். அது கும்பகோணம் தீ விபத்து.


 தொடரும் 

விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன 


Wednesday, May 21, 2014

சென்னையை மெட்ரோ நகரமாக உணர்ந்த தருணம்

நான் முதல் முதலில் சென்னை வந்திருந்த சமயம். ஒரு மதியப்பொழுதில் கோடம்பாக்கத்தில் இருந்து தி.நகர் செல்ல பேருந்தில் ஏறி விட்டேன். பேருந்தில் கூட்டம் இல்லை. ஆனாலும்  இருக்கைகள் நிரம்பி இருந்தன. அமர்ந்திருந்த  நடத்துனரை தேடி  சென்று பயணசீட்டு வாங்க பத்து ரூபாயை எடுத்து நீட்டினேன்.

“ரெண்டு ரூபா டிக்கெட்டுக்கு பத்து ரூபாயை எடுத்து நீட்டினா எங்க போறது. பேசாம இறங்கிக்க” என்று சொல்லிவிட்டு வேகமாக எழுந்து முன்னால் சென்று விட்டார்.

கையில் சில்லறை வேறு சுத்தமாக இல்லை. அவர் திரும்பி என்னை கடந்து செல்லும் நேரம் வரை காத்து இருந்து பாவமாக முகத்தை வைத்து கொண்டு “சில்லறை இல்லை சார்” என்றேன்.

கடுப்பாக முகத்தை வைத்து கொண்டு பத்து ரூபாயை வாங்கி கொண்டு  சில்லறை தேடி எடுத்து கொடுத்தார்

இது நடந்து முடிந்தபோது அடுத்த நிறுத்தம் வந்து இருந்தது. வட இந்தியர் போல இருந்த ஒருவர் காதில் மொபைலை வைத்து கொண்டு பதட்டமாக  பேருந்தில் ஏறி நடுவில் சென்று நின்று கொண்டார். நடத்துனர் அமர்ந்த இடத்தில் இருந்தே ‘டிக்கெட்’ என்றதும் பத்து ரூபாயை எடுத்து நீட்டி திநகர் என்றார்.

“சேன்ஜ் நஹி. இறங்கிக்க.” வாசலைகாண்பித்து என்னிடம் பாடிய அதே பாட்டை திரும்ப ஆரம்பித்தார் நடத்துனர்.

“வொய் சுட் ஐ கெட் டவுன். திஸ் இஸ் யுவர் ரெஸ்பான்ஸ்சிபிலிட்டி டு கிவ் சேன்ஜ்”

அடப்பாவி. அவன்தான் பஸ்ஸை வாங்கி விட்டவன் போல இப்படி கத்துகிறானே. இதே வார்த்தையை அவர் என்னிடம் சொன்னபோது நான் எப்படி பம்மினேன்.

“சில்லறை இல்லன்னா இல்லைதான். டோன்ட் டாக்  இங்கிலீஷ் . இறங்கிடு”

“ஐ கான்ட்! திஸ் இஸ் கவர்மென்ட் ப்ரோபர்ட்டி! யு ஆர் பப்ளிக் சர்வன்ட். யூ கான்ட் ஆர்டர் மீ. ஐ ஆம் எ லாயர். ஐ நோ மை ரைட்ஸ் ” என்று சத்தத்தை மேலும் கூட்டினார்.

நடத்துனர் இப்போது சற்று குழம்பி விட்டார். இப்போது வட இந்தியருக்கு ஒரு ஆதரவு குரல் எழுந்தது.

“அவர் கூட ஏம்பா சண்டை  போடுற. சில்லறை கொடுத்துடேன்”

“என் கிட்ட சில்லறையே இல்லம்மா.”

இது வரைக்கும் அமைதியாகத்தான் சென்று கொண்டிருந்தது. கூட்டத்தில் அமர்ந்திருந்த ஒரு பெரியம்மா அந்த வட இந்தியரிடம் தனது கருத்தை சொல்ல ஆரம்பிக்கும் வரை. ஆங்கிலத்தை தமிழில் தட்டச்சுவது சிரமமாக இருப்பதால் இனி எல்லாமே தமிழில்.

