Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

Sunday, November 15, 2015

திப்பு சுல்தான் - ஹிந்து நாளிதழின் அதீத ஆராய்ச்சி

திப்பு சுல்தான் நல்லவரா?கெட்டவரா என்பதுதான் இந்த கட்டுரையில் ஹிந்து நாளிதழின் ஆராய்ச்சி. திப்பு மாபெரும் வீரர் என்று சொல்லும் ஹிந்து நாளிதழ் மன்னர் அசோகரும் கலிங்கப் போரில் ஆயிரக்கணக்கான ஹிந்துக்களை கொன்று குவித்தார் என்று அசோகரையும் திப்புவையும் ஒப்பிடுகிறது. நல்ல வேளையாக திப்பு ஹிந்துக்களை கொன்றதை மட்டும் மறைமுகமாக  அந்த கட்டுரை ஒப்புக் கொள்கிறது.

சமீபகாலமாகவே ஊடகங்கள்  அதீதமாக ஹிந்துத்துவா எதிர்ப்பு நிலையை எடுக்கின்றன. ஹிந்துத்துவா அமைப்புகளை எதிர்க்க அவை எந்த எல்லைக்கும் செல்லத் தயங்குவதில்லை. அதற்கு ஒரு உதாரணம்தான் ஹிந்துவின் இந்த கட்டுரை. அசோகரின் காலத்தில் இஸ்லாம் மதமே தோன்றவில்லை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த தவறை கணக்கில்   எடுக்காமல் பார்த்தாலும் கட்டுரையில் கூறியுள்ளவாறு அசோகர் மதத்தை காரணமாக கொண்டு முஸ்லிம்களையும், வெளிநாட்டினரையும்  கொன்று குவிக்கவில்லை. போர் காரணமாகவே ஒரிய மக்களை கொலை செய்துள்ளார். அதிலும் போர் முடிந்த பின் அவர் மனம் மாறிய கதை யாவரும் அறிந்ததே. ஆனால் திப்பு சுல்தான்?

அவரை பற்றிய கேள்விப்பட்ட  செவி வழி செய்தி அவரின் ஆட்சிமுறைக்கு  சிறிய உதாரணம். தமிழகத்தில் தேவாங்கர் என்ற ஜாதியை சேர்ந்த மக்கள் உண்டு. தமிழகம் முழுக்க பரவி வாழும் இந்த மக்களின் பூர்வீகம் கர்நாடகா. அந்த மக்கள் தமிழ்நாட்டுக்கு வந்ததன் காரணம் பஞ்சம் பிழைக்க அல்ல. அந்த கால கட்டத்தில் திப்பு சுல்தானின் கட்டாய  மத மாற்றத்தில் இருந்து தப்ப. முஸ்லிம்களை தவறியும் கொல்லாத அசோகரின்  சகிப்புத்தன்மையையும், ஹிந்துக்களை மதம் மாற்றியும் அகதிகளாகவும் அலைய விட்ட திப்புவின் சகிப்புத்தன்மையையும் எப்படி இவர்கள் ஒப்பிடுகிறார்கள். இது போல திப்பு  துன்புறுத்திய இந்துக்கள் இன்னும் எத்தனை பேரோ? செவிவழி செய்தியை எப்படி ஆதாரமாக கொள்வது என்று கேட்டால் ஹிந்து தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளவாறு இங்கு இந்தியர்கள் தங்கள் வரலாறுகளை  முறையாக  ஆவணப்படுத்தப்படவில்லை. ஆனால் தாங்கள் அறிந்ததை தங்கள் அடுத்த தலைமுறைக்கு கடத்த தவறுவதில்லை.

ஹிந்து நாளிதழ்(கட்டுரையாளர்) அடிக்கடி திப்புவின் தேசபக்தியை வேறு சிலாகிக்கிறது. அவர் பிரிட்டிஷாரை எதிர்த்து போராடிய தேச பக்தராம். 
தனது மக்களையே கொடுமைப்படுத்திய ஒருவர், தன்னுடைய ஆட்சி அதிகாரத்தை காப்பாற்ற போராடியதை எப்படி எப்படி தேசப்பற்று என்று எடுத்துக் கொள்ள முடியும்? நல்ல வேளையாக அவரின் சுதந்திர போர் வெற்றி அடையவில்லை. ஒரு வேளை அவர் வென்றிருந்தால் அவரிடம் இருந்து சுதந்திரம் பெற இந்தியர்கள் இன்னும் கடுமையாக போராட வேண்டியதிருந்திருக்கும். 

போதாக்குறைக்கு அலா சிங் என்ற மன்னரை வேறு தனது சாட்சிக்கு அழைக்கிறது கட்டுரை. அலா சிங்கை தேசத்துரோகி என்று கூறாவிட்டாலும் அவரை தேசத் தலைவராக யாரும் கொண்டாடவில்லை. ஆனால் திப்புவை இந்தியாவின் கதாநாயகனாக முன்னிறுத்துவதுதான் பிரச்சினை. 

மோடியையும், ஹிந்துத்துத்வதையும் எதிர்ப்பதற்காக என்ன வேண்டுமானாலும் எழுதுவதா பத்திரிக்கை தர்மம்? முஸ்லீம் மன்னர்களை நாம் வேண்டுமென்றே கெட்டவர்களாக  சித்தரிக்கிறோம் என்றால் அக்பரை மட்டும் நாம் நல்லவர் என்று கூறுவது ஏன்? ஹிந்து நாளிதழ் மட்டும் இல்லாமல் பெரும்பாலான ஊடகங்களின் செயல்பாடும் ஒருதலைப்பட்சமாகவே உள்ளது. அந்த கட்டுரையாளரின் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமென்றால் தமக்கு அரைகுறையாக தெரிந்த விஷயங்களை வைத்து கொண்டு முஸ்லிம் மன்னர்களை நியாயப்படுத்த அவர்கள் எப்போதும் தயாராக இருக்கின்றனர். 


