Monday, April 20, 2015

சிட்டாம்பட்டியில் சர்வ மத கடவுள்கள்

ரு சிறு நகரத்தின் காவல்துறை அதிகாரிக்கு ஒரு வெள்ளிக்கிழமை காலை இதை விட மோசமாக தொடங்கி விட முடியாது. நான் எத்தனையோ விசித்திரமான வழக்குகளை பார்த்து இருக்கிறேன். எத்தனையோ சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை தீர்த்து வைத்திருக்கிறேன். ஆனால் நடந்து கொண்டிருக்கும் சம்பவம் என்னையே கிறங்க வைக்கிறது.

விடியற்காலையில் கான்ஸ்டபிள் போனில் அழைத்தார். “சார்! நமக்கு ஒரு பெரிய சிக்கல் சார்” என்றார்.

“என்ன?” என்றேன்.

“ஊரு முழுக்க ஒரே பரபரப்பா இருக்கு சார்”

“என்ன? ஏதும் இடைதேர்தல் வரப் போகுதா”

“இல்ல சார். ஊரு முழுக்க ஒரே போஸ்டரா ஒட்டி இருக்கு சார். எந்த சுவரையும் விடல”

“புது படம் ரிலிஸ் ஆகுதா?”

“சார் அது இல்ல சார்”

“காலைலேயே போன் பண்ணி ஏன் உயிரை வாங்குற? விசயம் என்னன்னு சொல்லி தொலையேன்”

“ஓ உலக மக்களே! இது அனைத்து மத கடவுள்கள் உங்களுக்கு அளிக்கும் தகவல். நீங்கள் எங்கள் பெயரை சொல்லி சண்டை போட்டுக் கொண்டிருப்பது எங்களுக்கு மிகுந்த மன வேதனை அளிக்கிறது. எனவே நாங்கள் மனமாற்றம் வேண்டி  வரும் திங்கள்கிழமை சிட்டாம்பட்டியிலே  காந்தி திடலிலே ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கப் போகிறோம்”

“என்னய்யா இது உளர்ற”

“இதுதான் சார் அந்த போஸ்டர்ல இருக்கு”


“எவனாவது வேலையத்தவன் அடிச்சு ஒட்டி இருப்பான். எந்த பிரஸ்ல அடிச்சதுன்னு பார்த்து அங்க போய் விசாரி”

“பிரிண்டிங் பிரஸ் பேரே இல்ல சார் போஸ்டர்ல”

“சரி விடுயா. விடிஞ்சதும் பார்த்துக்கலாம். இதை எல்லாம் பெருசா ஆக்கிகிட்டு”

“சார் விஷயம் இதோட முடியல சார். உங்க டிவியை போட்டு பாருங்க”

டிவியை ஆன் செய்தேன். நீண்ட உதறலுக்கு பின் திரையில் ஏதோ எழுத்துகள் தெரிந்தது. போஸ்டரில்இருந்ததாக சொன்ன அதே எழுத்துகள். எல்லா சேனலையும் மாற்றி பார்த்தேன். ஆங்கில சேனல், ஹிந்தி சேனல் என்று எங்கும் ஒரே செய்தி.

“யோவ் என்னய்யா நடக்குது இங்க? இரு உடனே  ஸ்டேஷன் வரேன்”

நான் காவல்நிலையத்தின் உள்ளே சென்றதும் ஆச்சரியம் காத்து இருந்தது. தொகுதி MLA தனது புடை சூழ அங்கே நின்றிருந்தார்.

“என்ன சார்?சொல்லி இருந்தா நானே வந்து இருப்பேன்ல”

“இருக்கட்டும் இருக்கட்டும். என்னயா ஊரே ஒரே பரபரப்பா இருக்கு. எங்க பார்த்தாலும் போஸ்டர். அதை  யாரு ஒட்டி இருக்காங்கன்னு கண்டுபிடிச்சாச்சா?”

“இல்ல சார். ராத்திரி ரோந்து போனவங்களை கூப்பிட்டு விசாரிக்கணும்”

“அவங்க  மட்டும் கண்டுபிடிச்சு கிழிச்சிடுவாங்க. ஸ்டேஷன் சுவர்லயே ஓட்டிட்டு போய் இருக்கானுங்க. ஜனங்க  இதை அப்படியே நம்புறாங்க”

எனக்கு ஆத்திரமாக வந்தது. நல்ல வேளையாக இரண்டு  பேர் உள்ளே நுழைந்தனர். MLA பேச்சை நிறுத்திவிட்டு அவர்களை கவனிக்கத் தொடங்கினர்.

“சார்! தந்தி பேப்பர் நிருபர் நான். ஊருல யாரோ போஸ்டர் ஒட்டி இருக்காங்களே. நெஜமாவே எல்லா மதத்து  சாமிங்களும்  ஊருக்கு வராங்களா?”

MLA என்னை நோக்கி திரும்பினார். “பதில் சொல்லுய்யா. நான் இங்க நின்னா  என்னை கேள்வி கேப்பாங்க. நான் வரேன். இவங்க கிட்ட போஸ்டர் ஒட்டுனவங்களை தேடிகிட்டு இருக்கோம்னு சொல்லி முடிச்சிடு”

MLA நிருபரிடம், “அவசரமா சென்னை போக வேண்டியது இருக்கு. நான் வரேன்” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.

நிருபர் என்னிடம், “என்ன சார்? நெஜமாவே சாமிங்க வராங்களா?” என்றார்.

“என்ன கேள்வி சார் இது. யாரோ ஒருத்தன் போஸ்டர் ஒட்டிட்டான்னு கேள்வி கேக்குறீங்க”

“போஸ்டர் மட்டும் இல்ல சார். எல்லா ஊருலயும் எல்லா சேனல்லயும் இதே மெசேஜ்தான் தெரியுது. இது எப்பிடி நடக்குதுன்னு யாருக்குமே தெரியல”

“அப்போ இது நாடு முழுக்க தெரிஞ்ச விஷயம் ஆயிடிச்சா இப்போ?”