“நானும் தமிழ்நாடு இல்லை. சென்னை வந்து 25 வருஷம் ஆச்சு. தமிழ் தெரியலனா சென்னைகாரங்க இப்பிடித்தான் செய்வாங்க. அங்க கண்ணாடி போட்டு நிக்குறானே ஒரு பையன். அவன் பத்து ரூபாயை கொடுத்ததும் இவர் சில்லறை கொடுத்தார். இப்போ நீ இங்கிலிஷ்ல கேட்டதும் தர மாட்டேங்குறார்.”

அந்த பெரியம்மா எதற்காக இந்த கருத்தை சொன்னார்கள் என்றே தெரியவில்லை. அவருக்கு யார் மேல் கோபம் என்பதும் புரியவில்லை. அடிப்பாவி! இதுல ஏன் என்னோட பேரை இழுக்குற என்று எண்ணி கொண்டிருந்தேன். வட இந்தியரோ இப்போது  கோபத்தின் உச்சத்தில் இருந்தார்.


“நான் மேலதிகாரிங்ககிட்ட போவேன். நான் யாரு தெரியுமா” என்று பேருந்து முழுவதும் கேட்க உரத்து சொன்னார்.

இப்போது முன்னிருக்கையில்  நடந்ததை கவனித்து கொண்டிருந்த ஒரு வீர தமிழருக்கு கோபம் வந்து விட்டது.

“வாயை மூடுடா! என்ன பேசிகிட்டு இருக்க. எனக்கு திநகர் இன்ஸ்பெக்டரை தெரியும்” சட்டை கையை  மடக்கி விட்டு எழுந்தார். அவர் சொன்னது   வட இந்தியருக்கு புரிந்திருக்க நியாயம் இல்லை. ஆனாலும் சட்டை கையை மடக்கி விட்டதன் அர்த்தம் புரிந்திருக்க வேண்டும். அவரின் உடல் விரைப்பானதை உணர முடிந்தது. அவர் கண்கள் சிவந்து விட்டன.

அடப்பாவிங்களா! ஒரு ரெண்டு ரூபாய்க்கு அடி தடிக்கெல்லாம் போறீங்களேடா

“ஒரு திநகர் கொடுங்க.” ஒரு குரல் என்னை கலைத்தது. இந்த நேரத்துலயும் டிக்கெட் கேட்கும் கடமையாளர் யார்? சிலிர்த்து கொண்டு திரும்பினேன். நடத்துனரின் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த இரண்டு பெண்களில் ஒருவர் டிக்கெட் எடுத்து கொண்டிருந்தார். இந்த பெண்கள் இத்தனை நேரமா டிக்கெட் எடுக்காமல் இருந்தார்கள் என்று அவர்களை நான் பார்த்து கொண்டிருந்தபோது அந்த பெண் அந்த டிக்கெட்டை வட இந்தியரிடம் நீட்டினார்.

“நீங்க எதுக்கு டிக்கெட் எடுக்கணும்?” வட இந்தியர்  கேட்டார்.

“பரவாயில்ல பிடிங்க” கொடுத்து விட்டு ஜன்னலுக்கு வெளியே பார்க்க ஆரம்பித்தார். இது நடந்து இரண்டு நிமிடங்களில் வட இந்தியர் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்து விட்டது. அடிக்க வந்தவரை முறைத்து கொண்டே யாருடனோ மொபைலில் தொடர்பு கொண்டு பேசிக்கொண்டே இறங்கிவிட்டார்.

“கண்டக்டருங்க சில்லறை வச்சுக்க வேணாமா? அவன் என்ன டென்சன்ல இருந்தானோ?”

