Showing posts with label மதம். Show all posts
Showing posts with label மதம். Show all posts

Sunday, November 15, 2015

திப்பு சுல்தான் - ஹிந்து நாளிதழின் அதீத ஆராய்ச்சி

திப்பு சுல்தான் நல்லவரா?கெட்டவரா என்பதுதான் இந்த கட்டுரையில் ஹிந்து நாளிதழின் ஆராய்ச்சி. திப்பு மாபெரும் வீரர் என்று சொல்லும் ஹிந்து நாளிதழ் மன்னர் அசோகரும் கலிங்கப் போரில் ஆயிரக்கணக்கான ஹிந்துக்களை கொன்று குவித்தார் என்று அசோகரையும் திப்புவையும் ஒப்பிடுகிறது. நல்ல வேளையாக திப்பு ஹிந்துக்களை கொன்றதை மட்டும் மறைமுகமாக  அந்த கட்டுரை ஒப்புக் கொள்கிறது.

சமீபகாலமாகவே ஊடகங்கள்  அதீதமாக ஹிந்துத்துவா எதிர்ப்பு நிலையை எடுக்கின்றன. ஹிந்துத்துவா அமைப்புகளை எதிர்க்க அவை எந்த எல்லைக்கும் செல்லத் தயங்குவதில்லை. அதற்கு ஒரு உதாரணம்தான் ஹிந்துவின் இந்த கட்டுரை. அசோகரின் காலத்தில் இஸ்லாம் மதமே தோன்றவில்லை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த தவறை கணக்கில்   எடுக்காமல் பார்த்தாலும் கட்டுரையில் கூறியுள்ளவாறு அசோகர் மதத்தை காரணமாக கொண்டு முஸ்லிம்களையும், வெளிநாட்டினரையும்  கொன்று குவிக்கவில்லை. போர் காரணமாகவே ஒரிய மக்களை கொலை செய்துள்ளார். அதிலும் போர் முடிந்த பின் அவர் மனம் மாறிய கதை யாவரும் அறிந்ததே. ஆனால் திப்பு சுல்தான்?

அவரை பற்றிய கேள்விப்பட்ட  செவி வழி செய்தி அவரின் ஆட்சிமுறைக்கு  சிறிய உதாரணம். தமிழகத்தில் தேவாங்கர் என்ற ஜாதியை சேர்ந்த மக்கள் உண்டு. தமிழகம் முழுக்க பரவி வாழும் இந்த மக்களின் பூர்வீகம் கர்நாடகா. அந்த மக்கள் தமிழ்நாட்டுக்கு வந்ததன் காரணம் பஞ்சம் பிழைக்க அல்ல. அந்த கால கட்டத்தில் திப்பு சுல்தானின் கட்டாய  மத மாற்றத்தில் இருந்து தப்ப. முஸ்லிம்களை தவறியும் கொல்லாத அசோகரின்  சகிப்புத்தன்மையையும், ஹிந்துக்களை மதம் மாற்றியும் அகதிகளாகவும் அலைய விட்ட திப்புவின் சகிப்புத்தன்மையையும் எப்படி இவர்கள் ஒப்பிடுகிறார்கள். இது போல திப்பு  துன்புறுத்திய இந்துக்கள் இன்னும் எத்தனை பேரோ? செவிவழி செய்தியை எப்படி ஆதாரமாக கொள்வது என்று கேட்டால் ஹிந்து தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளவாறு இங்கு இந்தியர்கள் தங்கள் வரலாறுகளை  முறையாக  ஆவணப்படுத்தப்படவில்லை. ஆனால் தாங்கள் அறிந்ததை தங்கள் அடுத்த தலைமுறைக்கு கடத்த தவறுவதில்லை.