“என்ன சார் தெரியாத மாதிரி கேக்குறீங்க”

“சரி சார். இப்போதைக்கு போஸ்டர் அடிச்சவனை தேடிகிட்டு இருக்கோம்னு எழுதிடுங்க. அந்த டிவில மெசேஜ் வரது சைபர் கிரைம்ல வரும்னு நெனைக்கிறேன். அவங்களை போய் கேளுங்க” சொல்லிவிட்டு எழுந்து வெளியே வந்தேன். ஊருக்குள் சென்று என்ன விசாரிக்க வேண்டும்.

வெளியே வந்து முதல் அடி எடுத்து வைத்ததும் தொலைபேசி  அழைப்பு  வந்தது. “நான் DSP பேசுறேன். என்னய்யா நடக்குது உங்க ஊருல”'

“யாரோ விளையாடுறாங்க சார்”

“ஆமா. பள்ளிகூட பசங்க கோலிகுண்டு விளையாடுறாங்க. நீ போய் அவங்களை பிடி”
“.........”

“என்னய்யா? மௌனமா இருக்க? என்ன பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து இருக்க. வரப்போற சாமிங்களுக்கு?”

“சார். நீங்க இதை நம்புறீங்களா?”

“நாம நம்புறோமா இல்லையாங்குறது வேற. ஆனா அது ஒரு வேளை நடந்துட்டா என்ன பண்ணுவ. காந்தி திடலுக்கு முழு பந்தோபஸ்து போடணும். நான் ரிசர்வ் போலீஸ் படையை அனுப்பி வைக்கிறேன்”

“சார் கோவிச்சுக்காதீங்க. அதெல்லாம் இப்போதைக்கு தேவை இல்ல. போஸ்டர் அடிச்சவனை இன்னைக்கே கண்டு பிடிக்க ட்ரை பண்றேன். ஒரு வேளை முடியலன்னா நீங்க சொல்ற மாதிரி”

“சரி பாரு. ஆனா இன்னும் மூணு நாளைக்கு ஊருக்குள்ள வர்ற வண்டிகளை செக் பண்ணி அனுப்பு. காலைல இருந்தே கூட்ட கூட்டமா ஆளுங்க உங்க ஊருக்கு படை எடுக்குறாங்க. அப்பிடி சாமி பேரை சொல்லி வரவங்களை ஊருக்குள்ள விட்டுடாத”

“சரிங்க சார்”

எனக்கு தலை சுற்றியது. என்ன மாதிரியான சோதனை இது. காலி மைதானத்துக்கு பாதுகாப்பு கொடுப்பேனா? அல்லது இதை செய்தவன் யாரென்று தேடுவேனா? இல்லை ஊருக்குள்ளே வருபவர்களிடம் விசாரணை நடத்தி உள்ளே விடுவேனா?

ர் முழுக்க சுற்றிவிட்டு மீண்டும் ஸ்டேஷனுக்குள் நுழைந்தேன். தேவையில்லாமல் பெரிதாக்குகிறார்கள் என்று தோன்றியது. சில நிமிடங்களில் ஒரு சிறிய கூட்டம் ஸ்டேஷனுக்குள் நுழைந்தது. எல்லா மதத்தினரும் கலந்த கூட்டம் அது.

“வாங்க வாங்க. என்ன எல்லாரும் ஒத்துமையா வந்து இருக்கீங்க”

“ஆமாங்க எங்க சாமிங்களே ஒத்துமையா இருக்கும்போது நாங்க மட்டும் ஏன் அடிச்சுக்கணும்?” என்றார் விபூதி கீற்றுடன் நின்றிருந்த ஒருவர்

“சரிதான். இப்போ என்ன வேணும் உங்களுக்கு?”

“நம்ம ஊருக்கு சாமிங்க வருது. வசதி குறையாம பாத்துக்கனுமே. அதான் நாங்க மூணு மதத்து ஆளும்  சேர்ந்து ஒரு மேடை போட்டு குடுக்கலாம்னு இருக்கோம். நீங்க அனுமதி குடுத்தா”

“ரொம்ப சந்தோசம். தாராளமா போட்டுக்கங்க. நீங்க ஒத்துமையா இருந்துட்டா சரி”

அனைவர் முகத்திலும் நிஜமான சந்தோஷம்.

“மேடை மேல ஒரு சிம்மாசனம் போடணும். அவங்க சாமி அதுலதான் உக்காருமாம். எங்க சாமிக்காக மேடை மேல ஒரு காளை மாடு ஏத்தணும்”

“அதெல்லாம் செஞ்சுக்கோங்கய்யா”

அப்போது ஒருவர் இடை மறித்தார். “மேடை அவங்க சாமிங்களுக்கு மட்டும்தான். நாங்க மேடை பக்கத்துல ஒரு சிலுவை வைப்போம்”

கூட்டத்தில் ஒரு சிறு சலசலப்பு எழும்பியது.

“வச்சுட்டு போகட்டுமே” என்றேன்

“அது எப்பிடிங்க. அவங்களுக்கு மட்டும் தனி இடம் குடுக்குறது. வெளிய இதெல்லாம் சொல்லவே இல்ல. உள்ள வந்ததும் பேச்சை மாத்துறாங்க”

“இருக்கட்டுமே அதனால என்ன? அவ்ளோ பெரிய மைதானத்துல”

“அதெல்லாம் முடியாதுங்க. மேடை போட்டா எல்லாருக்கும் பொதுவாத்தான் இருக்கணும்”

“என்னய்யா நீங்க. ஏம்பா, உங்களுக்கும் மேடைலயே இடம் குடுத்துடுறோம்”

“அதெல்லாம் முடியாதுங்க. எங்க தேவனுக்கு சிலுவை வச்சு குடுத்தாதான் எங்களுக்கு சந்தோஷம்” என்றார் விட்டு கொடுக்காமல்.

“நீங்க ஒத்துமையா இல்லன்னா மேடை போடவே வேண்டாம்” என்றேன் .

“சரிங்க சார் ஒத்துக்குறோம்”

“நல்லது”

இப்போது அங்கே இருந்த இன்னொருவர் பேச ஆரம்பித்தார். 

“மைதானத்தை மூணா பிரிச்சிடுவீங்கதானே. ஏன்னா நாங்க முட்டி போட்டு குனிஞ்சு எங்க இறைவனை கும்பிடுவோம். எங்களுக்கு அதிக இடம் தேவைப்படும் தொழுகை செய்ய”

மற்றவர்களின் கண்கள் சிவப்பதாக தோன்றியது இதை கேட்டதும்.

