Showing posts with label கிரிக்கெட். Show all posts
Showing posts with label கிரிக்கெட். Show all posts

Thursday, March 19, 2015

விஜய் டிவி வழங்கும் - "பந்தை காத்துல விடுறான்"

சில ஆண்டுகளுக்கு முன் ராஜ் டிவியில்  ஒரு கிரிக்கெட் தொடரை தமிழ் வர்ணனையில் ஒளிபரப்பினார்கள். வர்ணித்தது வானொலி வர்ணனையாளர்கள். தொலைக்காட்சியில் வர்ணனை கூறுவதற்கும், வானொலியில்  வர்ணிப்பதற்கும் உள்ள வேறுபாடுகளை அறியாமல் வானொலி போலவே பந்து வீச்சாளர்  பந்தை எடுத்து கொண்டு வேகமாக  ஓடி வருகிறார் என்று கூறி கொண்டிருப்பார்கள். நல்ல நேரம்,ஒரு சில தொடர்களோடு கிரிக்கெட் ஒளிபரப்பும் வேலையை ராஜ் டிவி நிறுத்தி விட்டது. விஜய் டிவி அந்த மாதிரி எதுவும் செய்து தொலைத்து விடுவார்களோ என்ற சந்தேகமும் இருந்தது. கிரிக்கெட் நுணுக்கங்களை வானொலி வர்ணனையாளர்களால் நுணுக்கமாக வர்ணிக்க முடியாது என்று விஜய் டிவி நினைத்திருக்கலாம் அந்த எண்ணமும் சரிதான். இருந்தாலும் அதற்காக விஜய் டிவி செய்த காரியம் வானொலி வர்ணனையாளர்களே எவ்வளவோ மேல் என்று சொல்ல வைத்து விட்டது..

ஸ்ரீராம் என்று ஒருவர் இந்திய அணிக்காக கிரிக்கெட் ஆடினார் என்று எத்தனை பேருக்கு நினைவிருக்கும்? அதே போலத்தான் ஹேமங் பதானி. திறமையான வீரர்தான். ஆனால்  அவர் சர்வதேச கிரிக்கெட் ஆடியது அவர் நினைவுகளிலேயே சரியாக இருக்காது. அவர்களை எல்லாம் பிடித்து போட்டார்கள் விஜய் டிவிகாரர்கள். அந்த வீரர்களும் சந்தோசமாக பணியை ஏற்று கொண்டனர். அதன் விளைவு என்ன என்றால், தாங்கள் இந்திய அணிக்காக மோசமாக கிரிக்கெட் ஆடியபோது கூட சந்திக்காத விமர்சனத்தை இந்த வீரர்கள் சந்தித்து வருகின்றனர்.

இவர்களை குற்றம் குறை கூறும் முன் இவர்களின் சங்கடங்களையும், குழப்பங்களையும் புரிந்து கொள்ள வேண்டும். பந்தை அஸ்வின் நன்றாக ப்ளைட் செய்கிறார் என்றால் “இது என்ன ஆங்கில  வர்ணனையா?” என்று கேட்கிறார்கள். சரியென்று அவர்கள் சற்று யோசித்து அஸ்வின் பந்தை காற்றில் தூக்கி போடுகிறார் என்றால் சிரிக்கிறார்கள்.  இப்படி எல்லாம் கேட்டால் எந்த மொழியில் எப்படித்தான் அவர்கள் வர்ணனை செய்வது? ஆனால் நமது வர்ணனையாளர்கள் இதையெல்லாம் சிந்தித்து  “பேஷா ஆடுறான்” என்று சமஸ்கிருத வர்ணனை செய்ய ஆரம்பித்து விட்டனர்.

இந்தியா ஆடும் போட்டிகளில்  இவர்கள் நிலைமை  சற்று பரவாயில்லை. குட்டி அணிகள் ஆடிய போட்டிகளின் பொது சில சமயங்களில் என்ன பேசுவது என்று அவர்களுக்கே தெரிவதில்லை. வாங்கிய காசுக்கு எதையாவது பேச வேண்டும் என்று பேசுவது போல தெரிகிறது UAE  ஆடிய ஒரு போட்டியின்போது ஸ்ரீராம் பந்து வீச்சாளரை பார்த்து “இவர பார்த்தா அற்புதமான ஸ்விங் பவுலர் மாதிரி இருக்கு” என்கிறார். ரமேஷ் பதிலுக்கு “நீங்க பில்ட் அப் தர மாதிரி எதுவும் இல்ல. அவர் ஆறு ஓவர் போட்டு ஐம்பது ரன் கொடுத்தாச்சு” என்று ஸ்ரீராமின் காலை வாறுகிறார். இதெல்லாம் வர்ணனையா?

இப்போது இதை எல்லாம் பார்த்தால் கிரிக்கெட் ஆடினால் மட்டும் நேராக போய் வர்ணனை செய்து விட முடியாது  என்று தோன்றுகிறது. ஹர்ஷா போக்லே எப்போது சர்வதேச கிரிக்கெட் ஆடினார்? பேசாமல் விஜய் டிவி திவ்யதர்ஷினி, கோபிநாத்  கையில்  மைக்கை கொடுத்திருக்கலாம். கிரிக்கெட் நுணுக்கங்களை பேசுகிறார்களோ இல்லையோ மந்தமான போட்டிகளை கூட சுவாரசியமாக்கி இருப்பார்கள். ஆனாலும் தமிழில் சுவாரசியமாகவும் அதே  நேரத்தில் நுணுக்கமாகவும்  வர்ணனை செய்ய ஆட்களே இல்லையோ என்ற கேள்வி இன்னும் தொக்கி நிற்கிறது.

Wednesday, February 4, 2015

உலகக்கோப்பை இந்திய அணி - ஒரு பார்வை

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள்  நெருங்கி விட்டது. இந்த முறை இந்திய அணி மீது பெரிய எதிர்பார்ப்பு ஏதும் இல்லை. லீக் சுற்றை தாண்டி முன்னேறினாலே பெரிய சாதனை என்ற அளவிலேயே அணியின் சமீபத்திய செயல்பாடுகள் அமைந்து விட்டது. அதே நேரத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சவுத் ஆப்ரிக்க அணிகள் நல்ல பார்மில்  உள்ளன. இந்திய அணியோ  பேட்டிங்கில் பலவீனமாகவும், பந்து வீச்சில் மிக  பலவீனமாகவும் உள்ளது.

இந்திய அணியின் வீரர்களை பற்றி பார்க்கலாம். முதலில் சிகர் தவான். நீ எப்படி வேண்டுமானாலும் பந்து வீசிக் கொள் , நான் அவுட் ஆகி காட்டுகிறேன் பார் என்ற ரீதியில் ஆடிக் கொண்டிருக்கிறார். சமீப காலங்களில் ஒரே மாதிரி ஆட்டம் இழப்பது இவர் மேலான  நம்பிக்கையை மேலும் குறைக்கிறது.

அடுத்தவர் ரஹானே. டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடினாலும் ஒரு நாள் போட்டிகளில் இவர் செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாக இல்லை. இதுவரை ஒரு நாள் போட்டிகளில் மிகப் பெரிய ஸ்கோர் எதுவும் எடுத்தது இல்லை. துவக்க ஓவர்களில் எதிரணியின் பந்து வீச்சை ஓரளவு சமாளித்தாலும், ரன்களை உயர்த்த முயலும்போது அவுட்டாகி விடுகிறார். இவரிடம் அதிகமாக எதிர்பார்க்க முடியாது.

கோலியை பற்றி கூற வேண்டுமானால் சமீபத்திய முத்தரப்பு தொடரில் சிறப்பாக செயல்படவில்லை என்றாலும் அதிலிருந்து விரைவாக மீண்டு வந்து ரன் குவிப்பார் என்று நம்பலாம். அவரின் திறமை அப்படிப்பட்டது.

ரோஹித் ஷர்மா ஒரு கணிக்க முடியாத வீரர். எப்போது எப்படி ஆடுவார் என்று கணிக்க முடியாது.  அவருடைய அதிர்ஷ்ட தினத்தில் அணியை தனியாளாக வெற்றி பெற செய்யக் கூடியவர்.