“இவருக்கு இன்ஸ்பெக்டர் தெரியும்னா அவனுக்கு யாரை எல்லாம் தெரியுமோ? யாரை கூப்பிடான்னு தெரியல. அடிக்க வந்தவரை லேசுல விட மாட்டான்”

மக்களின் பலதரப்பட கருத்துகள் பேருந்து முழுவதும் ஒலிக்க தொடங்கின.

இரண்டு ரூபாய் பிரச்சினை மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினையாகி விட்டதை யோசித்து கொண்டே பேருந்தில் இருந்து இறங்கினேன். தசாவாதாரம் கியாஸ் தியரிபடி இந்த சண்டைக்கு காரணம் யார்? யார் மேல் தவறு என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இந்திய நகரங்களில் சில நுணுக்கமான பிரச்சினைகள் இருப்பது மட்டும் தெரிந்தது

சரி இதை முழுக்க படித்து இருந்தால் நீங்களாவது சொல்லுங்கள். தவறு சில்லறை இல்லாத கண்டக்டர் மீதா? ஆரம்பத்தில் இருந்தே உரத்த குரலில் பேசிய ? சண்டையை பெரிதாக்கிய அந்த பெரியம்மா மீதா? அடிக்க வந்தவர் மீதா? இதை ஒரு விஷயம் என பதிவிட்டு கொண்டிருக்கும் என் மீதா? இல்லை எத்தனை மொக்கை பதிவிட்டாலும் வந்து படிக்கும் உங்கள் மீதா?



Wednesday, February 26, 2014

குற்றவாளிகளா ஐடி நிறுவனங்கள்?

மா மகேஸ்வரி கொலையில் கொலையாளிகளை பிடித்து விட்டதாக அறிவித்து விட்டனர். பத்திரிக்கைகள் இன்னும் இரண்டு நாளுக்கு பின் இது சம்பந்தமான செய்திகளை பெட்டி செய்தி அளவுக்கு சுருக்கி விடுவார்கள். நாமும் இப்படி ஒரு சம்பவம் நடந்ததை மறந்து விடுவோம்.

இந்த சம்பவம் பற்றி வந்த பெரும்பாலான கட்டுரைகளும், செய்திகளும்  உமா மகேஸ்வரி பணியாற்றிய நிறுவனமும் நடந்த கொலைக்கு ஒரு  காரணம் என்ற ரீதியில் எழுதி வருகின்றனர் சிலர். நிறுவனத்தில் வாகன வசதி செய்து கொடுத்து இருந்தால் குற்றம் நடந்து இருக்க வாய்ப்பில்லையாம். உண்மைதான். அலுவலக வாகனத்தில் வீடு திரும்பி இருந்தால் அந்த பெண் பாதுகாப்பாக வீடு திரும்பி இருக்கலாம். ஆனால் அந்த பெண்ணின் மரணத்திற்கு காரணம் அந்த நிறுவனம் ஊருக்கு வெளியே இருந்ததோ, அல்லது அந்த நிறுவனம் வாகனம் தராததோ மட்டும் அல்ல. உண்மையான காரணம் நமது சமூகம்தான்.

இருட்டிய பிறகு தனியாக  எந்த பெண்ணும் தெருவில் இறங்கி நடக்க கூடாது என்று சொல்வது போல இருக்கிறது இந்த சம்பவம். கிமு ஆக இருந்தால் என்ன? கிபி ஆக இருந்தால் என்ன? பெண்களின் நிலைமை இதுதான் என்று அழுத்தம் திருத்தமாக மீண்டும் ஒரு முறை பதிவு செய்து விட்டோம். இதை மாற்றும் வழி என்ன என்று சிந்திப்பதே இது போன்ற பிரச்சினைகளை நிரந்தரமாக தடுக்கும் வழி. அதை விட்டு விட்டு ஐடி நிறுவனங்களை சார்ந்த பிரச்சனையாக மட்டும் பார்ப்பது சரி இல்லை. இது ஐடி நிறுவனங்கள் தங்களை சரி செய்து கொண்டால் தேசத்தின் ஒட்டு மொத்த பெண்களுக்கும் பாதுகாப்பு கிடைத்து விடும் என கூறுவது போல் உள்ளது.