ஹிந்து நாளிதழ்(கட்டுரையாளர்) அடிக்கடி திப்புவின் தேசபக்தியை வேறு சிலாகிக்கிறது. அவர் பிரிட்டிஷாரை எதிர்த்து போராடிய தேச பக்தராம். 
தனது மக்களையே கொடுமைப்படுத்திய ஒருவர், தன்னுடைய ஆட்சி அதிகாரத்தை காப்பாற்ற போராடியதை எப்படி எப்படி தேசப்பற்று என்று எடுத்துக் கொள்ள முடியும்? நல்ல வேளையாக அவரின் சுதந்திர போர் வெற்றி அடையவில்லை. ஒரு வேளை அவர் வென்றிருந்தால் அவரிடம் இருந்து சுதந்திரம் பெற இந்தியர்கள் இன்னும் கடுமையாக போராட வேண்டியதிருந்திருக்கும். 

போதாக்குறைக்கு அலா சிங் என்ற மன்னரை வேறு தனது சாட்சிக்கு அழைக்கிறது கட்டுரை. அலா சிங்கை தேசத்துரோகி என்று கூறாவிட்டாலும் அவரை தேசத் தலைவராக யாரும் கொண்டாடவில்லை. ஆனால் திப்புவை இந்தியாவின் கதாநாயகனாக முன்னிறுத்துவதுதான் பிரச்சினை. 

மோடியையும், ஹிந்துத்துத்வதையும் எதிர்ப்பதற்காக என்ன வேண்டுமானாலும் எழுதுவதா பத்திரிக்கை தர்மம்? முஸ்லீம் மன்னர்களை நாம் வேண்டுமென்றே கெட்டவர்களாக  சித்தரிக்கிறோம் என்றால் அக்பரை மட்டும் நாம் நல்லவர் என்று கூறுவது ஏன்? ஹிந்து நாளிதழ் மட்டும் இல்லாமல் பெரும்பாலான ஊடகங்களின் செயல்பாடும் ஒருதலைப்பட்சமாகவே உள்ளது. அந்த கட்டுரையாளரின் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமென்றால் தமக்கு அரைகுறையாக தெரிந்த விஷயங்களை வைத்து கொண்டு முஸ்லிம் மன்னர்களை நியாயப்படுத்த அவர்கள் எப்போதும் தயாராக இருக்கின்றனர். 


Sunday, June 15, 2014

நான் கடவுள் தேடிய கதை

கடவுள் எதற்கு தேவையோ இல்லையோ குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லவாவது அவர் கண்டிப்பாக தேவை. பின்னே உங்கள் குழந்தை “அரிசி எப்பிடி மண்ணுல இருந்து எப்படி முளைக்குது” என்று கேட்டால் “சாமி முளைக்க வைப்பாருடா” என்ற பதிலை தவிர்த்து வேறு எதை சொல்வது. அதே போன்ற ஒரு கேள்வியை நான் கேட்ட நேரத்தில்தான் கடவுள் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். எனவே கடவுள் எனக்கு அறிமுகமான காலத்தை நினைவு தெரியாத காலம் என்று எடுத்து கொள்ளலாம். எல்லா இந்திய குழந்தைகளை போலவே தெய்வ நம்பிக்கை மனதில் விதைக்கப்பட்டது. புரியாத விஷயங்களுக்கு எல்லாம் விடையாக கடவுள் கிடைத்தார். அவர் எங்கே இருக்கிறார் என்று கேட்ட போதெல்லாம் அவர் வானத்தில் இருக்கிறார் என்று பதில் கூறிவிடுவார்கள். பெரியவர்கள் சொல்வது போல அவர் வானத்தில் இருக்கிறார் என்று நம்பி விட்டேன்.

அதிக ஆசைகள் இல்லாத பால பருவத்தை தாண்டி, ஆரம்ப பள்ளி காலத்தில் கடவுள் நமக்கு கேட்டதெல்லாம் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் அவரிடம் நிறைய கோரிக்கைகளை வைக்க ஆரம்பித்து விட்டேன். கோரிக்கைகள் என்றால் பெரிய கோரிக்கைகள் எல்லாம் கிடையாது. நானும்  ராம.நாராயணன் படத்தில் வரும் குழந்தைகள் போல தெய்வ சக்தியுடன் அற்புதங்களை புரிய வேண்டும் போன்ற எளிய கோரிக்கைகள் மட்டுமே. ஆனால் என்னதான் கடவுளை வேண்டினாலும் அவர் எனக்கு தரிசனம் தரவில்லை. அற்புத சக்திகளையும் தரவில்லை. என்னுடைய பக்தியில் ஏதோ குறை இருக்கிறது போலும் என்று சந்தேகம் கொள்ள தொடங்கினேன். வகுப்பறையில் பாடம் நடத்தி கொண்டிருக்கும்போது நான் கடவுளை சிந்தித்து கொண்டிருப்பேன். ஒரு நாள் பாட புத்தகத்தில்  சூரிய குடும்பத்தை படமாக பார்த்தபோது கடவுள் இருக்கிற இடத்தை இதில் குறிக்காமல் விட்டு விட்டார்களே என்று கோபம் வந்து அதன் பின் படிப்பிலேயே ஆர்வம் குறைந்து விட்டது.