அம்பதி ராயுடு அதிக சர்வதேச போட்டிகளில் ஆடிய அனுபவம் இல்லாதவர். நன்றாக ஆடக் கூடியவர்தான். இருந்தபோதும் IPL போட்டிகளில் கவனித்தவரை இவர் எளிதில் பொறுமை இழக்க கூடியவர். உலகக்கோப்பையின் பதட்டமான கணங்களை எப்படி கையாளப் போகிறார் என்பது கேள்விக்குறி.

சுரேஷ் ரெய்னா முத்தரப்பு தொடரில் சாதிக்க தவறினாலும் தனது தவறுகளை உணர்ந்து விரைவில்  சரி செய்து கொண்டு விடுவார். உலகக்கோப்பையில் நன்றாக ஆடுவார் என்றே நம்பலாம்.

ஒரு நாள் போட்டிகளில் தோனியின் பேட்டிங் பற்றி அதிகம் பேசத் தேவையில்லை. இவர் மோசமான பார்மில் இருந்த நாட்கள் மிகக் குறைவு. இவரின் கேப்டன்ஷிப்பும் அணிக்கு மிகப் பெரிய பலம்.

ஜடேஜா நன்றாக பந்து வீசி எதிரணியை திணற செய்வார், ஆனால் சுழலுக்கு சாதகமான பிட்சுகளில் மட்டும். ஆஸ்திரேலியாவில் இவரின் பந்து வீச்சு எதிரணிக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஆஸ்திரேலியாவில்  பேட்டிங் எடுபடுவதும் சந்தேகம்தான்.

ஸ்டூவர்ட் பின்னியின் தேர்வு மிகவும் சர்ச்சை கிளப்பிய ஒன்று. ரோஜர் பின்னியின் மகன் என்பதால் வாய்ப்பு பெற்றார் என்றெல்லாம் பேசினார்கள். ஆனால் எனக்கென்னவோ  தோனி போட்டியில் ஆட வாய்ப்பு கொடுக்கும் பட்சத்தில் இவர் நன்றாகவே ஆடுவார் என்றே தோன்றுகிறது. பந்து ஸ்விங் ஆகும் மைதானங்களில் இவரை சமாளிப்பது கடினம். பேட்டிங்கிலும் விரைவாக இருபது, முப்பது ரன்களை சேர்த்து விடுவார்.

அக்சர் படேலை சுழல் பந்து வீச்சாளர் என்று கூற முடியாது. இருந்தபோதும் விரைவாக நேர்கோட்டில்  பந்து வீசி ரன்களை கட்டுப்படுத்தி விடுவார். ஆஸ்திரேலிய பிட்சுகளில், இவரின் உயரம் பந்துகளை அதிக பௌன்ஸ்  செய்ய உதவும். சுமாராக பேட்டிங் செய்வது கூடுதல் பலம்.

அஷ்வின் பந்து வீச்சில் ஏமாற்ற மாட்டார் என்று நம்புவோம். இருந்தபோதும் ஒரு நாள் போட்டிகளின் புதிய விதிகள் சுழல் பந்து வீச்சாளர்களுக்கு சிரமம் ஏற்படுத்தக்கூடியவை.

புவனேஸ்வர் குமார் வேகப்பந்து இந்திய வேகப்பந்து  வீச்சில் ஒரே நம்பிக்கை. மற்ற பந்து வீச்சாளர்களுடன் ஒப்பிடுகையில் இவரை நம்பலாம். விக்கெட்டுகள் வீழ்த்த இயலாவிட்டாலும் ரன்களை கட்டுப்படுத்துவார்.

இஷாந்த் ஷர்மாவை பற்றி என்ன சொல்வது? ரிக்கி பாண்டிங் உச்சத்தில் இருக்கும்போது அவரை திணற வைத்ததை தவிர்த்து இத்தனை ஆண்டுகளில் எதுவும் பெரிதாக சாதித்தது போல் நினைவில்லை. சமீபத்தில் இங்கிலாந்துடன் நடந்த டெஸ்ட் போட்டியையும், சாம்பியன்ஸ் ட்ராபி பைனலையும் கணக்கில் சேர்க்காதீர்கள். முப்பது போட்டிகளில் விளையாடும்போது ஒன்றிரண்டு போட்டிகளில் தவறுதலாக சில விக்கெட்டுகள் விழுந்து விடும்.

உமேஷ் யாதவும், முஹம்மது சாமியும் நல்ல பந்து வீச்சாளர்கள்தான். ஆனால் மலிங்கா போலவோ, ஸ்டெயின் போலவோ அச்சுறுத்தும் பந்து வீச்சாளர்கள் இல்லை.

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது சச்சின் இல்லாத குறை அப்பட்டமாக தெரிகிறது. கடந்த உலகக் கோப்பைகளில் அவர் ஒரு முனையில் உறுதியாக நின்று ஆட இன்னொரு முனையில் மற்றவர்கள் அவருக்கு துணையாக தங்கள் இயல்பான ஆட்டத்தை ஆடினால் போதும் என்ற வாய்ப்பு இருந்தது. ஆனால் இந்த முறை அந்த வாய்ப்பு இல்லாததால் ஒவ்வொரு வீரருக்கும் அழுத்தம் இருப்பது போல் தோன்றுகிறது. இந்த சூழ்நிலையில் அனைத்து வீரர்களும் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம். ஒருவர் தொடர்ந்து ரன் சேர்க்க  தவறினாலும் அது அணியின் வெற்றியை பாதிக்கும்.

தன்னம்பிக்கை  குறைவாக உள்ள வீரர்கள் குட்டி அணிகளுடன் ஆடி ரன் சேர்த்து மீண்டும் பார்முக்கு திரும்ப வாய்ப்பு உள்ளது. இருந்த போதும் பந்து வீச்சு மிகவும் கவலை அளிக்கும் விஷயம். இந்திய அணியின் கேப்டன், மற்ற அணிகளின் கேப்டன்களை விட நெருக்கடியான நேரங்களை  சிறப்பாக கையாளக்கூடியவர் என்பதே இப்போதைக்கு அணியின் ஒரே பலம். பார்க்கலாம் வேறு எதாவது அதிசயம் நடக்கிறதா என்று.


Tuesday, November 5, 2013

கொஞ்சம் கிரிக்கெட்

இந்தியா-ஆஸ்திரேலியா ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடந்து முடிந்து விட்டது. போட்டிக்கு போட்டி அதிவேக சதம், அதிவேக அரை சதம், இரட்டை சதம் என பல புதிய சாதனைகள் படைக்கப்பட்டு பழைய சாதனைகள் தகர்க்கப்பட்டன. . பந்தை பேட்ஸ்மேன்கள் நினைத்த போதெல்லாம்  எல்லை கோட்டை தாண்டி அடித்தனர். இதற்கு முன் இது போன்ற பேட்ஸ்மேன்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய எந்த ஒரு தொடரையும் பார்த்தது போல நினைவில்லை.

இது போன்ற தொடர்கள் பார்ப்பதற்கு வேண்டுமானால் விறுவிறுப்பாக இருப்பது போல தோன்றலாம். ஆனால் இப்படிப்பட்ட தொடர்களால் கிரிக்கெட்டுக்கு எந்தவித பலனும் இல்லை. எல்லை கோட்டுக்கு அருகில் அதிக பட்சம் நான்கு பேர் நிற்கலாம் என்பதில் தொடங்கி இரண்டு புதிய பந்துகள், பேட்ஸ்மேன்களுக்கு எந்த ஒரு சிரமமும் தராத பிட்ச் என பல காரணங்களும் சேர்ந்து ரன் குவிப்பதை மிக  சுலபமாக்கி விட்டது. பேட்ஸ்மேன்கள் சிக்ஸர் அடிப்பதை மிக எளிதாக செய்கின்றனர். இதே நிலை தொடர்ந்தால் பந்தை அதிக தூரம் அடிப்பவரே சிறந்த பேட்ஸ்மேன் என எதிர்காலத்தில் கருதப்படலாம். கிரிக்கெட் ஆட்டம், பேஸ்பால் ஆட்டம் போல மாறி விடும். சச்சினின் சத சாதனைகளை எட்டாவதாக களம் இறங்கும் ஒரு வீரர் முறியடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.