ஹிந்து பத்திரிக்கையில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார்கள். திருமணமான பெண்களுக்கு ஐடி துறையில் பணி உயர்வும், சம்பள உயர்வும் கிடைப்பது கடினமாக இருக்கிறது என்று ‘சேவ் தமிழ்ஸ்’ நடத்திய கருத்து கணிப்பில் தெரிய வந்திருப்பதாக கூறி இருக்கின்றனர்.


ஐடி துறையில் தொழிலாளர் உரிமைகள் மறுக்கப்படுகிறது என்பதில் இரு வேறு கருத்தே இல்லை. ஆனால் திருமணமான பெண்கள் தங்களுக்கு திறமை இருந்தாலும் பதவி உயர்வு மறுக்கப்படுகிறது என்பதெல்லாம் அபத்தம். உண்மையில் ஆணோ, பெண்ணோ திருமணமான பின் பொறுப்புகள் அதிகரிக்கின்றன. திருமணத்திற்கு முன்பு வேலை செய்ததை போல திருமணத்திற்கு பின் வேலை செய்ய முடிவதில்லை. குடும்ப பொறுப்புகள் வேலையில் அவர்களின் கவனத்தை குறைப்பது இயற்கையே. அதனால் ஒப்பீட்டளவில் பார்க்கும்போது அவர்களால் திருமணம் செய்யாதவர்களை போல விரைவில் பதவி உயர்வோ, ஊதிய  உயர்வோ பெற முடியவில்லை.

ஒரு உதாரணத்தை எடுத்து கொள்வோம். இரண்டு பெண்கள்  இருபத்தி இரண்டு வயதில் வேலைக்கு சேர்கின்றனர் என்று வைத்து கொள்வோம் . அவர்களில் ஒருவர்  மணம் செய்து கொண்டு இருபத்தி ஏழு வயதில் தாயாகி விடுகிறாள். குழந்தையின் உடல் நலம் காரணமாக  அடிக்கடி விடுப்பு எடுக்கிறாள்.  வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. அதே நேரம் இன்னொருத்திக்கு திருமணம் ஆகவில்லை. கடினமாக உழைக்கிறாள். அந்த வருடம் யாரோ ஒருவருக்கு மட்டுமே பதவி உயர்வு தர முடியும் என்ற சூழலில் நிர்வாகம் மணமாகாத பெண்ணுக்கு பதவி உயர்வு தருகிறது. அதுதானே நியாயம். இப்போது ஒருவேளை மணமான பெண்ணுக்கு பதவி உயர்வு கொடுத்தால், மணமாகாத பெண்ணால் தொடர்ந்து  எப்படி சிறப்பாக வேலை செய்ய முடியும்?

பின்னர் ஏன்  திறமை இருந்தாலும் பதவி உயர்வு மறுக்கப்படுவதாக கூறுகின்றனர்? அதுதான் மனித சுபாவம். உங்கள் நிறுவனம் உங்கள் திறமைக்கு ஏற்ற ஊதியமும், பதவி உயர்வும் அளிக்கிறதா என  எந்த துறையிலும் பணிபுரியும்  ஊழியர்களிடம்  கேட்டு பாருங்கள். எண்பது சதவீதம் பேர் இல்லை என்றே சொல்வார்கள். நிர்வாகம் தங்களை பயன்படுத்தி கொண்டு தங்களுக்கு நியாயமாக தர வேண்டியதை தரவில்லை என்றே சொல்வார்கள். இந்த கருத்து கணிப்பில் சொல்லியதை போல.

ஐடி நிறுவனங்கள் தர்மப்படி நடப்பதாக சொல்லவில்லை. இருந்தாலும் எதற்கெடுத்தாலும் அவர்களை மட்டுமே  குற்றம் சொல்வது சரியில்லை என்றே சொல்கிறேன். 


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...