“அது எப்படிங்க அவங்களுக்கு மட்டும் அதிக இடம் குடுக்குறது. அப்படி பார்த்தா நாங்களும் விழுந்து கும்பிடுவோம். ஆளுங்க எண்ணிக்கையும் எங்களுக்குதான் அதிகம். எங்களுக்குதான் அதிக இடம் வேணும். வெளிய வரைக்கும் வேற ஒன்னை பேசிட்டு உள்ளே வந்ததும் அப்படியே பல்டி அடிக்கிறாங்க இவங்க”

எனக்கு புது பூதம்  கிளம்புவதாக  தோன்றியது. “யாருக்கும் மேடை போட அனுமதி இல்ல. மைதானத்தை பிரிக்கவும் முடியாது. நீங்க போகலாம்”'

அவர்கள் முனகிக்கொண்டே வெளியேறினர். என்னால் இதை கையாள முடியாது என்று தோன்றியது. பேசாமல் உயரதிகாரிகளிடம் ஒப்படைத்து விட வேண்டியதுதான்.

சில நிமிடங்களில் கான்ஸ்டபிள் என்னை நோக்கி ஓடி வந்தார். “சார்! பஜார்ல பெரிய கலவரம் சார். எல்லா மதத்துகாரங்களும் அடிச்சுக்குறாங்க. கடை எல்லாம் உடையுது”

வேகமாக ஜீப்பை நோக்கி ஓடினேன்

நீண்ட போராட்டத்துக்கு பிறகு மறுநாள் கலவரம் ஒருவாறாக அடங்கி விட்டது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அமைச்சர் வந்து மக்களின் குறைகளை கேட்டார். போலீஸ் மேடை போட அனுமதி மறுத்து கலவரத்தை தூண்டுவதாக ஒவ்வொரு மதத்தினரும் தங்கள் பாணியில் கதை சொன்னார்கள். பின் அமைச்சர்  “முதல் அமைச்சர் ஆணைப்படி திடலில் அரசே மேடை அமைத்து கொடுக்கும். மைதானம் மூன்று சம பாகங்களாக பிரிக்கப்பட்டு வழிபாட்டு வசதிகள் அமைத்து கொடுக்கப்படும்” என்றார். 

மூன்று மதத்தினரும் வேறு வழி இன்றி ஒப்புக்கொண்டனர்.

ஞாயிறு அன்று நான் காவல் நிலையத்தில் அமர்ந்து நான் உத்தரவுகளை பிறப்பித்து கொண்டிருந்தேன். “கேட்டுகோங்க. மேடை பக்கத்துல யாரும் நெருங்கிட கூடாது. மீடியாகாரங்க பத்து பேர் மட்டும் கொஞ்சம் கிட்ட போகலாம். அந்த பத்து பேரு போட்டோவும் உங்ககிட்ட எந்த நேரமும் இருக்கணும்”

“சார். எனக்கு ஒரு சந்தேகம்.” என்றார் சப் இன்ஸ்பெக்டர்

“சொல்லு”

“நாம மூணு மதத்துக்கு மட்டும் ஏற்பாடு பண்றோமே. இந்த புத்த,சமண சாமிங்களை விட்டுட்டோமே”

“நீ வேற சும்மா இருய்யா. இருக்குறதையே சமாளிக்க முடியல.  நாம எதிர்பார்க்கிற எல்லா சாமியும் வந்திடணும்னு வேண்டிக்கோ. எதாச்சும் ஒரு சாமி வரல, அப்புறம் நடக்கப்போறதை சமாளிக்க ராணுவம்தான் வரணும்”

“ஆமா சார். இப்போ எல்லாரும் அவங்க சாமியை பார்க்கணும்னு நெனைக்கிறதை விட அடுத்தவன் சாமி வரக்கூடாதுன்னுதான் நினைக்கிறான்”

“இவங்க எல்லாம் திருந்தவே மாட்டாங்க. சாமி, இறைவன், தேவன் எல்லாரும் ஒண்ணுன்னு எப்போதான் இவங்களுக்கு புரியப்போகுதோ. ஆமா நீ நெஜமாவே சாமி வரும்னு நெனைக்கிற?”

“ஆமா சார். இது வரை போஸ்டர் யாரு ஒட்டினதுன்னு தெரியல. எப்பிடி எல்லா சேனல்லயும் ஒரே மெசேஜ் கொண்டு வர வைக்க முடியும், அதை யாரு செஞ்சான்னு கண்டுபிடிக்கவே முடியலையே இன்னும்”

“ஊருக்குள்ள வெளியூருகாரங்க யாரும் இல்லையே?”

“வீடு வீடா சல்லடை போட்டாச்சு. இருந்தவங்களை திருப்பி அனுப்பியாச்சு”

“ரைட். ஆமா உண்ணாவிரதம் எப்போ ஆரம்பிக்குது.”

“நேரம் தெரியல. ஆனா எட்டு மணிக்குள்ள ஆரம்பிச்சிடும்”

“எதுக்கும் ரோடு எல்லாம் கிளியர் பண்ணி வச்சுடுங்க. சாமிங்க வானத்து வழியில வருவாங்களா, இல்ல வேற எந்த ரூட்டும் எடுத்துப்பாங்களான்னு தெரியல”

“ஓகே சார்”

திங்கள்கிழமை காலை ஆறு மணி. மைதானம் பரபரப்பாக இயங்கியது. மைதானம் எங்கும் போலீஸ் தலைகள். அரசாங்கம் அமைத்த மேடை பிரம்மாண்டமானதாகவே இருந்தது. மைதானத்தின்  மூன்று பிரிவுகளிலும் மக்கள் நிரம்பி இருந்தார்கள்.

“என்ன எல்லா பாதுகாப்பும் சரியா இருக்குதில்ல”

“எல்லாம் பக்கா சார். வெய்டிங் பார் சாமிகள்”

அப்போது அந்த பெரும் சத்தம் கேட்டது. மக்கள் சிதறி ஓடத் தொடங்கினர்.

“என்னய்யா அது. மேடைகிட்ட ஏதோ வெடிச்ச மாதிரி”

குழம்பித் தவித்த போலீஸ்காரர்களில் சிலர் மட்டும் துணிவாக மேடையை நோக்கி ஓடினர். நானும் ஓடினேன். 