பந்து வீச்சாளர்களின் நிலையோ  மிக பரிதாபம் . இரண்டு புது பந்துகள் என்பதால் பந்தின் கடின தன்மை 50 ஓவருக்கும் குறையாது; சுழலவும் (spin) செய்யாது ;ரிவர்ஸ் ஸ்விங் வீசவும் வழி இல்லை. வீசப்படும் பந்து நான்கு  அல்லது ஆறுக்கு விரட்டப்பட கூடாது என்றால் ஒரே வழி பந்தை யார்க்கராக வீசுவதுதான். ஆனால் ஓவரின் ஆறு பந்தையும் துல்லியமாக  யார்க்கராக வீசுவது அத்தனை எளிதில்லை. சிறு தவறு செய்தாலும் பந்து புல் டாஸாக மாறி பேட்ஸ்மேன்களின் பணியை மிகவும் எளிதாக்கும். வரும் காலங்களில் ஒரு நாள் போட்டியில் 500 ரன்கள் அடிக்கப்பட்டு, அந்த ஸ்கோரும் சேஸ் செய்யபட்டலாம்.

உண்மையான கிரிக்கெட் என்பது பேட்ஸ்மேன்களும், பந்துவீச்சாளர்களும் மோதி கொள்வது. ஆனால் ஐசிசியின் புதிய விதிகள் அது பேட்ஸ்மேன்களும் பேட்ஸ்மேன்களும் மோதிக் கொள்வது என்றாக்கிவிட்டது. இந்த விதிகள் மாற்றப்படாவிட்டால் இனி நம்மால் உடல் பலத்தை மட்டுமே நம்பி ஆடும் கிரிக்கெட் ஆட்டத்தை மட்டுமே காண முடியும். ஒருவேளை எப்போதாவது  நுணுக்கமான கிரிக்கெட் ஆட்டத்தை காண வேண்டுமென்று தோன்றினால் யூ ட்யூபில் சச்சினின் பழைய வீடியோக்களை பார்த்து கொள்ள வேண்டியதுதான்.

Thursday, July 18, 2013

மேட்ச் பிக்சிங் செய்வது சுலபமா?

என்னுடைய பெயர் ஸ்ரீகோந்து. வேக பந்து வீச்சாளர் .நம் நாட்டுக்காக பல கிரிக்கெட் போட்டிகள் ஆடியுள்ளேன். நீங்கள் என்னை நிச்சயம் உங்கள் வீட்டு டிவியில் பார்த்து இருப்பீர்கள். நீங்கள் பார்த்த பொழுது நான் பெரும்பாலும் எதிரணி வீரர்களுடன் சண்டையிட்டு கொண்டு இருந்திருப்பேன். அல்லது யாரிடமாவது அடி வாங்கி அழுது கொண்டிருந்திருப்பேன். இல்லை அபூர்வமாக  பந்து வீசிக்கொண்டும் இருந்திருக்கலாம். இப்போது நான் யாரென்று சற்று  தெரிந்து  விட்டதா?

இப்போது நான் சொல்ல போகும் கதை உங்களுக்கு அதிர்ச்சியை அளிக்கலாம். மனதை திடப் படுத்தி கொள்ளுங்கள் . நான் உங்களுக்கு சொல்ல போவது நான் ஸ்பாட் பிக்சிங் செய்த கதை. "அடப்பாவி! பிக்சிங் செய்து விட்டாயா? உன்னை நாங்கள் எத்தனை நம்பினோம்? என்று கேட்காதீர்கள். அதை நான் ஆண்டவன் சன்னதியிலோ அல்லது சிக்கி கொண்டால் கோர்ட்டிலோ சொல்லி கொள்கிறேன். இப்போது நான் சொல்லும் கதையை மட்டும் கேளுங்கள்.

 நான் சொல்ல போகும் போட்டியை நீங்கள் பார்த்திருக்கலாம். நான் ஆடிய அணிக்கு அந்த போட்டி மிகவும் முக்கியமான போட்டி. எங்களை எதிர்த்து ஆடிய அணிக்கோ அது இன்னும் முக்கியமான போட்டி. எனக்கோ அந்த போட்டி மிக மிக முக்கியமான மறக்கமுடியாத போட்டி. ஏனென்றால் நான் முதல் முதலில் பிக்சிங் செய்த போட்டி அதுதான். அந்த போட்டியில் என்னுடைய புக்கி எனக்கு அளித்த பணி மிக சுலபம். பத்தாவது ஓவருக்கு பின் நான் வீசும் முதல் ஓவரில் 15 ரன்கள் தர வேண்டும். சாதாரணமாகவே என்னுடைய ஓவரில் 12 ரன்கள் அடிக்கலாம். எனவே மூன்று ரன்களை அதிகமாக விட்டு தருவது எனக்கு பெரிய வேலையே இல்லை.

 
அந்த போட்டி தொடங்கியது. எங்கள் அணி முதலில் பந்து வீசியது. நான் என்னுடைய வாய்ப்பிற்காக காத்து இருக்க தொடங்கினேன். நான் எதிர்பார்த்த அந்த தருணம் வந்தது. ஆட்டத்தின் 14வது ஓவரை கேப்டன் டேவிட் எனக்கு கொடுத்தார். அப்போது எதிரணியின் ஸ்கோர் 103 ரன்களுக்கு 3 விக்கெட். அந்த ஓவரில் நான் 15 ரன்கள் கொடுத்தால் போதும்  பெருந்தொகையை சில நிமிடங்களில் அடைந்து விடலாம். கூடவே இலவச இணைப்பாக அழகழகான பெண்கள். தெய்வத்தை வேண்டி கொண்டு முதல் பந்தை வீசுவதற்கு தயாரானேன். எச்சிலை என்னுடைய இரண்டு பக்கமும் காறி துப்பி புக்கிக்கு சிக்னல் கொடுத்தேன்.

முதல் பந்து - எனக்கு என்ன ஆனது என்று  எனக்கே தெரியவில்லை. என்னுடைய வாழ்நாளில் நான் அந்த மாதிரி ஒரு நல்ல பந்தை வீசியதே இல்லை. என்னையும் அறியாமல் புயலாக வெளியேறிய அந்த பந்து ஸ்டம்புகளை தகர்த்தது. அதிர்ந்து போய் நின்றேன். கேப்டன் டேவிட் துள்ளி குதித்து கொண்டு என்னை நெருங்கினார். சமாளித்து கொண்டு முகத்தை சந்தோசமாக வைத்து கொண்டேன். என்னுடைய அற்புத நடிப்பில் ஏமாந்தார் டேவிட். "ஸ்ரீகோந்து! நீ நடிகன்டா!" என மனதுக்குள் நினைத்து கொண்டேன்.

இரண்டாம் பந்து: இந்த பந்தில் 4 அல்லது ஆறு போனால்தான் என் மேல் உள்ள அழுத்தம் சற்று குறையும். ஆடுவதோ புதிதாக உள்ளே வந்த பேட்ஸ்மேன். படபடப்போடு பந்தை பேட்ஸ்மேனின் உடலுக்கு வீசினேன். தட்டி விட்டு அவன் ஒரு ரன் எடுத்தான்.

மூன்றாம் பந்து: இப்போது எனக்கு சற்று நிம்மதியானது. ஏனென்றால் இப்போது என் பந்தை எதிர்கொள்ள போவது டிராவோ. நிச்சயம் இவன் நான்கு பந்துகளில் 14 ரன்கள் அடித்து விடுவான். நான் எப்போதும் போல பந்து வீசினாலே போதும்என நினைத்து கொண்டு நான் வீசியது புல் டாஸ். எளிதாக அதை நான்கு ஆக்கினான் டிராவோ

நான்காம் பந்து: திட்டமிட்டபடி துல்லியமாக புல் டாஸ் வீசினேன். அதை சிச்சருக்கு விரட்டினான் டிராவோ.

ஐந்தாம் பந்து: பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லுமாறு வீசினேன். நிச்சயம் அந்த பந்து நான்கு ரன்களுக்கு விரட்டகூடிய பந்து. ஆனால் பாவி பயல் டிராவோ அந்த பந்தை மட்டை வைத்து விட்டான்.