இப்படி பக்தி மார்க்கத்தில் தீவிரமாக இருந்த காலத்தில்தான் அந்த வாசகங்கள் முதல்முறையாக  என்னுடைய கண்ணில் பட்டன. ‘கடவுளை நம்பியவன் காட்டுமிராண்டி; கடவுளை பரப்பியவன் ஏமாற்றுக்காரன்’ என்ற ரீதியில் இருக்கும் அந்த வாசகங்கள். வாசகங்களுக்கு கீழே பெரியார் என்று எழுதியிருந்தது. கடவுளை கூட திட்டலாமா என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இதை பற்றி பெரியவர்களிடம் கேட்க முடியாது. கூட படித்த நண்பனிடம் ‘கடவுளை கும்பிடாம இருக்காங்களே? கடவுள் அவங்களை சந்தோசமா வச்சிருக்க மாட்டார்தானே?” என்று கேட்டேன். அவனோ ‘கமலஹாசன் கூட கடவுளை கும்பிட மாட்டாராம். அவர் கிட்ட பணம் இல்லையா என்ன? எல்லா நடிகைகளுக்கும் அவரைத்தான் பிடிக்கும் தெரியுமா?” என்றான். ‘அதுதான் அவர் படம் எல்லாம் ஓடாம போகுதா? ரஜினி மாதிரி சாமி கும்பிட்டால்ல படம் நல்லா ஓடும்” என்றேன். கடவுளை விட்டு கொடுக்காமல்.

இப்படி கடவுள் மேல் மிகுந்த பயபக்தியுடன் மேல்நிலை பள்ளியில் அடி எடுத்து வைத்தேன். வழக்கப்படி கடவுளிடம் வைத்த கோரிக்கைகளுக்கும் அளவில்லை. ஆனால் காமிக்ஸ் புத்தகம் வேண்டும், நிறைய மார்க் எடுக்க வேண்டும் என்று இப்போது கோரிக்கைகள் சிறிது பகுத்தறிவுடன் மாறி விட்டிருந்தன. சில நேரங்களில் கோரிக்கைகள்  நிறைவேற்றப்பட்டும் விட்டன. ‘கடவுள் இருக்காரு குமாரு’ என்று அப்போதெல்லாம் கடவுளுக்கு நன்றி செலுத்துவேன். சில நேரங்களில் கோரிக்கைகள் தோல்வி அடையும்போது கடவுள் மேல் லேசாக சந்தேகம் எழும். இப்படியெல்லாம் யோசிக்க கூடாது. அதெல்லாம் தப்பு என்று அந்த எண்ணங்களை வளர விடாமல் பார்த்து கொள்வேன்.

கடவுளும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்த நேரத்தில்தான் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் வந்தது. சில மாதங்களுக்கு பின் தேர்வு முடிவுகளும் வந்தது. மதிப்பெண்களை பார்த்ததும் எனக்கு பேரதிர்ச்சி. வழக்கமாக பள்ளி தேர்வுகளில் பெரும் மதிப்பெண்களை கூட பொது தேர்வில் எடுக்கவில்லை. ‘கடவுள் நமக்கு இப்படி செஞ்சுட்டாரே. இனிமே அவர் கூட பேச்சு வார்த்தை வச்சுக்க கூடாது’ என்று முடிவு செய்தேன். கவனியுங்கள். இப்போதும் அவர் மேல் முழுவதுமாக  நம்பிக்கை இழக்கவில்லை. என்னுடைய நோக்கம் கடவுளை குற்ற உணர்ச்சியில் தள்ளி அதன் மூலம் பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்களை பெறுவது.