Thursday, March 19, 2015

விஜய் டிவி வழங்கும் - "பந்தை காத்துல விடுறான்"

சில ஆண்டுகளுக்கு முன் ராஜ் டிவியில்  ஒரு கிரிக்கெட் தொடரை தமிழ் வர்ணனையில் ஒளிபரப்பினார்கள். வர்ணித்தது வானொலி வர்ணனையாளர்கள். தொலைக்காட்சியில் வர்ணனை கூறுவதற்கும், வானொலியில்  வர்ணிப்பதற்கும் உள்ள வேறுபாடுகளை அறியாமல் வானொலி போலவே பந்து வீச்சாளர்  பந்தை எடுத்து கொண்டு வேகமாக  ஓடி வருகிறார் என்று கூறி கொண்டிருப்பார்கள். நல்ல நேரம்,ஒரு சில தொடர்களோடு கிரிக்கெட் ஒளிபரப்பும் வேலையை ராஜ் டிவி நிறுத்தி விட்டது. விஜய் டிவி அந்த மாதிரி எதுவும் செய்து தொலைத்து விடுவார்களோ என்ற சந்தேகமும் இருந்தது. கிரிக்கெட் நுணுக்கங்களை வானொலி வர்ணனையாளர்களால் நுணுக்கமாக வர்ணிக்க முடியாது என்று விஜய் டிவி நினைத்திருக்கலாம் அந்த எண்ணமும் சரிதான். இருந்தாலும் அதற்காக விஜய் டிவி செய்த காரியம் வானொலி வர்ணனையாளர்களே எவ்வளவோ மேல் என்று சொல்ல வைத்து விட்டது..

ஸ்ரீராம் என்று ஒருவர் இந்திய அணிக்காக கிரிக்கெட் ஆடினார் என்று எத்தனை பேருக்கு நினைவிருக்கும்? அதே போலத்தான் ஹேமங் பதானி. திறமையான வீரர்தான். ஆனால்  அவர் சர்வதேச கிரிக்கெட் ஆடியது அவர் நினைவுகளிலேயே சரியாக இருக்காது. அவர்களை எல்லாம் பிடித்து போட்டார்கள் விஜய் டிவிகாரர்கள். அந்த வீரர்களும் சந்தோசமாக பணியை ஏற்று கொண்டனர். அதன் விளைவு என்ன என்றால், தாங்கள் இந்திய அணிக்காக மோசமாக கிரிக்கெட் ஆடியபோது கூட சந்திக்காத விமர்சனத்தை இந்த வீரர்கள் சந்தித்து வருகின்றனர்.

இவர்களை குற்றம் குறை கூறும் முன் இவர்களின் சங்கடங்களையும், குழப்பங்களையும் புரிந்து கொள்ள வேண்டும். பந்தை அஸ்வின் நன்றாக ப்ளைட் செய்கிறார் என்றால் “இது என்ன ஆங்கில  வர்ணனையா?” என்று கேட்கிறார்கள். சரியென்று அவர்கள் சற்று யோசித்து அஸ்வின் பந்தை காற்றில் தூக்கி போடுகிறார் என்றால் சிரிக்கிறார்கள்.  இப்படி எல்லாம் கேட்டால் எந்த மொழியில் எப்படித்தான் அவர்கள் வர்ணனை செய்வது? ஆனால் நமது வர்ணனையாளர்கள் இதையெல்லாம் சிந்தித்து  “பேஷா ஆடுறான்” என்று சமஸ்கிருத வர்ணனை செய்ய ஆரம்பித்து விட்டனர்.

இந்தியா ஆடும் போட்டிகளில்  இவர்கள் நிலைமை  சற்று பரவாயில்லை. குட்டி அணிகள் ஆடிய போட்டிகளின் பொது சில சமயங்களில் என்ன பேசுவது என்று அவர்களுக்கே தெரிவதில்லை. வாங்கிய காசுக்கு எதையாவது பேச வேண்டும் என்று பேசுவது போல தெரிகிறது UAE  ஆடிய ஒரு போட்டியின்போது ஸ்ரீராம் பந்து வீச்சாளரை பார்த்து “இவர பார்த்தா அற்புதமான ஸ்விங் பவுலர் மாதிரி இருக்கு” என்கிறார். ரமேஷ் பதிலுக்கு “நீங்க பில்ட் அப் தர மாதிரி எதுவும் இல்ல. அவர் ஆறு ஓவர் போட்டு ஐம்பது ரன் கொடுத்தாச்சு” என்று ஸ்ரீராமின் காலை வாறுகிறார். இதெல்லாம் வர்ணனையா?

இப்போது இதை எல்லாம் பார்த்தால் கிரிக்கெட் ஆடினால் மட்டும் நேராக போய் வர்ணனை செய்து விட முடியாது  என்று தோன்றுகிறது. ஹர்ஷா போக்லே எப்போது சர்வதேச கிரிக்கெட் ஆடினார்? பேசாமல் விஜய் டிவி திவ்யதர்ஷினி, கோபிநாத்  கையில்  மைக்கை கொடுத்திருக்கலாம். கிரிக்கெட் நுணுக்கங்களை பேசுகிறார்களோ இல்லையோ மந்தமான போட்டிகளை கூட சுவாரசியமாக்கி இருப்பார்கள். ஆனாலும் தமிழில் சுவாரசியமாகவும் அதே  நேரத்தில் நுணுக்கமாகவும்  வர்ணனை செய்ய ஆட்களே இல்லையோ என்ற கேள்வி இன்னும் தொக்கி நிற்கிறது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...