ஆறாம் பந்து: இன்னும் நான் குடுக்க வேண்டியது நான்கு ரன்கள். இருப்பதோ ஒரே பந்து. சிக்னல் குடுத்த பின் சொதப்பினால் புக்கி கொன்று விடுவான். இப்போது நோ பால் வீசுவதை தவிர வேறு வழி இல்லை. அதி வேகத்தில் ஓடி வந்து ஒரு நோ பாலையும் வீசி விட்டேன். டிராவோ அதை தூக்கி அடிக்க அது பௌண்டரி லைனில் கேட்ச் ஆனது. அதற்குள் இரண்டு ரன்கள் ஓடி விட்டான் டிராவோ.

மீண்டும்  ஆறாம் பந்து: எடுக்க வேண்டியது ஒரே ரன். இந்த பந்தில் விக்கெட் வீழ்த்த முடியாது. என்னுடைய திட்டம் நிறைவேற போகிற மகிழ்ச்சியோடு பந்தை வீசினேன். அந்த பந்தை நேராக ஃபீல்டரிடம் அடித்த டிராவோ ரன் எடுக்க தலை தெறிக்க ஓட ஆரம்பித்தான். எனக்கு ஒரு ரன் எடுக்க போகிறான் என்ற சந்தோசம் ஒரு பக்கம் . ரன் அவுட் ஆகிவிடுவானோ என்ற பயம் ஒரு பக்கம்.  பதட்டமான அந்த நொடியில் நான் பயந்தபடி ரன் அவுட் ஆகிவிட்டான் டிராவோ.

அந்த ஆட்டம் முடிந்த பின் புக்கி என்னை கழுவி கழுவி ஊற்றினான். தனக்கு பாம்பே தாதாக்களுடன் தொடர்பு உண்டு என்று கூறி மிரட்டல் வேறு. நான் எதிர்பாராமல் அந்த சம்பவம் நடந்து விட்டது என்று அவனுக்கு புரிய வைக்க மிகவும் கஷ்டப்பட்டேன். கடைசியில் அவனுடைய நஷ்டத்தை சரிகட்ட அடுத்த இரண்டு போட்டிகளில் இலவசமாக பிக்சிங் செய்து தருகிறேன் என்றதும் சமாதானம் அடைந்தான்.

இது நடந்து 5 நாட்களுக்கு பின் பேப்பரில் வந்த செய்தி. " பிரபல வீரர் டிராவோ ஸ்பாட் பிக்சிங் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். கடந்த வாரம் நடந்த போட்டியில் இவர்  15வது ஓவருக்குள் ஆட்டமிழக்க புக்கிகளுடன் இவர் ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும் அதனாலேயே ஸ்ரீகோந்து வீசிய ஓவரின் கடைசி பந்தில் வேண்டுமென்றே ஓடி ரன் அவுட் ஆனதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. "

பாருங்கள். பிக்சிங் செய்வது கூட சுலபமாக இல்லை இந்த காலத்தில். 

Saturday, June 1, 2013

தோனி - ஒரு அதிசயம் - நிறைவு பகுதி

T-20 உலக கோப்பை இறுதி போட்டியில் கடைசி ஓவரை தோனி  ஜோகிந்தர் சர்மாவுக்கு கொடுத்தது பலரை ஆச்சர்யப்பட வைத்தது. அந்த தொடரில் தோனியின்  வெற்றிக்கு காரணம் அவரின் துணிச்சல் என்று சிலரும், அதிர்ஷ்டம் என்று சிலரும் பேச தொடங்கினார்கள். இருந்தும் எனக்கு அவரின் வெற்றிக்கு காரணம் அதிர்ஷ்டம் என்று தோணவில்லை. காரணம், இறுதி போட்டியில் தோற்ற பின் பாகிஸ்தான் அணி தலைவர் சோயப் மாலிக் கூறிய கருத்து. இந்திய அணிக்கும், பாகிஸ்தான் அணிக்கும் உள்ள வேறுபாடு நெருக்கடியை கையாளும் விதம் என்றார் அவர். அனுபவம் மிகுந்த பாகிஸ்தான் அணியை விட இளம் இந்திய அணி சிறப்பாக நெருக்கடியை கையாண்டால் அதற்கு நிச்சயம் தோனிதான் காரணம் என்று நம்பினேன்.

அந்த T-20 உலக கோப்பை வெற்றிக்கு பின் தோனியின் மேல் நம்பிக்கை அதிகரித்தது . கால ஓட்டத்தில் டிராவிட் அணியில் இருந்து நீக்கப்பட ஒரு நாள் போட்டிகளின் கேப்டனாகவும், கும்ப்ளே ஓய்வுக்கு பின் டெஸ்ட் போட்டிகளின் கேப்டனாகவும் நியமிக்கபட்டார். அணியில் டிராவிட் இல்லாத நிலையில் தனது ஆட்ட முறையையே மாற்றி டிராவிட் போல பொறுமையாக ஆடி அணியின் இளம் வீரர்களுக்கு தங்களின் விருப்பம் போல் ஆடும் சுதந்திரத்தை ஏற்படுத்தி கொடுத்தார். 

2008ம்  ஆண்டு காமன் வெல்த் பேங்க் முத்தரப்பு  தொடர். அத் தொடர் மூன்று பைனல்களை கொண்டது. இந்தியாவும் வலிமையான ஆஸ்திரேலியாவும்  பைனலுக்கு முன்னேறின.  இறுதி போட்டிகளுக்கு  முன் பேட்டி அளித்த பாண்டிங் தன் வழக்கமான திமிருடன்,   2 பைனல்களுக்கு மேல் இந்த தொடர் நடக்காது; ஆஸ்திரேலியா முதல் 2 போட்டிகளிலேயே வென்று விடும் என்றார். அவர் கணித்தபடி  2 பைனல்களே அந்த தொடரில் நடந்தன. ஆனால் வென்றதோ இந்திய அணி. பாண்டிங் சொன்னதை, தோனி செய்து காட்டினார். ஆஸ்திரேலியாவின் ஆணவத்திற்கு சவுக்கடி கொடுத்தார். இந்தியா முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் ஒரு நாள் தொடரை வென்றது.

 அதன் பின் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனும் அவரும் இணைந்து அணிக்கு பல வெற்றிகளை பெற்று தந்தார்கள். கூடவே அணியை 2011 உலக கோப்பைக்கும் தயார் செய்தார்கள். இந்திய அணியின் 2011 உலக கோப்பை வெற்றிக்கு இவர்களின் முன் திட்டமிடலே காரணம்.

 
2011  உலக கோப்பை இறுதி போட்டி. தோனி சிக்ஸர் அடித்து அணியை ஜெயிக்க வைத்தார். நாடே வெற்றி களிப்பில் மிதந்தது .  ஆனால் தோனியோ அப்போதும் அதனை பெரிதாக கொண்டாடவில்லை  அத்தனை பெரிய வெற்றிக்கு பின்னும், 2007ல் ரன் எடுக்காமல் வெளியேறிய போது பார்த்த அதே சலனமற்ற முகம் . 'இதுவும் கடந்து போகும்; எப்போதும் சம நிலையை இழக்காதே' என்று எப்போதோ படித்த போதனை கதை நினைவுக்கு வந்தது. கோப்பை வாங்கிய பின்னர் அணியினரின் கொண்டாட்டத்தில் கூட பெரிய அளவில் பங்கேற்கவில்லை. வெற்றிக்கு தன் அணியினரை பொறுப்பாக்கி தான் எதுவுமே செய்யாதது போல இருந்தார் கேப்டன் கூல். ஒரு கேப்டன் எப்படி இருக்க வேண்டும் என்று உலகத்திற்கு பாடம் எடுத்தார்.

2007ல் தோனியிடம் இருந்த கூல், 2011ல் இல்லை என்பது உண்மையே. அதற்க்கு காரணம் என நான் நினைப்பது 2007ல் அவர் மேல் இருந்த எதிர்பார்ப்புகள் வேறு. 2011ல் அவர் மேல் இருந்த எதிர்பார்ப்புகள் வேறு. வென்று காட்டிய பின் அதை தொடர வேண்டிய கட்டாயம் சில நேரங்களில் அவரை மிக சிறிதளவு நிதானம் தவற செய்தது. இருப்பினும் அவர் ஒரு போதும் மைதானத்தில் கத்தியோ, முகம் சுளித்தோ பார்த்ததில்லை.