அவ்வப்போது கடவுளை வணங்குவது  என்ற ரீதியில் அடுத்து வந்த நாட்கள் ஓடின. பனிரெண்டாம் வகுப்பில் வாய்த்த ஆங்கில ஆசிரியர் ஒரு ஆன்மீகவாதி. ‘பாபா’ படம் ஓடிய தியேட்டரில் அவரை பார்த்ததை சொன்னதும் படத்தில்  ஆன்மீகம் இருக்கிறது என்று சொன்னதாலேயே சென்றேன் என்றார். ஆனால் ஆன்மீகத்தை பற்றி படத்தில் சரியாக எதுவுமே சொல்லவில்லை என்றார். ‘எல்லாம் கடவுள்தான் என்று சொன்னவர்கள் அதை சரியாக விளக்கவில்லை’  என்றவர் பின்னர் ஒரு பென்சிலை கையில் எடுத்து கொண்டு ‘இந்த பென்சில் இங்க இருக்குதுன்னா அதுக்கு இடம் கொடுக்கிறது ஸ்பேஸ் அதாவது வெற்றிடம். எல்லா இடத்திலும் இருக்கிற வெற்றிடம்தான் கடவுள்’ என்றார். அவர் சொன்ன கருத்தை விட அவர் இந்து பெயரில் வாழும் முஸ்லீமோ என்றுதான் சிந்தித்தேன். இருந்தாலும் அவர் கருத்து மனதில் ஒரு சிறிய தூண்டுதலை ஏற்படுத்தியது. இடைக்காலத்தில் பெற்ற  அறிவியல் அறிவு  கடவுள் வானத்தில் இல்லை என்றால் வேறு எங்கே இருக்கிறார் என்று கேள்வி கேட்க தொடங்கியிருந்தது.

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மிகப்  பெரிய சந்தோசம் தரவில்லை என்றாலும் அதிக அதிர்ச்சியும் தரவில்லை. ஒரு வேளை நாம் படித்ததால்தான் மதிப்பெண் பெற்றோமா? இல்லை கடவுள்தான் மதிப்பெண் பெற வைத்தாரா என்ற சந்தேகம் மீண்டும் தலை தூக்கியது.

பின்னர் தமிழனில் தலை எழுத்துக்கு விதிவிலக்காக மாறாமல் பொறியியல் கல்லூரியில் அடி எடுத்து வைத்தேன். கடவுள் பற்றி முன்பிருந்த எண்ணங்கள்  மெதுவாக உடைய ஆரம்பித்த தருணம். அந்த நேரத்தில்தான் கடவுளை பற்றி முற்றிலும் சந்தேகம் கொள்ள வைக்கும் ஒரு சம்பவம் நடந்தது. எனக்கு அந்த சம்பவத்தில் நேரடி தொடர்பு இல்லையென்றாலும் கடவுளை பற்றி நிறைய யோசிக்க வைத்தது அந்த சம்பவம். அது கும்பகோணம் தீ விபத்து.


 தொடரும் 

விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன 


Monday, April 7, 2014

பிரபஞ்சத் தேடல்

“நீங்கள் அந்த கிரகத்தில் இறங்கி விட்டீர்களா?” பூமியிலிருந்து நீண்ட இடைவெளிக்கு பின் வந்த அந்த தகவல் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. நான் எதிர் பார்த்தது போல் பூமியுடன்   தொடர்பு துண்டிக்கப்படவில்லை.

“இன்னும் சில வினாடிகளில் இறங்கி விடுவோம்  சார்” குரலில் உற்சாகத்தை ஏற்றி சொன்னேன்.

“நல்லது. நீங்கள் செய்யப்போகும் காரியம்  மிகப் பெரியது. இதுவரை பிரபஞ்சத்தில் யாருமே செய்யாதது. மிகப் பெரிய பொருட்செலவில் இதை செயல்படுத்துகிறோம்  என்பதை உணர்ந்து கவனமாக செயல்படுங்கள்.”

“உத்தரவு சார்.”