“பாம் வச்சு இருக்காங்க சார்.”

ஒரே மாதிரியான தாமிரத் தகடுகள் அங்கே சிதறி இருப்பதை கண்டு ஒன்றை கையில் எடுத்தேன். அதில் எழுதி இருந்த எழுத்துகளை கஷ்டப்பட்டு வாசிக்கத் தொடங்கினேன்.

அயல்நாட்டு சதியை உண்மை என்று நம்பி மத நம்பிக்கைகளை வளர்க்கும் அரசை கடுமையாக கண்டிக்கிறோம்.

“என்னய்யா இது? இவ்ளோ பாதுகாப்பு இருந்தும்” என்றேன் சப் இன்ஸ்பெக்டரிடம்

“இவங்க கிட்ட இருந்து சிக்கல் வரும்னு யாருமே எதிர்பார்க்கல சார். நல்ல வேளையா பெரிய சேதம் எதுவும் இல்ல

“சரி. இவங்க என்ன சாதிச்சாங்க இப்போ?”

“அவங்களுக்கு கடவுள் வரணும்னு ஆசை. அதே மாதிரி இவங்களுக்கு கடவுள் வந்துடக் கூடாதுன்னு எண்ணம். அதான் வெடிக்க வச்சுட்டாங்க இப்பிடி இடமே பதட்டமா பத்தி எரியும்போது ஒரு வேளை நெஜமாவே வரதா இருந்தாலும் கடவுள் முடிவை மாத்திப்பார்”

“இவ்ளோ கஷ்டபட்டும் கடைசில கலவரம், வன்முறைனு  ஆகி போச்சேய்யா”

“வருத்தப்படாதீங்க சார். இது கை மிஞ்சி நடந்து போச்சு. இவங்கள்ல யாரும் ஜெயிக்கல இப்போ. ஆனா நம்ம வேலைய மூணு நாளா சரியா பார்த்த திருப்தி இருக்கு பாருங்க. அந்த திருப்தி போதும் நமக்கு”

“செய்யும் தொழிலே தெய்வம்னு சொல்றியா?”

“நான் எதுவுமே சொல்லல சார். யார் குண்டு வச்சாங்கன்னு கண்டு பிடிக்கற வேலை இருக்கு. அதை பார்க்கலாம்னு சொல்றேன்”

நாங்கள் தடயங்களை தேட ஆரம்பித்தோம்.  

Saturday, April 18, 2015

சுஹாஷினி மேடம் அவர்களுக்கு

சுஹாஷினி மேடம் அவர்களுக்கு,

சில நாட்களாக எனக்கு ஒரு சிறிய சிக்கல். அதை தீர்த்து வைக்க உங்களால் மட்டுமே முடியும். உங்களிடம் இதை உங்களிடம் ஏன் கேட்கிறேன் என்று நினைக்க வேண்டாம். இந்த சிக்கல் தோன்றியதே உங்களால்தான். எனவே இதை தீர்த்து வைக்கவும் உங்களால் மட்டும்தான் முடியும்.

நான்கு நாட்களுக்கு முன்னர் எனது வீட்டுக்கு ஒருவர் வந்தார். அவர் யாரென்று கேட்டேன். அவர் ஒரு தகுதியான பத்திரிக்கை விமர்சகராம். நீங்கள் ஒரு நாள் தகுதியான பத்திரிக்கையாளர்கள் தவிர மற்ற யாரும் சினிமா பற்றி எழுதக்கூடாது என்று சொன்னதை கேட்டு என்னை எழுத விடாமல் தடுக்க வந்திருக்கிறாராம்.

ஏதோ நகைச்சுவைதான் செய்கிறார் என்று நினைத்தேன். ஆனால் அவர் ஒவ்வொரு முறையும் நான் கணிப்பொறியில் தட்டச்சு செய்ய முயலும்போதெல்லாம் ஓடி வந்து ஏன் கையை பிடித்து கொள்கிறார். “ஐயா! நான் விமர்சனம் என்று எல்லாம் ஏதும் எழுதுவதில்லை. இப்போது கூட மொக்கை கதை ஒன்று எழுதத்தான் போகிறேன்” என்றாலும் அவர் கேட்க மாட்டேன் என்கிறார். சுஹாசினி மேடம் சொல்லியதை நான் செய்கிறேன் என்று கையை இன்னும் கெட்டியாக பிடித்துக் கொள்கிறார்.

“என்ன சார் இது அநியாயம். நம் மக்கள் நினைவு தெரிந்த நாளில் இருந்தே சினிமாவை பார்த்தே வளர்ந்து வந்த மக்கள். அவர்களை சினிமா பற்றி எழுதாதே என்றால் வேறு எதை பற்றி எழுதுவது. ஒரு சினிமா பார்த்தால் அவர்கள் பார்வையில் அது எப்படி இருக்கிறது  என்று எழுதி வைக்கிறார்கள். அதையும் கூடாது என்றால் அவர்கள் வேறு எதை பற்றிதான் எழுதுவார்கள்? அப்படி எழுதுவதில் என்ன தவறு இருக்கிறது?” என்றேன்.

அவர் பதிலுக்கு “அதெல்லாம் பேசாதே! சுஹாசினி மேடம் எழுத விடக்கூடாது என்று கூறி விட்டார்கள்” என்று கையை விடாமலே பதில் சொல்கிறார்.

“எனக்கு புரிந்து விட்டது. வசூல் பாதிக்கக்கூடும் என்று அஞ்சுகிறீர்கள். இணையத்தில் பத்து பேர் படம் அருமை என்று எழுதினால் பத்து பேர் படம் மொக்கை என்று எழுதுகிறார்கள். அதை படித்தவர்களுக்கு படத்தை பற்றி எந்த ஒரு தெளிவான அபிப்பிராயமும் வந்து விடப் போவதில்லை. படம் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் எப்படியும் பார்க்கத்தான் போகிறார்கள். ஒரு வேளை எல்லாரும் படம் மொக்கை என்று எழுதிவிட்டால் அது படம் எடுத்தவரின் தவறு ஐயா” என்றேன்.

அவர் “தேவையில்லாமல் பேசாதே! மேடம் சரியாகத்தான் சொல்லுவார்” என்றார்.