இந்திய அணியின் கேப்டனாக யார் நியமிக்கபட்டதும் தனி பட்ட முறையில் கங்குலியின் பேட்டிங் பாதிக்கப்பட்டது. சச்சின், அசாருக்கும் கூட அப்படியே. ஆனால் கேப்டனாக நியமிக்கப்பட்டும் தோனியின் பேட்டிங்கில் பெரிய அளவு பாதிப்பு ஏதும் இல்லை. ஒரு நாள் போட்டிகளில் இன்னும்  சிறப்பான சராசரியை கொண்டுள்ளார். இத்தனைக்கும்  விக்கெட் கீப்பர் பணி வேறு . அனைத்தையும் அருமையாக கையாள்கிறார்.

 அதீத நம்பிக்கை, தோல்வியையும் வெற்றியையும் ஒரே போல் எடுத்து கொள்ளும் பக்குவம், துணிச்சல் என  ஒட்டு மொத்தமாக பார்க்கும்போது தோனி எனக்கு ஒரு அதிசயமே. உங்களுக்கு?


Friday, May 24, 2013

தோனி - ஒரு அதிசயம் - 3

2007ம் ஆண்டு உலக கோப்பை ஆட சென்ற இந்திய அணியின் மேல் யாருக்கும் பெரிய நம்பிக்கை எல்லாம் இருந்திருக்க வாய்ப்பில்லை.இருந்தாலும் அப்படி ஒரு தோல்வியை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.வீரர்கள், ரசிகர்கள் என அனைவரையும் கண்ணீர் விட வைத்த தொடர் அது. அந்த தொடரின் முதல் சுற்றிலேயே படு தோல்வி அடைந்து வெளியேறியது இந்திய அணி.

இந்திய அணிக்கு தொடரின் முதல் போட்டி பங்களாதேஷ் அணியுடன். அந்த போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணிக்கு பெரிய நெருக்கடி. மீதமிருந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால்தான் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற சூழ்நிலை. தனது இரண்டாவது போட்டியில் பெர்முடாவை நசுக்கிய இந்தியா, மூன்றாவது போட்டியில் கட்டாய வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் இலங்கையை சந்தித்தது. 

அந்த போட்டியில் முதலில் ஆடிய இலங்கை 254 ரன்களை சேர்த்தது. அடுத்து ஆடிய இந்திய அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிய தொடங்கின. 120 ரன்களை சேர்க்கும் முன் 5 விக்கெட்டுகளை இழந்த  இந்திய அணிக்கும், இருந்த கடைசி நம்பிக்கை தோனி மட்டுமே.  நானும் தோனி இருக்கும்வரை கவலை பட தேவை இல்லை. சற்று நேரம் ஆடினால் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடுவார் என்ற நினைப்பில் இருந்தேன். 

ஆட வந்த தோனி தனது முதல் பந்தை  எதிர் கொண்டது முரளிதரனிடமிருந்து. அதீதமாக திசை திரும்பிய அந்த பந்து தோனியின் கால் காப்பில் பட்டது. நடுவர் விரலை தூக்கி விட ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார் தோனி. தோனியை கண்டு நான் அதிசயித்த நேரங்களில் இதுவும் ஒன்று. ஏன் என்று கேட்கிறீர்களா? அந்த  அவுட் ஆனதும் மற்ற வீரர்களின் முகத்தில் தென்பட்ட சோகமோ, விரக்தியோ தோனியின் முகத்தில் சிறிதும் இல்லை. ஏதோ ஒரு கண்காட்சி போட்டியில் ஆட்டம் இழந்த வீரர் போல வழக்கமான  உணர்ச்சியற்ற முகத்துடன் வெளியேறினார்.

 
எதற்கும் பயமும் இல்லை, கவலையும் இல்லை என்ன மாதிரியான மனிதன் இவன் என அந்த சோகமான நேரத்திலும் ஆச்சரியமடைந்தேன். கீதை குறிப்பிடும் கர்ம யோகியா இவர்? எல்லாவற்றையும் இறைவனிடம் ஒப்படைத்து விட்டாரா? இவர் போல நம்மால் ஏன் இருக்க முடியவில்லை என யோசிக்க தொடங்கினேன்.

இந்திய அணி அந்த போட்டியில்  தோல்வி அடைந்து தொடரிலிருந்து வெளியேறியது. அந்த தோல்விக்கு பின் இந்திய அணி வீரர்களின் வீட்டில் கல் வீச்சு சம்பவங்கள் நடந்தன. தோனியின் வீடும் தப்பவில்லை. அதன் பின் அணிக்குள்ளே புகைந்து கொண்டிருந்த சாப்பல் பிரச்சினை வெளியே வந்தது. இந்திய அணிக்கு கடும் சோதனையான காலகட்டம் அது. அந்த பிரச்சினைகளில் இருந்து சிறிது, சிறிதாக வெளியே வந்த இந்திய அணி இங்கிலாந்தில்  டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது. அப்போதுதான் வந்தது T-20 உலக கோப்பை.

T-20 உலக கோப்பை அணியிலிருந்து இளைஞர்களுக்கு வழி விட்டு விலகுவதாக அப்போதைய கேப்டன் டிராவிட், சச்சின், கங்குலி போன்ற   சீனியர் வீரர்கள் அறிவித்தனர். இப்போது கிரிக்கெட் வாரியத்துக்கு வந்த பிரச்சினை இவர்களுக்கு மாற்று வீரர்களை தேடுவது. அதை விட பெரிய பிரச்சினை ஒரு புதிய கேப்டனை நியமிப்பது.  சச்சினின் யோசனைப்படி தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

தோனி கேப்டனாக சரியான ஆள் என்று நினைத்து இருந்தேன். ஆனால் ஒரு விக்கெட் கீப்பரை கேப்டனாக அறிவிப்பார்களா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் எப்படியோ தோனி கேப்டனாகி விட்டார். அந்த தொடரையும் வென்று கொடுத்தார். அந்த தொடரை பார்த்த அனைவரும் அவர் சிக்கலான சூழலையும்  மிக கூலாக கையாண்டதாக பாராட்டினார். ஆனால் எனக்கு ஒன்றும் அதில் வியப்பில்லை. அவர் அது போன்ற சூழ்நிலைகளில் பதட்டப்பட்டு செயல்பட்டிருந்தால்தான் எனக்கு அது ஆச்சரியம் அளித்திருக்கும்.

-  ஆச்சரியங்கள் தொடரும் 

Wednesday, May 22, 2013

மேட்ச் ஃபிக்ஸிங் - சில நினைவுகள்

நான் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்து இருந்த கால கட்டம். அன்றைய நாட்கள் இந்திய கிரிக்கெட் அணிக்கு சிறப்பானதாக இல்லை. தொடர் தோல்விகளுக்கு பின் அசாருதீனிடம் இருந்து சச்சின் கேப்டன் பொறுப்பை ஏற்று இருந்தார். அணி வெற்றி பெற சச்சினின் பேட்டிங்கை மட்டுமே நம்பி இருந்தது. 

 
அப்போதுதான் ஆரம்பித்தது டைட்டன் கோப்பை முத்தரப்பு தொடர். இந்தியா, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா பங்கேற்றிருந்த அணிகள். அந்த மூன்று அணிகளில் தென் ஆப்ரிக்க அணி  மிக மிக வலிமையான அணி.அபாயகரமான பேட்ஸ்மேன்கள் , அசுர வேக பந்து வீச்சாளர்கள், ஆல் ரவுண்டர்கள், பாய்ந்து பாய்ந்து பிடிக்கும் ஃபீல்டர்கள், திறமையான கேப்டன் என சிறந்த ஆட்டக்காரர்களை  கொண்டு இருந்தது. ஆஸ்திரேலியாவும் ஓரளவு வலிமையான அணி. இந்திய அணி மட்டுமே பரிதாபமாக தோன்றியது. இருந்தாலும் சச்சின் மேல் இருந்த நம்பிக்கையால் தொடரை பார்க்க தொடங்கினேன்.

 அந்த தொடர் எதிர் பார்த்தது போலவே அமைந்தது. தென் ஆப்ரிக்கா மிக எளிதாக ஃபைனலில் நுழைந்தது. இந்தியாவோ  தட்டு தடுமாறி சில போட்டிகளில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஃபைனலுக்குள் நுழைந்தது. ஃபைனலில் தென் ஆப்ரிக்கா இந்தியாவை ஊதி தள்ளி விடும் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். நானோ வழக்கம் போல ஏதோ ஒரு நம்பிக்கையில்  போட்டியை பார்த்தேன்.