“நியாபகம் வைத்து கொள்ளுங்கள். அதை கண்டறிய  வேண்டுமானால் நீங்கள் நம்முடைய விசேச கண்ணாடி அணிந்து கொள்ள வேண்டும்.”

“நீங்கள் அதை பார்த்து விட்டீர்கள்தானே?”

“பார்த்து விட்டோம்”

“நேரில் பார்க்க எப்படி இருக்கிறது அது?”

“வர்ணிக்க தெரியவில்லை. ஒளி போல தெரிகிறது. கருப்பா, வெள்ளையா? உயரமா, குட்டையா? சொல்லத் தெரியவில்லை. எதையுமே  வர்ணிக்கத்  தெரியவில்லை.”

“ஆனால்  அது தெரிகிறதுதானே?”

“ஆமாம் சார்”

“அப்போது உன் குழுவிற்கு ஆணை பிறப்பிக்கலாம்”

“உத்தரவு”

சொல்லி விட்டு ஏன் அணியினருக்கு கட்டளைகளை அளிக்க தொடங்கினேன்

“எல்லாரும் தயாராகுங்கள். அதை பிடித்த மறு நிமிடம் நம் விண்கலத்திற்குள் கொண்டு வந்து விட வேண்டும். நினைவில் கொள்ளுங்கள். அதன் பதில் தாக்குதல் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். எச்சரிக்கை.”

நான் கட்டளைகளை அளிக்கும் முன்னரே என்னுடைய அணியினர் தயார் நிலையில் இருந்தனர். முன்னர் வகுத்து இருந்த திட்டப்படி அதை நோக்கி முன்னேற தொடங்கினோம். அது நாங்கள் வருவதை அது கண்டுகொண்டதாகவே தெரியவில்லை

நான் என் கையில் இருந்த அந்த கதிர்வீச்சு துப்பாக்கியை தயாராக வைத்து கொண்டேன். இன்னும் சில அடிகளில் அதன் மேல் பிரயோகித்து விடலாம். அது இதற்கு கட்டுப்படுமா? கோபத்தில் எங்களையும் பூமியையும் அழித்து விடுமா? மனதில் நின்ற கேள்விகளை  தவிர்த்து வேலையில் கவனம் செலுத்த தொடங்கினேன்.

“கேப்டன்! பிரயோகித்து விடுங்கள் கேப்டன்! நாங்கள் எங்கள்  ஆயுதங்களை தயாராகவே வைத்துள்ளோம். ஏதேனும் சிக்கலென்றால் பார்த்து கொள்கிறோம்” என்னுடைய டெபுடி எனக்கு ஊக்கம் அளித்தான்.

“இதே பிரயோகித்து விடலாம்”

தயக்கத்துடன் என் துப்பாக்கியில் மாயக்கதிர் உருவாக வேண்டிய ஆரத்தை குறிப்பிட்டு ட்ரிக்கரை இழுத்தேன். எதிர்பார்த்தது போலவே கச்சிதமாக  அந்த மாய உருவத்தை எங்கள் கதிர்வீச்சு சிறை பிடித்தது. அந்த துப்பாக்கியுடன் இணைக்கப்பட்டு இருந்த  எங்கள் கம்ப்யூட்டர்கள் அந்த மாய வட்டத்தை அந்த உருவத்துடன் விண்கலத்தை நோக்கி இழுக்கத் தொடங்கின. சில நொடிகள்தான். அந்த உருவம் எங்கள் விண்கலத்தில் தனியாக வடிவமைக்கப்பட்ட அறையில் சிறைபிடிக்கப்பட்டது. நாங்கள் எதிர்பார்த்தது போலவே அதை பிடித்து விட்டோம்.


“யாஹ்ஹூ” எங்கள் அணியினர் உற்சாக கூக்குரல் எழுப்ப தொடங்கினர்.

“கேப்டன்! எங்களுக்கு ஆச்சரியமாக உள்ளது. இத்தனை சுலபமாக சாதித்து விட்டோம். அது துளி எதிர்ப்பு கூட காட்டவில்லையே?”