“மௌசை பிடிக்கத் தெரிந்தவர்கள் எல்லாம் இனிமேல் விமர்சனம் என்று எதுவும் எழுத மாட்டார்கள்  என்றே வைத்து கொள்வோம். ஆனால் படம் பார்த்து கொண்டிருக்கும்போதே வாட்ஸ்அப்பில் படத்தை பற்றி ஊரெல்லாம் சொல்லி விடுகிறார்களே. அவர்களை எப்படி தடுப்பீர்கள்?” என்றேன்.

“அதெல்லாம் எனக்கு தெரியாது. மேடம் உங்களை எழுத விடக்கூடாது என்று சொல்லிவிட்டார்”.

“இனிமேல் விமர்சிப்பவர்கள் தங்கள் தகுதியை வளர்த்து கொள்கிறேன் . சினிமா நுணுக்கங்களை கரைத்து குடிக்கிறோம். பத்து பேரிடம் படத்தை பற்றிய கருத்தை கேட்டு விட்டு  விமர்சனம் செய்கிறேன் . சரிதானே?” என்றேன்.

“இதையெல்லாம் செய்து விட்டால் நீ தமிழ் படம் பார்ப்பதையே நிறுத்தி விடுவாய். ஆனால் அதுவரை உன்னை  எழுத விட மாட்டேன்” என்றார். இவரை எப்படி சமாதானப்படுத்துவது என்றே தெரியவில்லை. நீங்கள் ஒரு வார்த்தை சொன்னால் இவர் கையை விட்டு விடுவார் என்று தோன்றுகிறது. தயவு செய்து உதவி செய்யவும்.

பின்குறிப்பு: இப்போது மட்டும் எப்படி எழுதுகிறேன் என்று கேட்காதீர்கள். அவரிடம் படம் மட்டும் பார்த்துக் கொள்கிறேன் என்று அனுமதி வாங்கி கணிப்பொறியில் “ராவணன்” படம் போட்டு விட்டுவிட்டேன். பார்த்துக்கொண்டே தூங்கி விட்டார். அந்த இடைவெளியில் இதை எழுதி விட்டேன்
  

Saturday, March 28, 2015

சென்னை, மதுரை, கோவை – நான் கண்ட தமிழகம்

“வேற்றுமையில் ஒற்றுமை”(???) காணும் நாடு பாரத நாடு என்று படித்திருப்பீர்கள். இதை பாடப்புத்தகத்தில் படிக்கும்போது நானும் உங்களைப் போலவே பல மாநிலங்களில் பல மொழி பேசுபவர்களும், பல கலாச்சாரத்தை பின்பற்றுபவர்களும் வாழ்வதால் இந்த பெயர் வந்தது என்று எண்ணிக்  கொண்டிருந்தேன். பின்னர் தமிழகத்தின் முக்கிய ஊர்கள் அனைத்துக்கும் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தபோது ஒரு மாநிலத்துக்குள்ளேயே எத்தனை விதமான வேறுபாடுகள் என்று புரிந்தது. ஒரே மொழி பேசும் மக்கள், அந்த மொழியை பேசும் விதத்திலும், நடந்து கொள்ளும் முறையிலும் எவ்வாறு மாறுபடுகிறார்கள் என்பது சற்று கவனித்து பார்த்தால்தான் புரியும்.

முதலில் தமிழ்நாட்டின் தலைநகரை எடுத்துக் கொள்வோம். சென்னையில் அடியெடுத்து வைத்த முதல் வாரம் மாநகரப் பேருந்தில் பயணித்தேன். கூட்டம் நிரம்பிய பேருந்தில் நீச்சல் அடித்து உள்ளே சென்று டிக்கெட் எடுக்கலாம் என்று நடத்துனரை கவனித்தவனுக்கு கிடைத்தது ஒரு கலாச்சார அதிர்ச்சி. “மேலே ஏறி வா. சில்லறையா குடு” என்று அறுபது வயது கொண்ட ஒரு பெரியவரை அதிகாரம் செய்து கொண்டிருந்தார்  முப்பது வயது  மிகாத  நடத்துனர். மரியாதை  இல்லாமல்  இப்படி எல்லாம் கூட  பேசுவார்களா  என்று நான்  வியந்து கொண்டிருக்கும்போது  “என்ன வேடிக்கை பாக்குற. டிக்கெட் எடு” என்று என் மேல் அன்பை பொழிந்தார் நடத்துனர். பேருந்தை விட்டு கீழே இறங்கும் முன் பேருந்தில் மேலும் இரண்டு வாய்த் தகராறுகள் வேறு.

இந்த ஊர் இப்படித்தானோ என்று எண்ணிக் கொண்டே பேருந்தை விட்டு இறங்கினேன். அங்கே நின்றிருந்த ஒருவரிடம் நான் போக வேண்டிய இடத்தை சொல்லி வழி கேட்டேன். அவர் என்னை மேலும் கீழும் பார்த்தார். “சரி! டீ வாங்கித்தா. வழி சொல்றேன்” என்றார்.  வழி சொல்வதற்கு எல்லாமா ஊதியம் கேட்பார்கள் இந்த ஊரில் என்று விழித்தேன். பக்கத்தில் இருந்தவர் எந்த ஊர்க்காரர் என்று தெரியவில்லை. என்னை கூப்பிட்டு வழி சொல்லி அனுப்பினார்.

பின்னர் சென்னை முழுக்க சுற்றி திரிந்தபோது பல தகராறுகளை பார்த்துள்ளேன். வலுகட்டாயமாக சில தகராறுகளிலும் இழுத்து விடப்பட்டுள்ளேன். ஆட்டோக்காரர்களுடன் தகராறு, பேருந்தில் தகராறு, சாலையில் தகராறு, கடைக்காரர்களுடன் தகராறு, அரசு அலுவலகங்களில் என்று யார் மேல் தவறு என்று கணித்து சொல்லிவிட முடியாத அளவுக்கு  தகராறுகள். அதில் பல தகராறுகள்  தேவையற்றவை  என்று கூட தோன்றும். அதே நேரத்தில் தங்கள் உரிமையை அறிந்து அதை பெற குரலை உயர்த்துவதில் சென்னை மக்களை மிஞ்ச முடியாது

பொதுவாகவே  சென்னை மக்கள் அனைவருமே படபடவென பேசக் கூடியவர்கள். அமைதியான இயல்பு கொண்ட சென்னைக்காரர்களை காண்பது அரிதிலும் அரிது. அமைதியாக இருந்தால் சென்னையில் வாழ்வது கடினம் என்பது கூட அதற்கு காரணமாக இருக்கலாம். தனக்குள் வரும் மனிதர்களை சென்னை தனக்கு தகுந்தாற்போல் மாற்றி கொண்டு விடும்.