முதலில் ஆடிய இந்திய அணி 220 ரன்கள் எடுத்தது. அப்போதேல்லாம் இப்போது போல் 350,400 ரன்கள் எடுக்கும் கதை எல்லாம் இல்லை. 250 ரன்களே நல்ல ஸ்கோர். ஆகவே  220 ரன்களும் ஓரளவு சுமாரான ஸ்கோர்தான். இருந்தாலும் எதிர்த்து ஆடுவது தென் ஆப்ரிக்காவை. அவர்களுக்கு இதெல்லாம் ஒரு இலக்கே இல்லை. கிட்டத்தட்ட தோல்வி உறுதியான சூழலில்தான் அந்த அதிசயம் நடந்தது. அடுத்து ஆடிய தென் ஆப்ரிக்காவின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. தென் ஆப்ரிக்கா 100 ரன்களை எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது. நான் உற்சாகம் அடைந்தேன். ஆனால் அது அதிக நேரம் நிலைக்கவில்லை. 8வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சிம்காக்ஸும், ரிச்சர்ட்சனும் நின்று ஆட தொடங்கினர். கடைசி நேரத்தில் வெற்றி கை நழுவிவிடுமோ என பயப்பட தொடங்கினேன். ஆனால் ஸ்கோர் 190ஐ நெருங்கும்போது ரிச்சர்ட்சன், ராபின் சிங்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்த இரண்டு விக்கெட்டுகளும் அடுத்தடுத்து சரிய இந்திய அணி வெற்றி பெற்றது. நான் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்தபின் இந்திய அணி வெல்லும் முதல் கோப்பை என்பதால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். 

இதற்கு பின் டெண்டுல்கரின் தலைமையில் இந்திய அணி ஒரு நாள் போட்டிகளில் இன்னும் ஒரே ஒரு கோப்பை மட்டுமே வென்றது. அது பாகிஸ்தானுக்கு எதிராக கனடாவில் நடந்த சஹாரா கோப்பை தொடர். இருந்தபோதும் தென் ஆப்ரிக்காவை வீழ்த்திய போட்டியே எனக்கு சிறந்த போட்டியாகபட்டது. அந்த ஒரு போட்டியையே நான் பார்த்ததில் சிறந்த போட்டியாக நினைத்து கொண்டு இருந்தேன்.

சில ஆண்டுகளுக்கு பின் ஒரு காலை பொழுதில் அந்த போட்டியை தென் ஆப்ரிக்கா கேப்டன் ஹன்சி குரோனி ஃபிக்ஸ் செய்து விட்டதாகவும், அந்த போட்டியின் முடிவு புக்கிகளால் தீர்மானிக்கபட்டதாகவும் செய்திகளில் பார்த்தேன். லேசாக தலை சுற்றியது. எப்படியோ ஜெயிச்சது ஜெயிச்சதுதான் என்று மனதை தேற்றி கொண்டு இந்திய அணிக்கு அடுத்த போட்டி எப்போது  என்று நண்பர்களுடன் விவாதிக்க தொடங்கினேன்.

Monday, May 20, 2013

தோனி - ஒரு அதிசயம் - 2

தோனியின் அந்த ஆட்டத்தை பார்த்த பின் எனக்கு அவர் மேல் உள்ள நம்பிக்கை அதிகரித்தது. இந்திய அணிக்கு ஒரு அதிரடி ஆட்டக்காரர் கிடைத்துவிட்டார் என முடிவு செய்து விட்டேன். இந்த நிலையில் இந்திய அணி ஜிம்பாப்வே சுற்று பயணம் மேற்கொண்டது. அந்த பயணத்தில்தான் தோனியின் இன்னொரு முகத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த தொடரின் ஒரு போட்டியில் முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 250 ரன்களை சேர்த்தது. 250 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு  100 ரன்களை சேர்க்கும் முன் ஐந்து விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டது. ஆறாவது விக்கெட்டுக்கு களம் இறங்கினார் தோனி. அவரால் அதிரடி ஆட்டம் மட்டுமே ஆட முடியும் என்று நம்பி கொண்டு இருந்தேன். ஆட்டத்தின் போக்கை உணராமல் அவசரப்பட்டு ரன் எடுக்க முயன்று அவுட்டாகிவிடுவார் என்று கணித்தேன். இந்திய அணியின் தோல்வி உறுதி என்று முடிவு செய்தே விட்டேன். இந்த முறை தோனி மீண்டும் நான் கணித்தது தவறு என்று முடிவு செய்தார். யுவராஜுடன் இணைந்து மிக கவனமாக ஆடி அணியை வெற்றி பெற செய்தார். அதிரடி ஆட்டம் மட்டுமல்ல, சூழ்நிலைக்கு ஏற்ப அணிக்கு தனது பங்களிப்பை வழங்க முடியும் என்று நிரூபித்தார்.

இந்த தொடரில் அவரின் அசுர வேக ஸ்டம்பிங்களையும் கவனித்தேன். அவரின்  கைகள், காரணமே இல்லாமல் ஸ்டம்ப்களை தட்டி விடுவது போல் இருக்கும். ஆனால் ரீப்ளே செய்து பார்க்கும்போது பேட்ஸ்மேன் கால்களை மிக சிறிய அளவு கிரீசை விட்டு வெளியே எடுத்து இருப்பது தெரியும். தோனி தனது  மின்னல் வேகத்தால் அந்த இடைவெளியை சரியாக பயன்படுத்தி இருப்பார்.

அதன் பின் நடந்த பாகிஸ்தான் தொடர் தோனியின் புகழை உச்சத்திற்கு கொண்டு சென்றது. முஷாரப் தோனியின் ஹேர் ஸ்டைலை பாராட்ட, இந்திய ரசிகர்கள் அவரை போன்றே தங்கள் ஹேர் ஸ்டைலை அமைத்து கொண்டனர். தோனி ஒரு தேசிய ஹீரோவாக இந்த தொடரின் முடிவில் மாறி போனார். இதற்கு இடையில் டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் பொறுப்பும் தினேஷ் கார்த்திக்கிடமிருந்து தோனியை வந்து சேர்ந்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி டெஸ்ட் போட்டிகளிலும் சாதித்து காட்டினார் தோனி.


இப்படி தோனி தன்னை அணியின் தவிர்க்க முடியாத வீரராக மாற்றி கொண்டு இருந்தார். ஒரு நாள் போட்டிகளில் தன் பேட்டிங் சராசரியை 50க்கு மேலும், ஸ்ட்ரைக் ரேட்டை 100க்கு மேலும் வைத்து இருந்தார். அவரை அணியின் கேப்டனாக கூட நியமிக்கலாம் என என்ன தொடங்கினேன். அப்போது ஒரு ஆட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் என் எண்ணத்தை வலுவாக்கியது. ஒரு போட்டியின்போது தோனி பந்தை பௌலரிடமே திருப்பி அடித்தார். பந்தை பிடித்த பௌலர் அதை தோனியை நோக்கி எறிவது போல பாவ்லா காண்பித்தார். பேட்ஸ்மேன்களை எரிச்சலூட்டி அவர்களின் கவனம் சிதற செய்ய பௌலர்கள் கையாளும் யுக்தி இது. பொதுவாக இது போன்ற நிலையில் பேட்ஸ்மேன்கள் பயத்தில் ஸ்டம்பை விட்டு விலகி ஓடுவர். அல்லது பௌலரை முறைப்பார்கள். ஆனால் தோனி என்ன செய்தார் தெரியுமா? நின்ற இடத்திலே சிறிதும் அசைவற்று நின்று கொண்டார். பின் பௌலரை பார்த்து ஒரு தனது  வழக்கமான புன்னகையை உதிர்த்தார். "அட பாவி! நீ எதுக்குமே பயப்பட மாட்டியா" என நினைத்து கொண்டேன். அந்த சம்பவத்திற்கு பின் இவர் கேப்டனாக தகுதியானவர் என்ற என் எண்ணம் வலுப்பட்டது. 

இப்படி தோனிக்கு எல்லாம் உச்சத்தில் சென்று கொண்டு இருக்கும்போதுதான் 2007ம் ஆண்டு உலக கோப்பை தொடர் வந்தது. எந்த இந்திய கிரிக்கெட் ரசிகனாலும் எளிதில் மறக்க முடியாத தொடர் அது.