“எல்லாம் கடவுளின் கருணை.” என்னை அறியாமல் நான் சொன்ன பதிலை கேட்டு எங்கள் அணியினர் சத்தமாக சிரிக்கத் தொடங்கினர்
.
“என்ன கேப்டன் நீங்கள்? பிரபஞ்சத்தில் கடவுளையே தேடி கண்டுபிடித்து விட்டோம்; சிறையும் பிடித்து விட்டோம். இன்னமும் கடவுளின் கருணை என்கிறீர்களே?”

“உண்மைதான். ஆனால் இது என்னுடைய பழக்கம். ஆனால் நண்பர்களே. நான் இதை பூமிக்கு கொண்டு சென்று சேர்க்கும்வரை நம்முடைய மிசன் முடியவில்லை. பயணத்திற்கு தயாராகுங்கள்.”

சில நிமிடங்களில் பூமியை நோக்கி விண்கலத்தை செலுத்த தொடங்கினோம்.

“ஆரே!” என் பெயரை சொல்லி யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டு எழுந்தேன்.

விண்கலத்தில்  எல்லாரும் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தனர். சத்தம் எங்கே இருந்து வந்தது. அதுவும் ஏன் பெயரை சொல்லி என்னை அழைக்கும் தைரியம் யாருக்கு வந்தது. ஒரு வேளை கடவுள்தான் பேசுகிறாரோ?

“ஆமாம்! நீ நினைப்பது சரி. கடவுள்தான் பேசுகிறேன்”

“நினைத்தேன். என்ன வேண்டும் சொல்லுங்கள்?”

“நான் உன்னுடன் பேசலாமா?”

“விதிப்படி நான் உங்களிடம் கேள்விகள் கேட்கக்  கூடாது. ஆனால் உங்களுக்கு கேள்வி கேட்க  உரிமை உண்டு. ஆனால் எங்களிடம் இருந்து விடுதலை மட்டும் பெற்று விடலாம் என்று நினைக்காதீர்கள்”

“நான் இருக்கும் இடத்தை எப்படி கண்டுபிடித்தீர்கள்?”

“அதை விளக்குவது எளிது அல்ல. பல கோடிகள் செலவு செய்து பிரபஞ்சம் முழுவதும்  அலசி உங்கள் இருப்பிடத்தை கண்டுபிடித்தோம்."

“என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்?”

“பூமிக்கு”

“அங்கே என்னை கொண்டு சென்று என்ன செய்யப் போகிறீர்கள்”

“உங்களை ஆராய்ச்சி செய்யப்போகிறோம். உங்களிடமிருந்து கடவுள் கூறு என்ன என்று ஆராய்ந்து மனிதர்களை கடவுளாக்க போகிறோம்.”

“நல்லது. அதன் பின்”

“அதன் பின் எல்லாரும் கடவுள். யாருக்கும் மரணமில்லை. ஆளுக்கு ஒரு பிரபஞ்சம் படைப்பார்கள். தனியாக ஒரு சொர்க்கம் படைத்தது அதில் வாழ்வார்கள். வாழ்க்கையின் ரகசியம் அனைத்தும் உங்களை கொண்டு அறிவோம். கவலையில்லா வாழ்வு வாழ்வோம்”

“என்னை பூமிக்கு கொண்டு சென்றால் என்ன ஆகும் என்று யோசித்தாயா? உங்கள் பூமியில் உள்ள அத்தனை மதத்தினரும் என்னை சொந்தம் கொண்டாடுவார்கள். மத மோதல்கள் அதிகமாகும். நாத்திகர்கள் நான் கடவுளே இல்லை என்பார்கள். என்ன செய்வீர்கள்?”

“அது  எங்கள் கவலை. உங்களுக்கு எதற்கு? மேலும் நீங்கள் பூமிக்கு சென்ற பின் மக்கள் உண்மையில்  மதங்களையே மறந்து விடுவார்கள்”

“மனிதா! நான் சொல்வதை கேள். நீ  என்னை பூமிக்கு கொண்டு சென்றால் பிரச்சினைகள்தான் அதிகமாகும்.”

“நான் இதை பற்றி எல்லாம் யோசிக்கத் தேவையில்லை. என்னுடைய பணி உங்களை பூமிக்கு கொண்டு செல்வது.”