இப்போது அப்படியே சென்னையிலிருந்து மதுரைக்கு வருவோம். மதுரைக்காரர்கள் சற்று வேறு விதம். முகவரி விசாரித்தால் அக்கறையாக பதில் சொல்வார்கள். இன்னும் சிலர் உங்களுடன் வந்து அந்த இடத்திலேயே விட்டுவிட்டு போவார்கள். அதே நேரத்தில் எந்த நேரத்தில் எப்போது கோபம் வரும் என்று கூற முடியாது. அதற்காக கோபம் வந்தால் சினிமாவில் காட்டுவது போல அரிவாளை தூக்கி கொண்டு ஓடி வர மாட்டார்கள். இயல்பாகவே மற்றவர்களிடம் அன்பு காட்டுபவர்கள். அதற்காக  மதுரை மக்கள் அனைவரும் தேவதூதர்கள் என்று அர்த்தம் இல்லை. ஜாதி உணர்வு சற்று அதிகமாக இருப்பது இவர்களின் பலவீனம். அதே போல் மதுரை வியாபாரிகளின்  மார்கெட்டிங் திறன் அலாதியானாது. சற்று அயர்ந்தால் நமக்கே தெரியாமல் நம்மிடம் பொருட்களை விற்று விட்டு பணத்தை எடுத்துக் கொள்வார்கள்.

இப்போது கோவைக்காரர்களை எடுத்து கொள்வோம். இப்படி கூட மரியாதையாக பேச முடியுமா என்று ஆச்சரியப்பட்டு போனது இவர்களிடம்தான். சென்னைக்காரர்களுக்கு நேர் எதிர். கோவைகாரர்கள்  யாரிடமாவது முகவரி கேட்டு பாருங்கள். நீங்கள் வயதில் பெரியவரா, சிறியவரா என்றெல்லாம் யோசிக்காமல் “அண்ணா. அப்பிடியே ரைட்ல போங்கண்ணா. லெப்ட்ல வாங்கண்ணா” என்று இவர்கள் கொங்கு தமிழில் பேசும் அழகை கேட்டு நமக்கே கோவையில் நிரந்தரமாக தங்கி விடத் தோன்றும்.

இப்படி வாழும் இடத்திற்கு ஏற்ப குணங்கள் எப்படி மாறுகிறது என்பதற்கு பல காரணங்கள் இருக்க கூடும். ஆனால் இவை அனைத்தையும் கடந்து  தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும்  இருக்கும் ஒரே மாதிரியான சினிமா ரசிப்புத்தன்மையும், அரசியல் பார்வையும் ஒரு ஆச்சரியம்தான்.


Monday, March 23, 2015

முடிவில்லா காதல் கதை

நீங்கள் இந்த கதையை படிக்க ஆரம்பிக்கும் முன் நான் என்னை பற்றி சொல்லி விடுகிறேன். என்னுடைய பெயர் காயத்ரி. நான் மிக அழகாக இருப்பதாக நான் பத்தாவது படிக்கும்போது காதல் கடிதம் கொடுத்த ஷங்கர் எழுதி இருந்தான். அது நடந்து ஏழு ஆண்டுகள் ஆன பின்னும் வெளியே போகும்போது என்னை உற்று உற்று பார்க்கும் ஆண்கள் நான் முன்பை விட அழகாகி இருப்பதை உறுதிபடுத்துகின்றனர்.

சரி என்னுடைய புராணம் இப்போது எதற்கு. இந்த கதை என்னை பற்றியது இல்லை. சற்று பொறுங்கள். உடனே அவசரப்பட்டு படிப்பதை நிறுத்திவிடாதீர்கள்.  நான் இப்போது சொல்லப்போகும் கதை என்னை விட அழகான என் தோழியை பற்றியது. அவள் பெயர் அர்ச்சனா. பெண்கள் கூட அவளை பேரழகி என்று பொறாமையில்லாமல் ஒத்து கொள்வார்கள். அப்படிப்பட்ட அழகு அவளுக்கு. ஓர் ஆண்டுக்கு முன் நாங்கள் இருவரும் ஒரே நேரத்தில்தான் இந்த மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தோம். எனக்கு அவளை பார்த்தவுடன் பிடித்து விட்டது. பார்த்தவுடன் சிரித்தாள். பின்னர் அவளே வந்து பேசினாள். ஒரே நாளில் நாங்கள் நெருங்கிய தோழிகள் ஆகி விட்டோம். நான் என்று இல்லை. அவள் யாரையும் எளிதில் ஒரே நாளில் தோழி ஆக்கிவிடுவாள். அடுத்தத்த இருக்கையாக பார்த்து  அமர்ந்து கொண்டோம்.

மூன்று மாதங்களுக்கு  பின் எங்கள் குழுவில்  புதிதாக வந்து சேர்ந்தான் ராஜேஷ். இவனை ஏனோ எனக்கு பார்த்தவுடன் பிடிக்கவே இல்லை. சோகம் அப்பிய முகம். எப்போதும் எதையோ பறி கொடுத்தவன் போல நடவடிக்கை. தேவை இருந்தால் மட்டும்  எங்களுடன் அளவாக பேசுவான். இப்படி நாட்கள் சென்று கொண்டிருந்தபோதுதான் ஒரு சாதாரண வெள்ளிகிழமையில்தான் இந்த கதை ஆரம்பித்தது. ஒரு நாள் காலில் கட்டுடன் வந்து இருந்தான். நொண்டி நொண்டி வந்து இடத்தில் அமர்ந்தான். நான் பேசாமல் இருந்திருக்கலாம். ஆனால் விதியை மாற்ற முடியுமா. பேசி விட்டேன்.