- தொடரும் 

Thursday, May 9, 2013

தோனி - ஒரு அதிசயம்

கங்குலி தலைமையில் பல வெற்றிகளை இந்திய அணி குவித்து வந்த காலம். அந்த அணிக்கு இருந்த மிக பெரிய பிரச்சனை சரியான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இல்லாதது. பார்த்திவ், தினேஷ் கார்த்திக் என சில வீரர்களை முயன்றபோதும் யாரும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. எனவே ராகுல் டிராவிட் வேண்டா வெறுப்பாக விக்கெட் கீப்பிங் செய்து கொண்டு இருந்தார். கங்குலியோ, "இந்தியாவில் ஒரு கில்க்ரிஸ்டோ, மார்க் பவுச்சரோ இல்லை; எனவே டிராவிடே விக்கெட் கீப்பிங் செய்வார்"  என பேட்டி கொடுத்து கொண்டு இருந்தார். ஆனால் டிராவிட்டின்  விக்கெட் கீப்பிங் சொல்லி கொள்ளும்படி இல்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்திய அணி வங்கதேசம் சென்றது. வழக்கமாக சிறிய அணிகளுடன் மோதும்போது புதிய வீரர்கள் அதிக அளவில் வாய்ப்பு பெறுவார்கள். அப்பொழுதும் அதே போல் அணியில் சில  புதுமுக வீரர்கள் வாய்ப்பு பெற்றார்கள். அப்பொழுது இந்திய A அணியில் அசத்தி கொண்டு இருந்த தோனியும் வாய்ப்பு பெற்றார். 

2004 ஆம் ஆண்டு தோனியின் முதல் போட்டி.  நீளமான முடி; இந்திய வீரர்கள் யாருக்கும் இல்லாத கட்டுமஸ்தான உருவம். பார்க்க மிகவும் வித்தியாசமாக இருந்தார்.  முதல் போட்டியில் ஒரு ரன்னும் எடுக்காமல் அவுட்.  அடுத்த போட்டியில் அவரின் பேட்டிங்கை பார்க்கும் வாய்ப்பு  கிடைத்தது. அந்த போட்டியில் சர்வ சாதாரணமாக ஒரு சிக்ஸர் அடித்தார். பின் சிங்க பல் தெரிய ஒரு சிரிப்பு. அவரின் உடல்  வலிமை கவனிக்க வைத்தது. ஆனால்  அவரின் பேட்டிங் ஸ்டைல் மிக மோசம் . சர்வதேச கிரிக்கெட் வீரர் போலவே இல்லை. இந்த பேட்டிங்  ஸ்டைலில் ஆடி சாதிப்பது சாத்தியமே இல்லை. அதிரடியாக ஆடினால் சில போட்டிகளில்  அதிக பட்சம் 30 அல்லது 40 ரன்கள் எடுக்கலாம்.  ஆனால் பெரிய ஸ்கோர், நம்பகமான ஆட்டம் எல்லாம் சாத்தியமே இல்லை என்று நினைத்தேன். நினைத்தது போலவே அந்த தொடரில் சுமாராகவே ஆடினார். டிராவிட்டின் தலைவலி எப்போதும் தீராது போலும் என்று எண்ணி கொண்டேன். 


அடுத்த தொடர் பாகிஸ்தானுடன். இந்த தொடருக்கு  அவர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இல்லை என  கொண்டேன். ஆனால் அவருக்கு வாய்ப்பு அளிக்க பட்டது. இளைஞர்கள் மேல் அதிக நம்பிக்கை வைத்த சாப்பல் ஒரு போட்டியில்  தோனிக்கு மூன்றாவது வீரராக களம் இறங்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. தற்போதைய இந்திய கிரிக்கெட்டின் வரலாறு எழுதப்பட்டது அந்த போட்டியில்தான். அந்த போட்டியில் நான்கும், ஆறுமாக அடித்து  அவர் அடித்த ரன்கள் 148. அந்த ஆட்டத்தை பார்த்த டிவி வர்ணனையாளர்களோ  தாங்கள் பார்ப்பது தோனியையா, இல்லை விவியன் ரிச்சர்ட்சின் புயல் வேக ஆட்டத்தையா என வியந்தனர். நானோ இது எத்தனை நாட்களுக்கு என பார்க்கலாம் என எண்ணி கொண்டேன். இந்த ஒரு போட்டியில் ஆடியதால் இன்னும் ஒரு ஆண்டுக்கு அணியில் இருப்பார் என்று எண்ணினேன். . ஆனால் அந்த ஆட்டத்தை முழுவதுமாகவும் என்னால் ஒதுக்கி விட முடியவில்லை. காரணம், அந்த போட்டியில் தோனி காட்டிய அட்டிடியுட். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் என்று எல்லா வீர்களுக்கும் இருக்கும் பயமோ, பதட்டமோ அவரிடம் சுத்தமாக இல்லை. சதம் எடுத்த பின்னும்  முதல் சதம் எடுத்த வீரரின் முகத்தில் இருக்கும் பூரிப்பு அவரின் முகத்தில் இல்லை. தான் எதுவுமே செய்யாதது போல சலனமற்ற முகத்தோடு அவ்வளவு இயல்பாக பந்துகளை நொறுக்கினார்.  

அதற்கு பின் இலங்கை தொடரில் அவர் அடித்த சதமோ அவரின் புகழை இன்னும் உயர்த்தியது. மின்னல் வேகத்தில் 183 ரன்களை குவித்து அந்த போட்டியில் பல  சாதனைகள் படைத்தார். எனக்கு  அந்த ஆட்டத்தை முழுவதும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.  அவரின் ஓடி ரன் சேர்க்கும் வேகம், அசாத்திய பலம் இது எதையுமே என்னால் நம்ப முடியவில்லை. தோனியை நான்  முதல்முதலில் வியந்து பார்த்தது அன்றுதான்.

                                                                                                                                            தொடரும் 

 உங்களின் வரவேற்பை பொறுத்தே அடுத்த பகுதி எழுதுவது பற்றி முடிவு செய்வேன்


Sunday, April 28, 2013

இப்படியும் நடக்கலாம்: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இந்தியா விலகல்

 
மும்பை ஜனவரி 20,2018: இனி சர்வதேச போட்டிகளில் இந்திய  கிரிக்கெட் அணி பங்கேற்காது என பிசிசிஐ அறிவித்துள்ளது. சர்வதேச போட்டிகளால் IPL போட்டிகளிலிருந்து  வீரர்களின் கவனம் சிதறுகிறது. எனவே பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது என பிசிசிஐ தலைவர் லிலித் களவாணி நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.

சந்திப்பின்போது உடனிருந்த  IPL ஜாம்பவான் ரவீந்திர ஜடேஜா கூறுகையில்  சர்வதேச கிரிக்கெட் போட்டிகளால் யாருக்கும் எந்த எந்த ஒரு பயனும் இல்லை. பிசிசிஐ சரியான முடிவை எடுத்துள்ளது என்றார். இந்த அறிவிப்பால் வீரர்களும், ரசிகர்களும்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர். IPL போட்டிகளில் அவர்கள் முழு கவனம்  என்றும் அவர் மேலும் கூறினார். இந்த முறை ஜடேஜா மும்பை அணியால் 20 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

பிசிசிஐயின் இந்த அறிவிப்பை தொடர்ந்து சச்சின் டெண்டுல்கர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தோனி கடந்த ஆண்டு ஒய்வு அறிவித்த போதே தானும் ஒய்வு பெற இருந்ததாகவும் பதினாறு வயதில் தனக்குள் இருந்த கிரிக்கெட் ஆர்வம் சிறிதும் குறையாததால் ஒய்வு முடிவை கைவிட்டதாகவும் அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு IPL போட்டிகளின்போது எல்லை கோட்டை 50 மீட்டர்களுக்கு சுருக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது . மேலும் 20 மீட்டர் வட்டத்துக்கு வெளியே எந்த நேரத்திலும் ஃபீல்டர் யாரும் நிற்க கூடாது என கட்டுப்பாடு விதித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
 

Wednesday, April 17, 2013

IPLலா? மசாலா படமா?