கடவுளிடமிருந்து பதில் இல்லை. சில நொடி மௌனத்திற்கு பின் கடவுளிடம் கேட்டேன். 

“கடவுளே! என்னிடம் மட்டும் சொல்லுங்கள். எங்கள் மதத்தினர் வழிபாடுதானே உங்களை அடைய சரியான வழி?”

“எது சரியான வழி என்று இப்போது அறிந்து கொள்வாய்”

சொல்லிவிட்டு கடவுள் இடியென சிரித்தார்.  எங்கள் விண்கலம் கட்டுப்பாடு இழந்து  ஒரு பெரும் குலுங்கலுடன் திசை மாறியது. மிகப்பெரிய விண்கல் ஒன்று எங்கள் விண்கலத்தை  நோக்கி வந்து கொண்டிருப்பதை என்னால் விண்கலத்தின்  ஜன்னல் வழியே பார்க்க முடிந்தது.


Saturday, March 16, 2013

மதமாற்றம் தேசிய அபாயமா ?

 தன் மதத்தின் மேல் உண்மையான நம்பிக்கை கொண்ட எவனும் தன் மதத்தை விட்டு கொடுக்க மாட்டான். தனது  மதம் அழிந்து போகுமோ என்ற பயத்தில் அதை மற்றவர் மீது திணிக்கவும் மாட்டான். 



உலகின் மிக பெரிய மல்டி-லெவல் மார்கெடிங் நிறுவனம் எது? ஆம்வே என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. ஆம்வேவை விட பெரிய பழமையான ஒரு   அமைப்பு உள்ளது. அதுதான் கிருஸ்தவ மதம். நான் உன்னை மதம் மாற்றுவேன், நீ இரண்டு பேரை மதம் மாற்று. இறுதியில் உலகம் முழுதும் நாம் மட்டுமே இருப்போம் என்ற அடிப்படையில் உலகம் முழுவதும் பரவி செழித்து இருக்கிறது.  

ஆனால் இந்தியாவை  பொறுத்தவரை பல ஆண்டுகளாய் முயன்றும் கிருஸ்தத்தால் பெரிய வெற்றி ஏதும் பெற இயலவில்லை. கடலோர மக்களை மதம் மாற்றிய அளவு மற்ற மக்களை மதம் மாற்ற அவர்களால் இயலவில்லை. வெளியே இருந்து வரும் ஆன்மிக கருத்துகளை விட பல மடங்கு ஆழ்ந்த கருத்துகளை இந்தியா தன்னிடத்தே கொண்டிருப்பதும் இதற்கு காரணம். இருந்த போதும் மத மாற்ற முயற்சிகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. அந்த முயற்சிகளில் கையாளப்படும் முறைகளில் சில கீழே.

முறை 1:
 
ஆரம்ப காலத்தில் ஆன்மிக கருத்துகளை பரப்பி வந்தவர்கள். பின் ஆன்மிக கருத்துகளை கொண்டு மக்களை கவர முடியாது என உணர்ந்தனர். அப்போது அவர்கள் எடுத்த ஆயுதம் ஜாதி. இந்து மதத்தில் ஜாதியம் இருப்பதாக கூறியும் அதில் இருந்து விடுபட  வேண்டுமானால் கிருஸ்துவமே வழி என்று கூறியும் மக்களை ஈர்த்தனர். ஆனால் நடந்ததோ வேறு. மதம் மாறியவர்கள் ஜாதியை விட தயாராக இல்லை. கிருஸ்தவ நாடார், கிருஸ்தவ முதலியார், கிருஸ்தவ செட்டியார் என்று ஜாதியை கிருஸ்தத்தோடு சேர்த்தனர். மதத்தை விட்டாலும் மக்கள் ஜாதியை விட மாட்டார்கள் என்று அனைவருக்கும் புரிய ஆரம்பித்தது.