“அர்ச்சனா! என்ன நம்ம கல்லுளிமங்கன் இன்னைக்கு நொண்டிகிட்டே வந்து இருக்காரு”

“பேசாம இருடி. பாவம் அடிபட்டு இருக்கு. அதை போய் கிண்டல் பண்ணிக்கிட்டு”

“பாருடா. அவரு மேல சாப்ட் கார்னரா”

“ஏன் இருக்ககூடாதா? அவனும் நம்மளை மாதிரிதானே”

“விட்டா அவன்கிட்டயே போய் நலம் விசாரிப்ப போல?”

“விசாரிச்சாதான் என்ன?”

சொல்லிவிட்டு எழுந்து விடுவிடுவென அவள் இருக்கையை நோக்கி நடந்தாள்.

“என்ன ஆச்சு ராஜேஷ் கால்ல”

“பைக்ல இருந்து விழுந்துட்டேன்”

“எப்பிடி?”

“ம்ம். பொத்துன்னு.”

எனக்கு எரிச்சல் ஆகியது. என்ன மனிதன் இவன். நலம் கேட்க வந்தவளையே எரிச்சல் அடைய செய்கிறான். ஆனால் அர்ச்சனாவோ புன்னகைத்தாள்.

“சரி. லஞ்ச் நான் வாங்கி வந்து தரேன். நீ கஷ்டப்பட்டு கேண்டீன் போக வேண்டாம்”

“நான் கேட்டேனா உன்கிட்ட. எனக்கு தெரியும் என்னை பார்த்துக்க.”

“இப்போ எதுக்கு கோபப்படுற?”

“நீங்க பாட்டுக்கு வருவீங்க. உங்களுக்கு வேலை முடியிற வரை பல்லைக் காட்டி பேசுவீங்க. அப்புறம் டாட்டா காட்டிட்டு போய்டுவீங்க. நாங்க  உங்களையே நெனச்சுகிட்டு உருகிகிட்டு இருக்கணும். ஆம்பளையா இருந்து பார். வலி தெரியும்”

படபடவென பொரிந்தான் அவன். அர்ச்சனாவின் கண்களில் நீர் திரண்டது தெரிந்தது.

“நான் கேசுவலாதான் கேட்டேன்”

“நீ இனிமே கேக்கவே கூடாதுன்னுதான் நான் பேசினேன்”

அர்ச்சனா திரும்பினாள்.

“தேவையாடி உனக்கு இது. லவ் பெயிலியர்ல பைத்தியம் ஆகிடிச்சு அது”

“சரி இனிமே அதைபத்தி பேசாதே”

ரண்டு மாதங்கள் ஆகியது. இப்போது அவனுடன் எங்கள் குழுவில் உள்ள யாரும் பேசுவதில்லை.  அவன் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படுவதாக தெரிவதில்லை.  ஒரு நாள் மாலைப்பொழுதில் அவன் அர்ச்சனாவை நோக்கி வந்தான்.

“அர்ச்சனா! எனக்கு நம்ம அப்ளிகேசன்ல ஒரு சந்தேகம். உனக்கு மட்டும்தான் அதை பத்தி தெரியும்னு சொல்றாங்க. கொஞ்சம் ஹெல்ப் பண்ண முடியுமா?”

“எனக்கு வேலை இருக்கே. ஒரு அரை மணி நேரம் அப்புறம் வரவா?”
“இல்ல. இது கொஞ்சம் அவசரம்.”

“சரி வரேன்”

எழுந்து அவன் பின்னாலேயே சென்று விட்டாள். அரை மணி நேரத்துக்கு பின் திரும்பினாள். எனக்கு அவள் மேல் ஆத்திரமாக வந்தது.

“ஏய் அச்சு. உனக்கு இது தேவையா? அவன் என்னென்ன பேசுனான்னு அதுக்குள்ள மறந்துட்டியா. இப்போ உன்னோட வேலைய விட்டு போய் அவனுக்கு ஹெல்ப் பண்ணனும்னு யாரு என்ன தேவை”

“இன்னா செய்தாருக்கு நன்மை செய்யணும்னு திருவள்ளுவர் சொல்லி இருக்கார்”

“ஹ்ம்ம். சில ஜென்மங்களை திருத்தவே முடியாதுன்னு எங்க அப்பா  சொல்லியிருக்கார்”

“ஹஹஹா”

“சரி.தேங்க்ஸ் எதுவும் சொன்னானா”

“இல்லை”

இது நடந்த மறுநாள் அவன் மீண்டும் எங்கள் இருக்கையை  நோக்கி வந்தான்.

“ரொம்ப தேங்க்ஸ் அர்ச்சனா”

“என்ன தேங்க்ஸ் எல்லாம்”

“இல்ல நான் அன்னைக்கு ஏதோ ஒரு மூட்ல ரொம்ப பேசிட்டேன். அதை எல்லாம் மனசுல வச்சுக்காம”

“வேணும்னா எனக்கு ஒரு சிலை வச்சுடுறீங்களா?”

அவன் புன்னகைத்தான்

“உங்களுக்கு ஜோக் எல்லாம் அடிக்க தெரியுமா?”

“உங்களுக்கு சிரிக்க கூடத் தெரியுமா?”

இப்போது இருவரும் சேர்ந்து புன்னகைத்தனர்.

“ஆம்பளையா இருந்தாதான் கஷ்டம் தெரியும்னு சொன்னீங்களே. அப்பிடி என்ன கோபம் பொண்ணுங்க மேல உங்களுக்கு”

“பொண்ணுங்க மேல இல்ல. ஒரே ஒரு பொண்ணு மேல. எல்லாரும் அவளை மாதிரியே இருப்பாங்கன்னு நெனச்சது என்னோட முட்டாள்தனம்”

என்னால் அதற்கு மேல்  பொறுக்க முடியவில்லை.

“அச்சு. கொஞ்சம் வெளிய போகணும் வரியா?”

ரியாக இரண்டு நாட்களுக்கு பின் “காயத்ரி! அர்ச்சனா இன்னைக்கு வரலியா?” என்றவாறே வந்தான் அவன். எல்லாம் அர்ச்சனா கொடுக்கும் இடம். அவள் வந்தாலும் வராவிட்டாலும் இவனுக்கு என்ன?

“அவ லீவ்”

“என்ன லீவ் திடீர்னு. உடம்பு சரி இல்லையா?”

“தெரியலையே”

“நீங்க எனக்கு ஒரு ஹெல்ப் செய்வீங்களா?”