IPL வந்தாலே நாட்டில் அனைவருக்கும் கிரிக்கெட் ஆர்வம் எங்கிருந்தோ பீறிட்டு கொண்டு வந்து விடுகிறது. இந்திய அணி விளையாடும் போட்டியை கூட பார்க்காதவர்கள்  தங்கள் மாநிலத்தில் உள்ள ஒரு ஊரின் பேரில் விளையாடும் அணியை தங்கள் அணியாக எண்ணி கொண்டு டிவியின் முன் ஒன்றி விடுகிறார்கள்.

மக்கள் தங்கள் மாநிலத்தின் மேல் கொண்ட பற்றுதான் IPLலின்  வெற்றிக்கு காரணமா? நிச்சயம் இல்லை. ஏனெனில் ரஞ்சி கோப்பையில் 11 வீரர்களும் ஒரே மாநிலத்தில் இருந்து விளையாடுகிறார்கள். ஆனால் IPLலில்  நான்கு வெளிநாட்டு வீரர்கள், 4 வேற்று மாநில வீரர்கள் விளையாடுகிறார்கள். இருந்தும் IPL மேல் காட்டும் ஆர்வத்தில் ஒரு சதவீதம் கூட யாரும் ரஞ்சி கோப்பையில் காட்டுவதில்லை. 

IPL மேல் மக்களுக்கு இருக்கும் ஆர்வத்துக்கு காரணம்தான் என்ன? அது ஒன்றும்  பெரிய ரகசியம் இல்லை. IPL போட்டிகள் கிட்டத்தட்ட ஒரு சினிமா போல தயாரிக்கப்படுகிறது. ஆக்சன், செண்டிமெண்ட், கவர்ச்சி என அனைத்தும் கலந்து தயாரிக்கப்படும் ஒரு படத்தை மக்கள் விரும்புவது மிகவும் இயல்பே. அந்த படத்தின் ஒரு சில காட்சிகள் கீழே கொடுத்துள்ளேன்.

கிளாமர்  

IPLலின்  வெற்றியில் அதிக பங்கு வகிப்பது கவர்ச்சி. நடிகைகளில் இருந்து அரைகுறை உடையில் ஆடும் வெளிநாட்டு மங்கைகள் வரை கவர்ச்சிக்கு பஞ்சமே இல்லை IPLலில்.



 ஆக்சன்   

ஆக்சன்  காட்சிகள் இல்லாத  மசாலா படமா? எல்லா வகையான ஆக்சனும் உண்டு இந்த படத்தில்.


செண்டிமெண்ட் 

ஸ்ரீசாந்த்தின் அழுகையை பார்த்து பரிதாபப்பட்டவர்களும் உண்டு. ப்ரீதி ஜிந்தா, ஷில்பா ஷெட்டியின் கண்ணோரம் வழியும் ஒரு துளி கண்ணீரை பார்த்து உள்ளம் உடைந்தவர்களும் உண்டு. நம்ம ஆளுங்களுக்கு செண்டிமெண்டும் வேணும்ல.

 ப்ரீதி ஜிந்தா வெற்றி பெற்றதும் தம் அணி வீரர்களை கட்டி பிடிப்பதும் உணர்ச்சிபூர்வமான காட்சிதான். இங்கே அவருக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து தோற்ற அணியினரையும் கட்டி பிடித்து தோற்ற உள்ளங்களுக்கு ஒரு சிறிய  மன நிம்மதி தாருங்கள் ப்ளீஸ்.


ரொமான்ஸ்  

காதல் ஜோடிகளின் முத்த காட்சிகள்  பார்ப்பவர்களை பரவசம் அடைய வைக்கும். வீரர்களின் காதலிகளும், மனைவிகளும் மைதானத்துக்குள் இருக்கும் தம் காதலர்களுக்கு கண்களாலேயே தம் காதலை தெரிவிப்பார்கள்.


காமெடி 

IPL சினிமாவில் காமெடி கொஞ்சம் கம்மிதான். ஆனால் சில நேரங்களில் நடக்கும் காமெடிகள் ரசிகர்களை எளிதாக கவர்ந்து விடும். ஒரு முறை முரளி விஜய் கேட்ச் பிடித்து விட்டு ஆனந்தத்தில் மைதானம் முழுவதும் சுற்றி ஓடினார். அவர் தன்னிலைக்கு வந்து அம்பயரை பார்த்ததும்  அவர் முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே. இந்த முறை கோஹ்லிக்கு நடந்ததும் இதேதான்.


ட்விஸ்ட்  

அனைத்துக்கும் மேல் பரபரப்பான ட்விஸ்ட்களும் , எதிர்பாராத முடிவுகளும் IPLலின் மிக பெரிய பலம். எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று யாராலேயும் கணித்துவிட முடியாது. அதிர்ச்சி தரும் முடிவுகளும் இதில் அடக்கம்.


இப்படி எல்லாவற்றையும் சேர்த்து பார்த்தால் உங்களுக்கும் IPL ஒரு மசாலா படமாக தெரிகிறதுதானே? IPLலின் வெற்றிக்கு இவையே காரணம்.

Thursday, March 14, 2013

விஜய்-அஜித், கருணாநிதி மற்றும் புஜாரா

தீப்பெட்டி - 1

இலங்கைக்கு எதிரான மாணவர் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இறுதி போரின்போது கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த கருணாநிதியின் ராஜதந்திரம் இப்போது புரிகின்றது. தன் ஆட்சி காலத்தில் நடக்க கூடாது என்று நினைத்ததற்கு இப்போது ஆதரவு தெரிவித்து வருகிறார் தமிழின தலைவர். மக்கள் தன் நாடகங்களை ரசித்த காலம் மலை ஏறிவிட்டதை எப்போது உணர்வார் என்று தெரியவில்லை.

                                         *******************************************************

பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு  தற்போது மீடியா அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதற்கு பெண்கள் அணியும் ஆடைகளே காரணம் என்றும் ஆண்களின் தவறான பார்வையே காரணம் என்றும் விவாதம் நடத்தி வருகின்றனர். என்னை பொறுத்தவரையில் நம் நாட்டின் கலாச்சாரத்தில் ஏற்பட்ட கலப்படமே இதற்கு காரணம். நாம் முற்றிலும் மேற்கத்திய நாகரீகத்தில் வாழ வேண்டும் முடியாவிட்டால் இந்திய நாகரீகத்தை பின்பற்ற வேண்டும். பாதி தேசம் ஒரு நாகரீகத்தை பின் பற்றுவதும் மீதி தேசம் மற்றொரு கலாச்சாரத்தில் வாழ்வதும் மேலும் பல சிக்கல்களையே உருவாக்கும்.
                                     *******************************************************
புஜாரா - அணிக்குள் வரும் முன்பே  அடுத்த டிராவிட் என்று வர்ணிக்கப் ட்டவர். அந்த பாராட்டுக்கு முற்றிலும் தான் தகுதியானவன் என்பதை தன ஆட்டத்தின் மூலம் காட்டி வருகிறார். அற்புதமான தற்காப்பு ஆட்டம், நேர்த்தியான ஷாட்கள், சிறப்பான யுக்தி என கலக்கி வருகிறார். அதே நேரத்தில் டிராவிடை விட வேகமாவும் ரன் குவிக்கிறார். காயங்கள் பாதிக்காத பட்சத்தில்  இவர்  டிராவிட் இடத்தை கட்சிதமாக பூர்த்தி செய்வார்.

 இவரின் புல் ஷாட்டும் ஹூக் ஷாட்டும் மிக அருமை
                                  *******************************************************

எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி-கமல் என்று இருந்தது எப்படி விஜய்-அஜித் என்று மாறியது என தெரியவில்லை. முன்னவர்களிடமிருந்த திறமையும் வசீகரமும் பின்னவர்களிடம் இல்லை.விஜய்யும் அஜித்தும் நடிக்க வந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகியும் நடிப்பில் பெரிய வித்தியாசத்தை காண்பிக்கவும் இல்லை. எம்.ஜி.ஆர்-ரஜினி போன்ற வசீகரமும் இல்லை. ஒரு வேளை தமிழ் ரசிகர்களின் ரசனை குறைந்து விட்டதா?


விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன. கவர்ச்சியான தலைப்பை கண்டு வந்து இருப்பீர்கள். தங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தி ஆகி இருந்தால் ஓட்டளித்து செல்லவும்.




LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...