 முறை 2:

மதம் மாற்றுபவர்களின் மற்றொரு ஆயுதம்  "நிம்மதி ". மனிதனுக்கு ஏன் கடவுள் தேவை? பெரும்பாலான மனிதர்கள் கடவுளை நாடுவது மோட்சம் பெறவோ ஞானம் அடையவோ அல்ல. அவனுக்கு தேவை நிம்மதி, ஆறுதல் மற்றும் வாழ்க்கையில் வெற்றி. வாழ்கையில் நிம்மதி இல்லாத ஒருவனிடம் சென்று நீ தேவனிடம் நிம்மதி காண்பாய் என்று கூறினால் அவன் அதை முயற்சி செய்ய எண்ணுவான். அவனை மதம் மாற்றுவது எளிது. இப்படிபட்டவனுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி  உளவியல் ரீதியாக அவனை வசியம் செய்தனர். தங்கள் முயற்சியில் பெரும்  வெற்றியும் கண்டனர். ஆனால் இந்த முறையில் பிரச்சினை என்னவெனில் பெரும்பாலும் வயதானவர்களும் , ஆதரவற்ற பெண்களுமே இந்த முறையில் மதம் மாறினார். எனவே அவர்கள் காலத்திற்கு பின் மதத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல முடியவில்லை. மேலும் மதம் மாறிய பின்னரும் அவர்களை அதிகம் சிந்திக்க விடாமல் தொடர்ந்து  மூளை சலவை செய்ய வேண்டியது  அவசியம்.

 முறை 3:

இவர்களின் மற்றொரு முறை பொருளாதார ரீதியில்  உதவி செய்து மதம் மாற்றுவது. ஆனால் இப்படி மதம் மாறுபவர்களின் தேவ விசுவாசம் கேள்விகுறி. எனவே இந்த முறையும் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. மதம் மாறுபவர்கள் மீண்டும் மதத்தை கை விட வாய்ப்பு அதிகம்.

புதிய முறை:

 இப்படி எந்த முறையும்  இந்தியாவில் உதவவில்லை என்றதும் அவர்கள் ஒரு புதிய முறையை கையில் எடுத்துள்ளனர்.   இந்த முறையில்  அவர்கள் கிருஸ்துவத்திற்கு இந்திய முலாம் பூச முயற்சி செய்கின்றனர். காவி உடை அணிந்து மத மாற்றம் செய்வது, காவடி எடுத்து சர்ச்சுக்கு போவது, திருவள்ளுவர் ஒரு கிறிஸ்தவர் என பிரசாரம் செய்வது என்பது அனைத்தும் இந்த முறையே. இதன் மூலம் கிறிஸ்தவத்தை மக்களிடம் எளிதில் கொண்டு சேர்க்கலாம் என்று கருதுகின்றனர். ஆனால் இந்த முறையில் ஆபத்து என்னவெனில் இந்து மதம் எதையும் தம்முள் கரைத்து கொள்ள கூடியது. காலப் போக்கில் இந்து புராணங்களில் ஏசுநாதர் சேர்க்கப் பட்டு கோவில்களில் அவருக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட கூடிய அபாயம் உண்டு. மெழுகுவர்த்திக்கு பதில் தீபம் ஏற்றி அவரை வழிபடபோகும் காலம் வரலாம்.

மதமாற்றம்  தேசிய அபாயமா ?

 பல மொழி, இன, கலாசார நம்பிக்கைகள் கொண்ட இந்த நாட்டில் மக்களை ஒருங்கிணைப்பது மதம் மட்டுமே. இந்துக்களின் எண்ணிக்கை குறைவது நிச்சயம் தேசத்திற்கு ஆபத்தே. மக்களிடையே விழிப்புணர்வு இல்லாததே பெரும்பாலான மத மாற்ற முயற்சிகள் வெற்றி பெற காரணம். இந்த மத மாற்ற முயற்சிகள் எந்த காலத்திலும் முழு  வெற்றி அடைய கூடாது என  எல்லாம் வல்ல கர்த்தரை  வேண்டி கொள்கிறேன்.

விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன. எனக்கு எந்த மதத்தின் மீதும் வெறுப்பு இல்லை. மத மாற்றம் செய்யும் நோக்கில் சிலர் என்னை அணுகியுள்ளனர் . அவர்கள் கூறிய கருத்துகளே இந்த பதிவுக்கு காரணம். 


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...