“என்னது?”

“போன வருஷம் இதே மார்ச் மாசம். நான் லவ் பண்ண பொண்ணு என்னை விட்டுட்டு போய்ட்டா. அவ என்னை ஈசியா தூக்கி போட்டுட்டா. ஆனா என்னால அவளை மறக்கவே முடியல . எல்லா நேரமும் அவ நினைப்புதான் ஆறு மாசம் வீட்டுக்குள்ளயே அடைஞ்சு கிடந்தேன். ஒரு வழியா மனசை தேத்திக்கிட்டு இங்க வந்து வேலைக்கு சேர்ந்தேன்”

“நான் என்ன செய்யணும்னு சொல்லுங்க”

“சரி. அவ என்னை விட்டுட்டு போன பின்னாடி பொண்ணுங்கன்னாலே எனக்கு வெறுப்பு. எல்லா பொண்ணுங்களும் சுயநலம் பிடிச்சவங்..”

“ராஜேஷ். நான் அர்ச்சனா மாதிரி இல்ல. இப்பிடி எல்லாம் என்கிட்டே பேசுனா அவ்வளவுதான்”

“சரிங்க. நான் விசயத்தை சொல்லிடுறேன். நான் அர்ச்சனாவை லவ் பண்றேன். அவ வேற யாரையும் லவ் பண்றாளான்னு நீங்க சொல்லிட்டா போதும். நான் அவகிட்ட பேசிக்குவேன்”

எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அர்ச்சனாவுக்கு இவன் பொருத்தமா? ஏதோ கவலையில் சிடுமூஞ்சியாக இருக்கிறான். ஆனால் அடிப்படையில் நல்லவன். ஆனால் அர்ச்சனா பற்றி தெரிந்திருந்தால் இவன் இப்படி கேட்டிருப்பானா. அர்ச்சனா என்ன சொல்லுவாள்.“நாளைக்கு அவ வந்துடுவா. நீங்க அவகிட்ட பேசுங்க” என்றேன்.

றுநாள் அர்ச்சனாவை அழைத்து கொண்டு பூங்காவுக்கு சென்று விட்டேன். ராஜேஷையும் வர சொல்லி இருந்தேன். அவன் வருவதை அவளுக்கு சொல்லவில்லை. எங்களுக்கு முன்னரே ராஜேஷ் பூங்காவுக்கு வந்து  விட்டான். அர்ச்சனா அவனை எதிர்பார்க்கவில்லை

“ஹே ராஜேஷ். நீ எங்க இங்க?”

“காயத்ரி! நீ சொல்லலியா?”

நான் அமைதியாக இருந்தேன்

“அர்ச்சனா! நான் நேராவே சொல்றேன். எனக்கு உன்னை பிடிச்சு இருக்கு”
அர்ச்சனா என்னை பார்த்தாள். “அவர் உன்னை நெஜமாவே லவ் பண்றாரு அச்சு”

“எப்பிடி திடீர்னு லவ்?” என்றாள் ராஜேஷை பார்த்து

“திடீர்னு வர்றதுதான் லவ். அதுவும் இது மனசை பார்த்து வந்த லவ் ”

“அப்போ நல்ல மனசு இருந்தா மட்டும் போதுமா உங்களுக்கு. என்னை பத்தி உங்களுக்கு வேற என்ன தெரியும்?”

“நல்ல பொண்ணுன்னு தெரியும். எப்பவும் சிரிச்சுகிட்டே இருப்பீங்க”

“சாரிங்க. ஒத்துவராது”

“சரி உங்க இஷ்டம். ஆனா ஏன் பிடிக்கலைன்னு சொல்லுங்க?”

“சொல்ல தேவை இல்லன்னு நெனைக்கிறேன்”

“இதுதாங்க பொண்ணுங்ககிட்ட.ரொம்ப வீக்கான மனசு. எதுக்கு எடுத்தாலும் பயம் ”

“எனக்கா?”

நான் எதிர் பார்க்கவே இல்லை. ஆனால் அவன் அவள் முன் மண்டியிட்டான். “ நான் உங்களை நெஜமாவே லவ் பண்றேன். நீங்க எப்படி சொன்னாலும் நான் என்னை மாத்திகிடுறேன்” என்றான் 

 “நான் நேத்து ஏன் லீவ் தெரியுமா? கோர்ட் போயிருந்தேன்”

“எதுக்கு?”

“ரெண்டு வருஷம் முன்னாடி பெங்களுர்ல ஒரு பொண்ணை மூணு பசங்க ரேப் செஞ்சுட்டாங்கன்னு படிச்சு இருப்பீங்க. இப்போ நியாபகம் இருக்குமான்னு தெரியல. அந்த பொண்ணு பேரை சுதானு பேப்பர்ல எழுதுவாங்க. அந்த பொண்ணோட உண்மையான பேரு அர்ச்சனா. அந்த சம்பவம் நடந்த பின்னாடி ஆறு மாசம் கவுன்சிலிங் மேல கவுன்சிலிங் பொய் அந்த அதிர்ச்சியில இருந்து வெளிய வந்து உங்க முன்னாடி நிக்கிறா. அதுவும் சிரிச்ச முகமா”

அவன் முகத்தில் ஆயிரம் வோல்ட் அதிர்ச்சி.

“அன்னைக்கு சொன்னீங்களே. ஆம்பளையா இருந்தாதான் வலி புரியும்னு. அதே மாதிரிதான் என்னோட இந்த  வலிய உங்களால புரிஞ்சுக்க முடியாது”

அவனிடம் பதிலே இல்லை. என்னை சொல்ல வேண்டும். தேவை இல்லாமல் அவனை இங்கே கூப்பிட்டு இப்போது எல்லாருக்கும் சங்கடம்.

“பொண்ணா இருக்கிறதும்  கஷ்டம்னு இப்போவாச்சும் ஒத்துப்பீங்களா.” அவள் கண்ணில் நீர் திரள கூறினாள். ஆனால் அவள் ஒரு போதும் அழுததில்லை

“என்னங்க சொல்றீங்க. கல்யாணம் செஞ்சுப்பீங்களா?”

அவன் என்ன சொல்லப் போகிறான் என்று அறிய உங்களை போலவே நானும் காத்திருந்தேன்.  


   

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...